–பிரான்சு காப்கா
மாமன்னர் செய்தி அனுப்புகிறார். அவரின் கீழான குடிமகனும் அவ்வொளிமிகு பேரரசச் சூரியனிடமிருந்து ஒரு மூலைக்கு வீசியெறியப்பட்ட மெல்லிய கரு நிழலான மக்களில் ஒருவனாகிய உனக்கும் மாமன்னர் தன் சாவுப் படுக்கையிலிருந்து செய்தி அனுப்புகிறார். தன் தூதனைப் படுக்கைக்கு அருகில் மண்டியிடச் செய்து அவன் காதில் கிசுகிசுத்து, அந்தச் செய்தி எவ்வளவு முக்கியமானதாய் இருந்திருந்தால் தூதனை மறுபடியும் அதைச் சொல்லச் சொல்லி உறுதிபடுத்தி அனுப்பியிருப்பார். அதுவும் தன் உயிர் பிரிவதைப் பார்க்க கூடங்களிலும் மாடங்களிலும் கூடியிருப்போர் முன்னிலையில்.
அந்தக் களைப்பறியாத திடமான தூதுவன் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு தனக்கான பாதையை வகுத்துக் கொண்டு முன்னேறினான். கூட்டத்தில் யாரும் அவனைத் தடுத்தால் தன் மார்பில் பொறிக்கப்பட்டிருக்கும் அரச முத்திரையைக் காட்டிடுவான். பின்னர் இன்னும் வேகமாக முன்னேறிடுவான். ஆனால் அந்தக் கூட்டமோ முடிவற்றது. அந்தக் கூட்டத்தை மட்டும் அவன் தாண்டிவிட்டால் விரைவில் அவன் கைகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்கலாம். பாவம் அந்தத் தூதுவன் இன்னும் கோட்டையின் உட்பகுதியையே கடந்தபாடில்லை. அவனால் கடக்கவும் முடியாது. ஒருவேளை அவன் கடந்தாலும் அவன் இன்னும் கடந்திட நீண்ட படிக்கட்டுகளும் உட்கூடங்களும் வெளிக்கூடங்களும் இன்னும் சில படிக்கட்டுகளும் வெளிக்கோட்டையும் இன்னொரு கோட்டையும் என்று அடுத்த ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். இவை யாவையும் கடந்து ஒருவேளை அவன் வெளி வாயிலைத் தாண்டிவிட்டால் அவன் இன்னும் கடந்திட அந்தத் தலைநகரமே தன் வானுயரக் கோபுரங்களோடும் முடிவற்ற தெருக்களோடும் காத்திருக்கும்.
யாராலும் இவை யாவையும் கடந்திட ஒருபோதும் முடியாது. செத்துப்போன ஒருவன் சொன்ன செய்தியைத் தாங்கி வரும் ஒருவனால் மட்டும் முடியுமா என்ன ?
—- அதெல்லாம் இருக்கட்டும் மாலைப் பொழுதில் சன்னலருகே அமர்ந்து அந்தச் செய்தி என்னவாயிருக்கும் என்று நீங்கள் கனவு காணுங்கள்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர். புத்தகங்களுக்குள்ளும் அவை இல்லாத நேரத்தில் தன் எண்ணங்களுக்குள்ளும் தொலைந்து போகக்கூடியவர்

