கல்யாண மண்டபத்தில் ஓரளவு கூட்டம். மகளின் பாட்டு மற்றும் வீணை நிகழ்வு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவி நாலரை மணிக்கு வரச்சொல்லி இருந்தார். சரியான நேரத்தில் வந்து விட்டோம். அது வியாழக்கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருக்கலாம். அந்த நிகழ்ச்சி தியாகராஜ சுவாமிகளின் 90வது ஆராதனை விழாவின் ஒரு பகுதி. தவில் வித்துவான்கள் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

உறவினர் அண்ணிம்மாவையும் (மனைவியின் அத்தை. பெயர்க் காரணம் ஒரு தனிக்கதை) அழைத்திருந்தோம். அவரை மாமா டிவிஎஸ்ஸில் இறக்கி விட்டுச் சென்றார். இது அண்ணிம்மாவின் கதையில்லை. அவருடன் வந்திருந்த, அவர் வீட்டில் வேலை செய்யும் மலரக்கா பற்றிய கதை.

மகள் வீணையில் மகா கணபதியுடன் ஆரம்பித்தார். முடிந்தவுடன் மலரக்கா எழுந்து குதிக்காததுதான் ஒன்று தான் மீதி. இரண்டு கைகளையும் குழந்தையைப் போல தட்டியபடி, ‘சூப்பர், சூப்பர்’ என்றார்.

வீணை முடிந்ததும், வாய்ப்பாட்டு தொடங்கியது. வீணையில் ஒவ்வொரு பாடலுக்கும் மலரக்கா அப்படி பாராட்டினார்.

என்ன தவம் செய்தனை பாடல் முடிந்ததும் மலரக்கா விசில் அடிக்காது தான் குறை. கெக்கலி கொட்டி சிரித்தபடி இரண்டு கைகளையும் தட்டியபடி,’முடிஞ்ச உடனே, போட்டோவையும் படத்தையும் எல்லாருக்கும் அனுப்பனும்’ என்றார்.

பார்ப்பவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் தாண்டி மலரக்கா வெகு தூரம் வந்து விட்டது.

எப்போதும் ஒரு வாயில் சேலை, கொண்டை போட்ட முடி. பூசிய உடம்பு, சிரித்த முகம்.

மனைவியை எங்கு பார்த்தாலும், சாலையென்றெல்லாம் பார்க்காமல் ஒரு சத்தம் வரும் ‘மதூ….’. மதுமிதாவின் முதலிரண்டு எழுத்துகள். ‘ஏக்கா ரோட்டுல இப்படிக் கத்தற?’ என்றால், ‘பேரத்தானச் சொல்லிக் கூப்பிடுறேன்’ என்பார்.

மலரக்காவின் அத்தனை துயரங்களுக்கும் அவரின் சிறப்புக்கும் சம்பந்தமே இருக்காது. எப்போது பார்த்தாலும் எனக்கு முதலில் எழும் கேள்வி: எப்படி ஒருவர் இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையேயும் சிரிக்க முடியும்?

மலரக்காவின் வீடு சேலத்தில் வின்சென்ட் நிறுத்தத்திற்கு அருகில் தானாம். காவல் நிலைய ஆய்வாளருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டுப் போனதாம். கணவரின் முதல் தாரம் யாருடனோ ஓடிப்போனதாகக் கேள்வி. கணவரின் தம்பி, தங்கைகளுடன் சந்தோஷமாக கூட்டுக் குடும்பத்தில்தான் இருந்ததாம்.

கணவருக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. மலரக்கா எவ்வளவு சொல்லியும் குடியை நிறுத்தவில்லையாம். ஓடிப்போன முன்னாள் மனைவியை நினைத்துக் குடித்தாரோ யாரறிவார்? ஆனால் அக்காவிடம் அன்பாகவே இருந்தாராம்.

அன்புக்குப் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. கணவரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு, சேலத்தில் சிறந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்களாம். தொடர்ந்து அதிகமாகக் குடித்ததால் குடலெல்லாம் வெந்து போய்விட்டதாம். கல்லீரல் முழுக்கக் கெட்டுப் போய் விட்டதாம். அரிதாகக் கிடைத்த தனிமையில் அக்காவிடம் எதுவுமே செய்யவில்லை என அழுதிருக்கிறார்.

ஒரு வாரம் கூட உடம்பு தாங்க முடியாமல், கணவர் இறந்து விட்டாராம். மலரக்கா அப்படி அழுததாம்.

கணவர் இறந்து இரண்டு வாரங்களுக்குள், அவரது தம்பிகளும் மனைவியரும் சேர்ந்து கொண்டு பேசாத பேச்சில்லையாம். எதைச் செய்தாலும் குற்றம், குறை. தனியாகக் கைக்குழந்தையுடன் சித்ரவதை அனுபவித்ததாம் அக்கா. பிறகு ஒரு நல்ல நாளில், எல்லோருமாகச் சேர்ந்து அக்காவை வீட்டை விட்டு விரட்டி அடித்தனராம். எங்கே போவது என்று தெரியாமல் தடுமாறி, பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தாரமங்கலமத்தில் தூரத்து உறவினர் இருப்பது ஞாபகம் வர, பஸ் ஏறி விட்டதாம்.

தாரமங்கலத்தில் இறங்கியதும் எங்கே போவது எனத் தெரியாமல், கால் போன போக்கில் நடந்த அக்கா, கைலாசநாதர் கோவில் வந்தடைந்து, குழந்தையோடு கோவில் வாசலில் உட்கார்ந்து விட்டதாம்.

வெள்ளியன்று கோவிலுக்குச் சென்ற மனைவியின் அம்மா, அக்காவிடம் விசாரிக்க, அழுதுகொண்டே எல்லாவற்றையும் கொட்டியதாம். மனைவியின் அம்மாதான் அண்ணிம்மா வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார்களாம். மலரக்கா ஹரிஜன வகுப்பாக இருந்தாலும், அண்ணிம்மா, அவரது கணவரிடம் எப்படியோ அனுமதி வாங்கி விட்டார்களாம்.

அக்காவும் அங்கங்கே விசாரித்து, உறவினர்களைக் கண்டு பிடித்து, அவரின் மாமா வீட்டில்,தட்டி போட்ட, பத்துக்குப் பத்து அறையில் கைக்குழந்தையுடன் குடியேறியதாம். சமையலும் தூக்கமும் அங்கே தான். காலையில் எழுந்ததும் கனத்த வயிறுடன் கழிவறை தேடி ஓட வேண்டும். மின்சார வசதியில்லை. சீக்கிரமாக சமையல் முடித்து உறங்கிட வேண்டும்.

முன்பெல்லாம் அக்கா குடியிருந்த தெரு சேறும் சகதியுமாக இருக்கும். மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் தான் வீடு. இப்போது பார்த்தால், நிறைய வீடுகளாகி விட்டது. வாடகை நாலாயிரம் ஐயாயிரம் ஆக உயர்ந்து விட்டது. இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

அக்காவின் மகள் சிந்து எப்படி படித்தாள் என்பதே நமக்கெல்லாம் எட்டாத ஒரு அதிசயம். தினந்தோறும் மாலையில் பக்கத்திலிருக்கும் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விடுவாள். குண்டு பல்பு வெளிச்சத்தில் தினமும் பதினோரு மணி வரையிலும் படித்திருக்கிறாள்.

மனைவி சொல்லுவாள்: ‘வயசுக்கு வந்த புள்ளய தனியா உட அக்காவுக்கு எப்படி தான் மனசு வந்ததோ?’.  சிந்து ஒன்றும் கிளாஸ் டாப்பரோ, ஸ்கூல் டாப்பரோ கிடையாது. ஆனால் எப்படியும் முட்டி மோதி முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடுவாள்.

பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தாள் சிந்து.  அக்காவும் நாலைந்து வீட்டில் வேலை செய்து, படிப்புக்கு ஆகும் சிறிய செலவுகளைச் சமாளித்து விட்டார்.

எங்கள் வீட்டிலும் நாலைந்து வருடங்கள் வேலை செய்தது அக்கா. இங்கிருந்து தகவலை அங்கு சொல்வதெல்லாம் அக்காவிடம் கிடையாது. ஆனால் சந்தோஷத்தில் எதையாவது உளறி வைத்து விடும். நமது வீட்டில் நடப்பதை, உறவுகள் கேட்டால் மனைவிக்குச் சுத்தமாக பிடிக்காது. இதனால் அக்காவை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

சிந்துவின் கல்லூரிப் படிப்புக்கு யாரையோ பிடித்து, சூர்யா கார்த்தி ஆகியோரின் அகரம் பவுண்டேஷன் தொடர்பு வாங்கி விட்டது.  இளங்கலைப் பட்டமும் வாங்கியாகி விட்டது.

சிந்துவுக்கு முதுகலை பட்டம் பெற ஆசை. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எப்படியோ எம்சிஏ சேர்த்து விட்டது.

சிந்துவுக்கு எப்படியோ மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணமும் செய்து விட்டது அக்கா.

மகள் ஆடிப் பண்டிகைக்கு ஊருக்கு வரப் போவதாகச் சொல்லியது அக்கா.

மகளின் பாட்டு மற்றும் வீணை நிகழ்வு நடந்த நாளன்று தான் கேட்டேன்: ’ சிந்து மாப்பிள்ளை என்ன செய்யாறு?’.  

அக்கா சொன்னது: ‘ஏதோ போலீஸ் வேலையாம். எனக்கென்ன தெரியும்?’.

++

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *