“இன்னா தனாக்கா? இப்பத்தான் வந்தியா? அசதியில படுத்துட்ட?” என்று கேட்டவாறே உள்ளே வந்தாள் பாக்கியம்.

           சைதாப்பேட்டையில் மசானக் கொள்ளை உற்சவத்திற்குப் போய்விட்டு அப்போது தான் வீடு திரும்பிய தனம் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.

           “இன்னாடீ விஷயம்?” என்று கேட்டவாறே அவிழ்ந்து கிடந்த தன் கூந்தலை ஒரு சுற்று சுற்றிக் கோடாலி முடிச்சாகப் போட்டுக் கொண்டாள்.

           “விஷயம் தெரியாதா ஒனக்கு?  நாளைக்கு செங்கல்பட்டுக்கிட்ட ஏதோ மீட்டிங்காம். காலையிலேயே லாரி வருமாம்.  நாம்ப அம்புட்டு பேரும் வரணுமாம். இப்ப தான் அந்த காக்கி சட்டை  கட்சி ஆள் வந்து சொல்லிட்டு போனாரு. இந்த தபா ஆளுக்கு ஐந்நூறு ரூவாயாம். முக்கியமான மீட்டிங்காம்.”

           தனத்தின் புருவம் சுருங்கியது. 

           “அது இன்னாடீ அவ்வளவு முக்கியமான மீட்டிங்? ஊருக்கு வெளியில வெக்கிறாங்க. காசும் நிறைய குடுக்குறாங்க?” என்றாள்

           “மது ஒழிப்பு மாநாடாம். நாமெல்லாம் போய்  “மது ஒழிக!”ன்னு கத்தணுமாம். பொம்பளைங்க தான் இதில முக்கியமாம். நம்ம வூட்டு ஆம்பிளைங்க தானே குடிக்கிறாங்க. அதனால மதுவை ஒழிக்க நாம தான் பாடு படணுமாம்.”

           “அது எப்படிடீ? மது ஒழிகன்னு கத்தினா மது ஒழிஞ்சு பூடுமா? எப்பேர்ப்பட்ட ஏமாத்து வேலை? தெருக்குத் தெரு டாஸ்மாக் தொறந்து வச்சு ஊத்திக் குடுக்குறாங்க அவங்க. அதைக் குடிச்சு சீரழியறாங்க நம்ம வூட்டு ஆம்பிளைங்க. இதில மதுவை ஒழிக்க நாம என்ன செய்யணும்?  அரசாங்கம் தானே கடையை இழுத்து மூடி ஒட்டு மொத்தமா மதுவை ஒழிக்கணும்?”

           “அதுக்கு தான் நம்மளை வரச்சொல்லி நாளைக்கு போராட சொல்றாங்க! நீ வர்றதா இருந்தா காலையில ஆறுமணிக்கே ரெடியாகிடுக்கா!” என்று சொல்லி விட்டு பாக்கியம் அங்கிருந்து சென்றாள்.

           அடுத்த நாள் அந்த குடிசை மாற்று குடியிருப்புப் பகுதியிலுள்ள பெரும்பாலான பெண்கள் காலை ஆறு மணிக்கே தயாராகி நின்று கொண்டிருந்தார்கள்.

           “நாங்க போய் வரோம்!” என்று குஷியாக 500 ரூபாயை நினைத்துக் கொண்டே அந்தப் பெண்கள் லாரியில் ஏறிக் கொண்டார்கள்.

           தனம், தான், வீட்டு வேலை செய்யும் பக்கத்திலுள்ள ‘அமராவதி’ காலனிக்கு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அந்த குடியிருப்புப் பகுதியிலேயே தனத்தை ‘சீனியர்’ என்று எல்லோரும் வேடிக்கையாக அழைப்பார்கள். அந்த சீனியர் பட்டம் எப்படி வந்தது என்றால் தன் தாய்மாமாவாகிய தன் மாமனார், தன் கணவர், தன் ஒரே புள்ளை என்று மூன்று தலைமுறை உறவுகள் எல்லோரையும் குடிக்கு வாரிக் கொடுத்தவள் தனம். ரொம்ப காலமாக குடியுடன் ‘லோல்’ படுவதால் அவள் தான் மிகவும் பாதிக்கப்பட்டவள். முக்கா வாசி குடும்பங்களில் கணவன்மார்கள் மட்டும்  தான் குடிகாரர்கள். தனத்தின் ஒரே மகன் வேலையிலிருந்து திரும்பும்போது மிதமிஞ்சிய போதையில் மெயின் ரோடில் விழுந்து கிடக்க, அவன் மேல் லாரி ஏறி இறந்து போய் விட்டான்.  இனிமே குடிக்கு சாக குடும்பத்தில் வாரிசே இல்லை என்று விரக்தியோடு ஒற்றை ஆளாக அந்த குடியிருப்புப் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறாள் தனம்.

           இரவு ஒன்பது மணிக்கு கிழிந்து போன துணி போல வாடி வதங்கி திரும்பி வந்த பெண்களை குடியிருப்பு வாசலிலேயே எதிர்கொண்டாள் தனம்.

           “இன்னாடீ நடந்துச்சு அங்கே?”  என்றாள்.

           “அத்தையேன் கேக்குற அக்கா? எல்லாம் அந்த கட்சிக்காரங்க கும்பல் தான் மொத்தமும் அங்கே இருந்திச்சி. அவுங்க என்ன சொல்றாங்க தெரியுமா? நாம பொம்பிளைங்க தான் பொறுப்பா இருக்கணுமாம்.”

           “உங்க புருஷன் கிட்ட அன்பா பேசுங்க. இந்தப் பழக்கத்தை விட்டுட சொல்லுங்க. அவங்க நிச்சயம் உங்க பேச்சை கேட்பாங்க பாருங்க. பொம்பிளைங்க நெனச்சா எல்லாத்தியும் சாதிக்கலாம் தெரியுமா? அப்படி உங்க பேச்சை கேட்டு அவங்க குடிப்பதை விட்டுட்டாங்கன்னா கடையெல்லாம் எப்படி நடத்த முடியும்? நீங்களே சொல்லுங்க! இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்! நீங்க நெனைச்சா அப்படி ஒரு நிலைமையை உருவாக்கலாம்!” அந்த கட்சிக்காரர் பேசியது போலவே பேசி ‘மிமிக்ரி’ செய்தாள் கலா.

           “மொதல்ல அன்பா சொல்லிப் பார்க்கணுமாம். அப்புறமும் நம்ம வூட்டு ஆம்பிளைங்க குடிச்சிட்டு வந்தா அவங்களுக்கு வீட்டுக் கதவைத் தொறக்கக் கூடாதாம். நாமளே கதவை சாத்திட்டோம்னா அவங்க எங்க போவாங்க? போக்கிடம் இல்லாம அவுங்க தன்னால திருந்திடுவாங்களாம்.  நாம நம்ம வூட்டு ஆம்பிளைங்கள குடிக்க விடாம பார்த்துக்கிட்டாலே போதுமாம். மதுக்கடை பிஸினெசே படுத்துடுமாம். கடைங்களை எல்லாம் தன்னால மூடிடுவாங்களாம்.” என்று அதை விவரித்துச் சொன்னாள் பாக்கியம்.

           “சொன்னா மாதிரி 500 ரூபாயும் குடுக்கல. வழக்கம் போல 200 ரூவா தன் குடுத்தாங்க. இங்கேர்ந்து செங்கல்பட்டு வரை லாரியில் வெயில்ல போய்ட்டு, அங்கேயும் வெய்யில்ல வாடி வதங்கி உட்கார்ந்திட்டு வந்தது தான் மிச்சம்.” என்று அலுத்துக் கொண்டாள் கலா.

           “ஏண்டீ! இவங்களுக்கு வாசக்கதவைத் தொறக்காம இருந்தோம்னா இன்னா நடக்கும்னு அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே? போன வருஷம் சரோஜா புருஷன் அவ கதவை திறக்கலைன்னு கதவை பாறாங்கல் வச்சு ஒடச்சு அதே பாறாங்கல்லை அவ மண்டையில போட்டு, அவ மண்டை ஒடஞ்சு ஒரு மாசம் ஆசுபத்திரியில இருந்தாளே அந்தக் கதையெல்லாம் சொல்ல வேண்டியது தானே? பெரிய குடி ஒழிப்பு மாநாடாம். இவங்க எல்லாம் போய்ட்டு வந்தாங்களாம்.” என்றாள் தனம் ஆற்றாமையுடன்.

           “ஏதோ குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சரியாக நடவடிக்கை எடுக்காததால் தான் ஆண்கள் குடிப்பழக்கத்தை விட முடியவில்லைங்கிற மாதிரி ஒவ்வொருத்தரும் மேடையேறி பேசினாங்க அக்கா!” என்றாள் திலகா.

           அந்த குடியிருப்பில் அடிக்கடி குடியினால் உடல் நலம் கெட்டு ஆண்கள் மரணமடைவது நடக்கும். கல்லீரல் கெட்டுப் போய் இரத்த வாந்தி எடுக்கிற சமயத்தில தான் ஆஸ்பத்திரிக்கே வருவார்கள். அப்படி கெடந்து பொழச்சு வந்தாலும் கொஞ்ச நாளு தான் குடிக்காம ‘கம்’ என்று இருப்பார்கள். அப்புறம் வயத்துப் பாட்டுக்காக பொண்டாட்டி எங்கேயாவது வூட்டு வேலை செய்யப் போகும் நேரம் ஓசைப்படாமல் போய் குடித்து விட்டு வந்து வீட்டில் படுத்துக் கொள்வார்கள். அந்தப் பெண்ணும், வீட்டில் சீக்கா கெடக்கற ஆம்பிளையையும்  கருத்தா பார்த்துக்கணும், நாலு வீட்டில பாத்திரம் கழுவுற, வீடு கூட்டற வேலை பார்த்து சம்பாரிச்சு யார் கையில கால்ல வுழுந்து புள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டலாம்னு பார்க்கணும், அன்னாடம் எத்தை சட்டியில போட்டு பொங்கி குழந்தைகளும் தானும் துண்றதுன்னு பார்க்கணும்.

           தனத்திற்கு உடம்பெல்லாம் கோபத்தில் கொதித்தது. ‘இந்த கேடு கெட்ட மாநாட்டுக்கு இந்த வெட்கங்கெட்ட சிறுக்கிங்க ஐந்நூறு ரூவா காசுக்காக போயிருக்காங்களே? எத்தினி பேரு வூட்ல புருஷங்காரன் குடியில செத்து, பொம்பிளைங்க தாலியறுத்து, சோத்துக்கு நாதியில்லாம, பசங்களை படிக்க வெக்க முடியாம திண்டாடறாங்க. இவங்களை என்ன செய்யறது? இப்படியெல்லாம் அவஸ்தைப் படற பொண்களைப் பார்த்தும் இந்த பெண்களுக்கு புத்தி வரலியே?’ மூன்று தலைமுறை ஆண்களை பறி கொடுத்து விட்டு ஒற்றை ஆளாக அந்த குடியிருப்பில் இருக்கும் தனத்தின் மனம் பொங்கிப் பொங்கி வந்தது.   

           மாலையாகிவிட்டாலே அந்த குடிசை மாற்று குடியிருப்புப் பகுதி அல்லோலகல்லோலப் படும். வரிசையாக வேலைக்குச் சென்றிருக்கும் ஆண்கள் வீடு திரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.  காலையில் ஒழுங்காக வீட்டிலிருந்து நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு சாமி கும்பிட்டு விட்டு மனைவி கையில் கட்டிக்  கொடுக்கும் சாப்பாட்டுக் கேரியரை எடுத்துக் கொண்டு அவரவர் சைக்கிளிலோ, பைக்கிலோ பளிச்சென்ற உடையில் வேலைக்குக் கிளம்பும் அவர்கள், வீடு திரும்பும்போது அப்படியே உருமாறி இருப்பார்கள். கால்கள் கோணிக்கொள்ள உடம்பு தள்ளாட மாடிப்படியேறி வீட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள், வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே ரகளை ஆரம்பித்து விடும்.

           “இன்னாடீ? இன்னிக்கும் கத்தரிக்கா புளிக் கொழம்பு தானா? மீன்கொழம்பு வெக்கத் துப்பில்லையா?” என்று நேரே மனைவியின் தலைமுடியை பிடித்திழுத்து வம்பிழுக்க ஆரம்பிப்பார்கள்.

           குடித்துவிட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டு விட்டும் வரும் மற்றவர்கள் போதையில், நுழைந்ததுமே, மனைவியின் சீலை முந்தானையை மோகத்தோடு இழுப்பார்கள். சின்னக்குழந்தைகள் எதிரில் நடக்கும் இந்த அராஜத்திற்கு பயந்தே அந்த வீட்டுப் பெண்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு குடியிருப்பின் கீழ்ப்பகுதிக்கு வந்து விடுவார்கள். ஒரு கட்டிடத்திற்கும் அடுத்த கட்டிடத்திற்கும் இருக்கும் இடைவெளியில் அரை இருட்டில் குழந்தைகளை உட்கார்த்தி வைத்து, அங்கேயே சோறு ஊட்டி, தூங்க வைப்பவர்களும் உண்டு.

           மது ஒழிப்பு மாநாடு நடந்ததற்கு அடுத்த நாள் காலையில் குடியிருப்புப் பெண்களிடையே ஒரே கேலிப் பேச்சுதான்.

           “இன்னாங்கடீ! ஒம் புருஷங்கிட்ட அன்பா நடந்துகிட்டியா?  நேத்திக்கி மீட்டிங்ல சொல்லிக் குடுத்தாங்களே?” என்றாள் கலா.

           “அத்தையேன் கேக்குற? நான் அவரைத் திட்டாம பாசமா பேசின வார்த்தைங்களை கேட்டு அளவு கடந்த ஆனந்தத்தில அவுரு திரும்பவும் ஒரு ‘குவார்ட்டர்’ வாங்க கடைக்குப் போயிட்டாரு!” என்றாள் பாக்கியம் சோகமாக.

           அப்போது ஆட்டோ ஓட்டும் செல்வியின் பையன் பாபு தனத்தைப் பார்க்க ஓடோடி வந்தான்.

           “பெரீம்மா! நம்ப நகர்ல ஒரு டாஸ்மாக் கடை தொறக்கறாங்களாம்!” என்றான் பரபரப்பாக.

           “எப்படிடா? நாம தான் கவுன்சிலரை பார்த்து நம்ப நகர்ல கடை தேவையில்லை, தொறக்கக் கூடாதுன்னு லெட்டர் எல்லாம் குடுத்தோமே?” என்றாள் தனம் கோபமாக.

           “அது இன்னா விஷயம்னு தெரியல. ஆனா வாசல்ல பாட்டிலுங்க வச்சிருக்கிற பெரிய பெரிய பாக்ஸெல்லாம் வந்து எறங்கியிருக்கு. சுத்தி ஆளுங்க எல்லாம் நிக்கிறாங்க!” என்றான் பாபு.

           “மது ஒழிப்பு மாநாட்டுக்குப் போனவங்க எல்லாம் வாங்கடீ! அந்தக் கடை வாசல்ல போயி கடை தொறக்கக்கூடாதுன்னிட்டு போராட்டம் செய்வோம்!” என்று தனம் முதல் ஆளாகக் கிளம்பினாள்.

           ஏற்கெனவே மாலையில் வேலை விட்டுத் திரும்பும்போது ஆங்காங்கே இருக்கும் டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு வரும் அந்த குடியிருப்பு ஆண்கள், தங்கள் நகரிலேயே ஒரு கடை திறந்தால், மேற்கொண்டும் குடிக்கச் செல்ல மாட்டார்களா? இதில் அதிகாலையில் மதுக் கடைகளுக்கு அருகில்  திருட்டுத்தனமாக சரக்கு விற்கப்படுவதையும் இந்தப் பெண்கள் பார்த்து தானே இருக்கிறார்கள்? அதுவும் அதெல்லாம் போலி சரக்காம்! கொஞ்சம் சரக்கை எடுத்து அதில ஆர். எஸ்.பவுடர்னு ஒரு கெமிகல் கலந்து தண்ணி ஊத்தி குடுப்பாங்களாம். அதைக் குடித்து தான் கல்லீரல் கெட்டுப் போகுதாம். குடிகாரப் பசங்க தானே? இவங்களுக்கு குடிக்க என்ன குடுத்தா என்ன, இவங்க இருந்தா என்ன செத்தா என்ன என்னும் தெனாவெட்டு, அலட்சியம்!

           தங்கள் நகரில் ஓசைப்படாமல் திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த மதுக்கடை வாசலில் அந்த குடியிருப்புப் பெண்கள் கையில் தடிக்கம்புகள், கற்கள் ஏந்தி போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

           இவர்களைப் பார்த்து கடை திறக்க வந்த பணியாளர்கள் பயந்து பின்வாங்கி, இங்கேயுள்ள நிலைமையை யாரோ அதிகாரிக்கு ஃபோன் செய்து சொன்னார்கள்.

           “மது ஒழிக! எங்கள் நகரில் டாஸ்மாக் கடை தொறக்க விட மாட்டோம்!” கூடியிருந்த பெண்கள் ஆக்ரோஷத்துடன் கோஷம் போட,

           “இன்னிக்கு இருக்குற நிலைமையில இது தாண்டீ நாம செய்ய வேண்டிய வேலை! இது தாண்டி மது ஒழிப்பு மாநாடு!” என்றாள் முன் வரிசையில் அமர்ந்து அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்த தனம்.

000

ரேவதி பாலு           

இவர் பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். முப்பத்தெட்டு வருடங்களாக எழுதிவருகிறார். தமிழில் வெளியாகும் எல்லா வார, மாதப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றிருக்கிறார். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. தற்போது எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் இணைந்து நடத்தும் இலக்கிய சிந்தனை அமைப்பின் மே மாதத்திற்கான சிறந்த சிறுகதை பரிசு கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. இதுவரை எட்டு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *