மஞ்சுளா சுவாமிநாதன்

ராதா புதுதில்லி ரயில் நிலையத்தில் சென்னை செல்லவிருக்கும்  தமிழ் நாடு விரைவு ரயிலை பிடிக்கக் காத்திருந்தாள். கிளையண்ட் விசிட் ஒன்றை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். அவளது அலுவலகத்தில் விமான டிக்கெட்டிற்கு பதிலாக ரயில் டிக்கெட் போட சொன்னது அவள்தான். வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற அவளது வாழ்க்கை சற்று அலுப்பூட்ட, இரண்டு நாள் ஆர அமர ரயில் பயணம் செய்ய வேண்டும் என்ற திடீர் ஆசை பிறந்தது தான் அதற்குக் காரணம்.

ரயில் வந்தவுடன் அவளுக்காக புக் செய்யப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியை அடைந்தாள். திரைச்சீலைகளோடு அவளது ஏகாந்தத்தை ஆக்கிரமிக்காத வண்ணம் அவளது இருப்பிடம் இருந்தது. அவளோடு பயணித்த மற்ற ஐந்து பயணிகளும் தத்தம் வேலைகளில் ஆழ்ந்து இருந்தனர். இவளைப் பார்த்து யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை, அவளும் அதற்கு வருந்தவில்லை.

இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசமடைந்தவுடன், அவளது மனம் அவளை அறியாமல் பின்னோக்கிச் சென்றது. சிறுவயதில் ஸ்லீப்பர் கோச்சில் மட்டுமே அவள் குடும்பத்தால் பயணம் செய்ய முடிந்தது. முதல் வகுப்பு, குளிர்சாதன பெட்டிகள் இருக்கிறது என்று கூட அறியாத வயது அது. அம்மா கட்டிக் கொண்டுவந்த பொடி தடவிய இட்லியையும், காய்ந்த ரொட்டியையும், புளித்த தயிர்சாதத்தையும் தவிர அப்போது எதற்கும் ஆசைப்பட்டது கூட கிடையாது. அவளுக்கு எரிச்சல் ஏற்படுத்தியதே அவளது அம்மா அக்கம் பக்கத்தினருடன் வளவளவென பேசியபடி உணவு பகிர்ந்துகொண்டே வந்தது தான்.

சற்று விவரம் புரிந்த சமயம் அவளது மனம், ‘நான் நன்றாக படித்து, உயர் பதவிகளுக்குச் சென்று குளிர்சாதன பெட்டிகளில் தான் பயணம் செய்வேன்’ என்று தீர்மானம் செய்தது. இன்று ஏனோ அதே ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்ய மனம் ஏங்கியது. 

சிந்தனைகளிலிருந்து மீண்டவளாக அடிவயிற்றை தொட்டுப் பார்த்தாள். நிறை மாதம். குழந்தையின் தலை ஒரு பக்கமாக முட்டிக்கொண்டு இருந்தது. அதனை மெதுவாக தடவி சமநிலைக்கு வயிற்றைக் கொண்டுவந்தாள். அதற்குள் சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. அவள் ரயில் பயணத்திற்கு ஆசைப்பட்டதிற்கு இது கூட ஒரு காரணம். இந்த நிலையில் விமானத்தை விட ரயிலில் நடந்து, படுத்து, பயணிப்பது அவளுக்கு சுலபமாக இருந்தது. பேறுகாலம் என்பதால் அவளது மனமும் இளகிய நிலையில் இருந்தது. அடிக்கடி கண்கள் கசிந்தன… இதையெல்லாம் அலுவலகத்தில் ஆண்களிடம் சொல்ல முடியுமா? கிளையண்ட்டிடம் தான் சொல்ல முடியுமா? அங்கு முற்றிலும் வேறு ஒரு முகத்தை காண்பித்து விட்டு வந்தவளுக்கு அந்த ரயில் பயணத்தின் ஏகாந்தம் சொல்ல முடியாத ஆறுதலை அளித்தது.

இரவு பல் துலக்கிவிட்டு பேசினுக்கு மேலிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். முகத்தில் நாற்பது வயதிற்கான கரும்புள்ளிகள் தென்பட்டன. தலையில் ஐந்தாறு நிரை முடிகளும் இருந்தன. அவற்றை கோதி முடிந்து கொண்டு, வயிற்றை மீண்டும் ஒரு முறை தடவினாள். அவள் அம்மாவிற்கு நாற்பது வயதில் இரு வளர்ந்த குழந்தைகள் இருந்தது நினைவிற்கு வந்தது. மெல்ல நடந்து சென்று இருக்கையில் படுத்தவளுக்கு தூக்கம் எளிதில் வரவில்லை.

கணமான எழுத்துக்களை தமிழில் சாரமாக படிக்கும் அவளுக்கு அன்று தீவிர வாசிப்பில் ஆர்வம் இருக்கவில்லை. மிருதுவான காதல் கதைகள் படிக்க ஆசையாக இருந்தது. சங்கோஜத்துடன், திரைச்சீலைகளைத் தாண்டி யாராவது அவள் அந்தரங்கத்தை பார்த்து விடுவார்களோ என்று பயந்தபடியே ஈ புக்கை எடுத்தவளுக்கு, திரைப்பட பாடல் வரிகளைத் தலைப்பாகக் கொண்ட பல்வேறு காதல் கதைகளைப் பார்த்தபோது அவற்றை பதிவிறக்கம் செய்ய தயக்கமாக இருந்தது. சமீபத்தில் அவளது ஆதர்ஸ்ய எழுத்தாளர், சினிமா பாடல்களின் வரிகளை இலக்கிய வரிகளாக மேற்கோள் காட்டும் வாசகனை நான் ஒரு வாசகனாகவே  பார்ப்பதில்லை என்று கூறிய வார்த்தைகள் அவளது தயக்கத்தை அதிகப்படுத்தியது. மிகுந்த தர்க்கத்திற்கு நடுவில் அவளது காதல் கதைக்கான ஆசை வெற்றியடைந்தது. அடுத்த நாள் முழுவதும் காதல் கதைகளாக படித்தாள். அந்த கள்ளத்தனம் ரகசிய இன்பத்தை அவளுக்கு அளித்தது.

காதலனின் சந்தோஷத்தை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்திருக்கும் பெண், காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் வருடக்கணக்காக திருமணம் செய்துகொள்ளாத ஆண், போன்ற ஒரே விதமான வடிவமைப்பில் எழுதப்பட்ட காதல் கதைகள் அவளை என்றுமே ஈர்த்ததில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத எதையுமே அவளது பக்குவப்பட்ட மனம் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், உள்ளூர அந்த ஆசைகள் இருக்கத்தான் செய்தன… தன்னையும் ஒருவன் காதலித்து அன்பளிப்பாக வைர மோதிரம் போடமாட்டானா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. ஒருவேளை அவளுக்கு அது அமையாததால் தான் “வைரம் கூட கரிமம் தானே!” என்று அவள் மனம் கேலி செய்ததோ என்றும் தோன்றியது. 

அவளுக்கு நாலு கழுதை வயதில் திருமணமான போது கணவனின் வயது அதைக்காட்டிலும் அதிகம். அவர்களுக்குள் கருத்துகள் ஒத்துப்போனதா? ஒரே மாதிரியான விருப்பங்கள் இருந்தனவா? என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை, பேசவும் இல்லை. உன்னுடைய வீட்டில் வசிப்பதா? என்னுடைய வீட்டில் வசிப்பதா? உன் சம்பளம் எவ்வளவு? இதுதான் என் சம்பளம், இருவரும் சேர்ந்து வரவுகளை எப்படி நிர்வாகம் செய்வது? குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? பிறந்தால், இருவரது பணிகளும் பாதிக்கப்படாமல் எப்படி அதை வளர்ப்பது என்பது போன்ற உரையாடல்களே அவர்களுக்குள்  நடந்தன.

என்று சந்தித்தோம், முதல் முத்தம் என்று கொடுத்தோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளாத அவர்கள், ஓவ்யூலேஷன் தேதிகளை நினைவில் வைத்துக் கொண்டு கருத்தரித்ததை நினைத்தபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது. திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தான் அவள் கணவனுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத விஷயமே அவளுக்குத் தெரிந்தது. புதுமணத் தம்பதியருக்கு இருக்கக் கூடிய எதிர்பார்ப்புகளோ, அந்த முதல் ஸ்பரிசத்தின் மின்சாரமோ எதுவுமே அவர்களிடத்தில் இருக்கவில்லை. இப்போது கருவுற்றிருக்கிறாள், அப்பவும் கூட அவன் அவளைத் தாங்கவில்லை… அவள் எதையுமே அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, அது வேறு கதை, ஆனால், அந்த நெருக்கம் அவர்களிடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.     

ரோம்-காம் வகையறா புத்தகங்களை படிக்கையிலும் சரி, காதல் காட்சிகளை பார்க்கும் போதும் சரி, இதயத்திலும், வயிற்றுப் பகுதியிலும் அதிகம் இரத்தம் ஊறுவது போல ஓர் உணர்ச்சி ஏற்படும், அவை ஹார்மோன்ஸ் மாற்றங்களால் ஏற்படுபவை என்று அவள் அறிவிக்குத் தெரிந்தாலும், மனதிற்கும் அது அவ்வப்போது தேவைப்படுகிறது என்று நினைத்தாள். ஆனால், தன்னை ஒரு அறிவாளி என்று காட்டிக்கொள்ள ஆசைப்படுகிற அவளுக்கு, ஒரு காதல் கதையை உருகிப் படிப்பதே அவமானம் என்றும் தோன்றியது. இதில் கணவன் மீது காதலைக் காட்டவும், அவனது அன்பை அனுபவிக்கவும், அவளுக்கு புரியாமல் இருந்தது.

ரயில், சென்னை சென்ட்ரலை விடிந்தால் அடைந்துவிடும், மனதின் ஓரத்தில் அவன் ஸ்டேஷன் வந்து அழைத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்று ஒரு எண்ணம் எழுந்தது. அந்த ஆசை விரிவடைவதற்குள், “உன்ன வந்து கூட்டிக்கட்டுமா?” என்று அவன் கேட்டதற்கு, “எதுக்கு பா அலையற? நானே வந்துடறேன்,” என்று அவள் சொன்னது நினைவிற்கு வந்தது. அமைதியாக படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை அவள் எழுந்தபோது கீழே போட்டிருந்த போர்வை ஈரமாக இருந்தது. கழிப்பறைக்கு சென்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். பனிக்குடம் உடைந்திருந்தது. அவள் பயப்படவில்லை. அதற்கான சாத்தியக்கூறினை அவள் மருத்துவர் மூலம் அறிந்திருந்தாள். உடனே, அவள் கணவனை அழைத்து, “கிருஷ்ணா, பனிக்குடம் உடைஞ்சுருச்சு, நான் ஹாஸ்பிடல் போயிடறேன், நீ என் பையையும், இன்சூரன்ஸ் கார்டையும் எடுத்துட்டு வந்துடு,” என்று தெளிவாக கூறிவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள் ராதா.

கிருஷ்ணா வந்தவுடன் சிஸரின் ஆப்பரேஷன் செய்து குழந்தையை எடுத்தார் மருத்துவர். இருவரது பெற்றோர்கள் தொடங்கி நெருங்கிய உறவுகள் தொடர்ச்சியாக வந்ததை மயக்க நிலையில் கவனித்தாள் ராதா. இருவரது பெற்றோருமே எழுபது வயதைக் கடந்தவர்கள் என்பதால் பிரசவத்தை அவர்களே பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி இருந்தனர். அதனால் கிருஷ்ணா தான் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். நவீன மகப்பேறு மருத்துவமணை என்பதால் நட்சத்திர ஹோட்டல் அளவிற்கு அங்கு வசதிகள் இருந்தன. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை யாராவது வந்து “இப்போ வலி எப்படி இருக்கு? மோஷன் போனீங்களா? என்று கேட்ட வண்ணம் இருந்தார்கள். ஆனால், உண்மையாகவே மோஷன் வந்த நேரத்தில் அந்த தளத்தில் ஒருவரையும் காண முடியவில்லை.

“கிருஷ், பாத்ரூம் போகணும், நர்ஸ், இல்லாட்டி, ஆயாம்மா யாரையாச்சும் கூப்பிடறியா?” என்றாள் தயங்கியபடி ராதா.

“எதுக்கு யாராவது? நான் தான் இருக்கேனே?” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்… ஒரு லேடி இருந்தா தேவல, சொன்னா புரிஞ்சுக்க…” என்று இழுத்தாள்  ராதா.

“நானே வரேன், எழுந்திரு,” என்று அவளை கைத்தாங்கலாக எழுப்பி கமோடில் உட்காரவைத்தான். தரையிலும், இருக்கையிலும் இரத்தம் கசிந்தது. அவள் முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தவன், கை பிஸ்டனை எடுத்து, அவளை அலம்பி, கழிப்பபறையையும் எந்த அருவருப்பும் இன்றி சுத்தம் செய்தான். திருமணமான ஒன்றரை ஆண்டில் அவள் இத்தனை நெருக்கமாக அவனிடம் உணர்ந்ததே இல்லை. “தாங்க்ஸ் கிருஷ்!” என்று அவள் முடிப்பதற்குள், “தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு? எனக்கு ஒண்ணுன்னா நீ செய்யமாட்டியா என்ன?” என்றான். நிற்கவே முடியாமல் தடுமாறியவள், கண்களைத் துடைத்துக் கொண்டு அவனிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு, கழிப்பறையை விட்டு நகர்ந்தாள்.

“உள்ள என்ன சொன்ன நீ?” என்று பின்னால் வந்த கிருஷ்ணன், படுக்கையில் படுத்திருந்த ராதாவைப் பார்த்துக் கேட்டான்.

“தாங்க்ஸ் சொன்னேன்!” என்றாள் ராதா.

“இல்ல, அப்புறம் ஏதோ சொன்னியே? எனக்கு சரியா கேட்கல,” என்று மறுபடியும் கேட்டான்.

அவன் கேட்டுவிட்டு கேட்காதது போல நடிக்கிறான என்பதை அறிந்த ராதா, நிதானமாக அவன் முகத்தைப் பார்த்து, “ஐ லவ் யூ! சொன்னேன், போதுமா!” என்றாள்.

“நீ என்னைப் பார்த்து அப்படி சொன்னதே இல்ல தெரியுமா? நான் சொன்னா கூட, ‘காதல்’ ரொம்ப மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி-ன்னு சொல்லி என்னை கேலி செய்திருக்க,” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான்

“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி தான், ஆனால், அது இல்லாமலும் இருக்க முடியல!” என்றாள் சிரித்தபடி ராதா. அவள் உடலிலும் ஹார்மோன்ஸ் அலைபாய்ந்தது.                       

00

மஞ்சுளா சுவாமிநாதன்

நான் முதலில் ஓர் வாசகர். கோவிட் ஊரடங்கு எனக்கு புத்தகங்கள் படிக்க ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். பல்வேறு மாத இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள்  பிரசுரம் ஆகி வருகின்றன. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *