கனவுகள் ஏனோ என் நினைவில் தங்குவதே இல்லை. பலரும் தான் கண்ட கனவை படமெடுத்து வைத்திருப்பதைப் போல காட்சிக்குக் காட்சி விவரிப்பதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு மட்டும் ஏனோ தூக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு எவ்வளவு யோசித்தாலும் அக்கனவை மீட்டெடுக்க முடியவில்லை. நல்ல கனவு, கெட்ட கனவு என்பது மட்டும்தான் தெரிகிறது. இது ஒரு விதமான நினைவுக் குறைபாடோ என்று கூட ஆரம்பத்தில் பதறிப்போனேன். விழிப்பு நிலையே இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்பவர்களுக்கு கனவு நினைவில் தங்காது என்றும் அப்படியொரு ஆழ்ந்த உறக்கம்தான் நல்லது என்றும் காய்ச்சலுக்கு ஊசி போடப் போன போது மருத்துவர் சொன்னார். அன்றிலிருந்து கனவில் காண்கிற வாழ்வையும், உறக்கம் கலைந்ததற்குப் பிறகான யதார்த்த வாழ்வையும் நான் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டேன். கனவில் காண்கிற வாழ்வை எனது இணை வாழ்வெனக் கொண்டேன். அங்கு வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல எல்லா உணர்ச்சிப் பீறிடல்களும் நிகழ்ந்தேறுகின்றன. கேடுகள் தாண்டவமாடுகின்றன. நேர்கோட்டில் அல்லாத எவ்வித வரையறைகளும் இல்லாத காட்சிகளே அங்கு விரிகின்றன. இதையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் இல்லாமல் ஒரு நொடி கூட ஓர் உயிரால் வாழ முடியாது என்றே தோன்றியது. சாவு மட்டும்தான் உயிர்களைத் துரத்தும் எண்ணங்களிலிருந்து விடுதலை அளிக்கிறது என நினைத்தேன். காலை எழுந்து உறக்கம் முற்றிலும் கலையாத வேளையிலா நான் சாவு பற்றி நினைக்க வேண்டும். அம்மா இழவுச் செய்தியோடு என் அறைக்குள் வந்தது.

எப்போதும் நானாக எழுந்து வெளிவருகிற வரை அம்மா என்னை எந்தத் தொந்தரவும் செய்யாது. வெளியே வந்ததும் பல் தேய்த்தபடியே சிறுநீர் கழிக்க செல்கையில் பாத்திரத்தில் ஆறிக்கிடக்கும் தேநீரைச் சூடுபடுத்தும். வாய் கொப்பளித்து விட்டு வந்தேனென்றால் டம்ளரை நீட்டும். செல்போன் பார்த்தபடியே தேநீர் அருந்துவேன். இன்றைக்கு அம்மாவே ‘தங்கோ…’ என்றபடி கதவைத் திறந்து வந்தபோது செலவுக்குப் பணம் கேட்க வருகிறது போல என்றுதான் நினைத்தேன்.

“கள்ளிப்பட்டியில உங்க தங்கமணி பெரியப்பன் இருக்குதுல்ல… அவரு செத்துப் போயிட்டாராமாடா… அப்பா கார் ஏற்பாடு பண்ணிட்டாரு…. நீ குளிக்கவெல்லாம் வேணாம், மூஞ்சிய மட்டும் கழுவிட்டு கிளம்பு சித்த…”

”யாரும்மா அது… “

“சின்னத்தாத்தன் தெரியாதாடா… அந்த வெங்கிடுசாமி தாத்தனோட மூத்த மகன்தான் இவரு. உங்கப்பனுக்கு அண்ணன் முறை”

”அப்ப இன்னைக்கு லீவு போடணுமா”

“பேசலை கொல்லலைன்னாலும் சாவுக்குப் போய்த்தானடா ஆவணும்… போனைப் போட்டு லீவைச் சொல்லிட்டு வெடுக்குன்னு கிளம்பு… நான் பொடவை மாத்திட்டு வர்றேன்” என்றபடி அம்மா எழுந்து போனது.

நாமென்ன கல்யாணத்துக்கோ, காது குத்துக்கோவா போகிறோம். எழவு வீட்டுக்கு எப்படிப் போனால் என்ன? அம்மா போய் விழாக்காலத்துக்கென்று ஒதுக்கியிருக்கும் புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு எழவு வீட்டுக்கு வருவது அவல நகைச்சுவையாக இருக்கிறது. அது கிடந்தொழியட்டும் தங்கமணி பெரியப்பாவின் பெயரை மட்டும்தான் கேட்டிருக்கிறேன். இதுவரையிலும் நேரில் பார்த்தது இல்லை. என் அப்பாவின் இளம் பிராயத்திலேயே தாத்தாவுக்கும் சின்ன தாத்தா வெங்கிடுசாமிக்கும் ஏற்பட்ட சொத்துத் தகராறின் விளைவாக அன்றிலிருந்தே இரண்டு குடும்பங்களுக்கிடையிலான உறவு சிதைந்து போய்விட்டதாக அம்மா சொல்லியிருக்கிறது.

அப்பாவுடன் நான் பேச்சை நிறுத்தி ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்மாவிடம் சொன்னார் “தங்கமணி அண்ணன் பாவம் கிடையில் கெடக்குறாப்ல… வூட்டுக்குப் பொறவால கயித்துக்கட்டில்ல படுக்கப் போட்டு வெச்சிருக்காங்களாம்… எந்தக் கவனிப்பும் இல்லாம எப்படா சாவாங்குற மாதிரிதான் நடத்துறாங்களாம்” என்று வெதும்பினார். “ஆமா இத்தனை வருசமா இல்லாம இப்பத்தான் உங்கண்ணன் மேல உனக்குப் பாசம் வந்து அவுக்குது” என்று அம்மா சொன்னது. முப்பத்தைந்தாண்டு காலத் தாம்பத்யத்தின் சலிப்பு அவ்வப்போது அம்மாவின் வார்த்தைகளில் இது மாதிரி வெளிப்பட்டு விடும். “பழிக்காதளே… நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் இந்த நெலமைதான் பார்த்துக்க” என்று அவர் சொன்னதும் காதில் ஹெட் செட்டை மாட்டியபடி எனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டேன். அப்பாவின் அச்சொற்கள் என்னை நோக்கி ஏவப்பட்டதுதான். ஏன் இவருக்கு இந்த வாழ்க்கை மீதான அவநம்பிக்கை. நேர்மறையாக வாழ்க்கையை அணுகுவதில் என்ன தயக்கம் இவருக்கு? இந்த இழவுச் செய்தி அவரை மேலும் உலுக்கியிருக்கும். தானே செத்து விட்டதைப் போலல்லவா தன் எதிர்மறை எண்ணத்தை ஓட விட்டிருப்பார் என்பதை நினைக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதே நினைப்பில் பெரியப்பாவின் சடலத்தைப் பார்த்துச் சிரித்து விடப்போகிறோம் என்று பின்னந்தலையில் என்னை நானே அடித்துக் கொண்டேன்.

அம்மா சொன்னபடியே முகம் மட்டும் கழுவிக்கொண்டு ஹேங்கரில் மாட்டியிருந்த பேண்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். டி சர்ட்டை மாற்றவில்லை. அப்பா வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வாசலைப் பார்த்தபடியே காருக்காகக் காத்துக் கொண்டிருந்தார். வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்கச் செல்பவரைப் போல இந்த பளீரிடும் வெள்ளை தேவைதானா? அம்மா அணிந்து வந்த கருஞ்சிவப்பு காட்டன் புடவையில் சின்ன சுருக்கங்கள் கூட இல்லை. கூட்டாகச் சேர்ந்து ஒப்பாரி வைக்கையில் வியர்வையும் கண்ணீரும் பட்டு கசங்கத்தான் போகிறது. அதற்கெதற்கு இந்த அலங்காரமெல்லாம்? போதாக்குறைக்கு அம்மாவின் முகத்தில் விழாக் கலை ததும்பி வழிகிறது. இழவுக்குதான் போகிறோமா இல்லை எனக்குப் பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்களா என்கிற கேள்வியும் எழுந்தது. என்ன இருந்தாலும் எனக்கு இந்த நப்பாசை கூடாதுதான்.

என் பள்ளித்தோழன் ரவிதான் மாருதி காரில் வந்தான். நான் அவனைப் பார்த்த்தும் “மாப்ள” என்றபடி முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். அப்பா பின் இருக்கையில் ஏறிக்கொள்ள, வீட்டை நன்றாகப் பூட்டி விட்டோமா என மீண்டுமொரு முறை பூட்டை இழுத்துப் பார்த்து சோதித்து விட்டு அம்மா அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டதும் கார் கிளம்பியது.

“என்ன விசேஷமா” என்று ஆரம்பித்தான் ரவி.

“காரியமொன்னு ஆயிப்போச்சு… பெரியப்பன் உடம்பு சரியில்லாம இருந்து செத்துப் போயிட்டாப்ல”

“நாங்கூட பொண்ணுகீது பார்க்கப்போறீங்களோன்னு நினைச்சிட்டு இவனென்ன டி சர்ட்ல வர்றானேன்னு பார்க்குறேன்.”

“பொண்ணு பார்க்குறதா… நடக்குற கதையை பேசுடா… அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்… இந்த ஜென்மத்துல நமக்கு அது இல்லைன்னு ஆயிப்போச்சு” என்றதும் அவன் சைகையில் என்னை அமர்த்தினான். நாங்களே திருமணத்தின் வாடையைக்கூட காட்டாமல் வைத்திருக்கிறோம்… நீ அவனுக்குத் திருமண ஆசையைத் தூண்டி விடுகிறாயா என அப்பா வாடகையில் கை வைத்து விட்டால் என்ன செய்வதென பயக்கிறானோ என்று நினைத்துச் சிரித்தேன்.

“காரியத்துக்குப் போறப்ப யாராச்சும் சிரிச்சிட்டே போவாங்களாடா” என்றான் ரவி.

“இவன் சிரிப்பான் கண்ணு… மண்ணப்போட்டு மூடுறப்ப கூட சிரிப்பான்” என்று அம்மா பின் இருக்கையில் இருந்து சொன்னது.

வண்டி நால்ரோட்டை நெருங்கியதும் “தம்பாக்கவுண்டர் கடையில டீ குடிச்சிட்டுப் போலாமா” என்றேன்.

“எழவூட்டுலயே குடுப்பாங்க அது வரைக்கும் உன்ற வாய் அடங்காதா” என்றது அம்மா.

ஏனோ தெரியவில்லை ஒரு துக்க காரியத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே என் உள்ளுணர்வுக்கு எட்டவில்லை. ஆழ்ந்த உறக்கம் கொடுத்திருந்த புத்துணர்ச்சி எதன் மீதும் அச்சம் கொள்ளாத, எதற்கும் கலங்காத உறுதியைக் கொடுத்திருந்தது. வாழ்வில் பார்த்தேயிராத ஒரு மனிதனின் மரணத்தில் நான் சலனமடைய என்னவிருக்கிறது. வழக்கமான சீண்டல் என்னுள்ளிருந்து வெளிப்பட்டபடியேதான் இருந்தது.

முழுதாக அரை மணி நேரத்தில் கணக்கம்பாளையம் சாலையில் இருக்கும் பெரியப்பா வீட்டை வந்தடைந்தோம். சாலையில் நுழைந்ததும் வலப்புறத்தின் இரண்டாவது தெருவில் முதல் வீடு அவருடையதுதான். பெரிய காரியமொன்றாகி விட்ட எந்த அறிகுறியும் அத்தெருவில் தென்படவில்லை. மதிய நேரத்துத் தெருக்களின் தனிமையைப் போல வீடே அரவமற்றுக் கிடந்தது. வாசலில் பாடை கட்டுவோர், பந்தக்கால் நடுவோர் என யாருமில்லை. வீடு மாறி வந்து விட்டோமா என்கிற குழப்பம் எனக்குள். பெரியப்பா எப்போது செத்திருப்பார்? எல்லோருக்கும் தகவல் தெரிவித்து விட்டதை உறுதியளித்த பிறகு உயிர் பிரிந்திருக்குமோ? அப்படிப் பார்த்தால் கூட உள்ளூர் பந்தல்காரன் எங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்தானே? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்பாவும் கூட மாலையோ, கோட்டித்துணியோ வாங்கவில்லை. ரவியை இரவு கூப்பிடுகிறேன் எனச் சொல்லி தாட்டி விட்டார்.

வாயிலின் இருபுறமும் முற்றம் வைத்துக் கட்டப்பட்ட பழமையான வீடு. அப்பா முதலில் உள்ளே நுழைய, அம்மாவுடன் ஒன்றாகப் போனேன். எனக்கு இந்த சம்பிரதாயங்கள் பற்றியெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. வீட்டின் ஹாலில் சேர்களில் சிலர் அமர்ந்திருந்தனர். அப்பா உள்ளே சென்றதும் “சித்தப்பா” என்று ஒருவன் எழுந்தான். பெரியப்பாவின் மூத்த மகனாக இருப்பான். அப்படியென்றால் எனக்கு அண்ணன். அப்பா சம்பிரதாயமாக அவனது இரு கைகளையும் பற்றிக் கொண்டு சில நொடிகள் கழித்து விடுவித்தார். “அண்ணன் எங்க?” என்றபடி வீட்டை நோட்டமிட்டார். அவன் வீட்டின் பின்புறத்தைக் கை காட்டினான். “ஏண்டா… நடு வூட்டுல வெக்காம என்ன கொள்ளையிலயே போட்டு வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டதும். “நாசுவனுக்கு சொல்லியிருக்குதுங்க… வந்ததும் குளிப்பாட்டிக் கொண்டு வந்து வைக்கலாம்னுதாங்க” என்றான். ஹாலுக்கு வடப்புறமாக சமையலறை, இடப்புறமாக படுக்கையறைகள். நேரே சென்றால் கொள்ளைப்புறம். மரத்தூண்களால் தாங்கப்பட்ட ஓட்டுக்கூரை. சிமெண்டால் மொழுகப்பட்ட தரை. அப்பா முதலில் கொள்ளைப்புறத்துக்குப் போக அம்மாவும் பின் தொடர்ந்து போனது. நான் சம்பிரதாயத்தின்படி ஆறுதல் கூறுவதாய் அவனது கையைப் பற்றி “எப்ப ஆச்சுங்ணா” என்றேன். “விடியக்காலைல பார்க்குறப்ப ஒரு அனத்தலும் இல்லை. நடுச்சாமத்துலயே ஆயிடுச்சாட்டிருக்குது” என்று அவன் சொன்ன போது கொள்ளைப்புறத்தில் இருந்து அழுகுரல் கேட்டது. ஆம், அது அப்பாவின் அழுகுரலேதான். அவர் அழுது நான் பார்த்ததே இல்லை. தாத்தாவின் சாவுக்குக்கூட அழாமல் ’எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம்’ என்பதைப்போல வெகு இயல்பாக இருந்தார். திடீரென என்ன வந்தது இவருக்கு? சேரில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தபடியே கொள்ளைப்புறத்துக்குச் சென்றேன். அழுகிறவரை அம்மா தோள் தொட்டு ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது. அம்மாவின் கண்களிலும் நீர் சுரந்து நின்றது.

அந்தக் கயிற்றுக் கட்டிலில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டு பெரியப்பா கிடந்த கோலம் என் உள்ளுணர்வை பலமாகச் சீண்டியது. மரணம் விளைவிக்கிற சலனத்தை முதன்முறையாக கண்டுணர்ந்தேன். கட்டிலுக்குக் கீழே அவரது சிறுநீரை உள்ளீர்த்துக் கொள்ளும்படியாக சாக்குப் போடப்பட்டிருந்தது. நெடுநாட்கள் அது சிறுநீரை தேக்கி வைத்திருப்பதைப் போல எழுந்த முடை நாற்றம் கிரகித்துக்கொள்ளவே முடியாதபடி இருந்தது. உள்ளிருந்து எழுந்த குமட்டலைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றேன். மூச்சிழுக்கும் கணம்தோறும் சிறுநீர்த்துளிகள் உள்ளே ஏறுவதைப் போலான உணர்வு மேலிட அவசரமாக ஓடிச்சென்று கழிவறையில் வாந்தி எடுத்தேன். அம்மா வந்து என் தலையைப் பிடித்துக்கொண்டு “ஒன்னுமில்ல சாமி… ஒன்னுமில்லை” என்றது. நெஞ்சைத் தடவியவாறே நிமிர்ந்து நின்றேன். வாளியில் தண்ணீர் எடுத்து அம்மா ஊற்றிக் கழுவியபடி “ஹால்ல போய் ஒக்காரு” என்று சொல்லவே ஹாலுக்கு வந்தேன். அப்பாவும் பின்னாலேயே வந்து எனது பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். அந்தக் கயிற்றுக் கட்டிலில் பெரியப்பாவை அவர் பார்க்கவில்லை. தன்னையேதான் பார்த்திருப்பார். தனது சாவும் இப்படியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் அவருக்குள் மேலோங்குகையில்தான் மரண ஓலத்தைப் போல அழுதிருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

பெரியப்பாவுக்காவது அனத்திக் கொண்டே கிடையில் கிடந்து சாக சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. தனக்கு அதுவும் கிடையாது என்கிற எண்ணம் அவரது துயரை மேலும் கூட்டியிருக்கும். வாழ்வின் மீதான அவநம்பிக்கையை மேலும் பல பாகைகள் உயர்ந்திருக்கும். அப்பா பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு யாராலும் கட்டுப்படுத்த முடியாத அவரது அடாவடித்தனங்களால் உண்டான கடனில் மூழ்கிப்போய் இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. அத்துயரைக் கண் கொண்டு காணாமல் தாத்தா முன்பே இறந்து போனதுதான் நல்ல சாவு. என் பால்ய காலத்தின் நினைவுகள் எல்லாப்புறமும் அப்பிக்கிடக்கும் அந்த வீட்டை விற்கையில் மீளாத்துயர் ஒன்றில் அகப்பட்ட உணர்வுக்கும், அப்பா மீதான பெருங்கோபத்துக்கும் ஆட்பட்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக இருந்த அம்மா மீதும் கோபம் வந்தது. சொந்த ஊரிலேயே வாடகை வீட்டில் குடியேறுவது குறித்தான கூச்சமே இல்லாதவராக மழுங்கடிக்கப்பட்ட மனிதனாக அப்பா மாறிவிட்டதைப் பார்க்கையில் கோவைக்கோ, சென்னைக்கோ போய் பணியில் சேர்ந்து கொண்டு வீட்டுக்குப் பணம் மட்டும் அனுப்பி வைக்கலாம் என்றுதான் நினைத்தேன். நித்யாவுக்காக மட்டுமே அதனை செயல்படுத்தவில்லை.

நித்யா என் அம்மா வழிச்சொந்தம். எனக்கு முறையாகிறவள். அவள் எனக்குதான் என்பது சிறு வயதிலேயே இரு வீட்டாரும் செய்து கொண்ட வாய்வழி ஒப்பந்தம். நினைவு தெரிந்த நாள் கொண்டு வாய்ப்பேச்சின் வழியாகவே எங்களது இணைவை வளர்த்தெடுத்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது உடைமையென பாவிக்கத் தொடங்கினோம். திருமண வாழ்வு பற்றியான கனவுகளைத் திரும்பத் திரும்பப் பேசி சலிப்புறாத காதலை நாங்கள் வளர்த்தெடுத்தோம்.

என் அப்பா கிராம நிர்வாக அலுவலர் என்கிற மதிப்புமிக்க பணியில் இருந்து கொண்டு குடியின் கொண்டாட்டத்தில் களிப்புற்று தன்னை முழுவதும் மதுவுக்கு ஒப்படைத்தபோதே மாமாவுக்குள் பெரும் அதிருப்தி உண்டாகியது. வீடு கடனில் மூழ்கிப்போன போது அது மேலும் வலுப்பெற்று அந்த வாய்வழி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார். அதே நேரம் நித்யாவுக்கு நல்ல வரன்கள் எல்லாம் வர ஆரம்பித்தன. வரன் கொண்டு வந்தவர்களிடம் “நான் என் மாமனுக்குத்தான்னு எப்பவோ முடிவாகிடுச்சே… அப்படியிருந்தும் ஏன் வர்றீங்க” என நேரடியாகவே அவள் கேட்டு விட்டாள். எங்களது உறவின் மீது நித்யா கொண்டிருந்த உறுதிப்பாட்டை மாமாவால் அசைக்க முடியவில்லை. திருமணம் செய்து வைத்து விடும் முடிவுக்கு அவர் வந்து ஒப்புதல் தெரிவித்தார். திருமணப்பேச்சின் போது, இத்திருமணமே மகளின் விருப்பத்துக்காக மட்டும்தான் என்கிற தொணியில் மாமாவின் பேச்சு போனது. அப்பாவை அது சீண்டவே “ஏண்டா அந்த வீடு போய்ட்டா நான் அவ்வளவுதான்னு நினைக்குறீங்களாடா எல்லாரும்… போனாப் போகுதுன்னு கொடுக்க இதென்ன பிச்சையாடா” என்று அப்பா கேட்க “அதான் எப்படிப் போச்சுங்குறேன் நான்… இவன் வாங்குற 15 ஆயிரம் சம்பளத்தை வெச்சுக்கிட்டு வுட்டதைப் புடிச்சிடுவீங்களோ” என மாமா பதில் பேச “ஊர்ல இல்லாத மாப்பிள்ளைக்குக் கொண்டு போய்க் கட்டி வைடா உன்ற பொண்ண… எம்பையனுக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என அப்பா சீறினார். இதற்காகவே தவித்திருந்தவர் போல “அப்படியே பண்ணிக்கிறனுங்க” என்று மாமா வீட்டை விட்டுக் கிளம்பிப் போனார். அத்துடன் எல்லாம் முடிந்து போனது.

நான் ஏன் அப்போது ஏதும் பேசாமல் சடமாக நின்றேன் என்பதை நினைக்கையில் என் மீதே கோபம் கனன்றெழுகிறது. நித்யா போனில் அழுதபடியே அதைத்தான் கேட்டாள். “நீயாச்சும் ஏதாவது பேசி சமாதானப்படுத்தியிருக்கலாம்ல” என்றபோது மீண்டும் சடமானேன். மாமாவிடம் போய்ப்பேசி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். அவர் எப்போதோ என்னைத் தூர வீசிவிட்டார். போக, 15 ஆயிரத்தை வைத்துக் கொண்டு என் பெண்ணைக் காப்பாற்ற முடியுமா? உன் தகப்பனுக்குதான் உனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியுமே… அதன்படியே செய்யட்டும் என அவர் எதை வேண்டுமானாலும் சொல்லி என்னை மடக்க முடியும். நித்யா அவள் அப்பனை மீறி வருவாளென்றால் எங்காவது ஓடிப்போயாவது திருமணம் செய்து கொள்ளலாம். அதையும் அவளிடம் கேட்டுப்பார்த்தேன். “எங்கப்பா செத்துருவேன்னு மிரட்டுறாரு” என்று சொன்னபோது எனக்கு வெறுப்பும் சிரிப்பும் கலந்து வந்தது. எல்லா அப்பன்களும் வாடிக்கையாக நிகழ்த்தும் நாடகத்துக்கு ஏன் இந்தப் பெண்கள் பயப்படுகிறார்கள் எனத்தெரியவில்லை. என் அப்பா அப்படி மிரட்டினார் என்றால் உடனே பெட்டியைக் கட்டியிருப்பேன். குடித்துக் குடித்து பூர்விகச் சொத்தையும், மரியாதையையும் இழந்து விட்டு வெற்றுப்பெருமை பேசித்திரியும் அந்தாள் செத்துத் தொலைந்தால்தான் என்ன என நினைத்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் நித்யாவை பெங்களூரில் வேலை செய்யும் பையனுக்குக் கட்டிக்கொடுத்து விட்டு மாமன் மிடுக்கோடு திரிந்தார். அவள் திருமணத்தன்று ஆற்றாமை தாளாது நான்கு பியர்களைக் குடித்து விட்டு தடுமாறியபடிதான் வீடு வந்து சேர்ந்தேன். குடித்து விட்டு வந்த என்னை அப்பா பெல்டால் அடித்தார். அம்மா அழுதபடியே ஓடி வந்து தடுத்தது. “ஏஞ்சாமி உனக்கும் இந்த வேலை” என்றது. “உடும்மா அவனை… டேய் அட்றா” என்றேன். என்னிடமிருந்து இப்படியான வார்த்தைகளை எதிர்ப்பார்த்திராத அவர் சற்று அதிர்ந்து பின்னர் பெல்டை தூர வீசினார். “எக்கேடோ கெட்டு ஒழியட்டும் எனக்கென்ன போச்சு” என்றார். “அதத்தான் நானும் கேட்குறேன் உனக்கென்ன போச்சு… எனக்குத்தான் போச்சு. என் தாத்தன் கட்டின வூட்டை குடிச்சு அழிச்சிட்ட. வெத்துப் பெருமை பேசி மாமன் பொண்ணக்கூடக் கட்டிக்க வுடாம பண்ணிட்ட…. என்னமோ சொன்னியே ஊர்ல இல்லாத மாப்பிள்ளையா பார்த்து உம் பொண்ணைக் கொடுன்னு. அவன் கொடுத்துட்டாண்டா…. பெங்களூர்ல லட்ச ரூபாய் சம்பாதிக்கிறவனுக்குக் கொடுத்துட்டான். அவன்தாண்டா அப்பன்… நீயெல்லாம் நாக்கப் புடுங்கிட்டு சாவுடா இன்னைக்கே…” என்றதும் “ஏண்டா இப்படிப் பேசுற என்று அம்மா குறுக்கிட்டது. “நீ சித்த அமைதியா இரு…” என்று அமர்த்தி விட்டு அப்பாவைப் பார்த்து “நான் ஒன்னு சொல்லட்டுமா… நீயெல்லாம் செத்தாத் தேவலைன்னு இருக்கு எனக்கு” என்று சொல்லி விட்டு போய்த் தூங்கி விட்டேன்.

அடுத்த நாள் தலைவலியோடு எழுகையில்தான் முந்தைய இரவில் ஏதோ பெரிய அழிச்சாட்டியத்தை நிகழ்த்தியிருக்கிறோம் என்கிற நினைவே வந்தது. வெளியே வந்து பானைத்தண்ணீரை சொம்பில் முகர்ந்து குடித்தபடியே வீட்டை நோட்டமிட்டேன். அப்பா இல்லை… அம்மா முகங்கொடுக்காமல் காய் நறுக்கிக் கொண்டிருந்தது. ”ஏம்மா டீ சூடு பண்ணலியா” என்றேன். அண்ணாந்து பார்த்தபடி “நேத்து என்ன பண்ணீன்னாச்சும் ஞாபகம் இருக்கா” என்று கேட்டு விட்டு காய்கறி அரிந்தபடியே நான் பேசியதை மனனம் செய்தது போல் ஒப்புவித்தது. “ஒடைஞ்சு போய்ட்டாரு தெரியுமா… என்ன இருந்தாலும் உங்கப்பண்டா அவரு” என்று சொல்லி விட்டு புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டது. “அப்பயும் உனக்கு உன்ற புருசனைப் பத்திதான் கவலெ… என் நெலமையைப் பத்தியெல்லாம் கொஞ்சங்கூட அக்கறையில்லைல உனக்கு” என்றபடி குளிக்கப்போனேன். அந்த இரவிலிருந்து எனக்கும் அப்பாவுக்கும் இடையே தன்னிச்சையாக விலக்கம் ஏற்பட்டதை இருவரும் உணர்ந்தே இருந்தோம். அதற்கடுத்த வாரத்தில் அம்மாதான் சொன்னது “டேய் நீ பேசுனதும் நல்லதுக்குதாம் போல இருக்குடா… இப்பவெல்லாம் முன்ன மாதிரி நிறைய குடிக்கிறதில்லை. காசைக் கொடுத்து வைக்கிறாரு” என்று. பின் வந்த நாட்களில் நமக்கென்று யாரும் இல்லை என்கிற உள்ளுணர்வின் வெளிப்பாடுகளைக் காண்கையில்தான் வாழ்வின் மீதான பேரச்சமும், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையும் கொண்ட மனிதராக அவர் தெரிந்தார். பெரியப்பாவின் சடலத்தின் முன்பு நின்று அவர் அழுதது, தூக்குமேடையில் நின்று கொண்டு வாழ்தலுக்கு விடை கொடுக்க மறுக்கிற கைதியின் அழுகையைப் போன்றிருந்தது. இதில் விசித்திரம் என்னவென்றால் அது இவராக எழுதிக் கொண்ட தீர்ப்பு.

பெரியப்பாவுக்கு மூன்று மகன்கள் என்றும் அவர்களில் இரண்டு பேருக்குத் திருமணமாகியிருக்கிறது என்றும் எனக்கொரு யூகம். மூன்று பேரில் யாரிடமும் சுரத்தில்லை. அப்பா இறந்து விட்டார், ஆக வேண்டிய காரியங்களை இறங்கி முடிக்க வேண்டும் என்றில்லாமல் அசட்டையாகவே ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்பா மூத்த மகனைக் கூப்பிட்டு “இதுல அஞ்சு ரூபா இருக்கு காரிய செலவுக்கு வெச்சிக்குங்க” என்று ஐயாயிரம் ரூபாயை பாக்கெட்டில் திணித்தார். அவன் சம்பிரதாயத்துக்கு மறுத்தாலும் வாங்கிக் கொண்டு வெளியே போனான். கொஞ்ச நேரத்திலெல்லாம் பெரியப்பாவைக் குளிப்பாட்டி சந்தனம் தடவி கோட்டித்துணி போர்த்தி நடு வீட்டில் கிடத்தினர். அதன் பிறகுதான் அத்தெருவாசிகள் ஒவ்வொருவராக வந்து பார்த்துப்போனார்கள். தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த பெரியம்மாவைக் கட்டிப்பிடித்து தங்கள் பங்குக்கு நான்கு சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டுக் கலைந்தார்கள். பெரிய அண்ணனின் மனைவி என நினைக்கிறேன் அண்ணி எல்லோருக்கும் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்பாவிடம் வந்து ஒரு ஆள் “மச்சான்…” என்று கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டியபடியே வர்றீங்களா” என்றதும் ”இருக்கட்டும்” என்றார். அட இங்க வெளியிலதானுங்க வாங்க போலாம் என்று இழுத்துச் செல்லாத குறையாகக் கூட்டிப்போனார். இழவு வீட்டில் இதுவும் ஒரு சம்பிரதாயமாகி விட்டது. வாய்விட்டு அழுதவர் குடித்து ஆறுதலடைந்தால் பரவாயில்லை வேறொரு இழவைக் கூட்டி விடப்போகிறார் என்பதுதான் என்னுடைய பயமாக இருந்தது. அம்மா டீ போடும் பெண்களுக்கு ஒத்தாசையாகப் போய் விட்டது. வெளியே போய் ஒரு தம் போட்டு வரலாம் என்று நினைத்த கணத்தில்தான் ஒரு பெரியவர் அப்பா அமர்ந்திருந்த பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்தார். என் தோள் தொட்டு “நீ யார் மவன்?” என்றார்.

“தனசேகர் மகனுங்”

“சத்தியமங்கலத்துல இருக்கானே அவன்… சேரி சேரி… உங்கப்பனுக்கு நான் இன்னொரு சித்தப்பன். உங்க தாத்தனோட தம்பி. தங்கமணி அப்பன் வெங்கிடுசாமிக்கும் இளையவன்” என்றார்.

“சரிங்க தாத்தா”

“உங்கொப்பனெங்க?”

“பக்கத்துல வேலையாப் போயிருக்காரு”

“சாராயம் குடிக்கப் போயிருப்பான்… சரியா”

எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

“முழிக்காதடா… நம்ம வம்சத்தையே புடிச்ச கெரகம்டா அது…”

“அதென்னவோ நெசந்தானுங்”

“நீயும் குடிப்பியாட்டத் தெரியுதே”

“இல்லைங் தாத்தா… அதெல்லாம் தொடறது இல்லைங் “

“வீட்டுக்கு ஒரு ஆள் போதும்னு வுட்டுட்டியா” என்றபடி சிரித்தார்.

“டீ குடிச்சியா” என்றார்,

“குடிச்சுட்டனுங்… நீங்க?”

“யாரும் கொண்டு வராப்ல தெரில” என்றதும் “இருங்” என்று எழுந்தேன். “சர்க்கரை இல்லாம” என்றார். சமையலறைக்குள் போய் சர்க்கரை இல்லாமல்  ஒரு டம்ளர் டீ கொடுக்கச் சொன்னேன். வந்தவங்களை கவனிங்க என்றதற்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண மாட்டாப்லயா என்றே உள்ளிருந்தவர்கள் சொன்னார்கள். நான் டீ டம்ளரை வாங்கிக் கொண்டு வந்து தாத்தாவிடம் நீட்டினேன்.

“பரவால்லையடா நீ போய் டீ எடுத்துட்டு வந்து குடிங்க தாத்தான்னு குடுக்குறே… அந்தக் கெழவனுக்கு என்ன நோக்காடுன்னு இந்தூட்டுப் பொம்பளைங்க கேட்டிருக்குமே” என்றார். ஒளிந்து நின்று கேட்டவரைப்போல அப்படியே சொல்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. இல்லை இந்தக் குடும்பத்தின் லட்சணம் எல்லோருக்குமே தெரிந்திருக்கிறதா? இருக்கலாம். குடித்து முடித்து டம்ளரைக் கீழே வைத்தவர் “பீடி ஒன்னு இழுக்கப் போறேன் கூட வர்றியா” என்றார். வாங்க போலாம் என அவரோடு வெளியே வந்தேன். கணக்கம்பாளையம் சாலையில் எதிர்ப்புறத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அங்கே இருவரும் சென்றோம். தாத்தா 10ம் நம்பர் பீடிக்கட்டை வெளியே எடுத்தார். “நீ குடிப்பியா” என்றார்.

“இல்லைங் தாத்தா”

“குடிப்பீன்னு தெரியுது தாத்தங்கிட்டவெல்லாம் சங்கோஜப்படாத சரியா” என்றவர் என்னிடம் பீடிக்கட்டை நீட்டினார். ஒரு பீடியை உருவிக்கொண்டு தீப்பெட்டி வாங்கி நானே கொழுத்தினேன். தாத்தா பீடியை முதலில் பற்ற வைத்த பிறகு என் பீடியைப் பற்றினேன். இரண்டு இழுப்புக்குப் பிறகு தாத்தா ஆரம்பித்தார்.

“ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ… நாம மத்தவங்களுக்கு என்ன பண்றமோ அதான் நமக்கும் நடக்கும். உங்க பெரியப்பன் தங்கமணி ஆஸ்துமா, கொடல் புண்ணுன்னு ஏகப்பட்ட பிரச்னையில் கெடையில கெடந்து செத்திருக்கான். பாவம்தான். ஆனா அவங்கப்பன் அதான் எங்கண்ணன் வெங்கிடுசாமியை மகனுக மூனு பேர் இருந்தும் பிச்சையெடுக்கத்தான வுட்டானுக. அந்தப் பாவம்லாம் வந்து அடிக்கும்ல” என்று சொல்லி விட்டு அடுத்த இழுப்புக்குப் போனார்.

”பிச்சையே எடுத்தாரா” அதிர்ச்சி மேலோங்கக் கேட்டேன்.

“பவானி, அந்தியூர், கோபி பஸ் ஸ்டாண்டுப் பக்கமெல்லாம் பிச்சையெடுத்து கொஞ்சம் வாழ்ந்து செத்துப்போனாரு… மூனு பசங்க வூட்ட மட்டும் பங்குப் போட்டுகிட்டானுக. எல்லாரும் தாந்தின்னிக. அப்பன் பிச்சையெடுக்கிறான்னு தெரிஞ்சும் கண்டுக்காமயே வுட்டானுக. கோபி பஸ் ஸ்டாண்ட்ல உங்கண்ணன இப்படிப்பார்த்தேன்னு ஒருத்தரு சொன்னப்போ என்ன பண்றதுன்னே தெரியல… எனக்கே சுகர் இருக்குது… எனக்குப் பொறந்தது ரெண்டு பொம்பளப் புள்ளைக. அதுங்கதான் ஏதோ ஒன்னுன்னா பார்த்துக்குது. இதுல எங்கண்ணன வேற கூட்டி வந்து உட்கார வெக்க முடியுமா? கண்டுங்காணாம போகணும்ங்கிற மாதிரி ஆகிப்போச்சு. கடைசியில எங்கண்ணன் அநாதைப் பொணமாத்தான் செத்தாப்டி… இவனுக போய் உடம்பை வாங்கவே இல்லை. நகராட்சியிலயே கொண்டு போய் எரிச்சாங்க பாவத்தை” என்றதும் எனக்குள் ஒரு பொறி தட்டியது. தாத்தாவின் முகத்தை உற்றுப்பார்த்த போதுதான் அது என்னவென்று துலங்கியது.

இரண்டு ஆண்டுகள் இருக்கலாம். சத்தியமங்கலம் தாசில்தாரின் மகள் திருமணத்துக்காக அப்பாவும் நானும் பவானி வந்து விட்டு சத்தி திரும்புவதற்காக எஸ்.பி.எஸ் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தோம். சூரியன் தலைக்கு மேல் நின்று தகித்துக் கொண்டிருக்க பேருந்தை சீக்கிரம் எடுத்தால் தேவலாம் போலிருந்தது. வெள்ளரி வியாபாரிகள், குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள் விற்கிறவர்கள், ஈகை பெற்று தலையைத் தொட்டு ஆசிர்வதித்துச் செல்லும் திருநங்கைகள் என எல்லோரும் வரிசையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். முன்படிக்கட்டு வழியாக பெரியவர் ஒருவர் ஏறி பயணிகளிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். தாவாங்கட்டையில் நரைமயிர்கள் மண்டிக் கிடந்தன. முழுதும் கரை படிந்த வெள்ளை வேட்டி. மஞ்சள் நிறத்தில் கோடுபோட்ட சட்டை என பார்க்கிற எவருக்கும் பரிதாபத்தைத் தூண்டுகிற அவலத்தோற்றத்தில் இருந்தார். அப்படியொரு தோற்றம் இருந்தால்தானே நம் கருணையின் நிழல் அவர்கள் மீது கொஞ்சமேனும் படியும். ஜன்னல் கண்ணாடி வழியே தலையை வெளியே நீட்டி ஓட்டுநர், நடத்துநர் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தபோது அப்பா பின்பக்க வாசல் வழியாக வேகமாக இறங்கிப் போவதைப் பார்த்தேன். பேருந்துக்குப் பின்னால் சென்று மறைந்து போனார். சிறுநீர் கழிக்கச் செல்வதானாலும் சொல்லிவிட்டுத்தானே போயிருப்பார். பேருந்து புறப்படுவதற்குள்ளாக ஒரு குவாட்டர் அடித்து விடலாம் என்று நினைத்துப் போனாரா தெரியவில்லை. அந்த எழவை வீட்டிற்குப் போன பிறகு குடித்தால்தான் என்ன. எனக்கு ஆத்திரம் பொங்கியது. அந்தப்பெரியவர் என்னை நெருங்கி இறைஞ்சியபடி கைகளை நீட்ட மேல் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்தேன். “நல்லாரு சாமி” என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்த பிறகு மனம் இருப்பு கொள்ளவில்லை. சற்று நேரத்தில் பேருந்து எடுத்து விடுவார்கள். இந்தாள் எங்கேதான் போய்த் தொலைந்தான். போன் போட்டால் கூட “வர்றேன்” என்பதைத் தாண்டி ஒன்றும் பேச மாட்டார். பேருந்து கிளம்புவதற்குள் வந்தால் வரட்டும் இல்லையென்றால் ஒரு மணி நேரம் காத்திருந்து அடுத்து வரும் ஜீவா பேருந்தில் வரட்டும் என்று உட்கார்ந்திருந்தேன். நடத்துநர் ஏறி பயணச்சீட்டு விநியோகத்தைத் தொடங்கிய போது பொறுக்க மாட்டாமல் கைப்பையைக் கொண்டு இடம் போட்டு விட்டு கீழே இறங்கினேன். பேருந்துக்குப் பின்புறமிருந்த கடை வரிசை முழுவதிலும் பார்வையை சுழல விட்டேன். தேநீர் விடுதிகளும் தின்பண்டக் கடைகளுமாக நிரம்பியிருந்த அவ்வரிசையில் அவரை எங்கும் காணவில்லை. அவ்வரிசையிலேயே மேற்குப்புறத்தில் நேரக்கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே மங்கிய ஒளியில் அவர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. மேற்கூரை எழுப்பப்பட்டிருப்பதால் பகல் வேளையிலும் அங்கே பாதி இருள் நிறைந்திருக்கும். அவரை நோக்கிப் போனபோது அவரது பார்வை பேருந்து நிலையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரவிச் செல்வதைக் காண முடிந்தது. பலி பீடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து வந்த பலியாளைப் போல எதற்காக அவர் இங்கே ஒளிந்து கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை.

எங்கள் பார்வை நேர்கோட்டைத் தொட்டபோது அவராகவே நிதானித்து வெகு இயல்பாக முன்னே வந்தார். “எங்க போனீங்க” என்றேன். “டீ குடிக்கலாம்னு வந்தேன்” என்று அவர் சொன்னபோது பேருந்து நகரத்தொடங்கியது. “சரி வாங்க” என நான் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். பின்னால் அவரும் வந்து தொற்றிக் கொண்டார். ஊர் போகும் வரை அவரிடம் ஏதும் பேசவில்லை. மது வீச்சம் ஏதும் அவரிடமிருந்து வெளிப்படாதது ஆச்சரியமாகத்தான் இருந்தது. அம்மாவிடம் போய்ச் சொன்னதற்கு “கடன்காரன் எவனாச்சும் வந்திருப்பாண்டா…” என்று சிரித்துக் கொண்டே சொன்னது. “இதுல என்ன பெருமை” எனக் காட்டமாகச் சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இப்போதுதான் எல்லாம் புலனாகிறது. பீடியை நசுக்கி விட்டு நானும் தாத்தாவும் உள்ளே போனபோது அப்பா உட்கார்ந்திருந்தார். தாத்தாவைப் பார்த்ததும் எழுந்து நின்றார். “தனசேகரு… போட்டியாட்ட இருக்குது” என்று சிரித்தபடியே கேட்டவரை “சித்த உட்காருங்க நீங்க” என்று பக்கத்து சேரில் அமர்த்தினார். அப்பாவைப் பார்த்தபோது பவானி பேருந்து நிலையத்தில் பாதி இருளில் பரிதவிப்போடு நின்றிருந்த காட்சிதான் நினைவில் மீள எழுந்தது. பியர் அருந்த வேண்டும் போலிருந்ததால் சொல்லிக்கொள்ளாமல் வெளிவந்து அத்தாணி போகும் வழியில் இருக்கும் டாஸ்மாக் நோக்கி நடந்தேன்.

எதன் பொருட்டு அப்பா ஓடினார்? தன் மீது ஒரு பாரம் ஏற்றப்பட்டு விடும் என்கிற பதற்றமா? தாளாத குற்றவுணர்வில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் ஓட்டமா? குற்றவுணர்ச்சியிலிருந்து மிக எளிதில் தப்ப முடியாது என்பதால்தான் இங்கே பலரும் குற்றவுணர்ச்சிக்கே ஆட்படுவதில்லை. அதிலிருந்து விடுபட்டு ஓட நினைத்தாலும் அது ஒரு வட்டப்பாதையைப் போல மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்வோம். பொறுப்புகளிலிருந்து விடுபட்டுப் பறக்கவே பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள். வாழ்வு அதனை அனுமதிப்பதில்லை. அதற்குப் பணிகிற மனிதர்கள் சமூகத்தின் பார்வையில் நல்லபடியாக வாழ்ந்து மடிகிறார்கள். பணியாத மனிதர்களை வாழ்வு வதைக்கிறது. கிங்பிஷர் பியரை வாங்கிக் கவிழ்த்தபடி பேருந்தில் பார்த்த வெங்கிடுசாமி தாத்தாவின் முகத்தை நினைவில் நிறுத்தினேன். பத்து ரூபாய்த் தாளை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு வாழ்த்தி விட்டுப் போனவர்தான் வெங்கிடுசாமி தாத்தாவா… நினைத்துப் பார்க்கையிலேயே பதறுகிறது. ஒருவேளை பேருந்தில் அப்பா அவரை எதிர்கொண்டிருந்தால் நீங்களெல்லாம் இருந்தும் நான் எப்படியிருக்கிறேன் பார்த்தாயா என்று தாத்தா கேட்டிருப்பாரேயானால் என்ன சொல்லியிருப்பார். பதில் சொல்லத் திராணியற்றவராகத்தானே போய் அந்த இருளில் ஒளிந்து கொண்டிருந்தார். அன்றைக்கு எனக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த சண்டையில் எனது கேள்விகளும் அப்படிப்பட்டவையே. அவை குத்தி ரணமாக்கிய பிறகுதான் இந்த வாழ்வுக்குத் தான் அடிபணியாது போன உள்ளுணர்வுக்குள் ஆட்பட்டிருப்பார் எனத் தோன்றுகிறது.

பியரின் கடைசி மிடறைக் கவிழ்த்து முடித்ததும் காரிய வீட்டுக்குப் போனேன். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டுக்கிடந்தவர் என்பதால் நேரம் தாழ்த்தாமல் புதைத்து விடுவதே நல்லது என்கிற முடிவுக்கு வந்திருந்தனர். ஆக மதியத்திலேயே பாடை எடுத்து விட்டனர். அரக்கன்கோட்டை கால்வாயை ஒட்டியிருந்த மயானத்தில்தான் பெரியப்பாவைப் புதைத்தார்கள். அப்பா மண் அள்ளிப்போடும்போது மீண்டும் அழுதார். அழுகையின் வழியே எதைக் கரைக்க நினைக்கிறார் எனத் தெரியவில்லை. அண்ணனுக்கு அடுத்து தான் தான் என்கிற எதிர்மறை எண்ணம் அப்போது அவரை ஆட்கொண்டிருக்கலாம். கேள்விகளும் யூகங்களும் மட்டுமே என்னிடம் இருந்தன.

மயானத்திலிருந்து திரும்பியதும் வீடு தண்ணீர் ஊற்றி மொழுகப்பட்டிருந்தது. முடைநாற்றம் எழும் சாக்கு, பெரியப்பா படுத்திருந்த கட்டில், போர்வை எல்லாம் தெருக்கோடியில் வீசப்பட்டு விட்டன. அம்மா அந்த வீட்டுப்பெண்களோடு இயல்பாகக் கலந்து பேசிக் கொண்டிருந்தது. அப்பாவை மச்சான் முறை சொல்லி அழைத்தவர் மீண்டும் சரக்கடிக்கக் கூட்டிப் போனார். “என்ன ஏத்திட்டு வந்திருப்பியாட்ட இருக்குதே” என்று பெரியப்பாவின் இரண்டாவது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான். ஒரு பொழுதைக் கடப்பதற்குள்ளாகவே எல்லாம் இயல்புக்குத் திரும்பி விட்டது. ஒரு சாவு இவ்வளவு அற்பமானதா. ஒருவரை சபிக்கும்போது கூட “உனக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போதுதான் புரிகிறது. நல்ல வாழ்வைக் காட்டிலும் நல்ல சாவுக்கு அநேகம் பேர் ஆசை கொள்வதுதான் எவ்வளவு பெரிய முரண். வாழ்வை நம் விருப்பத்துக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். அதே நேரம் என்ன வளைந்து நெளிந்தாலும் சாவு அதனை சட்டை செய்யாது. ஆகவேதான் சாவிலிருந்து தப்பி ஓட உயிர்கள் அனைத்தும் துடிக்கின்றன. இரண்டாம் ஆட்டமாக பியரைக் குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்த பின்பும் சாவின் மீதான பேரச்சம், அது விளைவிக்கிற பதற்றம், துயர், வலிகளென அனைத்தையும் மனம் ஆராய்ச்சிக்குட்படுத்திக் கொண்டிருந்தது. இரவு 11 மணியாகியும் தூக்கம் வரவில்லை. சிறுநீர் கழிக்கலாம் என வெளியே வந்தபோது கட்டிலில் அப்பா வேட்டி விலக சரிந்து கிடந்தார். அவர் தன் கனவுகளின் வழியே இணை வாழ்வொன்றை வாழ்ந்து கொண்டிருப்பார். அதில் அவர் சக்கரவர்த்தியாகக்கூட மிளிரலாம். என்றெல்லாம் நினைத்தபடியே சிறுநீர் கழித்தேன். திரும்பி வருகையில்  விலகியிருந்த வேட்டியை இழுத்துப் போர்த்தி விட்டேன். காலையில் அப்பாவிடம் பேச வேண்டும். துக்க வீட்டில் கை கொடுத்து நாங்கள் இருக்கிறோம் என்கிற பற்றுதலை கொடுப்பதைப்போலான கதகதப்பையும், அவநம்பிக்கையைத் தகர்த்தெறியும் சொற்களையும் அவருக்குத் தர வேண்டும். இறுதியில் எல்லோருக்கும் தேவையாக இருப்பது ஒரு பிடிமானம்தான். என் பிடி தவறாது என்கிற உறுதியே அவருக்கான மீட்சி.

கி.ச.திலீபன் குறிப்பு

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். 15 ஆண்டுகளாக பத்திரிகையாளனாக பணியாற்றி வருகிறேன். ஓலைச்சுவடி எனும் கலை இலக்கிய சூழலிய இதழை நடத்தி வருகிறேன். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற சிறுகதைத் தொகுப்பையும், ‘Back பேக்’ என்கிற பயண அனுபவ நூலையும் எழுதியிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *