பெரிய டாக்டரிடம் பேசும் போது கெடு வைத்து விட்டார். ‘இன்னும் பத்து நாட்கள், அதிகபட்சமாக’.

நெஞ்சு விம்மி வெளியே வரத் தொடங்கின கண்ணீரை துடைத்து விட்டு, அவரிடம் கேட்டேன். ‘வேற எதுவும் செய்ய முடியாதா சார்?’.

‘இல்ல சார், இந்த பிரீடுக்கு ஆயுசு, ஒன்பது ஆண்டுகள். அதுவுமில்லாமல் கட்டி பெருசு, பார்க்காம வுட்டுட்டீங்க’ என்றார்.

டாம்மி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிருந்தான். பாலாவும் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அவனும் எந்நேரமும் அழத்தயாராக இருந்தான்.

இந்த மருத்துவமனை, நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான அரசாங்க கால்நடை மருத்துவமனை.

உள்ளே நுழைந்ததும், ஒரு பட்டனை அமுக்கி டோக்கனை எடுத்துக் கொண்டு, வரிசைப்படி உள்ளே சென்றால், பதிவு செய்து கொண்டு, சீட்டு கொடுத்தார்கள்.

சீட்டை வாங்கிக் கொண்டு, மருத்துவமனை உள்ளே சென்றால், பலரும் பலவிதமான நாய்கள், பூனைகள், ஆடுகளுடன் காத்திருந்தனர்.

சற்று நேரம் கழித்து, பெயர் சொல்லி அழைக்கப் பட்டேன்.

நுழைந்ததும் டாம்மிக்கு வாய்ப் பட்டி மாட்டி விட்டு, எடை பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வாய் பூட்டிற்கே முரண்டு பிடிக்க ஆரம்பித்தான் டாம்மி.

பாலா அவனைத் தூக்கி எடை பார்க்கும் இயந்திரத்தில் படுக்க வைத்தான். அதற்குள் ஒரு களேபரம் செய்து விட்டான்.

மருத்துவர் கட்டியைத் தொட்டும் பார்த்தபின், ‘ஒரு ஊசி போட்றலாம். மாத்திரை எழுதித் தர்றேன். ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துரலாம்’ என்றார்.

பிறகு ஸ்கேன் அறையிலும், வாய்ப் பட்டியுடன் டாம்மியைப் படுக்க வைத்து, ஸ்கேன் செய்தபின், பெரிய கட்டி, ஒரு கிலோ இருக்கும் என்றார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி வந்து மீண்டும் டாக்டரிடம் காண்பித்தோம். ‘கேன்சர் கட்டி சார், மாத்திரை கொடுத்துப் பார்க்கலாம்’ என்றார். பிறகு பெரிய டாக்டரிடம் பேசும் போது தான், கெடு வைத்தார்.

அங்கிருந்து கிளம்பினோம். டாம்மி சுமோவின் பின்புறம் அமர்ந்து கொண்டு வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

டீக்கடையில் நிறுத்தினோம். ‘மாமா, சூடான மிளகா பஜ்ஜி, ஒங்களுக்கு புடிக்கிமே, சாப்பிடுங்க’  என்று நீட்டினான் பாலா.

பின்கதவைத் திறந்து வைத்ததால், டாம்மி கீழிறங்கி எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இன்றுதான் வந்தது போலிருந்தது, அதற்குள் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒரு சின்ன நாய்க்குட்டிக்கு பத்தாயிரம் ரூபாய் அதிகம் தான். பாலாவின் நண்பன் சொன்னான் ‘சார், இது ஜெர்மன் செப்பர்டு. இந்த பிரீடுக்கு இந்த விலையே கம்மிதான்’.

அவன் இதையே ஒரு தொழிலாகவே செய்து வருகிறான். நல்ல வருமானம்.

கருப்பும் வெள்ளையுமாக, நிறைய முடியுடன், அழகாக இருந்தான் டாம்மி. குழந்தைகளுடன் ஒருவனாக அவனும் வளர்ந்தான். கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொண்டான். ‘சிட் டௌன்’ என்றால் அமர்வான். பிஸ்கட்டைத் தூக்கிப் போட்டால் எகிறிப் பிடித்தான். பாலை வீசி எறிந்தால், ஓடிச்சென்று கவ்வி வந்தான்.

அவனுக்கென்று ஒரு சிறு வீடு கட்டப்பட்டது. தினமும் சுத்தம் செய்து, அவனுக்கு சாப்பாடு தருவது வழக்கமானது. வார இறுதியில் வாக்கிங். அருகில் இருக்கையில், கயிறை அவிழ்த்து விடுவது வழக்கம். பிரதான சாலை வரை சென்று திரும்பி விடுவான். முனையில் இருக்கும், சிக்கன் கடையருகில் சென்றால் மட்டும் புத்தி மாறிவிடும். நாம் கூப்பிடுவதே கேட்காதது போன்ற பாவனை செய்வான். மனிதர்கள் தோற்றுவிடுவர் நடிப்பில்.

பால் சாதம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சிக்கனும், மீனும் கொடுத்தால், நன்றாக வெட்டுவான்.

நான் பெங்களூரில் இருந்து பணிமுடித்து, வெள்ளிக்கிழமைகளில் இரவு இரண்டு மணிக்கு வந்தாலும், கதவின் வழியாக மூக்கை நுழைத்து, தலையைத் தடவச் சொல்லிக் கேட்பான்.

பாலாவின் சின்னக் குழந்தைகளுக்கும் அவனிடம் பயம் என்பது இருந்ததில்லை.

ஆனால் புதியவர்களை பயமுறுத்தினான் என்றே சொல்லலாம்.

ஒரு முறை, வீட்டின் எதிரே அலுமினிய பைப் கடைக்கு வந்த ஒருவர் குடித்திருந்தார். பெரிய கேட்டின் வழியாக கையை விட்டு, டாம்மியை சீண்டிக் கொண்டே இருந்தார். உர்ர் என வார்னிங் கொடுத்தும் கேட்காதவரை கையைப் பிடித்து கடித்து விட்டான். வந்தவர் அலறிக்கொண்டே டாம்மியைத் திட்டிய படி இடத்தைக் காலி செய்தார்.

மற்றுமொரு முறை, பக்கத்து மளிகைக் கடைப் பையன் பொருட்கள் கொடுக்க உள்ளே நுழைந்தவன், பக்கக் கதவு திறந்து இருப்பதை கவனிக்கவில்லை. வீட்டினுள் நுழைந்ததும், அவன் காலைப் பிடித்து விட்டான். அவன் கதறலைக் கேட்டு ஓடி வந்து மிரட்டிய பின்னர், விட்டு விட்டான். மளிகைக் கடை முதலாளியின் மகன், ஏன் சார் இப்படிப் பண்றீங்க என்றபடி பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

கால்நடை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து அனைவருக்குமே இனம் புரியாத சோகம்.

இணையர் சொன்னார்: ‘அவன் இருக்கற வரைக்கும் அவனுக்கு வாய்க்குப் புடிச்சத வாங்கிக் குடுத்துடுங்க.’ தினமும் மாலையில், அவனுக்கு சிக்கன் சிக்ஸ்டிபைவும், மீனும் நானும் விக்கியும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தோம்.

மாத்திரைகளை மீனிலோ, சிக்கனிலோ கொடுத்து வந்தோம். நாளாக நாளாக, நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.

கட்டி உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அவன் நடக்கும் இடமெல்லாம் ரத்தம். புண் ஆற மாத்திரை கொடுத்தாலும் காயம் குணமாவது போலத் தெரியவில்லை.

முன்பு ஒரு முறை, யாரிடமோ உண்ணியை ஒட்டிக் கொண்டு வந்து விட்டான். சந்திலும், வாசலிலும், சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்தன. மருந்து தெளித்து, தண்ணீர் ஊற்றி, டாம்மிக்கு மாத்திரை கொடுத்து, சரி செய்தோம்.

அப்போதே வேறு ஒரு நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தோம்.

எனது அத்தை மகனுக்கு பத்திரிகை கொடுக்கச் சென்றபொழுது, அவன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை. காபி குடித்தபின், டக்கென்று பக்கத்து அறையைத் திறந்தவுடன், எனக்கும் இணையருக்கும் சற்றே அதிர்ச்சியும் வியப்பும் பயமும் கலந்த உணர்வு. அறை முழுவதும் வெவ்வேறு சைஸ்களில் நாய்கள். ஒரு நாட்டு நாய்க்குட்டியை வளர்க்க எடுத்து வந்தோம். ராக்கி எனப் பெயர் வைத்தனர் பிள்ளைகள். டாம்மிக்கும் ராக்கிக்கும் ஒத்துப் போகாமலே இருந்தது.

ஒரு முறை, உடம்பு சரியில்லாத டாம்மியை, ராக்கி அவன் மேலேறி கழுத்தைக் கவ்வியபடி விடவேயில்லை. குச்சியால் அடித்துப் பிரிக்க வேண்டி இருந்தது. அப்போதே சிங்கம் போன்ற டாம்மி, பாதி இறந்து விட்டான்.

உள்ளூர் டாக்டரிடம் பேசினோம். அவரும் நம்பிக்கை அளிக்கவில்லை. வந்தும் பார்க்கவில்லை. கால்நடை மருத்துவனையில் கொடுத்த மாத்திரைகளையேக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

அன்று மாலை, அனைவரும் கூடிப் பேசினோம். ‘குழந்தைங்க இருக்கிற எடம், பசங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா?’.

உள்ளூர் டாக்டரிடம் அடுத்த நாள், விஷ ஊசிபோடச் சொல்லி விட்டோம். அவரும் காலையில் வருகிறேன், என்று சொல்லி விட்டார்.

வழக்கமாக சிக்கனை அன்று டாம்மி சரியாக சாப்பிடவில்லை.

அவனால் சரியாக நடக்க முடியவில்லை.

நொண்டியபடியே பக்கத்து கதவு அருகில், மல்லிகைக் கொடி வரை வந்து விட்டான்.

வழக்கம் போல, அவன் காலை எனது கைகளில் ஏந்திக்கொண்டு, தடவிக் கொண்டே ‘ஏண்டா டாம்மி, ஒனக்கு ஒன்னும் ஆகாதுடா, பயப்படாத’ என்றேன். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. எனது கண்களிலும். ‘சரிடா, போய்த் தூங்கு’ எனச் சொல்லி விட்டு, அனைவரும் தூங்கச் சென்று விட்டோம்.

பாலா வழக்கம் போல, டாம்மியை நடைக்குக் கூட்டிச் செல்ல, பக்கக் கதவைத் திறந்தவன், உள்ளே ஓடிவந்து அனைவரையும் எழுப்பினான். ‘டாம்மி இறந்துட்டான்’.

மல்லிகைக் கொடிக்குக் கீழே, டாம்மி விறைத்துப் போய்க் கிடந்தான். நாங்கள் படுக்கைக்குச் சென்ற சற்று நேரத்தில் இறந்திருக்க வேண்டும்.

பிறகு தான், இணையர் சொன்னார்: ‘நள்ளிரவில் தொப் என்று ஏதோ சத்தம் கேட்டது’.

விக்கிதான் முதலில் ஆரம்பித்தான்:

‘டாம்மீ …….’.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *