மழைக்குப் பிறகு.. -வில்லியம் ட்ரெவர்

                             தமிழில் : அவை நாயகன்

செசரினா விடுதியில் உள்ள உணவுக்கூடத்தின் சிறப்பே, தனியாக உண்பவர்களுக்குச் சுவரோரமாக இடப்பட்டிருக்கும் இருக்கைகள்தான். இருவர் அமரும் அளவுக்கு மேசைகளை அங்கே வைக்க முடியாது என்பதும் காரணம். மூன்று அறைகளின் நான்கு மூலைகளிலும் இதே போன்ற அமைப்பு இருந்தது. அவைகளும் குடும்பமாக அமர்ந்து உண்ணும் மேசைகளுக்கு இடையிலும், திறந்து மூடும்போது பெருஞ் சத்தமிடும் சன்னல்களின் ஓரமாகவும் இருந்தன. அந்த உணவுக்கூடம் பெரியது. உயர்ந்த மேற்கூரை. சமையலறைக் கதவின் அருகே குளிர்நீர்க் குடுவைகள், அலங்கரிக்கப் படாத கிரீம் நிறச் சுவர்கள். தங்கியிருக்கும் விருந்தாளிகள் உணவருந்த வரும்போது மேசைகள், முனை உரசும் அளவுக்கு நெருக்கி இடப்படும். பரிமாறுபவர்கள் நடக்க இடைவழி ஒன்றும் தனி மேசைகளை ஒட்டியவாறு இருந்தது. அங்கிருந்து பார்த்தால் உணவுக்கூடத்தில் நடப்பது, அன்றைய இரவு தரப்படும் உணவு வகைகள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.

    `ஆறு..’ பரிமாறும் பெண்ணிடம் ஹாரியட் தனது அறை எண்ணைச் சொன்னாள். கடந்த 11 இரவுகளாய் அவள் அமர்ந்திருந்த தனி மேசை, ஐவர் கொண்ட ஒரு குடும்பத்தாருக்குச் சேர்த்துப் போடப்பட்டு விட்டது. எங்கே அமர்வது எனத் தெரியவில்லை. கதவருகே சிறிது நேரம் நின்று கொண்டாள். உணவு வகைகள் பரபரப்புடன் உள்ளே போயின. இரும்புத் துரு நிறக் கூந்தலுடைய ஒருத்தி, சுவரில் பதித்த பளிங்குப் பலகையில் இருந்து ஒயின் புட்டிகளை எடுத்துப் போனாள். கடுத்த முகத்துடன் பார்த்தாள் ஒருத்தி. பருமனாகவும் அழகாகவும் தென்பட்டாள் வேறு ஒருத்தி. குளிர்நீர்க் குடுவையருகே நின்றிருந்த ஹாரியட்டை அந்த இரும்புத் துருக் கூந்தலழகிதான் விசாரித்தாள். யாரும் கண்டுகொள்ளாததால் கூசி நின்ற அவளைப் பார்த்து, `இங்கேதானே தங்கியிருக்கிறீர்கள்.?’ என்றாள். முந்தைய இரவுகளில் அருந்திய சாண்டா கிறிஸ்டினா ஒயினையே அவளிடம் கொண்டுவரச் சொன்னாள்.

     எளிமையான ஒரு நீலநிற உடையை அணிந்திருந்தாள். அதில் பெல்ட்டில் இருந்த கொக்கி மட்டுமே கொஞ்சம் பளிச்சென்று இருந்தது. கவனத்தை ஈர்க்காத காதணிகள், மங்கலான கழுத்து ஆரம். அவ்வளவுதான். தோற்றத்தைப் பொறுத்தவரை,  குட்டையாகச் சீர்ப்படுத்திய தலைமுடி, சிற்பி மொடிக்லியானி வடிவமைத்த சிற்பம் போன்ற உடல். கடந்த மாதம்தான் இருபதின் வயதினைக் கடந்திருந்தாள்.

     ஒரு காதல் தோல்விக்குப் பிறகு அந்த விடுதியில் வந்து தங்கியிருக்கிறாள். ஒரு விடுமுறை ரத்தானது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெறுமையில் கழிந்தன. எங்காவது போய்விட வேண்டும் – இங்கிலாந்துக்கு அல்ல. நேரம் இப்போது அவள் கையில்தான்.

     `நான் தனியாகி விட்டேன்’ –

     தொலைபேசியில் தெரிவித்து விட்டாள். அந்த விடுதியைத் தேர்ந்து கொள்ளும் உரிமை இப்போது அவளிடம். ஏனென்றால் சிறு வயதில் இருந்து அவளுக்கு அது பரிச்சயமான இடம். தன் குடும்பம் அறிந்த இடத்தில் தனியாக இருப்பது எளிது.

    `ஓகே. சாண்டா கிறிஸ்டினாதானே..’ மீண்டும் கேட்ட துருநிறக் கூந்தல்காரிக்கு `ஆம்..’ என்று பதிலளித்தாள்.

     உணவுக்கூடத்தில் பெரும்பாலும் ஜெர்மானியர்கள். அருகில் இருந்த ஹாரியட்டுக்கு அது குளறல் மொழியாகக் கேட்டது. நடுத்தர வயதினரான அவர்களில் பெண்களே கவர்ச்சிகரமாக உடையணிந்திருந்தனர். வெறும் 110 லிரா வாடகையில் ஆகஸ்டு மாத மெல்லிய சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்தனர். சன்னல்கள் திறந்திருக்கும் இரவுணவு நேரத்தில் கிடைக்கும் குளிருக்கு அந்த வெம்மை தேவைதான் – அந்த இடம் ஒரு மலையின்மீது இருப்பதால். ` மென்குளிர் வேண்டுமென்றால் செசரினாவுக்குத்தான் போக வேண்டும்..’ என்று அவளது அம்மா சொல்வாள்.

     முதன்முதலாக அவள் பெற்றோருடன் அங்கே வந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது அவளுக்கு வயது பத்து. அண்ணனுக்குப் பன்னிரண்டு. அங்கே செம்மண் தரையை விருந்தினர் காலையில் எழுவதற்கு முன் தூய்மையாக்கி வைத்திருப்பது ; நாள் முழுவதும் கமழ்ந்திருக்கும் அந்த மணம் ; மாடியில் ரொட்டி, தேநீர் அல்லது காபியுடனான காலையுணவு ; தூரத்து மலைத் தோட்டங்களில் இருந்து கேட்கும் காவல்நாய்களின் குரைப்புச் சத்தம் – இதெல்லாம் அவளுக்குத் தெரியும். காய்ந்த பூந்தோட்டம், பழுப்புநிற வெளிச்சுவர், விடுதிக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டம், அதன் சரிவில் இரண்டு பெரிய கிணறுகள் – இவையெல்லாம் புகைப்படப் பதிவாகவும் அங்கே இருக்கும். வெப்பம் மிகுந்த கோடைக்குப் பிறகு விருந்தினர் வருகை குறைந்த பின்னர், கற்படிகளில் இறங்கிப் போனால் தெரியும் மூன்று பெரிய வரவேற்புக் கூடங்களில் பின்னிரவில் பரிமாறப்படும் திராட்சை மது வகைகள், சிறு கோப்பைகளில் தரப்படும் கறுப்புக் காபி எனப் பலவற்றை நேரில் பார்த்திருக்கிறாள். புத்தகத் தட்டிலும் மேசையிலுமாக ஜியோட்டோவின் ஓவியங்கள், ஆங்கிலத் துப்பறியும் நாவல்களும் இருக்கும். ஆங்கிலேயர்கள் வருகையே அதிகம் என்பதை அவர்களின் முணுமுணுப்பைக் கொண்டு அறிந்திருந்தாள். தற்போது அங்கே கடன் அட்டைகள் அனுமதிக்கப் படுவதில்லை. பதிலாக, உறுதிப் பணத்திற்கு மேல் மதிப்புக் கொண்ட யூரோ செக்குகள் புழங்கின.

     `இதோ இங்கிருக்கிறேன் மேடம்..’ பணிப்பெண்ணின் குரல் கேட்டது. ஓரிரு முறை ஹாரியட் அவளைப் பார்த்திருக்கிறாள். டாக்லியேடல் என்ற மாவுப் பண்டம் அவளது கையில் இருந்தது.

     `நன்றி..’

     `மகிழ்ச்சி. உண்டு களியுங்கள். நன்றி..’

     காதல் வென்றிருந்தால் – காதலே கடைசிவரை கூடவரும் என்று அவள் நம்பியது உண்மையாகி இருந்தால் இந்நேரம் அவள் ஸ்கைரோஸ் தீவில் இருந்திருப்பாள். இதே விடுதியில் தனது பெற்றோரையும் குழந்தைகளையும் அழைத்து வந்து, உணவுக்கூடத்தில் பெரிய மேசையை ஒதுக்க வைத்திருப்பாள். இன்றைக்கு அங்கே ஓர் அமெரிக்க ஜோடி, ஒரு ஜெர்மன் மற்றும் இத்தாலிய ஜோடிகள் தங்கப் போகிறார்கள். இன்னும் புதிதாக வந்த இரண்டு ஜோடிகள் டச்சு மொழி பேசியதைக் கேட்டாள். பேசுவதை ஒட்டுக் கேட்கும் தூரத்தில் ஓர் ஆங்கிலேய ஜோடியும் இருந்தது.

    `ஓகே. போதுமா..?’ காலியான தட்டைப் பார்த்துப் பணிப்பெண் கேட்டாள்.

    `நன்றாக இருந்தது. மிக்க நன்றி..’

     தனிமேசைகளில் அமர்ந்திருப்பவர்களில், அடிக்கடி மேல்தளத்தில் ஹாரியட்டிடம் வந்து பேசும் நரைத்த தலைகொண்ட அமெரிக்கப் பெண், எப்போதும் கண்ணைப் பறிக்கும் சட்டைகளாகவே அணியும் ஒருவன், கூச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பவன், கறுப்பு உடையுடன் காட்சியளிக்கும் பிரெஞ்சுப் பெண் ஆகியோர் முக்கியமானவர்கள். தவிரவும் குள்ளமாக, நல்லவன் போலத் தென்படும் ஒருவன் இருந்தான். எப்போதும் பெண்கள் பக்கமாகவே அவனது பார்வை இருக்கும். தன் முற்காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் விதவிதமான வரிகளைக் கொண்ட கழுத்துப் பட்டை அணிகிற முதியவர் ஒருவரும் உண்டு.

     அங்கே தங்கிய முதல்நாள் இரவு The Small House at Allington நூலைத் தனது கைப்பையில் வைத்திருந்தாள். உணவுக்கூடத்தின் முன் கொண்டு வரவும் எண்ணியிருந்தாள். ஆனால் எல்லாம் தவறாகிப் போகும் கணமொன்று வந்து விட்டதே. தனியாக அங்கே வரத் தூண்டிய உணர்வை எண்ணி வியந்தாள். அனுபவம் இன்றி, நோக்கமில்லாமல் தீராத வலிகளை மட்டுமே சுமந்த பயணம். ஏதேனும் தீவிரமான சம்பவம் நடந்திருந்தால் அந்த நாளின் தன்மை மாறியிருக்கும். தனிமை இருந்திருக்காது. எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியதுதான்.

     கோழிக்கறி, காய்கறிகள், சாலட் என அவள் முன்னே நிறைந்து இருந்தன. நீலநிற கோர்கன்ஸோலா சீஸை எடுத்துக் கொண்டாள். சாண்டா கிறிஸ்டினா மது நாளைக்கும் மிச்சமிருக்கும். அதன் லேபிளில் அறை எண் பொறிக்கப் பட்டிருந்தது. மேலுறையிலும் அழகிய சாய்வெழுத்துகளில் அறை எண் 10 என இருந்தது. நாப்கினை மடித்து மறைத்து வைத்துக் கொண்டாள். அன்றைக்கும் இப்படித்தான். மறக்க நினைத்தவன், அவளைச் சந்தடி மிகுந்த ஓர் அறைக்குத் தள்ளிச் சென்று நெருங்கி `ஐ லவ் யூ’ என்று காதில் கிசுகிசுத்தான். கிறக்கத்துடன் அணைத்துக் கொண்டு `மை டார்லிங்’ என்றான்.

     புத்தகங்கள் நிரம்பிய மாடியறையில் இருந்து, இந்தத் தனிமையோடு தன் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது என்று வியந்து கொண்டாள். பிள்ளைப் பருவத்தில் இருந்து தனக்குப் பழக்கமான அந்த இடத்திற்குத் திரும்ப வந்திருப்பதும் பாதுகாப்பு, மகிழ்ச்சியைத் தேடித்தானா..? அந்தச் சமயத்தில் தனக்குள் பேசிக் கொண்டதும் சரியாகவே இருக்குமோ..? காதல் முடிவுற்று, உண்மை மங்கலான பிறகு குழம்பிய நினைவுகளே எஞ்சின. காதல் தோல்வி அவளை நிலைகுலையச் செய்து வேறு உறவு பற்றிய நினைவே இல்லாமல் தடுத்து நிறுத்தி விட்டது. காதல் அதைத்தான் செய்யும். துணையில்லாது போனவளுக்கு ஆறுதல் எங்கிருந்து வரும் என்றெல்லாம் யோசித்தாள். விடுமுறை ரத்தாவது முதல்முறை. இப்போது தனித்தே வந்திருக்கிறாள்.

    `மன்னிக்க வேண்டும்..’ வெண்ணிறச் சீருடை அணிந்த சிறுவன். தோளில் சிந்திவிட்ட சில மதுத்துளிகளுக்காக ஒரு ஜெர்மானியப் பெண்ணிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தான். `பரவாயில்லை..’ என்று சிரித்தாள் அவள். கணவனும் அதையே சொல்ல மீண்டும் சிரித்தாள்.

    `நான் சட்டம் படிக்கிறேன்..’ நீண்ட காலுடைய பெண்ணொருத்தி சொன்னாள். `இவள் எலாய்ஸ்.. அழகுக் கலைஞர்..’

     அவர்கள் பெல்ஜியப் பெண்கள். இரண்டு ஆங்கிலேயப் பையன்களோடு பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் மீசை வைத்த பையன் திரும்பி,

    `அழகுக் கலைஞர் என்றுதானே சொன்னாய்..?’

    `ஆம்..’ என்றதும் தலையசைத்தனர். செர்ரிப்பழ பிராந்தி கொண்டு வரச் சொன்னார்கள் பெண்கள். சீருடைச் சிறுவன், காபி மெஷினுக்குப் பக்கத்தில் இருந்த அடுக்குப் பலகையில் இருந்து மதுவை எடுத்து வரப் போனான்.

    `உங்களுக்கு..?’ எலாய்ஸ் கேட்க, நால்வரும் மாடியறைக்குப் போவது தெரிந்தது.

     எனக்கு ஒன்றுமில்லை. தகர்ந்து கொண்டிருக்கிறேன் – உள்குரல் அழுத்தமாக ஒலித்தது. எந்தெந்த நாட்டினரோ இந்த விடுதிக்கு வந்து போவதைச் சிறு வயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     தாடி வைத்த ஒருவன், சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடியை அவர்களுக்குத் தெரியாமல் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தான். ஹாலில் ஓர் அமெரிக்கக் குடும்பம் தென்பட்டது. அதில் தாயானவள் ஒரு சிறு குழந்தையை மேலும் கீழும் தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது கணவன் மற்ற இரு குழந்தைகளையும் அதட்டி அமைதிப்படுத்துவதும் தெரிந்தது.

    `குட் ஈவினிங்.’ அவளின் கவனத்தை யாரோ கலைத்தார்கள். லினன் சூட் அணிந்த அந்த முதியவர், அவளருகே உள்ள இருக்கைக்கு யாரேனும் வருகிறார்களா என்று கேட்டார். அன்று பழுப்பு, பச்சை நிறக் கழுத்துப் பட்டை அணிந்திருந்தார். நரையா, பழுப்பா எனத் தெரியாதவாறு கொஞ்சமே தலைமுடிதான் இருந்தது. புள்ளிகளும் கறையும் கொண்ட கரடுமுரடான தோற்றம். நீலநிறக் கண்கள் மட்டும் முகத்தைத் தெளிவாகக் காட்டுவதாக இருந்தது.

    `தனியாகவா வந்திருக்கிறாய்..?’ காலி இருக்கையைப் பார்த்தவுடன் நட்புக் கொள்ள விரும்புவதுபோல் கேட்டார்.

    `ஆம்..’

    `ஆங்கிலத்தில் பேசுபவர்களை எளிதாகக் கண்டுபிடித்து விடுவேன்.’

     ஏராளமான பயணங்களை மேற்கொள்கிற, வயதும் அனுபவமும் கொண்ட எவருக்கும் சாத்தியமானதுதான் அது. `அநேகமாக இனி எளிதுதான்..’ என்றாள்.

     சோபாவில் இருந்த ஜோடிகளை வரைந்து கொண்டிருந்த தாடிக்காரன்  முன்னகர்ந்து அந்தப் பெண் எதைப் பார்க்கிறாள் என்பதைக் கவனித்தான். அமெரிக்கத் தகப்பன், பிள்ளைகளைத் தூங்கச் செய்யப் போனான். தாய் இன்னும் குழந்தையைத் தூக்கி வீசிக் கொண்டுதான் இருந்தாள். சின்னஞ்சிறு தோற்றம் கொண்ட பணியாள், உணவுக்கூடத்தைக் கோபத்துடன் பார்த்துக் கொண்டே கையில் இரண்டு காபிக் கோப்பைகளை ஏந்திப் போனான்.

    `இந்த விடுதியில் அவர்களெல்லாம் உனக்கு வேடிக்கை. அப்படித்தானே..?’ முதியவர் கேட்டார்.

    `ஆம்..’

    `முன்பெல்லாம் உணவு போதாமல்தான் இருக்கும்..’

    `நினைவிருக்கிறது..’

    `அதாவது வெகு நாட்களுக்கு முன்..’

    `தெரியும். முதல் தடவை இங்கே வரும்போது எனக்கு வயது பத்து..’

     வயதைக் கணக்கிட்டுப் பார்த்தார் – அவளைப் பார்த்துக் கொண்டே. 1987- வேனிற்காலத்திலிருந்து அங்கே வந்து கொண்டிருப்பதாகவும் தன்னைப் பார்த்ததுண்டா என்றும் கேட்டார்.

    `இல்லை. ஆனால் என் பெற்றோர் பிரிந்து விட்டனர்..’

    `மன்னிக்க வேண்டும்..’

    `தம்பதிகளாக வாழ்ந்த காலம் முழுவதும் இங்கே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்தமான இடம் இது..’

    `சிலருக்கு அப்படித்தான். எல்லோராலும் முடியாது..’

    `என் சகோதரனுக்குச் சலிப்பை உண்டாக்கும் இடமும் கூட..’

     `சிறுவர்களுக்கு அப்படித்தானே..’

    `எனக்கு அப்படி இருந்ததில்லை..’

    `அட.. அந்த இரண்டு இளைஞர்களும் பெண்களைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்களே. இந்த விடுதியில் சாத்தியம்தான் அது..’

     பேசிக்கொண்டே இருந்தார். ஹாரியட் அதைக் கவனிக்கவேயில்லை. இந்தக் காதல் விவகாரம் என்பது, முன்பு நடந்த ஒன்றைப் போலவேதான். பெற்றோர் பிரிந்த பிறகு விரட்டினாலும் போகாத ஏமாற்றமாய்த் துயரார்ந்த வண்ணத்தில் எழுதப் பட்டிருக்கிறது காதல். ஆனால், பிரிந்த அவர்களுக்குள் சண்டையில்லை. கசப்பில்லை. நாடகமும் இல்லை. அவர்கள் தமது பிள்ளைகளுக்கு, ஒருவரை ஒருவர் இகழ்ந்து கொள்ளாமல் மென்மையாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் இருவரும் பிறரோடு பல்லாண்டுகளாக இணக்கமாகவே இருந்தனர். குடும்பத்துக்காகச் சங்கடத்துடன் சேர்ந்து வாழ்வதை விடப் பிரிந்து விடுவதே மகிழ்ச்சிக்குரியது என்று இருவருமே அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தைகளை ஹாரியட் இன்னும் மறக்கவில்லை. சகோதரன் அதைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் அவளுக்கு அது மனதை விட்டு அகலவில்லை – முதல் காதல் தோன்றும்வரை. ஆனால் எப்போதும் ஒரு காதல் முறிந்தபிறகு பேயோட்டுதல் போன்ற நிகழ்வு தேவையில்லைதானே.

    `நாளைக்குக் கிளம்புகிறேன்..’ என்றார் முதியவர்.

     அவள் தலையசைத்தாள். ஹாலில் அந்த அமெரிக்கப் பெண்ணின் குழந்தை அவளின் தோளில் உறங்கி விட்டது. ஹாரியட் கண்ணுக்குத் தெரியாத வகையில் அவள் புன்னகைத்துக் கொண்டே படிக்கட்டை நோக்கிப் போனாள். சோபாவில் இருந்தவர்களுக்குத் தாம் ஓவியமாகிறோம் என்பது இன்னும் தெரியவில்லை. அவர்களும் இப்போது எழுந்து போய் விட்டார்கள். சீருடை இளைஞன் இன்னும்  உணவுக்கூடத்தில் பரபரப்பாக இருக்கிறான்.

    `வருத்தமாகத்தான் இருக்கிறது..’ என்று முடித்துக் கொண்டார் முதியவர். தொடரப் போகும் தனது பயணத் திட்டத்தையும் சொன்னார் : விமானப் பயணம் மீது அக்கறை இல்லாது போனதால் ரயிலில் போகப் போவது, மிலன் நகரில் மதிய உணவு, ஜூரிச்சில் அல்லது அங்கிருந்து 11 மணிக்குக் கிளம்பும் இன்னொரு ரயில் நேரத்தைப் பொறுத்து இரவுணவு.

    `பெற்றோருடன் காரில்தான் இங்கு வருவோம்..’

    `எனக்கு அதுபோன்ற வாய்ப்பு இல்லை. இனியும் இருக்காது..’

    `அப்படியா. நல்லதாயிற்றே அது..’

     அந்த நேரத்தில் அது போலியாகவோ, செயற்கையாகவோ தெரியவில்லை. புன்னகை மறந்த முகங்கள், தரமான உணவு மட்டுமே கிடைக்கும் பிரெஞ்சு ஓட்டல்கள், காரில் கேட்கும் வெட்டிப்பேச்சு, ஏளனம் மிகுந்த விவாதங்கள் -ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்த இடமாக அது இருந்ததும் காரணம். அங்கும் கூடத் தரம் குறைந்த பகலுணவு, தரப்படும் அறைகள், கண்டு பிடித்தாலொழியத் தெரியாத பொய்ம்மைகள் என்பதெல்லாம் இருந்தபோதிலும் குடும்பத்தோடு வந்து தங்கிச் செல்ல உகந்த இடம் என்பது உண்மைதான்.

    `ஆகவே இம்முறை தனியாகத்தானே வந்திருக்கிறாய்..?’

     இரண்டாவது முறையாகவும் கேட்டார். அவரது முகத்தோற்றம் மாறவில்லை.

    `ஆம்..’

     தனது தனிமை பற்றிச் சொன்னார். வரையறுத்துச் சொல்ல முடியாத தரம் அதில் இருந்தது. எவ்வித முன்முடிவும் இல்லாமல்தான் அதை அணுக முடியும். ஆண்டுக் கணக்கில் பெற்ற அனுபவமும் அதன் பயனான ஆறுதலும் விளங்கின.

    `வேறு எங்காவது போயிருக்க வேண்டியது..’ இவ்வித உறவு தொடர்பான வெளிப்பாட்டு முறை அவள் அறியாதது. பண்பட்ட தன்மையும்தான். பல மாலை நேரங்களில் இரவுணவுக்குப் பின் அவர், தன் அருகில் இருந்தவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கக் கண்டிருக்கிறாள். அமைதியாக இருப்பார். பிறர் பேசும்போது அதில் அவரது தலையீடு இல்லாமல் ஆர்வம் மட்டுமே இருக்கும்.

    `மனதை மாற்றிக் கொண்டு விட்டீர்களா.?’ என்று ஹாரியட் கேட்டாள்.

    `ஒரு நட்பு அகன்று விட்டதே..’

    `அப்படியா..?’

    `நான் கனவுத் தீவுக்குப் போக வேண்டும்..’ என்றாள் ஆர்வத்துடன்.

    `அது எங்கே இருக்கிறது..?’

    `ஸ்கைரோஸ் என்று அழைக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைகளுக்குப் பெயர் பெற்றது..’

    `உன்னைப் பார்த்தால் நோயாளி போலத் தெரியவில்லையே..’

    `நான் நோயாளி இல்லைதான்..’ அந்த மனிதனை விரும்பத் தோன்றியது அவளுக்கு.

    `உண்மையில் ஆரோக்கியமாகத்தான் தெரிகிறாய் நீ..’ சிரித்தார்- அசலான பற்கள் தெரிய.

    `கனவுத்தீவை எனக்குப் பிடித்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அங்கே போக விரும்பினேன்..’

    `சிகிச்சைக்காகவா..?’ என்று கேட்டார்.

    `இல்லை. அதை நான் தவிர்த்திருப்பேன். மண் குளியல், நீர் சிகிச்சை, பாலினச் சிகிச்சை, தோற்றப் பொலிவுக்கான சிகிச்சை, முழுமையான மனநலக் கலந்தாய்வு எல்லாம் அங்கே உண்டு. தெளிவாக வழிநடத்தப் பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

    `அது உனக்கான சிகிச்சையாகவே இருக்கட்டும். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்வாயா..?’

     அவள் கவனிக்கவில்லை. அவர் பேசிக்கொண்டே இருந்தார். அவளது நினைவில்  ஸ்கைரோஸ் தீவில் சுற்றுலாப் பயணிகள் மாலைவேளைகளில் மேளங்களை முழக்கியும் பாடல்களைப் பாடியும் அதிகாலையை வரவேற்பார்கள். அல்லது கடலில் நீந்தியும் , விளையாடியும் தம்மைத் தமக்குள் தேடிக்கொண்டிருப்பார்கள். இப்போது செசரினா விடுதி ஜெர்மானிய, டச்சுக்காரர்களால் மாற்றம் அடைந்து விட்டாலும் சலுகைகள் என்று ஏதும் இல்லை. அவளது பெற்றோருக்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். பிரிந்து விட்ட அவர்கள் இப்போது இன்னும் மேம்பட்ட பயணங்களில் இருப்பார்கள்.

    `The Spanish Farm’ நாவல் இன்னும் புத்தக அடுக்கில் இருக்கிறது.’ முதியவர் தடுமாறிக் கொண்டே எழுந்து சொன்னார். `1987-க்குப் பிறகு யாரும் அதைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..’

    `இருக்கலாம்..’

     குட்நைட் சொல்லிக் கொண்டார். பிறகு அதைக் குட்பை என மாற்றிக் கொண்டார். அதிகாலையில் அவர் கிளம்ப வேண்டும். ஒரு கணம் தயங்கி நின்றார் -ஹாரியட் ஒருவேளை மதுவோ, காபியோ அருந்த அல்லது தங்கிக் கொள்ள அழைப்பாள் என்றோ நினைத்திருப்பார். அதன்பின் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். முதுமை காரணமாகத்தான் அவர் எப்போதும் பேசிக்கொண்டிருக்க விரும்பியிருப்பார் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். தனிமையும் காரணம்.

    `குட்பை..’ என்ற அவளின் குரல் கேட்டிருக்காது அவருக்கு. ஒரு பிரிவை மறக்கத்தான் கோடையில் அங்கே அவர்கள் வந்திருப்பது. பதினைந்து வெறுமையான நாட்களைக் கடந்து விடவும்தான்.

     ஹாலைக் கடந்து செல்லும்போது `குட்நைட்’ என்ற குரல் கேட்டது. சீருடைப் பணியாளன். புதியவன் போலிருக்கிறது.

     தகிக்கும் காலை வெயிலில், நகரத்துக்குச் செல்லும் குறுகிய சாலையில் அவள் நடந்து கொண்டிருந்தாள். கல்லறையும் பாழடைந்த பெட்ரோல் பங்க்குகளும் கொண்ட பாதை அது. விடுதியில் இருந்து வெளிப்பட்ட சில கார்கள் கடந்து போயின. அந்தச் சாலை எங்கு வேண்டுமானாலும் முடிந்து விடலாம். ஸ்கைரோஸ் தீவை விடக் கூடுதலாகவே வெப்பம் இருக்கும் அங்கே.

     பாதையின் பின்புறமாக ஆகாயத்தில் மேகங்கள் திரண்டன. மேகத்தின் நிழல் வெப்பத்தைத் தணித்தாலும், அது சூரியனை நெருங்கவில்லையே என்று நினைத்தாள். பாதை விரிந்தும் வளைந்தும் போய் நகரத்தைத் தொடுவதாக இருந்தது. கான்கிரீட் இருக்கைகள் கொண்ட பூங்கா ஒன்றும் அதன் அருகே தேவாலயமும் இருந்தன. ஒரு காலத்தில் அந்நகரத்தில் வாழ்ந்த துறவி அக்னஸ் தேர்ந்தெடுத்த இடம்.

     பூங்காவில் செஸ்ட்நட் மரங்கள் அடர்ந்த ஒரு மூலையில் ஹாரியட் அமர்ந்தபோது அங்கே அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. குடைபோல் விரிந்த பைன் மரங்களின் ஊடாக மென்காற்று வீசத் தொடங்கியது. தூரத்தே மோட்டார் வாகனங்கள் செல்லும் பாதையொன்றும் தெரிந்தது. `நாம் மகிழ்ச்சியாக இருந்ததில்லையா..?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஒரு சிறு கீச்சொலி தன்னுள் ஒலிப்பதைத் தடுக்க முடியவில்லை அவளால். ஆம். மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். அவனும் ஒப்புக் கொண்டவன்தான். அதை ஆவலோடு தெளிவுபடுத்தவும் செய்தான். யாரேனும் அதில் அவனுக்கு நிறைவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அது சரியல்ல. அவளே கேட்டபோதும் அவன் ஏனோ சொல்லத் தெரியாமல் தடுமாறினான்.

     நிழலில் நடந்து குறுகிய தெருக்களில் நகரத்தை அடைந்தபோது குளிர்ச்சியை உணர்ந்தாள். கடைத்தெருவை நெருங்கி ஒரு சாலையோரக் கடையில் காபியுடன் ஓய்வாக அமர்ந்தாள்.

     தாறுமாறாகப் பாவிய சதுக்கத் தரையில் இத்தாலியர்கள், சுற்றுலாப் பயணியர் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் ஷாப்பிங் பைகள், நாய்களுடனும் ஆண்கள் கோடைகால உடுப்புகளோடு முடிதிருத்தகங்களில் இருந்து வெளிப்பட்டு உலவினர். சாண்டா பேபியோலா தேவாலயம் அந்தச் சதுக்கத்தை ஆக்கிரமித்து இருந்தது. பழுப்புநிறப் படிக்கட்டுகளும், செங்கற்கள் பதித்த முகப்பும் இருந்தது.

இன்னொரு காபிக்கடையை ஹாரியட் தேர்ந்து கொண்டாள். வரிசையாக அமைந்த கடைகளில் ஒன்றாக இருந்தது அது. நகரத்தின் மேடான இடங்கள் சதுக்கத்தில்தான் இருந்தன. வெளிப்புறத்தில் சமையற்கூடங்களும் ஐஸ்கிரீம் கடைகளும் ஒரே மாதிரியான அலங்காரத்துடன் இருந்தன. `அவை எல்லாம் ஒன்றுதான்..’ என்று அவளது தந்தையார் சொல்லியிருக்கிறார்.

     இதே சதுக்கத்தில் அவளைத் தலைக்கு மேல் தூக்கி விளையாடியிருக்கிறார். அப்போது அவர் சிரிப்பதை மேலிருந்து பார்த்தாள். அவர் சொன்ன ஒரு ஜோக்கைக் கேட்டு அடங்காமல் சிரித்தாள். அம்மாவோ, பயணத்தில் தங்கும் ஓட்டல்களில் அவளது பள்ளிக்கால பிரெஞ்சு மொழியைத் திக்கித் திணறிப் பேசுவாள். அது யாருக்கும் புரியாமல் போனதை எண்ணி நாணுவாள். `ஆகா.. இது ஆனந்தம்..’ என்று ஹாரியட் இப்போது அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் இருந்து முணுமுணுத்திருக்கிறாள்.

      தேவாலயப் படிகளில் இருந்து ஒரு துறவி இறங்கிக் கொண்டிருந்தார். அவரது எண்ண ஓட்டம் யாரைப் பற்றி இருக்குமோ..? மெலிந்த நாய் ஒன்று தளர்நடையுடன் அவரைத் தொடர்ந்தது. மணி 12 என்று ஆலயமணி ஒலித்துச் சொன்னதைத் தூரத்தே கேட்கும் கூட்டுமணிகளும் ஆமோதித்தன. சூரியனை மேகங்கள் மூடியிருந்தாலும் காற்றில் வெப்பம் தணியவில்லை.

     தமது காதல் நிறைவேறும் என்று இதோ இந்த ரெம்பிராண்ட் தியேட்டரின் முகப்புக் கூடத்தில் வைத்து அவன் சொல்லியிருந்தான். `நாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம்..’ என்று அப்போதும் வியந்து போய்த்தான் பதில் தந்தாள். அவர்களுக்குள் சண்டை இருக்கவில்லை. பிறகும் கூட, அதை ஏன் ஒரு திரையரங்கத்தில் இருந்து சொன்னாய் என்று கேட்டதற்கு அவனிடம் பதில் இல்லை. ஆனாலும், அந்தக் கணத்தில் சிதிலமாகிப் போன மனநிலையில் அப்படித் தோன்றியது என்றெல்லாம் சொல்லிச் சமாளித்தான். விடுமுறை நாட்களில் அந்த உரையாடல் நடக்காது போயிருந்தால், அவர்களின் உறவும் சற்றே விரைவாக முன்னகர்ந்து இருக்கலாம். அது நல்லதுதானே என்றான் அவன்.

`பிப்ரவரி’14 லண்டன் நகரம் அலிங்டனின் மழைக்காலம் போலவே இருண்டும், குளிர்ந்தும் இருந்தது. குளிரில் துயரமும் அதிகம்தான்’ இந்த வரிகளை அன்று படித்தபோது இருந்த உணர்வு இப்போது இல்லை. குளிர்கண்ணாடியை அகற்றிக் கொண்டாள். மேகத் திரட்சியில் அழகில்லை. அதில் ரபேல், பெருஜினோ போன்றோர் தீட்டிய வெண்ணிறக் கம்பளித் துணியின் வனப்பு காணப்படவில்லை. வானத்தின் நீலநிறம் மறைந்து மங்கலான பழுப்பு அங்கி போர்த்தியது போலிருந்தது. முதல் மழைத்துளி அவள்மீது விழுந்ததும் எழுந்து தேவாலயத்தினுள் செல்ல முற்பட்டாள். கதவுகள் அடைத்திருந்தன. மணி இரண்டரை.

     திருமணத்தை லண்டனில் வைத்துக் கொள்ள முடிவாயிற்று. ஒரு சமையற்கூடத்தில் வைத்து வாசித்தாள். அதற்கு வலுவான காரணம் உண்டு. அருகேதான் அவளது டிகோர்ஸி குடும்பம் வசித்து வந்தது. அவர்கள்  போக வர எளிது. அவளுக்கு அவ்வளவாகப் பசியில்லை. ஓட்டலில், அளவு குறைந்த இத்தாலிய அரிசி உணவான ரிசோட்டோ, சோடா இல்லாத மினரல் நீர் கொண்டுவரச் சொன்னாள்.

    `ரொட்டியும், பரீனா மாவுப் பண்டமும் கொண்டு வருகிறாயா..? வயதான பெண்ணொருத்தி, கடுகடுத்த முகத்துடன் வந்து நின்ற பணியாளிடம் கேட்டாள். அவனுக்குப் புரியவில்லை. மெனு கார்டை எடுத்து முன்னே வைத்தான். அந்தப் பெண்ணும் செசரினா விடுதியிலிருந்து வருபவள்தான். உடன் ஒல்லியான ஓர் இளைஞன். இருவரும் என்ன மொழியில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. 

    `நன்றாக இருக்கிறதா..? அதே பணியாள் ரிசோட்டோவை உண்ணத் தொடங்கி விட்ட ஹாரியட்டிடம் கேட்டான். புன்னைகைத்து விட்டு வாசிப்பைத் தொடர்ந்தாள். வெளியே மழை வலுத்துப் பெய்தது.

     திறந்து விட்ட சாண்டா பேபியோலா தேவாலயத்தில், இயேசுவின் திருப்பிறப்பை அறிவிக்கும் ஓவியம் ஒரு பிரபலமாகாத ஓவியனால் தீட்டப் பட்டிருந்தது. அநேகமாக அவன் பிலிப்போ பிலிப்பின் மாணவனாக இருப்பான். தேவதூதன் பழுப்புநிறச் சிறகுகள் விரிந்திருக்கக் கால்களை மண்டியிட்டிருந்தான். கையில் ஏந்தியிருந்த அல்லி மலரைத் தூண் பாதியளவு மறைத்திருந்தது. வெண்மை, பச்சை, பழுப்புநிறப் பளிங்காலான தரை. கன்னி மரியாளின் வலக்கை, பக்தர்களின் வருகையைச் சீர்ப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. பின்னணியில் அருள்பாலிக்கும் வளைவும், தாங்கு சுவரும், ஆகாயம் மலை சூழ்ந்திருப்பது போல்  இருந்தது. ஓவியம் சுட்டும் அமைதி ; மெய்ம்மையின் அமைதி ; சொற்களுக்கு அங்கே இடமில்லை.

     ஹாரியட்டின் கண்கள் வியப்பை முழுதாய்ப் பதிவு செய்து கொண்டன : தேவதூதனின் பச்சைநிற உடை, அதன் சிவந்த அடிப்புறம், ஆகாயத்தில் குறியிட்டது போல் பறக்கும் புறா, மரியாளின் கையேடு, உறுதியான தூண்கள், காலியான பூச்சாடி, ,அன்னையின் காலணி, தூதனின் வெறுங்கால், தூரத்தே தெரியும் நிலக்காட்சி, வெப்பம் தொடாத அதன் மென்மை. கன்னி மரியாளின் கண்களில் தெரியும் எச்சரிக்கை வியப்பூட்டியது. அதேநேரத்தில் சாந்தமும் அதில் குடிகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் தேவாலயத்தை மண்டியிட்டு நகர்ந்து சுற்றி வந்தனர். கறுப்பு உடைப் பணியாள் பளிங்குத் தரையின் மையத்தில் இருந்து ஓரம் வரை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்தான்.  அன்னையின் சிலைக்கு முன் ஒரு முதியவர் வணங்கி நிற்பது தெரிந்தது. கையில் ஜெபமாலை மணிகள் உருண்டு கொண்டிருந்தன. வாய் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தூபப்புகை காற்றில் நிறைந்து மணந்தது.

     சுடர்ந்து எரியும் மெழுகுவத்தியைக் கடந்து ஒரு குடும்பக் கல்லறைக்கு அப்பால், திருச்சின்னம் அமைந்த பலிபீடத்தையும் துறவி பேபியோலாவின் வாழ்க்கை வரலாறு கூறும் பக்கச் சுவரையும் கடந்து மெதுவாக நடந்தாள்.

     அந்தத் தேவாலயத்திற்கு அவள் வந்ததேயில்லை. அவளது பெற்றோர் ஆலய தரிசனங்களில் அக்கறை கொள்ளாதவர்கள். அவளும்தான். நேற்றுவரை தோன்றியதில்லை. பூங்கா அடர்ந்த விடுதிகள், கஃபேக்கள், மலைப்பகுதிகள், சிறுநகரங்கள், பான்டி நிகோலோவிலுள்ள நீச்சல் குளம் போன்றவற்றுக்குப் போகத்தான் விருப்பம் அவர்களுக்கு.

     முழங்காலில் ஊர்ந்து வந்த பெண் ஒரு மெழுகுவத்தியை ஏற்றி விட்டு மீண்டும் வேண்டுதலைத் தொடர்ந்தாள். தூதனின் செய்தியைச் சொல்லும் பகுதியில் ஹாரியட் சூழ் இருக்கையின் முன்பகுதியில் அமர்ந்தாள். தூதனின் சிறகுகளின் நிறத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அன்னையின் காலணி பழுப்பு நிறத்திலும், காலியான பூச்சாடியானது மெலிந்த தண்டுப் பகுதியுடன் பல்பு வடிவத்தில் இருந்தது. மரியாளின் கையேடு பொன்னாலானது என்பதற்குரிய தடயங்கள் மட்டும் இருந்தன.

     தேவாலயத்தை விட்டுக் கிளம்பும்போது மழையும் நின்று விட்டது. காற்றில் புதுமணம் வீசியது. அவளது காதல் விஷயங்கள் எல்லாம் கழுவிக் களையப் பட்டுப் புது நம்பிக்கை பிறந்தது. நினைவுகள் மர்மப் பாதைதான். காதலில் அவள் ஏமாற்றப் பட்டிருக்கிறாள்; அது வேறு எவராலும் அல்ல.

     ஹாரியட் தேவாலயப் படிக்கட்டுகளின்மீது ஒருகணம் நின்றுகொண்டாள். தன்னுள் உறைந்திருந்த உண்மையைப் பளிச்செனத் தெரிந்து கொண்ட தருணம் அது. விடுபடலும்தான். கடைத்தெருவில் மழைவெள்ளம் புகுந்து பாவியிருந்த கற்களை வெளிக்காட்டியது. காபி அருந்திய கடைக்கு வெளியே கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒருவன் துடைத்துக் கொண்டிருந்தான்.

    தண்மையான ஆகாயத்தில் சூரியன் சோம்பலாகக் கிடந்தான். விடுதிக்குத் திரும்பியபோது, இலைதழைகள் செறிந்த நிலத்தில் புதுவாழ்வு கண்ட செடியைப் போலாகி விட்டது மனம். அமைதியாக எல்லாம் அடங்கிப் போனது. குளிர்ந்த பாதையில் ஜெரேனியச் செடிகளில் இருந்து ஒரு பறவை பாடியது.

     நாளைக்கும் இதே சூரியன் உதிக்கும். மீதமிருக்கும் மென்மையை மதிய வெம்மை உலர்த்தி விடும். புதிதாய்த் தூசு படியும். பளிங்குத் தரை வெயிலில் தகிக்கும். சில வாரம் அல்லது மாதத்திற்குள் தற்போது இளமையாகத் தோன்றுகிற அனைத்தும் புதுமழைக்கு இணங்கி விடும்.

     சூரியன் எப்போதும் இரக்கமில்லாதவன். கொடிய தண்டனை தருபவன். விடுதியின் அருகே வெயிலில் வாடியிருந்த தோட்டத்தில் அவர்கள் தொப்பியும் குளிர்கண்ணாடியும் அணிந்து வெப்பத்தைச் சமாளித்தார்கள். ஸ்கைரோஸில் வெயில்தான் ஈர்ப்புக்கு உரியது. `எனக்குத் தேவை இந்தச் சூரியன்தான்..’ என்று அவன் சொல்லியிருந்தான். அவன் அங்கே போயிருக்கிறானா..? இப்போது அங்கிருப்பானா..? கூட யார் இருப்பார்கள் என்றெல்லாம் கேள்விகள் தோன்றின. மனக்காட்சியில் அவன் ஸ்கைரோஸில் அட்சிட்சா வளைகுடாவில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் இருந்தான். சிகிச்சைக்காக வந்த யாரோ உடன் இருந்தார்கள்.

     விடுதியின் வெளியே இருந்த நாற்காலிகள் மழையில் நனைந்து கிடந்தன. ரோஜாச் செடிகளில் இதழ்கள் மினுங்கின. மேசையில் இருந்த கண்ணாடி டம்ளரில் ஓர் அங்குலத்திற்கு மழைநீர் நின்றது. வெளிமுற்றத்தில் எல்லாக் குடைகளுக்குக் கீழும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மூடிக்கிடந்த சன்னல்கள் திறந்து வைக்கப்பட்டன. திராட்சைத் தோட்டச் சரிவில் நீர்த் தெளிப்புக் கருவி இயங்கத் தொடங்கி விட்டது.

     உள்ளே இருக்கப் பிடிக்காததால் ஹாரியட் திராட்சைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். காலணிகளில் சேறு அப்பிக் கொண்டது. தேவாலயத்தில் 6 மணிக்குரிய மணி அடித்தது. நீர்த் தெளிப்புக்கு நடுவில் நின்றதால் சில கணம் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. நினைவுகளில் வெறுமை படர்ந்தது. அழுத்தம் கூடிக் குழப்பமும் நிறைந்ததைக் கவனித்தாள்.

     மழைக்குப் பிறகு தேவாலயத்தில் புது ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. வளைவுகளுக்கு ஊடாகத் தெரியும் தூரத்து நிலக்காட்சி கணநேரப் பார்வையாகி மறைந்தது. மழைக்குப் பின் தேவதூதன் வந்தான் – குளிர்ந்த நேரமொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு.

     உணவுக்கூடத்தில் பகட்டாக உடையணிபவன் அமர்ந்திருந்த இடத்தையும் சேர்த்து ஏழு பேர் கொண்ட ஒரு குடும்ப விருந்துக்காக ஒதுக்கியிருந்தார்கள். அழகிய பிரெஞ்சுப் பெண் இருந்த இடத்தில் வேறு யாரோ. முதியவர் இடத்தில் யாருமில்லை. கடைத்தெருவில் தனக்கு மாவுப்பண்டம் வேண்டாமென்று மறுத்தவள் தற்போது பாஸ்டாவுக்குப் பதிலாக இறைச்சிச் சாறு கொண்டுவரச் சொன்னாள். புதிய முகங்களே அதிகம் நிறைந்திருந்தன.

    `குட் ஈவினிங்..’ துருநிறத் தலைமுடியாள் ஹாரியட்டை வணங்கி விட்டு டம்ளர்களும் சாலடும் கொண்டு வந்து வைத்தாள்.

    `நன்றி..’ முணுமுணுத்தாள்.

     பணியாள் ஒயினை ஊற்றினாள். ரொட்டியைத் துண்டாக்கினாள். உணவுக்கூடத்தில் பெருஞ்சத்தமாக இருந்தது. பாத்திரங்கள் உருள்வது உள்ளிட்ட பல்வித ஓசைகள். அன்று ரெம்பிராண்ட் தியேட்டரின் முகப்பில் அவன் அதைச் சொன்னபோது கேட்ட கூச்சல் போல இப்போது கேட்டது. உண்மையில் அன்றைக்கு மனதுக்குள்தான் பெரும் ஓலம். திடமான ஒளியொன்று இப்போது நினைவுகளுக்குள் புகுந்து மின்னியது. துயரின் கலைடாஸ்கோப் கருவிக்குள் போலக் குருதி பொங்கிப் பெருகி அவளுக்குள் ஓடியது. தியேட்டரின் முகப்பில் அப்போது அவள் கண்களை மூடியிருந்தாள். அப்போது `அவர்கள் குடும்பமாக இருக்கப் போவதில்லை’ என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது.

     கடிதங்கள் எழுதிப் போட்டிருக்கலாம். செய்யவில்லை அவள். அங்கே ஜெர்மானியர், டச்சுக் காரர்கள், சுவிஸ்கள் வந்து கூடுவதற்கு முன் காபி, ரொட்டி தவிர வேறெதுவும் தேவையென்றால் கேட்டுக் கொள்ள வேண்டப் பட்டிருந்தது. சீஸ், குளிர்ந்த இறைச்சி, பழங்கள், பஞ்சு போன்ற கேக் போன்றவை, தாமே எடுத்துண்ணும் விருந்தாக மாடியில் ஏற்பாடாகி இருந்தது. ஒவ்வொரு காலை வேளையிலும் அங்கு வந்து அமர்ந்து The Small House of Allington நூலை வாசிப்பாள். ஆயினும், காலையுணவு நேரம் மாற்றப்பட்டதுதான் அவளுக்குத் தெரியவில்லை. நகரத்திற்குப் போகும் சாலையில் பாழடைந்த பெட்ரோல் பங்க்குகளைப் பார்ப்பதும், பூங்காவில் செஸ்ட்நட் மரங்களுக்கு இடையில் அமர்ந்திருப்பதும் மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று யோசித்துப் பார்த்தாள். கடிதம் ஒன்று எழுத அப்போது நினைத்தாள். ஆனால் எழுதவில்லை. அவனுக்கு முன்னால், விடுமுறை நாட்களில் புதினங்களைக் கொண்டு வந்து வாசிப்பை ஊக்குவித்தது The Tenant of Wildfell Hall, The Mill on the Floss ஆகிய நூல்கள்தாம்.

     மாட்டிறைச்சியும், கீரையும் இன்றைய இரவுணவு. தொடர்ந்து ஓர் இனிப்பு வகை. கனமான மஞ்சள்நிறக் கேக் அவளுக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. அதை அவள் மீண்டும் உண்ண விரும்பவில்லை. அவளது காதல் கதையில் ஏமாற்றம் தந்தது அதுவாய் இருக்குமோ என்ற நினைப்பும் காரணம். அங்கே அவள் திரும்பவும் வரப் போவதில்லை – தனியாகவோ, வேறு யாருடனோ. ஏதோ ஒரு வாய்ப்பில் வந்தாயிற்று. நாளைக்கு அவள் கிளம்பிவிடப் போகிறாள்.

     புத்தக அடுக்குகளும், ஜியோட்டோ ஓவியங்களும் நிறைந்த அறையில் ஒரு கூட்டமே திரண்டிருந்தது. திராட்சை மதுவை அருந்தியவாறும், வெண்சீருடைப் பையனிடம் கூடுதலாய்க் காபி வேண்டியும், உரையாடத் தோதானவர்களைத் தேடிக்கொண்டும் இருந்தார்கள். பெல்ஜியப் பெண்கள் அந்த ஆங்கிலேய இளைஞர்களோடு மாடியறைக்குப் போனார்கள். முன்புறம் திறந்த நிலையில் உள்ள ஸ்வெட்டரை, முந்தைய இரவு வெப்பமாக இருந்ததால் அதை அணியாமல் தோளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். `அதோ அவன் நம்மை வரைந்து விட்டான்..’ என்ற கூக்குரல் ஒன்று எழுந்தது. சோபாவில் அமர்ந்திருந்த அதே ஜோடி அப்போதுதான் விழித்துப் பார்த்தார்கள். விடுதியில் குறிப்புகளை எழுதி வைக்கும் நோட்டையே அவர்களால் அடையாளம் காண முடியாது.

     அவன் போய் விட்டான் -மற்றவர்களைப் போலவே. அதிக அன்பை அவள் வேண்டிய போதுதான் அது நடந்தது. கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தைப் பிரகாசிக்க வைத்தும், உறுதியான எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டும் அவள் நடக்கத் தொடங்கி விட்டாள். தன்னைத் தானே பலியாக்கிக் கொண்டவள் அவள். ஏன் அதைச் செய்தோம், அல்லது செய்யவில்லை என்பது இப்போது அவளுக்கு விளங்கி விட்டது. அந்த விடுதியில் நீள்நினைவுகளுடன் தனித்து இருந்தது, அவளுக்கு எதையும் சொல்லித் தந்து விடவில்லை. தரவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள்.

     பழுப்பு – பச்சை வரி கொண்ட கழுத்துப் பட்டை அணிந்த, நெற்றியில் புள்ளிகளும் கறைகளும் கொண்ட முதியவரை இப்போதும் மனம் வழியே பார்க்கிறாள். தன்மதிப்போடு இருக்கச் சொன்னவர் அவர். காலை வெயிலில் கல்லறை, பாழ்பட்ட பெட்ரோல் பங்க்குகளைக் கடந்து, தான் சென்று கொண்டிருப்பதை அறிந்தாள். பூங்காவின் செஸ்ட்நட் மர நிழலை, தன் மீது முதல் மழைத்துளி விழுந்த கடைத்தெருவைக் கடந்து செல்வதையும் அறிந்தாள். தேவாலயத்தில் தரை பெருக்கும் ஓசையைக் கேட்கிறாள். சுற்றுலாப் பயணியின் விம்மல் அவளது காதில் விழுகிறது. பிரார்த்தனை செய்யும் பெண்ணின் விரல்களில் ஜெபமாலை மணிகள் உருள்கின்றன. மெழுகுவத்திகள் சுடர்கின்றன. துறவி பேபியோலாவின் வாழ்க்கைக் கதை நிழலில் மறைந்து விட்டது. அவரின் குடும்பக் கல்லறை சாவின் வாசனையைத் துறந்து நிற்கிறது. காற்றை இனிமையாக்குகிறது மழை. சொல்லில் விளங்காத தேவதூதனின் வருகையையும்தான்.

                         ————– 000 —————  

வில்லியம் ட்ரெவர் (1928-2016)

வில்லியம் ட்ரெவர் ஐரிஷ் எழுத்தாளர். சமூகத்தில் கண்டுகொள்ளப்படாத புறக்கணிக்கப்பட்ட உறவுகளை எழுதியவர். தனித்து அலையும் மனங்கலை எழுத்தாக்கியவர். புதினம், சிறுகதை, நாடகம் மற்றும் குழந்தை இலக்கியம் என இயங்கியவர். இலக்கியத்திற்கான லில் பிரட் பரிசை மூன்றுமுறை வென்றவர். ஐந்துமுறை புக்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். Fools of Fortune, Two Lives, Love and Summer ஆகிய படைப்புகள் முக்கியமானவை.

After Rain என்ற இச்சிறுகதை 1996-ல் எழுதப்பட்டது. இத்தாலியின் பழமையான புறநகர் ஒன்றில் கதை நடக்கிறது. முறிந்த காதலுக்குப் பிறகான துயர், வலி, ஏக்கம், நம்பிக்கை இதில் பதிவாகி இருக்கிறது.

00

அவை நாயகன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.

சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *