மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் – தொடர் 3

தயாஜி

சித்துராஜ் பொன்ராஜின் நாவல் – ‘பெர்னுய்லியின் பேய்கள்

 இந்தத் தொடரின் முதல் புத்தகமே எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் எனும் சிறுகதைத் தொகுப்பைத்தான் வாசித்தோம். இன்றைய தொடரில் அவரது நாவல் ஒன்றைப் பார்க்கவுள்ளோம்.

 உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா? நேரடியான அனுவத்தை வைத்து பதிலைச் சொல்கிறீர்களா அல்லது மற்றவர் சொன்ன கதைகளை வைத்து உங்கள் பதிலைச் சொல்கிறீர்களா?.

 நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இந்தப் பேய்க்கதைகள் பயத்தைக் கொடுத்தாலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் சுவாரஸ்யமானவை. சொல்லப்போனால் நம்மை ஒருமுகப்படுத்தி முழு கவனத்தை அதன் பக்கம் இழுத்து கொள்வது பேய்க்கதைகளால் ரொம்பவும் சாதாரணமாக முடிந்துவிடுகிறது.

 ‘பெர்னுய்லியின் பேய்கள்’ நாவலை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் எழுதியுள்ளார். இந்நாவல் 2016-ம் ஆண்டு வெளிவந்தது. அகநாழிகை பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்நாவல் எட்டு அத்தியாயங்களையும் 117 பக்கங்களையும் கொண்டுள்ளது. இது ஆசிரியரின் முதல் நாவல். சிங்கப்பூர் பாரம்பரிய பேய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்களின் வரிசையில் இந்த நாவலையும் சேர்க்கலாம். பேய் இருக்கிறதா இல்லையா என்கிற வழக்கமான கேள்வியை பின்புலமாகக் கொண்டு வழக்கத்திற்கு மாறாக நகரும் நாவல்.

 பேய் ஓட்டுகின்றவரின் மகளான  மேனன், ‘பாரம்பரிய சிங்கப்பூர் பேய்கக்கதைகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்யும் புஷ்பலதா, காலேஜ் படிக்கும்  தாரா அவளது தோழி, பந்தினி என்னும் இறந்தவர்களுடன் பெசுகின்ற ஊடாடிகளின் குடும்பத்தில் பிறந்த ஆப்பரிக்க பெண், பீட்டர் யூ, ஹுசேன் ஆத்தா போன்ற குறைந்த கதாப்பாத்திரங்களச் சுற்றியே நாவல் நகர்கின்றது.

 ஆவிகள் பேய்கள் போன்ற அமானுஷ்யங்களை மட்டுமல்ல அறிவியல் தகவல்களையும் இடத்திற்கு ஏற்றார் போல ஆசிரியர் கையாண்டுள்ளார். ஆனால் இரண்டையும் சம அளவில் பயன்படுத்திய பின்னணியில் ஒரு காரணத்தையும் வைத்திருக்கின்றார். அதில்தான் இந்நாவலில் அடிநாதமே இருக்கிறது.

 நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு கதை இருக்கிறது. ஒரு குறும்புக்காரர் தான் சட்டைப்பையில்  வைத்திருக்கும் குருவி உயிடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என சொல்லச் சொல்லி ஒரு போதகரிடம் கேட்பார். அவர் அந்த குருவி உயிருடன் உள்ளது என்று சொன்னால் அந்த நபர் குருவியைக் கொன்றுவிடுவார். போதகர், அந்த குருவி இறந்துவிட்டது என சொன்னால், அந்நபர் அந்த குருவியை உயிருடன் எடுப்பார். மொத்தத்தில் அந்த போதகரை ஏமாற்றுவதுதான் அந்த நபரின் திட்டம்.

 அதோ போல ஒரு விளையாட்டை இந்நாவலில்  பார்க்க முடிகின்றது. பேய் என்பது இல்லை என நாம் நினைக்கும் போது ‘இதோ என்னமோ இருக்கிறது’ என பயம் காட்டுகிறார் ஆசிரியர். பிறகு இந்தப் பேய்கள் பிசாசுகள் எல்லாம் இருக்கின்றன  என நாம் நினைக்கும் போது ‘அப்படியெதுவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’ எனவும் நம்மை  யோசிக்க வைக்கின்றார். இந்த விளையாட்டு நாவலின் கடைசி வரி வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

 பேய்க்கதைகளில் பயம் காட்டுவது மட்டும் முக்கியமல்ல வாசிக்கின்றவர்களை பயத்தில் வைத்திருப்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைத்து அதனை நகர்த்தி வைத்துவிட்டு அதற்கு ஈடாக இன்னொன்றை காட்டுவது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டுகின்றது.

 வழக்கமான பேய்க்கதைகளில் இருந்து இந்த நாவல் மாறுபட்ட வாசிப்பிற்கு ஏற்றது. முதலில் ஏமாற்றம் தரலாம். ஆனால் கதை நகர நகர நம்மையும் உள்ளுக்குள் இழுத்துவிடுகிறது. நம்மையும் தேட வைக்கின்றது. நாவலில் வரும் ஒவ்வொருவரின் மீதும் நம் கவனத்தை கொடுக்க வைக்கின்றார் ஆசிரியர்.

 வித்தியாசமான கதைக்களம். மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் அதன் சிக்கல்களையும் எதார்த்தமாக காட்டியுள்ளார்.

 நாவல் சில இடங்களில் சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’ நாவலை எனக்கு நினைவுப்படுத்தியது. ஆனால் ‘பெர்னுய்லியின் பேய்கள்’ முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்ததை மறுப்பதற்கில்லை.

 இந்த நாவலைக் குறித்து மேற்கொண்டு எதை சொன்னாலுமே இதனை வாசிக்கும் வாசகர்களின் ஆவலை கெடுத்துவிடும். ஆகவே  உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் பேய்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும்; உங்களுக்கு கூடுதலாக நேரம் இருக்கும் பட்சத்தில் இந்த நாவலை வாசித்துவிடுங்கள்.

உங்களுக்குள் சில கேள்விகளை வைக்கும் இந்நாவல்; பின் மெல்ல மெல்ல அந்த கேள்விகளின்  முடிச்சை அவிழ்க்கவும்  செய்யும். ஒருவேளை உங்களுக்கு திறன் இருந்தால் அந்த முடிச்சுகளை இந்நாவல் அவிழ்க்கும் முன் நீங்களே அவிழ்த்து காட்டி உங்களைப் பாராட்டி கொள்வீர்கள். அந்தப் பாராட்டுக்கு நீங்கள் தகுதியானவர்தான் என்ற  நம்பிக்கையில் எனக்கு  தெரிந்த அந்த முடிச்சுகள்  குறித்து நான் இந்தத் தொ டரில் அதிகம் சொல்லவில்லை.

பேய் இருக்கிறதா இல்லையா என்று சொல்லுவதைவிட எப்படியெல்லாம் பேய்களை வைத்து எப்படி  வித்தை காட்டாலாம், அந்தப் பேய்களை எப்படி  விரட்டலாம் என்றும் அதே  பேய்களை எப்படியெல்லாம் நாம்  உருவாக்கலாம் எனவும் சொல்லாமல் சொல்கிறது சித்துராஜ் பொன்ராஜின் ‘பெர்னுய்லியின் பேய்கள்’.

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *