மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 16

ஜெ.அரவின் குமாரின்சிண்டாய்சிறுகதைகள்.

ஒருவர் ஒரு குழுவில் இணைத்திருப்பதாலேயே அறியப்படுகிறார் என்பது உண்மையா? அக்குழு நண்பர்கள் மூலமே அவர் முன்னிலைப்படுத்தப்படுகின்றாரா? அந்த நபருக்கு கிடைக்கும் அங்கிகாரங்களுக்கு அவர் அக்குழுவில் நட்பாக இருப்பதுதான் காரணமா ? என்கிற கேள்வி காலந்தோரும் இருந்து கொண்டே இருக்கின்றன்.

முழுமுற்றாக இந்தக் கேள்விகளை நாம் புறக்கணிக்க முடியாது என்கிற போதும் இந்தக் கேள்விகளை கேட்டுவிடுவதாலே நாம் எழுதும் எழுத்து காலத்திற்கும் நிற்க போகிறது என்று அர்த்தமல்ல.

ஒரு படைப்பாளி தான் இணைந்திருக்கும் குழுவின் மூலம் அறியப்படுவதும் அங்ககரிக்கப்படுவதும் எத்துணை காலத்திற்கு நிலைத்திருக்கும் என யோசிக்க தொடங்கிவிட்டால் மேற்சொன்ன கேள்விகளுக்கு இடம் இருக்கப்போவதில்லை.

நாம் எங்கிருந்தாலும் யாரோடு இணைந்திருந்தாலும் யாரோடு முரண் பட்டிருந்தாலும் நம் படைப்பின் நேர்மை நமக்கான இடத்தை எப்படியும் நமக்கு கொடுத்துவிடும். சிலருக்கு அவர்கள் இருக்கும் போதே கிடைத்துவிடும் இன்னும் சிலருக்கு அவர்கள் இல்லாதபோதும்கூட அது கிடைத்துவிடும்.

யார் யாரோடு இருந்தாலும் அவரவர் உழைப்பிற்கும் அவரவர் ஆளுமைக்குமே இங்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகின்றது.

ஒருவேளை குழுதான் முழு காரணம் என்றாலும் அந்தக் குழுவிலோ அந்த வட்டத்திலோ இருக்கும் எல்லோருமா அங்கிகரிக்கப்படுகின்றார்கள். ஒருசிலர் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது என தன்னிலையை தன் இயலாமையை உணர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தனக்கு குறைந்தபட்ச அறிமுகம் கிடைப்பதற்காகவும் சில குழுக்களில் தங்களையும் ஒரு ‘அசையும் பொருளாக’ இணைத்து கொள்கிறார்கள்.

இவர்களைப் பொருத்தவரை அந்தக் குழுதான் அவர்களின் உலகம். அந்தக் குழுவில் சொல்லப்படுவதுதான் உண்மை. அதற்கு மாற்று கருத்தோ முற்றாக மறுப்போ அவர்களிடம் இருக்காது. தான் இருப்பதை அவ்வப்போது ‘ஆமாம்’ என தலையசைத்து கைத்தட்டுவதாலேயே அவர்களும் முக்கியமானவர்கள் என அவர்களே நம்பி கொள்கிறார்கள்.

அப்படியான சில இலக்கிய குழுக்களில் தங்களை இலக்கியவாதிகளாக காட்ட நினைப்பவர்களுக்கு ஆகக்கடைசியாக அங்கு கிடைக்கும் ஒரே பலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பணி. சில அதிஸ்டசாலிகளுக்கு  அறிவிப்பாளர் பணியும் கிடைக்கிறது அவ்வளவுதான். இதுவும் இலக்கிய செயல்பாடுதானே அதையேன் குறைத்து மதிப்பிட வேண்டும் என யாரும் கேட்காதீர்கள். அதற்கும் கொஞ்சம் மதிப்பை கொடுக்க நினைத்துதான் அவர்கள் எதற்காக இம்மாதிரி இலக்கிய அமைப்புகளிலோ குழுக்களிலோ சேர்ந்தார்கள் என நினைவுப்படுத்துகிறேன்.

இவ்வளவு பேசியதற்கு காரணம் நான் மட்டுமல்ல. இன்று நான் பகிரப்போகும் புத்தகமும்தான்.

‘சிண்டாய்’ ஜெ.அரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வல்லினம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். தமிழகத்தில் யாவரும் பதிப்பகத்தில் இந்தத் தொகுப்பை நீங்கள் வாங்கலாம்.

வழக்கமாக நான் எழுதவிருக்கும், எழுத விரும்பும், வாசிக்கும் புத்தகம் குறித்தோ அந்த எழுத்தாளர் குறித்தோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடனும் இலக்கியவாதிகளாக தங்களை நினைக்கின்றவர்களிடமும் பேச்சு கொடுப்பேன்.

அவர்களில் பெரும்பாலோர் சொல்லும் கருத்திற்கு முரணாகவே என் வாசிப்பு அனுபவம் அமைந்துவிடும். அப்படித்தான் ‘சிண்டாய்’ சிறுகதைத் தொகுப்பிற்கும் நடந்தது. அரவின் குமாரை ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்தானே என கேட்டார்களே தவிர அவரது சிறுகதைகள் குறித்தோ அவர் எழுதும் கட்டுரைகள் குறித்தோ பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஒருவர் அவர் நம்பும் ஒரு இடத்தில் சுதந்திரமாக இருந்து கொண்டு ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தவதை இவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதுகூட பரவாயில்லை. இருப்பதிலேயே மோசமாக எழுதுகிறவர்களின் எழுத்துகளை தவறாது வாசித்து அவர்களை ஏன் யாரும் அங்கிகரிக்கவில்லை என கோவம் கொள்ளவும் செய்கிறார்கள்.

ஆங்காங்கே எழுத்தாளர் ஜெ.அரவின் குமார் சிறுகதைகளை நான் வாசித்திருக்கின்றேன். வழக்கமாக இந்நாட்டில் எழுதபட்டு நான் வாசித்த கதைகளில் இருந்து இந்தக் கதைகள் மாறுபட்டிருந்தன. குறிப்பாக கதையை நகர்த்திச் சென்ற எழுத்து பாணி எனக்கு பிடித்திருந்தது.

ஒரு சிறுகதையில் அதன்  முடிவுதான் முக்கியம் அதில் இருக்கும் திருப்பம்தான் முக்கியம் என காலம்காலமாக இங்கு சொல்லபட்டதை அவர் தன் கதைகளில் நிராகரிக்கின்றார். சிறுகதையில் முடிவைவிடவும் அந்த முடிவு கொடுக்கும் திருப்பத்தைவிடவும் அந்த முடிவை நோக்கி கதை பயணிக்கும் விதமும் முக்கியம் என சொல்லாமல் சொல்லுகின்றார்.

சிண்டாய் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 சிறுகதைகள் இருக்கின்றன. பெரும்பாலான கதைகள் பத்து பக்கங்கள் வரை வருகின்றன. அவற்றை வாசிக்கும் போது பக்க எண்ணிக்கை ஒரு பொருட்டாக நமக்கு தெரியவில்லை. அவரின் எழுத்து சீக்கிரமே அந்தச் சிறுகதைகளில் நம்மை இழுத்து கொள்கிறது.

ஐந்தாண்டுகளில் எழுதிய பத்து சிறுகதைகளை இந்தத் தொகுப்பில் தொகுத்திருக்கின்றார். கதைகளை எழுதுவதிலும் பிரசுரிப்பதிலும் அவசரம் காட்டக்கூடாது என மனத்துக்குள் எண்ணமொன்று தொடக்கத்திலிருந்து தனக்கு இருந்துவருவதை தனது முன்னுரையில் எழுத்தாளர் சொல்லியிருக்கின்றார்.

அதோடு “உடனே எழுதத் தோன்ற செய்த நேரடி அனுபவங்களை இன்னுமே ஊறப்போட்டு விவாதித்துக் கதைக்குள் வேறொன்றாக எழுத முயன்றிருக்கிறேன். அந்த வேறொன்றை எட்டாத கதைகளையும் எழுதியும் வெளியிடாமல் தவிர்த்திருக்கிறேன்” என்கிறார். தான் எழுதாமல் இல்லை. எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் தான் எழுதிய எல்லா கதைகளையும்  பகிர்வதில்லை, என இவர் சொல்வதைப் புரிந்து கொள்கிறேன்.

உண்மையில் எழுதாமல் இருப்பதையே ஒர் அடையாளமாக சொல்லிக்கொள்கிறவர்கள் மத்தியிலும் இரண்டு மாதங்களிலேயே தாங்கள் எழுதிவிட்டதை செறிவாக்கம் கூட செய்யாமல் புத்தகமாக பிரசுரித்து கொள்பவர்கள் மத்தியிலும் தன்  எழுத்தின் தரத்தை தன் வாசிப்பின் வழி தானே முதல் விமர்சகராக இருக்கும் இளம் தலைமுறை எழுத்தாளரின் எழுத்துகளைக் கட்டாயம் நாம்  கவனிக்கத்தான் வேண்டும்.

எழுத்தாளர் ஜெ.அரவின் குமார், 2019-ஆம் ஆண்டு முதல் கோலாலும்பூரில் இருக்கும் தேசியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். 2016-ஆம் ஆண்டு பேரவைக் கதைகள் மாணவர் பிரிவில் மூன்றாவது இடத்தையும் 2017-ஆம் ஆண்டு பேரவைக் கதைகள் மாணவர் பிரிவில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு வல்லினம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஐந்து வெற்றியாளர்களின் ஒருவராக இருந்தார். அவருடைய இலக்கிய பயணத்தின் முத்தாய்ப்பாய் 2024-ஆம் ஆண்டு ‘வல்லினம் இளம் எழுத்தாளர் விருது’ பெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்த விருது விழாவை முன்னிட்டு ‘சிண்டாய்’ சிறுகதைத் தொகுப்பையும் வல்லினம் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். எழுத்தாளர் பற்றிய கூடுதல் தகவல்கள் தமிழ்விக்கியில் இருக்கின்றது. ஒருமுறை நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

சிண்டாய் தொகுப்பில் இருக்கும் பத்து கதைகளுமே அந்தக் கதைகளின் கருக்களுமே நமக்கு ஏதோ ஒருவகையில் பழக்கமானதுதான். இப்படிச் சொல்லலாம். இவை புது கதைகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் சில கதைகளை நம்மால் ஒரே வரியில் சொல்லிவிட முடியும். ஆனால் எழுத்தாளர் இந்தக் கதைகளை சொன்ன விதம் அற்புதமாக அவருக்கு கைகூடி வந்துள்ளது.

‘பதில்’ சிறுகதையில் கடைசியில் ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் எழுத்தாளர். ஆனால் அந்தத் திருப்பத்தை மட்டுமே அவர் இக்கதையில் எழுதவில்லை. ‘ஒரு கதையில் கடைசி பக்கம் திருப்பம்தான் முக்கியம். அது வாசகனை புரட்டிப்போட வேண்டும்’  காலம் காலமாக சொல்லப்பட்ட சூட்சுமத்திற்கு எழுத்தாளர் மதிப்பு கொடுக்கவேயில்லை. நாயகன் யாரை மீண்டும் சந்திக்க கூடாது என ஓடுகின்றானோ யாரிடம் இருந்து தப்பிக்க நினைக்கிறானோ அந்த நபரின் பிணமே நாயகனிடம் வருகிறது. அதுவும் அந்த பிணத்தை சுத்தம் செய்து அதற்கடுத்த காரியங்களுக்கு தயார் செய்யவேண்டிய வேலையும் நாயகனுடையதுதான். இதுதான் கதை முடிவு.

 ஆனால் இந்த முடிவு கொடுக்கும் திருப்பத்தைவிடவும் இன்றைய மனித சமூகம் எதிர்நோக்கும் மன நெருக்கடியையும் தன்னைத்தானே தனியாளாக அந்நியனாக ஆக்கிகொள்வதையும் பேசுகிறது. யாரும் யாரோடும் பேச தயாராக இல்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எந்திரம் போல செய்து கொண்டே இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழும் மனிதர்களை நம் கண் முன் நிறுதுகின்றார் எழுத்தாளர்.

இத்தொகுப்பில் இரண்டாவது கதை ‘அடித்தூர்’. தாத்தா பாட்டி கதை. வயதானாலும் இவர்களும் தம்பதிகள்தாளே. வெளியில் வெறுப்பைக் காட்டினாலும் அவர்களின் ஆழ்மனதில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கத்தானே செய்யும். நாளாக நாளாக உறவுகள் அதன் தன்மையை இழந்துவிடுகின்றதா அல்லது தேவைகள் இருக்கும் வரைதான் உறவுகளும் தேவைப்படுகின்றதா என்கிற கேள்விகளை வாசகர் மனதில் எழ வைக்கிறது. அடித்தூர் என்ற தலைப்பு இக்கதைக்கு ரொம்பவும் பொருந்துவதாக அமைந்துவிட்டது. எழுத்தாளர் தன் சிறுகதைகளுக்கு வைக்கும் ஒவ்வொரு தலைப்பும் வாசகர்களிடம் ஒரு விளையாட்டி காட்டி கதை முடியும் நேரம் அந்த விளையாட்டை மேலும் அதிகப்படுத்துகிறது.

‘அதற்கடுத்த நாள் அடித்தூர் மட்டுமே நின்றிருந்த வாழை மரத்தருகில் சிறிய பப்பாளி மரம் பதியம் செய்யப்பட்டு இருந்தது’ என கதையில் ஓரிடம் வருகிறது. இச்சிறுகதையை அடுத்தகட்ட வாசிப்பிற்கும் இந்த இடமே நம்மை அழைத்துச் செல்கிறது.

‘சிண்டாய்’ இத்தொகுப்பின் தலைப்புக்கதை. ‘அல்ஹம்டுலில்லா’ என்னும் இத்தொகுப்பின் சிறுகதைதையில் எனக்கிருந்த எதிர்ப்பார்ப்பை இச்சிறுகதை சரி செய்திருக்கிறது எனலாம். ஒரு கதைக்கு அதன் பின்னணி எவ்வளவு முக்கியம் என சொல்லத்தகுந்த கதை. இன்னொரு இடத்தில் இன்னொரு கதாப்பாத்திரத்தை வைத்துப்பார்க்க முடியாத கதைக்களமாகவும் கதாப்பாத்திரங்களாகவும் இக்கதை அமைந்துவிட்டது.

ஒரு பொண்ணில் ஆளுமை ஓர் அணை எப்படியெல்லாம் தொல்லை செய்து அவனுக்குள் இருக்கும் சாத்தானை வெளியில் கொண்டு வருகிறது என இக்கதையில் தெரிந்து கொள்ளலாம்.  எழுத்தாளர் ஜெ.அரவின் குமாரை அடையாளம்  காட்டக்கூடியதாக நான் நினைக்கும் இந்தக் கதையை நீங்கள் முழுமைமாய் வாசித்தால் நான் இக்கதையின் சூட்சுமத்தை முழுதாய்ச் சொல்லாததற்கான காரணம் உங்களுக்கு பிடிபடும்.

‘எலி’ என்னும் சிறுகதை என்னை இருமுறை வாசிக்க வைத்தது. நாம் அனுபவிக்கும் துன்பங்களையே நாம் விரும்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என சொல்லக்கூடிய கதை. இப்படியும் சொல்லலாம்; நாம் அனுபவிக்கும் துன்பங்களை நாமேதான் உள்ளுக்குள் இரசித்து கொண்டு அதிலிருந்து மீண்டு வர தயங்குகிறோம்.

பெண்ணின் வீட்டில் ஏற்படும் எலி தொல்லையில் தொடங்கிய கதை இன்னொரு எலியை காப்பாற்றுவதில் முடிகிறது.  அந்த எலியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை வாசித்தால் அந்தக் கதாப்பாத்திரம் படும் வேதனை நமக்கும் புலப்படும்.

இச்சிறுகதைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ‘அணைத்தல்’ கதையும் ஒன்று. ஒரு சிறுகதையை எப்படி எழுத வேண்டும் என்று புதியவர்களுக்கு இக்கதையை ஓர் உதாரணமாக சொல்லலாம். எப்படி இருக்கவேண்டுமோ அப்படி எழுதப்பட்ட கதையாக இதனைப் பார்க்கிறேன்.

மனித மனம் எவ்வளவு மோசமானது என நாம் பார்த்து கொண்டேதான் இருக்கின்றோம். எந்த நொடியில் அது எப்படி செயல்படும் என்பதையும் குற்றவுணர்ச்சி எப்போது எப்படி அலட்சியமாக கையாளப்படும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. ‘அணைத்தல்’ கதையில் அதனை திறன்பட சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர்.

இச்சிறுகதையின் முடிவை நெருங்க நெருங்க ஏன் தேவையில்லாததையெல்லாம் எழுத்தாளர் கதையில் சொல்லிக்கொண்டு வருகிறார் என வெளிச்சம் பாய்ச்சியதாய்த் தெரிகிறது. முற்றிலும் எதிர்ப்பார்க்காத முடிவுதான் கதையில் அமைந்திருக்கிறது அதே சமயம் அது எதார்த்தமான முடிவும் கூட.

‘யாருக்காகவும் பூக்காத பூ’ குழந்தைகளின் உலகத்தைக் கதைகளில் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. பலர் முயன்றும் முடியாமல் போயிருக்கிறார்கள். சிறுவர்களுக்காக எழுதுகிறோம் என சொல்லி பெரியவர்களின் உலகையே திரும்ப திரும்ப எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். ‘யாருக்காகவும் பூக்காத பூ’ சிறுவர்களின் உளவியலை சொன்ன முக்கியமான சிறுகதை. இச்சிறுகதையில் கதைச்சொல்லியுமே ஒரு சிறுவன் கதாப்பாத்திரமாக இருக்கிறது. 

கதைச்சொல்லிக்கும் அவனது நண்பன் ரூபனுக்கு இடையே இருக்கும் நட்பும் பொறாமையும் தயக்கமும் எதார்த்தமும்தான் இக்கதையின் ஆதாரம்.  தன் தந்தையின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்திருக்கும் ரூபன் தனது நண்பனை பார்த்த அந்த நொடியில் சிறுவர் உலகத்தில் நுழைகிறார். அடுத்த நொடியே அங்கிருந்து இயல்பு சூழலுக்கு திரும்புகிறான். ரொம்பவும் ஆச்சர்யப்படுத்திய கதைகளில் இதுவும் ஒன்று. ரூபனின் மனநிலை மாறும் அந்த இடத்தை தவறவிட்டால்; இந்த முழு கதையுமே அர்த்தமற்று போய்விடும்.

எழுத்தாளர் அரவின் குமார் தனது ஒவ்வொரு சிறுகதையிலும் வார்த்தை பயன்பாட்டை கவனமாக ஒரு பளிங்கு கட்டிடம் போல ஒன்றின் மேல் ஒன்றென அடுக்கிக்கொண்டே போகிறார். ஒன்றை நாம் கவனிக்காது கடந்து போனாலும் முழு பளிங்கு கட்டிடமே விழுந்து உடைந்து ஒன்றுவிடாமல் போய்விடுகிறது.

‘தைலம்’ ஒரு கதையைச் சொல்லும்போது அந்தக் கதையின் நிலம் சொல்லப்படுவதன் காரணத்தை மீண்டும் சொல்லக்கூடிய கதைகளில் இதுவும் ஒன்று. இரஷ்ய இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கின்றவர்கள் அந்த நாட்டிற்கு சென்றால் அந்தக் கட்டிடங்களும் சாலையும் தங்களுக்கு பழக்கமான ஒன்றாக தோன்றுவதாக சொல்லுவதை கேட்டிருப்பீர்கள்.

அரவின் குமாரின் கதைகளை தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மலேசிய சாலைகளும் இங்குள்ள சில இடங்களும் அதே மாதிரி ஒரு நெருக்கத்தைக் கொடுத்துவிடும். அதற்கு ‘தைலம்’ சிறுகதை ஒரு சான்று.

இங்குள்ள இரவு சந்தையில்தான் கதை நடக்கிறது. இக்கதையை வாசிக்கின்றவர்களும் அந்தச் சந்தையில் ஒரு நபாரென நடந்து செல்கிற உணர்வைக் கொடுக்கின்றார். இங்குள்ள மனிதர்கள், நாடுவிட்டு நாடு வந்து இங்கு பிழைக்கின்றவர்கள், அவர்களின் எதிலி வாழ்க்கை, அவர்களின் வன்மம் அவர்களின் காதல் என எதையும் ரொம்பவும் எதார்த்தமாக சொல்கிறார்.

இக்கதையில்; ஏற்கனவே திருமணமாகி மூன்று வயது மகனுக்கு தாயாக இருக்கும் ரோக்கியாவிற்கு மீண்டும் காதல் வருகின்றது. முதல் திருமணம் கொடுத்த ஏமாற்றத்தில் இருந்தும் இழப்பில் இருந்து தன்னைத்தானே சமாதானம் செய்ய தைலத்தையே பயன்படுத்துகின்றாள். அந்த தைலம் ஒருவிதத்தின் தன்னை விட்டுப்போன கணவனின் நினைவாகவும் இருக்கலாம்.

ஆனால் ஒரு பெண்ணாக அவள் இங்கு எதிர்நோக்கும் சிக்கல்களை சமாளிக்கும் விதமும் தனக்கான இடத்தை தான் காப்பாற்றிக்கொள்ளும் இடமும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. இது அவளின் சுதந்திரமா அல்லது அவள் தனக்கு தானே கொடுத்துக்கொள்ளும் பாதுகாப்பு கவசமா என கதையை வாசித்து நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

‘கேளாத ஒலி’ வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டி 2023-ல் இரண்டாவது பரிசு பெற்ற கதை. உலகமே இன்று கொண்டாடியும் திண்டாடியும் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய அறிவியல் சிறுகதை.

அறிவுத்திறனின் பாதிப்பு உள்ளவர்களின் உடல்மொழியை புரிந்து கொண்டு இயங்கும் ‘எவரிதிங் மேட்டர்ஸ் மீ’ என்னும் செயலியைக் குறித்தும் அதனைப் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியதுதான் இக்கதை. செயற்கை நுண்ணறிவின் சாத்தியங்களைச் சொல்லிச்செல்லும் அதே சமயம் மனித உணர்வுகளை நூறு சதவிதம் அதனால் கணிக்கவோ அதனை ஈடு செய்யவோ முடியுமா என கேட்க வைக்கும் கதையும் கூட.

தன் மகன் கிஷனின் உடல்மொழியை வைத்து அவனது தேவைகளைப் புரிந்து கொள்ள இந்த செயலியை வாங்கியுள்ளார் டேவிட். அந்தச் செயலியில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் குழம்பங்களும் இவரை வாடிக்கையாளர்  சேவை மையத்திற்கு தொடர்பு கொள்ள வைக்கிறது. அந்தச் செயலியில் மாற்றங்கள் வர என்ன காரணம்,. அதுவும் தன் மகன் கிஷனை பார்த்துக் கொண்டிருந்த தனது அக்காவின் மரணத்திற்கு பின்னே இதுவெல்லாம் நடக்க என்ன காரணம் என புரியாமல் தள்ளாடுகிறார் தந்தை.

ஆனால் அவரிடம் அதற்கான பதில் இருப்பதாகவே தெரிகிறது. அதனைச் சொல்ல தயங்குகிறாரா சொல்லமுடியாமல் துடிக்கின்றாரா என்பது எழுத்தாளர் நமக்கு கொடுத்திருக்கும் கேள்வி.

‘அக்காவிற்கு மார்பகத்தில் வளர்ந்திருந்த சிறிய கட்டியைக் கூட கிஷனின் கைகள்தான் அடையாளம் காட்டின. வீட்டு முற்றத்தில் மண்ணையள்ளி மூக்குக்கு அருகே எடுத்து நுகரச் சென்றவனது கைகளைத் தட்டிவிட்டபோது, அவரது மார்பகத்தில் அவனது கைகள் அனிச்சையாகப் பட்டிருக்கின்றன. அவனது அடிக்குப் பிறகுதான் மார்பில் சிறிய அளவில் வளர்ந்த கட்டியை அவர் கவனித்திருக்கிறார்’ என்று எழுத்தாளர் எழுதியிருப்பது இந்த அறிவியல் கதையின் இன்னொரு சாத்தியக்கூறும் இருப்பதாகச் சொல்வதாகத் தோன்றுகிறது. அது மனித மனதில் குடிகொண்டிருக்கும் ஆதி இச்சையான காமத்திடம் போகிறது. கிஷனின் உள்ளத்தில் இருக்கும் இந்த ஆதி இச்சை வெளியேற வழி அறியாது உள்ளுக்குள்ளே அவனை சிதைத்தபடி இருக்கும்தானே. அதற்கான எதிர்வினை அந்தச் செயலியால் வரும் சிக்கல்களுக்கு காரணமா என வாசகர்களை சிந்திக்க வைக்கும் கதை.

‘கோணம்’ வாழ்வில் நாம் பார்க்கும் கோணத்தை மறுபரிசீலை செய்ய வைக்கும் கதை. இக்கதைக்கரு நமக்கு பழக்கப்பட்டதுதான். ஒருவர் நம்மிடம் வாங்கி சாப்பிடுபவராக நினைப்போம் ஆனால் அவரோ நமது சாப்பாட்டிற்கு பணம் கட்டியிருப்பார்; அவ்வளவுதான் இதை நகைச்சுவையாக சீரியஸ் குறும்படமாகவும் பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் அக்கரு ஒரு எழுத்தாளனின் கைகளில் எப்படி கதையாக பரிணமிக்கிறது என்பதுதான் இச்சிறுகதையில் முக்கியமாகிறது. அந்தக் கருவை சொல்வதற்கு எழுத்தாளர் தேர்வு செய்திருக்கும் கதை மாந்தர்களும் அதற்கான சூழலும் சிறப்பாக அமைந்துவிட்டன. கேமராவில் கோணம் பார்த்து படம் எடுக்க சிரத்தையோடு இருக்கும் நமக்கு சக மனிதனிடம் பழகும் கோணம் கைவருவதில்லை; என்பதும் இக்கதையில் வெளிப்படுகிறது.

‘அல்ஹம்டுலில்லா’. இச்சிறுகதை, இத்தொகுப்பில் கடைசி கதை. குடும்பம் இருந்தும் தனியாக வாழும் 85 வயது மலாய்க்காரரை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு ஒரு மலாய் இளைஞன் வருகிறான். அந்த இளைஞனின் இக்கதையின் கதைசொல்லி. இருவரிடத்திலும் ஒரு மர்மம் இருக்கிறது. வெளியுலகிற்கு அதனை தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். அது வெளிப்பட்டதா அதன் பின் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆழமாக எழுத்தாளர் சொல்லியிருக்கிறார். இக்கதையில் காட்டும் மலாய்க்காரர் குடும்பம் அதன் இயல்பு தன்மையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது. இக்கதையில் வருகிறவர்கள் மலாய்க்காரர்கள் என சொல்லாவிட்டாலும் கூட இக்கதையை சொல்லியிருக்க முடியும்தான். ஆனால் அந்த முதியவர் மறைக்கும் இரகசியத்திற்கு இவர்கள் மலாய் குடும்பமாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பொருட்டு இக்கதையை மலாய்த்தன்னைமை அதிகப்படுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது.

இயல்பாகவே சுமாரான கதைகளையும் தன்னுடைய கதை சொல்லும் யுக்தியால் நன்றாக எழுதிவிடுகின்றார் எழுத்தாளர். அதோடு அவரது கதைகளில் நிதானம் தெரிகிறது. அவசரமின்றியே கதையைச் சொல்லுகின்றார். எந்தக் கதைக்கு யாரின் குரலை வைக்கலாம் யார் மூலம் கதையை நகர்த்தலாம் என தெரிந்து வைத்திருக்கிறார். மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்களில் தொடர்ந்து எழுதி வருபவராகவும் இலக்கிய செயல்பாடுகளில் தானும் ஒரு அங்கம் வகிப்பவராகவும் இருக்கின்றார் எழுத்தாளர் ஜெ.அரவின் குமார்.

இந்த அனைத்து கதைகளையும் ஒன்றாக வாசிக்கும் போது சில கதைகளில் ஒரு மாதிரி யுக்தியை எழுத்தாளர் பயன்படுத்தியிருப்பதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எந்தக் கதையையும் சொல்கிற விதத்தில் சொல்லிவிடலாம் என்பது சில சமயங்களில் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் ஆகிவிடும். கதையின் முடிவை வாசித்து இதற்காக இவ்வளவையும் வாசித்தோம் என வாசகன் புலம்பாதவரை சிக்கல் இல்லைதான்.

ஜெ.அரவின் குமாரின் சிறுகதைகளை வாசிக்கையில் பெரிய நம்பிக்கையை அவர் கொடுக்கவே செய்கிறார். இவர் தொடர்ந்து எழுத வேண்டும். அவ்வப்போது தொகுப்புகளையும் வெளியிட வேண்டும்.

“மலேசியாவுல நீங்கல்லாம் என்னப்பா எழுதறீங்க… இந்தியாவுல எழுதற மாதிரியேதான் நீங்கள் எழுதறிங்க.. ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு… கதையில் சொல்வதற்கு உங்ககிட்ட வாழ்க்கை இல்லையா என்ன..?” என யாரும் கேட்டால் “அரவின் குமார் சிறுகதைகளை நீங்கள் வாசித்துவிட்டு சொல்லுங்கள்… எழுதுவதற்கு எங்களிடம் வாழ்க்கை  இருக்கிறதா இல்லையா என நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..” என சொல்லும் தைரியத்தை இந்த இளம் தலைமுறை எழுத்தாளர் கொடுத்திருக்கின்றார்.

உண்மையில் இந்த கடைசி பத்தியைத்தான்  இந்தக் கட்டுரையின் முதல் பத்தியாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் நான் சொல்வதற்கு முன்னமே என் வார்த்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்குத்தான் இவ்வளவு சொல்ல வேண்டியுள்ளது. ஒருவகையில் இந்த யுக்தியை ஜெ.அரவின் குமாரின் ‘சிண்டாய்’ சிறுகதைத் தொகுப்பில் இருந்தும் நான் கற்றிருக்கலாம்.

நீங்களும் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது அதை புரிந்துகொள்வதோடு, மலேசியாவின் புதிய தலைமுறை எழுத்தாளர் எவ்வளவு தீவிரமாக எழுதுகிறார்கள் எனவும் புரிந்து கொள்வீர்கள்.

மீண்டும் அடுத்த மாதம் ஒரு மலேசிய புத்தகத்தோடு அடுத்த மாதம் உங்களைச் சந்திக்கின்றேன்.

000

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *