மாமரக்கட்டைகளும் தென்னையோலையும்

குபேரவனம் மிக அடர்ந்த வனமல்லதான். இருந்தும் பறந்து விரிந்து கிடக்கும் வனம் தான். ஒவ்வொரு கோடை சமயத்திலும் குபேரவனத்திலுள்ள குளம் குட்டைகள் அனைத்துமே தண்ணீரின்றி காய்ந்து பாளம் பாளமாய் வெடித்துக்கிடக்கும்.

குட்டையில் ஏதேனுமொரு பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கிடக்கும். வெய்யிக் காலத்தில் நீரின்றி பல விலங்குகள் வருடா வருடம் வனமெங்கிலும் இறந்துவிடும் துயரநிகழ்வுகள் நடந்துவிடுகிறதுதான். 

மழை என்று பெய்யத்துவங்கினாலும் கொட்டித்தீர்த்துவிடும் குபேரவனத்தில். ஒருநாள் மழையிலேயே குளம் குட்டை யாவுமே நீரால் நிரம்பிவிடும். வெய்யல் காலத்தில் எலும்புகள் தெரிய இளைத்துப்போன விலங்குகள் யாவும் பெரும் மழையால் புத்துணர்ச்சிபெற்று சுறுசுறுப்பாக இயங்கத்துவங்கும்.

இரண்டு வார காலத்தில் குபேரவனம் பூத்துக்குலுங்கும் வனமாக மாறிவிடும். இந்த வனம் வாழ உகந்த வனம் தான் என விலங்கினங்களும் பறவையினங்களும் நம்பிக்கை வைக்கும்.

குபேரவனத்தில் ராஜா, கூஜா என்கிற இரு அண்ணன் தம்பி சிங்கங்கள் வாழ்க்கையை தனித்தே ஓட்டி வாழ்ந்து வந்தன. இரண்டுமே சோம்பேறித்தனத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. வேட்டைக்கு என்று இரண்டும் கிளம்பினால் எப்படியோ அவைகளுக்கென்று கால் ஒடிந்த காட்டெருமையோ, ஓடத்தெரியாத மான்குட்டியோ சிக்கிவிடும். அந்தவிதத்தில் இரண்டுமே அதிர்ஷ்டசாலிகள் தான்.

ராஜா, கூஜாவின் சோம்பேறித்தனம் வனமெங்கிலும் பிரசித்தம் தான். எல்லா விலங்குகளுமே இரண்டு சிங்கங்களையும் பார்த்துவிட்டால் நக்கலும் நையாண்டியும் செய்யத்துவங்கிவிடும். ‘வேட்டைக்கி கிளம்பிட்டானுங்க ரெண்டுபேரும்.. இன்னிக்கி வனமே அதிரும் பார்த்துக்க!’ என்று பறவையினங்கள் கிண்டலடிக்கும்.

மற்ற விலங்குகள் தங்களை நக்கலடிப்பது ராஜாவுக்கும் கூஜாவுக்கும் தெரியுமென்றாலும் அதற்காக இரண்டும் கோபமே படுவதில்லை. இரண்டும் மரநிழலில் பகலில் குட்டித்தூக்கம் போட்டாலும் குரங்குக்கூட்டம் ராஜாவையும் கூஜாவையும் தூங்கவிடாது. ராஜாவின் தலையில் ஒன்று நறுக்கென கொட்டு வைத்துவிட்டு ஓடிப்போய் மரத்தில் ஏறிவிடும், கூஜாவின் வயிற்றில் ஒரு குரங்கு நறுக்கென கிள்ளி வைத்துவிட்டு ஓடிப்போய் மரத்தில் ஏறிக்கொள்ளும். குரங்குகளுக்கு இது பொழுது போக்கு.

ராஜாவும் கூஜாவும் ‘சும்மாயிருங்கடா குரங்குப்பயல்களா! தூங்கீட்டு இருக்கறவங்களை தொல்லை பண்ணக்கூடாது.. அப்புறம் சாமி உங்க கண்ணை நோண்டி உட்டுரும் பார்த்துக்கங்க!’ என்று சொல்வதோடு சரி. குரங்குகளும் தொடர்ந்து தொல்லை செய்துகொண்டே இருக்காது.

இப்படியான சோம்பேறி சிங்கங்களான ராஜாவுக்கும் கூஜாவுக்கும் சிரமப்படாமல் உணவு கிட்டவேண்டுமென்ற எண்ணம் உதித்திருந்தது. அதற்கு என்ன தெரிந்திருக்க வேண்டுமெனத்தான் இரண்டுக்குமே தெரியவில்லை.

அதாவது ’இப்போது எங்களுக்கு வயிறு பசிக்கிறது. உணவே வா!’ என்று இரண்டும் சேர்ந்து சொல்லிய மறுகணமே உணவானது இவர்கள் முன்பாக இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி? பார்த்த விலங்குகளிடமெல்லாம் அதுபற்றி விசாரிக்கத்துவங்கின இரண்டும்.

இறுதியாக குபேரவன குளத்தில் தன் நீண்ட அலகால் ஜிலேபி மீனை உயிருடன் கவ்வி விழுங்கிக்கொண்டிருந்த கொக்கு ஒன்றிடம் ராஜாவும் கூஜாவும் சென்று தங்கள் பிரச்சனையை எடுத்துக்கூறின. கொக்குவிற்கு முதலில் இந்த விசயத்தைக்கேட்டதுமே ஆச்சரியமாய் இருந்தது.

இவைகள் இரண்டும் நிஜமாகவே சிங்கங்கள் தானா அல்லது அசிங்கங்களா? சும்மா படுத்துக்கொண்டே உணவு வரவழைத்து உண்ணும் ஆசையென்ன சாதாரணப்பட்டதா? அதற்கு பெரிய கொடுப்பினை வேண்டுமல்லவா!

“இந்த குபேரவனத்தின் கிழக்கே கடைசியில் போதிமரம் என்றொரு பெரிய மரம் பெருத்த கிளைகளோடு நின்றிருக்கிறது. அதனடியில் நீளமாக தாடிவளர்த்த ஒரு கிழ முனிவர் எந்த நேரமும் சும்மாதான் அமர்ந்திருக்கிறார். அப்படி ஒருமனிதன் நான் பார்க்கும் சமயமெல்லாம் சும்மா அமர்ந்திருக்கான் என்றால் அந்த கிழவனாருக்கு ஏதேனும் வித்தை தெரிந்திருக்க வேண்டுமல்லவா! நீங்கள் இரண்டுபேரும் அந்த முனிவரை சென்று சந்தித்தால் அவர் ஏதேனும் வழிவகையை நிச்சயம் உங்களுக்கு தருவார்.” என்றது கொக்கு.

அதைக்கேட்டதும் ராஜாவும் கூஜாவும் மகிழ்ச்சியடைந்தன. ‘இத.. இதெ.. இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம் கொக்கே!’ என்று மகிழ்ச்சியில் குளக்கரையில் குதியாளம் போட்டன இரண்டும். பின்பாக இன்றே சென்று முனிவரை சந்தித்துவிடும் ஆர்வத்தில் இரண்டும் கிழக்கு திசை நோக்கி கிளம்பிச்சென்றன.

குபேரவனத்தில் இவ்வளவு தூரமெல்லாம் நடந்தே அறியாத ராஜாவும் கூஜாவும் சிரமப்பட்டு கிழக்கே முன்னேறிச்சென்றன. ஆனால் வனம் நீண்டுகொண்டே சென்றது. இரண்டும் மாலைவரை நடந்தே களைத்துப்போய் ஒரு பெரிய மரத்தினடியில் ‘அப்பாடா!’ வென சாய்ந்துவிட்டன. அவ்வளவுதான். செரியான தூக்கம் இரண்டுக்கும்.

விழித்தெழுந்து பார்க்கையில் புதிய விடியலே உதயமாகியிருந்தது வனத்தில். ஒரு இரவு முழுக்க அடித்துப்போட்டது போல இரண்டும் அசதியில் தூங்கியிருக்கின்றன. இரண்டும் சற்றும் தாமதிக்காமல் மீண்டும் நடக்கத்துவங்கின.

செல்லும் வழியில் குளமொன்றில் வயிறு நிரம்ப தண்ணீரை குடித்துக்கொண்டு சென்றன. ஒருவழியாக போதிமரத்தை இரண்டும் வந்து சேர்ந்தன. மரத்தினடியில் கொக்கு சொன்னது போன்றே தாடிவைத்த கிழவர் ஒருவர் சம்மணமிட்டு கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்.

“டேய் கிழ முனிவா! தாடிவச்ச முனிவா!” என்று கூஜா சப்தமிட்டது.

“என் அருமைச்சிங்கமே! என்னிடம் சொல்.. எதற்காக இருவரும் மிக நீண்ட பயணம் செய்து என்னை தரிசிக்க வந்தீர்கள்?” கண்களைத்திறவாமலேயும், வாயைத்திறவாமலேயும் முனிவர் பேசுவதை ராஜா பார்த்து மிரண்டது.

“என்ன ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாய்? வாயில் என்ன காட்டெருமை மாமிசமா?”

“இல்லை முனிவா! வெறும் வாய் தான். அதற்கு ஆகாரம் பசியெடுக்கையிலெல்லாம் வேணும் என்பதற்காகத்தான் உன்னைப்பார்க்க இரண்டு நாட்கள் பயணித்து வந்து சேர்ந்தோம் நானும் என் அண்ணனும்” என்றது கூஜா.

“சற்று விளக்கமாய் என்னிடம் சொல்லு என் அருமைச்சிங்கமே!”

“நாங்கள் இருவருமே முழுச்சோம்பேறிகள் என்று இந்த வனம் முழுக்கவுமே தெரியும். எங்கள் இருவருக்கும் பிடித்த ஒரே விஷயம் தூக்கம் தான். தூக்கத்தில் நாங்கள் மான்குட்டிகளை பறந்து பறந்து சென்று தாக்கி கவ்விக்கொள்வோம். பின்பாக பறந்து கொண்டே சாப்பிடுவோம். பறந்துகொண்டே மேகத்திற்கு சென்று அங்கேயே படுத்துத்தூங்குவோம்.”

“ரீல் அந்துடுச்சு என் அருமைச்சிங்கமே.. நீங்கள் சோம்பேறிகள் அவ்வளவுதானே!”

”ஆமாம்.. எங்களுக்கு உணவானது தூங்கி விழிக்கையில் எல்லாம் கேட்டதும் கிடைக்க வேண்டும்.”

“அது இயலாத காரியமாயிற்றே! உணவு எப்படி கேட்டதும் வரும்?”

“வரும்! வரணும்னு தானே முனிவனாகிய உன்னை பார்க்க வந்திருக்கோம்.”

“அது சாத்தியமேயில்லை என் அருமைச்சிங்கமே! எதற்கும் பக்கத்து வனமான சுந்தரவனத்தில் இருநூறு வயதான என் குருநாதர் தியானத்தில் இருக்கிறார். அவருக்கு என்னைவிட அனுபவம் அதிகம். நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்”

“அப்படியானால் மகிழ்ச்சி. நாங்கள் இப்போதே புறப்படுகிறோம்!”

”கொஞ்சம் பொறுங்கள். அவர் எப்படியிருப்பார் என்று உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“உங்களை மாதிரித்தானே அவரும் தாடிவைத்து மரத்தினடியில் அமர்ந்திருப்பார்?’

“அவர் ஒரு நரி. அவருக்கு ஐந்து கால்கள் இருக்கும்”

“என்னது நரியா? நரியா ஒரு முனிவர்?”

“நரி முனிவராக இருந்தால் உனக்கு ஆகாதா என் அருமைச்சிங்கமே? அவர் என் குருநாதர். ஏகப்பட்ட வித்தைகள் கற்று வைத்திருக்கிறார் அவர். மாயமாய் மறைந்துவிடும் கலை உலகத்தில் அழிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் அழியவில்லை. என் குருநாதர் கண்மூடி திறக்கும் நேரத்தில் புகையாய் மறைந்துவிடுவார். பின்னே இருநூறு வருடங்கள் வாழ்வதென்பது சாதாரண விசயமா?”

“முனிவா, நீ சொன்ன தகவலுக்கு நல்லது. நாங்கள் இப்போதே சுந்தரவனத்துக்கு கிளம்புகிறோம். உன் குருநாதனை பார்த்து எங்கள் உணவுப்பிரச்சனைக்கு ஒருமுடிவை கட்டிவிட்டு வருகிறோம்” என்று கூஜா முனிவரிடமிருந்து விடைபெற்றது. பின்பாக இரண்டும் மீண்டும் மகிழ்ச்சியாய் குபேரவனத்தைக்கடந்து சுந்தரவனத்தினுள் பிரயாணித்தன.

சுந்தரவனத்தில் சென்றுகொண்டே இருக்கையில் ராஜாவின் பார்வையில் இறந்துபோன மான் ஒன்றின் உடம்பு தூரத்தே தென்பட்டது. கூஜாவை கூட்டிக்கொண்டு மான் கிடக்குமிடம் சென்றது. அந்தமான் நேற்று மாலையில் தான் இறந்திருக்க வேண்டும்.

விஷப்பாம்பு தீண்டியிருக்குமோ? எது தீண்டினால் என்ன? இப்போதைக்கி நோகாமல் நோம்பி நமக்கு! என்று இரண்டும் மானை ஒரு பிடி பிடித்தன. என்னதான் வயிறு நிரம்புமளவு உண்டு முடித்தும் மானின் உடல் இன்னமும் மீதமிருந்தது.

ராஜாவும் கூஜாவும் மீதமான உடலை இழுத்துப்போய் ஒரு புதர் மறைவில் மறைத்து வைத்தன. நரிமுனிவனை பார்த்துவிட்டு குபேரவனம் திரும்புகையில் வயிற்றை நிரப்பிக்கொண்டால் போயிற்று!

அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே நரிமுனிவரை ராஜாவும் கூஜாவும் சந்தித்துவிட்டன. குபேரவனத்தில் அமர்ந்திருந்த முனிவனைப்போல் கண்களையும், வாயையும் மூடியபடி நரிமுனிவன் பேசவில்லை.

கண்களை அகலத்திறந்துபார்த்தவாறு வாய்திறந்து பேசினார். அவருக்கு வயிற்றின் நடுமத்தியில் ஐந்தாவது காலானது முளைத்து தொங்கியபடி இருந்தது. அந்தக்காலானது நிலத்தில் படவில்லை. நரிமுனிவரின் தாடைக்கும் கீழ் தாடியானது நீளமாய் வளர்ந்து தொங்கியது. பார்க்க முன்னூறு வயது கிழநரியாய் தோற்றமளித்தார் நரிமுனிவர்.

நரிமுனிவரிடம் கூஜாவும் ராஜாவும் தங்களுக்கு உணவானது பசிக்கும் நேரத்திலெல்லாம் கிட்ட வேண்டும் என்று முறையிட்டன. ‘அது ரொம்ப சுலபமாச்சே! வெள்ளிக்கிழமை நாள்ல தான் வந்து சேர்ந்திருக்கீங்க. நல்லது” என்று தாடியை முன் காலால் சுரண்டிக்கொண்டே நரிமுனிவர் சொல்லவும் இரண்டும் மகிழ்ந்தன. ஆஹா!

“இப்போதைக்கி எனக்கு நாலு கிலோ மான்கறி கொண்டுவந்து கொடுங்க நீங்க ரெண்டுபேரும். அதை சாப்பிட்டு முடிச்சதும் உங்களுக்கு மந்திரம் சொல்லிக்குடுக்குறேன். அந்த மந்திரத்தை கத்துக்கிட்டீங்கன்னா உணவுக்கு எப்பவும் கவலைப்பட வேண்டியதே இல்ல!” என்றார் நரிமுனிவர்.

“இதா இப்ப வர்றோம் நரிமுனிவா!” என்று சொன்ன ராஜாவும் கூஜாவும் தாங்கள் வரும் வழியில் மறைத்து வைத்துவிட்டு வந்திருந்த மானின் உடலில் ஒரு பெரிய துண்டத்தை கொஞ்சம் நேரத்திலேயே கொண்டு வந்து நரிமுனிவரிடம் ஒப்படைத்தன.

நரிமுனிவருக்கு ஏகப்பட்ட பசி அப்போது. மானின் துண்டத்தை கண்டதும் நாக்கில் எச்சில் வடிந்தது. நரிமுனிவர் சாப்பிடத்துவங்கினார். அவர் அவசரமாய் சாப்பிடுவதைக்கண்ட கூஜாவுக்கு மீண்டும் பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது. கறித்துண்டத்தையே பலமாதம் காங்காத நரியாய் இருக்குமோ என்னவோ? என ராஜா சிங்கம் நினைத்தான்.

ஒருவழியாய் அடுத்த கால்மணி நேரத்தில் மாமிச துண்டத்தை காலி செய்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்ட நரிமுனிவர்.. ‘சாப்பிட்ட களைப்பு நரிக்கும் உண்டு’ என்று சொல்லிக்கொண்டு மரத்தினடியில் சாய்ந்துவிட்டார். அவர் தூங்கி எழ இரண்டுமணி நேரத்திற்கும் மேலானது. அதுவரை அமைதி காத்து ஓய்வெடுத்தன ராஜாவும் கூஜாவும்.

தூங்கி விழித்த நரியார் உடனடியாக காரியத்தில் இறங்கினார். மரத்தின் வடக்குப்பக்கமாக ராஜாவை குழி பறிக்கச்சொன்னார். கூஜாவை காய்ந்த மாமரத்தின் கட்டைகள் சிலவற்றை கொண்டுவரச் சொன்னார்.

பின்பாக நரிமுனிவர் தெற்கே பிரயாணப்பட்டு தென்னைமரத்தின் பச்சை ஓலை இரண்டை இழுத்துவந்து சேர்ந்தார். அதேசமயம் மாமரத்தின் கட்டைகள் சிலவற்றை கூஜா கொண்டுவந்து சேர்த்திருந்தான். ராஜா ஒரு குழியை தோண்டி முடித்திருந்தான் நிலத்தில். மாலைநேரம் முடிந்துகொண்டிருந்தது. நரிமுனிவர் அவசரமாய் இயங்கினார். இருள் விழும் நேரத்தில் காரியம் நடைபெற வேண்டும்.

ஏற்கனவே மரத்தின் மேற்குப்பகுதியில் ஒரு பழைய குழி இருந்தது. இரண்டு குழியிலும் மாமரத்தின் காய்ந்த துண்டங்களை உள்ளே போடச்சொன்னார் நரிமுனிவர். பின்பாக அந்த துண்டங்களை மறைக்கும் விதமாக தென்னை ஓலையை போடச்சொன்னார். ராஜாவும் கூஜாவும் ஆளுக்கொரு தென்னை ஓலையை இழுத்துப்போய் இரண்டு குழிகளையும் மூடினர்.

ஆளுக்கொரு குழி முன்பாக கிழக்குப்பார்த்து அமரச்சொன்னார் நரிமுனிவர். இருவர் காதிலும் அந்த சிறிய மந்திரத்தை சொன்னவர் அதை பத்துமுறை அமைதியாக அமர்ந்தபடி சொல்லி முடித்து கடைசியாய் ‘இறைவா.. உங்கள் பிள்ளையான எனக்காக இந்த உணவை எனக்கு வழங்கு!’ என்று சொல்லிமுடிக்குமாறு கற்றுத்தந்தார்.

இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் ராஜாவும் கூஜாவும் நரிமுனிவர் சொன்ன மந்திரத்தை சொல்லி முடித்து கடைசியாக, ‘இறைவா.. உங்கள் பிள்ளையான எனக்காக இந்த உணவை எனக்கு வழங்கு!’ என்று சொல்லி முடித்தனர். பத்துநிமிடம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பின்பாக இருவரிடமும் தென்னை ஓலையை நீக்கிப்பார்க்கச் சொன்னார் நரிமுனிவர். புதுக்குழி பறித்து அதில் மாமரத்துண்டங்களை இட்ட ராஜா தன் குழியின் தென்னை ஓலையை எடுத்து உள்ளே பார்த்தான். இருள் சூழ்ந்துவிட்டதால் உள்ளே கரிய துண்டங்கள் மட்டுமே தெரிந்தன.

கூஜா பழைய குழிக்குள் மாமர விறகுக்கட்டைகளைப்போட்டு முன்னால் அமர்ந்து மந்திரம் சொன்னவன் தன் குழியின் ஓலையை எடுத்துவிட்டு உள்ளே பார்த்தான். ரத்தவாடையுடன் பச்சை மாமிசத்துண்டங்கள் கிடந்தன. கூஜாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி! ’வெற்றி! வெற்றி!’ என்று கூச்சலிட்டான் கூஜா.

ஆனால் ராஜாவின் குழியினுள் கரிக்கட்டைகள் மட்டுமே கிடந்தன. அவனுக்கு வருத்தம் வந்து சேர்ந்துவிட்டது. ஒருவேளை மந்திரத்தை தவறாய் உச்சரித்து விட்டோமோ? இன்னொருமுறை முயற்சித்தால் போகிறது.. இப்போ என்ன கெட்டுப்போச்சு? என்று நினைத்தான். ஆனாலும் வருத்தம் நிறைந்த முகத்துடன் இருப்பவனைப்பார்த்தான் கூஜா.

”ராஜாண்ணா! நீ ஏன் கவலைப்படறே இப்போ? உன்னுது கரிக்கட்டைகள் ஆயிடுச்சுன்னா? என் குழியில நிறைய மாமிசத்துண்டங்கள் கிடக்குதுண்ணா! நம்ம மூனு பேருக்குமே அது போதும்!” என்றான்.

நரிமுனிவர் இருவருடனும் அமர்ந்து கூஜாவின் குழியிலிருந்த மாமிசத்துண்டங்களை சாப்பிட்டு முடித்தார். அப்போதுதான் வேட்டையாடி சாப்பிட்ட மாமிசம் மாதிரியே இருந்தது அது.

“இப்ப உங்க ரெண்டு பேருக்கும் திருப்தி தானே! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க! கூஜா மந்திரத்தை சரியாய் சொன்னதால மாமிசம் கிடைச்சுது நமக்கு. நீங்க ரெண்டுபேரும் அண்ணன் தம்பி அப்படிங்கறதால ராஜா எப்பவும் வெள்ளிக்கிழமை மாமரக்கட்டைகள், தென்னை ஓலை இதெல்லாம் கொண்டுவந்து தம்பிக்கு உதவட்டும். எப்பவும் வாரத்துல வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் தான் இதை செய்யனும். மத்தநாள்ல மந்திரம் பலிக்காது. என்ன நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுதா?” என்று நரிமுனிவர் கேட்டதும், புரிந்ததாக சொல்லிவிட்டு நரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு ராஜாவும் கூஜாவும் குபேரவனத்துக்கு திரும்பினர்.

ஒருவாரம் கழிந்து கிழமை தெரியாமல் இரண்டு சிங்கங்களும் பார்த்த விலங்கிடமெல்லாம் ‘இன்று வெள்ளிக்கிழமையா?’ என்று கேட்டபடி இருந்தன. ‘இல்ல இன்னிக்கி சனிக்கிழமை!’ என்று குரங்கு ஒன்று தெரிந்ததுபோல சொல்லிற்று. சிரித்துக்கொண்டே அது சொல்லியதால் அது கிண்டல் என்று ராஜா உணர்ந்து கொண்டது.

இறுதியாக குளக்கரையில் நின்றிருந்த கொக்கு தான் ‘இன்று வெள்ளிக்கிழமை’ என்று சொல்லிற்று. உடனே மகிழ்ந்த ராஜா தான் போய் தென்னை ஓலையும், மாமரக்கட்டைகளும் கொண்டுவருவதாய் தனித்தே கிளம்பிற்று. கூஜா இருப்பிடம் வந்து வாகான இடம்தேடி குழி பறிக்க ஆரம்பித்துவிட்டது.

இருள்விழும் நேரத்தில் சிங்கங்கள் இரண்டும் தயாராய் இருந்தன. கூஜா மந்திரம் சொல்வதற்காக குழியின் முன்பாக கிழக்கு பார்த்து அமர்ந்தது. ராஜாவுக்குத்தான் மனதில் படபடப்பு. எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டும்! இருவருக்கும் சற்று அதிகப்படியான மாமிசம் வேண்டுமென்று அதிகமாய் மாமரக்கட்டைகளை குழிக்குள் போட்டிருந்தது ராஜா.

இரண்டு நாளைக்கு வைத்திருந்து சாப்பிடலாமே! ’புள்ளிமான் கறியாய் வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு கேளுடா கூஜா!’ என்று முன்பே அதனிடம் சொல்லியிருந்தது. மாமிசத்தை நினைக்கையில் நாவில் எச்சில் சுரந்தது. பசி வயிற்றை கிள்ளாமல் உதைக்கவே ஆரம்பித்துவிட்டது.

மந்திரத்தை ஏழுமுறை சொல்லியபிறகு இறுதியாய் ‘இறைவா.. உங்கள் பிள்ளையான எனக்காக இந்த உணவை எனக்கு வழங்கு!’ என்று முடித்துவிட்டு அமைதியாய் பத்துநிமிடம் அமர்ந்திருந்தது கூஜா. இருளும் சூழ்ந்துவிட்டது குபேரவனத்தில்.

இறுதியாய் எழுந்த கூஜா தென்னை ஓலையை அகற்றி உள்ளே பார்த்தது. பச்சை மாமிசத்தின் ரத்தவாடை அடிக்கவில்லை அதன் மூக்கிற்கு. உள்ளே கரிக்கட்டைகள் கிடந்தன. ராஜாவும் எட்டிப்பார்த்தது உள்ளே. ‘அண்ணா என்னோட மந்திரமும் பலிக்கலையே.. என்ன செய்வேன்?’ என்று அழுக ஆரம்பித்துவிட்டது.

அந்த மரத்தின் மீதுதான் குரங்குக்கூட்டமொன்று வாழ்ந்துவந்தது. அழுகை ஒலி கேட்டதும் ‘கீக்கீக்கீக்’ என தங்களுக்குள் பேசிக்கொண்டன. ஆந்தையொன்று விழிகளை உருட்டி சிங்கங்களைப்பார்த்தது மரத்தின் கிளையில் அமர்ந்தபடி.

“ஏன் அழுறான் உன் தம்பி கூஜா? அவனுக்கு உடம்புக்கு சரியில்லியா?” என்று கேட்டது ஆந்தை. நடந்த விசயம் பூராமையும் ஆந்தைக்கு ராஜா சொல்லிற்று. இதைக்கேட்ட குரங்குக்கூட்டம் கிக்கீ புக்கீ கிக்கீபுக்கீ என சிரிக்கத்துவங்கிவிட்டன.

“எவனோ நரிமுனிவன் சொன்னான்னு இப்பிடி குழிவெட்டி கட்டைகளை போட்டு வச்சுட்டு மந்திரம் சொல்லி மாமிசம் வரும்னு நம்புறீங்களே.. நீங்க ரெண்டுபேரும் சிங்கங்கள் தானா? உங்க மூதாதையர்கள் எல்லாம் இந்த வனத்தையே ஆட்சி செஞ்சவங்க தெரியுமா? இப்பிடி முட்டாளா இருக்கீங்களே! சும்மா வர்ற மாமிசம் உங்க ஒடம்புல ஒட்டுமா? கடினமா ஓடித்துரத்தி வெற்றியடைஞ்சு சாப்பிடற மாமிசத்தோட ருசிதான் அருமையான ருசி. இனிமேலாச்சிம் புத்தியாப்பிழைங்க ரெண்டுபேரும்!’’ என்று சொல்லிவிட்டு ஆந்தை பர்ரென அங்கிருந்து இருளில் பறந்து போனது.

அடுத்த நாளிலிருந்து ராஜாவும் கூஜாவும் தங்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி ஒதுக்கிவிட்டு சுறுசுறுப்பாய் வனத்தில் சுற்றி வேட்டையாடி மாமிசம் உண்டார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ!

000

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவந்து நின்று இணைய இதழாக வருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல். ஆட்டக்காவடி, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது சிறார் புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வாயிலாக வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *