பூங்குழலின் வீரனின்நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்

            முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். எனக்கே எனக்காகவும் அதனை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. என்றாவது ஒருநாள் அது மாறுமா என்கிற எதிர்ப்பர்ப்பும் தேடல்களும் இருக்கவேதான் செய்கிறது.

 அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அந்த விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன்.

இன்னொன்றையும் இங்கு சொல்லிவிட நினைக்கிறேன். வார்த்தை ஜாலங்களிலான கவிதைகளோ தத்தம் தமிழ்ப் புலமையைப் பறைசாற்ற நினைக்கும் கவிதைகளோ என் வாழ்வின் விடுபட்ட இடத்தை நிரப்பவோ மீண்டும் நினைவுகூரவோ உதவவில்லை. அதன் சொல்லாடல்களைக் கொஞ்சநேரம் ரசிக்கலாம். இன்னும் போனால் ‘அட’ என பிரமிக்கலாம். வெறுமனே அத்தகைய பிரமிப்புகளைச் சிலாகித்து ஏமாற்றமடையும் வாசகன் மீது பாவப்படாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அந்த வாசகனால் மீண்டும் மீண்டும் அந்தக் கவிதையை மட்டுமே வாசித்து காட்ட முடிகிறதே தவிர அது தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபோதும் சொல்ல முடிவதில்லை. ஒரு கவிதையை அப்படியே மனனம் செய்து வாசிப்பதும்; அந்தக் கவிதை தனக்குள் ஏற்படுத்தி மாற்றத்தைச் சொல்வதும் வெவ்வேறுதானே.

கவிஞர் அறிமுகம்

பூங்குழலி வீரன், மலேசியாவில் இயங்கிவரும் பல்தரப்பட்ட அரசு சாரா நிறுவனங்களில் மாணவர்களை மையப்படுத்தும் கல்விசார் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் செயல்பாட்டாளர்.

மலேசியா, பேராக் மாநிலத்திலுள்ள செலாமாவில் பிறந்த இவர், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் மலேசிய வானொலி செய்திப் பிரிவின் பகுதிநேர தமிழ்ச்செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர்.

      இதுவரையில் ‘உயிர் வேட்டை’(2006), ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’ (2013), ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ (2013), ‘அகப் பறவை’ என்ற நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தத் தொடரின் தொடக்கத்தில் கவிஞர் பூங்குழலியின் ‘அகப் பறவை’ கவிதைத் தொகுப்பைக் குறித்து எழுதியுள்ளேன். இம்மாத தொடரில் கவிஞரின்  ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ கவிதைத் தொகுப்பின் சில கவிதைகளைப் பார்ப்போம். வாய்ப்பு இருப்பின் அவரது மற்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் என்றாவது ஒருநாள் பார்ப்போம்.

      ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்பது தலைப்பு. வல்லினம் பதிப்பகம் இதனை பதிப்பித்திருந்தார்கள். நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றிற்கும் அதற்கான காரணங்களும் என இதனை புரிந்து கொள்ளலாம். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள்  நிகழ்காலத்தையே மையமிட்டுள்ளன.

பூங்குழலியின் கவிதையுலகை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (‘உயிர் வேட்டை’ என்கிற கவிதைத் தொகுப்பில் ஈழப்போர் குறித்து இவர் எழுதியிருப்பதை நான் இன்னும் படிக்காததால், இத்தொகுப்பின் கவிதைகள் மற்றும் அவரது இன்னபிற கவிதைகளை வைத்துச் சொல்கிறேன்.) ஒன்று குழந்தைகளால் சூழ்ந்திருப்பது இன்னொன்று காதலில் தொடங்கி எல்லாவற்றிலும் ஏமாந்து நிற்பது. ஒன்று அக உலகம் இன்னொன்று புற உலகம். அக உலகம் குழந்தைகள் காதல் சார்ந்தும். புற உலகம் போர் சார்ந்தும் இருக்கிறது. அக்கவிதைள் சில சமயங்களில் தனிமனித குரலாகவும் அவன் கொண்டுள்ள வலியாகவும் வந்து நிற்கிறது. போர் என்பது இரு நாடுகளுக்கு மட்டுமே நடப்பதில்லைதானே.

ஒருபக்கம் குழந்தைகளின் குதூகலம். இன்னொரு பக்கம் விரக்தி ஏமாற்றம் என இருக்கிறது. இரண்டுக்குமான இடைவெளியை எப்படி புரிந்து கொள்வது. அந்த இடைவெளியை கவிஞர் பூங்குழலி எதனைக் கொண்டு நிரப்பிக்கொள்கிறார் என யோசிக்கவிடாமல் இரு பக்கங்களிலும் கவிதைகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.


     ’மிகப்பிடித்த ஒருவனின் புகைப்படம்’ என்ற கவிதை. அண்ணனின் புகைப்படம் குறித்து சொல்கிறார். பின்னர் நாமும் நமது புகைப்படமாக அதனை நினைத்துக் கொள்கிறோம். அதனையொட்டி அவர் எழுதியிருப்பதெல்லாம் நம்மையும் புகைப்படத்தில் ஒரு பகுதியாக ஆக்கிவிடுகிறது. நிறைவாக, ‘அவன் இறந்து  போன அன்றும்’ என்ற வரிகளுக்கு பின் சட்டென நம்மை அந்த புகைப்படத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்ள வைக்கிறார். இதுவரையும் குழந்தைபோல கொண்டாட்டம் கொண்ட மனது பாரமாகிறது. இறந்து போய் புகைப்படங்களாக இருப்பவர்கள் வளர்வதை நிறுத்திவிட்ட செய்தி எத்தனை துக்ககரமானது. அந்தக் கவிதையை நீங்கள் வாசிக்க வேண்டாமா;

மிகப்பிடித்த ஒருவனின் புகைப்படம்

அண்ணனுக்கே மிகப்

பிடித்த

அவனின் புகைப்படம் 

அது

எதையோ வென்று முடித்த

ஒரு மர்மப் புன்னகையுடன்  

அந்தப் படம் அத்தனை அழகு

என் தோழிகள்கூட  அந்தப்

படத்தைப் பார்த்து

அவன் மீது பிரியப்பட்டிருந்தார்கள்

ஒரு வெட்கப் புன்னகையுடன்

அதைக் கடந்து போயிருக்கிறார்கள்

வீட்டுக்கு வந்தவர்கள்

அவன் வளர்ந்துவிட்டதாக சொல்வார்கள்

அவன் இறந்துபோன அன்றும்

அதே படத்தைக் கொஞ்சம் பெரிதாக்கி

தம்பி சட்டகத்தில் இட்டுவர

சுவரில் மாட்டினேன்

இப்போது அவன் வளர்வதை நிறுத்தி விட்டிருந்தான்

மர்மப் புன்னகை ஒரு கொலைவெறிபோல்

அவன் உதடுகளில் உறைந்திருந்தது

முக்கியமாக என் தோழிகள் அவனைக் கடந்து போகவில்லை.


     அடுத்த இரண்டு கவிதைகளில் ஜென் பாணி இருப்பதைப் பார்க்கிறேன். பூங்குழலிக்குத் தத்துவம் கைகூடியுள்ளது. அதற்கு அவர் விரும்பும் குழந்தைகள் உதவியிருக்கிறார்கள். ‘நாயொன்று இறந்தது குறித்த கதை’ எனும் கவிதை அது. இறந்துவிடுவதை அல்லது மரணத்தைக் கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாத குழந்தை இறந்த நாய் குறித்து சொல்கிறது. குழந்தைகள் நம்பும் பொய்யான உலகத்தை நாம் நம்புவது அத்தனை சாதாரணமல்ல அதற்கு குழந்தைக்கு இணையான மனம் வாய்க்க வேண்டும். அந்த மனம் கள்ளம் கபடமின்றிச் சிரித்திட வேண்டும். இல்லாத நாய் குறித்தும் அதன் இறப்பு குறித்தும் சொல்லிய குழந்தை தூங்கிவிட்டது. ஆனால், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அந்த நாயைத் தேடி அலைவதென்பது ஜென் நிலையாக அல்லாமல் என்னவாக இருக்கும்

அக்கவிதை இப்படியாக முடிகிறது;

நாய் இறந்தது குறித்து

சொல்லாமலேயே தூங்கிப் போயிருந்தாள் குழந்தை

சாரல் வழியும் சன்னலை மூடி விட்டு

படித்த பக்கங்களுக்கு அடையாளமிட்டு

தெருவில் நடந்து கொண்டிருந்தேன்

பாலத்தைக் கடந்து

கொண்டிருக்கும் நாயைத் தேடி.


     இன்னொன்று, ‘எறும்பு’ என்னும் கவிதை. அன்றாட வாழ்வில் பட்டும்படாமலும் இருக்க நினைக்கும் மனிதன்தான் தன் மீது அனைத்து ஆசாபாசங்களையும் போட்டுக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான். இக்கவிதையில் சொல்லப்படும் எறும்பைப் போல நிகழ்காலத்தில் வாழ்வை ரசிக்கும் மனம் கொண்டவர்களைச் சந்திப்பது அத்தனை சாதாரணமல்ல.

எறும்பு

சலனமற்றிருக்கும்

அறை

காற்று வாழ்வளித்த

வெறியில் அசைந்து

கொண்டிருக்கும்

திரைச்சீலை

வெறுமையைச் சுமந்தபடி

அறை நாற்காலி

வாசித்து

முடித்த

வரிகளை

மீண்டும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும்

அடுக்கி

வைக்கப்படாத

புத்தகங்கள்

இவை எதிலும்

சம்பந்தப்படாமல்

அலைந்துகொண்டிருக்கும்

ஓர்

எறும்பு.


    ‘அது ஒரு தற்கொலை’ என்னும் கவிதை, வாழ்வு குறித்த அர்த்தங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குழந்தைகளை ரசித்த பின்பு இவ்வாறான கவிதைகளைப் படிக்கையில் பதட்டமும் பயமுமே மனதில் தேங்கி நிற்கிறது.

இப்படியாக அக்கவிதையை முடித்திருப்பார் கவிஞர்;

உயிர் கருகும் வாசம்

கந்தக நெடி

அரை நிர்வாணங்கள்

முழு நிர்வாணங்கள்

கண்ணீர்

பிணம்

எனக் கனத்துக் கிடந்த பக்கங்களைக் கழித்துக்கொண்டே

வந்தது

கழித்துக் கழித்து

களைத்து நிமிர்கையில் பக்கங்கள் ஏதுமின்றி

தனித்துக் கிடந்தது வரலாறு

நாள் சம்பவங்களுடன்

ஒருவன் எழுதத் தொடங்கி இருந்தான்

அது ஒரு தற்கொலை என


    மரணம் மீது குழலிக்கு இருக்கும் ஈடுபாடு வியப்பைக் கொடுக்கிறது. ‘மரணத்தின் கோப்பை’ என்பதில் இரு மரணித்தவர்கள் குறித்துப் பதிவு செய்கிறார். மரணத்துக்குப் பின்பான வாழ்வு இறந்தவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அவர்களை இழந்த நமக்கு அவர்களுக்கு பின்பான வாழ்வு இருப்பதைக் காட்டுகிறது. அக்கவிதையை முழுமையாக வாசிப்போம்;

மரணத்தின் கோப்பை

கோப்பைகளில் மிதந்துகொண்டிருந்தன

மரணங்கள்

விபத்தில் இறந்துபோன

அப்பாவின் மரணமும்

ஒரு தற்கொலையென கருதப்பட்ட அண்ணனின்

மரணமும்கூட அதில்தான் மிதந்தபடி இருந்தன

மரணமும் மரணமும்

ஒன்றோடொன்று ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமல்

ஒவ்வொரு புறத்தே ஒதுங்கியிருந்தன

எப்போதும்

விவாதித்துக்கொண்டிருக்கும்

அண்ணனும் அப்பாவும்கூட ஆளுக்கொரு

மூலையில் மௌனித்திருந்தனர்

மரணங்கள் நட்புப் பாராட்டுவதில்லை

சிரித்துக்கொள்வதுமில்லை

கோப்பைகளீல் மிதந்தபடி இருந்தாலும்

அவை தேநீர் அருந்தவில்லை

யாருமறற பிரதேசத்தில் தனித்திருப்பது போல

மரணங்கள் தனித்திருந்தன.


   ‘நிமிர்வு’ என்ற கவிதையை வைத்து நல்லதொரு சிறுகதையை எழுதிவிடலாம். ஆனால் ஏனோ கவிஞர் இன்னும் சிறுகதை எழுதவில்லையென்றே நினைக்கிறேன். நமது அனைத்துவிதமான இரகசியங்களையும் நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பது நமது அறைதான். அப்படியான அறைக்குள்ளே நாம் வர பயப்படுகிறோமெனில் ஆகக் கடைசியாக நமக்கே நாம் துரோகம் செய்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது அந்த மாற்றத்திற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்.

நிமிர்வு

காரணங்களைப் புதைத்தபடி

கனத்துக்கிடக்கிறது

எனது அறை

வார்த்தைகளைத் துறந்தபடி

அமைதியில்

ஆழ்ந்திருக்கிறது

சுவர்கள்

காற்றைத் தந்தபடி

எப்போதும்போல்

சன்னலும்

கதவும்

நுழையத்தான் முடியவில்லை

என் அறைக்குள்

நான் நானாக


    ‘அவனைச் சுற்றி யாருமில்லை’ என்ற கவிதையில் தன்னையே கவிஞர் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். ஒருபக்கம் பொருளாதாரம் இன்னொரு பக்கம் அதற்கான ஓட்டம் என இருந்தும் தன் வாழ்வின் பக்கங்களைக் கவிதைகளாக பூங்குழலியால் எப்படி நிரப்ப முடிகிறது என இக்கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் புகைப்படக்காரன் காட்டிவிடுகிறான். காரணங்கள் எத்தனை சொன்னாலும் நாம் விரும்பினால் எத்தகையக் காரியங்களைச் செய்துவிட முடியும் என்பதை நினைவூட்டும் கவிதை இது.

அவனைச் சுற்றி யாருமில்லை

ஒரு தேர்ந்த

புகைப்படக் கலைஞனை

அவதானித்துக்கொண்டிருக்கிறேன்

அவனைச் சுற்றி

யாருமில்லை அவனைத் தவிர

மக்கள் திரளுக்கு மத்தியில் ஒரு புள்ளியாய்

அவன் ஊர்கிறான்

எல்லாரும் அவனை நோக்கியபடி

இருக்கிறார்கள்

அவன் எல்லாரையும் கட்டத்தில் இட்டு

வைத்துக்கொள்கிறான்

அவனது கண்ணசைவுகளுக்குள்

அனைவரும் இயங்குகிறார்கள்

அவனைச் சுற்றி யாருமில்லை.


    கவிஞர் பூங்குழலி சொல்லி வரும் கவிதைகளில் இருக்கும் காதலில் ஏக்கமும் ஏமாற்றமும் நம்மையும் தொந்தரவு செய்கிறது. ஒருபோதும் வெற்றியடைந்த மகிழ்ச்சியை, அவரது காதலைச் சொல்லும் கவிதைகளில் காண முடிவதில்லை. இது பலவீனமா என்றால் அப்படியும் இருக்கலாம். ஆனால் அந்த நிலையைக் கவிதைகளாக்குவது அவரது பலமே.

 குழந்தைகளுக்கான கவிதைகள் கடினமின்றி எழுதிவிடலாம். அதனை குழந்தைகள் வாசிக்க இலகுவாக எழுதுவது அத்தனை சிரமமான காரியமல்ல. ஆனால் கவிதைகளில் குழந்தைகளை எழுதுவது சுலபமல்ல. மனதில் எப்போதும் வாழும் குழந்தை இருந்தால் மட்டுமே அப்படியான கவிதைகள் சாத்தியம். பலர் பல காரணங்களைச் சொல்லித் தங்களுக்குள்ளே கொன்றுவிட்ட குழந்தை, பூங்குழலியின் மனதில் குழந்தையாகவே இருப்பது வாசகனாக எனக்கும் மகிழ்ச்சிதான். நானும் எனது குழந்தைப் பருவத்திற்கு அவரின் உதவியுடன் சென்று வருவேன். சொல்லப்போனால் குழந்தைகளுடன் எப்படி பேச வேண்டுமெனவும் தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன்.


   இவ்வாறு பல கவிதைகள் கொண்ட தொகுப்புதான் ‘நிகழ்தலும் நிகழ்தலின் நிமித்தமும்’
நிறைவாக சொல்வது என்னவெனில்; மலேசிய கவிதைச் சூழலில் நாம வாசிக்க வேண்டிய கவிதைகளில் கவிஞர் பூங்குழலி வீரனின் கவிதைகளுக்கும் இடம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மீண்டும் அடுத்த மாதம் மேலுமொரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.
000

தயாஜி

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

One thought on “மாதம் ஒரு மலேசிய புத்தகம்-10

  1. பூங்குழலி வலிய போய் விளம்பரம் தேடிக்கொள்வதில்லை. அவரின் நல்ல கவிதைகளே அவருக்கான முகவரி. மலேசியாவில் தேர்ந்த கவிஞர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். அவர்களுள் புங்குழலி சொற்பத்திலும் சொற்பம். கவிதைகளை நன்றாக உள்வாங்கி கட்டுரையை எழுதியிருக்கிறார் தயாஜி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *