ஆசையின் கைபிடிக்குள் அலையும் மனதை, காமமெனும் மிருகத்தின் காலம் தாண்டிய அதிகாரத் தீண்டலை, நினைவுகளுக்குள் குத்திக் கொண்டிருக்கும் தூண்டில் முட்களை, கவலைகளை உண்டு செரித்து கனவுகளை விரிக்கும் இரவின் வருகையை, நிலையற்ற வாழ்வையே வரையத்துடிக்கும் ஓவியத் தூரிகையை, சொற்களின் தராசு நிலையை, அனுபவத்தின் சாளரத்தில் ஒழுகும் நம்பிக்கை வெளிச்சத்தை, வானத்தை அளக்க துடிக்கும் பறவையின் சிறகுகளை, நிர்க்கதியற்று நீளும் நெடுஞ்சாலை நீட்சிகளை, தவறுகளில் கிடைத்திடும் வெற்றியின் முகவரியை, ஆழ்கடலின் மௌன மொழி விளம்பும் ஆயிரம் வாய்ப்புகளை, உழவனின் வறுமையை, மனிதப் பேராசையில் மரணம் அடைந்த மொட்டைக் குளத்தை, கடனற்ற வாழ்வைத் தூற்றும் காலி மனங்களை, கண்டுகொள்ளத் தேவையற்ற கடவுளை என தளங்கள் வெவ்வேறாக தன்னைப் புகுத்திக் கொண்டு சகலத்தையும் பதிவு செய்கிறது மிருகத்தின் வாடை.
ஆசையின் நெடும் பாய்ச்சலுக்கு நேரம் காலம் ஏது? உள்ளே உறங்கும் மிருகம் தன்னை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் தெரிந்து விடுகிறது உயிர்களின் வகைமை.
**____
வேட்டையாடியின் ஈட்டி
வாயில் முளைத்த கொம்பை உடைக்கிறது**
எட்டிப் பார்க்கும் மிருகத்தின் குணங்களில் அவ்வப்போது தடுமாற்றத்தில் விழுந்து விடுகிறான் மனிதன். இழுத்துப் பிடிக்கப் போடாத கடிவாளமும் எட்டி நகர்த்திட குத்திடாத அங்குசமும் இல்லாதவரை மிருகத்தின் வாடையில் மிதந்து கொண்டிருக்கிறான் மனிதன் என்று கூறுகிறது கவிதை.
பருவத்தின் நகர்தலில் வயதுகளின் ஊர்வலம் வாழ்வை நினைவுகளாக்கி விடுகின்றன. இளமையின் காலச்சுழலை இன்னும் சுமந்திருக்கும் அழிந்து போகாத மனதுக்குள் கட்டிடங்களாக மாறிப்போன ஏரிக்குள் மீனைக் களவாடும் தூண்டிலின் முட்கள் குத்திக் கொண்டுதான் இருக்கும் என்று நினைவுகளை வகைப்படுத்துகிறது பக்கம் 13 இல் உள்ள கவிதை.
**______
ஒரு சீற்றம் போல எழுந்து கொண்டிருந்தது வானிலிருந்து
இருளின் பேரலை**
;:;; பக்கம் 14
ஒருசேர ஓய்வுக்கும் இயக்கத்துக்கும் படுக்கை விரிக்கும் இரவின் வருகை எல்லோருக்கும் தேவையாகி போகிறது. நசநசக்கும் வெயிலுக்கும் கசிந்து விட ஆரம்பிக்கும் அந்திக்கும் முளைத்திடும் காரணங்களுக்கெல்லாம் இருளின் பேரலை ஏதேனும் ஒரு தீர்வை வீசிவிட்டுச் சென்று விடுகிறது.
காதலைக் கொண்டாடுபவர்களுக்கு காமத்தின் திசை தேவைப்படுவதில்லை. காதலின் பெயரில் உடலைக் கொண்டாடுபவர்களுக்கு காதலின் வரையறை விளங்குவதில்லை. அவரவர் ஆசைகளை அவரவர் ஒப்புக்கொண்ட பின் காதலுக்கும் காமத்துக்கும் ஒப்பந்தங்கள் உணரப்படுவதில்லை என்று விளம்புகிறது பக்கம் 15 இல் உள்ள கவிதை.
மிச்சம் இருக்கிறது ஒரு நாழி கவிதையின் வழியே “”மனிதனின் வாழ்வு என்பதே எப்போதும் வரைந்து முடிக்கப்படாத ஓவியம் தானே அழித்தும் கோடுகள் சேர்த்தும் கீறல்களை கொண்டாடியும் நகர்த்திடும் வாழ்வில் ஓவியம் நிறைவுறுகையில் நின்று ரசித்திட மனிதனுக்கு நேரம் கிடைப்பதில்லை வாய்ப்பு கூடுவதில்லை” என்று உணரமுடிகிறது
***எறிந்த கல்லை போல உனது வார்த்தைகளை
பயன்படுத்தாதே
அதைக் கொண்டு
உன்னுடைய உருப்படியான வாழ்க்கையை மீட்டுக் கொள்ள முடியாமல் போகலாம் சொல்லை கத்தியாக தீட்டிக்கொண்டு யாரைக் கொல்ல போகிறாய்?
அதைக் கொண்டு
காந்தியின் அகிம்சையை போதித்து விட முடியாதல்லவா?
பக்கம் 21
இருளிலிருந்து புறப்பட்ட மனிதனின் நகர்வுக்கு வெளிச்சமென வழி காட்டுவது சொற்கள் இன்றி வேறில்லை. தவறவிட்ட வாய்ப்புகளாலும் தவறிப்போன பொழுதுகளாலும் தொலைந்திடும் வாழ்வை மீட்டு எழுந்து வரும் ஒருவனுக்கு வார்த்தைகள் தவறாகையில் நரகமே முன்னிருக்கும். பிறர் மீது கல்லென சொற்களை வீசாமல் கனியென இதமாடுங்கள் என்கிறது இந்தக் கவிதை.
அனுபவமும் கேள்வி ஞானமும் அஃறிணைகளுக்கும் அறிவை புகட்டி விடலாம். பொறுமையின் சிகரத்தில் காதுகளை விரித்துக் கொண்டால் உலகத்தின் பாடமெல்லாம் உனக்குள்ளே ஒளி வீசும் – என்கிறது பக்கம் 22 இல் உள்ள கவிதை.
**கூரைக்கும் வானுக்கும் இடையில் தன்னைத்தானே கடந்து செல்கிறது பறவை***
பக்கம் 29
நினைவுகளாலும் நிஜங்களாலும் மனிதனை அசைத்துக் கொண்டிருக்கும் ஆசையின் சாட்டையடிக்கு இலக்காகிப் போவதன் பெயர்தான் வாழ்வென்பது. வருடங்கள் கடந்த போதும் பாழ்யத்தையும் இருப்பையும் ஒப்பிட்டுக் கொள்ளும் மனிதனும் கரைக்கும் வானுக்கும் இடையில் தன்னைத்தானே கடந்து செல்லும் பறவையாகிப் போகிறான்.
**__________
சாலையில் நடக்கும் மரணங்களை
கடந்து போவென
அங்கு உறைந்த ரத்தத்தை
ஒரு நாய் நக்கிக் கொண்டிருக்கும் வேளையில்
புறங்கையால் சூவென ஓட்டுவதற்கும்
யாருமற்ற சாலையாக
தன்னை மாற்றிக் கொள்கிறது
நீண்டு செல்லும் நெடுஞ்சாலை **
பக்கம் 31
நேர நிர்ணயங்களுக்கென நெடுஞ்சாலைகளை நிறுவிடும் அரசுகள் ஆரோக்கியத்திற்காக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் பொது ஜனம் பிறரின் துயர் துடைக்க நீட்டிடும் விரல்களில் எல்லாம் குருதியின் ரேகைகள் படிந்தாலும் அழிந்து விடாத மனிதத்தைத் தேடமுடிவதில்லை நெடுஞ்சாலையிடம் என்று விளக்குகிறது இந்தக் கவிதை.
*______
தவறுகளுக்கு இடமில்லாத உலகம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலம்
_________________***
பக்கம் 42
முயன்று தவறிக் கற்கும் வாழ்வே முன்னேற்றத்தின் முனையைப் பிடிக்கிறது. தவறுகளுக்கான இடம் இல்லாவிட்டால் வாய்ப்புகளுக்கும் வகுப்புகளுக்கும் தேவையில்லாது போய்விடும். வாழ்வெனும் வட்டத்தை முழுமையாக்கும் முயற்சியில் மனிதன் தவறித் தவறி விழுந்தும் எழுந்தும் நகர்த்திக் கொள்கிறான் உலகத்தின் அச்சை.
மௌனத்தின் மொழிகளில் ஆழ்கடல் பேசிடும் துயர்மிகு வாழ்வின் நினைவுகள், கரங்களில் தவழ்ந்திடும் கடலின் பரிசுகள், எல்லோருக்குமான ஆறுதல்கள் என கற்றுக் கொள்வதற்கு அலைபல்கலைக்கழகம் என விரிந்திருக்கும் கடலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறது கடற்கவிதை.
*இவ்வுலகில் உய்யும் பொருட்டு
என் மீதான எல்லா பழிகளையும்
நிலத்தின் மீது இறக்கி வைத்தேன்.
சற்று புரண்டு படுத்தன காலங்கள்*
பக்கம் 52
உலகப் பரிணாமத்தின் இறுதி உயிரெனத் தோன்றினாலும் தனக்கான சிறப்பான ஆறாவது அறிவைக் கொண்டு உலகத்தையே கட்டி ஆளத் துடிக்கும் மனிதனின் பேராசைக் கரங்களுக்குள் காலங்களும் திசை மாறிப் போய் விடுகின்றன. தனக்கான புதைகுழியைத் தானே வெட்டிக்கொண்ட போதிலும் மனிதனின் கோரக்கரங்கள் அடுத்தவர் மீது பழி சுமத்த நீள்கின்றன என்பதை பருவ மாற்றங்களின் பிறழ்வு காட்டிக் கொடுத்து விடுகிறது.
பசியாற முலைகளைத் தேடும் பால்யத்தை விட காமுற கசக்கி விட முலைகளைத் தேடும் காலத்தில்தான் களவு போகின்றன வாழ்தலின் மீதான அறமும் சமத்துவத்தின் மீதான ஒழுங்கும் என்பதை பக்கம் 62 இல் உள்ள கவிதை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச அரசியல் தொடங்கி உள்ளூர் கிசுகிசுக்கள் வரை ஓயாது பேசும் விவசாயிக்கு காய்ந்து கொண்டிருக்கும் கோவணத்தின் மீது பார்வை நிலைக்கிறது என்று விவசாயத்தின் இன்றைய வலியையும் உழவனின் கணக்கு இன்னும் நட்டத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் அவலத்தையும் பக்கம் 66 இல் உள்ள கவிதை எச்சரிக்கையாக அழுகையாக எழுதிச் செல்கிறது.
*_____________
யாருடைய வரவுக்காகவோ
யாருடைய விடை பெறுதலுக்காகவோ அல்லது
யாரும் யாருக்கும் துணையற்ற தனிமைக்காகவோ
நகர்ந்து கொண்டே இருக்கின்றன காலங்கள்
_______________*
பக்கம் 67
காலத்தையும் நினைவுகளையும் துரத்திக் கொண்டு அலையும் மனதின் தீராக் கனவுகளையும் வாழ்ந்துவிடத் துடிக்கும் வாழ்வின் மீதான பேரன்பையும் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வாடை விலக்கி சகல பரிணாமத்தையும் பேசி விடுகிறது இந்த நூல்.
—
மிருகத்தின் வாடை – கவிதைத் தொகுப்பு – இலட்சுமண பிரகாசம்
வெளியீடு நடுகல் – முதல் பதிப்பு நவம்பர் 2024 – விலை ரூபாய் 130
தொடர்புக்கு 9500082170
00
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.