பூவாயிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பிள்ளைகள் அனைவரும் விடுப்பிலிருந்ததால் வீடு களை கட்டியிருந்தது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு முதல் நான்கு பிள்ளைகளும் தத்தமது பள்ளி கல்லூரிகளுக்கு சென்றபின், கடைசிப்பையன் மட்டுமே வீட்டிலிருப்பான். அவனும் தற்சமயம் நான்காம் வகுப்பைப்  படித்து முடித்திருக்கிறான். இன்னும் ஒரு வருடம்தான். அவனையும் மற்றப்பிள்ளைகளைப்போல் செட்டிகுளத்திலோ அல்லது பெரம்பலூரிலோ உள்ள பள்ளியில் சேர்த்து, கூடவே விடுதியிலும் சேர்க்க வேண்டும். பிள்ளைகள் அனைவரும் கிளம்பியபின் வீடு வெறிச்சோடிப்போவதை அவள் எப்பொழுதும் விரும்பியவளில்லை. ஆனால் என்ன செய்ய? படித்தபின்னும் அல்லது திருமணம் முடித்தபின்னும்  பிள்ளைகள் நம்முடனே இருப்பார்கள் என்பது நிச்சயமா என்ன? தற்சமயம் பூவாயியின் கவலை அதுவல்ல.

          விடுப்பு முடிய இன்னும் இரண்டுவார காலமே இருந்தது. அதற்குள்ளாக பிள்ளைகளுக்காக இரு நூறு ரூபாயாவது தேற்றியாக வேண்டும். ஆடுகளில் இரண்டு உருப்படிகளையோ,காளைக்கன்று ஒன்றையோ விற்கலாம்தான். பெயருக்கு அரைக்குழி நிலமும் தங்குவதற்கு கூரைவீட்டையும் தவிர சொத்தென்று வேறு எதுவும் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு ஆடு மாடுகள்தான் சொத்து.அவற்றை விற்பதா?!. அவளுக்கு அதில் உடன்பாடில்லை. அதிலும் இத்தனை  வருடங்களில் இப்பொழுதுதான் பட்டி நிறைந்திருக்கிறது. எல்லாம் செவளைப்பசு வந்த நேரம்.அந்த செவளைப்பசுவை அவளின் தம்பிகள் அவளுக்காக கொடுத்தபொழுது அது வெறும் நான்கு மாதக் கன்றுக்குட்டியாக  இருந்தது. அப்பொழுது அவர்களிடம் ஆடுகள் சில உருப்படிகள் மட்டுமே இருந்தன.

செவளைக்கன்று வந்து சேர்ந்ததும் ஆடுகள் பல்கிப்பெருகத் தொடங்கின. செவளைக்கன்று செவளைப்பசுவாகி வருடந்தோறும் ஒரு கிடாரியை பிரசவித்துக்கொண்டிருந்தது. பால்,தயிர்,வெண்ணெய்,மோர் என்று அவர்களின் தேவைகளுக்குப் போதுமான அளவுக்கு கிடைக்கவே செய்தன. அதிலும் செவளையின் மடிக்காம்பிலிருந்து பால் கறக்கும்பொழுதே பால் சொம்பில் கொழுப்பு திரண்டு ஒதுங்கும். தற்சமயம் அது பிரசவித்திருந்த வெளுப்பியும் (வெள்ளைப்பசு) கருப்பியும் (கருத்தப் பசு) கூட இரண்டு ஈற்றுகள் ஈண்டு, பிள்ளைகளின் கடந்த வருட படிப்புச் செலவிற்காக விற்கவும் பட்டுவிட்டன. ஆனால் இன்னமும் செவளை திடமாகவே இருக்கிறாள். எத்தனையோ முறை மாட்டு வியாபாரி விலைக்கு செவளைப்பசுவைக்கேட்டும் அவளும் ஐயப்பனும் ஒப்புக்கொள்ளவேயில்லை. பட்டியில் அவளுக்கென்று தனி மூலை. அவளுக்கென்று தனிக் கவனிப்பு.

       தற்சமயம் கோடைகாலமாதலால் வயல் வேலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆதலால் வருமானம் இல்லவே இல்லை. ஆடிப்பட்டம் ஆரம்பித்தவுடன் வேலைகளுக்குப் பஞ்சமிருக்காது.எப்படியும் சமாளித்துக்கொள்ளலாம். ஆதலால் ஆடுமாடுகளை விற்க வேண்டாமே என்பதுதான் அவளின் நிலைப்பாடு. ஆனால் பள்ளிக்கல்லூரிகள் வைகாசி மாதம் மூன்றாம் வாரத்திலேயே  ஆரம்பித்துவிடுகின்றன. ஆடிமாதம் தொடங்கி மழை பெய்து விதைப்பிற்கான வேலைகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே கல்விக்கட்டணங்களை செலுத்தியாகவேண்டும்.பிள்ளைகளுக்கு கைச்செலவுக்கும் கொடுத்தாகவேண்டும்.

     பெரியவனும் நடுளவனும் கோட்டை(திருச்சிராப்பள்ளி)யில் ஒன்றாக ஒரே கல்லூரியில்தான் படிக்கிறார்கள். முதல் மூன்று பிள்ளைகளும் ஆண்பிள்ளையாகிப்போனதால் பெரியவன்,நடுளவன்,சின்னவன் என்றே அழைக்க நேர்ந்தது. ஆனால் பெண் பிள்ளை வேண்டி பெற்ற அடுத்த இரு பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளாகவே போனதால்,சின்னவன் என்னும் விளி மட்டும் கடைசிப்பிள்ளைக்குப்போக இரண்டாவது பிள்ளைக்கு நடுளவன் என்னும் விளி அப்படியே தங்கிவிட்டது. பெரியவனுக்கு இந்த வருடம் கடைசி வருடம். நடுளவனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் மீதமிருக்கின்றன. பெரியவனுக்கு விடுதியில் இடம் கிடைத்திருந்தது. நடுளவனுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. ஆதலால் வாராவாரம் வீட்டுக்கு வந்து சென்றுகொண்டிருந்தான்.பெரியவன் விடுதியில் இருப்பதால் தங்குவதற்கு பிரச்சினையில்லை.சாப்பாட்டிற்கு? தனியார் தங்கும் விடுதிகள் அதிகம் தோன்றாக் காலம். இருக்கும் ஓரிரு விடுதிகளிலும் அவளால் கட்ட முடியாத கட்டணம். தினமும் சென்று வரலாம் என்றால் தினமும் இரண்டு பச்சை நோட்டுகள்(ஐந்து ரூபாய்) -உம் ஒரு சிவப்பு நோட்டும்(இரண்டு ரூபாய்) தேவை. மற்றபிள்ளைகளுக்கு படிப்பிற்கான கட்டணங்களை மட்டும் கட்டிவிட்டு கொஞ்சம்போல் கைச்செலவிற்கு கொடுத்தால் போதும்.அவர்கள் சமாளித்துக் கொள்ளுவார்கள். ஆனால் நடுளவனுக்கு மட்டும் வாராவாரம் நாற்பது ரூபாய் வேண்டுமே?. என்ன செய்ய? திங்கள் கிழமை அதிகாலையில் புளிச்சோறு நான்கு பொட்டலமும்,தக்காளிச்சோறு இரண்டு பொட்டலமும்,எலிமிச்சைசோறு இரண்டு பொட்டலமும் கட்டிக்கொடுத்து கையில் ஐம்பது ரூபாய் கொடுத்தால் பிள்ளை எப்படியும் சமாளித்துக் கொள்ளுவான். கட்டுச்சோறுகள் புதன் கிழமை வரைதான் தாங்கும். அதன்பிறகு வேளைக்கு நான்கு ரூபாய் என பிள்ளை கணக்குப்பார்த்து சாப்பிட்டுக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து விடுவான். பிள்ளை சமத்தானவன்.எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. நன்றாகப் படிக்கக்கூடியவன். கொஞ்சம்போல் தனது காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கக்கூடியவன். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்பது அவளின் எண்ணம்.இல்லையென்றால் சுமாராகப்படிக்கும் பெரியவனுக்கு விடுதியில்  கிடைத்த இடம் இவனுக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை?.

     சில சமயங்களில் விடுதியில் சோதனைகள் நடக்கும்பொழுது,பிள்ளை எங்கெங்கெல்லாமோ அலைந்து தங்கியதாக வந்து சொல்லும்பொழுது அவளுக்கு அழுகையாக வரும்.இத்தனைக்கும் கோட்டை (திருச்சி)யில் சொல்லிக்கொள்ளும்படியான சில உறவுகள் உண்டு. ஆனால், இல்லாதவர்களுக்கு எந்த உறவுகளும், இருந்தும் இல்லாத கணக்குதான். எப்படியோ ஒரு வருடம் கடந்து விட்டது.பிள்ளைகள் விடுப்பில் வேலைக்குப்போய் தங்களுக்கான துணிமணிகளை வாங்கிக்கொண்டுவிட்டார்கள். நோட்டுப்புத்தகங்கள் கூட வாங்கிக்கொண்டுவிட்டார்கள். இப்பொழுது அவள் முறை.அவள் எப்படியாவது இருநூறு ரூபாய் தேற்றிவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களை இடையில் கிடைக்கும் வேலைகளைக்கொண்டு ஒப்பேற்றிவிடலாம்.

         அவளின் ஊர் பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து மேற்குப்புறமாக சிறிய குன்றுகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சிற்றூர்.மொத்தமும்  விவசாயமும், கால்நடை வளர்ப்பும்,கல் குவாரிகளும்,ஓரிரு கிரஷர்கள் மட்டுமே வருமானத்திற்கு வழி. கிரஷர் என்றதும் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. கோடை விடுமுறையில் பிள்ளைகள் அனைவரும் கல் சுமக்க இரவில் கிரஷர்களுக்குப்போவார்கள். ஆண்களில் பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் பெண்களுக்கு ஏழு  ரூபாயும், சிறுவர்களுக்கு ஐந்து ரூபாயும் கூலி.தானும் பிள்ளைகள் மூவரும் போனால் ஒரு நாளைக்கு எப்படியும் இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் சேர்த்துவிடலாம்.ஒரு வாரம் தொடர்ந்தாற்போல் போனால் அவளின் கணக்குப்படி இரு நூறுக்கு பக்கத்தில் வந்து விடலாம்.அவளுக்கு மனம் பரபரத்தது. உடனடியாக சென்று கிரஷர்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்யும் முத்துவைப்பார்க்கப்போனாள். அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.ஏனென்றால் ஏற்கெனவே அவன் ஓரிருமுறை கேட்டபொழுது அவள் மறுத்துவிட்டிருந்தாள். காரணம் கிரஷரிலிருந்து வெளியேறும் தூசும் புகையும் உடலுக்குக்கேடுதல் என்பதும்,கூர்மையான கற்களில் பிள்ளைகள் கைகால்களைக்கிழித்துக்கொள்வார்கள்  என்பதும்தான். மேலும் இரவில் கொஞ்சம் அயர்ந்தாலும் கங்காணிகளின் கைகள் பிள்ளைகளின் மேல்பட்டுவிடும் என்பதும் ஒரு காரணம். முத்துவிடம் தெளிவாகப் பேசினாள். அவன் அவளின் தேவைகளைப்புரிந்துகொண்டு

“பெரீம்மா,நீ ஒன்னும் கவலைப்படாத.நம்மைப்புள்ளைங்க மேல கைவைப்பனா?.அதுவும் படிக்கிறப் புள்ளைங்க மேல.கூட்டிட்டு வா. இன்னைலருந்து. அடுத்த வாரமே சொளையா ரெண்டு நூறு வாங்கிக்கொடுத்துர்றேன்”என்றான்.அவளுக்கு கொஞ்சம் போல் நிம்மதி பிறந்தது.

       வீட்டிற்கு வந்தவள்,கணவனிடம் இதனைப்பற்றி கலந்தாலோசித்தாள். ஐயப்பன் முதலில் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. படிக்கிற சிறு பையன்களை இரவில், அதுவும் இதுபோன்ற கடினமான வேலைகளை செய்ய அனுப்ப ஐயப்பனுக்கு மனமில்லை.பூவாயி கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதைக் கரைத்து ஒத்துக்கொள்ள வைத்தாள்.அப்பொழுதும் ஐயப்பன் கடைசிப் பையனை அனுப்ப ஒத்துக்கொள்ளவில்லை.அவளும் பரவாயில்லை என்று விட்டுவிட்டாள்.

      ஜேசிபி போன்ற இயந்திரங்கள் இல்லாத காலமாதலால் கிரஷர்கள் மொத்தமும் மனிதர்களை நம்பியே இயங்கிக்கொண்டிருந்தது.மலையில் உள்ள பெரும் பாறைகளை வெடி வைத்து உடைத்து சிறு பாறைகளாக்கி,அவற்றை ஆப்பு வைத்து சுத்தியலால் அடித்து உடைத்து    மேலும் சிறிய பாறைகளாக்கி மலையிலிருந்து உருட்டி விட்டு, மலையடிவாரத்தில் மேலும் சிறிய துண்டுகளாக்கி ஆட்கள் சுமக்குமளவுக்கு வந்தவுடன் இலாரிகளில் ஏற்றி கிரஷர்களின் முன்பாக கொட்டி வைப்பார்கள். அவற்றை இரவு நேரங்களில் மக்களின் துணைகொண்டு கிரஷர் இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட குழிக்குள் நிரப்புவார்கள். அந்தக்குழியின் முகவாயை அடைவதற்கு சிறு மேட்டின் மேல் ஏறவேண்டும். அதுவே ஒரு சிறிய குன்றின்மேல் ஏறுவதைப்போலிருக்கும். குழிக்கு முன்பாக ஆண்கள் நின்று கற்களை தட்டுகளில் சுமந்து கொண்டுவரும் பெண்கள் மற்றும் சிறுவர்களிடமிருந்து வாங்கி குழிக்குள் கொட்டுவார்கள்.இவர்கள் கொட்டும்பொழுதே கிரஷரும் இயங்குமாதலால் கிரஷரிலிருந்து வரும் புகை மற்றும் தூசு காற்றின் போக்கில் ஆட்கள் மீதும் வந்து மோதி எதேச்சையாக திறந்திருக்கும்  கண்களையும் வாய்களையும் நிரப்பிச் செல்லும்.

           அன்றைக்கு சாயங்காலமே பிள்ளைகளைத் தயார்ப் படுத்தினாள். எட்டு மணிக்கு மாரியம்மன் கோவிலின் முன்பாக லாரி வந்துவிடுமென்பதால் ஏழரைக்கெல்லாம் அனைவருக்கும் சாப்பாடுபோட்டுவிட்டு அவளும் சாப்பிட்டாள்.எட்டு மணிக்கெல்லாம் அவர்கள் மாரியம்மன் கோயில் முன்பாக வந்தமர,எட்டரைக்கு லாரி வந்தது.அனைவரும் சுணங்கி அமர்ந்திருக்க முத்து வந்து சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்து லாரியில் உடனடியாக அனைவரையும் ஏறச்சொன்னான். அவன் உதிர்த்த வார்த்தைகளைக்கேட்கையில் அவளுக்கு சுரீரென்றது. இருப்பினும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். கடைசியாக லாரி கிளம்புகையில் ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. அதற்குள்ளாக மூன்றாமவனும் நான்காமவனும் ஒரு பாட்டம் உறங்கிவிட்டிருந்தார்கள்.இரூர் மலையையொட்டிய கிரஷருக்குத்தான் அன்றைய வேலை. ஈச்சங்காட்டிலிருந்து கூத்தனூருக்கு செல்லும் காட்டுப் பாதையை ஆலத்தூர்கேட்டிலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலை குறுக்காக வெட்டும் நாற்சந்தியின் வடக்குப்புறமாகப் அமைந்திருந்தது அந்த கிரஷர் ஒரு புறம் குங்குனுக்குன்னு, மறுபுறம் உயர்ந்து நிற்கும் இரூர் மலை. இடையில் கிரஷருக்கு வந்து போகும் லாரிகளுக்கான மண் சாலை.அதன் இருபுறமும் அடர்ந்த படுகாலமுள் காடு.கிரஷரை ஒட்டிய சிறிய மைதானம் போன்ற இடத்தில கற்குவியல்கள்.

       பத்து மணிக்கு வேலை தொடங்கியது .அந்தக் கற்குவியல்களிலிருந்து அனைவரும்சுறுசுறுப்பாக கற்களை சுமந்து சென்று கல்லுடைக்கும் எந்திரத்தின் மேலுள்ள , இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட குழிக்குள் போட ஆரம்பித்தார்கள்.பனிரெண்டு மணிவரை எந்த சுணக்கமும் இல்லாமல் வேலை நடந்து கொண்டிருந்தது. கற்களைப்போடப்போட கல்லுடைக்கும் எந்திரம் கற்களை ஜல்லி ஜல்லி யாக உடைத்துக்கொண்டிருந்தது. காற்றின் போக்கில் பெரும் புழுதியையும் வாரி இறைத்தது. அவள் பிள்ளைகளுக்கு துண்டினால் மூக்கையும் வாயையும் தளர்வாகக் கட்டி கழுத்தின் பின்பாக முடிச்சிட்டுருந்தாள். ஆனால் கண்களுக்கு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

       பனிரெண்டு மணியானபொழுது கல் சுமந்தவர்களில் கொஞ்சம் பேர் காணாமல் போய்விட்டிருந்தனர். இரண்டு மணியானபொழுது ஏறத்தாழ பாதிபேர் காணாமல் போய்விட்டிருந்தனர். முத்து காதில் கேட்கவொண்ணா வார்த்தைகளில் அர்ச்சனை செய்து, அவ்வப்பொழுது புதருக்குள்ளாக உறங்கிக்கொண்டிருந்தவர்களை இழுத்துவந்து கல்சுமக்க வைத்தான். அதிகாலை மூன்று மணியளவில் பிள்ளைகள் அவளிடம் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.அதிலும் நான்காமவன்

“ம்மா.எல்லாரும் தூங்குறாங்கம்மா. எங்களை மட்டும் நீ வேல செய்யச் சொல்லுற” என்று கத்த ஆரம்பித்தான்.

.இருப்பினும் அவள் அவனை சமாதானம் செய்து வேலை செய்துகொண்டேயிருந்தாள்.அவளுக்குப்பயம்.எங்கே முத்து நம் கண் முன்பாகவே நம் பிள்ளைகளின் மேல் கைவைத்துவிடுவானோ என்று. நான்கு மணியளவில் மீண்டும் மொத்த கூட்டமும் வந்து சேர்ந்து கொண்டது. ஆறு மணிவரை வேலை பரபரவென்று நடந்தது. ஆறுமணிக்கு அனைவரின் வருகையும் பதிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டார்கள். இரவு முழுதும் தூங்கிவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு வந்து வேலைபார்த்தவர்களுக்கும் முழு ஆட்கணக்கு கொடுத்தபொழுது அவளுக்கு என்னவோ போலிருந்தது. இந்த ஒருதடவைக்குப்பிறகு இனிமேல் இந்த வேலைக்கு  வரவே கூடாதென்றும்,பிள்ளைகளையும் வர விடக்கூடாது என்றும் முடிவெடுத்தவள்,பிள்ளைகளை லாரியில் ஏறவைத்து, மாரியம்மன் கோயிலில் இறங்கியபொழுது ஏறுவெய்யில் சுள்ளென்று உரைக்க ஆரம்பித்தது. பிள்ளைகள் இருவரும் மாரியம்மன் கோயிலிலேயே படுத்து உறங்கத் தொடங்க அவள் மட்டும் வீடு வந்து சேர்ந்தாள்.

      ஐயப்பன் அதிகாலையிலேயே எழுந்து வெள்ளிமலைக்காட்டுக்கு விறகொடிக்கச் செல்லும் வழக்கமாதலால்,பிள்ளைகளை மட்டும் கண்கள் தேடியது. மூத்தவனும் நடுளவனும் பட்டியைக்கூட்டி குவித்து வைத்துவிட்டு சமைத்துக்கொண்டிருந்தார்கள். கடைசிப்பிள்ளையான செல்லப்பிள்ளை தண்ணீர் சுமந்து கொண்டிருந்தான். அவளைக்கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவனைக்கட்டி அணைத்து முத்தமிட்டவள் அவனை மீண்டும் தண்ணீர் சுமக்க சொல்லிவிட்டு அடுப்படியிலிருந்து பெரிய பிள்ளைகளை விடுவித்து விட்டு சமைக்கத் தொடங்கினாள். வீட்டிலுள்ள அனைத்து பாத்திரங்களையும் நிரப்பிவிட்டு ஆடு மாடுகளுக்கான குடிநீர் தொட்டியையும் நிரப்பிவிட்டு,சின்னவன் பட்டியிலிருந்து குப்பை சுமக்கலானான்.வீட்டிலிருந்து குப்பை மேட்டிற்கு எப்படியும் இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும்.அங்கே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆட்டுப்புழுக்கையும் மாட்டுச்சாணமும் அங்கே குழிக்குள் அம்பாரமாய் கொட்டப்பட்டிருக்கும்.ஆடி மாதம் விதைப்பிற்கான உரம் அது.ஆடு மாடுகள் அதிக உருப்படிகளை வைத்திருக்கும் நிலமற்றவர்கள், விதைக்கும்  பருவத்தில் எருவை விற்றுவிட்டு காசாக்கிக்கொள்வார்கள்.

    அவள் சமைத்து முடித்ததும் பெரிய பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு பழையதை தூக்கு வாளிகளில் நிரப்பிக்கொண்டு மண்வெட்டி மற்றும் தகர தட்டுகளை எடுத்துக்கொண்டு லாரிக்கு ஜல்லியடிக்க கிளம்பினார்கள்.கைக்காட்டியினருகில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள அரசமரத்தினடியில் சென்று அமர்வார்கள்.கடந்த சில வருடங்களாக பருவம் கொஞ்சம்போல் பொய்த்ததால் அந்த கிராமத்தின் கூலிவேலையாட்களுக்கு லாரிக்கு ஜல்லியடிப்பதுதான் முதற்கண் வேலையாகிப்போனது. மேற்கே பழனிமலையடிவாரத்தில் ஒரு கிரஷரும்,கிழக்கே இரூர் மலையையொட்டி ஒரு கிரஷரும் தெற்கே கூத்தனூர் மொட்டக்குன்றினருகே ஒரு கிரஷரும்,தென்கிழக்காக வெள்ளிமலையடிவாரத்தில் ஒரு கிரஷரும் இருப்பதால் வேலைக்குப்பஞ்சமில்லை. ஆனால் லாரிகளின் வருகையைப்பொறுத்துதான் வருமானம்.தூரத்தில் லாரி வருகையிலேயே கூலியாட்கள் பரபரக்க ஆரம்பித்து விடுவார்கள்.லாரி நெருங்குகையில் ஓடிச்சென்று மண்வெட்டியையும் தகரத் தட்டையும் லாரியின் பின்கட்டில் எறிந்து தாவி ஏறியும் கொள்வார்கள். லாரி உடனடியாக ஏதேனும் ஒரு கிரஷரை நோக்கிச் செல்லும்.அங்கே அரை ஜல்லியோ,ஒன்றைரை ஜல்லியோ ஏற்றிவிட்டு, கைக்காசையும் வாங்கிக்கொண்டு மீண்டும் அரச மரத்தடியிலேயே லாரியில் வந்து இறங்கிக்கொள்வார்கள். ஆறு பேருக்குமேல் அவர்களின் வாய்மொழி ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்படுவதில்லையாதலால் மற்றவர்கள் அடுத்த லாரி வரும் வரை காத்திருக்க வேண்டும்.இப்படியாக ஒரே நாளில் குறைந்த பட்சம் நான்கு லாரிகளாவது கிடைக்க வேண்டும் அப்பொழுது தான் இருபது ரூபாய் கிடைக்கும். அதில் மலைக்கடை சாராயக்கடையில்  செலவழித்ததுப்போக வீட்டிற்கு  குறைந்தபட்சம் பத்துரூபாயேனும் தர இயலும்.பூவாயியின் பிள்ளைகளுக்கு குடிக்கும் பழக்கம் தற்சமயம் இல்லையென்பதால் மொத்தத்தையும் கொண்டுபோய் ஐயப்பனிடம் தந்துவிடுவார்கள். கல்லூரியில் படிக்கின்ற பிள்ளைகளை கூலி வேலைக்கு அனுப்புமளவுக்கு தமது குடும்ப சூழ்நிலை இருப்பதை எண்ணியவளுக்கு வேறு வழி இல்லையென்பதும் சட்டென்று உறைத்தது. ஆனால் என்ன?! இன்னும் ஓரிரு வருடங்களில் பிள்ளைகள் பட்டம் பெற்று நல்ல ஒரு வேலைக்குப்போனால் எல்லாம் மாறிவிடப்போகிறது என்று அவளின் மனதைத் தேற்றிக்கொண்டாள்.

    அப்பொழுது பக்கத்து வீட்டு அங்கம்மாள் வந்து அவளை விதைக்கு வெங்காயம் உடைக்கக் கூப்பிட்டாள். சின்னவனை சாப்பிடச் சொல்லிவிட்டு, மாரியம்மன் கோவிலிருந்து பிள்ளைகளை எழுப்பிக்கூட்டிவந்து சாப்பிடச் சொல்லி விட்டு,தானும் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு மத்தியானத்திற்கு தூக்குவாளியில்  கொஞ்சம்போல் பழையதை எடுத்துக்கொண்டு, கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சுவதைப் புறந்தள்ளிவிட்டு கிளம்பினாள். வேறு வழி?! எப்படியாவது ஒரு இருநூறுரூபாய் தேற்றியாகவேண்டுமே?

   அங்கம்மாள் அழைத்துப்போன இடத்தில இன்னும் ஒருவாரத்திற்கு வேலையிருக்கும் என்பதறிந்து மகிழ்ச்சி கொண்டாள்.மாலை நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்தவள் கொஞ்சம் போல் உறங்கினாள் .விளக்கு வைக்கும் நேரத்திற்கு எழுந்து சமைக்க ஆரம்பித்தவள் பிள்ளைகளையும் தயார்ப்படுத்தினாள்.அன்றைக்கும் அடுத்த நான்கு நாட்களும் அவளுக்கு ஒரே சுழற்சியில் எல்லாம் நடக்க, கிரஷர் வேலைக்கு போக ஆரம்பித்த ஆறாம் நாளில் அவளுக்கு கொஞ்சம் போல் உடல் களைப்பதாக உணர்ந்தாள்.இருப்பினும் இன்று ஒருநாள் மட்டும் போய் விட்டு வந்தால் போதும் என்று முடிவெடுத்து, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அன்றைக்கும் லாரியில் ஏறிக்கொண்டாள்.அன்றைக்கு கொஞ்சம் போல் கூட்டம் அதிகமாகயிருந்தது.

        அன்றைக்கு இரவும் அதே போல்தான் அனைத்தும் நிகழ்ந்தன. அவளும் பிள்ளைகளும் எந்தத் தொந்திரவும் தராமல் வேலை செய்வதால், முத்து அவர்கள் பக்கம் வருவதையே தவிர்த்திருந்தான்.அதிகாலையில் வேலை நெறிபிரியாக நடந்து கொண்டிருந்தது.எல்லாம் முடிந்து வருகைப்பதிவு கணக்கெடுக்கையில் முத்து அவளிடம் “பெரீம்மா, இந்தக் குவியல மட்டும் கொஞ்சம் அள்ளிப்போட்டிரு” என்றவாறே வருகைப்பதிவைப் பதிய ஆரம்பித்திருந்தான்.பிள்ளைகள் கொஞ்சம் போல் தூரத்தில் இருந்ததால் இவள் மட்டும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே இருந்த அந்த சிறிய குவியலிலிருந்து கற்களை எடுத்துக்கொண்டு போய் குழிக்குள் போட ஆரம்பித்தாள். கற்கள் கொஞ்சம் பெரிய அளவில் இருந்ததால் கூத்தனூரிலிருந்து கல் சுமப்பதற்காக வந்திருந்த பெண்மணி அவளுக்கு உதவுவதற்காக வந்தாள்.எல்லாக்கல்லையும் போட்டபின் எஞ்சியிருந்த பெரியக்கல்லை இருவரும் தூக்கினார்கள்.தூக்கி பூவாயியின் தலையில் வைப்பது என்பதுதான் ஏற்பாடு. ஆனால் கடைசி கால்வினாடியில் அந்தப் பெண்மணியின் கைதவற,கல் பூவாயியின் வலது கால் பெரு விரலில் விழ,பெருவிரலின் நகக்கண் அப்படியே நசுங்கிப்போனது. “ஐயோ!! அம்மா!!!” என்று காலைப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தவளுக்கு தலை கிறுகிறுவென்றது.பிள்ளைகள் ஓடிவந்து அவளைத் தாங்கிப்பிடித்துக்கொண்டார்கள். கூத்தனூர்ப் பெண்மணி கொஞ்சம்போல் நுரைப்பூண்டின் சாற்றை காயம்பட்ட இடத்தில் பிழிந்துவிட்டவள் அப்படியே கொஞ்சம்போல் நுரைப்பூண்டின் இலைகளை நுணுக்கி காயத்தில் வைத்துக் கட்டிவிட்டாள். முத்து வந்து பார்த்தவன் “கொஞ்சம் பாத்து இருக்கக்கூடாதா பெரிம்மா? ஒன்னும் பிரச்சினை இல்ல.ஊட்டுக்குப்போனவொடன கொஞ்சம்போல் மஞ்சத் தூளு வச்சிக்கட்டு சரியாப்போய்விடும்” என்றவாறே அவனது வேலையைப்பார்க்கப் போனான்.அவளுக்கு மயக்கம் வருவதைபோல் இருக்க பிள்ளைகளின் துணையுடன் லாரியில் ஏறி சுருண்டு படுத்தாள்.இது போன்ற காயங்கள் அங்கே வழக்கமான ஒன்றானதால் ஆளாளுக்கு ஏதோ ஒரு கைவைத்தியம் சொன்னார்கள்.

     பூவாயி வீட்டிற்கு வந்ததும் ஒரு ஓரமாக பழம்பாயைப் போட்டுப்படுத்தாள்.அப்படியே உறங்கியும் போனாள்.பிள்ளைகள் காலையுணவிற்கு எழுப்பியது எங்கோ தூரத்தில் கேட்பதைப்போல் இருந்தது.ஆனால் அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை.பெரு விரலில் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மதியம் போல் கண்விழித்தபொழுது கால் முழங்கால் வரை யானைக்கால் போல் வீங்கியிருந்தது.அவளால் எழுந்து அமரக்கூட முடியவில்லை.

    சொந்த பந்தங்களின் விசாரிப்புகள் தொடங்கின.வருவோர் அனைவரும் ஒவ்வொரு பக்குவம் சொல்ல, அவைஅனைத்தும் உடனடியாக செய்துபார்க்கப்பட்டன. என்னென்ன கை வைத்தியங்கள்?! நுரைப்பூண்டு, களிமண், சீமை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மஞ்சள், நாட்டுச்சர்க்கரை, சுடவைத்த தவிடு இன்னும் என்னென்ன? எல்லாம் செய்தாகிவிட்டது.ஆனால் சரியாகவில்லை. வீக்கம் வற்றியபாடில்லை. நசுங்கிய நகக்கண்ணில் சீழ் வைத்துவிட்டது கடைசியாக மாட்டுவண்டியில் செட்டிகுளம் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று அங்கிருந்து மேலும் பெரம்பலூர் சென்று,இரண்டு மூன்று ஊசிகள் போட்டபின் வீக்கம் வடிந்தது. செலவுகள் எவ்வளவு ஆனது என்று அவளுக்குத் தெரியவில்லை.எப்படியும் கிரஷருக்குப் போய் சம்பாதித்தது மொத்தமும் வண்டி வாடகைக்கேப் போயிருக்கும். செலவைக்குறைக்க பல கைவைத்தியம் பார்த்ததே தவறாகி அதுவே செலவை ஏற்றிவிட்டிருந்தது. அவள் வீட்டிற்கு வந்தபொழுது பிள்ளைகள் படிக்கக் கிளம்ப இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்தன.அவளுக்கு ஆயாசமாக இருக்க, ஒரு ஓரமாக சுருண்டு படுத்தாள். ஐயப்பன் எதுவும் சொல்லவில்லை. சமாளித்துக்கொள்ளலாம் என்றே அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

     அன்றைக்கு,பிள்ளைகள் அனைவரும் கல்லூரிக்கும்  பள்ளிகளுக்குமாக அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். பெரியவனுக்கு நூறு (மீண்டும் அடுத்த விடுமுறையில் தான் வீட்டிற்கு வருவான் என்பதால்),நடுளவனுக்கு நாற்பது,மூன்று மற்றும் நான்காம் பிள்ளைகளுக்கு ஆளுக்கு பதினைந்து எனக் கொடுத்தான் அய்யப்பன். அடுத்த இரண்டுமாத செலவுகளுக்காக அய்யப்பன் அவளிடம் முன்னூறு ரூபாயைக்கொடுத்தபொழுது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அவள் ஒன்றும் பேசாமல் வேகவேகமாக பிள்ளைகளுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொண்டிருந்தாள்.கையில் கட்டுச்சோற்றுப் பையைக்கொடுத்து புள்ளம்பாடிச்செல்லும் வீரக்குமாரில்(ஆலத்தூர் கேட்டில் இறங்கி திருச்சி செல்லும் பேருந்திற்கு மாறவேண்டும்) இருவரையும், மூன்றாவது பையனை துறையூர் செல்லும் கதிரவனிலும்(செட்டிகுளத்தில் இறங்கி பெரம்பலூருக்கு செல்லும் பேருந்துக்கு மாறவேண்டும்) ஏற்றிவிட்டு, வீட்டிற்கு வருகையில் கடைசி இரண்டு பிள்ளைகளும் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.சின்னவன் உள்ளூர் பள்ளிக்கு ஆயத்தமாக நான்காமவன் செட்டிகுளம் பள்ளிக்கு நடக்க ஆரம்பித்திருந்தான். அவ்வளவுதான்.வீடு வெறிச்சென்று ஆகிப்போனது. ஐயப்பன் ஆடு மாடுகளை ஓட்டிச்செல்ல எப்படியும் பத்துமணிக்கு மேலாகும். சாப்பிட்டுவிட்டு பழையது கொஞ்சம்போல் தூக்குவாளியில் எடுத்துக்கொண்டு, கால் நொண்டிக்கொண்டிருந்த ஆடொன்றுக்கு கைவைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த ஐயப்பனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.பட்டியில் வழக்கமாக களைக்கொத்தி வைத்திருக்கும் இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு திரும்பியவள், செவளைப்பசு நின்றிருந்த இடம் வெறுமையாய் இருப்பதைக்கண்டு .கொஞ்சம் போல் விக்கித்து நின்றவள், வழியும் கண்களைத் துடைத்துக்கொண்டு அவளுக்கு மட்டுமே கேட்கும்படியான ஒப்பாரியோடு, அன்றைய வேலைக்கான வயலை நோக்கி வேகவேகமாக  நடக்க ஆரம்பித்தாள்.

00

பிறைநுதல்

இயற்பெயர் :சு.சந்திரசேகரன்.

பெற்றோர் : செ.சுப்ரமணியன் &பூவாயி

குடும்பம் :சுந்தரி(மனைவி),பிறைநுதல் (மகள்),குயின்மொழிஐயள் (மகள்)

ஊர் :நாட்டார்மங்கலம் ,ஆலத்தூர் வட்டம்,பெரம்பலூர் மாவட்டம்

படிப்பு :பொறியியலில் இளங்கலைப் பட்டம் (அமைப்பியல் துறை)

பணி : தற்சமயம் தெலுங்கானாவில் ஒருதனியார் நிறுவனத்தில்

வயது : 45

ஆக்கங்கள் : சொல்வனம்,பதாகை,வாசகசாலை மற்றும் பண்புடன் இணைய இதழ்களில்

இதுவரை பதினைந்து சிறுகதைகள் மற்றும் எட்டு கவிதைகள்

வெளியாகியிருக்கின்றன..அமேசான் கிண்டிலில் ஒரு புதினம் (தொலைந்(த்)த முகவரி)

வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *