புத்தக அறிமுகங்கள் என்பது புத்தகங்களை நேசிக்கின்றவர்களுக்கு ரொம்பவும் அவசியமான ஒன்று. நாளுக்கு நாள் அச்சாகிக்கொண்டிருக்கும் புத்தகங்களை நம் ஆயுளில் வாசித்து முடிக்க முடியுமா என்கிற கேள்வி வாசிப்பை நேசிக்கின்றவர்களுக்கு இருக்கவே செய்கிறது. எதை வாசிப்பது என தொடங்கி எவரை வாசிப்பது என துணைக்கேள்விகளை எப்போதுமே நம்மை தொந்தரவு செய்கின்றன.
முன்பு, கவனத்தை சிதறச்செய்யும் எதுவும் நம்மை அவ்வளவாக அண்டியிருக்காத சமயங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் புத்தகங்களின் வருகை ரொம்பவும் முக்கியமானதாக இருந்தது. குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து வாசித்தவர்கள் இருக்கிறார்கள். பொது போக்குவரத்தில் புத்தகங்களுடனே பயணித்தவர்கள் இருக்கிறார்கள். வாசித்ததையொட்டி உரையாடுவதற்கே நண்பர்கள் ஆங்காங்கே ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் இன்று பல கவனச்சிதறல்களுக்கு மத்தியில் புத்தக வாசிப்பை நாம் காப்பாற்ற வேண்டியுள்ளது.
ஐம்பது பக்க புத்தக வாசிப்பை ஐந்துநிமிட கைப்பேசி கொடுத்த விடுவதாக நம்பத் தொடங்கிவிட்டோம். கேள்விகளுக்கு பதிலைப் பொறுவதற்கு பல பக்கங்களில் வாசித்து அவற்றை புரிந்து, மனதிலேயே அதனை சீர்தூக்கிப் பார்த்து அதிலுள்ள சாத்தியக்கூறுகளை கண்டறிந்து கேள்விக்கான பதிலை நாம் பெற்றுக்கொள்கிறோம். அதுவே நம் நினைவுகளில் பதிந்து விடுகிறது. ஆனால் இன்று புத்தகங்களைத் தொடாமலேயே கைப்பேசியையும் இணையத்தையும் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்திற்குள் நம் கேள்விக்கான பதிலைப் பெற்றுவிடுகின்றோம். இதுதான் பதில் என்கிற ஒற்றை வரிக்குள் நாமும் சிக்கிக்கொள்கிறோம்.
அந்த நொடி தேவைக்கு பின் அந்தப் பதில் பின் எப்போதும் நம் நினைவுக்கு வருவதில்லை. அந்தப் பதிலுக்கான காரண காரியங்கள் எதுவும் நமக்கு தெரியாததால் அந்தப் பதிலை நம்மால் வேறெதற்கும் பொருத்திப்பார்த்து பயன்படுத்தவும் முடியாமல் போகிறது.
உதாரணமாக இப்படிச் சொல்லலாம். மனக்கணக்கு போட்டு பழகிய ஒருவனுக்கும்; அதெல்லாம் வீண் என்று எப்போதும் கல்குலேட்டரைப் பயன்படுத்தி கணக்கு போடும் ஒருவனுக்கும் உள்ள வித்தியாசங்கள்தான். மனக்கணக்கு வெறும் கணக்கு போட மட்டும் நமக்கு பயன்படவில்லை என்பதை நாமும் அறிந்திருப்போம். அது நம்முடைய மூளை செயல்பாட்டிற்கும் விரைந்து முடிவெடுக்கும் திறனுக்கும் கூட நம்மை பழக்கப்படுத்துகிறது.
இப்படியான கவனச்சிதறல்கள் அதிகரித்துவிட்ட இன்றையக் காலக்கட்டத்திலும் நம்முடைய நேரத்தை நம்மக்கே தெரியாமல் திருடக்கொடுக்கும் இன்றையச் சூழலிலும் புத்தகங்களைத் தேடி வாசித்து மகிழும் வாசகர்களுக்கு புத்தக அறிமுகம் என்பது வரப்பிரசாதம்.
வெறுமனே இதுதான் புத்தகம் இதுதான் தலைப்பு இவர்தான் எழுதினார் என்கிற ஏமாற்று வேலைகள் ஒருபோதும் பயனான அறிமுகமாக ஆகிவிடாது. அதுவெல்லாம் வெறும் விளம்பரங்கள்தான். பலு தூக்கு பலமாகலாம் என்று உட்கார்ந்து கொண்டே சொல்வதற்கும் பலு தூக்கி நம் முன் அதன் விளைவுகளை ஆரோக்கியமான உடல்வாகோடு வந்து நிற்பதற்குமான வித்தியாசங்கள்தான் அவை.
புத்தக அறிமுகங்களை நாம் பல்வேறு அடுக்குகளில் செய்யலாம். ஒவ்வொன்றும் அந்தப் புத்தகத்தை வாசிக்கின்றவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஏன் அதற்கு அறிமுகமும் விமர்சனமும் செய்கிறவர்களுக்கும் கூட புதுப்புது திறப்புகளைக் கொடுக்கும்.
தரமான இலக்கிய படைப்புகளை முன்னிலைப்படுத்தவும் அது உதவுகிறது. அந்த வகையில் நமக்கு முக்கியமான மலேசிய ஆளுமைகளின் நாவல்கள் பற்றிய அறிமுகத்தை தன் இரசனை விமர்சனம் வழி அறிமுகம் செய்திருக்கும் புத்தகத்தைக் குறித்து இன்று பார்க்கவுள்ளோம்.
அதுவே மற்ற படைப்புகளை அறிமுகம் செய்யும் புத்தகம்தானே; அதில் உங்களுக்கு அறிமுகம் செய்ய என்ன இருக்கிறது என்ற கேள்வி எனக்கும் இருந்தது. ஆனால் அதனையொட்டி இந்தக் கட்டுரையை எழுதும்போது ஓர் வாசகனகாவும் எழுத்தாளனாகவும் எனக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் அதே சமயம் இதனை வாசிக்கும் உங்களுக்கும் ஏன் இந்தப் புத்தகத்தை தவறவிடக்கூடாது? என்கிற எண்ணத்தையும் கொடுக்கும் என்று அதற்கொரு பதிலைச் சொல்லிக்கொண்டு நமது ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம் ‘ என்னும் தொடரில் 13வது புத்தகத்தைக் குறித்து எழுதுகிறேன்.
ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ – தொகுதி 1. வல்லினம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். மலேசிய இலக்கியச் சூழலில் நன்கு அறிமுகமான பத்து இலக்கிய ஆளுமைகளின் அறிமுகங்களோடு அவர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த இரசனை விமர்சனங்கள் அடங்கிய மொத்தம் 116 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
எழுத்தாளர் ம.நவீன், தொடக்கமாக ‘மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்’ என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். இந்த தொகுப்பிற்கான காரணத்தையும் அதன் தேவையையும் இதன் வழி தெளிவுபடுத்த முயன்றுள்ளார். தெளிவும் கொடுத்துள்ளார். முக்கியமான கட்டுரையாகவும் இது அமைந்துள்ளது. பொதுவாக ரசனை விமர்சனம் மீதான பார்வையை பலரும் பலவாறாக புரிந்துக் கொள்கிறார்கள். அதனை குறைத்தும் மதிப்பிடுகின்றார்கள். இக்கட்டுரை ரசனை விமர்சனம் மீதான பார்வை பலப்படுத்தியுள்ளது.
‘…. அதன் நோக்கம் உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுதான். இரசனை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு வாசகன், ஒரு புனைவின் மேல் சிறந்த வாசிப்பை வழங்கும் முயற்சி. அவன் அதில் உள்ள காட்சிகளைக் கற்பனையால் நிகழ்த்திப் பார்க்கின்றான். மேம்பட்ட ஒரு பார்வையை வைக்கிறான். அது விவாதமாகின்றது. பின்னர் அங்கிருந்து புதிய வாசிப்பு முறை உருவாகிறது.’ என்று கட்டுரையாசியர் கூறுவதில் இருந்து ரசனை விமர்சனத்தின் அவசியத்தை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
இரசனை விமர்சனம் எப்போதும் நிலையான முடிவை சொல்வது அல்ல. அது வாசகர்களுக்கு பல புதிய திறப்புகளைக் கொடுக்கின்றது. அதன் மூலம் ஏற்படும் உரையாடல் மிக அவசியமான ஒன்றாகை நாம் வாசித்ததை குறிப்பாக நம் வாசிப்பை பல படிகள் மேலேற்றி வைக்கிறது
அவ்வாறான இரசனை விமர்சனத்தை புறக்கணிப்பதின் வழி ஆவப்போது ஒன்றுமில்லை. ஆனால் அதனை நம் பார்வையில் இருந்து சொல்வதற்கு உழைக்க வேண்டியுள்ளது, அப்படைப்பை வாசிக்க வேண்டியுள்ளது. வாசிப்பில் நாம் எந்தப் பக்கம் இருந்து ஒரு படைப்பை அணுகுகின்றோம் என்ற அடிப்படை கேள்விக்கு இரசனை விமர்சனம் நமக்கு பதில் தேட உதவும்.
இப்புத்தகத்தை வாசித்து, எழவிருக்கும் கேள்விகளை ஒரு வாசகனாக இருந்து நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனின் சொல்லப்பட்டிருக்கும் நாவலை வாசிக்காமல் நாவல் பற்றிய விமர்சனத்தை வாசிப்பது சமயங்களில் அந்நாவல் வாசிப்பில் இருந்து நம்மை அந்நியப்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் இக்கட்டுரைகளையொட்டிய நம் கேள்விகளுக்கு ‘முதலில் நாவலை வாசிங்க அப்பறமா பேசலாம்..’ என யாரும் சொல்லிவிட்டால் பிறகு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அக்கேள்விகள் நம் சுய வாசிப்பிற்கு மிக அவசியமானது.
இதில் வாசித்து அறிந்து கொண்ட ஒன்றிரண்டு புத்தகங்களைப் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கின்றேன்; கிடைக்கவில்லை என்பது துரதிஷ்டம்தான்!
இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பத்து மலேசிய ஆளுமைகளின் ஒவ்வொருய்ய் கட்டுரையைக் குறித்தும் என் வாசிப்பு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் கட்டுரையாக, ‘புனைவின் துர்கனவு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கோ.புண்ணியவானின் நாவல் குறித்து எழுதியுள்ளார்.
கோ.புண்ணியவான் ‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை வெளிவந்த சில ஆண்டுகளில் ‘கையறு’ என்னும் நாவலை கோ.புண்ணியவான் எழுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். நமது இந்த மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடரிலும் அந்த நாவல் குறித்து ஓர் அறிமுக கட்டுரையை நான் எழுதியிருப்பேன்.
தொடர்ந்து கோ.புண்ணியவானின் ‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவல்கள் குறித்து ஆசிரியர் என்ன சொல்லியுள்ளார் என பார்ப்போம். சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள் இழைகளும் கொண்ட குறுநாவல்கள் இங்கு நாவல்களாக அங்கிகரிக்கப்படுவதைச் சொல்லி இவ்விரு நாவல்களையுமே அத்தகைய பட்டியலில் இருப்பதைச் சுட்டிகாட்டுகிறார்.
‘நொய்வப்பூக்கள்’ நாவலின் பலவீனம் கருதியும் அது ஜனரஞ்சக வாசிப்பிற்கானது என்பதாலும் அதனை சில வரிகளிளேயே சொல்லிவிட்டு அடுத்த நாவலுக்குச் செல்கிறார். ‘செலாஞ்சர் அம்பாட்’, கோ.புண்ணியவானின் இரண்டாவது நாவல். மலேசியாவில் அதிகம் கவனம் ஈர்த்த நாவலும் கூட.
1983-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இக்கட்டுரை அந்நாவல் கொண்டுள்ள பலவீனங்களையே முன்னிலைப்படுத்துவது போல முதல் வாசிப்பில் தெரியலாம். மறுப்பதற்கில்லை, ஆனால் அந்நாவலையும் அதனை எழுதியவரையும் மறந்து மீண்டும் இக்கட்டுரையை வாசிக்கும் போது, வரலாற்று பின்புலம் கொண்ட நாவலையோ கதைகளையோ எழுதுவதற்கு எத்தனை மெனக்கெடல்கள் வேண்டும் என்பதைக் காட்டும் முக்கியமான கட்டுரையாகத்தான் இதனை வாசிக்கத் தோன்றுகிறது.
அதற்கான பல உதாரணங்களை கட்டுரையாசிரியர் இந்நாவலில் இருந்தே எடுத்துரைக்கின்றார். நாவலுக்கு களப்பணி இன்றியமையாத ஒன்று. சிறு தகவல் பிழையும் படைப்பைக் கேலிப்பேச்சுக்கு ஆளாக்கிவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வை இக்கட்டுரைக் கொடுக்கின்றது.
நாவலுக்கான நுட்பம் எங்கே உள்ளது. எங்கிருந்து கணக்கிடப்படுகின்றது என்பதை சில கேள்விகளின் வழி சொல்ல முற்படுகின்றார். சொல்லாமல் விடுவதாலும் அல்லது சுருங்கச் சொல்லுவதாலும் நாவல் அதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றது. விரிவாக சொல்ல அனுபவமும் அறிதலும் அவசியமாகின்றது. அதற்கான கள்ப்பணி மிக முக்கியமானது.
நாவலின் பலவீனங்களையே அதிகம் இக்கட்டுரை பேசியிருந்தாலும், ‘தமிழர்கள் கொத்தடிமைகள் அக்கப்பட்டு எந்தச் கூலியும் இல்லாமல் நிலத்தைப் பண்படுத்தி பெரும் லாபம் ஈட்டும் வளமாக மாற்றி, அதில் எந்த பலனும் அனுபவிக்காமல் இருந்துள்ளதற்கான சான்றுதான் ‘செலஞ்சார் அம்பாட்’ என்று சொல்வதன் வழி நாவலை வாசிக்க தூண்டுகின்றார்.
இரண்டாவது கட்டுரையில் ரெ.கார்த்திகேசு குறித்து ‘மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
ரெ.கார்த்திகேசு ஒரு வணிக எழுத்தாளர் என்றபடியே ஆசிரியர் இக்கட்டுரையைத் தொடங்குகின்றார். அதென்ன வணிக எழுத்தாளர். வணிகம் என்பது வியாபாரம் என நன்கு தெரியும். ரெ.கார்த்திகேசு எழுதி எழுதி வியாபாரம் செய்து சம்பாதித்தாரா? அப்படி எழுதி எழுதி சொத்துகள் ஏதும் சேர்க்க முடியுமா என்ன ? என சிலரை கேள்வி கேட்க வைக்கிறது. அவர்களும் அதனை ஒரு அறிவார்த்த கேள்வியாக நம்பி கேட்கவும் செய்கிறார்கள்.
தீவிர இலக்கியம் வணிக இலக்கியம் என்கிற இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிகின்ற வரை அல்லது அதனை அறிந்துக் கொள்ள முயலாதவரை அர்த்தமற்ற கேள்விகளும் அதையொட்டிய அர்த்தமற்ற விவாதங்களும் தொடரத்தான் செய்யும்.
இதனை அறிந்துக் கொண்டதாலும் தனது முன் அனுபவத்தாலும் கட்டுரையாசிரியர் வணிக எழுத்துகள் குறித்து தெளிவு செய்கிறார். வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள் என நான்காக பிரிக்கின்றார்.
‘பொதுவாக வியாபார நோக்கம் கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால் ஜனரஞ்சக இலக்கியம் என சொல்லப்படுகின்றது’ என்கிறார். தான் கூறும் நான்கு பிரிவுகளுக்கும் ஏற்ற எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் சொல்லவருவதை வாசகர்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.
வணிக இலக்கியத்தையோ தீவிர இலக்கியத்தையோ பற்றிய விளக்கங்கள் என்னதான் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது. அவ்வாறே இக்கட்டுரையும் அமைந்துள்ளது.
ஒருவர் எழுதுவது வணிக இலக்கியமோ தீவிர இலக்கியமோ, அது அவரவர் தேர்வு. ஆனால் தான் எழுதுவது என்ன வகை என தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. அதுவாவது பரவாயில்லை, இன்னொரு ரகமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் எழுதுவது வணிக எழுத்து என நன்றாக தெரியும் ஆனால் தங்கள் மீது தீவிர இலக்கியவாதிக்கான போர்வையைப் போர்த்திக் கொள்ள எல்லாவகையான காரியங்களையும் செய்கிறார்கள். அதன் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்க வேண்டிய ஒன்று. இவர்களைப் போன்றவர்கள்தான் பெரும்பாலான சிக்கல்களுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.
ரெ.கார்த்திகேசு எழுதிய, ‘வானத்து வேலிகள்’, ‘தேடியிருக்கும் தருணங்கள்’, ‘அந்திம காலம்’, ‘காதலினால் அல்ல’, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற ஐந்து நாவல்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.
ஐந்து நாவல்களின் சுருக்கத்தையும் ஆசிரியர் சொல்லிவிட்டு அந்நாவல்களின் பலம் பலவீனங்களை ஆராய்கின்றார். யோசிக்கையில் இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவையாயிருக்கிறது. வெறுமனே ஒரு படைப்பையோ ஒரு படைப்பாளி மீதான பிம்பத்தையோ கணக்கில் கொள்ளாமல், ஒரு முழுமையான பார்வையைக் கொடுக்க ஆசிரியர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ரெ.கார்த்திகேசு மீது மரியாதை உள்ளதாகச் சொல்லிக்கொள்பவர்களோ, அவர் முக்கியமான படைப்பாளி என முன்மொழிகின்றவர்களோ அவரது படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளார்களா என்பது ஐயம் கொடுக்கும் கேள்விதான்.
‘பெரும்பாலும் மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் இல்லாமல் ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் உள்ளன. வசனங்களின் புழங்கு மொழி, பிற இன மக்களிடம் பேசும் வசனங்களின் நேர்த்தியான மொழி, காலங்களில் குழப்பம் இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார்’ என்கிறார்.
ரெ.கார்த்திகேசுவின் புனைவின் தரத்தை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் வகையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அவரின் இதர செயலூக்கத்தினால் உருவாகியிருக்கும் ஆளுமையைக் கொண்டு அவரது புனைவுலகை மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டறிய இக்கட்டுரை வாசகர்களுக்கு உதவும். இக்கட்டுரையை முழுமையாக வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் என எதிர்ப்பார்க்கலாம். அதோடு ரெ.கார்த்திகேசுவின் ‘அந்திம காலம்’ நாவல் குறித்து மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடரில் நீங்கள் வாசிக்கலாம்.
இந்தப் புத்தகத்தில் ‘பாலுணர்வின் கிளர்ச்சி’ என்ற தலைப்பில் எம்.ஏ.இளஞ்செல்வன் குறித்து மூன்றாவது கட்டுரையை ஆசிரியர் எழுதியுள்ளார்.
எம்.ஏ.இளஞ்செல்வன், மலேசிய தமிழ் இலக்கியத்தில் எத்தனை முக்கியமானவர் என்பதை கட்டுரையின் முதல் பக்கத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம். இங்கு புதுக்கவிதை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு ஆதரவாக மரபு கவிஞர்களின் விமர்சனத்திற்கு கடுமையான எதிர்வினையாற்றியவர்.
அவர் பற்றிய மேலதிக விபரங்களை கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். அவை ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. அவரின் காலகட்டத்தில் அவர் ஒரு நட்சத்திர எழுத்தாளராக அறியப்பட்டவர். அதற்கான பின்னனியைக் கட்டுரையாசிரியர் சொல்கிறார். அது உண்மையும் கூடதான். எனக்கு நினைவு தெரிந்து நான் கதை புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பொழுதில் எம்.ஏ.இளஞ்செல்வன் ஒரு இலக்கிய நட்சத்திரம் எனவே சொல்லப்பட்டார்.
அவருக்கும் கட்டுரையாளருக்குமான ஆத்மார்த்தமான உறவை ஆசிரியர் கட்டுரையில் சொல்கிறார். ஆனால் அதுவெல்லாம் தன் ரசனை விமர்சனத்திற்கு ஒரு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை என்பது இக்கட்டுரையில் நமக்கு நன்றாகவே தெரிகிறது. விமர்சனம் என்பது ஒரு பொறுப்பு. அதனை பழக்கமான முகங்களுக்காகவும் பழகிக்கொண்டதற்காகவும் அடகு வைத்துவிடக்கூடாது. இங்கு படைப்புகளின் பலவீனத்திற்கு முதல் காரணமாக இருப்பது மேம்போக்கான விமர்சனங்கள்தான். மருந்து கசக்கும் என்பதால் சீனி கலந்து கொடுப்பார்கள். ஆனால் மருந்து கசக்கக்கூடாது என்பதற்காக வெறும் சீனியையே கொடுத்து வந்தால் என்ன ஆகும்? அதுதான் இன்றைய பல படைப்புகளின் நிலையும் பல படைப்பாளிகளின் நிலையும்.

எம்.ஏ.இளஞ்செல்வன் பெற்றிருக்கும் வாசகர் பரப்பிற்கு பாலியலை தனது குறுநாவல்களில் அவர் ஆதாரமாக் கொண்டிருப்பதுதான் காரணம் என ஆசிரியர் கருதுகிறார். நிச்சயம் இதனை வாசிக்கையில் நம்மால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.
ஆனால் அந்த அதிர்ச்சியை தனது அடுத்தடுத்த விமர்சனம் கொண்டு கலையச் செய்கிறார் ஆசிரியர்.
நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு நன்றியுணர்ச்சி அவசியம் இல்லை, ஆனால் பொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு அவசியம் என எடுத்துக்காட்ட ஏற்ற கட்டுரை இது.
ஒருவேளை இக்கட்டுரையை வாசித்திருந்தால் ஆசிரியர் சொல்வது போல எம்.ஏ.இளஞ்செல்வன் மென்புன்னகையுடன் வரவேற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை நானும் உணர்ந்துள்ளேன்.
புத்தகத்தில் நான்காவது கட்டுரை எம்.குமரனைப் பற்றியது. ‘முதல் சுடர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் அரசியல் போலித்தனங்களால் எழுத்தில் இருந்து விரக்தி கொண்டு விலகியவர் பற்றிய கட்டுரை.
போலிகளின் பளபளப்பால் பலரின் கண்கள் கண்டுகொள்ளத் தவறிய சுடர்தான் எம்.குமாரன். அதற்கு ஏற்றார் போலவே தலைப்பும் அமைந்து விட்டது.
கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் உரையாடல்கள் தொடங்கிய இரண்டாவது காலகட்டத்தில் உருவான முக்கியமான எழுத்தாளர் எம்.குமாரன்.
எழுத்தாளரின் பின்புலத்தையும் அவர் முன்னெடுத்த முயற்சிகளையும் கட்டுரையாசிரியர் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு பயன்மிக்க ஒரு கட்டுரை.
லட்சியவாதத்தையும், கற்பனாவாதத்தையும், மிகை உணர்ச்சிகளையும், நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971-ல் எழுதப்பட்ட இருத்தலியல் தன்மையிலான ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ நாவல் தனித்து நிற்பதை ஆசிரியர் சுட்டிகாட்டுகிறார்.
அந்நாவல் பற்றிய தன் விமர்சனப் பார்வையில் ‘குறிப்பிட்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் பார்வையில் அலசப்படுகிறது’ என்கின்றார் ஆசிரியர். அதோடு, ‘எழுத்தாளர் தனக்குள் எழும் வினாவை விவாதமாக விரித்து நாவலுக்குள் நிகழ்த்தும்போது, தன்னையே பலநூறாக உடைக்கின்றார். வாழ்வு குறித்த சில புதிய அவதானிப்புகளைக் கண்டடைகிறார். அதன்வழி தன்னையும் கண்டடைகின்றார். அந்தக் கண்டடைவே நாவலைத் தாங்கிப் பிடிக்கிறது, தனித்துவமாக்குகிறது.’ என்கிறார்.
மேலும் கட்டுரையை வாசிக்க வாசிக்க, அந்நாவலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. ஆனால் தற்சமயம் அந்நாவல் கிடைப்பது அரிது. நானும் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்நாவலை மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுகின்றேன்.
இன்றைய தலைமுறை மட்டுமல்ல நாளைய தலைமுறையும் அறிந்துக்கொள்ள வேண்டிய சுடர் எம்.குமாரன் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
இம்மாதிரி தொடர் விமர்சனங்களால் ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்துவதாக குற்றம் சாற்றுபவர்கள் இருக்கிறார்கள். மூத்த படைப்பாளர்களை உதாசினம் செய்வதாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வாறு மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என பாடம் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. கூடுதலாக அவர்களிடம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் எம்.குமாரன் போன்ற சுடரின் வெளிச்சம் சிறிதாகக் கூட இதுவரை இருந்ததில்லை; இனியும் இருக்கப்போவதுமில்லை.
எழுத்தாளர் க.பெருமாள் குறித்து ‘நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ’ என்ற தலைப்பில் ஐந்தாவது கட்டுரையை எழுதியிருக்கிறார்
இக்கட்டுரையின் தலைப்பை வாசித்ததுமே இதன் உள்ளடக்கம் நமக்கு ஓரளவிற்கு பிடிபடுகின்றது.
‘சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துக்கொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.’ என நாவல் எழுதுவற்கும் சிறுகதை எழுதுவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை சொல்லி கட்டுரையை ஆரம்பிக்கின்றார் ஆசிரியர். அதோடு ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நாவலை முன்வைத்து மேற்சொன்னவற்றை விளக்கவும் செய்கிறார்.
கா.பெருமாள் எழுதிய ‘துயரப்பாதை’ நாவலைப் பற்றி சொல்லும்போது பலவீனமாக எழுதப்பட்டு பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல்தான் அது என்கின்றார். இத்தகையப் பார்வையைத்தான் இக்கட்டுரையின் தலைப்பிலேயே நாம் உணர்ந்தோம்
246 பக்கங்கள் கொண்ட நாவலை நான்கே வரிகளில் சொல்லிவிடுகின்றார். மேற்சென்று நாவலின் பலவீனங்களைப் பேசுகின்றார்.
1958 சங்கமணி நாழிதழில் தொடர்கதையாக வெளிவந்த ‘துயரப்பாதை’ பின்னர் 1978ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது. அன்றைய சுழலில் இந்நாவலைப்பற்றி சொல்லப்பட்ட கருத்துகளை வாசிக்கையில் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கமும் குழப்பமும் வராமல் இல்லை.
இந்தப் புத்தகத்தில் இக்கட்டுரைக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் பக்கங்கள் குறைவுதான். ஆனாலும் சிக்கல் இல்லாமல் வாசிக்கும்படி எழுதியுள்ளார் ஆசிரியர்.
ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட படைப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மீள்வாசிப்பு செய்வதும் அதுபற்றி பேசுவதும் அவசியம் என்பது இக்கட்டுரை வழி முக்கியத்துவம் பெறுகின்றது.
ஆனால் மீள்வாசிப்பில் அப்படைப்பை மட்டுமே கைகொள்ளாமல் அந்நாவல் எழுதபட்ட கால சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு படைப்பை கொண்டாடும் மனநிலையை புரிந்துக்கொள்ள அது உதவும். அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடலாகாது.
ஆறாவது கட்டுரை, ‘சென்று சேராத முன்னோடி’ என்ற தலைப்பில் ஐ.இளவழகு குறித்து எழுதப்பட்டுள்ளது.
இலட்சியவாதம் என்கிற பதம் இங்கு எவ்வாறு புரிந்துக்கொள்ளப் படுகின்றது என்கின்ற அறிமுகத்துடன் கட்டுரை தொடங்குகின்றது.
1. சமூகப் பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துவது.
2. சித்தாந்த பலம் இல்லாத எழுச்சிக்கனவுகளை உருவாக்குவது.
3.அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம், என அனைத்திலும் மிகையான வெளிப்பாடுகளைக் கொண்டது.
4. வாழ்வை எளிமைப்படுத்திக் காட்டுவது.
என இலட்சியவாத எழுத்துகளை வரையறை செய்கிறார் கட்டுரையாசிரியர்.
இக்கட்டுரை ஐ.இளவழகு எழுதிய ‘இலட்சியப் பயணம்’ எனும் 424 பக்க நாவலைப் பற்றி விரிவாக பேசுகிறது. இந்நாவல் பின்புலத்தை சொல்லும் போது, மலேசிய எஸ்.பி.எம் தேர்வுக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய நாவல் என்கிறார். அதோடு மாணவர்களின் பிரதிக்காகத் தணிக்கை செய்யப்பட்டு சுருக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

இந்நாவலின் சிறப்பம்சமாக,
1. தோட்ட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் விரிவாக சொன்ன பாங்கு.
2. மையமாக மாதவன் எனும் கதாபாத்திரம் இருந்தாலும் அவனுக்கு ஈடாக அவன் தந்தை ஆண்டியப்பன் மற்றும் இதர கதாப்பாத்திரங்கள் வந்து பல்வேறு மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
அடுத்ததாக இந்நாவல் கொண்டுள்ள பலவீனப்பகுதிகளை பேசுகின்றார் ஆசிரியர். கதாப்பாத்திரம் அடையும் மாற்றம் குறித்து தெளிவான சித்தரிப்பு இல்லாமை முக்கிய பலவீனம் என்கிறார்.
படைப்பாளர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு எத்தனை அவசியம் என கோடிட்டுக் காட்டுகின்றார். ஏனெனின் படைப்பாளிகள் நம்பும் அரசியல்தான் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் படைப்பில் வெளிவந்துவிடுகிறது. பலர் வழிந்தே தங்களில் அரசியலை படைப்புகளில் புகுத்துகின்றார்கள். சிலர் தங்களையும் அறியாமல் எழுத்தின் வழி தங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
ஐ.இளவழகு எழுதியிருக்கும் ‘லட்சியப் பயணம்’ எனும் இந்நாவல், எழுத்தாளருக்கு தெளிவான அரசியல் பார்வை இல்லாததால் அது அடைய வேண்டிய இடத்தை அடையாமல் சரிந்துவிடுகிறது என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது.
படைப்பை நோக்கி வைக்கப்படும் விமர்சனம் படைப்பாளரை நோக்கி திரும்புவது இயல்புதான். அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் படைப்பாளர் ஒன்றை நம்பி அதனை படைப்பில் புகுத்துகின்றாரா? அல்லது அத்தகைய (அன்றைய)சூழல் அவருக்கு கொடுத்த தெளிவற்ற சிந்தனை படைப்பில் புகுந்துவிடுகின்றதா என நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்தானே.
ஏனெனில், சில காரணங்களால் ‘இந்நாவல் ஒரு வரலாற்று மோசடி. அதனை எண்ணி எழுத்தாளன் தலைகுணிந்துதான் ஆகவேண்டும்’ என்று காட்டமாக கருத்தை முன்வைக்கின்றார் கட்டுரையாசிரியர். இவ்வாறு சொல்வது ரசனை விமர்சனத்திற்கு அவசியம்தான என கேட்க தோன்றுகிறது. இதைத்தான் முன்கூட்டியே ஆசிரியர் எழுதிய்ய முன்னுரையில் ‘மேலும் ரசனை விமர்சனம் செய்யக்கூடாத ஒரு பணியையும் நான் இத்தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் செய்துள்ளேன். அது எழுத்தாளர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவது…’ என்கிறார்.
ஒருவேளை இந்நாவலில் எழுத்தாளர் புகுத்தியுள்ள அரசியல் பார்வையால் அவர் லாபம் அடைந்து பொருள் ஈட்ட அதனை மேற்கொண்டார் என நிரூபனம் ஆகியிருந்தால் கூட மேற்சொன்ன கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நிரூபனம் ஆகிடாத ஒன்றை, எழுத்தாளரின் அன்றைய சூழலில் தெளிவற்ற அரசியல் பார்வையை இன்றைய சூழலில் இருந்து பார்க்கையில் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகலாமே தவிர அதனை எழுதியதற்காக எழுதியரை ‘தலைகுனிய’ சொல்வதெல்லாம் அவசியம்தான என கேட்க தோன்றுகிறது.
இருந்தும் ‘….. சிறுசிறு இடையூறுகளால் நாவலைப் புறக்கணிப்பது நம் வரலாற்றின் ஒரு பகுதியைப் புறக்கணிப்பதும் தான்’ என சொல்வதன் வழி இன்றைய தலைமுறையினர் இந்நாவலை தேடும் வழி செய்கிறார் கட்டுரையாசிரியர்.
அடுத்து ஏழாவது கட்டுரை. ஆர்.சண்முகம் பற்றிய கட்டுரைக்கு ‘மலைகளாகாத மண் மேடுகள்’ என்று தலைப்பிட்டுள்ளார். இந்தத் தலைப்பு எழுத்தாளரை நாவலை மட்டும் விமர்சிக்காமல் வாசகர்களையும் விமர்சிக்கின்றார். அதற்கான தக்க காரணமும் இக்கட்டுரையில் இருக்கின்றன. ஒரு நாவலை வாசித்து உள்வாங்கிக் கொள்ளாத சிலர்; யார்யாரோ சொல்லும் நாவல் சுருக்கத்தையும் நாவலின் தலைப்பையும் வைத்துக்கொண்டு மேம்போக்காக உருவாக்கும் வாசக பிம்பம் எவ்வளவு மோசமான இலக்கியச் சூழலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதற்கு இந்தக் கட்டுரை நல்லதோர் உதாரணம் எனலாம்.
குறிப்பாக ‘வரலாற்று நாவல்’ என்று பெருமிதம் கொள்ளும் படைப்புகள் மீது ஆசிரியர் வைக்கும் விமர்சனத்தை நம்மால் புறக்கணிக்கவும் முடியாது. வரலாற்றுப் பின்புலத்தை நாவலின் களமாகவும் உண்மை பாத்திரங்களை ஆங்காங்கே நாவலில் நடமாவிடுவதாலுமே எந்தப் படைப்பும் வரலாற்று நாவலாக மாறிவிடுவதில்லை.
இது நாள் வரை, ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண இரயில்’ என்ற நாவல் முழுமையான வாசிப்பைக் கோராமலேயே மலேசிய வரலாற்று நாவல் என்கிற பார்வையைச் சுமந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அதற்கான காரணமாக நாவலை தலைப்பை மட்டுமே நான் குற்றம் சொல்ல முடியாது. மாறாக மலேசிய இலக்கியச் சூழலின் விமர்சன மரபையும் சொல்லத்தான் வேண்டியுள்ளது.
ஒரு படைப்பை புகழ்ந்து எழுதுவதுதான் விமர்சனம் என்ற அறியாமையின் விளைவுகளை இன்றைய இளம் தலைமுறை வாசகர்கள் கண்கூடாகப் பார்க்கின்றார்கள். ‘இதையா கொண்டாடினீர்கள்?’ என அவர்கள் கேட்டு நம்மை நோக்கி சிரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
‘சயாம் மரண இரயில்’ நாவலின் கதைச் சுருக்கத்தை மூன்று பக்கங்களிலேயே ஆசிரியர் கொடுத்துவிடுகின்றார். நானூறுக்கும் அதிகமான நாவலின் சுருக்கத்தை சில பக்கங்களிலேயே கொடுக்க முடிவதும் அதில் கூட எடுத்து வாசித்தே ஆகவேண்டும் என்கிற உந்துதல் இல்லாததும் நாவலின் பலவீனம்தான் போலும். இந்நாவலில் எழுத்து நடை சுவாரஸ்யமானதாக இருந்தாதும் தேர்ந்த நாவலாசிரியருக்கான பார்வை இல்லாததால் இந்நாவல் வரலாற்று நாவலாக பரிணமிக்காமல் போய்விட்டது. வரலாற்று பின்னணி இல்லாமலேயே இந்த நாவலை எழுதிவிடலாம் என்பதால் இந்த நாவலில் வரும் வரலாற்று பின்னணி நமக்கு எந்த எதிர்ப்பார்ப்பையும் கொடுக்கவில்லை. பல உயிர்களை பலிகொடுத்த இந்த சயாம் மரண இரயில் வரலாறு இன்னும் பலரின் மனதில் மாறா வடுவையும் அழிக்க முடியாத வலிமிகுந்த நினைவையும் கொண்டுள்ளது. அத்தகைய கதைக்களத்தை நாவலாசியர் பயன்படுத்திய விதம்; நாம்கூட அங்கு ரயில் தண்டவாளம் போட போயிருக்கலாமே என்கிற எண்ணத்தைதான் எழ வைப்பதான விமர்சனத்தை ஆசிரியர் வைக்கிறார்.
இதே கட்டுரையில் இன்னொரு எழுத்தாளரான அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ என்னும் நாவலையும் ஒப்பிட்டு சிலவற்றை ஆசிரியர் பேசுகின்றார். இத்தொகுப்பில் எட்டாவது கட்டுரையில் ஆ.ரெங்கசாமி குறித்து விரிவாகவே ஆசிரியர் எழுதியிருக்கின்றார்.
அ.ரெங்கசாமியின் நாவல்கள் குறித்து ‘வரலாற்றின் கலை’ என்ற தலைப்பில் வருகிறது அந்தக் கட்டுரை. அ.ரெங்கசாமியின் படைப்புலகம் குறித்து ரொம்பவும் முக்கியமான கட்டுரையாக இக்கட்டுரை அமைந்திருக்கின்றது. நான் மீண்டும் மீண்டும் வாசித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
கட்டுரையின் தொடக்கத்திலேயே அ.ரெங்கசாமியின் ஒவ்வொரு நாவலும் அது எழுத தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுத் தருணங்களையும் குறுக்குவெட்டில் சொல்கிறார்.
‘புதியதோர் உலகம்’ நாவல், ஜப்பானிய ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மையான தோட்டத்து ஆண்கள் இரயில் தண்டவாளம் போடுவதற்கு பிடித்துச் செல்லப்பட்ட பின்னர், அதுவரையில் இரப்பர் தோட்டத்தை நம்பியிருந்த எஞ்சிய மக்களுக்கு ஏற்பட்ட பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை விலாவரியாகச் சொல்கிறது.
‘நினைவுச் சின்னம்’ நாவல், தாய்லாந்தில் தண்டவாளம் போடச் சென்ற மக்களின் துன்பக்கதையைப் பேசுகிறது.
‘லங்காட் நதிக்கரை’ நாவல், ஜப்பானியர்கள் தோல்வியுற்று நாட்டை விட்டுச்சென்ற பின்னர் ஆங்கிலேயர்கள் மீண்டும் மலேசியாவிற்குள் வருவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கம்யூனிஸ்டுகள் நாட்டைக் கைப்பற்றி தமிழர்களுக்கு ஏற்படுத்திய சிக்கல்களை அலசுகிறது.
‘இமையத் தியாகம்’ நாவ;, இரண்டாம் உலகப்போரில் இந்தியச் சுதந்திர சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம் என விரிவாகப் பேசுகிறது.
‘விடியல்’ நாவல், ஜப்பானியர்கள் வருவதற்கு முன்பே 1941-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து தோட்ட மக்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கிள்ளான் கலவரத்தையும் ஒட்டி எழுதப்பட்டது.
‘கருங்காணு’ குறுநாவல், மேற்சொன்ன ஐந்து வரலாற்றுத் தருணங்களையும் தொகுத்து ஒரு குடும்ப அனுபவத்தின் வழி சொல்லும் குறுநாவல்.
இக்கட்டுரை அ.ரெங்கசாமியின் எழுத்து மற்ற மலேசிய எழுத்தாளர்களிடம் இருந்து குறிப்பாக வரலாற்று நாவல்களை எழுதுகின்றோம் என சொல்கிறவர்களுக்கு மத்தியில் இருந்து எப்படி மாறுபடுகின்றது என்பதை விளக்குகிறது. அதோடு வரலாற்று நாவலை எழுதுவதற்கான அடிப்படைகளையும் புதியவர்களுக்கு கற்றுக்கொண்டுக்கின்றது.
நீங்கள் இக்கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தால் என்னைப்போலவே ஒருமுறைக்கு பலமுறை வாசிப்பீர்கள். பல இடங்களில் கோடு போடுவீர்கள். ஏனெனில் அவ்வளவு முக்கியமான கட்டுரை இது.
இங்கு அ.ரெங்கசாமி குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் எழுதப்படாதக் குறையை ஆசிரியரின் இந்தக் கட்டுரை கொஞ்சமேனும் சரிகட்டுகிறது. ஆனால் அது மட்டும் போதாது. இக்கட்டுரையை முழுமையாக வாசிப்பதின் வழி மீண்டும் அ.ரெங்கசாமியின் எழுத்துகள் இன்றைய தலைமுறையின் வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கு செல்ல வேண்டும்.
அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை புனைவுகளாக்கி நம்மிடம் கொடுத்திருகின்றார். நாம் நமது வாழும் காலத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டாமா?
இந்தப் புத்தகத்தின் ஒன்பதாவது கட்டுரை சை.பீர்முகம்மது பற்றி ‘வெளியேறும் கலை’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
இக்கட்டுரை தொடக்ககால மலேசிய இலக்கியச் சூழலில் டாக்டர் மு.வரதராசனும் ஜெயகாந்தனும் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டார்கள் என சொல்கிறார்.
அந்தவகையில் திரவிட இலக்கியங்களாலும் ஜெயகாந்தன் புனைவுகள் வழி சிறுகதைகள் எழுத தொடங்கியவார சை.பீர்முகம்மதுவைக் குறிப்பிடுகின்றார். ஜெயகாந்தனின் புனைவுகளில் காணப்படும் புனைவுகளின் கூறுகள் சை.பீர்முகம்மதுவின் சிறுகதைகளிலும் எளிதாகக் காணக் கிடைப்பதும் அதற்கு ஒரு காரணமாக முன் வைக்கின்றார்.
சை.பீர்முகம்மதுவின் முதல் நாவலான ‘பெண் குதிரை’ நாவலின் பலவீனங்களை ஆசிரியர் அடுக்கிக்கொண்டே போகின்றார். அதில் ஆசிரியர் வைக்கும் தலையாய விமர்சனம் ‘பொண் குதிரை’ நாவல் உருவாக்க முனைவது பாலியல் கிளர்ச்சியை மட்டுமே என்பதுதான். அதைப் பெண்ணியம் என மழுப்புவதுதான் இந்த நாவல் கொண்டுள்ள அபத்தத்தின் உச்சம்.
ஆசிரியர் அதோடு நிற்கவில்லை. இது பலவீனம் என்று கோடிகாட்டினால் எது பலம் என்று சொல்லவேண்டாமா? ஆசிரியர் இக்கட்டுரையில் அதனையும் செய்து நம் வாசிப்பிற்கு சிலவற்றை கொடுக்கின்றார். எஸ்.போவின் ‘சடங்கு’, தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’, ஜெயமோகனின் ‘கன்யாகுமரி’, சு.வேணுகோபாலின் ‘கூத்தப்பனை’ என்பவற்றோடு எதற்கும் முன்னோடியாக இருக்கும் புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சிறுகதையையும் சொல்கிறார். ஆக ஒன்றின் பலவீனத்தைப் பற்றி தெரிந்து கொள்வதோடு அதனையே பலமாக எப்படி புனையலாம் எனவும் நாம் தெரிந்து கொள்கிறோம்.
‘பெண் குதிரை’ நாவலை ஒரு நாவலாகவோ குறுநாவலாகவோ நெடுங்கதையாகவோ வேறு எந்த வடிவமாகவும் ஏற்க முடியாத புத்தகம் என விமர்சிக்கும் ஆசிரியர், சை.பீர்முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’ என்னும் நாவலை, மலேசிய நாவல் இலக்கியத்தில் ‘அக்கினி வளையங்கள்’ நாவலுக்கு எப்போதும் ஓர் இடம் உண்டு என சொல்கிறார். அதற்கான காரணத்தையும் ‘அக்கினி வளையங்கள்’ எவ்வாறு அப்படியான இடத்திற்கு செல்கின்றது என்பதையும் புத்தகத்தில் தெளிவாக நாம் வாசிக்கலாம்.
இந்தப் புத்தகத்தின் கடைசி கட்டுரை, சீ.முத்துசாமி பற்றியது. அக்கட்டுரையின் தலைப்பு ‘கிளர்ந்த கண்ணீர்’.
ஆசிரியர் சீ.முத்துசாமியை குறித்து குறிப்பிடும்போது மலேசியாவிற்கு கிடைத்த அற்புத படைப்பாளி என்கிறார். வாசகர்களின் புரிதலுக்காக மொழியைத் தட்டையாக்கி பலரும் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தன்னாலான உட்சபட சாத்தியங்களை மொழிவழி செய்து காட்டியவர் இவர் என்கிறார்.
சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ என்ற புத்தகத்தில் தலைப்புடன் சேர்த்து ‘அகதிகள்’ ‘விளிம்பு’ ஆகிய மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இம்மூன்று குறுநாவல்கள் குறித்த பார்வையைச் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரின் முதல் நாவலான ‘மண்புழுக்கள்’ நாவலுக்குள் நுழைந்து அந்த நாவலின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார். அந்நாவல் குறித்து ‘மாதம் ஒரு மலேசிய புத்தகத்தில்’ நாமும் எழுதியிருக்கின்றோம்.
அதனை தொடர்ந்து ‘மலைக்காடு’ நாவல் குறித்த பலத்தையும் பலவீனத்தையும் சொல்கிறார். நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்பதாலேயே சில கட்டுரைகளை சுருக்கமாக முடித்துவிட்டேன் இக்கட்டுரையைப் போல.
இம்மாத மாதம் ஒரு மலேசிய புத்தகம் தொடரில் 13வது புத்தகமாக ம.நவீன் எழுதிய மலேசிய நாவல்கள்; தொகுதி ஒன்று புத்தகத்தின் அறிமுகத்தைத் தெரிந்து கொண்டோம். இலக்கியம் மீது ஆர்வம் உள்ளவர்களும் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்களும் தவறாது வாசிக்க வேண்டிய புத்தகம் இது. என் தனிப்பட்ட வாசிப்பிற்கு இந்தத் தொகுப்பு பேருதவி செய்தது. இன்றும் செய்துகொண்டு இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் நமது நடுகல்.காமிற்கு தொடர்ந்து எழுதும் வாய்ப்பு வந்தபோது எப்போதோ வாசித்த இந்தப் புத்தகம் கொடுத்த தாக்கத்தில்தான் ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம்’ என்ற தலைப்பில் மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுத ஆரம்பித்து இவ்வாண்டு முதல் ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்’ என்ற இன்னொரு தொடரையும் எழுதுகிறேன்.
மலேசிய நாவல்கள் புத்தகம் எனக்கு கொடுத்த அறிமுகம் போலவும் உந்துதல் போலவும் நான் எழுதும் வாசிப்பு அனுபவங்களும் வாசகர்களுக்கு பயனாக இருக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடனே எழுதுகிறேன்.
மீண்டும் அடுத்த மாதம், மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு சந்திக்கலாம். அதுவரை உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். தைப்பொங்கல் வாழ்த்துகள்.
00

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

