எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் வீட்டு விசேசத்திற்கு அழைப்பதற்காகவும், வீட்டு முகவரி கேட்டு பத்திரிகையொன்றை அனுப்பி வைப்பதற்காகவும் சாந்தசீலனின் மொபைல் எண்ணை தன்னோடு படித்த சந்துருவிடம் கேட்டு பெற்றுக் கொண்டான் கருணாகரன்.

“ஹாலோ. சாந்தசீலனுங்களா சார்.” எதிர் முனையிலிருந்து வரும் குரலை சற்று நிதானித்து அழைத்தது கருணாகரன் என சாந்தசீலன் அறிந்து கொண்டான். கல்லூரி முடிந்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. இடையில் கருணாகரனின் தங்கையின் திருமணத்திற்கு முன்னர் வேலை பார்த்த ஊரான திருச்சியிலிருந்து வந்தது. விசேசத்திற்கு ஒருநாள் முன்னதாகவே வந்து எல்லாவற்றையும் இருந்து கவனித்துக் கொண்டது எல்லாம் மங்கலாக இருந்து மெல்ல மெல்ல காட்சி விளங்குவது போல அவனுக்குள் ஓடத் தொடங்கியது,

“ம். சொல்லுங்க.” என்று சலிப்பும் அலட்சியுமான தொனி மனத்திலிருந்தாலும், குரலில் காட்டிக் கொள்ளாமல் முதலில் யாரென்று தெரியாது என யோசித்ததாகவும், பிறகு நீதானென தெரிந்து கொண்டதாகவும்” குழப்பத்திலிருந்து தெளிவு பெற்றதைப் போல” தனது பேச்சை மாற்றிக் கொண்டு “ம் சொல்றா” என்று பதிலை வெளிப்படுத்தினான் சாந்தசீலன்.

“எப்புடி இர்க்க. எங்க திருச்சியிலா இல்ல வேற எங்கியாவது இர்க்கியா?” என்று கருணாகரன் கேள்வியை கேட்டான்.

“இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன். பார்மா கம்பெனியில வேலை” என்று சாந்தசீலன் பதிலளித்தான்.  

“ஒன்னுமில்ல மாப்ள. ரொம்ப நாளா யாரையும் போன்ல புடிக்க முடியல. எடையில செல்போனு தொலஞ்சி போச்சி. எல்லா நம்பரும் காணாமப் போயிருச்சு. அதான் நம்ம செட்டுங்க கூட யாருகிட்டயும் பேச முடியாம போச்சி” என்றபடி பழைய நட்பையும், கூடித் திரிந்த நாட்களையும் பேச்சில் அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டான் கருணாகரன்.

பி.எஸ்.சி டிகிரியை முடித்தாலும் விவசாய நிலம் இரண்டு ஏக்கர் இருப்பதால் வேறு வேலைக்கு வெளியூர் செல்லாமல் நிலத்தையும் பார்த்துக் கொண்டு சொந்த ஊரான பெரியேரியிலேயே வாழ்க்கையை ஒட்டத் தொடங்கினான் கருணாகரன்.

“மாப்ள. எங்க ஊட்டு கடசி விசேசம் வந்துரு. எனக்குக் கலியாணம் தையில வெச்சிருக்கு மறந்துடாம வந்துரு. ஒன் அட்ரஸ்சயும் கொடு பத்திரிக்கைய ஒன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்றும் தன்னோடு கல்லூரியில் படித்த மாணவர்களின் கூட்டாளிகளின் பெயர்களை நினைவு கொண்டும் அவர்களது எண் இருந்தால் கொடு என்று கேட்டும் அவர்களிருவரின் உரையாடல் நிறைவு பெற்றது.

சாந்தசீலனுக்கு அலட்சியத்தோடு மனசில் கருணாகரன் விசயம் எல்லாவற்றையும் மறந்து போயிருந்தவை மீண்டும் எல்லாம் கண் முன் சலனம் போல முன்வந்து ஓடிக் கொண்டிருந்தது.

                     0

மூனாம் வருஷம் திருவிழாவில் நடந்தவைகளை இன்னும் சாந்தசீலன் மறக்கவில்லை.

கருணாகரனின் அழைப்பில் “வா மாப்ள ஊர்ல திருவிழா. கோடை காலம் கள்ளும், சாரயமும் வறுவல் கறியும் கிடைக்கும்” என்று கூறி சாந்தசீலனை வரவழைத்தான்.

திருவிழாவின் இறுதியில் ஊர் மந்தையில் தான் சண்டை நடந்தது. “வழுக்கு மரம்” ஏறுவதில் சனங்கள் எல்லாம் கூச்சலும், கும்மாளமுமிட்டுக் கொண்டிருந்தன. திடீரென இருவர் பலமாக ஒருவரையொருவர் தங்கள் கைகளால் மார்பிலும், முகத்திலும் தாக்கிக் கொண்டு ஒருசேர மண்ணில் உருண்டு விழுந்தனர்.

பெரியசாமி தான் முதலில் சண்டையை நிறுத்த முனைந்தார். பின்னர் எங்கிருந்தோ ஒடி வந்த சிலர் கருணாகரனுக்கும், அவனுடைய “கல்லூரிக்கால நண்பான” மாப்பிள்ளைக்கும் இடையே குறுக்கிட்டு சண்டையை நிறுத்த முயன்றனர். இருவருக்கும் உடலில் பலத்த காயங்கள் உண்டாகியிருந்தன.

கருணாகரனுக்கு மார்பு கீறப்பட்டதால் எரிச்சலோடு இரத்தமும் வந்தது. மாப்பிள்ளை சாந்தசீலனுக்கு மார்பில் உள்காயமும் கீழுதட்டில் இருந்து இரத்தமும் கசியத் தொடங்கியது,

அரச மரத்தடியில் ரம்மி சீட்டு ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. கருணாகரன் முதல் ஆட்டத்திலேயே ஐநூறு பணத்தை இழந்து விட்டு எழுந்தான். மனசு விடவில்லை. “மாப்பிள்ள வாங்க செம்புலிகிட்ட போயிட்டு வருவோம்” என்றபடி ஆட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அமர்நதிருந்த சாந்தசீலனை அழைத்துக் கொண்டு இருவரும் ஒன்றாக பைக்கில் சென்றனர்.

சிறுவாச்சூர் ஊருக்கு வடக்கில் அய்யனார் கோவிலின் ஆலமரத்தையொட்டி நீண்டு செல்லும் ஒத்தையடிப் பாதையில் இரண்டு கிலோ மீட்டரில் செம்புலி கொட்டாய். காட்டுச் செடிகள் பாதைகளின் ஓரத்தில் முளைத்து பச்சை வாசனையை பரப்பிக் கொண்டிருக்கும். வாயிலிருந்து நீரொழுகிக் கொண்டிருக்க வாலை ஆட்டியபடி வெளியாள் யாரேனும் வருகிறபோது குறைக்கத் தவறாத நாய் கழுத்தில் சங்கிலியோடு கொட்டாயின் மூலையில் கம்பியில் கட்டப்பட்டிருந்தது,

“செம்புலி. யோவ் செம்புலி.” என்று கருணாகரன் கொட்டாயின் வாயிலில் இருந்து கூவினான். கறிச்சோறு தின்ன தெம்புடன் மேலுடலில் சட்டையில்லாமல் அப்போதுதான் தட்டை வழித்து சாப்பிட்ட கையோடு வெளியே வந்தார் செம்புலி.

“வாங்க பங்காளி. ஊர் திருவிழா எப்படிப் போவுது.” என வினவியபடி செம்புலி சாப்பிட்டு முடித்த எச்சில் தட்டை கழுவுமிடத்தில் வைத்தான்.

“வாரேன் பங்காளி. திருவிழா அதுக்கென்ன. திருவிழாகெடக்குது. ஊர்ல நல்லது கெட்டது எது நடந்தாலும் செம்புலி கொட்டாய தேடித்தான வெளியூர் காரனுவ வரானுங்க.”

சாந்தசீலனுக்கு நாட்டுச் சாராயம் ருசி பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆவல். கல்லூரி காலங்களில் சாராயத்தின் ருசி “மதமதப்புத்” தன்மையை ஒரு சுவையான கதையைப் போல அவன் மனத்தில் ஆசையை விதைத்திருந்தான் கருணாகரன். அவையெல்லாம் சேர்ந்து “இந்த மொற உட்டா வேற எப்போ அனுபவிக்கிறது ” என்றபடி அவனோடு சென்றான்.

செம்புலிக்கு உள்ளுர ஒரு மகிழ்ச்சி. தன்னுடைய சரக்கைப் பற்றி மற்ற ஊரு சரக்கு எல்லாம் தேறுமா? என்ற நெனப்பு செம்புலிக்கு எப்போதும் உண்டு.

“எத்தன வேணும்”

“ரெண்டு பாக்கெட்டு” குடு செம்புலி.

“ரெண்டு பாக்கெட்டு போதுமா” என்று சாந்தசீலன் கருணாகரனைப் பார்த்தான்.

“செம்புலி சரக்கு. அத்தனைத் தரமா இருக்கும். ஒரு பாக்கெட்டுல மூனு பேரு குடிக்கலாம். ரொம்ப நேரம் மதமதப்பா இருக்கும்.” என்றான் கருணாகரன்.

அதுவரை சாராயம் அருந்திப் பழக்கப்படாத சாந்தசீலன் நாவுகள் ஆசைகொண்டது.

செம்புலி சரக்கை வீட்டினுள் வைத்து விற்பது இல்லை. கொட்டாயிலிருந்து சற்று தள்ளி நன்கு பச்சையாக வளர்ந்திருந்த காட்டுச் செடிகளின் புதர்களுக்குள் ஆங்காங்கே குழிதோண்டியோ அல்லது சாக்குப் பையில் வைத்தோ யாருக்கும் தெரியாது ஓராளை விட்டு எடுத்து வருமாறு வியாபாரம் செய்வான். மாதம் மாதம் போலீசுக்கு போய்ச் சேரவேண்டிய கப்பத் தொகையை கட்டி எல்லாரையும் தாஜா பண்ணி சரி செய்துவிடுவான். ஓராளை ஏவி விட்டு “ரெண்டு பாக்கெட்டு எடுத்து வா” என்று செம்புலி கட்டளையிட்டான்.

“ஒக்காருங்க பங்காளி. சரக்கு வந்துரும்” என்றதும் கருணாகரன் “இருக்கட்டும் பங்காளி” என்று மேலும் பேச்சைத் தொடர்ந்தான். “வியாபாரம் எல்லாம் எப்புடிப் போவுது” என்று கருணாகரன் செம்புலியைப் பார்த்து கேட்டான்.

“போவுது பங்காளி. மாசத்துல ஒரு கேசு ரெண்டு கேசுனு குடுக்குறேன். ஏதோ பெரிய பிரச்சனைங்க எதுவுமில்லா வியாபாரம் போவுது.” என்று மேலும் தொடர்ந்தான் செம்புலி.

“கச்சேரிக்கு அவுக்குறது அவுத்தா எல்லா திருட்டு வேலையும், குறுக்கு வேலையும் சரியா நடக்கும்” என்றான்.

“இந்த வருஷம் காட்டுல என்ன பயிர் போட்டிருக்கீங்க” செம்புலி கருணாகரனிடம் வினவினான்.

“சோளம் போட்டேன். அறுவடை பண்ணிப் போட்டேன். இப்போ சும்மா தான் கெடக்கு.”

“ம். விவசாயம் லாபகரமான தொழிலா என்ன?. பாட்டன், பூட்டன் காலத்துல பாடுபட்டு நெலத்துல உழுதாங்க. வெள்ளாமை வௌஞ்சிது. இப்போ கூலிக்கு ஆள் கெடைக்குறதே பெரும்பாடாய் போயிட்டுது. கட்டிகிட்டு வந்தவளுக்கு ஒடம்பு வளையமாட்டுங்குது. சொகுசா வாழனும்னு நெனைக்கிறாளுங்க. ஊட்டுல இருக்குறவங்கள வெச்சி விவசாயம் பண்ட முடியல. நகை நட்டுனு எல்லாம் பேங்குல அடவுல இருக்கு.”

“அதான் ரெண்டு ஏக்கரு வச்சிருந்தும் நெலத்த வெள்ளாம பண்ணாம சும்மா போட்டுட்டியாக்கும். சம்சாரி நெலத்த தரிசுப் பொட்டலா போடலாமா. சொல்லுப் பாப்பம்” கருணாகரனின் பேச்சு.

“அதுக்கு என்னா பண்றது. ஒடம்பு சொகுசுக்கு அலையது. நோவடிக்குது உழைக்க மாட்டேன்னு வம்பு பண்ணுது”

“வேற என்ன செய்யறது. நகை நட்டெல்லாம் சொசைட்டில அடவு வச்சித்தான் நெலத்தை ஓட்டுனேன். வெள்ளாம வௌஞ்சி அறுவடை செஞ்சி நகைய மூட்டிக்கலாம்னு தான் பாத்தேன். மழ பெய்ய வுடாம இந்தமானம் பழி வாங்கிடுச்சி. கடன் ஏகப்பட்டது கூடிப் போச்சி”.

இதற்குள் காட்டுச் செடிக்குள் சென்ற ஆள் சரக்கு பாக்கெட்டுடன் வந்து கருணாகரனிடம் கொடுத்தான். சிரித்த முகத்துடன் பணத்தை அந்த ஆளிடம் கொடுத்து விட்டு இருவரும் ஆலமரத்தைத்தாண்டி செல்லும் ஆள் நடமாட்டம் வராத காட்டுப் பாதையில் ஓரமாய் அமர்ந்தனர்.

“என்ன மாப்ள அப்புடி பாக்குறீங்க. இது செம்புலி சரக்கு. கருப்பனுக்கு படையலுக்கு வைக்கிற சரக்கு. தரத்துல கொஞ்சங் கூட கொறையேதும் இருக்காது. நாங்கேரண்டி. சும்மா ஒரு ரவுண்டு போடுங்க.”

“இல்ல மச்சான்.” என்று சாந்தசீலன் சொன்னாலும் டாஸ்மாக் போலி சரக்குகளை குடித்த நாவு செம்புலிச் சரக்கு ருசிக்கு ஏங்கித் துடித்தது.

“மொத ஆட்டத்துலயே ஐந்நூற உட்டுட்டீங்களே” என்றான் சாந்தசீலன்.

“ரம்மி எப்போதும் அப்படித்தான் போக்குக் காட்டும். அதுக்காக உட்டுடக் கூடாது. சீட்ட புடிச்சு ஆடனும். அதுக்குத்தான் ஆட்டத்துல நிதானமிழக்காம இருக்க சரக்கைப் போட வந்தேன்” என்றான் கருணாகரன்.

கருணாகரன் தெளிவாக இருப்பதை எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கட்டிங்கையாவது போட்டுவிட்டு வந்தால் ஊரு நாட்டுல நடக்குற எல்லா விசயமும் அக்குவேறா ஆணிவேறா லா-பாயிண்டை புடிச்சுப் பேசுறாப்போல பேச்சு ஒவ்வொண்னும் வந்து விழும்.

ஆளுக்கொரு பாக்கெட்டை உடைத்து குடிக்கத் தொடங்கினார்கள்.

ஜிவ்வென்றிருந்தது சாந்தசீலனுக்கு. ஒரே கசப்பு. தொண்டை எரிச்சல் வேறு கவ்வியது போன்றிருந்தது. ஏதோவொன்று பறக்க எத்தனிப்பது போல இருந்தது, சற்று நேரத்திற்குள்ளாக கிர்ர்ர்…..ரென்றிருந்தது.

                     0

ஊர் மந்தையில் அரசமரத்தடியில் சீட்டாட்டம் ஜோராக களை கட்டியிருந்தது. நேரே புது ஆட்டம் தொடங்கியிருந்த குழுவில் அமர்ந்தான் கருணாகரன். ஐந்நூறு ரூபாய் விட்டதில் இருந்து மனசு ஓயவில்லை. மகாபாரத சூதாட்ட தருமனைப் போல மாறிப் போயிருந்தான்.

“ஆட்டத்துக்கு எவ்வளவு.? இந்தா எங்கைப் பணம் ஐந்நூறு.” என்றபடி தனது சட்டை பாக்கெட்டில் இருந்து தரையில் கிடந்த பந்தய ரூபாய் நோட்டுக்கள் மீது வீசினான்.

சாந்தசீலன் கையாட்டத்துல கெட்டி. தானும் ஒரு கை பார்க்கலாம் என ஆட்டத்தில் அமர்ந்தான். “இந்தா எங்கையாட்டம் ஐந்நூறு” வீசினான்.

“கருணா பணம் கொட்டி கெடக்குதா.?” மரவள்ளி கிழங்கு செட்டு கூட்டாளி

நல்லு கேட்டான்.

“ஆமா. ஒனக்கும் வேணுமா. எஞ்சொத்த பூரா ஒம்பொண்டாட்டி புள்ள பேருல எழுதி வச்சிரவா” என்றான் சிரித்துக் கொண்டே.

“நீ ஆடுடி மாப்ள. சொத்து என்ன சொத்து. மசுரு சொத்து. இன்னிக்கு போவும், நாளைக்கு வரும். ஆடுடி மாப்ள. ஒரு கை பாத்துருவம். உங்கவூட்டு பொண்ண இழுத்து வந்து எம்பையனுக்கு கட்டி வெக்கிறன் ” என்றான் பதில் மொழியாக நல்லான்.

கட்டு பிரித்து குலுக்கிய சீட்டை அமர்ந்திருந்த கைகளுக்கு போட்டான் ராமன். ஆட்டம் களைகட்டத் தொடங்கியது.

“முந்தா நாளு ஆட்டம் போல ஒரு கையாட்டம் இருந்தா போதும். கடன் பூராத்தையும் அடைச்சிருவேன்.” என்று பேசிக் கொண்டே சீட்டை விரல்களுக்கிடையில் அடுக்கினான் கருணாகரன்.

முந்தின நாள் ஆட்டம் கருணாகரனுக்கு ‘லக்’ அடித்தாற் போலிருந்தது, ஆட்டத்தின் முடிவில் இருபதாயிரம் ரொக்கம் சேர்ந்திருந்தது. ஊர் சொசைட்டியில் அடகு வைத்திருந்த எழுபதாயிரம் மதிப்பு நகையை மீட்க கருணாகரன் நினைத்திருந்தான்.

நல்லான் முந்தின நாள் ஆட்டத்தில் மூவாயிரத்தை விட்டிருந்தான். “விட்டத இன்னிக்கு புடிக்கனும்” நல்லான் மனதில் எண்ணம் ரயில் நிழலைப் போல ஓடிக் கொண்டிருந்தது.

“கணக்கெழுதிக்க மாப்ள.” என்றான் கருணாகரனிடம் நல்லான். ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் பற்றி பணம் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நோட்டில் எழுதப்பட்டு ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் ஆடும் நபர்களிடம் கணக்கு காட்டப்படுவது வழக்கம். முந்தின  நாளில் ஆடிய ஆட்டத்தில் நல்லான் கைக்கு, ஆயிரம் ரூபாயை கருணாவிற்கு தரவேண்டும் என்றும், மற்றவர்கள் எவ்வளவு ரூபாய் யாருக்கு கொடுக்க வேண்டும் என விவரங்கள் எழுதப்பட்டிருந்தது

சின்னதாக கோடுபோட்ட நோட்டில்.

“ராமன் நேர் கணக்கு ஆயிரம், கொட்டாப்புலி நேர் கணக்கு ரெண்டாயிரம் முருகன் நேர் கணக்கு ஆயிரம் சந்திரன் நேர் கணக்கு கைக்கு காசு ஆயிரம், மீதி ஆயிரம்.”-

நோட்டில் கணக்குகள் எழுதி வைக்கப்பட்டிருந்தவை ஆட்டத்தில் இருப்பவர்களுக்கு கணக்கு படித்துக் காட்டப்பட்டது.

படித்துக் காட்டப்பட்ட கணக்குகளில் யாருக்கும் சந்தேகம் வருவது எப்போதாவது நிகழும். ஏதாவது சந்தேகம் ஏற்படுகிறபோது சண்டை வழுக்கும். மண்டை உடைதல், அடி, வெட்டு குத்து வரைக்கும் இழுத்துக் கொண்டு போகும். ஆனால் கருணா ஆடும் ஆட்டத்தில் கணக்கு எப்போதும் குழறுபடிகள் நடக்காது. சில சமயங்களில் ஆட்டக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறபோது, சண்டைகள் நடக்கிற போது தற்காலிகமாக “சந்து செய்து” அப்போதே நேருக்கு நேர் வைத்து கணக்கை பைசல் செய்வது நடக்கும்.

சீட்டை குலுக்கிப் போடுகிற போது ஒவ்வொருவருக்கும் லாவகமான ஸ்டைல் இருக்கும். பெரியசாமி ‘சல்சல்’ என ஆட்டக்கார கைகளுக்குப் போடுவது வெகு ஜோராய் ரசிக்கும்படியாக இருக்கும். பெரியசாமிதான் சீட்டை குலுக்கிப்போடுவது வழக்கம். அது ஒவ்வொரு கையாட்டக்காரனின் கைகளுக்குள் சீட்டுகள் தானாக போய் அமர்ந்து கொள்வது போல இருக்கும். பெரிய சாமி கை “ராசியான கை” என்று எல்லோரும்க்கும் ஒரு நெனப்பு உண்டு.

மூனாவது ஆட்டத்தில் தான் சாந்தசீலன் கைக்கு ஆட்டம் அடித்தது. அடுத்த ஆட்டம் பெரியசாமிக்கும், ஐந்தாவது ஆட்டம் நல்லானுக்கும் அடித்தது.

“என்ன மாப்ள. ஆட்டம் கையிலேயே அடிச்சிருச்சு போல” என நல்லானைப் பார்த்து கருணாகரன் கேட்டான். “ஒக்காளி ஆட்டம் சூதாட்டம். ரம்மி, அவ அவ்வளவு சீக்கிரத்துல மாட்டுவாளா. ஒரு கையிலயா இருப்பா. மாயக்காரியாட்டம், போக்கு காட்டுவா.” என்றான் சிரித்தபடி நல்லான்.

இன்றைய ஆட்டத்தில் இதுவரை ஒரு ஆட்டம் கூட கருணாகரன் வெற்றி அடையவில்லை. செம்புலி சரக்கு மதமதப்பு காட்டியது, இதுவரைக்கும் மூவாயிரம் வரைக்கும் விட்டாச்சு. விட்டத புடிக்கனும் நல்லானுக்கும், கருணாகரனுக்கும் இடையேதான் போட்டி. இருவருக்கும் ஊர் சொசைட்டியில் அடகு வைத்த நகையை மீட்க வேண்டுமென்பதில் முனைப்பு கூடியிருந்தது.

கருணாகரன் எப்போதாவது தான் கடன் சொல்லி ஆடுவது, “ஆடுறது சூதாட்டம். அதுல கடன் மயிரு என்னத்துக்கு” கருணாகரனின் ஆட்டத்திற்கான கொள்கை.

ஐந்தாம் ஆட்டத்தோடு இதுவரையான ஆட்டத்திற்கு கணக்கை நேர்செய்து கொண்டு தடுமாறி ஆடி சாந்தசீலன் வெளியேறி செம்புலியின் சரக்கினை வாந்தியெடுக்க நகர்ந்தான்.

“மொள்ள. மெதுவா” என சாந்தசீலனைப் பார்த்து மதமதப்போடு கருணாகரன் சொன்னான்.

ஆட்டத்தில் கையைக் கடித்துக் கொண்டதில் கருணாகரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“மாப்ள கைமாத்தா ஒரு ஆயிரம் குடுங்க. வாங்கிக்கலாம்.” என்று தன் மாப்பிள்ளை. சாந்தசீலனிடம் கடனாக கருணாகரன் கேட்டான்.

“இருக்குங்க மச்சான். வாங்கிக்கோங்க” என்றபடி உலகம் சுத்துகிறதா, மிதக்கிறதாவென புரியாமல் மண்ணில் படுத்துக்கிடந்த சாந்தசீலன் தானொரு எட்டுப்பட்டிக்கு ஜமீன் என்கிற தோரனையில் ஆயிரம் ரூபாயை நீட்டிக் கொடுத்தான்.

தருமன் சூதாட்டத்தில் போதையால் எல்லாத்தையும் விட்டது போல கருணாகரன் ஆட்டத்தில் கைராசி கிட்டாமல் ஆட்டத்தை இழந்து நிதானமிழந்து கிடந்தான்.

முந்தின நாள் ஆட்டத்தில் மூவாயிரத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்ததில் நல்லானுக்கு அதிர்ஷ்ட நாளாகவே அமைந்திருந்தது,

இறுதி ஆட்டத்தில் கடனுக்கு ஆட்டம் சொல்லி பழக்கமில்லை என்பதால் கருணாகரன் விலகிக் கொள்வதாகவும், என்னோட கணக்க நோட்டுல எழுதிக்குங்க என்று சொல்லியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. “கடசியாட்டம் விட்டத புடிக்கறனோ இல்ல கடனாளியாவறனோ இல்லையோ ஒரு கையாவது செயிக்கனும்” என்கிற வெறி தலைக்குமேலே ஏறி ஏழரை ஆட்டம் போடுவது போல் அவனது மனம் முழுவதையும் ஆளுகை செய்தது வெற்றி பெறவேண்டுமென்கிற வெறி.

கருணாகரனின் கைகளில் அன்றைய ஆட்டம் கூடிவரவில்லை. கடனுக்குச் சொல்லிவிட்டு எழுந்திருந்தான். போதையின் மதமதப்பு இறங்கிப்போயிருந்தது.. சாந்தசீலனின் போதையும் மதமதப்பும் கூடியிருந்தது,

“மாப்ள. வாங்க வூட்டுக்கு போவலாம்.” என்று எழுப்பினான் கருணாகரன். தடுமாறி எழுந்த சாந்தசீலன் கருணாகரனோடு கைத்தாங்கலாக ஊர் மந்தையின் “வழுக்கு மர” திடலுக்கு வந்த சேர்ந்தனர்.

                     0

கூச்சலும், கும்மாளமும் வழுக்கு மரம் ஏறுவதை வேடிக்கை பார்க்கும் சன திரளிடம் இருந்து வந்து கொண்டிருந்த போதுதான் கருணாகரனும் சாந்தசீலனும் மண்ணில் புரண்டு சண்டையிட்டுக் கொள்வது நடந்தது.

“திருட்டு நாயே. யார கேட்டுடா எம்பாக்கெட்ல இருந்து காச எடுத்து பந்தயத்துல விட்ட” என வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது, போதையின் மதப்பிலும் ஆட்டத்தில் தோற்றதனால் ஏற்பட்ட வெறியும் கருணாகரனின் மனசை என்ன செய்வதென பித்துப் பிடித்தது போல ஆக்கியிருந்தது.

“யார்ரா திருடன். ஒக்காளி. ஊரு விட்டு ஊரு வந்து என்ன திருடன்னு சொல்லற.”

“நீ தான்டா திருடன். ஊர்த்திருடன். கூட்டிக் கொடுத்து சம்பாரிக்குற திருடன்” என்றான் சாந்தசீலன்.

“தாயோளி………” என்ற சொற்களுக்கு பின்னர் கெட்ட வார்த்தைகள் தடிக்கத் தொடங்கின இருவரது வாயிலிருந்தும். இருவரும் சனத்திரளை நினைக்காமல் ஒருவருக்கு ஒருவர் வாய்வார்த்தை தடித்து கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிக் கொள்ள சட்டென கீழே கிடந்த மொத்தமான வேப்பங் கட்டையால் சாந்தசீலனின் மண்டையில் அடித்தான் கருணாகரன்.

போதையில், தனது தலையிலிருந்து ரத்தம் வருவதை அறிந்தும் வலிதெரியாமல் மேலும் தடுமாற்றத்தோடு சாந்தசீலன் திருப்பியடிக்க எத்தனித்ததில் கருணாகரன், சாந்தசீலனை கீழே தள்ளிவிட்டு மார்பில் அறைந்தும், ஓங்கியும் மிதித்தான். எழ முடியாது விழுந்த அடியில் நிலைகுலைந்து மயக்க நிலைக்கு சென்றிருந்தான்.

ஆவேசமாக இருந்த கருணாகரனை இழுத்து தூராமாய் தள்ளிவிட்டனர். உயிர் போய்விட்டதென எல்லோரும் நினைக்கும் அளவிற்கு மயங்கிக் கிடந்தவனை சிலர் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

                0

மூனாம் வருஷம் நடந்த சண்டையின் ரணங்கள் சாந்தசீலனின் மனத்தில் இன்னும் இருந்து கொண்டிருந்தது,

விசேசமாம் விசேசம். எழவு. வௌங்காத குருட்டுக் குடிகாரனுக்குக் கல்யாணம் ஒரு கேடு என்று மனத்தில் திட்டிக் கொண்டே அவன் மிதித்த மார்பை தடவிக் கொண்டான். அவற்றையெல்லாம் மறக்க சாந்தசீலனுக்கு “மதமதப்பு” தேவைப்பட்டது.

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *