இருளுக்கும், வெளுப்புக்குமான இந்த பொழுதுகள் வெயில்,மழை, குளிர், காற்று என பலதரப்பட்ட பருவகாலங்களை உள்ளடக்கிய தாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலநிலை எப்படியாக  இருப்பினும், அதற்கு ஏற்றவாறு விலங்குகள் அனைத்தும் வாழப் பழகிவிடுகின்றன. ஆனால் இந்த உலகில் மனிதர்கள் மட்டுமே தம்மைக் தற்காத்துக்கொள்ள பல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள், அதில் சில மனிதர்கள்  வெற்றி பெற்றாலும், பலரும் தோல்விதான் அடைகின்றனர். இந்த மாதிரியான வாழ்வியல் தொடர்ச்சியைத்தான் நாம்  பரிணாம வளர்ச்சியென்றும், நாகரிக வளர்ச்சியென்றும், விஞ்ஞான வளர்ச்சியென்றும் சான்றுகளோடு சொல்லிக்கொண்டிருக்கிறோம். எது எப்படியோ! மனித வாழ்கையில் வாழும் நிமிடங்களை ஒருவர் வெறுத்துவிட்டால் அவர்களுக்கு ஒரு நாளென்பது பெரும் யுகத்தைக் கடப்பதைப் போலத்தான் இருக்கும்.

ஆன்மீக நகரான பழனியில் சூரியக் கதிர்கள் உச்சம் பெற்றும் கூட பனியின் அடர்த்தி குறைந்தபாடில்லை. கிழக்கு மேற்காக நீண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் மார்கழி, தை மாதங்களில் இப்படியான உறைபனி இல்லாமல் இருந்தால்த்தான் அதிசியம் என்றே சொல்லலாம். ஆனாலும், வழக்கத்தை விடவும் பனி அதிகமாகவே இருந்தது. பருவநிலை மாற்றமோ என்னவோ! இப்பலாம் வருடத்திற்கு வருடம் வெயிலுனாலும் சரி, மழையினாலும் சரி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது!, அதுபோலவே குளிரும் வெம்பாவாகப்  பெய்துகொண்டிருந்தது

பின் மண்டையிலிருந்த பாதி மயிர்களும் சரிபாதியாக நரைத்து,  சுருக்கக்கோடுகள் நிறைந்த தோலைப் போர்த்தியவாறு நின்றிருந்த வயதான ஒருவரின் முகம் அவளுக்கு  நன்கு பரிட்சயப்பட்டதாகவேத் தெரிந்தது. அவர் கண்களில் ஈரம் கசிந்து,  அன்பு பொழிவதை அவளால் நன்கு உணரவும் முடிந்தது. ஆனால், பழனி வந்ததிலிருந்தே யாரையும் அவள் ஏறிட்டுப் பார்த்தவளில்லை, பார்க்க வேண்டிய அவசியமும் அவளுக்கு இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குரூரமான பார்வைகளை எதேச்சையாகக் கண்டாலும் அவ்வளவுதான் அந்த கண்களில் மீண்டும் அகப்படாத தூரம் ஓடி மறைந்துவிடுவாள். ஆனால், இந்த கிழவனின் பார்வை அப்படி முரணானதாக இல்லை. அவரின் முகம் அவளது அப்பாவின் சாயலை ஒத்திருந்ததோடு, பழைய நினைவுகளைக் கிளறி விடுவதாக இருந்தது.

பழனியில் குடிகொண்ட குழந்தை வேலப்பனின் அருளைப் பெறவே காவி வேட்டியும், கழுத்தில் துளசி மாலையுமாக நின்றிருந்த அந்த முதியவர் அவளை வாஞ்சையாகப் பார்த்ததோடு, அவளை நோக்கி தம் இரு கைகளையும் நீட்டினார். மனிதர்களின் அன்பினை முற்றிலுமாக தொலைத்திருந்தவளுக்கு இந்த காட்சி வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.  வெகுநாட்களாக நல்ல மனிதர் களைத் தொலைத்து வாழ்ந்தவளுக்கு முதியவரின் அன்பு  வற்றாத அருவியினைப் போல்தான் இருந்தது.

அவளை அறியாமலேயே கரங்களை முதியவரின் கரங்களில்  குவித்தாள். முதியவரோ புதிதாக அச்சடிக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டு ஒன்றினை அவளின் கைகளில் திணித்தவாறு  “வச்சிக்க மா!”என்றார். பெற்றுக்கொண்டவள் அதனை “ தாம் வைத்துக்கொள்வதா? இல்லை, அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவதா?” என யோசித்தவாறே உறைந்துபோயிருந்தாள். அவள் சுயநினைவிற்கு வந்ததும் முதியவரின் முகம் மட்டுமல்லாது மொத்த உருவமும் அங்கிருந்து தொலைந்து போயிருந்தது. ஏன் அந்த முதியவர் நம்மிடம் வந்து பணத்தைக் கொடுத்தார்? நமக்கெதற்கு இந்த பணம்? என்பது போல பணத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பணம் தானே இன்று மனித கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. பணம் இருந்தால் தானே இந்தவுலகில் மனிதனாகவே மதிக்கிறார்கள். பணம்தான் இந்த நாட்டை, இந்த ஊரை ஆள்கிறது, பணமில்லாத மனித வாழ்க்கைதான் என்ன? ஒரு வெத்துப் பேப்பருக்குத்தான் எவ்வளவு முக்கியத்தும், இவ்வளவு கௌரவம் . பணத்தைப் பற்றி யோசித்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.

“இந்த நூறு ரூபாய் எனக்கெதற்கு?” என தூக்கியெறிய நினைத்தபோது அந்த முதியவரின் நியாபகமும் அவள் தந்தையின் முகமும் கண்களில் நிழலாடியது. அவளையறியாது கண்கள் கலங்கி கதறி அழுதாள். அவளால், அழுகையை நிறுத்தவே முடியவில்லை. மீறி அடக்க முயன்றாலும் கூட,  தொண்டையை அழுத்தி மேலெழும்பும் ஓலத்தை அவளால் எப்படி கட்டுப்படுத்த முடியும்! வாய்விட்டு கதறியழுதாள். அந்த அழுகையே அவளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. மேலும், அவளின் தனிமை, இயலாமை, தவிப்பு, ஏக்கத்தையும் கூட நிவர்த்தி செய்வதாகவே அந்த அழுகை இருந்தது.

அவளைச் சுற்றிக் கூடிய கூட்டத்தையெல்லாம் மறந்துபோனாள், “அய்யோ!” என்றார்கள்,  “பாவம்!” என்றார்கள், “பைத்தியம்!” என்றார்கள். சிலர் சில்லரைக் காசுகளை அவள் மீது தூக்கி  வீசினர். சிலவை அவளின் மேனி பட்டு ஒலி இழந்தன. சிலவை ரீங்காரமிட்டு சுழன்று அடங்கின. அப்போதுதான் அவளுக்கு அந்த முதியவர் கொடுத்த நூறு ரூபாயின் நோட்டின் மீது தாங்கிக்கொள்ள முடியாத கோபம் உண்டானது. “கிழட்டுப் பையன் நம்மள பிச்சக்காரியாக்கிட்டுப் போயிட்டான்!” என திட்டித் தீர்த்தாள். முனை கூட மடங்காதிருந்த ரூபாய் நோட்டை  சுருட்டி தூர வீசினாள், வற்றாத சினத்தோடு அங்கிருந்து எழுந்து நடக்கவும் தொடங்கினாள்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இஷ்டத்துக்கு ஏற்ப பிறரை வடிவமைத்துக்கொள்கிறார்கள். “நாம் யார்?” என்பதை மற்றவர்கள் எப்படி தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி உத்தேசிப்பது மிகச்சரியாக இருக்குமா என்ன? நிச்சயமாக பார்வைக்குப் பார்வை மாறுபடும்.

அவள் இங்கு யாரையும் பார்ப்பது கூட இல்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் அவர்கள் ஒரு வட்டத்திற்குள் அடக்க முயல்வதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. ஒரு பறவையைப் போல இந்த வானத்தில் தம் சிறகை விரித்துப் பறக்கவே ஆசைப்படுகிறாள்.  யாரும் அவளை நோட்டமிடக்கூடாது, யாரும் அவளை குறிவைத்து கவன் வில்லை எறியக் கூடாது என்றுதான் நினைக்கிறாள்! ஆனால், இவையனைத்தும் மனிதர்களின் பழக்கத்தில் வெகு சாதாரணமாக நடந்துவிடுகிறது.

எந்தவொரு மனிதருக்கும் இன்னொரு மனிதர் தேவையாகவே இருக்கிறார் என்பதைப் போல, இந்த சமுதாயத்தைக் கட்டமைத்து விட்டார்கள்.

மனிதர்களின் தேவை என்பது சக மனிதரை இன்புறுத்தி மகிழ வைப்பதை விடவும், அது அவர்களை துன்புறுத்தி ஓட வைக்கிறது என்பதை ஏனோ யாருமே  புரிந்துகொள்வதாகவே இல்லை. “அவள் யார்?” என்ற தேடுதலும் கூட ஏதோவொரு அடையாளத்தை அவள் மீது சுமத்துவதாகவே இருக்கிறது.

ஆதவன் தம் அதட்டும் கோபத்தை சமரசமின்றி படர்ந்திருக்கும் இடங்கள்தோறும் வியாபித்துக்கொண்டிருந்த வேளையது. அவள் இங்கே வந்து தங்கியிருக்கும் இந்த ஆறு நாட்களிலும்  பசியைப் பழகுதல் என்பதும்,  நிறைப்பது என்பதும் அத்துபடியான விசயமாகவே இருந்தது. அடிவாரத்தை ஒருமுறை சுற்றி வலம் வந்தால் போதும் வயிறு முட்ட சாப்பிட்டு விடலாம். ஆனால்,  சில ஊசி குத்தும் மனிதர்களின் வேவுப் பார்வையினால்  சென்ற இடத்திற்கே திரும்பத் திரும்பச்  செல்வதென்பது தமக்கு பாதுகாப்பானதாக இருக்காது என அச்சமடைந்தவளாகவும் இருந்தாள். ஏனென்றால், கடந்த ஆறு நாட்களின் அனுபவமே   அவ்வளவு கொடியதாக இருந்தது.

பார்ப்பதற்கு சாமியாரைப் போல வேடமிட்டு வேவு பார்க்கும் கயவர்கள் ஊசியை மட்டுமல்லாது கடப்பாரையைக் கொண்டும் குத்திக் கிழிக்கத் தயாராகவே இருந்தார்கள்.

காதலால் ஏற்பட்ட ஒரு பிரச்னைதான் அவள் வீட்டை விட்டு  வெளியே ஓட்டம் எடுக்க காரணமாக இருந்தது. பிறகு பழனி வந்து சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையின் தீவிரத்தையே புரிந்துகொள்ளத் துவங்கினாள்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சாதாரண வாழ்வை வாழவே எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்ற ஆழ்ந்த சிந்தனையோடு ஹோட்டல் வாசலில் அமர்ந்திருந்த அவளை அங்கிருந்த வாட்சுமேன் விரட்டினான். பொசுக்குனு  வந்த கோபத்தை அவள் அடக்கிக்கொண்டாலும், “அவன் வேலையை அவன் செய்கிறான்!” என நினைத்து அவ்விடத்தை விடுத்து தூரமாகப்போய் அமர்ந்துகொண்டாள். அன்பு காட்டி அடிமைப் படுத்தும் மனிதர்களை விடவும், இப்படி வெறுப்பைக் காட்டி துரத்தும் மனிதர்கள் எவ்வளவோ மேல்! எனக்கூட அவளுக்குத் தோன்றியிருக்கும்தான்.

சாப்பிட அடம் பிடிக்கும் ஒரு குழந்தையை குடும்பமே சேர்ந்து சாப்பிட வதைத்துக்கொண்டிருந்தது. ஆனால், அவர்களின் முயற்சி  எதிலும் கவனம் செலுத்த நினைக்காத குழந்தையைப் பார்த்து ஏக்கப் பெரு மூச்சு விட்டவளாகவேப் பார்த்துக்கொண்டிருந்தாள். குடும்பமே அந்த குழந்தையை சாப்பிட வைக்க முயன்றுகொண்டிருந்ந்தாலும், அக்குழந்தையின் அம்மா ஆழ்ந்த சோகத்தோடு சாப்பிட வைக்க மிகுந்த சிரத்தை எடுத்தவளாகவே இருந்தாள்.

அம்மாவின் அரவணைப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மனித உறவின் நீட்சியில் நீர்த்துப்போகாத அன்பு அவளிடமே எப்போதும் வெளிப்படக்கூடியது.

நினைவு தெரிந்த நாள்முதலாக அவள் அன்னையின் பரிசத்தையோ, பரிசுத்தமான அன்பினையோ துளியும் முகர்ந்திடாதவள். “ நம்ம அம்மா இருந்திருந்தால் இந்த நெலமைக்கெல்லாம் நாம ஆளாகியிருப்போமா?” என அவள் யோசிக்காத நாட்களில்லை. மீண்டும் மீண்டும் அம்மாவின் நினைப்புத் தட்டவே மனம் நொந்து அமர்ந்துகொண்டாள்.

பெரும்பாலான தந்தைகளுக்கு பிள்ளைகளின் மீது ஆளுகை செலுத்த முடிகிறதே தவிர, அன்போடு பழக முடிவதில்லை.  அப்படியே அன்பு வெளிப்பட்டாலும் ஒரு சில கண்ணீர் துளிகளோடு அது கட்டுப்பாடாக மாறி வதைக்க ஆரம்பித்துவிடுறது.

இப்போதும் அவளுக்கு தம் அப்பாவின் மீது எந்த கோபமும் கிடையாது. “அவர் தன்னிடம் இப்படி நடந்துகொள்ளக் காரணமாக இருப்பது, அவர்  சில பொய்களையும், மூடக் கதைகளையும் தலைக்குமேல் ஏற்றிக்கொண்டு, அதுதான் கௌரவம், அதுதான் பெருமை என நினைத்துக்கொள்வதுதான். அவரிடம், இனியும்  பேசிப் புரியவைக்க எதுவுமில்லை!” என்றுதான் தம் வீட்டைவிட்டுக் கிளம்பிவந்ததற்கான காரணம்.

காயம்பட்ட நெஞ்சை  மீண்டும் மீண்டும் காயப்படுத்தும் வேலையை மட்டும்தான் இந்த சமூகமும், சமுதாயமும் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதை நினைக்கவே அவளுக்கு அசூயையாகத்தான் இருந்திருக்கும்.

அழுதுகொண்டிருந்த குழந்தையின் தாய் அவள் அமர்ந்திருக்கும் திசையைக் கைகாட்டி , “நீ சாப்பிடலனா அந்த கிறுக்கிக் கிட்ட உன்னப் புடிச்சுக் கொடுத்திருவேன்!” என பயமுறுத்தவே அக்குழந்தை மெல்ல வாயைத் திறந்து பயத்தோடு சாப்பிடத் துவங்கியது. அவளுக்குக்  கோபம் தலைக்கு மேல் ஏறினாலும், “குழந்தை சாப்பிட்டு முடிக்கட்டும்!” என தன் செவிகளை அடைத்து வானத்தைப் பார்த்தவளாகவே வெறித்து அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு பசி மயக்கத்தில்  கொஞ்சம் கிரக்கம் தட்ட ஆரம்பித்தது. மெல்ல எழுந்தவளாக அடிவாரத்தை நோக்கிப் பயணப்பட்டாள். பித்தியைப் போலிருந்த அவளைக் கடந்துசெல்பவர்கள் எல்லாம் இடைவெளியைக் கடைபிடித்தார்கள். மனம் வெறுத்துப் போனதில் தம்மை மறந்தவளாகவே நடந்தாள்.

சில்வர் தகடுகளை வெளிப்புறமாகக்கொண்ட ஒரு பேருந்து ரோட்டைக் கடந்து செல்கையில் அது கண்ணாடியைப்போல எதிரொலித்து நகர்ந்தது. வாகன நெரிசல்களுக்கும் ஊடாக பேருந்தின் கண்ணாடித் தகடுகளை அவள் உற்றுப்பார்த்த போது“ இளம்பெண்ணொருத்தி  பிச்சக்காரியாய் அலைந்து திரிகிறாள்!” என்றுதான்  அவளுக்கே நினைக்கத் தோன்றியிருக்கும்.

விரக்தியின் விளிம்பில் அவள் அடிவாரத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தாள். பசி கண்களைக் கட்டியது. அதிர்ஷ்டம் இருந்தால் அலையாமல் சாப்பாடு கிடைக்கும், சில நேரங்களில் ரொம்பவே மெனக்கெடனும்.

எந்தவித உழைப்புமின்றி கிடைக்கும் உணவுக்காக சலித்துக்கொள்வது நியாயமில்லைதானே என்பது போலவே நகர்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு பெரிய மண்டபத்தினுள் கூட்டம் வருவதும் போவதுமாக முண்டியடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்கு, “ஏதோ பெரிய விருந்துதான்!” என யூகிக்கவும் முடிந்தது.

இந்தமாதிரியான பெரிய இடத்து விருந்துகளில் சாப்பாட்டிற்கென பணத்தை வாரி இரைப்பார்கள். ஆனால், மாற்று ஆட்களையோ, தமக்கு உதவியாக வேலை செய்பவர்களையோ சமமாக பந்தியில் அமரவிட மாட்டார்கள். விருந்துச் சாப்பாட்டினை சாப்பிட வேண்டுமென்றால் கால்கள் கடுத்துக் காத்துக் கிடக்கணும். மிச்சமாவதை கொஞ்ச நஞ்சம் மனசிருந்தால் கடைசியாகப் போடுவாங்க. இல்லைனா, கீழ கொட்டுறத போயி வாங்கிக்கணும். எது எப்படியோ, ருசியான சாப்பாடு வேணும்னா மானத்த விட்டு காத்திருக்கத்தான் வேண்டும். “ சில நேரங்களில் இந்த மாதிரி வாழறதுக்கு எதுக்கு நாம ஏன் உசுரோட இருக்கணும்..!” ன்னு தம்மைப் பார்த்தே காரி உமிழ்ந்து கொண்டாலும், பசியோ! மானத்தைப் பார்க்காது, சாப்பாட்டிற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கும்.

“நாம இப்ப இருக்க நெலமைல மானம் ரோசத்தையெல்லாம் பார்த்தா உயிர் வாழவே முடியாது ! யாரு என்னவோ நினைச்சிட்டுப் போகட்டும், இப்போதைக்கு பசியாறினால் போதும்!” என்ற நினப்போடுதான் மண்டபத்தின் ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.  அவளைப் போலவே அங்கு ஒரு கூட்டமே நின்றிருந்தது.

வெள்ளைச் சட்டையும், வேட்டியுமாக அந்த கூட்டத்தை நோக்கி வந்த ஒரு ஆள் “ எல்லாரும் சாப்பிட வாங்கம்மா..!” எனக் காத்துக்கொண்டிருந்த அனைவரையும் கூப்பிட்டு பந்தியில் ஒரு ஓரமாக உட்கார அனுமதித்தார்.

அந்த விருந்தில் வெளியாட்கள் யாருக்கும் டேபிள் சேரெல்லாம் அனுமதிக்கப்படவில்லை. கட்டாந்தரையில் அமரவைத்து வாழையிலையை நெடுகப் போட்டார்கள். இலையில்  தண்ணீரைத் தெளித்துவிட்டு சாப்பாட்டிற்காகக் காத்திருந்தபோதுதான் அவள் அவனைப் பார்க்க நேர்ந்தது. அவன் ஒரு பெண்ணுடன் கைகோர்த்தவனாக நின்றபடி  சிலரிடம் பேசிக்கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.

அவள் கண்களில் கண்ணீர் கடலென ஆர்ப்பரிக்கத் துவங்கியது. அவள் தம் கண்களையே நம்ப முடியாமல் அவனையே நோட்டமிட்டாள். “அது நிச்சயமாக அவனேதான். அவனுடன் இருப்பவள்தான் அவனது புதிய மனைவி போல!” என நினைத்தவளாக நெஞ்சம் பதறினாள், அவள் கண்களில் கண்ணீர் பொத்துக்கொண்டு வழிந்தது.

“நான் தான் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் என்னை பார்க்கப்போறதே இல்லை!” என்ற ஏக்கப் பெருமூச்சோடு, “நல்லாவேத் தெரிந்து விட்டது! இவன் ஒரு ஏமாற்றுக்காரன்! , கொடும் நெஞ்சன்! , இவனுக்குப் பொண்டாட்டியாய் வந்தவள் பாவம் !” என பல எண்ணவோட்டங்களுக்கிடையே, “இவன் போடற சாப்பாட்டைச் சாப்பிடறதுக்கு மாண்டுக்கிட்டு செத்துப் போயிடலாம்” என நினைத்தவளாக பந்தியிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள். பந்தியிலிருந்து, “யம்மோ உக்காருமா… சாப்பிட்டுப் போமா..!” என்ற அழுத்தமான குரல்களின் ஊடாக மிக நெருக்கமான குரலொன்று “ஏதோ பைத்தியம் போல!” எனச் சொல்லிச் சிரித்தது அவளின் காதுகளில் மிகத் தெளிவாக விழுந்தது.

காதல் என்பது என்ன? ஆசையின் சல்லாபம் என்பதா? காம நுகர்ச்சிக்கான போதை என்பதா? எனக்கு நீ என்றும், உனக்கு நானென்றும் உடன்பட்டு, வாழ்வின் இறுதிவரை நீந்திக் கழிப்பதா? இல்லை, ஈருடல் ஓர் உயிர் என்ற மாயையில் ஒருவரோடு ஒருவர் மூழ்கிக் கிடப்பதா? இல்லை, சுமூகமாக வாழ்வதற்குத் துணையாவதா? இல்லை, சமூக மதிப்பின் அளவீடா? எது காதல்? ஒரே சாதியில், போட்டிப்போடத்தக்க சொத்துகொண்ட ஒரு ஆணும் பெண்ணும் மணம் முடித்துக்கொள்வதுதானோ காதல்? காதல் ஒரு ஏமாற்றுத்தனம், காதல் ஒரு பைத்தியக்காரத்தனம், காதல் ஒரு முட்டாள்த்தனம், உண்மையில் காதல் ஒருவரை மனநோயாளியாக்குகிறது.

மண்டபத்தைவிட்டு வெளியேறிய அவள் “ நான்  பைத்தியம்! நான்  பைத்தியம்!” என கதறிக்கொண்டே    நகர்ந்தாள்.

“இப்போது  என் அப்பா என்னை முழுவதுமாக மறந்திருப்பார். ஏதோ குளம் குட்டைன்னு செத்துத் தொலைஞ்சிருப்பாள்னு நெனைச்சிருப்பார். ஆமா… அவர் மானம், மரியாதையையெல்லாம் கெடுத்துட்டேன், பின்ன எப்படி என்னைத் தேடுவார்?அவர்கூடவே இருந்தாலும் சோத்துல விசத்த வச்சித்தான் கொன்றிருப்பார். இப்பவும் என்ன? கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டுத்தானே இருக்கேன்..!” எனத் தனியாகவேப்  பேசிக்கொண்டாள்.

பசி அதிகமாக இருந்ததால், அடிவாரத்திலிருந்த ஒரு குடிநீர் குழாயிற்குச் சென்று வயிறு முட்ட தண்ணீரை குடித்தாள். தாகம் அடங்கியிருந்தாலும் பசி வயிற்றைக் கிள்ளியது.  அசதியால் ஒரு அரசமரத்தினடியில் உறங்கியும் போனாள்.

சாய்ந்தரமாக எழுந்தவள் நடக்க வலுவின்றி அம்மரத்தினடியிலேயே உட்கார்ந்து கொண்டாள்.  கிரிவலம் வந்த சில பக்தர்கள் வாழைப் பழங்களை அவளிடம் வீசிச் சென்றார்கள். தெம்பு பிடித்து உட்கார  அது ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.

பகலை விரட்டி இருள் சூழத் துவங்கியிருந்த அப்பொழுது அவள் மனதிற்குள் நடுக்கத்தை உண்டுபண்ண ஆரம்பித்தது. அங்கிருந்து மெல்ல எழுந்து நடக்கத் துவங்கியதும் அருகிலிருக்கும்  காக்காத் தோப்பில் போடப்பட்ட விருந்தில் அவளுக்குப் போதுமான அளவு உணவும் கிடைத்தது. வயிற்றுப் பசியடங்க சாப்பிட்டுவிட்டு அடிவாரத்திலேயே உலாவிக்கொண்டிருந்தாள்.

இரவின் மூர்க்கத்தில் வெப்பம் தணிந்து குளிர் படியத் துவங்கியிருந்தது. மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளையெல்லாம் கூட்டிக் குவித்து சிலர் நெருப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்தார்கள். சில பிச்சைக்காரர்களும், வயதான சாமியார்களும் இரவு உறக்கத்திற்காக இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இரவின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க மக்களின் அடர்த்தி குறைந்துகொண்டிருந்தது. முன்னிரவு கடந்து யாமம் நெருங்கிக் கொண்டிருந்தபோதும் கூட அவள் தூங்காமல் அதே அரசமரத்தடியிலேயே  உட்கார்ந்திருந்தாள். பின்பு, அம்மரத்தடியிலேயே ஒருக்கழித்தும் படுத்துக்கொண்டாள்.

அவளின் அருகில் முகம்கூட தெரியாதவாறு போர்த்திப் படுத்திருந்த ஒருவர் தம் கால்களைத் தூக்கி மெல்ல அவளின் கால்களின் மீது போட்டான். அது ஒரு ஆண்தான் என்பதை அவளால் எளிதாகவே உணர  முடிந்தாலும், அது மனதில்  இடியின் விசை போலவே  அழுத்தியது. சட்டென  விலகிப்படுத்தாள். ஆனாலும், தொடர்ந்து அந்த ஆள் தம் கால்களைத் தூக்கிப்போட்டுக்கொண்டே இருந்தான்.

அவளுக்கு அழுகை பீரிட்டு வந்தாலும், வெளிப்படுத்தினால் ரத்தம் சிந்தும் முயலை நாய்கள் சுற்றி வளைப்பதைப் போல வளைத்துவிடுவார்கள் என்ற அனுபவத்தை கடந்த ஆறு இரவுகள் அவளுக்குப் பழக்கியிருந்தது. ஆகவே, முகத்தைப் பொத்தியவாறு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிடவே எண்ணினாள்.

உடனே எழுந்தால் வேறு சிலரும் நோட்டமிடக்கூடுமென எண்ணி சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லமாய் எழுந்து நடக்கத்துவங்கினாள்.

பின் அடிவாரத்தில் மக்கள் நடமாட்டம் முழுவதுமாகக் குறைந்திருந்தது. அவ்வப்போது,  ஒருசில கார்கள் மட்டுமே, வந்தும் போயுமிருந்தன. பாதம் நோகாது நடந்துகொண்டிருந்தவளின் பின்னால் நாலைந்து பேர் வருவதைப் போன்றதொரு நிழல் உருவங்களும், பாத அடிச் சத்தமும் கேட்கத்துவங்கியது. விருட்டெனத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. நான்கு பேர்களும் அவளை நோக்கித்தான் ஓடிவருகிறார்கள்.  “இதுங்களெல்லாம் மனுசங்களே இல்லை… மனசே இல்லாத மிருகங்கள் ..!” என நினைத்து பதறி ஓடினாள்.

மனிதர்கள் செய்யும் கொடுமையைத்தான் இல்லாத பேய்களின் தலைகளில் ஏற்றிவிடுகிறார்கள் போல!, காம போதை கொண்ட விலங்குகள் அவளைத் துரத்தின. ஏற்கனவே,  உடல் நலிவுற்று, உணவு உண்ணமாலேயே நொந்துகிடக்கும் அவளால் எப்படி இந்த வெறிபிடித்த விலங்குகளிடமிருந்து தப்பிக்க முடியும்? மேல்மூச்சு, கீழ்மூச்சு தட்ட  ஓடினாள். என்ன செய்வதென்றே தெரியாதவளாக எதிரே தெரிந்த ஒரு பாலத்தின் மீது ஏறி குதித்தாள்.

வந்த நான்கு பேரில் ஒருவன்  “பவித்ரா பவித்ரா..! “ எனக் கதற, வெகு நாட்களாக தம் பெயரை மறந்தே போனவளாக ஒரு பாறாங்கல்லின் மீது விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தாள்.

எஸ்.உதயபாலா ( 1992 )

தொடர்வண்டித் துறையில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்து கொண்டிருக்கிறேன். கல்லூரி பருவத்திலிருந்தே எழுதத் துவங்கிய நான் இதுவரை நிலாச்சோறு,  லப் டப், முற்றுப்புள்ளி,  கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய ஐந்து கவிதைத் தொகுப்புகளையும் குடக்கூத்து என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *