(குறுங்காவியம்)
அத்தியாயம் 1
அறிந்தவற்றின் அறியாத பக்கங்கள்
புதிர்மை, மர்மம், அமானுஷ்யம், திகில், ஆபத்து ஆகியவற்றால்
பிரசித்தி பெற்றது முக்கோணப் பெருங்கடல்
நம் உள்ளங்கைகளிலும் உள்ளன அறியப்படாத பக்கங்கள்
முக்கோணப் பெருங்கடலிலோ
ஒவ்வொரு துளியும் ப்ரம்ம சூத்திரம்
நரகத்தின் வாயில் என நிந்திக்கப்படுகிற அது
மரணத்தைக் கர்ப்பம் தரிப்பது
அதிபுனைவின் வசீகரமும் எதார்த்தத்தின் குரூர அழகியலும் கொண்டது
அதில் பிரவேசிக்கும் படகுகள் சுறாக்களாகிவிடுகின்றன
கப்பல்கள் திமிங்கிலங்களாகிவிடுகின்றன
அதன் பரப்புக்கு மேல் வானில் பறக்கிற விமானங்கள் கழுகுகளாகவும்
ஹெலிகாப்டர்கள் தும்பிகளாகவும் மாறிவிடுகின்றன
அந்த வினோதக் கருப்பு ஆற்றலால் உலகம் வியந்து குழம்புகிறது
அது அழித்தலா, நிலைமாற்றமா, மறுபிறவியா?
யார் அறிவார்?
மனிதன் இறப்பை விரும்பாவிடாலும்
அதற்கு அப்பாலை அறிய விரும்புகிறான்
மனித அறிவுகளுக்கும் சாத்தியங்களுக்கும் அப்பாற்பட்ட இடங்களில்
உண்மைகளுக்கும் எதார்த்தங்களுக்கும் பதிலிகளாகின்றன
சமய நம்பிக்கைகளும் அதிபுனைவுகளும்
மாயாஜாலக் கடல் அபாயத்தின் கவர்ச்சி ஈர்க்கிறது சிலரை
பூடகமும் இருண்மையும் கொண்ட அந்தக் கொலைவெளி
சவால்விட்டு இழுக்கிறது
சாகச வீரர்களையும் பயங்கர விரும்பிகளையும்
அதன் வசிய சக்தி மயக்குகிறது
அழகியல் ஆராதகர்களான கலை – இலக்கியவாதிகளை
மாயப் பெருவெளியான முக்கோண சூன்யக் கடலில்
அகப் பயணிகளான தியானிகளும்
அமானுஷ்யப் பயில்வு யோகிகளும்
துணிச்சலோடு ஆன்மிக சாகசம் நிகழ்த்தச் செல்கின்றனர்
சென்றவர் எவரும் திரும்பியதில்லை இதுவரை
என்னவாயினர் என்பதும் தெரியாது
வேட்டைக் கடல் அழைப்பு விடுக்கும்போது
எந்த இரைகளாலும் நிராகரிக்க முடியாது
அத்தியாயம் 2
பெருங்கடல் மீனவர்களின் கடலோடிப் பாடல்
வலைகள் நிறைய, வள்ளங்கள் தோணியும் நிறைய
ஆதி அந்தமில்லா அலைகளில் மிதப்போம்
அன்னைப் பெருங்கடல் மடியிலே துயில்வோம்
எம் மனம் நடுங்குது, நெஞ்சம் பதைக்குது
எத்தனை தோணிகள் மூச்சடைத்துக் கொல்லப்பட்டதோ
எத்தனை கப்பல்கள் கடித்துக் குதறப்பட்டதோ
குருதி வேட்கை கொண்ட காட்டேரிக் கடலில்
மர்மங்கள் நிறைந்தது, மாய்மாலம் கொண்டது
மானிடர் அறிவால் அறிய ஒண்ணாதது
கொதித்துக் கரைக்கும் அமிலமென எல்லைகள்
அலைகளின் கோபத்தை அறிந்தவர் தப்பினர்
ஆழ்கடல் மார்பினில் அச்சத்தின் நிழல் கூத்து
எந்தையர் கண்டனர், எச்சரித்து மீண்டனர்
தாத்தாக்கள் கூறினர் திரும்பாதோர் தொல் கதைகள்
ஒரு துளி விரிந்து கடலாகி
பறிக்கிறது உயிர்களை சூனியச் சூறாவளியில்
பெருங்கடல் பசிக்குத் துளியிரை ஆகின்றனர்
கடற்கலன் பயணிகள்
அதிஈர்ப்புவிசையால் விண்கலங்களும் கபளீகரமாகின்றன
விண்ணையும் மண்ணையும் புசித்திடும் கடல் வேட்கை
அழிவுக் கடலோ? மாயைக் கடலோ?
மறைவடையும் கப்பல், மறுபடியும் வராத விமானம்
அருவாய் விழுங்கும் ஆழம்
அறிந்தவர் சென்றிடார்; சென்றவர் மீண்டிடார்
அறிஞர் தேடியும் அறிவியலர் ஆய்ந்தும்
அகன்றதில்லை திரைகடல் மர்மத் திரைகள்
காலத்தை வென்ற ஞானியர் மட்டுமே அறிவர்
முக்கோணக் கடலின் மறைபொருள் ரகசியம்
மரணத்தைக் கொல்லும் மாவீர வித்தகம்
நம் ஆசைகள் கடலளவு; தேவைகளோ உப்பளவு
இடருடன் வாழ்ந்தாலும் எங்களின் வரப்பிரசாதம்
பசியோடும் கடலோடும் போராடி வாழ்தல்
வலை வீசுவோம் தூரத்தில்; முக்குளிப்போம் ஆழத்தில்
ஒருபோதும் நெருங்க மாட்டோம் மாய முக்கோணத்தை
வள்ளங்கள் சிறிது; வாழ்வோ பெரிது
குண்டூசி மூழ்குது; கப்பல் மிதக்குது
சூட்சுமம் அறிந்து சுக்கானைத் திருகு
அத்தியாயம் 3
ஆயிரம் தலைக் கடல் நாக புராணம்
முக்கோணப் பெருங்கடலின் ரத்த நிழலில்
மூன்று சுருள் இட்டுப் படுத்தபடி காவல் காத்துக்கொண்டிருக்கிறது
ப்ரம்மாண்டக் கடல் நாகம்
ஆயிரம் தலைத் தூண்களில் ப்ரபஞ்சம் தாங்குவதும்
பூமியை அழிக்க வருகிற கிரகணங்களைத் தாக்கி
சூரிய சந்திரர்களை விழுங்கிக் கக்குவதும் அதுவே
அதன் விஷம் சிந்தி கடலின் உப்பாயிற்று
எண்ணங்கள் அலைகளாகவும் ஆழிப்பேரலைகளாகவும் ஆக
ஊதும் காற்று சூறாவளியாகிறது
ஆதிசேஷனெனச் சிலர், வாசுகி என மற்றோர் பக்கம்
ஏதேன் பாம்பின் மூதாதை எனக் குடியேறிகள் தரப்பு
மர்மக் கடலின் மாயங்கள்
ஆயிரம் தலைச் சர்ப்பத்தின் அட்டகாசங்களே என
மீனவத் தீவுகளின் நாட்டுப்புறக் கதைகள்
பாம்புகளின் வேதங்கள் கூறுகின்றன:
விழுங்கப்பட்டவர்கள் சாகவில்லை
அதே தோற்றம், அதே வயதுடன்
ஒரே சுவாசத்தில் இன்னமும் வாழ்கின்றனர்
பாதாள அமரத்துவ உலகில்
அது புராணக் கட்டுக் கதை என்பவர்களுக்குத் தெரியாது
முக்கோணப் பெருங்கடலைக் காவல் காப்பதும்
ஆயிரம் தலைத் தூண்களில் ப்ரபஞ்சம் தாங்குவதுமான
ப்ரம்மாண்டக் கடல் நாகம்
அவர்களுக்குள்ளும் இருக்கிறது என்று
அத்தியாயம் 4
லாண்டிஸ்மூரியாவில் கனவுக் காலம்
(1)
நினைவிலும் கனவிலும் எறும்பூர இனிக்கிறது
பூமியில் தொலைந்த சொர்க்கத்தின் கதை
கடவுள்களும் மனிதர்களும் ஒரே நிலப்பரப்பில் ஒன்றாக வாழ்ந்த
கனவுக் காலம்
அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆசியாவும் ஆஃப்ரிக்காவும் கைகோர்த்துக்கொண்டிருந்த
லாண்டிஸ்மூரியா எனும் முக்கோணக் கண்டம்
கடவுகள்களுக்கும் முன் பிறந்த ஆதிப் பழங்குடிகள்
அங்கு வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கத்துக்கும் மேல்
கடவுள்கள் அங்கு குடியிறங்கியதும் அதனால்தான்
தெய்வீகமும் மானுடமும் கூட்டுறவு
மனிதர்களின் மூச்சுக் காற்றில் கடவுள்களின் சுவாசம்
இரு இனங்களும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக
நிலமும் வானமும் ஒன்றிணைந்தபோது
இன்பத்தின் இலக்கணம் புதிதாக எழுதப்பட்டது
(2)
பசியையும் காமத்தையும் நிலவின் முலைப் பாலில் கரைத்து
களியாக்கிச் சமைக்கப்பட்டது லாண்டிஸ்மூரியா
அந்தப் பெருநிலப்பரப்பின் மூன்று பக்கங்கள்:
தெய்வீகம், மிருகீயம், மனிதம்
ஆடைகள் கண்டுபிடிக்கப்படவில்லை
திருமண வழக்கம் இல்லை
விவசாயம் தேவையில்லை
வானும் மண்ணும் வயிற்றுப் பசி தீர்த்தன
உடல் பசி தீர்க்க ஒருவருக்குப் பலர்
பசியின் உறுப்புகள் பக்கம் பக்கமாக
வயிற்றுக்குக் கீழே பிறப்புறுப்புகள்
பசியாற்றுதல்களன்றி வேறெதுவும் வேலையில்லை
தாய் மைய வேட்டைச் சமூகத்தின் பெண்ணிய உரிமைகள்
எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும்
எத்தனை ஆண்களுடனும் சம்போகிக்கலாம்
மனிதப் பெண்கள் ஆண் கடவுள்களை விரும்பினர்
கடவுளிகள் மனித ஆண்களை நாடினர்
அணையாக் காமத் தீயில் சதை வேகும் பேரின்பம்
துய்த்துக் கிளர்ந்தன இரு இனங்களும்
(3)
முந்நூறு ஆண்டுகள் வாழும் நீள் ஆயுள்
கனவுகள் காலாவதியாகாத மனிதர்கள்
தளர்ச்சியற்ற உடல்; துவளாத உறுதி
கடவுள்களையும் வெட்கப்படுத்தும் சம்போக ஆற்றல்
காமக் கடலில் கடவுளிகளை நீந்தித் திளைக்க வைத்த
மனித ஆண்மை
ஆணவக் கடவுள்களின் பொறாமையை விடைக்கச் செய்தது
கடவுளிகளைக் கட்டுப்படுத்த அதிகாரம் கைப்பற்றி
விண்ணோர் சமூகம் ஆண் மையமாயிற்று
கடவுள்கள் திருமணத்தைக் கண்டுபிடித்தனர்
கடவுளிகள் கள்ளக் காதலைக் கண்டுபிடித்தனர்
ஆண் கடவுள்களின் அவமானம் உடைந்த ஆற்றொழுக்காக
முடிவெடுத்தது கூட்டணி
சொர்க்கம் திரும்ப
வெளியேறும் முன் சாபம் எறிந்தனர்
கடவுள்களின் வன்மம் புயலாகியது
குரூரம் ஆழிப்பேரலையாகியது
லாண்டிஸ்மூரியா கடலில் மூழ்கலாயிற்று
மனிதர்கள் மன்றாடி உயிர்ப் பிச்சை கேட்டனர்
கடவுள்கள் இரங்கவில்லை
கடவுளிகளின் கள்ளக் காதலும் தாய்மையும் கசிந்து வரமாகியது
“நீங்கள் கடலில் மூழ்கினாலும் மரிக்கமாட்டீர்கள்
எங்களைப் போலவே அமரத்துவர்களாகி
உங்களின் நிலத்தோடு கடல் அடியே வாழலாம்!”
கடவுள் சமூகம் விண்ணேறியது
லாண்டிஸ்மூரியா ஆழ் கடலில் மூழ்கியது
(4)
இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது லாண்டிஸ்மூரியா
ஆதி உலக உயிர்ப்புடன் கடலடியில்
அமரத்துவ மனிதர்களோடு
கடவுள்களுடன் ஒன்றாக வாழ்ந்த
கனவுக் காலத்தை இழந்தது பற்றிய வருத்தத்தோடு
மனிதர்களுக்கு ஒரு படி மேலாகவும்
கடவுள்களுக்கு ஒரு படி கீழாகவும் உள்ள அவர்களுக்கு
இப்போது கடவுள்களின் அருள் இல்லை
புற உலக மனிதர்களோடு தொடர்புகொள்ள விருப்பமும் இல்லை
அயல் கிரகங்களுக்கும் செல்லும் வசதி பெற்ற மனிதர்கள்
தங்களின் கண்டத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே
முக்கோணப் பெருங்கடலை அபாயங்களால் நிரப்பி
மர்மங்களால் மூடி
ஆயிரம் தலை நாகத்தைக் காவலும் வைத்துள்ளனர்
பூமியின் சொர்க்கம் ஆழ்மனதில் புதையுண்டிருக்கிற கடல்
துக்கம் தாளாது ஆவலாதி சொல்லிக்கொண்டிருக்கிறது
நிலத்தின் செவிகளில்
ஓயாத அலைகளால் காலம் காலமாக
அத்தியாயம் 5
எல்லையற்ற புள்ளி
முக்கோணப் பெருங்கடலிலிருந்துதான்
காலமும் வெளியும் பிறந்ததாக ஐதீகம்
யார் அளக்க முடியும் காலத்தையும் வெளியையும்?
காலம், வெளி, மனம்
ஆகியவற்றால் ஆனது முக்கோணப் பெருங்கடல்
இவை எல்லையற்றவை
எவராலும் கடக்க இயலாதவை
பெருங்கடல் பயணிகள் காணாமல் போகும் மர்மம்
அந்த சூட்சுமத்தில் இருக்கிறது
1 – காலம்
மூன்று காலங்களைப் பக்கங்களாகக் கொண்டது
முக்கோணப் பெருங்கடல்
கடந்த – நிகழ் – எதிர்
மூன்று காலங்களும் ஒரே நேரத்தில்
அடிக்கும் அலைகளாய் தாக்கும் ஆழிப் பேரலைகளாய்
தப்பிச் செல்ல வழியே இல்லை
மூழ்கியே வாழ்கிறோம்
மூன்று கண்ணாடிகளில்
வெவ்வேறு ஒரே பிம்பமாய்
காலம் ஒரு மாயை
பூமியின் ஒரு புறம் பகல்; மறு புறம் இரவு
ஒவ்வொரு நாடுகளிலும் நேரம் வெவ்வேறு
பூமிக்கு வெளியே
காலம் அனர்த்தம்
பூமியின் நாட்களும் பிற கிரகங்களின் நாட்களும் வேறு
நெப்டியூனில் ஒரு ஆண்டு ஆகும்போது
பூமியில் 165 ஆண்டுகள் கழிந்திருக்கும்
காலம் எங்கும் ஒன்றல்ல
நம் காலக் கணக்குகள் நமக்கு மட்டுமே
எனினும் காலத்தின் கைகளில் நாம்
அதிலிருந்து வெளியேற முடியாதது போலவே
தப்பிப்பதும் ஒருபோதும் இயலாதது
2 – வெளி
முக்கோணப் பெருங்கடலில் வெளி ஒரு துளியாகி
யுகங்கள் கணங்களாகின்றன
எல்லையற்றது பெருவெளி மட்டுமல்ல
இந்த மெய்யெழுத்துகளில் நீங்கள் காணும் அளவிலான
ஒவ்வொரு புள்ளிகளும்கூடத்தான்
நம் உள்ளங்கள் எல்லைகளை அழித்துக்கொண்டால்
அந்தப் பேரழிவில் நம் “நான்”
சவ்வூடுபரவலுக்குள்ளாகிவிடும்
சித்தம் ப்ரபஞ்சத்தின் உயிர்மூச்சு
அதில் தேவதைகள் இல்லை
மந்திரங்கள் இல்லை
மனதின் பின்புற நிழலில்
ஒரே ஒரு சிந்தனை
“நான் இல்லை;
நான் எல்லாமாக இருக்கிறேன்!”
3 – மனம்
ஆன்மிகவாதிகள் சொல்கின்றனர்:
முக்கோணப் பெருங்கடல் என்பது மனம்
அலைகள் ஒரு கணமும் ஓயாது
நீந்திக் கடக்க ஒருவராலும் இயலாது
அறிஞர்களின் கருதுகோள்:
முக்கோணப் பெருங்கடல் என்பது மனித மனம்
அதன் மூன்று கரைகள்
ப்ரக்ஞை, துணைப் ப்ரக்ஞை, நனவிலி
தத்துவ ஞானிகளின் விளக்கம்:
முக்கோணப் பெருங்கடல் என்பது ப்ரபஞ்ச மனம்
அதன் மூன்று பக்கங்கள்
படைப்பு, பேரறிவு, அனைத்துணர்வு
“மனித மனம் தெரியும்
ப்ரபஞ்சத்துக்கு மனம் உண்டா?
அறிவும் உணர்வும் உண்டா?”
யோகி சொன்னார்:
ப்ரபஞ்ச மனம் என்பது படைப்பின் மூலக்கரு
அதுவே ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும்
சங்கல்பத்தால் தோற்றுவிக்கிறது
அது எல்லையற்ற அறிவு மற்றும் நுண்ணறிவின் உறைவிடம்
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
அனைத்து ஞானங்களும் அதில் அடங்கியுள்ளன
ஒவ்வொரு அணுவிலும் உள்ள அறிவு
அதன் இயக்க விதிகள், ரகசியங்கள் அனைத்தும்
ப்ரபஞ்ச மனதால் வகுக்கப்பட்டவை
இதுவே ப்ரபஞ்சத்தின் ஒழுங்குக்கும் இயங்கியலுக்கும் ஆதாரம்
ப்ரபஞ்ச உணர்வு அதன் ஒவ்வொரு மூலையிலும் பரவியிருக்கும்
ஒவ்வொரு உயிரிலும் ஜடத்திலும் அணுவிலும்
அசைவிலும் அது வியாபித்துள்ளது
அனைத்தையும் ஒன்றிணைக்கும் பேருணர்வுப் பெருவெளி
“அது சரி. ஆனால் இந்தக் காணாமல்போதல்?”
புன்னகைத்தபடி சொன்னார்:
கோடானு கோடித் துளிகளால் ஆனது பெருங்கடல்
ஒவ்வொரு துளியிலும் எழுதப்பட்டிருக்கிறது
கடலாகும் சூத்திரம்
அத்தியாயம் 6
மாயைகள் பல; உண்மைகள் ஏராளம்!
வேதாந்தம் சொல்கிறது
அறியாமையின் விரிவே மாயையென
அறியாதோருக்குப் பெருங்கடல் பீதி
அறிவின் எல்லை கடந்தோருக்கு
பேருண்மைகள் காட்டுகிற மாயக் கண்ணாடி
மாயையும் ஓர் உண்மையென அறிந்தவர்கள் மகாஞானிகள்
தன்னையறிந்து இன்புமுறும் அறிதலர்கள்
அறிவியலாளர்களாலும் புவியியலாளர்களாலும் விளக்கப்பட முடியாத
அபாயப் புதிர்மைகளும் மர்மங்களும்
அவர்களுக்குத் தெரியும்
மாயையும் தூண்டுகிறது தேடலை
அறியப்படாததின் அழைப்பில் சென்ற தேடலர்கள்
தேடலில் தொலைந்துபோனவர்கள்
திரிகோண சாகரத்தை பாதிப்பின்றிக் கடந்தவர் உண்டா?
பதிலறியா வினாக் குறி உயர்ந்தெழுந்து நிற்கிறது
படமெடுத்த பாம்பு போல
காலம் பிறந்த காலம் முதலாக
இந்த பூமியில் அவதரித்த மகா ஞானியர்களாலும்
ஆழம் காண முடியாதது முக்கோணப் பெருங்கடல்
அதன் மூன்று பக்கங்களையும் அளந்து சொல்ல
உலகின் ஒட்டுமொத்த அறிவாலும் இயலவில்லை இதுவரை
முக்கோணப் பெருங்கடலைக் கடக்க
ஒரு கப்பலும் போகாது
ஒரு வாழ்க்கையும் போதாது
அதைக் கடந்தவர்களால் அளிக்கப்படாத பதில்தான்
அதன் பேருண்மை
அதையறிய
மனதைத் தாண்டி மௌனமாவது வேண்டும்
அறியாத இருளை
அறிவுத்தீதான் துளையிட வேண்டும்
மாயைகள் பல – பொய்யல்ல;
உண்மைகள் ஏராளம் – முரண்பாடல்ல
ஒன்றாய் விளங்கும் ஒளித் துளி
முக்கோணப் பெருங்கடல்
அத்தியாயம் 7
முக்கோணப் பெருங்கடலை வென்றோர்
மூழ்கி மறைந்த கப்பல்களும்
காணாமல்போன விமானங்களும்
பெருங்கடல் முக்கோணத்தின் பலி சாட்சிகள்
ஆயினும் அதை வென்றவரும் உண்டு
கடல் கடந்தோரல்லர்; காலம் கடந்தோர்
ப்ரபஞ்ச வெளியின் சூட்சும முடிச்சுகளை அவிழ்த்தோர்
மாயையின் திரைகளை விலக்கி
மெய்மையின் ஒளி கண்டோர்
அந்த அக யாத்ரீகர்கள் அடைந்தது பொக்கிஷமல்ல
தன்னுள் இறந்து பிறக்கும் சாகாப் பெருங்கலை
பெருங்கடலின் பேரலைகளில் அவர்கள் துளியாகினர்
வெற்றியென்பது அழித்தலல்ல, கரைந்து கலத்தல்
ப்ரபஞ்சம் என்பது நீயன்றி வேறல்ல
*******

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.