ந.கலீனினா

ஸாஷாவும் அல்யோஷாவும்

ஸாஷாவும் அல்யோஷாவும் இரட்டைக் குழந்தைகள். அவர்கள் நகரத்திலிருந்த பெரிய குடியிருப்பின் நான்காவது மாடியில் வசித்தார்கள். ஒரு நாள்- அதாவது தக்க வயது வந்த பிறகு—அவர்களுடைய தாயார் ‘குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்றாள்.

“மழலையர் பள்ளி! ஓ! நாங்கள் மழலையர் பள்ளிக்குப் போகப் போகிறோம்” என்று ஸாஷா குதித்தான்.

“மழலையர் பள்ளி என்றால் என்ன?” என்று அல்யோஷா கேட்டான்.

“சீக்கிரமாகத் தெரிந்து கொள்வீர்கள். பிறகு நீங்களே எங்களுக்குச் சொல்வீர்கள்'” என்றார் அப்பா.

“உங்களுக்கு அங்கே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் சேர்ந்து விளையாடலாம். உல்லாசமாக நடந்து போகலாம். சுவையான பல விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்” என்றாள் அம்மா.

மழலையர் பள்ளியில் முதல் நாள்

அம்மா இரு குழந்தைகளையும் மழலையர் பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு போனாள், அல்யோஷா அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துத் தொந்தரவு செய்தான். அவனுக்கு ஒரே பயம். “நான் வீட்டுக்குப் போக வேண்டும்’ என்று அழுதான்.

ஸாஷாவுக்கு சிறிதும் பயம் ஏற்படவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்த குழந்தைகளைப் பார்த்தான். ஒரு சிறுமி அவர்களிடம் வந்தாள். அவள் குட்டையான’ சடை பின்னிக் கொண்டிருந்தாள். “நான் போய் வேரா இவானவ்னாவைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்” என்று சொன்னாள்.

வேரா இவானவ்க்கு, அங்கேயிருந்த சிறு குழந்தைகளின் ஆசிரியை. அவள் அவர்களை உற்சாகமாக வரவேற்றாள்: ”ஸாஷா, அல்யோஷா! வாங்க! வாங்க! உங்களில் யார் ஸாஷா, யார் அல்யோஷா என்று தெரியவில்லையே.. ஆனால் நான் கண்டு பிடிக்கட்டுமா? நீ அல்யோஷா. நீதான் வெட்கப்படாமல் முன்னால் நின்று கொண்டிருக்கிறாய். அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஸாஷா சரிதானா?”

ஸாஷா சிரித்தான். “அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது அல்யோஷா’ என்று சொன்னான்.

“நீங்கள் என்னோடு கண்ணா மூச்சி விளையாடுகிறீர்கள்—அப்படித்தானே, அல்யோஷா? நீங்கள் விளையாடுவதற்கென்று கம்பளத்தின் மீது பொம்மைகள் இருக்கின்றன; அலமாரியில் பெரிய கட்டைகள் இருக்கின்றன. நீங்கள் அவற்றைக் கொண்டு படகு கட்டி விளையாடலாம்.”

வேரா இவானவ்னாவின் முகத்தில் அன்பு ததும்பியது. அவள் கனிவான குரலில் பேசினாள். ஒரு கையினால் ஸாஷாவின் தலையிலும் மறு கையினால் அல்யோஷாவின் தலையிலும் தட்டிக் கொடுத்தாள்.

”குழந்தைகளே! வாருங்கள். உங்களுடைய தொப்பிகளையும் கோட்டுகளையும் கழற்றுங்கள். அல்யோஷா, இது உன்னுடைய பெட்டி. ஸாஷா, இது உன்னுடையது. உன்னுடைய கோட்டை இந்த ஆணியில் மாட்டு. தொப்பியை இந்த அலமாரியில் வை. பூட்சுகளை இங்கே கீழே வை. எல்லாக் குழந்தைகளும் தங்களுடைய பொருள்களை இப்படி வைக்க வேண்டும். ஒவ்வொரு பெட்டியின் கதவிலும் ஒரு படத்தை ஒட்டுவோம். உங்கள் பெட்டி எது என்பது சுலபமாகத் தெரியும்.”

சில குழந்தைகள் ஓடிப் போய் இரண்டு படங்களையும் கோந்து பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். ஒன்று ஆகாய விமானம், மற்றொன்று குதிரை. வேரா இவானவ்னா ஸாஷாவின் பெட்டியின் மீது ஆகாயவிமானத்தின் படத்தை ஒட்டினாள். அல்யோஷாவின் பெட்டியின் மீது குதிரையின் படத்தை ஒட்டினாள்.

“விளையாடும் அறையில் ஒரு அழகான குதிரை இருக்கிறது” என்றாள்.

“பெரிய குதிரை. சக்கரங்கள் கொண்டது. வாருங்கள். காட்டுகிறோம்” என்று எல்லாக் குழந்தைகளும் சொன்னார்கள்.

“இரண்டு பேரும் ஓடி விளையாடுங்கள். நான் போகிறேன். சமத்தாக நடந்து கொள்ள வேண்டும். உங்களைக் கூட்டிக் கொண்டு போக ஐந்து மணிக்கு வருகிறேன்” என்றாள் அம்மா.

இப்படி விளையாடக் கூடாது

ஸாஷாவும், அல்யோஷாவும் தங்களுடைய குழுவினர் விளையாடும் அறைக்குப் போனார்கள். கரடிக் குட்டிகள், முயல்கள், பொம்மைகள், பொம்மை நாற்காலிகள், தட்டுகள், கார்கள், வண்டிகள், தீயணைக் கும் என்ஜின்கள்—இப்படி ஏராளமான பொம்மைகள் அங்கே இருந்தன. ஒரு வெள்ளைக் குதிரை மீது கரடிக்குட்டி உட்கார்ந்திருக்கும் பொம்மை கூட அங்கே இருந்தது.

அல்யோஷா எல்லா பொம்மைகளையும் பார்த்தான். எந்த பொம்மையை எடுத்து விளையாடுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. ஸாஷா எல்லா பொம்மைகளையும் பார்த்தான். அவை எல்லாமே தனக்கு வேண்டுமென்று விரும்பினான். அவன் பொம்மைகளை நோக்கி ஓடினான். ஒரு கரடிக்குட்டியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். ஒரு முயல்குட்டியை எடுத்துப் பையில் சொருகினான். ஒரு கட்டில் பொம்மையையும் சில தட்டுக்களையும் நாய்க் குட்டியையும் கொண்டு வந்து ஒரு மூலையில் வைத்தான். அங்கே ஒரு பொம்மைக் குவியலே சேர்ந்து விட்டது. “இந்த பொம்மைகளை யாரும் தொடக்கூடாது. நான் இந்த பொம்மைகளோடு விளையாடப் போகிறேன்” என்று மற்ற குழந்தைகளைப் பார்த்துச் சொன்னான்.

எல்லாக் குழந்தைகளும் அவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரே ஆச்சரியம். இப்படி ஒரு பையன் இருப்பானா? இது விளையாடுகிற முறையா?

விசித்திரமான உதவியாளர்!

மதிய உணவு சாப்பிடுகின்ற நேரம் வந்தது. உணவு மேசையில் ஸாஷாவுக்குப் பக்கத்தில் லேனா என்ற பெண் குழந்தை உட்கார்ந்தாள். அவள் மிகவும் நல்லவள். ஆனால் மெதுவாகக் கொறித்துத்தான் சாப்பிடுவாள். ஒரு கரண்டி சூப் சாப்பிட்டதும் மற்ற குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பாள்.

“சூப்பை சீக்கிரமாகச் சாப்பிடு. இல்லாவிட்டால் அது ஆறிப் போய்விடும். அப்புறம் ருசியாக இருக்காது” என்று வேரா இவானவ்னா அந்தக் குழந்தையிடம் சொன்னாள்.

ஆனால் லேனா சோம்பலாக உட்கார்ந்திருந்தாள்.

ஸாஷா நன்றாகச் சாப்பிடக் கூடியவன். தட்டிலிருந்த சூப்பை முதலில் காலி செய்தது அவன்தான். ”நான் சாப்பிட்டு விட்டேன். என் தட்டு காலியாக இருக்கிறது. பாருங்கள்” என்றான். பிறகு அவன் லேனாவின் தட்டில் சூப் அப்படியே இருப்பதை கவனித்தான். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தன் கரண்டியை எடுத்து லேனாவின் சூப்பை வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.

“ஸாஷா என்னுடைய சூப்பைச் சாப்பிடுகிறான்’ என்று லேனா அழுதாள்.

‘நான் அவள் சூப்பைச் சாப்பிடவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேன்” என்று ஸாஷா வருந்திய குரலில் சொன்னான்.

“நீ ஒன்றும் எனக்கு உதவி செய்ய வேண்டாம். எனக்கு சாப்பிடத் தெரியும்.”

வேரா இவானவ்னா லேனாவுக்கு இன்னொரு தட்டில் சூப் கொண்டு வந்து வைத்தாள். லேனா கரண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக சூப்பைச் சாப்பிட்டு முடித்தாள். அதைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

பொம்மை விளையாட்டு

‘உங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறேன், பாருங்கள்” என்றாள் வேரா இவானவ்னா. அவள் அலமாரியிலிருந்து ஒரு பெரிய பெட்டியை எடுத்தாள். அந்தப் பெட்டியை நாற்காலியின் மீது வைத்துத் திறந்தாள். அதற்குள் பெரியதும் சிறியதுமாக அடுக்கு பொம்மைகள் இருந்தன. ”பெரியவை தாயார் பொம்மைகள். சிறியவை குழந்தை பொம்மைகள். உங்களுக்குப் பிடித்த பொம்மைகளை எடுத்து விளையாடுங்கள்” என்றாள்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு விளையாட உட்கார்ந்தது. தாயார் பொம்மைகள் தங்களுடைய குழந்தைகளிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டன. குழந்தை பொம்மைகள் விளையாடுவதற்கு ஓடின. அவை அறையைச் சுற்றிக் குதித்து விளையாடின; எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தன. அவை கிளிக்கூண்டுக்கு முன்னால் போய் நின்று அந்தக் கிளியை பயமுறுத்தின. மற்ற பொம்மைகளைப் பார்த்தன; புத்தக அலமாரிக்குள் தலையை நீட்டின. ஸாஷாவின் பொம்மை ஒரு லாரியில் உட்கார்ந்து கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஓல்யாவின் பொம்மை ஒரு கோச் வண்டியில் உட்கார்ந்து கொண்டு சுற்றி வந்தது.

வேரா இவானவ்னா கைகளைக் கொட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தாள். பொம்மைகள் நடனமாடத் தொடங்கின. அந்த பொம்மைகள் விளையாடி முடித்த பிறகு வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தது. அங்கே தாயார் பொம்மைகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. மேசையைச் சுற்றி குழந்தைகளை உட்கார வைத்தார்கள். “உங்களுக்கு அருமையான இரவுச் சாப்பாடு வைத்திருக்கிறது. மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.’

குழந்தை பொம்மைகள் உணவு அருந்தின. இப்பொழுது அவர்கள் தூங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வேரா இவானவ்னா ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு சிறு பெட்டியைக் கொடுத்தாள். அதற்குள் ஒரு சிறு தலையணையும் போர்வையும் இருந்தன.

தாயார் பொம்மைகள் குழந்தை பொம்மைகளைத் தூங்கச் செய்தன. பிறகு குழந்தைகள் அந்தப் பெட்டிகளை, மழலையர் பள்ளியின் படுக்கை அறையில் வரிசையாக இருக்கும் தங்களுடைய கட்டில்களைப் போல, மேசை மீது வரிசையாக வைத்தனர். பிறகு தாயார் பொம்மைகளை சன்னல் ஓரத்தில் வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

“நாம் வெளியே உலாவப் போகும் பொழுது இவை சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்” என்றாள் ஓல்யா.

குழந்தைகள் அந்த அறையிலிருந்து சப்தம் செய்யாமல் வெளியே வந்தார்கள். தங்களுடைய தொப்பிகளையும் கோட்டுகளையும் அணிந்து கொண்டார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை பொம்மைகளை எழுப்பி விடக் கூடாதென்று மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். குழந்தைகள் வெளியே போகும் பொழுது அவை தூங்கி ஓய்வெடுக்கட்டும்.

குழந்தைகள் வெளியே கண்ட காட்சி

குழந்தைகள் உலாவச் சென்ற பொழுது பல காட்சிகளைக் கண்டார்

ஒரு புது மாளிகை. பளபளப்பான பஸ்வண்டி. சரக்கு வண்டி இணைக்கப்பட்ட லாரி, மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போலீசுக்காரர். நெருப்பை அணைக்கும் வண்டியும் அதிலிருந்த உயரமான ஏணியும், பால் கொண்டு வரும் வண்டி. பலவிதமான கார்களும் உயரமான மேடை வைக்கப்பட்டிருந்த லாரியும்.

தங்க மீன்

மழலையர் பள்ளியில் சன்னலுக்கு அருகிலிருக்கும் சிறிய மேசை மீது கண்ணாடி மீன்தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்க மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. இது மீன்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம். அந்தத் தொட்டி எப்பொழுதும் சுத்தமாக இருக்கிறது; அதிலிருக்கும் தண்ணீர் எப்பொழுதும் புதியதாக இருக்கிறது; தொட்டியின் அடிப்பகுதியில் மஞ்சள் நிற மணலும் கூழாங்கற்களும் கிளிஞ்சல்களும் கடற்பாசிகளும் இருக்கின்றன.

தினமும் காலையில் குழந்தைகள் மீன்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். அவர்கள் மீன் உணவைத் தண்ணீரில் தெளிக்கின்றனர்.

ஒரு நாள் வேரா இவானவ்னா ஒரு பெரிய சட்டியில் தண்ணீர் கொண்டு வந்தாள். அவள் கண்ணாடித் தொட்டியிலிருந்து மீன்களை வெளியே எடுத்து சட்டியிலிருந்த தண்ணீருக்குள் விட்டாள். பிறகு அவள் கண்ணாடியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் கழுவித்துடைக்க ஆரம்பித்தாள். அப்பொழுது குழந்தைகள் சட்டியில் நீந்திக் கொண்டிருந்த தங்க மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னுடைய பொம்மையும் பார்க்க வேண்டுமாம்’ என்றாள் லேனா. லேனாவின் பொம்மை மீன்களைப் பார்க்கட்டுமென்று குழந்தைகள் தள்ளி இடம் கொடுத்தார்கள். பொம்மை குனிந்தது; லேனாவின் கைகளிலிருந்து நழுவி சட்டிக்குள் விழுந்தது. ‘ப்ளாச்’ என்று பெரிய சத்தம் கேட்டது. ஒரு தங்க மீன் துள்ளித் தரையில் விழுந்தது. அங்கே சிரமப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

குழந்தைகள் எல்லோரும் ஒரே சமயத்தில் சத்தம் போட ஆரம்பித்தார்கள். வேரா இவானவ்னா அந்த மீனைத் தூக்கி மறுபடியும் தண்ணீருக்குள் போட்டாள். தண்ணீரில் தான் மீன் வசிக்க முடியும்.

நான் யார்?

ஒரு நாள் வேரா இவானவ்னா மழலையர் பள்ளிக்கு ஒரு கூடையைக் கொண்டு வந்தாள். அந்தக் கூடையின் மேற்பகுதி மூடியிருந்தது. “நான் ஒரு விடுகதை சொல்லப் போகிறேன். எங்கே பதில் சொல்லுங்கள், பார்ப்போம்” என்றாள்.

காது ரெண்டும் கூர்மை

பாதம் நான்கும் பஞ்சு

சின்னச் சின்ன நகங்கள்

பயமுறுத்தும் மீசை

பகல் முழுதும் தூக்கம்

விளையாட்டில் பிரியம்

இராத்திரி யெல்லாம் சுத்துவேன்

மியா மியாவென்று கத்துவேன்

நான் யார்?

குழந்தைகள் மௌனமாக இருந்தார்கள், ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் விடுகதைக்கு பதில் கூடையிலிருந்து வெளியே தலையை நீட்டிக் கொண்டிருந்தது.

பெரியவனாக வளர்ந்த பிறகு

குழந்தைகள் கூடி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நான் விமானியாகப் போகிறேன்.”

“நான் இரயில் வண்டியை ஓட்டப் போகிறேன்.”

”நான் காரோட்டியாகப் போகிறேன்.”

“நான் மாலுமியாகப் போகிறேன். கடலுக்குப் போவேன்.”

“நான் மருத்துவராகப் போகிறேன். எல்லோருடைய நோய்களை குணப்படுத்துவேன்.”

“நான் ஆசிரியையாகப் போகிறேன்” என்றாள் லேனா.

“நான் வீடுகள் கட்டப் போகிறேன். அழகான, பெரிய வீடுகள் கட்டுவேன்” என்றாள் ஓல்யா.

இந்த சமயத்தில் ஸாஷாவும் அல்யோஷாவும் ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.

“நீங்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வேரா இவானவ்னா கேட்டாள்.

“எங்கள் அப்பாவோடு தொழிற்சாலையில் வேலை செய்யப் போகிறோம். அது தான் எங்களுடைய ஆசை” என்று ஸாஷா பதிலளித்தான்.

வீடு கட்டுவோம்

ஒரு நாள் ஓல்யாவின் தகப்பனார் குழந்தைகளைப் பார்க்க வந்தார். அவர் ஒரு கட்டிடத் தொழிலாளி.

“நீங்கள் எப்படி பெரிய வீடுகளைக் கட்டுகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்” என்று குழந்தைகள் அவரைக் கேட்டார்கள்.

“அதைத் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த வழி நீங்களே செய்து பார்ப்பது தான். நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு கட்டுவோம்” என்றார் அவர். ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கையில் எடுத்துக் கொண்டார். அந்தக் காகிதத்தில் ஒரு வீட்டின் படத்தை வரைந்தார்.

“இந்த வீட்டை நாம் இப்பொழுது கட்டப் போகிறோம். இதைக் கட்டுவதற்கு ஒரு இடம் பார்க்க வேண்டும். அது சுத்தமாக இருக்க வேண்டும்’ என்றார்.

தரையில் சிதறிக் கிடந்த பொம்மைகளைக் குழந்தைகள் எடுத்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த நாற்காலிகளை அகற்றினார்கள். இப்பொழுது வீடு கட்டுவதற்கு இடம் கிடைத்து விட்டது. முதலில் செங்கற்களையும் உத்திரங்களையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

உண்மையாக வீடு கட்டுகின்ற இடத்திலிருப்பதைப் போல, லாரிகள் இங்குமங்கும் போய்வந்து கொண்டிருந்தன. குழந்தைகள் சுவர்களைக் கட்டுவதற்குச் செங்கற்களையும் வீட்டின் மேற்பகுதிக்கு உத்திரங்களையும் கொண்டு வந்தனர். வேரா இவானவ்னா ஒரு அட்டையில் மும்முரமாகக் கதவுகளும் சன்னல்களும் வெட்டிக் கொண்டிருந்தாள்.

“வீடு கட்டும் இடத்தில் பாரம் தூக்கும் பொறி எப்பொழுதும் இருக்கும்’ என்றார் ஓல்யாவின் தகப்பனார்.

“அது போவதற்கென்று விசேஷமான இருப்புப் பாதைகள் போடப்பட்டிருக்கும். அதில் பெரிய உருக்குக் கொக்கிகள் இருக்கும். அந்தக் கொக்கிகள் செங்கற்கள் வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கூடைகளை பத்தாவது மாடிக்கு அல்லது அதற்கும் மேலே கூட தூக்கிச் செல்லும். ஆனால் இங்கே பாரந் தூக்கும் பொறி இல்லாமலே நாம் சமாளிக்க வேண்டியதுதான். ஆனால் கொத்தனார்கள் வேகமாகச் செங்கற்களை அடுக்கிப் பூச வேண்டும்; தச்சர்கள் சன்னல்களையும் கதவுகளையும் சீக்கிரமாகப் பொருத்த வேண்டும். அது தான் முக்கியம்.”

எல்லாக் குழந்தைகளும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். முதல் மாடி தயாராகி விட்டது. இரண்டாவது மாடியைப்  பொருத்திக் கொண்டிருந்தார்கள். பக்கச் சுவர்கள் நேராக இருக்கும்படி ஒல்யாவின் தகப்பனார் அவர்களுக்கு உதவி செய்தார்,

அவர்கள் வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். முதல் மாடி.யில் எல்லா அறைகளும் தயாராகி விட்டன. வர்ணம் பூசுபவர்கள் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாந்து பூசுபவர்கள் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பிறகு அவர்கள் மழை விழாமலிருப்பதற்காக வீட்டுக்குக் கூரை போட்டார்கள். கூரையில் மரச் சுத்தியல்களை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மற்ற குழந்தைகள் வீட்டைச் சுற்றியிருந்த இடத்தைச் சுத்தம் செய்தார்கள். வீட்டைச் சுற்றி செடிகளை வைத்தார்கள்; கார் நிறுத்துவதற்கு ஒரு அறை கட்டினார்கள். விரைவில் எல்லாம் தயாராகி விட்டன.

ஓல்யாவின் தகப்பனார் அவர்களுக்காக வரைந்த படத்தைப் போலவே அந்த வீடு இருந்தது.

குழந்தைகளுக்கு அந்த வீட்டை மிகவும் பிடித்திருந்தது. அது அவர்கள் கட்டிய வீடு அல்லவா?

நாங்கள் மழலையர் பள்ளிக்கு ஓடுவது ஏன்?

ஏனெனறால் அங்கே எங்களுடைய நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு ஓடிப் பிடித்து விளையாடுவது மிக வேடிக்கையாக இருக்கும்.

ஏனென்றால் நிஜமான வீடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்க வேரா இவானவ்னா எங்களைக் கூட்டிக் கொண்டு போவாள். பிற்காலத்தில் நாங்களும் அப்படிப்பட்ட வீடு கட்டலாம்.

ஏனென்றால் நேற்று லேனாவின் தகப்பனார் எங்களைப் பார்க்க வந்தார். அவர் ஒரு மாலுமி. அவர் நிஜக் கப்பல்களைப்பற்றி எங்களிடம் பேசினார். இன்று யாராவது ஒருவருடைய அப்பாவோ, அம்மாவோ எங்களைப் பார்க்க வரலாம்; சுவையான பல செய்திகளை எங்களிடம் சொல்லலாம்.

ஏனென்றால் ஒல்யா, ஸாஷா, அல்யோஷா, லேனா, நாங்கள் எல்லோருமே எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறோம். நாங்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். தங்க மீன்களுக்கு உணவு கொடுக்கிறோம். கூண்டிலிருக்கும் கிளியை நன்கு கவனித்துக் கொள்கிறோம். அந்தக் கிளி கூண்டுக்குள் தத்தித் தத்தி நடக்கிறது; எங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் கூண்டைச் சுத்தம் செய்வோம், அதன் தண்ணீர்த் தட்டைக் கழுவுவோம், அது சாப்பிடுவதற்குத் தேவையான பருப்புகளைத் தட்டு நிறைய வைப்போம் என்பது அந்தக் கிளிக்குத் தெரியும். ஏனென்றால் வெள்ளைக் குதிரை மீது உட்கார்ந்திருக்கும் கரடி அல்யோஷாவைச் சந்திப்பதற்காக வரும். அவன் அந்தக் கரடிக்கு ஒரு வீடு கட்டிக் கொடுப்பான்; குதிரை தங்குவதற்கு ஒரு லாயம் கட்டிக் கொடுப்பான்.

ஏனென்றால் வேரா இவானவ்னா எங்களுக்கு ஒரு அற்புதமான கதை சொல்லுவாள். ஏனென்றால் அழகான படங்கள் அச்சிடப்பட்ட புதிய புத்தகங்களை அவள் எங்களுக்குத் தருவாள். ஏனென்றால் அவள் எங்களிடம் படம் வரையும் காகிதமும் வர்ணங்களும் கொடுத்து ஒரு வேடிக்கையான விளையாட்டைக் கற்றுக் கொடுப்பாள்.

அதனால் தான் நாங்கள் காலையில் மழலையர் பள்ளிக்கு ஓடுகிறோம்.

000

எமது நன்றிகள் :-

ராதுகா பதிப்பகம், மாஸ்கோ.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *