“என் மாமியாரை எப்புடியாச்சும் வீட்டைவிட்டு முடுக்கியுடணும். அதுக்கு ஐடியா குடுங்க.” – புலனம், அலைபேச்சு, நேர்ப்பேச்சு என அனைத்து வகையிலும் தோழிகளிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தாள் கிரிஜா.

            அவர்களுக்கு அது வியப்பாகவும், நம்ப இயலாததாகவும், புதிராகவும் இருந்தது.

            மாமியாரை வீட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது உலக மருமகள்கள் யாவருக்கும் ஏற்படக் கூடிய இயல்பான எண்ணம். அது அவர்களின் பிறப்புரிமையும் கூட. அவள் ஆலோசனை கேட்ட தோழிகளில் 99% பேரும் அவ்வாறு செய்ய விரும்பியவர்களே. சிலர் அதைச் சாதித்திருந்தனர்; பலரால் சாதிக்க இயலவில்லை. சிலர் அதைச் செய்யும் முன் அவர்களின் மாமியார்கள் உலகத்தை விட்டே போயிருந்தனர். அவை யாவும் சாதாரணமான நடைமுறைகள். ஆனால், கிரிஜா அவ்வாறு கேட்பது அசாதாரணமானது.

            “நீ உங்க மாமியாரோட ரசிகையாச்சே! அவங்களும் உங்கிட்ட அன்பா சுமூகமா இருப்பாங்களாச்சே! வீட்டு வேலை எல்லாமே அவங்கதான செய்வாங்க! உங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லையே!  இப்ப என்னாச்சு?!” என வியந்தனர்.

*******

கிரிஜாவின் இல்லற வாழ்வில் பல விஷயங்கள் உல்டாவாக இருந்தன. அதில் அதி முக்கியமானது, அவள் மாமியாருக்கு ரசிகையாக இருந்ததுதான்.

மாமியார் – மருமகள் உறவு, பூனையும் எலியும் மாதிரியானது என்பது உலகப் பொது நியதி. அரிதாக சில வீடுகளில் அவர்கள் நல்லுறவாக, நல்லிணக்கத்தோடு இருப்பது விதிவிலக்குதானே அன்றி, விதி அல்ல.

“மாமியாரும் மருமகளும் அம்மா – மக மாதிரி அன்னியோன்யமா இருக்கற வீடுகளக் கூட பாத்திருக்கறோம். ஆனா, உன்ன மாதிரி மாமியாருக்கு ரசிகையா இருக்கற மருமகளப் பாத்ததே இல்ல. அப்படிப்பட்ட மருமக, இந்தியாவுலயே நீ மட்டுமாத்தான் இருப்பே!”

மருமகள்களான தோழிகள் நம்பவியலா அதிசயிப்போடும், அண்டை அயல் மாமியாரிணிகள் பொறாமையோடும் சொல்வது வழக்கம்.

“என் மாமியார் மாதிரி மாமியார், உலகத்திலேயே இருக்க மாட்டாங்களே…!” என்பாள், கிரிஜா.

சில சமயம் மாமியார் முன்னிலையிலேயே இந்த உரையாடல்கள் நிகழும். அப்போது அவளின் பாராட்டுதல்களைக் கேட்டு மாமியார் வசுமதி உலகப் பூரிப்பு அடைவார்.

கிரிஜாவுக்கு இப்போது 31 வயது. வீட்டு மனைவி. கணவன் ரஞ்சித், நகரக் கிளை நூலகம் ஒன்றில் நூலகர். திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே மகள்; இரண்டாவது படிக்கிறாள்.

மாமியார், வீட்டு விதவை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாமனார் மாரடைப்பால் இறந்துவிட்டார். மாமியாருக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது. கிணத்துக்கடவில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, பொள்ளாச்சியில் இவர்களோடு வசித்துக்கொண்டிருக்கிறார்.

திருமணம் நிச்சயமானதிலிருந்தே கிரிஜா தனது மாமியாருக்கு ரசிகை. காரணம், அவரது கட்டுக்கோப்பான உடல், இளமைத் தோற்றம், மிடுக்கு ஆகியவை. இன்னமும் சொல்லப்போனால், வசுமதியின் அந்த அசத்தல் தோற்றத்திற்கு அபிமானியாகித்தான் ரஞ்சித்தை மணக்கவே அவள் சம்மதித்தாள். பெண் பார்க்கும் படலத்தில், “மாப்பளைய உனக்குப் புடிச்சிருக்குதா?” என்று கேட்டபோது, “மாப்பளையவிட அவுரோட அம்மாவைப் புடிச்சிருக்குது” என்று சொல்லவும் செய்தாள்.

முதலில் வசுமதியை ரஞ்சித்தின் அக்கா என்றுதான் அவளும், உடன் இருந்த மற்ற பலரும் எண்ணியிருந்தனர். அப்போது ரஞ்சித்துகு 26.5 வயது. வசுமதிக்கு 47. ஆனால், 35 மாதிரி இருந்தாள். அம்மா என்று நினைக்கவோ, சொன்ன பிறகும் நம்பவோ, யாராலும் முடியவில்லை. இப்போதும் வசுமதிக்கு 55 ஆனாலும் 40 சொச்சம் மாதிரித்தான் இருக்கிறார். தலை சிறிதும் நரைக்கவில்லை. எடையும் பல வருடங்களாகவே 48 கிலோவை மீறுவதில்லை. கைத்தறிப் புடவையுடன் கச்சிதமாகக் காட்சியளிப்பார். அவரது புலனம், முகநூல் தோழிகள் வட்டாரத்தில் அவருக்கு ஃபிட்னஸ் வசுமதி என்றே பேராகிவிட்டது. இவர்களின் குடியிருப்புப் பகுதியிலும் ஃபிட்னஸ் அம்மா என்று நடுத்தர வயதினர்களும், ஃபிட்னஸ் பாட்டி என்று சிறார்களும் குறிப்பிடுகின்றனர்.

அவர் ஒரு டயட் பட்சிணி, யோகினி, ஆரோக்கியவாதினி.

வைகறையில் எழுந்து வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு அல்லது தேன் கலந்த எலுமிச்சை சாறு பருகுவார். ஐந்து மணி முதல் ஐந்தரை வரை, யோகா பேன்ட் அணிந்துகொண்டு யோகப் பயிற்சிகளும் தியானமும். பிறகு காலைக் கடன்கள் முடித்துவிட்டு, ஆறு மணிக்கு, மூன்று தேக்கரண்டி முளை கட்டிய பாசிப் பயிறு, ஒரு டம்ளர் ராகி மால்ட். நைட்டி அணிந்துகொண்டு ஆறரை வரை குடியிருப்புப் பகுதித் தெருக்களில் சுற்றிச் சுற்றி நடைப் பயிற்சி. வீடு திரும்பிக் குளித்த பின், எழு மணியிலிருந்து சமையல். எட்டரைக்கு சேலை அணிந்து, மெல்லலங்காரங்கள் செய்துகொண்டு, பேத்தியை ஸ்கூட்டியில் அழைத்துச் சென்று கான்வென்ட்டில் விட்டுவருவார். ஒன்பது மணிக்குக் காலைச் சிற்றுண்டியாக, ஒரு சேரை தாளித்த சுண்டல் / தட்டைப் பயிறு / நிலக் கடலையும், ஒரு டம்ளர் பசும் பாலும் மட்டும். 

முற்பகலில் சிறிது ஓய்வு. பிறகு மதியம் வரை வீட்டை சுத்தப்படுத்துதல், துணி துவைப்பது, கடை கண்ணிகளுக்குச் சென்று வருவது, அண்டை அயல் அரட்டை போன்றவை. மதியம் அவருக்கு ஏதேனும் ஒரு காய்கறி, ஏதேனும் ஒரு கீரையுடன் ரெண்டே ரெண்டு கரண்டி சாப்பாடு. வெயில் காலங்களில் சாப்பாட்டுக்கு பதிலாக கம்பங்கூழ்; குளிர் காலங்களில் சூடாக நவதானியக் கஞ்சி, மட்டையரிசிக் கஞ்சி போன்றவை. மதியத்துக்கு மேல் பகல் தூக்கம், சீரியல் பார்த்தல், அண்டை அயல் வம்பு தும்பு ஆகியவை கிடையாது. ரஞ்சித் தனது நூலகத்திலிருந்து அவருக்குத் தேவையான ஆன்மிகம், பக்தி, யோகா, புராணங்கள், ஆரோக்கிய வாழ்வியல் தொடர்பான நூல்களைக் கொண்டு வந்து கொடுத்திருப்பான். மாலை நான்கு மணி வரை அவற்றை வாசிப்பார்.  

  நான்கு மணிக்கு கத்தாழை சோப்புப் போட்டு முகம் கழுவி, மெல்லலங்காரங்கள் செய்துகொண்டு, பேத்தியை ஸ்கூட்டியில் அழைத்து வருதல். நாலரை வாக்கில் பேத்திக்கும் மருமகளுக்கும் சிற்றுண்டி செய்து கொடுத்துவிட்டு, கருப்பட்டி போட்ட, வெதுவெதுப்பான மூலிகைத் தேனீர், அரைச் சொம்பு அண்ணாந்து ஒரே மூச்சில் குடிப்பார். ஐந்து மணிக்கு ட்ராக் பேன்ட், ட்டி – ஷர்ட், ட்ராக் ஷூ போட்டுக்கொண்டு ஸ்கூட்டியில் மகாலிங்கபுரம் போய், ரௌண்டானாவில் ஆறு மணி வரை ஜாகிங்.

வேர்த்து வீடு திரும்பிய பின் அந்திக் குளியல். நைட்டி அணிந்துகொண்டு சாமி படங்களுக்கு வீட்டுப் பூஜை, துதி பாடல்கள் சகிதம் வழிபாடு. பிறகு இரவுச் சமையல். மற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வகை வகையாக செய்து கொடுப்பார். அவருக்கு தினமும் இரவுணவு ரெண்டே ரெண்டு சப்பாத்தியும், ஒரு டம்ளர் பனங்கல்கண்டு பாலும் மட்டும்.

வசுமதியின் ஆரோக்கியம், கட்டுக்கோப்பு, இளமை ஆகியவற்றின் தேவ ரகசியம் இதுதான்.

*******

            முதல் மூன்று வருடங்கள் வசுமதிக்கும் கிரிஜாவுக்குமான உறவு, 23 கி.மீ. தூரத்து உறவாக இருந்தது. வசுமதி இவர்களோடு சேர்ந்து வாழ வந்துவிட்ட பிறகு, இடைவெளியற்ற நெருக்க உறவாகிவிட்டது. கிரிஜா, மாமியார் ரசிகை என்பதிலிருந்து பதவி உயர்வு எடுத்துக்கொண்டு, மாமியார் ஆராதகியாகவே ஆகிவிட்டாள். அதற்கு மூன்று காரணங்கள்: 1. வசுமதி மாமியார்த்தனங்கள் எதையும் காட்டவில்லை, 2. வீட்டு வேலைகள் யாவற்றையும் அவரே செய்தார், 3. அவர் பெறும் குடும்ப ஓய்வூதியம், வீட்டு வாடகை ஆகியவற்றை இவர்களுக்கே கொடுத்தார். 

            அப்படியானால் இந்த நல்லுறவுக்குத் தனது பங்களிப்பாக கிரிஜா எதையுமே செய்யவில்லையா என்று நீங்கள் கேட்கக் கூடும். மாமியாரின் மேற்படிக் காரியங்களை அவள் உளமாற ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயமல்லவா!

மேலும், அவள் மாமியாரின் பரம ரசிகையுமாயிற்றே! உலகில் சாமான்ய மனிதர்கள் யாருக்காவது ரசிக – ரசிகைகள் இருப்பார்களா? அதுவும், மாமியாருக்கு ரசிகையாக எந்த மருமகளாவது இருப்பாளா? இளமையும் அழகும் கொண்ட சில மாமியார்களுக்கு வேண்டுமானால் ரகசிய ரசிகன்களாகவோ, கள்ளக் காதலர்களாகவோ மருமகன்கள் இருக்கலாம். அதெல்லாம் அடல்ஸ் ஒன்லி சமாச்சாரம். இல்லப் பெண்மணியான மாமியாருக்கு ரசிகையாக ஒரு மருமகள் இருக்கிறாள் எனில் அது ஈரேழு உலகிலும் கிரிஜா மட்டுமாகவே இருக்க முடியும். 

ஆக, கிரிஜாவுக்கு மாமியார் எவ் விதத்திலும் குறை வைக்கவில்லை. அதனால் அவர் மீது அவளுக்கு எள்ளளவும் மனக்குறையோ, சங்கடமோ, அங்கலாப்போ இருந்தது கிடையாது. எனவே, அவரைப் பற்றி யாரிடமும் குறையாக ஒரு வார்த்தையேனும் பேசியதுமில்லை. அப்படிப் பேச எதுவுமே இல்லையே!

“இது உன்னோட ஏளாவது ஜென்மமா இருக்கும். முந்துன ஆறு ஜென்மத்துலயுமே நீ நெறையப் புண்ணியம் செஞ்சிருக்கணும். அதனாலதான் உனக்கு இப்படி ஒரு மாமியார் கெடைச்சிருக்கறாங்க” என்று இவளது அம்மாவே சொல்வார்.

கிரிஜா சாப்பாட்டு சீதை. திருமணத்துக்கு முன்பே அப்படித்தான் என்றாலும், திருமணம் ஆகவேண்டும் என்பதற்காகத் தன்னை 50 கிலோ குதுப்மினாராகவே தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.  திருமணம் ஆன பிறகு அந்தக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க அவசியமில்லை அல்லவா! தவிர, நமக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டிட்டான் என்கிற பூரிப்பு வேறு. ஆறே மாதங்களில் 60 கிலோ ஆகிவிட்டாள். படிப்படியாகக் கூடி, அடுத்த வருடம் குழந்தை பிறந்த பின் 65 கிலோ ஆகிவிட்டது. குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடும்போது இவளுக்கு 72 கிலோ.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே பலூன் மாதிரி ஊதிப் பெரிதாகிறாளே என்று அண்டை அயல்வாசிகளுக்கு வியப்பு. நேரில் பார்க்கிற தோழிகளும், உற்றார் உறவுப் பெண்மணிகளும், “இதுக்கு மேல போனீன்னா வெடிச்சிருவே!” என எச்சரிக்கை செய்தனர்.

முகநூலில் செல்ஃபி போட முடியவில்லை. எந்த மில்லில் அரிசி லோடு வாங்குகிறீர்கள், கணவர் அரிசி குடோன் வைத்திருக்கிறாரா, வாரத்துக்கு எத்தனை மூட்டை உங்களுக்கு மட்டும் தேவைப்படும் என்றெல்லாம் கருத்துகள் எழுதிக் கலாய்க்கவே, முகநூல் கணக்கைத் தற்காலிகமாக முடக்கிவிட்டாள்.  

குழந்தை மெலிந்து குட்டியூண்டாக இருந்தது. அதை அவள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போது, “கும்கி யானை, எலிக் குட்டியத் தூக்கி இடுப்புல தூக்கிவெச்சுட்டிருக்கற மாதிரி இருக்குது” என்பான் ரஞ்சித்.

அக்கறை கொண்டவர்களும், அனுபவசாலிகளுமான சில பெண்மணிகள் உடல் இளைப்பதற்கான ஆலோசனைகள் பலவற்றையும் வழங்கினர். ரஞ்தித் அவை தொடர்பான நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுத்தான். விரதம், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி, யோகா ஆகிய அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தாள். எதையுமே ஒரு வாரத்துக்கு மேல் கடைபிடிக்க இயலவில்லை. உடல் இளைப்பதற்கான உணவு முறைகள் என்று யூ ட்யூபிலும், தொலைக்காட்சியிலும், எட்டாம் வகுப்பு சிறுமிகள் முதல் செட்டி நாட்டு ஆச்சி வரை, உணவே மருந்து என்னும் ஒரே தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு நூற்றுக் கணக்கான ரெசிபிகளைக் கூறினர். அவையும் பலிக்கவில்லை. வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்கு ப்ரசர், அலோபதி, ஹோமியோபதி என்று சகல வைத்தியங்களையும் முயன்று, பணம் செலவானதுதான் மிச்சம்.

இதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த சமயத்தில் மாமனார் இறந்து, மாமியார் இவர்களோடு வந்து நங்கூரமிட்டார். வீட்டு வேலைகள் ஒவ்வொன்றாக அவரது பொறுப்புக்குப் போயிற்று.

அப்போதுதான் முள்ளை முள்ளால் எடுப்பது, விஷத்துக்கு விஷத்திலிருந்தே மருந்து என்கிறபடி, கொழுப்பைத் தின்று கொழுப்பைக் குறைப்பது என்னும் சூட்சுமத்தில் அமைந்த பேலியோ டயட் என்ற புதிய கண்டுபிடிப்பு வெளியாகி, பரபரப்பாகவும் பேரதிசயமாகவும் பேசப்பட்டு, பிரபலமாகிக்கொண்டிருந்தது. சொந்த கோவை மாவட்டம், அண்டைத் திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றில் உள்ள பேலியோ மருத்துவர்கள் போதாது என்று, கிரிஜா 190 கி.மீ. பயணித்து மதுரை சென்று, பேலியோ சூப்பர் ஸ்டார் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று வந்து, பல ஆயிரங்கள் செலவில் டயட் விருந்தை மேற்கொண்டாள். காய்கறி, மட்டன், சிக்கன் என வெளுத்துவாங்கியதில் ஆறு கிலோ கூடி, நிகர எடை 78 ஆனது. தவிர அந்த டயட் முறையினால் மலச்சிக்கல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டதோடு, இதயநோயும் ஏற்படக்கூடும் என்ற கருத்து அச்சுறுத்தியதால் அதைக் கைவிட்டுவிட்டாள்.

பிறகு உடல் இளைப்பு பற்றி யோசிக்கவே இல்லை. வீட்டு வேலைகளுக்கு மாமியார் நியமனம் ஆகிவிட்டதால் அவற்றிலிருந்து இவள் விருப்ப ஓய்வும் பெற்றுவிட்டாள். குழந்தையைப் பார்த்துக்கொள்வது, வேளா வேளைக்கு நொப்பமாக எடுப்புச் சாப்பாடு, பகலில் மூன்று சீரியல் – இரவில் நான்கு சீரியல் தவறாமல் பார்ப்பது, மாமியாரின் இரட்டை வருமானமும் வீட்டுக்கு வந்ததால் மாதம் இரண்டு புடவைகள் எடுத்துக்கொள்வது என வாழ்க்கை சுக போகமாயிற்று.  குழந்தை உயரத்தில் வளர வளர, இவள் அகலத்தில் வளர்ந்துகொண்டிருந்தாள்.

“நீ இப்படி வளந்துட்டே இருந்தீன்னா ஒயரமும் அகலமும் ஒரே அளவுல ஆயிருவ” என தோழிகள் எச்சரிப்பர்.

“உனக்காகக் கதவுகளையெல்லாம் நிலையோட பேத்தெடுத்துட்டு, கோவில் தலைவாசல் கதவு மாதிரி வெக்கணுமாட்டிருக்குதே…” என ரஞ்சித்தும் சொல்வான்.

அவள் அமர்ந்தால் ப்ளாஸ்டிக் நாற்காலிகள் உடைந்துவிடுகின்றன. நிலநடுக்க அறிகுறிகள் ஏற்பட்டால் கிரிஜா ஆன்ட்டி வருவதைக் கண்டுகொள்ளலாம் என தெருச் சிறுவர்கள் கேலி செய்கிறார்கள்.

“உங்க மாமியாரு எப்படி இருக்கறாங்க; நீ எப்படி இருக்கற? அவுங்களைப் பாத்தாவது நீ மாற வேண்டாமா?” என இவளது அம்மாவே சொல்வார். 

அவள் எதையும் கண்டுகொள்வதில்லை.

குடும்பத்தார், தோழிகள், உற்றார் உறவினர், அண்டை அயல்வாசிகள் என அவளை அறிந்தவர்கள் எல்லோருமே அவளது உடல் பருமனைப் பற்றி அவளிடம் கேலியாகவோ, அக்கறையாகவோ, அறிவுரையாகவோ, ஆலோசனையாகவோ எதையாவது சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் வசுமதி எதையும் சொன்னது கிடையாது.

இவர்களோடு வசிக்கிற கடந்த ஐந்து ஆண்டுகளாகவும் இவளிடம் அன்பாகவே நடந்துகொண்டிருந்தார். இவளது விருப்பங்களுக்குத் தடை விதித்தோ, பழக்கவழக்கங்களைக் கண்டித்தோ, ஆடம்பரச் செலவுகளை எதிர்த்தோ ஒரு வார்த்தை பேசியதுமில்லை. இவள் விரும்பிக் கேட்பதை சமைத்தும் கொடுப்பார். அப்படியாக, ஆக மொத்தத்தில் இப்போது 89 கிலோ ஆகிவிட்டது.

வசுமதியைப் பற்றி ஊரார், “இந்த வயசுலயும் எப்படி ச்சிக்குன்னு, ஆரோக்கியமா, ஆக்டிவா, இளமையா இருக்கறாங்க!” எனப் பாராட்டும்போது முன்பெல்லாம் கிரிஜாவுக்கு உவகையாக இருக்கும். சமீப காலமாக அதைக் கேட்கையில் லேசாகக் காதில் புகைகிறது. அவரோடு இவளை ஒப்பிட்டுக் குறை கூறுகையில், அவர் மீது பொறாமையும்,கடுப்பும் உண்டாகும். அவரால் கிடைக்கிற பன்மப் பலன்களை உத்தேசித்து, பொறுத்துக்கொள்வாள்.

இப்படி இருக்கையில்தான் அவர் அண்டை அயல்களிலும், மகன், பேத்தி ஆகியோரிடமும், உறவினர்களிடமும் இவளைப் பற்றி குண்டுக் குந்தாணி, தின்னிப் பண்டாரம், சீரியல் பைத்தியம், ஆடம்பர ஆரவல்லி, லேடி டார்ஜான், மாமிச மலை என பற்பல வசவுப் பெயர்களில் குறிப்பிட்டுப் பேசுவது தெரியவந்தது. இதனால் அவர்கள் எல்லோருமே இவளை ஏளனமாகப் பார்க்கவும், முதுகுக்குப் பின் பேசிச் சிரிக்கவும் தொடங்கிவிட்டனர்.  கணவனும் மகளும் கூட அதே வசவுப் பெயர்களைத் தங்களுக்குள் பேசிக்கொண்டு இவளை எள்ளி நகையாடலாயினர்.

            அப்போதும் மாமியார் தனக்கு எதுவுமே தெரியாதது போலவும், தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போலவும் இவள் முன்பு நடந்துகொள்வார். இவளிடம் எப்போதும் போலவே அன்பும், அக்கறையும் காட்டுவார். அவரது இரட்டை கேம் புரிந்து கிரிஜாவுக்கு அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்பட்டது.  மாமியார்க் கிழவியைப் பழிவாங்கியே ஆகவேண்டும் என்று தோன்றியது. வீட்டைவிட்டே விரட்டியாக வேண்டும். அதை எப்படிச் செய்வது என்று எந்த யோசனையும் புலப்படவில்லை. அதற்காகத்தான் வீட்டில் மாமியாரும், மற்றவர்களும் இல்லாத நேரங்களில் தோழிகளிடம் ஆலோசனை.

*******

“நான் அந்த இளமைக் கெழவி மேல எவ்வளவு மதிப்பும், மரியாதையும், அபிமானமும் வெச்சிருந்தேன்! மாமியாருக்கு ரசிகையா இருக்கற ஒரே மருமக, உலகத்துலயே நான்தான்னு நீங்க எல்லாரும் சொல்லுவீங்களே! அப்படிப்பட்ட எங்கிட்ட அந்த டயட் பிசாசு இவ்வளவு கேவலமா நடந்திருக்குதே…! என்கிட்டப் பேசும்போது குணுகுணுன்னு அன்பா, பாசமா, அக்கறையாப் பேசிட்டு, எல்லாருகிட்டயும் கழுவிக் கழுவி ஊத்தியிருக்குதே…!”

கிரிஜா புலம்பியதைக் கேட்கக் கேட்க தோழிகளுக்கு ஆனந்தமாக இருந்தது.

‘ஊருல இல்லாத அதிசயமா உனக்கு மாமியா அமைஞ்சுட்டான்னு என்னா பிலுக்குப் பிலுக்கீட்டிருந்தே…! மாமியாருக்கு ரசிகைன்னு பீத்தீட்டிருந்தயே…! அந்தக் கெளவியே உனக்கு வெச்சுதில்ல, ஆப்ப்…பூ?! நல்லா வேணும்! எங்க வயித்தெரிச்சலை வாங்கிக் கொட்டிட்டா இப்படித்தான் ஆகும்’ என மனதுக்குள் கூத்தாடிக்கொண்டு, “நெனைச்சா எனக்கே தாங்க முடியலையே…! நீ எப்படித்தான் தாங்கறயோ? அந்தக் கெளவி யுனிவர்ஸை சும்மாவிடாத. அதை முதியோர் இல்லத்துக்கோ, அனாதை ஆசிரமத்துக்கோ முடுக்கியுட்டுரு” எனக் கொம்பு சீவிவிட்டனர். 

“முதியோர் இல்லத்துக்கு, அனாதை ஆசிரமத்துக்கெல்லாம் அந்த சிங்கக் கெழவி போகாது. அதுக்கு சொந்த வீடே இருக்குதாச்சு! பென்ஷனும் வருது. முடுக்கியுட்டா அந்த வீட்டுக்குத்தான் போகும். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுட்டு, ஒரு போர்ஷன்ல தங்கிக்கும். அதுக்கு ஒரு பாதிப்பும் வராது. ஆரோக்கியத்தோட 80 – 90 வயசு வரைக்கும் வாழும். எங்குளுக்குத்தான் அது தர்ற ரெண்டு வரும்படியும் நஷ்டமாகும். இருந்தாலும் பரவால்ல. அந்த ஒல்லி பூதத்தை எப்படியாவது எங்க வீட்டுலருந்து ஓட்டியுட்டறணும். அதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க…”

“இதைச் சொல்லியே முடுக்கியுட்டுரு”, “நீயும் பதிலுக்கு, எங்ககிட்டச் சொன்ன மாதிரியே இளமைக் கெளவி, டயட் பிசாசு, ஒல்லி பூதம்னெல்லாம் அக்கம் பக்கத்துல சொல்லு”, “நேரடியாத் திட்டி சண்டைப் போடு”, “உனக்கு இருக்கற ஒடம்புக்கு ஒரு ஊது ஊதுனீன்னாலே அது ஒத்தக்கால்மண்டபம் போயி உளுந்துருமாச்சே…!” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினர்.

சிலர், “எங்குளுக்கு வேற வேலை இருக்குதுப்பா. உனக்குக் கெடைச்ச மாற, வீட்டு வேலை எல்லாத்தையும் செஞ்சு, வருமானம் மொத்தத்தையும் குடுக்கற மாமியாரும் எங்குளுக்குக் கெடையாது. உனக்குத்தான் திங்கறது, டீவி பாக்கறதைத் தவுத்து ஒரு வேலையும் இல்லையே! உக்காந்து நீயே யோசிச்சு வளி கண்டுபுடி” என நழுவிவிட்டனர். 

*******

தீவன பக்கெட்டை மடியில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தின்பண்டங்களாக எடுத்துக் கொறித்து அசைபோட்டபடியே, தோழிகளின் ஆலோசனையில் எதெல்லாம் சிறப்பானவை, எதை முதலில் செய்யலாம் – எதைப் பிறகு செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அம்மாவின் அலைபேசி அழைப்பு.

வாய்க் குதப்பலோடு, “சொல்லும்மா…” என்றதுமே, “ஏன்டீ,… என்னேரம் பாத்தாலும் உனக்கு அரைவை மிசின் ஓடீட்டே இருக்குதே…! முளிச்சிருக்கற நேரத்துல பல்லுக்கும், கொடலுக்கும் ரெஸ்டே குடுக்க மாட்டயா?” என்றார்.

அவசர அவசரமாக அதக்கியபடியே, “ஏம்மா,… எம் மாமியாருதான் நான் திங்கறதைப் பத்தி வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுதுன்னு பாத்தா,… நீயும் திட்டறயே…!” என்றாள்.

“உம் மாமியாரு திட்டறாங்களா? ஆச்சரியமா இருக்குதே…!”

நடந்த சம்பவங்களுக்கு பூதக் கண், மூக்கு, வாய், முறுக்கு மீசை, கோரைப் பற்கள், கொம்பு யாவும் வைத்து விஸ்தரித்தாள்.

அப்படியிருந்தும் எடுபடவில்லை.

“உம் மாமியார் சொன்னது கரெக்டுதானே! அதுல என்ன தப்பு?”

இவளுக்கு அதைக் கேட்டதும் அம்மா மேல் கடுப்பாகியது. “நீயெல்லாம் ஒரு தாயா? அந்த சகுனிக் கெழவிக்கு சப்போட் பண்றயே! நான் செய்யறதுதான் தப்புன்னே வெச்சுக்குவோம். அதை எங்கிட்ட நேரடியா சொல்லவோ, கண்டிக்கவோ வேண்டீதுதான? முதுக்குப் பின்னால ஏன் குத்தணும்?”

“ஏன்டீ,… அந்த வயிசுல உன் மாமியார் எப்புடி இருக்குது; உன் வயிசுக்கு நீ எப்படி இருக்கற? சமையலு, துணி தொவைக்கறது, வீட்டை சுத்தப்படுத்தறது, கடைக்குப் போறது, கொளந்தைய ஸ்கூலுக்கு கூட்டீட்டுப் போறது – வர்றதுன்னு எத்தனை வேலை செய்யுது அந்தம்மா? பெத்த அம்மாவான நானே, உனக்குத் திங்கறக்கு நேர நேரத்துக்கு நொப்பமா சமைச்சுக் குடுத்து, உன்னைய உக்காந்து திங்க வெச்சுட்டு, இத்தனை வேலை வெட்டி செய்ய மாட்டேன். அந்தம்மா அவ்வளவும் செய்யறதும்மில்லாம, ரெண்டு வருமானத்தையும் உங்குளுக்கே தாரை வார்த்துக் குடுத்துருது. இத்தனை வேலை செஞ்சது போக யோகா, வாக்கிங், ஜாக்கிங்னு அதையும் செய்யுது. வாள்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களைப் படிக்குது. இத்தனையும் உன் கண்ணு முன்னாடிதான், உன் வீட்டுலதான் நடக்குது; அந்தம்மா வேர்த்து வடிய உனக்காகத்தான் பாடுபடுது. அதுக்கென்ன தலையெளுத்தா, உனக்கு வேதடிக்கணும்னு? இதையெல்லாம் பாத்தும், உணர்ந்தும் தெரிஞ்சுக்க முடியாதா? நான் உட்பட எத்தனை பேரு, எத்தனை வாட்டி சொல்லவும் செஞ்சோம்! கேட்டயா நீயி? சொகுசா உக்காந்து தின்னு தின்னு,… வாயில நல்லா வருது, ஆமா…! இதுக்கு மேல அந்தம்மா சொன்னாத்தான் உனக்கு நீ பண்ற தப்பு புரியுமா? அவங்க சொன்னா நீ கேட்டுருவயா? தன்னைப் பாத்தே திருந்தாத ஜென்மம், சொல்லியா திருந்தப் போகுதுன்னுதான் அந்தம்மா உங்கிட்ட சொல்லியிருக்க மாட்டாங்க. அதுவுமில்லாம, உங்கிட்டச் சொன்னா, மல்லுக்கட்டத்தான் செய்வ.  வீணா வீட்டுல கலகம் உண்டாகும். அதைத் தவிர்க்கறதுக்காகவும் உங்கிட்ட சொல்லாம விட்டிருப்பாங்க. தன்னோட மனக் குமுறலை மனசுக்குள்ளயே வெச்சுட்டிருந்தாத் தாங்கவும் முடியாது; அதுவே மனோவியாதியாவும் ஆயரலாம்னுதான் மத்தவங்ககிட்டக் கொட்டித் தீத்திருப்பாங்க.” 

“அவுங்கள நானா வீட்டு வேலை எல்லாம் செய்யச் சொன்னேன்? அவுங்களே இழுத்துப் போட்டு செஞ்சுட்டு, என்னைக் கொறை சொன்னா எப்புடி? கொறை சொன்னாலும் பரவால்ல; அத்தனை திட்டு திட்டியிருக்குதே…! வீட்டுலயும், வெளிலயும் எம் மானமே போச்சு! அந்த வில்லிக் கெழவிய வீட்டை விட்டே முடுக்கப் போறேன்…”

“அவுங்களைப் போயி வீட்டைவிட்டு முடுக்கோணும்கறயே…! தின்ன சோத்துக்கு நன்னி வேணும்டீ! அவுங்க அஞ்சு வருசமா உனக்கு இத்தனை பண்ணியிருக்கறாங்களே,… அதுக்கு நீ ஜென்மம் முளுக்க அவுங்களுக்குப் பணிவிடை செஞ்சாலும் தீராது. அதுவுமில்லாம, அவுங்களை வீட்டைவிட்டு முடுக்குனா அவுங்குளுக்கு ஒரு நஷ்டமும் இல்ல. உனக்குத்தான் எல்லாம் நஷ்டம். பேசாம, அவங்ககிட்ட சரணடைஞ்சுரு. வெளிப்படையாப் பேசு. உக்காந்து தின்னுட்டே இருக்கறதை விட்டுட்டு, வீட்டு வேலை செய்யி. அவுங்க கூடச் சேந்து வாக்கிங் போ; யோகா பண்ணு. புள்ளையக் காலைல அவுங்க ஸ்கூலுக்குக் கூட்டீட்டுப் போனா, சாயங்காலம் நீ போயிக் கூட்டிட்டு வா. பண்டிகை, விசேஷம்னா மட்டும் புதுச் சீலை வாங்கு. ஆடம்பர செலவுகளை விட்டுட்டு, பணத்தை சேமிச்சு வெய்யி. சீரியல் பாக்கறதைக் கொறைச்சுக்க. மாமியாரை விரோதியாப் பாக்காம, முன்ன மாதிரியே அவுங்களுக்கு ரசிகையா இரு…”

புயலடித்து, பலத்த சேதங்களை உண்டாக்கி, கரை கடந்து, ஓய்ந்தது போலிருந்தது கிரிஜாவுக்கு.

“எனக்கு எல்லாமே உல்ட்டாவாத்தான் அமையும். அப்படித்தான் அம்மாவான நீயும் அமைஞ்சிருக்கற. எல்லா அம்மாக்களும் மகளுக்கு ஆதரவா இருந்து, சம்மந்தியம்மாவை எதுத்து நிப்பாங்க. நீ என்னடான்னா என் மாமியாருக்கு வக்கீலா வாதாடீட்டிருக்கற. எல்லாம் என் தலையெழுத்து…!” என நொந்துகொண்டாள்.

*******

தாய் சொன்ன காரியங்கள் ஒவ்வொன்றும் நாள் முழுக்க மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தன. அவை யாவும் சரிதான் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்துகொண்டாள். மாமியார் மீது அவளுக்கு இருந்த ஆத்திரம் தணிந்தது.

அவரிடம் சமாதானக் கொடி காட்டவும், தேவைப்பட்டால் மாமியாருக்காக ஒற்றை நபர் ரசிகை மன்றம் வைக்கவும் தயார்.

ஆனால், இனி மேல் குனிந்து வளைந்து வேலை செய்வதற்கு மனம் ஒப்பவில்லை. வாக்கிங் வேண்டுமானால் போகலாம். யோகா – கீகாவெல்லாம் ச்சான்ஸே இல்லை!

என்னதான் செய்வது?

சீரியல் பார்க்காமல் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தபோது மண்டைக்குள் மெர்க்குரி விளக்கு எரிந்தது.

அலைபேசியை எடுத்து, மீண்டும் முகநூல் கணக்கைப் புதுப்பித்தாள். ‘மருமகள் ஒன் வுமன் ஆர்மி’ என்று மாமியாருக்காக ரசிகைப் பக்கம் ஒன்று துவங்கி, அவரது புகைப்படங்களையும் காணொளிகளையும் தினந்தோறும் வெளியிடலானாள். பலத்த பாராட்டுகள் குவிந்து, தம்ஸப்புகளும், சேப்பு ஆர்ட்டின்களும் அள்ளின.

“இப்படிப்பட்ட ரசிகை மருமகள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று முகநூலர்கள் வசுமதியின் பக்கத்துக்குச் சென்று கருத்துரைத்தனர்.

“உன்னைப் போயித் தப்பாப் பேசிட்டனே…! ஒடம்பை விட உனக்கு மனசு ரொம்பப் பெருசு, கிரிஜா…!” இப்போது வசுமதியே வெள்ளைக் கொடி தூக்கிக்கொண்டு வந்தார்.

“இந்தியால இருக்கற டாப் டென் பிரியாணில தலைச்சேரி பிரியாணியும் ஒண்ணு. வித்தியாசமாவும், பிரமாதமான டேஸ்ட்டாவும் இருக்கும்னு சொன்னாங்க. முந்திரிப் பால், சுல்தானா திராட்சை, பெருஞ்சீரகம், பசும்பால் எல்லாம் போட்டு செய்வாங்க. யூ ட்யூப்ல ரெசிபி பாத்து வெச்சிருக்கறேன். நாளைக்கு உனக்கு அதை செஞ்சு தரட்டுமா?” என்றும் கேட்டார்.

பிறகென்ன, அடுத்த ஆறே மாதங்களில் கிரிஜா 104 கிலோ ஆகிவிட்டாள்.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *