மாதம் ஒரு மலேசிய புத்தகம்-8

கையறு; வரலாற்றின் ஆறா வடு

ஆகஸ்ட் 31, மலேசிய சுதந்திர தினம். இம்மாதத்தில் 68-ஆம் ஆண்டுச் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். கொண்டாட்டங்களை உருவாக்குவதற்குப் பலவகைகளில் திண்டாட்ட்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதையும் இன்றைய சிரிப்பிற்காக முந்தைய தலைமுறையினர் சிதைந்து போனதையும் நம்மால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

வரலாறு முழுக்க எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் தெரியுமா என்ற ஆவணங்கள் இருப்பது போலவே அதற்க்ய் சற்றும் குறைவக்காத புனைவுகளும் உண்டு.

ஆவணங்களை வாசிக்கும் போது யாரோ சேகரித்து வைத்திருக்கிறார்கள்; நாம் தெரிந்து கொள்கிறோம் என்கிற மனநிலையும், அதையொட்டிய புனைவுகளை வாசிக்கையும் நாமுமே நேரடியாக அந்த வாழ்வை அனுபவித்ததாய் உணரவும் செய்கின்றோம். அதனால்தான் என்னவோ சுதந்திரத்திற்கு முந்தைய வாழ்க்கையும் சுதந்திரத்திற்கான தியாகத்தையும் இன்றளவும் பலவேறு விதங்களின் புனைவுகளாக பலரும் மீளுருவாக்கம் செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஓர் ஆவணப்படமோ ஆவணங்களின் தொகுப்போ ஏற்படுத்தாத அதிர்வுகளைப் பல்வேறு கேள்விகளை ஒரு புனைவு ஏற்படுத்திவிடுகின்றது. ஏனெனில் புனைவுகளுக்குப் பல முகங்கள் இருக்கின்றன. அதன் பின்னணியில் பல காரணக் காரியங்களும் இருக்கின்றன.

வரலாற்றை இன்னொரு பார்வையில் பார்ப்பதிலிருந்து, வரலாற்று திரிபுவரை புனைவுகளின் வழி வாசித்து அதற்கான விவாதங்களில் நாம் ஈடுபடுகின்றோம்.

“சிங்கங்களுக்கு அவற்றின் சொந்த வரலாற்றாசிரியர்கள் கிடைக்கும் வரை, வேட்டையின் கதை எப்போதும் வேட்டைக்காரரைப் போற்றுவதாகவே இருக்கும்” எனச் ‘சினுவா அச்சிபே’ சொல்வதும் இதைத்தானே. வரலாறுகள் புனைவுகளின் வழி சொல்லப்படும் போதுதான் இங்கு வேட்டையாடும் சிங்கத்தின் பசியும் தெரியும், தப்பியோடும் மானின் பசியும் தெரியும். இதற்கிடையில் இரண்டையும் வேட்டையாடி விளையாடும் சூழ்ச்சியாளர்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

மலேசியாவில், சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தைக் களமாக வைத்தும் ‘சயாம்- பர்மா இரயில் தண்டவாளத்தை அமைக்க இழுத்துச்செல்லப்பட்ட களத்தையும் இரப்பர் தோட்டங்களுக்கு ஒப்பந்தக்கூலிகளாக வந்தவர்களின் பாடுகள் போன்றவற்றை மையமாக வைத்து பல படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் நாவல்களே எப்போதும் தனியாகவும் ஆழமாகவும் இருந்து வாசர்களுடன் தன் வலியைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் நேரடியாக அனுபவிக்காத வாழ்க்கையைச் சிறுகதையில் வாசித்து அதனுள் நுழைவதைவிடவும் நாவல்களை வாசிப்பதன் மூலமாக அதன் நிகரனுபவங்களை வாசகர்களால் உணர முடிகின்றது. அதே சமயம் அவற்றில் சிலவற்றை இன்று வாசிக்கையில் அதற்கான காத்திரத்தை இழந்துவிட்டதாகச் சில விமர்சகர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.

அந்த வகையில் அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, ‘லங்காட் நதிக்கரை’, ‘இமயத்தியாகம்’, ‘விடியல்’, ‘கருங்காணு’ போன்ற நாவல்களையும் சை.பீர்.முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’, சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’, ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ (தலைப்பினால் அதிகம் அறியப்பட்ட நாவல் இது; தலைப்பிற்கு ஏற்ற களத்தை எழுத்தாளர் பயன்படுத்தவில்லை என்கிற விமர்சனமும் இருக்கிறது) எனப் படைப்புகளைச் சொல்லலாம். அந்த வரிசையில் இடம் பிடிக்கத்தக்க நாவலாக கோ.புண்ணியவான் எழுதிய ‘கையறு’ நாவலைச் சொல்லலாம்.

‘கையறு’. மலேசியாவின் நவீன இலக்கியம் ஓர் அலையாக எழுந்த போது அதன் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோ.புண்ணியவானின் நாவல். இதுவரையில் நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, மூன்று சிறுவர் நாவல்கள் எனத் தொடர்ந்து இலக்கியத்தில் இயங்கி கொண்டிருக்கின்றார். அதோடு இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் நட்பு பாராட்டுபவராகவும் இருக்கின்றார். ‘கையறு’ 336 பக்கங்கள் கொண்ட நாவல்.

‘கோ.புண்ணியவான் பதிக்கம்’ இந்த நாவலை வெளியிட்டுள்ளார்கள். மலேசியாவில் இந்த நாவலை நேரடியாக எழுத்தாளரிடமும், தமிழகத்தில் உள்ளவர்கள் இந்த நாவலை ‘பி பார் புக்ஸ்’ கடையிலும் வாங்கலாம்.

புத்தகத்தில் தொடக்கமாக ‘காலம் கவிழ்ந்த கோரத்தாண்டவம்’ என்னும் நாவல் பற்றிய கட்டுரையை எழுத்தாளர் சு.வேணுகோபால் எழுதியிருப்பார். பதினான்கு பக்கங்கள் உள்ள அந்தக் கட்டுரையில் இந்த நாவலின் ஒட்ட்டுமொத்த சித்திரத்தையும் கொடுத்திருப்பார். அதனை நான் வாசிக்கும் போது சில பக்கங்களில் நிறுத்திவிட்டேன். நாவலில் இருக்கும் பல சுவாரஸ்யங்கள் முன்னமே உடைபடுவதை நான் விரும்பவில்லை. நாவலை வாசித்து முடித்த பிறகே அந்தக் கட்டுரையை வாசித்தேன்.

நாவலை மேலும் புரிந்து கொள்ளவும் இதுவரை நான் வாசித்த அந்த நாவலை மீண்டும் மனதில் ஓட்டிப்பார்க்கவும் அது உதவியாக இருந்தது. அந்தக் கட்டுரையைப் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் வைத்திருந்தால் இந்தச் சிக்கல் இருந்திருக்காது எனவும் சொல்வதற்கில்லை. இன்றைய வாசகர்களில் பலரும் ஒரு நாவலை முன்னமே தெரிந்து கொண்டுதான் நாவலை வாசிக்கவே ஆரம்பிக்கின்றார்கள். அவர்களுக்கு இந்நாவலை வாசிப்பதற்கு முன்னமே ஒரு வழிகாட்டியாக அந்தக் கட்டுரை அமையும்.

‘கையறு’ நாவல் வெளிவந்த சமயம் முகநூலில் சிலர் இந்த நாவலை வாசிக்காமலேயே அதன் அறிமுகத்தை வைத்து ‘இவர்களுக்கு இதைத்தான் எழுத முடியும்; திரும்பத்திரும்ப இதையேத்தான் எழுதிகிறார்கள்’ என்பதைத்தான் அவர்களின் மிகக்கூர்மையான விமர்சனப் பார்வையாய் வைத்துவிட்டு அதைவிட முக்கியமான அன்றாட அரட்டைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

இன்னும் எத்தனைதான் எழுதினாலும் சொல்லி முடிக்க முடியாத மனித துயரங்களில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அடுத்த ஒரு தலைமுறை மீண்டும் இதே துயரத்தை எழுதினாலும் அது இன்னொரு நிகரனுபவத்தைத் தானே கொடுக்கும். இதுபோன்ற போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகிறவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

‘கையறு’ நாவலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். மலேசியாவில் குறிப்பாகத் தோட்டங்களில் ஜப்பானிய இராணுவம் ஏற்படுத்திய தாக்குதல்களும் மக்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகளும். இரண்டாவது பகுதியாக்க இருப்பது, சயாமிலிருந்து பர்மாவிற்கு இரயில் தண்டவாளத்தைப் போடும் வேலையில் கைநிறைய காசு சம்பாதிக்கலாம் என சூழ்ச்சி செய்து ஏமாற்றி அழைத்துச் சென்றவர்கள் எதிர்கொண்ட துரோகமும் துயரமும்.

நாவலின் தொடக்கமே தேர்ந்த எழுத்தாளரின் கதை சொல்லும் முறையில் வாசகர்களை உள்ளே இழுத்துக்கொள்கிறார் எழுத்தாளர்.

தலைப்பிற்கு ஏற்றபடி; நாவல் முழுக்க மனிதர்களின் கையறு நிலைதான் நம்மைக் கலங்கடித்துக்கொண்டே இருக்கிறது. தன்னுடைய தேவைக்கும் தான் அடைய நினைப்பதை அடையவும் மனிதன் எந்த நேரத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறான். அதற்கு நேர்மாறாக எந்தச் சூழலிலும் தன்னால் முடிந்தவரை சக மனிதரைக் காப்பாற்ற இன்னொரு மனிதன் தயங்கியதே இல்லை என்பதை எழுத்தாளர் அந்தந்த கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லிச்செல்கிறார்.

இந்நாவல் ஆசிரியர்; சிறுகதைகளுக்கு அதிகமே பழகியயவர் என்பதால் என்னவோ, நாவலில் ஆங்காங்கே சிறுகதை பாணியிலேயே சிலவற்றை எழுதியிருக்கின்றார். ஜப்பானியர்களிடம் சிறுமி ஒருத்திய தன் சுய இலாபத்திற்காய் காட்டிக்கொடுக்கும் நபர், காம இச்சையில் திரியும் ஜப்பானிய இராணுவ வீரன் கொல்லப்படுவதும் அதற்கான சம்பந்தமே இல்லாத இன்னொருவன் பலியாவதும், பிள்ளைகளின் பசிக்காக முதலாளியின் ஆசைக்கு இணங்கும் பெண், சுய இலாபத்திற்கு 12 வயதே ஆன சிறுமியை 18 வயது அதிகமுள்ளவருக்குத் திருமணம் செய்து வைத்தல், தம்பி இறந்துவிட்டதாய்ச் சொல்லி தம்பியின் மனைவியை அடைய சூழ்ச்சிகள் செய்யும் அண்ணன். தன் ஆசை மகள் தோட்டத்தில் சீரழிக்கப்பட்டது தெரியாத தந்தை, இப்படியாகப் பல வெவ்வேறு மனிதர்களின் கதைகளை இந்நாவல் வழி ஒரு நேர்கோட்டிற்குள் கொண்டுவந்திருப்பார் ஆசிரியர். இவை நாவலில் இருந்து தனியே எடுத்தாலுமே சிறுகதையாகத் தனித்து நிற்கக்கூடியதுதான்.

இந்த நாவலில் நானும் எதிர்ப்பாராத வருகை என்றால் அது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வருகைதான். ஆனால் இதுவரையில் இங்குக் கட்டமைக்கப்பட்டது போல அல்லாமல் இன்னொரு முகமாய் அந்தக் காட்சியை நாவலில் காண முடிகின்றது. நேதாஜியால் அன்றைய மலேசிய தமிழர்கள் அடைந்த ஏமாற்றம் குறிப்பிடத்தக்கதாய் இந்நாவலில் அமைந்துள்ளது. அதனை வாசிக்கையில் இன்னமுமே அந்தப் பகுதி நீண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. சிலர் இன்றும்கூட இதற்கு மாற்றுக்கருத்தை வைத்திருக்கலாம்.

அதேபோல உலகமே இன்றும் துயரக்கதையாய்ப் பேசிக்கொண்டிருக்கும் ‘ஹிரோஷிமா’ ‘நாகசாக்கி’ அணுகுண்டு சம்பவத்தைக் காரணம் காட்டி; நல்லவேளையாக இவர்கள் பிழைத்தார்கள் எனப் பெருமூச்சு விட வைக்கின்றார். ஆனால் அந்தக் காட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்து சென்றிருக்க வேண்டாம். ஜப்பானியர்கள் நாட்டிற்குள் வரும்போது எழுத்தாளர் காட்டிய அக்கறையும் நுணுக்கங்களும் அவர்கள் புறப்படும் போது சட்டென முடிகிறது.

எழுத்தாளர் கோ.புண்ணியவானின் கையறு நாவலில் இருந்து சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்நாவல் குறித்த நீண்டதொரு விமர்சனத்தை எழுதுவதைவிடவும் இந்நாவலை வாசகர்கள் தேடி வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதற்கு ஏற்றார் போல இந்த மாதத்திற்கான கட்டுரையை எழுதியிருக்கின்றேன்.

ஆகஸ்ட்; மலேசிய மண்ணின் சுதந்திர மாதம்; இந்த மாதத்தில் நீங்கள் வாசிக்க இந்த நாவல் சரியான நாவலாக இருக்கும் என்பது இந்த வாசகனின் எண்ணம்.

சக மனிதர்களின் துயரத்தை வாசித்து அறிவதன் வழி நம்முடன் வாழும் பலருக்கு ஆறுதல் சொல்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வோம். மீண்டும் அடுத்த மாதம் இன்னொரு மலேசிய புத்தகத்தோடு நாம் சந்திக்கலாம்.

00

தயாஜி குறிப்புகள்

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

2 thoughts on “மாதம் ஒரு மலேசிய புத்தகம்-8

  1. நன்றி நடுகல் இணைய இதழுக்கும், தம்பி தயாஜி அவர்களுக்கும். கட்டுரை தொடக்கம் முதல் இறுதிவரை அதன் எழுத்து வேகம் குறையவில்லை. நாவலில் மைய தரிசனம் பாதித்துவிடாத தேர்ந்த கட்டுரை. அதோடு நாவலின் கதையைச் சொல்லிவிடாமல் தொட்டுத் தொட்டுக் காட்டி விமர்சித்த விதமும் பாராட்டுக்குரியது. இந்நாவல் சென்னை யாவரும் பப்லிகேசனில் கிடைக்கும்.

    1. உங்கள் வார்த்தைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் அன்பும் நன்றியும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *