பெரும் மழை ஓயாமல் பொழிந்துகொண்டே இருக்கிறது. வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து மகிழ் பார்த்துக் கொண்டே இருக்கிறான். பள்ளிக்கு விடுமுறை அறிவித்துவிட்டார்கள். மகிழ்ச்சிதான் ஆனாலும் அவனால் மகிழ முடிவதாக இல்லை.
“மகிழ் மகிழ் அங்க என்ன பண்ற சாப்பிட வா?” அம்மாவின் அன்பு அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. இந்த அழைப்பின் சத்தம் எதுவும் மகிழின் காதில் விழுவதாக இல்லை.
ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி மழை பொழியும் ஊர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
ஆறுகள் முழுதும் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. குளங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்ற காட்சிகளைப் பார்த்து “ஐயோ” என வேகமாகக் கத்த எண்ணியவன் அம்மா பயந்துவிடுவார்கள் என நினைத்து மெதுவாக “ஐயோ!” என முணுகினான்.
“மகிழ் சாப்பிட வர போறியா இல்லையா?” அம்மாவின் குரலில் கண்டிப்புக் கூடியிருந்தது. மகிழ் இப்போதுதான் அம்மாவின் குரலைக் கேட்டுச் சாப்பிட போகலாம் என எழத்தொடங்கியவன் அடைமழையை வெறுமையாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
சாப்பிடலாம் என நினைக்கிறானே தவிர அவனால் சாப்பிட முடியாத அளவிற்கு அவன் சிந்தனை இருந்தது.
“மகிழ் மகிழ் உன்னத்தான் இங்கே பாரேன்”
குளக்கரையில் நடந்து கொண்டிருந்தவனின் காதில் இந்தச் சத்தம் மெல்ல விழுந்தது. இதுவரையில் இத்தனை மென்மையாய் யாரும் அவனைப் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. இதுதான் முதல் முறை. அந்தக் குரலில் மென்மை மட்டும் இல்லை. பேரன்பும் மகிழ்ச்சியும் கலந்திருந்தன. அவன் அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறான். தன்னை அழைத்தது யாரென்றே அவனுக்குத் தெரியவில்லை. குனிந்து பார்க்கிறான் அவன் காலடி ஓரமாக ஒரு புல் காற்றில் தலையசைத்து அவனைப்பார்த்துச் சிரிக்கிறது. இவனும் அந்தப் புல்லைப்பார்த்துச் சிரிக்கிறான்.
“மகிழ் நல்லா இருக்கியா, என்ன சாப்பிட்ட?”
இவனுக்குப் புல் பேசுவது அத்தனை வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. அதன் தலையை மெல்ல தடவுகிறான்.
“நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க…? நீயும் சாபிட்டியா? ஏன் இப்படி வாடிப்போயிருக்க? உடம்பு சரியில்லையா ? “
“ச்சே ச்சே உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல நான் நல்லாதான் இருக்கேன் ஆனாஆஆஆ….”
“ஏன் இப்படி ஆனாஆஆஆனு இழுக்கிறே? என்னனு சொல்லு…”
“ம்ம்ம் சொல்றேன். நீயாவது என் மேல இரக்கப்படுறாயே ரொம்ப சந்தோசமா இருக்கு. பிறர் மேல அன்பு காட்டவும், பிறர் துயரத்தைக் கேட்டுப் பகிர்ந்துக்கவும் வயசு ஒரு தடையில்லைன்றத உன்னைப் பார்த்தே புரிஞ்சிக்க முடியுது.
நீ எப்படி அக்கறைய கேட்கிற? பெரும்பாலான மேதாவி மனிதர்கள் என்னையெல்லாம் ஒரு பொருட்டாவே மதிப்பது இல்லை. குனிந்துகூட பார்க்காமல் மிதித்துமிதித்துக் கடந்து போகிறார்கள். அவர்கள் மிதிப்பதில்தான் மனம் உடைந்து நொந்துபோகிறேன் மகிழ். அந்த வேதனைதான் என்னைச் சோகமாக்கி விடுகிறது”.
“அழாத அழாத… நீ நல்லா உயரமா வளர்ந்துடு அவங்க காலில் மிதிபடாத அளவு உயரமாகிடு, அப்போ அவங்களால உன்ன மிதிக்கவே முடியாது. அதையும் தாண்டி உன்ன மிதிக்க வந்தா… சத்தமா குரல் எழுப்பு… “அடேய் மனித பதர்களா? என்னைய மிதித்துத் துன்பப்படுத்தாதீங்கனு” – அப்போதாவது இந்த நவீன உலக மனிதர்களுக்குப் புரியுதா பார்க்கலாம்” பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனாலும்,
“மகிழ், இங்கே பாரேன்.” முன்பு நலம் விசாரித்த அதே குரல்.
இப்போது அந்தக் குரலில் துயரம் கலந்திருந்தது; குளக்கரையின் படிக்கட்டு அருகிலிருந்து வேகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
புல்லிடம் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று படிக்கட்டு நோக்கி ஓடினான்.
குளம் எல்லா படிக்கட்டுகளும் வெளியே தெரிய வற்றிக்கிடந்தது. குளத்தின் படிக்கட்டுகள் குளத்தின் நீண்ட பற்களைப் போலக் காட்சி தந்தது.
குளத்தின் மையப் பகுதியில் மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் கிடந்தது. சின்ன மீனும் பெரிய மீனுமாக நீரில்லாத இடங்களில் எல்லாம் சுவாசிக்கமுடியாமல் இறந்து கிடந்தன. இப்போது தான் துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது.
மகிழுக்குக் குளத்தின் உள்பகுதியைத் தண்ணீர் இல்லாமல் பார்ப்பது இதுதான் முதல் முறை. நிமிர்ந்து பார்க்கிறான். தலைக்குமேலே மிக உயரமான கரைகள். நடைபயிலுகின்ற மனிதர்களின் தலை மட்டுமே தெரியும் உயரம். சுற்றி இருக்கும் மரங்கள் எல்லாம் மிக அழகாக பச்சை நிறத்தால் வட்டக்கோடிட்டது போலக் காட்சி அளிக்கின்றன. இவனுக்கு ஒரு புதிய உலகத்துக்குள் வந்த பிரமிப்பு. அங்கும் இங்கும் தேடுகிறான்.
இப்போது அந்தச் சத்தம் யாருடையது என்பது மகிழுக்குத் தெரிந்துவிட்டது. அதன் துயரம் கலந்த அழைப்பு அவனுக்குக் காட்டிவிட்டது. மீனின் அழைப்பாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தவன் இறந்துகிடக்கும் மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறான். இப்படியே பார்த்துக் கொண்டு சிறிது தூரம் போயிருப்பான்.
“மகிழ் வந்துட்டியா? வா… வா…” என அழைத்தவாரே இறந்துகிடக்கும் மீன்களுக்கு இடையில் ஒரு மீன் மட்டும் உயிரோடு துடித்துக்கொண்டிருந்தது.
“ஓஓஓ நீதான் என்னய கூப்பிட்டியா? அச்சோ ஏன் உன் உடம்பு இப்படிக் காயமாயிருக்கு? என்ன ஆச்சி மீன் உனக்கு?”
“நான் என் வீட்டில் விளையாடிக்கிட்டிருந்தேனா? அப்போ, மேலேயிருந்து நிழல் போல வந்துச்சி. நான் வீட்டிலிருந்து கொஞ்ச ஓரமா வந்து நிழல் வந்துதே அந்தப் பக்கமா தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தேன்”.
“ஏன் மீன் நீ போய் வானத்தைப் பார்த்த? நீ பார்த்த நிழலுக்கும் வானத்துக்கும் என்ன இருக்கு?”
“என்ன மகிழ் இப்படிக் கேட்கற? வானம் இருட்டினா பூமி முழுக்க நிழலாகிடும் உனக்குத் தெரியாத என்ன?”
“ஆமாம் ஆமாம் மீனு நானும் பார்த்திருக்கிறேன். மழைவர கொஞ்சே நேரத்துக்கு முன்னே சூரியனே இருந்தாலும் இருட்டிடும், காத்து வேகமாக வீசும், சில நேரங்கள்ல நாம கொண்டுபோய் வீதியில கொட்டின தாள், குப்பை எல்லாம் பறந்து வீதி, வீடெல்லாம் அசிங்கமாக்கிடும். சூரியன் இருந்த இடம் தெரியாம போய்டும், வானத்துல வெள்ளையா இருந்த மேகம் கருப்பாகிடும், சில்லுனு காத்து வீசும்….”
“சரியா சொன்ன மகிழ் உனக்கு மழைவர சூழல் நல்லா தெரிஞ்சுருக்கே… சிறப்பு, மகிழ்ச்சி… நானும் இப்படி இருட்டாயிருக்கே மழைதான் வர போகுதுபோலனு மகிழ்ச்சியில வீட்டைவிட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தேனா?”
“சரி வானத்தைப் பார்த்த, அப்போ என்ன நடந்துச்சி்ச் சொல்லு மீனு?… மீனு இனி நான் உன்ன மீனுனே கூப்பிடவா?”
“சரி மகிழ் என்னைய நீ எப்படி வேண்ணா கூப்பிட்டுக்க. உனக்கு எல்லா உரிமையும் உண்டு. ஏன்னா நீ என்னோடஃ பெஸ்ட் ஃப்ரண்ட்… இப்போ சொல்லவா என்ன நடந்துச்சினு?”.
“சொல்லு மீனு. உனக்கு அப்படி என்னதான் நடந்துச்சி?…”
“இருட்டா இருக்குனு மழை வருமானு வானத்தைப் பார்த்தேனா… ஒரு பெரிய பருந்து தன்னோட இறக்கையை விரிச்சி பறந்து வந்துட்டு இருக்கு. அதோட பெரிய இறக்கை சூரிய வெளிச்சத்தையே மறைச்சுட்டு இருந்துச்சி். அது இறக்க ஏற்படுத்துன நிழலே மழை வர போல இருட்டா இருந்துச்சினா பாரேன்… அச்சோ! அவ்வளோ பெரிய பருந்து. அது என்னய நல்லா பார்த்துடுச்சி”.
“ங்ங்யாஆஆங்..ங்ங்ய்யயாஆஆங்” சத்தம் வேற போட்டுட்டு என்னய நோக்கி அதோட கூரான நகங்கள் இருக்கிற கால சடார்னு நீட்டி என்னைய பிடிச்சுத் தூக்கிட்டுப் பறக்குது மேல மேல போகப் பாக்குது”…
“அச்சோ அப்பறம் நீ எப்படித் தப்பி்ச்ச மீனு…”
“நான் துள்றேன். துடிக்கறேன். எப்படியும் கீழ விழுந்துடலாம்னு பாக்கறேன் அது விடல… அதோட நகம் அவ்வளவு கூர்மையா, வலிமையா இருந்துச்சி… ரெண்டு நகம் என்னோட உடல்ல பக்கத்துக்கு ஒன்னு அப்படியே அமுக்கிக் கிழிக்குது… அம்மா… அம்மா… அய்யோ வலி தாங்கள சாமி என்னய விட்டுடு ஐயோ ஐயோனு கத்துறேன்… விடவே இல்ல.”
“என்ன மீனு சொல்ற? நீ சொல்றத கேட்கவே எனக்குப் பயமா இருக்கு மீனு”
“ஆமாம் மகிழ். எனக்கும் பயமா இருந்துச்சி… அழறேன், கத்துறேன், கெஞ்சறேன், விடலயே… அது மேல நிமிர்ந்து பார்த்து பார்த்துப் பறக்குது என் அழுகையைக் கொஞ்சமும் காதிலேயே வாங்கிக்கல. மேல பார்த்துச்சில்லயா? நானும் வலியத் தாங்கிக்கிட்டு மேலே பார்த்தேன். அந்தப் பருந்தோட அம்மா பருந்து பறந்துட்டு இருந்துச்சி. நான் அதைப் பார்த்துக் கேட்டேன். ’அது உங்க அம்மா பருந்தா’?
பருந்து சொன்னுச்சி “ஆமாம் அது எங்க அம்மா பருந்துதான்.”
”உனக்கு உங்க அம்மானா ரொம்ப பிடிக்குமா?”
‘எனக்கு எங்க அம்மானா ரொம்ப பிடிக்கும். இப்போ எங்க அம்மாக்கு உடம்பு முடியல. அதான் அவங்களால வேகமா முன்ன போலப் பறக்க முடியலன்னு சொன்னிச்சு’…
பருந்து என்ட கேட்டுச்சு “உங்க அம்மாவ உனக்குப் பிடிக்குமானு? ஆமாம் எனக்கும் எங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்னு” சொன்னேன்…
“உங்க அம்மாவுக்கு எப்படி உடம்புக்கு முடியலயோ அப்படித் தான் எங்க அம்மாவுக்கும் உடம்புக்கு முடியல அவங்களால இப்போ முன்ன போலலாம் நீந்த முடியறது இல்லனு” சொன்னேன்…
“இப்போ அம்மா உன்னயத் தேடுவாங்கதானே”னு கேட்டுச்சி.
“ஆமாம் தேடுவங்கன்னு” சொன்னதுதான் தாமதம் என்ன நினைச்சதோ தெரியல… சர்ர்ர்ர்னு கிழ இறங்கி என்னய போட்டுட்டு வேகமா மேல பறந்து போயிட்டு”.
“நல்ல வேளை மீனு நீ அந்தப் பருந்துட்ட இருந்து தப்பிச்சுட்ட…”
மீனு இப்போது மகிழின் உள்ளங்கையில் இருக்கிறது. அவன் உள்ளங்கையில் அத்தனை இதமாக இருந்தாலும் மீனுக்கு அதன் வீடு நோக்கி பயணிப்பதில் தான் உயிரும் உயிர்ப்பும் வாழ்வும் இருக்கிறது.
“மகிழ் என்னய என் வீட்டுல விட்டுடேன். நான் போய் எங்க அம்மாவ பாக்கனும். என் அம்மா என்னையக் காணாம சோகமா தேடி அலைவாங்க. விட்டுடுறியா?”
“விட்டுடுறேன் மீனு உன்னோட வீடு எது?”
“அதோ தண்ணீர் தெரியுதுல அதான் என் வீடு…”
“என்ன மீனு தண்ணீர்தான் உன் வீடா?”
“ஆமாம் மகிழ் நீங்க எப்படி கல்லு, மண்ணு, சிமெட்டி எல்லாம் வச்சி வீடு கட்டிகிறீங்களோ அது போலதான் எங்க வீட்டையும் நாங்க மழை தண்ணீர வச்சிக் கட்டிக்கறோம் மழைத் தண்ணீர்தான் எங்க வீடு”
மகிழ் மீனுவைத் தண்ணீரில் இறக்கி விடுகிறான். மீனு உடல் வலி மறந்து நீந்தி நீந்திப் போகிறாள்.
“மகிழ் டாட்டா… நீயும் பார்த்து வீட்டுக்குப் போய்டு…அம்மா உன்னையும் தேடிட்டு இருப்பாங்க”
மகிழும் புன்னகையோடு கையசைக்கிறான்.
மழையையே பார்த்து மெய்மறந்து நின்ற மகிழின் தோள் பற்றி இழுக்கிறாள் அம்மா. மீனுவின் நினைவிலிருந்து இப்போதுதான் மகிழ் வெளியே வருகிறான்…
000
மகா.இராஜராஜசோழன்
குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி. பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம். வட்டம் – சீர்காழி. மாவட்டம் – மயிலாடுதுறை.
இணைய இதழ்களிலும், அச்சிதழ்களிலும் எழுதி வருகிறார்.
நூல்கள்
1. தாகத்தோடு பயணிக்கும் நதி – கவிதை நூல்
2. சார் இது பேய் இது நீங்க – கட்டுரைத்தொகுதி