ஊர் தெறித்துக் கொண்டிருந்தது. காரியாபட்டி மாயக்குருவி நையாண்டிமேளம். சாம்பிராணி புகையும் பூ வாடையும் நாசியைத் துளைத்தது.

அம்மை அடுப்படியில் வகைவகையான கூட்டுப் பொரியல்களை செய்தபடியிருந்தாள் . சுற்றுவட்டார மக்கள் எல்லாம் சாவடி முன் கூடினர்.

நரிக்கொறத்தி ஆட்டக்காரர்கள் மந்தையிலிருந்து ஆடிக்கொண்டு சாவடிக்கு வந்தனர். இளசுகளும் சிறுவாண்டுகளும் ஆட்டக்காரர்களோடு‌ஆடி வந்தனர். மணி எட்டுக்கு மேல தாண்டிருச்சு. மேளகாரர்களும் ஆட்டக்காரர்களும் பெரிய அப்பச்சி வீட்டில் சாப்பாட்டுக்குச் சென்றனர்.

மாடத்தீவத்தைப் பொருத்தி முப்பாட்டி ஆதம்மாவை கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அம்மையின் கண்கள் இரண்டும் கொப்பளித்தன. சில விநாடிகள் அழ ஆரம்பித்தாள். பின் அண்ணன் விபூதியை எடுத்து போட்டான். மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தங்கச்சியின் உடல் சிலிர்த்தது. அவளுக்கும் அண்ணன் விபூதியைப் போட்டுவிட்டான்.

“நீங்க மட்டும் ,கோயிலுக்கு போய்ட்டு வாங்க, நான் வரல. எனக்கு ,ஏதோ ஒரு மாதிரியா இருக்கு” னு சொல்ல,

”அப்படிலாம் ,சொல்லக்கூடாதும்மா; அண்ணங்களோட போய்ட்டு வாம்மா நம்ம சாமிம்மா ” என்றார் அப்பா.

”இல்லப்பா, எனக்கு ஒடம்பெல்லாம் காய்ச்சல் வர மாதிரி இருக்கு”.

”அதெல்லாம் ,ஒன்னும் ஆகாதும்மா சாமியைக் கும்பிட்டுட்டு வாம்மா. வருசத்துக்கு ஒரு நாளும்மா” என்றார்.

நையாண்டி மேளகாரர்கள் பெரிய சாமியாடி வீட்டு முன் அடித்த அடியில் அதிர்ந்தது தார்சாலை. அப்படியே பெரிய அப்பச்சி வீட்டு முன் சிறிது நேரம் அடித்தனர். குடும்பனார் வீடு, பூசாரி வீடு,கெடாவெட்டுபவர் வீடு வரை அடித்து அழைத்தனர்.

பெரிய சாமியாடிக்குப்பிறகு மொக்கைப்பிள்ளை பெரியம்மை சாமி எறங்கி ஆடிவந்தாள். ஆட்டக்காரர்களும் மேளகாரர்களும் முன்னே சென்றனர். ஊரார்கள் பின்னே சென்றனர். வயலுக்குள்ள பத்தூரு சனங்களின் கூட்டம் குலுங்கி அலும்பியது. வயலைச் சுற்றி அலங்கார விளக்குகள் மின்னிச் சிதறின. சாமி எறக்கி, ஊருக்கு வாக்குக் கேட்டுக் கொண்டனர் ஊரார்கள்.

வான வேடிக்கை விண்ணைப் பிளந்து கண்ணைக் கவர்ந்தது.

நானும் அண்ணனும் தம்பியும் தங்கச்சியும் ஆதம்மாவின் மேடையருகே நின்று கொண்டிருந்தோம். தங்கச்சி ,வயிற்றைக் குமட்டி வாந்தியெடுக்க ஆரம்பித்தாள். வாந்தி நிக்கவில்லை. கோயிலில் இருந்து, அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்தோம்.

“தூக்குங்க தூக்குங்க. இப்பவே தூக்குங்க என்னைய, ஆஸ்பத்திரிக்கு!” என்றாள்.

“கொஞ்சம் ,பொறுத்துக்கம்மா சாமி பானையை ,எறக்கிட்டு கெடா வெட்டிட்டு, வரட்டும்மா! வந்ததும் போலா”மென்று சொல்லிக் கொண்டிருக்கும் போதோ, கொலவை போட்டு சாமிஎறங்கி ஆடுகிறார் அப்பா.

என்னையும் தம்பியையும் கூப்பிட்டு “மலையக்கபாலிக்கு ,பொங்கல் வச்சு எறக்கி வச்சிருக்காங்க போய் அந்தச் சாம்பலை அள்ளிட்டு வாங்கப்பா” என்றார்.

நானும் தம்பியும் போய் சாம்பலை அள்ளி வந்து தங்கச்சிக்கு பூசிவிட்டோம். நடுங்க ஆரம்பித்து விட்டாள்.

முனியாண்டி, கோயிலுக்கு போய் விபூதியை அள்ளிட்டு வந்து போட்டும் கேட்கல.

தங்கச்சி படுத்த படுக்கையானாள். அஞ்சு நிமிடத்தில் அப்பா படுத்துவிட்டார்.

“குளிருது குளிருது நெல்லுச் சாக்கு எடுத்துப் பொத்திவிடுங்க!” என்றார்.

அடுத்த ,இரண்டு நிமிடத்தில் அண்ணனுக்கு ஒடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்து நடுங்கிக் கொண்டிருக்கிறான்.

வாந்தியும் ,வயிற்றுப் போக்கும் காய்ச்சலும் நிக்கவில்லை. அடுத்த இரு‌நிமிடத்தில் அம்மையும் படுத்துவிட்டாள். நானும் தம்பியும் அம்மாச்சியும், அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தோம். எனது கண்கள் கசியத் தொடங்கி விட்டன.

சாமி பானை எறக்கி, கெடா வெட்டி கறி உரிச்சுக் கொண்டிருந்தனர் ஊரார்கள்.

மூனு மணிக்கு மேலாகி விட்டது. அம்மாச்சியும் படுத்த படுக்கையானாள். சில நிமிடங்களில் தம்பியும் வாந்தியெடுத்து அழுக ஆரம்பித்து விட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் உள்ள ஆறு பேரும் மரணத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தோம்.

உடலெல்லாம் சொனங்கி சுருண்டது. எஞ்சியிருந்த நானும் படுத்த படுக்கையானேன். மணி நான்கைக் கடந்தது,

“அய்யய்யோ ஏங்குடும்பமே சாகப்போகுதே அய்யய்யோ” என்று அழுதபடி, நடுங்கியபடி செம்பட்டி, மாமாவுக்கு போன் செய்து பேசமுடியாமல் தகவலைச் சொன்னார்.

மாமா, நீங்க போய் ஆஸ்பத்திரில சேருங்க மாமா. அக்கம் பக்கத்தில யாரும் இல்லயா? யாரையாவது கூப்பிட்டு ஆஸ்பத்திரில சேருங்க, இன்னும் ஒரு மணி நேரத்தில வந்திடுதேன்” என்றார்.

தட்டுத் தடுமாறி எழுந்த அம்மை, “நான் செத்தாலும் பரவாயில்லையே, நான் தவம் இருந்து பெத்த, தங்கப்பிள்ளைக தவிடாகப் போகப்போகுதுகளே” நடுங்கிக் கொண்டு அழுதபடியே தடியை ஊண்டிக்கொண்டு, செல்லத்தாயி வீட்டு ஆட்டோவைக் கூப்பிட்டாள்.

சாவடியில், ஊரார்கள் கெடாவை உரித்து கறி வெட்டிக் கொண்டு இருந்தனர். எங்களின் நிலைமையைக் கண்ட தவால்மகன் ஈடான் அழ ஆரம்பித்து விட்டார். செல்லத்தாயி மகன்கள் ரெண்டு ஆட்டோவில் எங்களைத் தூக்கி ஏற்றினர்.

பக்கத்தில இருந்த மருத்துவமனைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. கடைசியாக பைபாஸ் மருத்துவமனையில் சேர்த்தனர் செல்லத்தாயி மகன்கள்.

சேதி தெரிந்ததும், உறவினர்களும் ஊரார்களும் ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்தனர்.

“தலையிலும், மார்பிலும்” அடித்துக் கொண்டு அழுது வந்தாள் கொடை ரோட்டு அத்தை.

செம்பட்டி, மாமா’ நெஞ்சு பதைபதைத்தபடி ஓடோடி வந்தார். சோணை தாத்தா, அசோக்மாமா , பெரியப்பா, ஷியாம் அண்ணன் மருத்துவச் செலவை பார்த்தனர்.

ஏழு பேரும் ,ஏழு பெட்டில் படுத்தபடி கிடப்பதை பார்த்த ஊரார்களும் உறவினர்களும் கண்கலங்கினர். மதுர மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து வீடுகளை ஆய்வு செய்தனர். சமைக்கும் உணவுப் பொருட்கள், குடிதண்ணீர் எல்லாவற்றையும் ஆய்வு செய்தனர். கடுமையான வாந்திக்கும், வயிற்றுப் போக்குக்கும் காய்ச்சலுக்கும் காரணம் தெரியவில்லை.

சிறப்பு மருத்துவர் வந்து பார்த்து மோசன் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் அதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ஊர்த்திருவிழா” அன்று இந்த மாதிரி நடந்து போச்சு என்று வருந்திச் சென்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள், மைக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.

“ஒங்க சாமி”

“ஒங்க வீட்டுச் சாமி”

“ஒங்க முப்பாட்டி “

“பொங்கல் திருவிழாவுல” இப்படியாகிப்போச்சப்பானு வருவோர் போவோரெல்லாம் பேச ஆரம்பித்தனர்.

கிருதுமா நதிக்கரை போகும்வரை எனது உடல் மூடும் வரை இந்தக் கரை படிந்த சொல் எழுதி பதியப்பட்டிருக்கிறது என்று வருந்தினார் அப்பா.

அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்  எனதூர் சரித்திரம்’ எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *