நிலங்களின் நெடுங்கணக்கு – கூட்டலாம் கழிக்கலாம்
இது ஒரு மர்ம நாவல். மதியழகன் இந்நாவலை எழுதியிருக்கின்றார். வாசிக்கின்றவர்களை சில பக்கங்களிலேயே கட்டிப்போட்டு விடும் அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் நாவல்களில் இதுவும் ஒன்று. சுவாரஸ்யத்தை மட்டுமே நம்பி எழுதப்பட்டிருக்கும் நாவல்களில் சில எதிர்பாராத வெற்றியை அடைந்துவிடுகிறது. அந்த வெற்றி என்பதுவும் கூட வெளிவந்த சமயத்தில் எவ்வளவு விற்றது. எவ்வளவு பேர் வாங்கினார்கள் என்பதை பற்றியதாக மட்டுமே இருக்கிறது. விற்றது வாங்கினவர்கள் என இரு தரப்ப்புகளாகவே இன்றைய காலக்கட்டத்தில் சொல்லவேண்டியுள்ளது. ஏனெனில் வாசிக்க விரும்புகிறவர்கள் ஆளுக்கொரு புத்தகத்தை வாங்குகிறார்கள். அரசியல் பலமும், பண பலமும் இருக்கின்றவர்கள் நூறு முதல் ஐநூறு புத்தகங்களின் கட்டணத்தைக் கொடுத்து ஒரே புத்தகத்தை வாங்கி சென்றுவிடுகிறார்கள். ஆகவேதான் புத்தகம் விற்ற கணக்கும் அதனை வாங்கியவர்கள் கணக்கும் இன்று தனித்தனியாக இருக்கிறது. அதிலும் வாசித்தவர்கள் கணக்கு சில சமயங்களில் நம் கண்ணுக்கே ஆகப்படாமலும் போய்விடுகிறது.

நிலங்களின் நெடுங்கணக்கு எனும் இந்நாவல் வெறும் சுவாரஸ்யத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அதையும் தாண்டி வாசகர்களின் சுய தேடலுக்கு சிலவற்றை இந்நாவலில் வைத்திருக்கின்றார் நாவலாசிரியர். அதுவே இந்நாவலை வாசித்து எழுதவும் உங்களுக்கு அறிமுகம் செய்யவும் தூண்டுகிறது.
இதுவெல்லாம் கமர்சியல்.. பெரிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லையே என சில சொல்லுவதும் நமக்கு கேட்காமலில்லை. தங்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டுமே ஒரு எழுதும் முகநூல் குறிப்புகளுக்கு அவர்கள் கவிஞர் என்று எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைப்பதைவிட இதுவொன்றும் மோசமில்லை. அல்லது இப்படியும் சொல்கிறார்கள். “நன்றாக எழுதக் கூடியவர்தான் இன்னும் முயற்சி செய்யவேண்டும்…” அதாவது அவர்கள் எழுதுவது எழுத்தே இல்லை என்றும் இதுவெல்லாம் இலக்கியமே கிடையாது என்றும் நேரடியாக சொல்ல மாட்டார்களாம்.
இனி இந்நாவலுக்கு போகலாம். ‘நிலங்களின் நெடுங்கணக்கு’ மலேசிய நாட்டை பின்புலமாக கொண்டாலும் அதை தாண்டியும் வாசகர்களை நகர்த்துகின்றது. நாவலில் கூறப்பட்ட விபரங்களைக் ‘கூகலிடம்’ கேட்டால் , அதுவும் உண்மைதான் என்பதற்கான கட்டுரைகளும் காணொளிகளும் உள்ளதை நமக்கு காட்டுகிறது. அது இந்நாவல் மீதான நம்பகதன்மையை அதிகப்படுத்துகிறது. வரலாற்று சான்றுகளை தனது புனைவுக்காக சரியாகவே எழுத்தாளர் கையாண்டுள்ளார். அந்த வரலாற்று சான்றுகளை நாம் தனிப்பட்ட முறையில் தேடி வாசிக்க வாசிக்க அது இன்னொரு பக்கம் சென்றுவிடும். அது இந்நாவலில் சொல்லியிருந்த இடத்தையும் தாண்டி இன்னொரு இடமாக இருக்கும்.
மலேசியர்கள் மட்டுமல்லாது வெளி நாட்டவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் கதையோட்டத்தை ஆசிரியர் கையாண்டிருக்கின்றார். நம்மை சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் இருப்பதையும் நாம் எப்போதும் யாராலோ கவனிக்கப்படுகின்றோம் என்ற பய உணர்வை வாசகன் மனதில் இந்நாவல் வைக்கிறது.
உதாரணமாக , இரவில் வீடு வந்து சேர்ந்த நாயகன் வரவேற்பறையில் அமர்ந்து எதிரே இருக்கும் கடிகாரத்தை பார்க்கிறார். எப்போதும் போல செய்யவேண்டியவற்றை செய்துவிட்டு உறங்கச் செல்கிறார். மறுநாள் அந்த பூட்டிய வீட்டினுள் வரவேற்பறையில் இருந்த எல்லாமே வேறு மாதிரி மாற்றி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அது நாயகனை பதட்டமடையச் செய்கிறது.
வாசிக்கையில்; இவ்விடத்தில் நம்மால் அதிர்ச்சியை அடக்காமல் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் யோசித்தால் இது அப்படியொன்றும் புதிதாக இல்லையே என்றும் ஏற்கனவே ஏதோ ஒரு சினிமாவில் இதனை பார்த்ததாக நாம் நினைக்கக்கூடும். ஆனால் அப்படி நம்மை வேறொன்றை யோசிக்க விடாமல் நாவல் அதன் வாசிப்பில் நம்மை அதனுள் இழுத்துச் செல்கிறது. இம்மாதிரி பல மர்மங்கள் பரபரப்பும் அடங்கியதுதான் இந்த நாவல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை கட்டிப்போடுகின்றார் நாவலாசிரியர். வழக்கமாக இது இதழ்களில் தொடராக வந்த கதையை பின்னர் நாவலாக வெளியிடும் போது நமக்கு கிடைக்கும் வாசிப்பு அனுபவம். எனக்கு சுஜாதாவின் பல தொடர்களை நாவலாக வாசிக்கும் போது அந்த அனுபவம் ஏற்பட்டது.
காணாமல் போயிருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரை நாயகன் தேடிச் செல்கிறார். அவரது பயணத்தில் அவர் சந்திக்கும் சவால்களும் மர்மங்களும்தான் கதை.
இந்நாவலை வாசிக்கையில் எனக்கு செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நினைவுக்கு வந்தது. அப்படத்தை இடைவேளை வரை இருக்கையை விட்டு நகராமல் ரசித்தேன். காணாமல் போன தந்தையை அதிகாரிகள் உதவியுடன் தேடிச்செல்லும் மகள். அவளின் பயணமும் உடன் வருபவர்கள் சந்திக்கும் சவால்களும் இன்னல்களும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கும்.
கடைசியில் மூன்று பேர் மட்டும் தங்கிப்போவார்கள். அவர்களின் தொடர் பயணத்தின் வெற்றியாய்ச் சோழ ராஜ்ஜியத்தை கண்டுபிடித்து விடுவார்கள். அங்கே ஒரு நபர் இவர்களை பின்தொடர்வார். வெற்றிக்களிப்பில் இடைவேளை என்று போடுவார்கள்.
அதுவரையே அது நல்லதொரு கதையாக பார்ப்பவரை கட்டிப்போடும் கதையாக இருந்தது. அதே போலத்தான் இந்த முழு நாவலும் அமைந்திருக்கிறது.
நாவலில் முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இப்போது அதைப்பற்றி கேள்விகள் எழும்போது அது எழுத்தாளரின் விருப்பம் அல்லது அது வாசகர்களின் கணிப்புக்கான இடம் என சொல்லப்படலாம்.
இந்நாவலை நீங்கள் வாசிக்கும் போது; அதன் முடிவு உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கலாம். அவரவர் வாசிப்பில் அவரவர் ஏதோ ஒன்றைக் கண்டறிந்து கொள்கிறோம்.
மொத்தத்தில் ஒரு மலேசிய மர்ம நாவலின் வாசிப்பின் ருசியை இந்த நாவலில் நாம் கண்டறியலாம். தங்குதடையின்றி வார்த்தைகளை எழுத்தாளர் கையாண்டிருக்கிறார். இன்றைய பரபரப்பு சூழலில் ஒரு மாற்றத்துக்காக இந்நாவலை வாசிக்கலாம்.
இது மர்ம நாவல் என்பதாலேயே நாவலுக்குள் சென்று உங்களுக்கு அதிகம் சொல்லவில்லை. அது உங்கள் வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும். இந்தக் கட்டுரையில் சுவாரஸ்யம் என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்தியிருப்பேன். ஏன்? அது இக்கட்டுரையின் வழி நான் கொடுக்கும் வாசக இடைவெளி.

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்
எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.
மின்னஞ்சல் – tayag17@gmail.com