சம்பளம் வாங்கியாயிற்று, இப்போது தனுவும் சேகரும் ஆளுக்கொரு ஹாஃபை வாங்கிக் கொண்டு சம்பள நாளை கொண்டாட வேண்டியதுதான் பாக்கி.

“லே சேகரு! நீயும் நானும் குடிச்சு குடிச்சு அழிஞ்சு போறோம்னு சொல்லுறாங்க. நாம என்ன குடிச்சு அழிஞ்சா போவுறோம்? இவனுவதான் குடிக்காம அழிஞ்சு போறானுவ… என்ன நான் சொல்லுறது?”

“எசமான்! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் எசமான்… செத்த *தாயோளி! குடிச்சா சாவோம்னு தெரிஞ்சுதானே லே குடிக்க. அப்புறம் என்னா மசுத்துக்கு அவஞ்சொன்னான் இவஞ்சொன்னாம்னு குடிக்கப் போவையில சொல்லி என் மூடை கெடுக்குற? போனமா குடிச்சமா போயி படுத்தமான னு தான இருக்கனும்…”

சேகருக்கும் தனுக்கும் 22 வயதாகிறது. இருவரும் ஒரே வருடம் பிறந்தவர்கள். இன்னும் திருமணமாகவில்லை. ஆனால், அவர்களின் ஊரிலேயே மிகவும் பொறுப்பான இளைஞர்கள் இவர்கள் இருவரும்தான். பள்ளிப் படிப்பு மூளைக்கு ஏறவில்லை என்று தெரிந்ததுமே, இருவரும் ஒரே நாளில் முடிவெடுத்து பக்கத்து ஊர் மை தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டடனர். பள்ளி காலம் தொட்டு இன்று வரையிலும் கூட இருவரும் பெண்களின் பின்னால் சுற்றியதும் இல்லை. ஆனால், வேலைக்குச் சேர்ந்த புதிதில் உடம்பு வலி தாங்க முடியாமல் என்ன செய்வதென்று விளித்தவர்களை ஒயின் ஷாப்பிற்கு அழைத்துச் சென்று உடம்பு வலி மருந்து காட்டியது, செங்கண்ணன். தொழிற்சாலையில் இவர்களின் சூப்பர்வைசர். பிறகு முதல் இரண்டு ஆண்டுகள், உடம்பு வலியை சாக்காக வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டே இருந்தவர்கள், இருவதாவது பிறந்த நாளின் போது எடுத்த முடிவுதான், இனி சம்பள நாள் அன்று மட்டும் ஆளுக்கு ஒரு ஹாஃப் அடித்து அந்த மாதம் முழுமைக்குமான உடம்பு வலியைத் தீர்த்துக் கொள்வது என்பது. செங்கண்ணன் இவர்கள் இருவரையும் பார்த்து பல தடவை வியந்திருக்கிறார்.

உடன் வேலை செய்பவர்களிடம் கூட, “இவனுக இரண்டு பேரையும் பார்த்தாலே எனக்குப் பொறாமையா இருக்கு. இந்த வயசுலேயே என்ன செய்யனும் செய்யக் கூடாது, எது வரும் வராதுன்னு தெரிஞ்சு இவ்வளவு விவரமா முடிவெடுக்குறானுங்க. குடியை நிப்பாட்டுனதுமில்லாம அதையே கட்டுக்கோப்பா கண்டிரோல்ல வச்சிருக்கானுங்க. வேலையில ஒரு குத்தம் சொல்லாதபடி சுத்தமா சொய்யுறானுக… பார்த்து கத்துக்குங்க டா..” என்று ஒரு நாள் சொன்னது உண்டு.

*****

நகராட்சி பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த டாஸ்மாக்கினுள் சென்று, எதோ இரண்டு ஹாஃப் ரம் பாட்டிலும் நொறுக்குத் தீனியும் கிளாஸும் தண்ணீர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு வந்தான் சேகர். தனு குடிக்கும் போது ஊத தேவையான ஃபில்டர் சிகரெட்டு பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டான். ஆளுக்கு 500 ரூ மாத பட்ஜெட்.

பஸ் ஏறி ஊருக்குள் நுழைந்ததும் இருக்கும் பம்புசெட், மாணிக்கம் அண்ணனுடையது. இரவு ஏழு மணிக்கு மேல் அங்கே யாரும் வர மாட்டார்கள் என்பதால், அங்கேதான் அமர்ந்து மாதாமாதம் ஒன்னாந்தேதி பூசையை நிகழ்த்துவார்கள்.

தனு கொஞ்சம் அமைதிதான், சேகர் சாதாரணமாகவே சத்தமாகத்தான் பேசுவான். வாயைத் திறந்தால் வாந்தியை விட மோசமான கெட்ட வார்த்தைகளாக வந்து விழும். அதனால், அந்தப் பம்பு செட்டைப் போன்ற ஒதுக்குப்புறமான இடம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

பம்பு செட்டில் நுழைந்ததும், எப்போதும் போலப் பேண்டைக் கழற்றிவிட்டு இருவரும் லுங்கிக்கு மாறினர். மெல்லிய சூரிய ஒளியைப் போல் பம்பு செட்டை சுற்றிலும் தன் ஒளிக்கீற்றைப் பரப்பிக் கொண்டிருந்த 20 வாட்ஸ் மஞ்ச பல்புக்கு ஆயுள் சீக்கிரமாக முடிந்துவிடுவதைப் போல அவ்வப் போது மின்மினியாக மின்னியது.

வாயில் சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு தனு ஹாஃ பாட்டிலை எடுத்தான். “ஏம் லே! இதென்ன புதுச் சரக்கா இருக்கு? மிராக்கிள்னு போட்டுருக்கு நான் இது வரைக்கும் பார்த்ததில்லையே சேகரு? நல்லாயிருக்குமா?”

“யோவ்! குடிச்சுப் பாரும்யா. சரக்கெல்லாம விக்குற விலையில, நம்ம பட்ஜெட்டுக்குள்ளாற வந்த ஒரே சரக்கு இதாம். வேற எங்கிட்டு போவ இதை விடக் கம்மியா வாங்க?”

“கம்மி வெல சரக்கைக் குடிச்சா குடலும் ஈரலும் கெட்டுப் போவும்னு சொல்லுறாங்களே? அப்போ இதைக் குடிச்சு ஏதும் பண்ணி விட்டுறாதே?”

“நாளன்னைக்குச் சாகப் போறவன் நாளைக்குச் செத்தாதான் என்னாவாம்? உட்காரும்யா ஒரு ரவுண்டைப் போட்டுட்டே பேசுவோம்” என்று சேகர் தனுவின் கையிலிருந்த பாட்டிலை வாங்கினான்.

இருவரும் கிணற்றை ஒட்டியிருந்த பம்பு செட்டின் வாசல் பல்பு வெளிச்சத்தின் கீழ் உட்காராமல் சற்றே தள்ளியிருந்த அரை இருட்டில் அமர்ந்தார்கள். “குடிக்கும் முன்னமே சிகரெட்டையெல்லாம் காலி பண்ணிருவ போல?” என்று தனுவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாட்டிலை ஒரு சுற்றுச் சுற்றித் திறந்தான் சேகர்.

“டொப்” என்று வெடித்தது போல் ஒரு சத்தம், பாட்டிலுக்குள்ளிருந்து புகையாக வந்தது. சேகருக்கும் தனுவுக்கும் இருமல் தாங்கவே முடியவில்லை. சிறிது நேரம் இருவரின் கண்களும் கலங்கி பார்வை மங்கலாகத் தெரிந்தது. பாட்டிலுக்குள்ளிருந்து எதோ ஒரு திரவமா, இல்லை உருவமா என்று தெரியவில்லை. எதோ ஒன்று வெளியே வந்தது போலத் தெரிந்தது. புகை எல்லாம் குறைந்ததும் சேகர், வாயடைத்துப் போனான். ‘பாட்டில் இருந்த கருப்புக் கலரில், உள்ளே என்ன இருக்கிறது ஒன்றும் தெரியவில்லையோ?’ என்று சந்தேகப்பட்டு இன்னொரு பாட்டிலை எடுத்துப் பார்த்தான். உள்ளே அவன் குலுக்கலுக்கேற்றபடி குலுங்கி கொண்டிருந்தது திரவமாகத்தான் தெரிந்தது.

******

உள்ளிருந்து வெளியேறிய திரவம், நெளிந்து எழுந்து காற்றிலெழும்பியது. அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தாலும், அவ்வுருவத்திற்கு வாயும் இல்லை கண்ணும் இல்லை. இருவரும் அச்சத்தில் எழுந்து ஓடிவிடப் பார்த்தனர்.

“யோவ்!! என்னய்யா இது? ஒரு நாள் சரக்கடிக்கலாம்னா, இப்படி ஆகிப் போச்சு. இதென்னா அலாவுதீன் பூதம் மாதிரி வந்து நிக்குது? என்ன எழவுன்னே புரியலையே?” என்ற தனுவைப் பார்க்காமல் அவன் கையிலிருந்த இன்னொரு பாட்டிலையே பார்த்தவாறிருந்தான் சேகர்.

தனுவுக்குப் புரிந்துவிட்டது, “என்ன இந்தப் பாட்டிலையும் திறக்க சொல்லுறியா?” என்று கேட்டவாறே அதன் மூடியைத் தட்டித் திருகித் திறந்தான். இம்முறை, பாட்டிலுக்குள்ளிருந்து புகை ஏதும் வரவில்லை. ஆனால், ஒரு வித்தியாசமான வாசனை, நுகரும் அனைவரையும் கட்டிப் போட்டு மயக்க வைக்கும் வாசனை. மல்லிப்பூத் தோட்டத்திலோ மரிக்கொழுந்து தோட்டத்திலோ நுழைந்தால் வரும் வாசமான உலகுக்குள் நுழைந்ததைப் போன்ற வாசனை!!

“ப்பாஆஆஆ… இப்படியொரு வாசனையை நான் இது வரைக்கும் அனுபவிச்சதேயில்லை தனு. என்னவொரு வாசனை?” இந்தப் பாட்டில் உள்ளேயும் சரக்கில்லை என்ற வருத்தத்தை மறந்து வாசனையை அனுபவித்தான் சேகர்.

தீபாவளி ராக்கெட் எழுப்புவதைப் போல் ஒரு ஒலி சடாரென்று ஒலித்தது. இருவரும் அதை உணர்வதற்குள், அதனுள்ளிருந்து பறந்து சென்று, ஏற்கனவே திறந்த பாட்டிலில் இருந்து வெளி வந்த உருவத்தினுடன் சேர்ந்து கொண்டது ஏதோ…

இப்போது, அவ்வுருவத்தின் கண்களும் வாயும் தெரிந்தன. விடுதலையடைந்ததைப் போலப் பறக்க எத்தனித்தது அவ்வுருவம்.

“ஏய்! எங்கன போற நீ? 800 ரூபா சரக்குப் பாட்டில்களைக் காலி பண்ணிட்டு இங்கேயிருந்து தப்பிச்சு போகலாம்னு பார்க்குறியா? ஒழுங்கா மரியாதையா காசைக் கொடுத்துட்டு போ இல்லைன்னா சரக்கை வாங்கிக் கொடுத்துட்டு போ? இந்நேரத்துல ஊருக்குள்ள மறுபடியும் போயி வாங்கிட்டு வாரதுக்குள்ள கடையைச் சாத்திடுவாங்க…” என்று அதட்டலாக அதனுடன் பேசினான் சேகர்.

சற்றும் சட்டை செய்யவில்லை அந்த உருவம்.

மெதுவாக மிதந்து சேகரின் மூக்குக்கு அருகில் வந்தது. சேகருக்குள் எதோ நிகழ்ந்ததை அவனால் உணர முடிந்தது. “லேய் தனு? இது என்னை என்னமோ செய்யுது டா? எனக்கு என்னமோ பண்ணுது… என்னைக் காப்பாற்று…” என்று அவன் கதறியதெதுவுமே தனுவின் காதுகளுக்குக் கேட்டாலும், அவன் வாய் குழறலாகப் பேசியதால், ஒன்றுமே புரியவில்லை…

“சேகரேய்… என்னடா குடிக்காமலேயே குடிச்ச மாதிரி வாய் குழறி பேசுற? நீ பேசுறது எதுவுமே புரியலையே டா” என்ற தனுவின் வார்த்தைகள் சேகரின் காதுகளில் விழும் போது சேகர் “முழுப் போதை” க்குச் சென்றிருந்தான். அவனால் நிற்கவே முடியவில்லை. போதைத் தலைக்கேறியதை உணராமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

“ஏய்ய்ய்ய்… அவனை விட்டுரு? அவனை என்ன பண்ணுற நீ? அவனுக்கு எதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கு அவன் குடும்பமே கஷ்டப்படும். அவனை ஒன்னும் பண்ணிடாத…” என்று கதறினான் தனு.

கெஞ்சும் போதுதான் அவன் கண்களுக்கு அந்த உருவம் நன்றாகத் தெரிந்தது, புகை போன்ற உருவத்தின் மண்டையில் ஆங்காங்கே முடி, இரு பளிங்கு கண்கள். ஒரு நீண்ட வால். கால்கள் இல்லை. கைகளும் இல்லை. வாயொரு சிறிய மது போத்தலின் திறப்பைப் போல இருந்தது. அதை என்னவென்றே அவனால் விவரிக்கவே முடியாத அளவுக்கு விகாரமாக இருந்தது. அரை அடைகாப்பில் பொரித்த முட்டையிலிருந்து பிறந்த அரை ஜந்துவாகத் தெரிந்தது. ‘ஒரு வேளை அது சேகரையும் தன்னையும் கொன்று விடுமோ?’ என்று அஞ்சியவன் மோட்டார் ரூமுக்குப் பின் ஓடித் தப்பித்துவிட எண்ணி ஓடினான்.

சேகர் இன்னும் நிலை குலைந்து, நிற்க முடியாமல் தடுமாறியவாறிருந்தான். இப்போது சேகரை விட்டுவிட்டு மோட்டார் ரூமுக்குப் பின்னால் நின்றிருந்த தனுவின் அருகே வந்தது. இப்போது தனுவுக்குள் எதோ நிகழ்வதைத் தனுவும் உணர்ந்தான். சேகரைப் போலவே தானும் மாறப் போவதை அறிந்த அவன் அமைதியாக நின்றான். “என்னா பண்ணனுமோ பண்ணிக்க? ஆனா உசுரோட விட்டுரு?” என்று சொன்னவன் ஒரு முறை சேகரைத் திரும்பி பார்த்தான், அவன் உயிருடன் நின்று கொண்டிருந்தது நம்பிக்கை அளித்தது.

மெல்ல சேகரைப் போலவே தனுவையும், “முழுப் போதை” உலகத்துக்குள் இழுத்துச் சென்றது அவ்வுருவம். அவன் பேசுவதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. கால்கள் தடுமாறின, நிலைகுலைந்து போனான். தடுமாறினான். உளறத் துவங்கினான்.

சட்டென்று காற்றில் கலந்ததைப் போலக் காணாமல் போனது அந்த உருவம்.

தனுவும் சேகரும் இரவெல்லாம் மோட்டார் ரூம் அருகிலேயே தள்ளாடியபடியே இருந்து, இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டனர்.

*****

சேகர்தான் காலையில் முதலில் எழுந்தான். உடல் கணத்தது, தலை வலித்தது. ஆனால், தான் உயிருடன் இருப்பதை மட்டும் எண்ணி மகிழ்ந்து தனுவைத் தேடினான். மோட்டார் ரூமுக்குப் பின்பக்கம் படுத்திருந்த தனுவை எழுப்பும் முன், அவன் நெற்றியைப் பார்த்தான்…

சின்னஞ்சிறு எழுத்துக்களாகத் தமிழில் எதோ எழுதியிருந்தது. உடனே தன் நெற்றியில் தேய்த்துப் பார்த்தான், அங்கேயும் எதோ தட்டுப்பட்டது. தனுவின், நெற்றியில் தழும்பைப் போல் என்ன எழுதியிருந்தது என்று பார்க்க குனிந்தான், அதற்குள் எழுந்த தனு சட்டென்று இவன் முகத்தில் இடிக்க, “****ளி!! மூக்குப் போச்சு டா? என்னதான்டா ஆச்சு நேத்து நைட்டு, சரக்கு பாட்டிலை ஓபன் பண்ணதுதான் ஞாபகம் இருக்கு அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியல?”

கண்களைக் கசக்கி கொட்டாவி விட்டபடியே, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான் தனு. “லேய்!! நான் என்ன பேசிட்டிருக்கேன்? நீ இப்போ சிகரெட்டைப் பத்த வச்சிட்டிருக்க? நேரம் என்ன ஆச்சுத் தெரியுமா? வா சட்டுன்னு கிளம்பலாம். அதுக்கு முன்னாடி உன் நெத்தியில என்னமோ எழுதியிருக்கு என்னான்னு பாரு?” என்று சேகர் சொன்னதும், நெற்றியைத் தடவி பார்த்தவன், சேகரின் நெற்றியிலும் எதோ எழுதியிருப்பதைப் பார்த்தான்.

இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தனர், மோட்டார் ரூம் இருந்தது, முந்தைய நாள் இரவிலிருந்து ஏதும் மாறவில்லை என்பதைப் போலவே உணர்ந்தார்கள்.

ஒருவரின் நெற்றியை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், உற்றுப் பார்த்துப் படித்த போது, நெற்றியில் “மிராக்கிள்” என்றெழுதப் பட்டிருந்தது.

அதைப் படித்து உணர்ந்த அடுத்த நொடி, எல்லாம் இருண்டது, இருவரும் ஆளுக்கொரு மிராக்கிள் மது போத்தலுக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்த போது, உள்ளே, “மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு” எனும் அசரீரி ஒலிக்கத் துவங்கியது. பாட்டில்கள் மீண்டும் ஒயின் ஷாப்புக்குத் திரும்பி கொண்டிருந்தன.

குமரகுரு

சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மணல் மீது வாழும் கடல் மற்றும் ஒரு உபரியின் கவிதைகள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *