“நான் பந்தை லேசாத் தாண்டா தட்டினேன். அது, “விர்ருன்னு” பறக்குதுடா!“ என்றான் கோபி.
“ஆங்! பறக்குதா? றெக்க இருந்துச்சா?“ என்று சேகர் சிரிக்க, சேதுவும் அவனுடன் சேர்ந்து கொண்டு கோபியைப் பார்த்து சிரித்தான்.
“போங்கடா! நெஜமாத் தான் சொல்றேன். நம்மூர் பந்து மாதிரி இல்லடா அந்தப் பந்து. நல்லா கெட்டி… நல்ல வேகம்.”
“எப்படிடா கிடச்சுது உனக்கு அந்த பந்து?” சேது.
“எங்க மாமா லண்டனில இருந்து எனக்காக வாங்கிட்டு வந்தாங்க” கோபி.
“ஓ! அதான்! அதுக்கு இந்தியாவுல இருக்கப் பிடிக்கல்ல. பறந்து பறந்து அது ஊருக்கே போலான்னு பாக்குது!” சேகர்.
நண்பர்கள் சிரித்தவுடன், “சரிடா ! நா அந்த பந்தை நாளைக்கு கொண்டு வரேன்! நீங்களே பாருங்க!” என்றான் கோபி.
சொன்னபடியே, அடுத்த நாள் பந்தை எடுத்துக் கொண்டு வந்தான்.
கோபி, சேது மற்றும் சேகர் மூவரும் ஒன்றாகத் தான் பள்ளிக்குச் செல்வார்கள்.
கோபியைப் பார்த்தவுடன், சேதுவின் கேள்வியே, “பந்து கொண்டு வந்தயாடா?” என்பது தான்.
கேலி செய்து சிரித்தாலும், தானும் அத்தகைய பந்தில்… ஏன் எத்தகைய பந்தாக இருந்தாலும்… தானும் விளையாட வேண்டும் என்பது சிறுவர்கள் மனதில் எழும் ஒரு இயற்கையான எண்ணம் தானே!
“இப்ப வெளிய எடுக்க மாட்டேன். ரோட்டுல விளையாண்டா யாராவது வீட்டுல போயி சொல்லிடுவாங்க. நா யாருக்கும் தெரியாம பந்தை எடுத்து வந்து இருக்கேன்” என்றான் கோபி.
வகுப்புக்குச் சென்ற பின் தன் பையில் இருந்து பந்தை எடுத்து நண்பர்களிடம் காட்டினான் கோபி.
மூவரும் வேறு எந்த வகுப்புத் தோழனுக்கும் தெரியாமல் ரகசியமாகப் பார்த்து மகிழ்ந்தனர்.
“பாக்கவே ஜோரா இருக்கே! பளபளன்னு!” சேகர்.
”மூணாவது பிரியட் இன்னிக்கு பி.டி. அப்போ கொஞ்சம் அந்த சுவத்துக்குக் பக்கம் போய் விளையாடுவோம்” என சேது சொன்னான்.
ஆமாம், மற்ற மாணவர்கள் பார்த்து விட்டால்,ஆசிரியர்களிடம் கோள் மூட்டி விடுவார்கள். அவர்கள் பந்தை எடுத்து வைத்துக் கொண்டு அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்வார்கள்.
போன வாரம் நிதிஷ் ‘பாப் அப் பட்டன்” என்று ஒரு விளையாட்டுப் பொருளைக் கொண்டு வந்தான். பேட்டரி இருந்தால் பாட்டு கூட வருமாம் அதில். “டொக் டொக்’ என்று பட்டன்களை அழுத்தி விளையாட வேண்டும். முன்னூத்தி ஐம்பது ரூவாயாம்! வகுப்பு ஆசிரியர் பிடித்து விட்டார். இன்னமும் ஆசிரியரின் இழுப்பறையில் தான் இருக்கிறது.
இரண்டாவது பாட வேளை! தமிழ் ஆசிரியை பாடம் எடுத்தார். இந்த வகுப்பு முடிந்தால் பி.டி. வகுப்பு என உற்சாகமாக இருந்தனர் மாணவர்கள். பாட வேளை முடியும் நேரமே வந்து விட்டது. பக்கத்து வகுப்பில் சலசலப்பு. அந்த ஆசிரியர் வெளியே சென்று விட்டார்.
தமிழ் ஆசிரியை வகுப்பை விட்டு வெளியே செல்லவில்லை. “இப்போ நாமெல்லாம் விடுகதை விளையாட்டு விளையாடலாமா?” என்றார்.
“இப்போ பி.டி. சார் பிரீட்! கோ-கோ விளையாடப் போகணம்” வகுப்பிலேயே உயரமான ராஜூ சொன்னான்.
“தெரியும் ராஜூ! நம்ம பள்ளியோட சுற்றுப்புற சுவர் பணி ஏதோ நடக்குது. மாணவர்கள் மைதானத்துக்கு வரக்கூடாது. உங்க சார் அங்க நின்னு மேற்பார்வை பாக்குறாரு.” என்றார் ஆசிரியை.
“நாம விடுகதை விளையாட்டு, சொல் விளையாட்டு விளையாடலாம். இதுக்கு உங்களுக்கு மதிப்பெண்ணும் உண்டு” என்று சொல்லி , மாணவர்களுக்கு உற்சாகமூட்டி வகுப்பை நடத்தினார் தமிழ் ஆசிரியை.
கோபி, சேது மற்றும் சேகர் நொந்து போனார்கள்.
உணவு இடைவேளையின் போதும் மைதானத்துக்குப் போக முடியாது. பந்து விளையாட முடியாது.
“திரும்ப வீட்டுக்குப் போகும் போது விளையாடலாம்டா” சேது.
”நம்ம பாரதித் தெரு சந்தடியில்லாத தெரு தான். அங்க நாம சாதாரணமா நடந்து போகும் போதே நம்ம தெருக்காரங்க நம்மள ஒழுங்கா போங்கடான்னு விரட்டுவாங்க. இதுல பந்து விளையாடினா… அவ்வளவு தான்” கோபி. சேகரும் அப்படியே தான் நினைத்தான்.
“சரிடா! இன்னிக்கி நம்ம தெருவுல நுழையாம, அதுக்கும் அடுத்த தெருவுக்குப் போயிடுவோம். சக்கரவர்த்தித் தெரு. அங்கயும் சந்தடியே இருக்காது. அங்க கொஞ்ச நேரம் விளையாடி விட்டு, திரும்பி வந்துரலாம்” சேது.
திட்டப்படி, சக்கரவர்த்தி தெருவுக்குப் போய், அங்கு ஒரு குட்டிச்சுவருக்குப் பின்னால் பைகளை வைத்துவிட்டு, பந்தை எடுத்து விளையாடத் துவங்கினார்கள்.
“சூப்பர்டா, சூப்பரு. நிஜமாவே பறக்குதுடா பந்து” சேகர்.
“நல்ல கனமாவும் இருக்கு, பளபளன்னு இருக்கு” ஆசையாக பந்தைத் தடவிக் கொடுத்தான் சேது.
ஒவ்வொரு முறையும் அவர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாகவும் அதிக தூரமும் பறந்தது. கோபியும் குதித்துக் குதித்து விளையாடினான்.
“டேய், நீ தான் வீட்டுல விளையாடற இல்ல”
“அங்க இவ்வளவு ஜாலியா இருக்காதுடா!”
பறந்து வரும் பந்தைப் பிடிக்க சேகரும் கோபியும் ஓரே நேரத்தில் பின்னோக்கி நகர்ந்து ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, தெரு ஓரத்தில் இருந்த மழைநீர் வடிகால் ஓட்டத்தில் விழுந்தனர்.
கோபி பள்ளத்துக்குள் விழ, சேகர் அவன் மேல்.
அப்போது பார்த்து, தெருமுனையில் இருந்து வண்டியில் யாரோ வருவது தெரிந்தது. நிச்சயமா, அது தமிழ் டீச்சர் தான்.
“டேய் நம்ம தமிழ் ஆசிரியை வராங்கடா! பேசாம அங்கயே கொஞ்ச நேரம் கிடங்க” எனச் சொல்லிவிட்டு, சேது, குட்டிச்சுவருக்குப் பின்னால் போய் ஓளிந்து கொண்டான்.
ஆசிரியை போய் விட்டார். கோபி அழத் தொடங்கி விட்டான். அவனுக்கு முழங்காலில் நல்ல அடி! வலது கையில் ஒரு ஆணி கிழித்து, லேசாகக் கீறல். சவசவ என ரத்தச்சுவடு. சேகருக்கு கண் பக்கத்தில் சிறிய அடி. லேசாக வீங்கியது.
நண்பர்கள் இருவரும் கோபியைக் கைத்தாங்கலாகத் தூக்கினர். பாட்டிலில் இருந்த தண்ணீரை வைத்து காயங்களை லேசாகத் துடைத்தனர்.
இன்னும் சில வண்டிகள் வர ஆரம்பித்தன.
“வீட்டுக்குப் போலாம்டா! யாராவது பாத்துட்டா என் அப்பாட்ட சொல்லிடுவாங்க” என்றான் சேகர்.
தங்கள் தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
”அம்மா கேட்டா… என்ன சொல்றது… பந்தைப் பிடிக்கும் போது கீழ விழுந்தேன்னு சொன்னா…” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வந்த கோபிக்கு அப்போது தான் பந்து ஞாபகம் வந்தது.
“டேய்! என் பந்து எங்கடா?”
”அய்யய்யோ! சக்ரவர்த்தி தெருவில தான் கிடக்கும்” சேகர்.
மீண்டும் மூன்று பேரும் பக்கத்து தெருவை நோக்கி ஓடினர். கால்வாயில் கோபியும் சேகரும் விழுந்த இடத்தைத் தாண்டி சற்று தொலைவில் பந்து கிடந்தது.
சட்டெனப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டான் கோபி.
“இப்ப மட்டும் இவ்வளவு வேகமா ஓடி வர் ! அப்போ காயம் எல்லாம் வலிக்கவே இல்ல தான…” சேது.
உடனே, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,”அம்மா, வலி” எனப் பாசாங்காகப் பேசிய கோபி, “என்ன இருந்தாலும் எங்க மாமா தந்த பந்து இல்லயா? அதான் ஓடி வந்தேன்” என்றான்.
“ஆமா, ஆமா! இல்லன்னா, லண்டனுக்கு பறந்துடும் இல்ல உன் பந்து!” நண்பர்கள் சிரித்தனர்.
நண்பர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி!
00

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.