முட்டைக்கருப்பையாவும் சேதுராமும் கிடையை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. சேதுராமன் டீக்கடையில் நின்றவாறு கையில் குவளையைப் பிடித்து டீ குடித்துக்கொண்டிருந்தான். அருகில் குத்துக்கால் வைத்தபடி அமர்ந்திருந்தார் முட்டைக்கருப்பையா. இந்த இரண்டு நாளில் சந்தனப்பட்டியில் உள்ள எல்லோரிடமும் பேசியாயிற்று. ஆனால் இன்னும் களவாண்டு வந்த கிடாக்களையும் ஆட்டையும் கண்ணில் காட்டியபாடில்லை.
முகம் வாடிப் போய் தலையைக் குனிந்தவாறு முட்டைக் கருப்பையா அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது சேதுரமானுக்கு மனது கேட்கவில்லை. முட்டைக் கருப்பையா நல்ல கலகலப்பனாவர். அவர் இருக்கின்ற இடத்தில் துளிக் கவலையும் இருக்காது. அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார். அப்பப்போ காமக்கதைகள் வந்தாலும் அருவருப்பாக இல்லாமல் நகைச்சுவையாக இருக்கும். இள வயதில் பக்கத்து வீட்டில் இன்னைக்கோ நாளைக்கோனு பொரிக்கின்ற அளவுக்கு இருந்த அடை வைத்த கோழி முட்டையைத் திருடிக் கடையில் விற்று காசு வாங்கிப் போயுள்ளார். ஆனால் மறுநாளே காடைகாரர் பொரித்த கோழிக் குஞ்சோடு கருப்பையாவின் வீட்டுக்கு வந்துவிட்டார். ஊர் முழுவதும் தீயாகப் பரவ அன்றிலிருந்து கருப்பையா முட்டைக் கருப்பையா ஆகிப்போயிருந்தார். கூடவே சொந்த ஊரான இதம்பாடலில் கருப்பையா என்றே நாலைந்து பேர் இருந்ததாலும் கிடைக்காரர் யாருக்கும் கருப்பையா என்றால் இவரா அவரா என்ற குழப்பம் வரும். முட்டைக் கருப்பையா என்றால் யாவரும் அறிந்த பெயராகிப்போனது.
என்ன கலகலப்பான ஆள் என்றாலும் தனக்கென்று கவலை வரும்போது, யார் வந்து ஆறுதல் சொன்னாலும் எந்த மனமும் கேட்காது. மனம் அதன் கவலையிலிருந்து விடுபட வேறொரு புதிய கவலையோ மகிழ்வோ வர வேண்டும். முகத்தைத் சுழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவரைப் பார்த்து சேதுராமன்தான் கேட்டான். “மாமா இன்னைக்கும் கெடாயக் கண்ணுல காட்டலயினா என்ன செய்றது” என்று. அண்ணாந்து சேதுராமன் முகத்தைப் பார்த்தவர் பேச்சேதுமின்றி அமர்ந்திருந்தார்.
சந்தனப்பட்டி வந்த முதல்நாளிலே கிடாய் இங்குதான் கிடப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் களவாண்டு கொண்டு வந்தவர்கள் யார் என்றுதான் இன்னும் புடிபடவில்லை. இதே டீக்கடையில்தான் முதல்நாள் வந்து துப்புத் துழாவிய போது அப்படிக் களவு செய்யும் யாருமே இங்கு இல்லை என்றார்கள். பிறகு நல்ல உச்சி வெய்யில் நேரத்தில் அதை டீக்கடைக்காரர்தான் மூன்று மணி நேரம் காத்துக் கிடந்ததற்கு இரக்கப்பட்டு டீக்கடைக்கு வந்த நடுத்தர வயதுள்ள ஒருவரைக் கை காட்டினார். அவரும் கூட நம்மூரில் யாரும் இல்லை என்றே சாதித்தார். இது எல்லாமே எதிர்பார்த்ததுதான். நாகராசு முன்பு சொல்லி அனுப்பியதுதான். வந்து பேசிய எல்லோருமே அப்படியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஆனால் முட்டைக் கருப்பையா எதுக்கும் அசையவில்லை. களவாணிகள் தூக்கி வந்த ஆறேழு ஆட்டில் இரண்டு கிடாய்கள் தன்னோட குலதெய்வக் கோவிலான சந்த வழியான் கோவிலுக்கு நேந்து கொண்டது. முன்பு இராமநாதபுரம் ஓரமாக இருக்கும் லாந்தை என்ற ஊருக்கு நடுவில் இருந்தது அக்கோயில். கோவில் பெரிதாகவும் அந்த ஊர்க்காரவர்கள் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம் என்று வழக்குத் தொடுத்து உரிமை கொண்டாடிய பின் வேறு வழி இல்லாமல் பிடிமண் எடுத்து வந்து ஊருக்கு வடக்கே உள்ளே வைகையாற்றங்கரையில் வைத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கும் பிறகு இப்போதுதான் கோவில் கட்டி மண்டல பூசையெல்லாம் முடிந்துள்ளது.
இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆடு மாடு வைத்து கிடை போடும் மக்களில் பெரும்பாலானோர்க்கு இந்தக் கோவில்தான் பூர்வீகமான குலதெய்வக் கோவில். கோவில் வழக்கில் கிடந்தபோதுகூட ஆட்டையும் மாட்டையும் விட்டு விலகி வந்து வாதாட முடியாமலே கைமீறிப் போன கோவில். கடைசியாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிடா வெட்டியது. அதன் பிறகு ஆட்டில் கிடா நேந்துகொண்டு இத்தனை ஆண்டுகளாக வெட்டாமல் கிடந்தது. அதனால் பங்காளிகள் கூடிப்பேசி கோவில் களரிக்கு நாள் குறித்திருந்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் களரி. அதற்குள் கிடா இரண்டும் களவு போனதில் முட்டைக் கருப்பையாவுக்குத் துளி தூக்கம் இல்லை. நீண்ட நாள் புள்ளை இல்லாமல் இருந்த முட்டைக் கருப்பையாவின் மகளுக்குப் புள்ளை வரம் கேட்டு மடியேந்தி நின்றபோது கோவில் மருளாடிச் எலும்பிச்சைப் பழத்தை மடியில் போட்டு எண்ணி பதினைஞ்சு மாத்தைக்குள்ள நீ வேண்டி நிக்கிற சேதி கைகூடும் என்று வாக்குச் சொன்னது. சாமி எனக்கு என்ற பண்ணுவ என்று கேட்டபோது, எம்பங்க்குக்கு வெட்ற ரெண்டு கிடாயோடு சேர்த்து எம்மகளுக்கும் சேர்த்து ரெட்டை பொறந்த கிடாயக் கொண்டு வந்து நாலு கெடா வெட்டி புள்ளைக்கு கரும்பால தொட்டி கெட்றேன் என்று வாக்குக் கொடுத்திருந்தார். கொடுத்த வாக்கு தவறக்கூடாதுப்பா… தவறுனா புள்ளை எம்புள்ளைப்பா என்று சொல்லியிருந்தது சாமி. கருப்பையாவுக்கு அந்த ரெண்டு கிடாய்களும் காணாமல் போனதில் மனது கிடந்து அடித்துக்கொண்டது.
சாமி என்ன சொன்னாலும் பரவாயில்லை. பங்காளிகள் எல்லாவற்றையும் சோடித்துப் பேசுவார்கள். எதற்கு அஞ்சாவிட்டாலும் நாவிற்கு அஞ்சிதான் ஆக வேண்டும் மனிதன். உலகத்தில் எல்லா நஞ்சையும் தனக்குள்ளே வைத்திருப்பது மனிதனின் ஒற்றை நாக்குதான். கீதாரி ஏதோ தப்பு செய்துள்ளார் என்பார் சிலர். கீதாரி யாருக்கோ கெடுதல் செய்திருக்கார் என்பார் சிலர். ஏதோ முன்னோர் வாக்கு இருக்கு என்பார் சிலர். இன்னும் சிலர் குடும்பத்துக்குக் கெடுதல் நடக்கப்போவது என்பார்கள். எல்லாமுமே கண்முன் வந்து போக முட்டைக் கருப்பையாயின் முகம் களையிழந்திருந்தது.
ஏறு வெயில் நேரம். எந்தவித இடருமின்றி வானம் தெளிவாக இருந்தது. சூரியன் எல்லா இடத்திலும் தன் கால்களைப் பதித்து நின்றிருந்தது. மணி காலை எட்டரை இருக்கும். உழுது கிடந்த மணற்பாங்கான கொல்லையில் மண் சூடேறுவது போல மனமெங்கும் சூடேறி இருந்தது கீதாரி முட்டைக் கருப்பையாவுக்கு. அன்றைய பொழுது விடிந்ததில் இருந்து தன்னையே நொந்துகொண்டு கொண்டு கிடை வயலில் அமர்ந்திருந்தார். “யப்பா சந்த வழியானே… இதென்ன கொடுமை. கோயில் களரிக்கு ஒரு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள இப்படிக் கிடாயைக் கொண்டு போயிட்டாங்களே. நமக்கென்ன சொந்த ஊரா இது… நாலு பேரைக்கூட்டிக்கிட்டுக் களவாணிப் பயலுகளைத் தேடிப்போக.
இப்படியா என்ன சிக்கலில் கொண்டு வந்து நிப்பாட்டுவ… ஒன்னத்தான நம்பி இருந்தேன் என்று வாய்விட்டுப் புலம்பி நொந்துகொண்டார். முட்டைக் கருப்பையாவின் ஆடுகள் வடக்கூரில் கிடை அடைந்து கொண்டிருந்தன. வைகாசி பிறந்தால் கோவிலுக்குக் கிடாய் நேந்து கொண்டது போல் கிடாயைக் கொண்டு போய் வெட்ட வேண்டும். ஏழெட்டு ஆண்டாகக் கோவிலுக்குக் கிடா வெட்டாமல் தேங்கிப் போனதில் இரண்டும் முத்திப்போன கிடா. ஓர் ஈற்றில் பிறந்தவை. ஒன்று வெள்ளைப்போர் மறி இன்னொன்று கரும்போர் மறி. இரண்டும் சோடியாக ஆட்டில் வந்தால் இராமன் லெட்சுமணன் போல இருக்கும். சுத்து வட்டாரத்தில் அப்படியொரு ரெட்டைக் குறுக்கு வச்ச கிடாயை எங்கும் பார்க்க முடியாது. இரண்டுக்கும் கிளிக்கொம்பு. யாவாரத்திற்கு வரும் எந்த பாயும் இந்தக் இரு கிடாயையும் விலைக்குக் கேட்காமல் சென்றதில்லை. அது கோவில் மறி என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்படியே பேச்சை நிறுத்திக்கொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். முட்டைக் கருப்பையாவுக்குக் கிடாய்களின் தோற்றம் கண் முன் வந்து மறைந்தது.
முட்டைக் கருப்பையாவோடு, சேதுராமனும் சேர்ந்து கிடை வைத்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் ஆளுக்கொரு சம்பள ஆள் வைத்து ஆடு மேய்த்தார்கள் “இப்படியே வேதனைப்பட்டு என்ன செய்றது மாமா. ஆட்டைக் கெளச்சுவுட்டு வாங்க கையாளப் பாத்து எதாவது துப்பு தெரியுதானு பாப்போம். ஏதோ ஆடுகனாக்கூட தூக்கிட்டுப் போனவங்களுக்குக் கெடு சொல்லி கோயில்கொளமுனு நேந்துக்கலாம். போனதே கோவில் கெடா வேற. அத்தனை பங்காளிக்கு நடுவுல கெடா இல்லாமப் போயா நிக்க முடியுமா? நேந்துக்கிட்டு கெடா கொண்டு போகலையினா சாமிக்குத்தமாகிடும்ல” என்றான் சேதுராமன்.
எதையும் காதில் வாங்காதது போல அமைதியாகச் செம்மறி ஆடுகள் சூழ்ந்து நிற்க வெள்ளாடுகள் ஏதும் இல்லாமல் கிடந்த வெற்றுத் தும்பைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் கருப்பையா. களவு போன எல்லாமே வெள்ளாடுகள். ஒரு மூலையில் ரெண்டு குட்டிகள் மட்டும் தும்பில் புணையப்பட்டுக் கட்டிக்கிடந்தன. வரிசையாக இருந்த மற்ற எல்லாத் தும்புகளும் வெறுமனே கிடந்து கருப்பையாவை நிலைகுலையச் செய்திருந்தது. கிடாய்கள் தவிர்த்து நான்கு வெள்ளாடுகள் மட்டுமே பத்தாயிரம் போகும். கிட்டத்தட்ட ரெண்டு பவுன் நகை வாங்கிடலாம். நேற்று தனக்கான சொத்தாய் இருந்த ஆடுகள் இன்று இல்லை. வாழ்க்கையில் எதுவொன்றும் நிரந்தரமில்லை என்பதைக் காட்டுவது போலக் கிடந்தது வெற்றுத்தும்பு. நான்கு ஆட்டில் மூன்று வெள்ளாடுகள் நிறை சினை ஆடுகள். ஓராடு மட்டும் ஈன்றிருந்தது. தும்பில் புனையப்பட்ட குட்டிகள் இரண்டும் கத்துவது ஏதோ தலைக்கு மேல் வெள்ளம் வருவது போல இருந்தது என்றாலும் வெள்ளம் இரவே வந்திருந்தது. அத்தனை செம்மறி ஆட்டுக்கு நடுவே வெள்ளாடுகள்தாம களவு போயிருந்தன. வெள்ளாடு தான் சொன்ன பேச்சு கேட்கும். செம்மறி ஆள் அண்டாது. அதை விரட்டிப் பிடிக்க வேண்டும். வெள்ளாடு தும்பில் கட்டப்பட்டுக் கிடப்பதால் கள்வர்களுக்குப் பொத்தியது போல அள்ளிக்கொண்டு போக எளிதாக இருக்கும்.
எரிகிற வீட்டில் புடுங்கினமட்டும் என்பதை பொய்ப்பிப்பதாக இரண்டு குட்டிகளைக் கள்வர்கள் விட்டுச் சென்றிருந்தது தீக்கிரையான காட்டில் புதிய மரக்கன்று முளைத்தது போல் இருந்தது. இடையன் ஒன்றுமே இல்லாவிட்டாலும் புழுக்கைக்கு ஆடு ஓட்டியாவது கிடை உருவாக்கி விடுவான். ஒரே ஒரு கிழட்டாட்டைக் கொடுத்தாலும் போதும் ஒரு கிடையை உருவாக்கிடுவான். மீண்டும் வெள்ளாட்டுக் கூட்டம் உருவாக ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.
குட்டிகள் இரண்டும் பால் குடி மறக்காத இத்தனி புல் கடிக்கப் பழகாத குட்டிகள். குட்டிகள் கத்தும் சத்தம் பொறுக்காமல் படக்கென்று எழுந்து ஆட்டுக்குள் போக, ஆடு மேய்க்கும் பதின்ம வயதுச் சிறுவன் ஓடி வந்து ஒரு செம்மறி ஆட்டைப் பிடித்தான். குட்டிகள் இரண்டையும் தும்பை விட்டு அவிழ்த்து மாரோடு அள்ளிக்கொண்டு செம்மறி ஆட்டின் இரண்டு காம்பிலும் ஊட்ட விட்டார். குட்டிகள் நேற்றிரவு பால் குடித்தது. குட்டிகளைத் தும்பில் புணையாமல் இருந்தால் நள்ளிரவு வரையாவது ஆடுகளின் பால் குடித்திருக்கும். தும்பில் புனைந்து பழக்காமல் விட்டால் கொஞ்சம் பெரிய குராலாக ஆனால் போதும் வலையை அமுக்கிவிட்டு வெளியே போகும். ஓரு வெள்ளாடு போனால் போதும் அதே வழியில் எல்லாச் செம்மறி ஆடும் போய் வெள்ளாமையை அழித்துவிடும். அதனாலே சிறு குட்டியில் இருந்தே வெள்ளாட்டங்குட்டிகளைத் தும்பில் புணைய வேண்டும். ஓராட்டில் ஊட்டியது போகவும் இன்னொரு இளங்குட்டித்தாயாட்டைப் பிடித்தான் சிறுவன். அதிலும் சற்று நேரம் குட்டிகள் இரண்டும் ஊட்டவும் குட்டிகள் வயிற்றுக்குப் பால் குடித்திருந்தன. கிடையைப் பொறுத்த வரையில் தாயில்லாத குட்டிக்கு, ஈன்ற மற்ற எல்லா ஆடுகளும் தாய்தான். ஒரீரு முறை குட்டிகளைப் பழக்கப்படுத்திவிட்டால் போதும், அடுத்த முறை எந்த ஆட்டைப் புடித்தாலும் ஓடி வந்து அதுவாகவே பாலைக் குடிக்கும். சில நேரம் பண்டுவம் பார்க்கச் சினை ஆட்டைப் பிடித்தால் கூட வந்து மடுவில் ரெண்டு முட்டு முட்டிவிட்டுப் பால் இல்லையென்ற தெரிந்த பின்தான் விடும். கிடாய்களைப் பிடித்தால்கூடக் கத்திக்கொண்டு ஓடிவந்து மடி தேடி மோதும்போது கிடாயின் வெதர் முகத்தில் இடித்த பின்னரே அமைதியாக நிற்கும்.
குட்டிகளை விட்டுக் கிடாய்கள் கட்டியிருந்த தும்பைக் கையில் எடுத்துப் பார்த்தார். இரண்டில் ஒரு தும்பு புதியதாக இருந்தது. களவுக்கு முந்தைய இரவில் கிடைக்குள் பாம்போ கீரியோ வர ஆடுகள் மிரண்டு ஓடியதில் செம்போர் கிடா, அது புணையப்பட்ட தும்பிலே சிக்கி எழ முடியாமல் கீழே விழுந்து உதைத்துக்கொண்டு வாலுவாலென்று கத்தியது. நடு இரவில் வெள்ளாட்ட மறி கத்தும் சத்தம் கேட்டுப் பதறிப்போய் ஓடி மடக்குக் கத்தியை வைத்துத் தும்பை அறுத்துக் கிடாயைத் தும்பிலிருந்து கழட்டி விட்டிருந்தார். நேற்றுக் காலையில்தான் புதிய தும்பை மாற்றியிருந்தார். இந்த ஏழெட்டு ஆண்டில் இந்த இரண்டு கிடாய்களுக்கும் நானூறு குட்டிகளாவது பிறந்திருக்கும். கீதாரி கருப்பையா வலசை போய் வருகிற எல்லா ஊரிலும் இந்தக் கிடாய்களுக்குப் பிறந்த ஆடுகளையும் குட்டிகளையும் காணலாம். இரண்டும் ஒரே மாதிரி ஒரு மழை நாளில் தனியாக ஆடு மேய்க்கும் போது ஈன்றது, குட்டி இரண்டும் அவ்வளவு அழகாக இராமன் லெட்சுமணன் போல் இருக்கு உடனே கொடுத்த குலசாமி வாக்குக்கு நேந்து கொண்டார். வேட்டியைக் கழட்டி அதில் இரண்டு குட்டியையும் போட்டுத் தோளில் போட்டுக்கொண்டு ஆடுகளை ஓட்டி வந்தது என எல்லாம் நினைவு வர அப்படியே தும்பை மாரோடு பொத்திக்கொண்டார்.
சேதுராமன் தான் மாமா. “இப்படியே இங்கையே சுத்தி வந்தா கதையாகுமா? வாங்க ஆகுற வேலையைப் போய் பாப்போம் என்று அழைத்தான்.
சம்பள ஆள்களை ஏவி ஆட்டைக் கிளைத்து மேய்க்கச் சொல்லிவிட்டு நேராக கையாளைப் பார்க்கச் சென்றார்கள். வடக்கூருக்கும் அடுத்த ஊர் பட்டி, ஊருக்குத் தெற்கில் ஒரு கொல்லையில் தனியாக ஒரு வீடு இருந்தது. கொல்லையெங்கும் துடுப்புக் கீரை வளர்ந்து வெண்மை நிறத்தால் இடைவிடாது பூப்பூத்திருந்தது. துடுப்புக் கீரை காற்றில் ஆடுவது அழகாக இல்லாமல் முட்டைக் கருப்பையாவை கேலி செய்வது போலத் தோன்றியது. கரும்புத் தோகை வேய்ந்த வீடு. வீட்டின் இருபுறமும் மண்ணால் கட்டப்பட்ட திண்ணை இருந்தது. நாகராசின் மனைவி பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அது ஊரறிந்த மர்மமாகவே இன்னும் இருக்கிறது. சிலர் அவனே கொன்றுவிட்டதாகவும், அவன் தொல்லை தாங்காமல் அவளும் பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டதாகவும் பேசிக் கொள்வதை ஊர் மட்டுமல்ல ஊரில் உள்ள மரம் செடி கொடி கூடக் கேட்டிருக்கும். ஆனால் யாரும் அவனைத் தேடி வந்ததில்லை. உள்ளூரில் யாருடனும் பெரிதாகப் பேசமாட்டான்.
அந்தச் சுற்று வட்டாரத்தில் எந்தத் திருட்டும் நாகராசுக்குத் தெரியாமல் நடக்காது. எங்கே எதை எப்படித் தூக்கலாம் என்று நோட்டம் போட்டுக் கொடுப்பது நாகராசின் வேலை. ஊருக்கு தெரிந்த ஒன்றுதான் என்றாலும் உள்ளூரிலே அக்கம் பக்கத்து ஊரிலே களவுக்கு நோட்டம் பார்ப்பதில்லை. தஞ்சை சுற்று வட்டாரத்தில் கிடை போட வரும் கீதாரிகள்தான் முதல் நோக்கம். வெளியூரில் இருந்து வருவதால் எளிதில் ஆட்டைத் திருட நல்ல வாய்ப்பாக இருக்கும். எந்தக் கிடை புதிதாக வந்து இறங்கியிருக்கிறது. எந்தக் கிடையில் ஆள் குறைவாக இருக்கிறது. எங்கு ஏப்ப சாப்பை இருக்கிறார்கள் என்பதை பகலில் நோட்டம் விடுவதுதான் முதன்மை வேலை. களவுக்கு நேரடியாகப் போகாமல் தானாகப் பணம் வீடு வந்து சேரும். களவு நடந்த பின் ஆட்டிடையர்கள் தேடி வந்தால் அதிலும் ஒரு வருமானம் வரும். எல்லா உண்மையும் தெரிந்திருந்தாலும் துப்புத் துலக்கிச் சொல்வதாகப் பேசுவான். வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும். அருவா மீசை வைத்திருப்பவன். அந்த மீசையே ஆளை அச்சுறுத்துவது போல இருக்கும்.
சேதுராமன் தான் அண்ணே… நாகராசு அண்ணே… என்று அழைத்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மெல்லக் கதவைத் திறந்துவிட்டு வெளியே வந்தான். சட்டை இல்லாத உடம்பு. நெஞ்சு கூடு போல வளைந்திருக்கும். ஒரு சொம்பில் நீரை எடுத்து வாய்க்கொப்பளித்துக்கொண்டே “என்ன கீதாரி வாரத ஆளுவோ நம்பளத் தேடி வந்திருக்கவோ…” என்ன சேதின்னான். முட்டைக் கருப்பையா உள்ளே புழுங்கிக்கொண்டிருந்தார்.
சேதுராமன் சேதியைச் சொன்னான். “நேத்து நம்மாட்டுல இறங்கி ரெண்டு கிடாயும் நாலு ஆட்டயும் தூக்கிட்டுப் போயிருக்காங்கே. அதே ஏதாவது துப்புத் தொலங்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” என்றான் சோதுராமன்.
என்ன இப்படிச் சொல்றீங்க. “அடக்கடவுளே நம்மூருக்குமா திருடங்கே வாரானுக” என்று தெரியாதது போலச் சென்னாலும் அதில் ஒரு நக்கல் தொனி இருந்தது.
“நெருப்புக்குள விழுந்த நெய்யா கைக்கு வரப்போகுது ஊருக்கூரு புதுசு புதுசா களவாணிப் பயலுக மொளைச்சிருகானுவோ… எவன்னு போய் அடையாளங்கண்டு தேடுறது. இருக்கிற முந்நூறு நானூறு ஆட்டுல நாலஞ்சாடு எம்மாத்திரம் போய் இருக்கிற ஆட்டைப் பாருங்க. வேற ஏதும் துப்பு தெரிஞ்சா நானே சொல்றேன்” என்றான் நாகராசு.
கருப்பையா கையைக் கூப்பி, “ஏப்பா ஆடு போனாக்கூட போயிட்டுப் போவுது. கெடா ரெண்டும் கோவில் கெடாப்பா. இன்னும் பத்து நாள்ல நம்ம கொலசாமிக்குக் கொண்டு போயி வெட்டணும்ப்பா. இல்லையினா சாமிக் குத்துமாகிடும். பெரிய மனசு வச்சு தகவல் தெரிஞ்சா சொல்லிடு… ஒனக்குப் புண்ணியமா போகும்” என்றார் முட்டைக் கருப்பையா.
’போயிட்டு சாயங்கலாமா வாங்க எங்குட்டும் துப்புக் கிடைக்குதானு பார்த்துச் சொல்கிறேன்’ என்றான். இருவரும் நாகராசு வீட்டை விட்டு மெல்ல நடந்தார்கள். எத்தனை வேகமாக நிலத்தை அளந்த கால்கள் இரண்டும், கல்லடி பட்ட நாயின் கால்கள் நிலத்தைப் பரவிக் கொண்டே நடப்பது போல நடந்தன. எத்தனை களவுகள் நடந்திருந்தாலும் இந்தக் களவு காலின் ஆழத்தில் போய் தங்கிய முள் போல கருப்பையாவின் நெஞ்சுக்குள் இறங்கியிருந்தது.
“என்னப்பா ஒன்னுக்கு நாலுபேர் தூங்கிட்டு இருக்கோம். குந்துனாப்புல ஆட்டைப் தூக்கியிருக்கானுவளே. அவஞ்சாமி முழிச்சிருக்கு. நம்ம சாமியை தூங்கிப்போச்சுல. ஆட்டை எப்படியும் சங்கை நெரிச்சிருப்பானுக, கெடாக்கழுதைக்குத்தே வயசு முத்திச் போச்சே. கத்துனா வாயத்தாண்டி கத்துற சத்தங்கூட வராது. சந்தவழியானே நின்னா ஒனக்கு இல்லையினா என்னைக் கேக்கப்படாது” என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இருவரும் வலசை வந்திருந்தார்கள். முட்டைக் கருப்பையாவின் மனைவி மண்ணள்ளித் தூத்தி “சந்தவழியானே ஒங்கண்ணென்ன அவுஞ்சா போச்சு, களவாணிப்பயலுகள நீ கேளு. இலலையினா ஓ படி வாச மிதிக்கமாட்டேன். கெடா ரெண்டும் எம்பட்டி தேடி வரலையினா எனக்கு நீ சாமியில்லை. ஒனக்கு நான் வம்சமில்லை” என்று ஆங்காரத்தோடு பேசினாள். முட்டைக் கருப்பையாவிற்கு அதையெல்லாம் கேட்க கேட்க உள்ளுக்குள் நெஞ்சு படபடத்தது.
மாலையாகியிருந்தது. முட்டைக் கருப்பையாவும், சேதுராமனும் நாகராசு வீட்டில் முன் வந்து நின்றார்கள். நாகராசுதான் சேதுராமனைப்பார்த்துச் சொன்னான். கொண்டு போன ஆட்ட எதுவும் செய்யக்கூடாதுனு தகவல் சொல்லிருக்கு. அதுக்கு மீறி எதுவும் செஞ்சிட்டா நா பொறுப்பில்லை. அதுக்குள்ள வெரசா போயி ஆட்டை மீட்டுக்கிறது ஒங்க தெறமை. அதுக்கும் தெண்டம் கெட்றது மாதிரி இருக்கும். ஏதுக்கும் கையில பணம் கொண்டு போங்க என்று சொல்லிலிட்டு மேலும் கீழும் பார்த்தான். ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு கிடா நிக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிருக்கேன் செலவுக்கு ஆயிரம் குடுத்துட்டுப் போங்க என்றான்.
சேதுரமானுக்குப் படக்கென்று கோபம் வந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். இதுவே நம்ம ஊரா இருந்தா ஒக்காலோலி அவனை இந்நேரம் தூக்கிப்போட்டுப் பொளந்திருப்பேன் என்று மனதுக்குள் ஓடியது. முட்டைக் கருப்பையா இடை வாரில் கையைவிட்டு அஞ்சு நூறு ரூவாய்த் தாளை எடுத்து நீட்டினார். மறுப்பேதும் பேசாமல் வாங்கிக்கொண்டான் நாகராசு.
இருவரும் ஊரின் அடையாளத்தைச் சேகரித்துக் கொண்டார்கள்.” என்ன மாமா இவ்வளவு சீக்கிரம் துப்புத் தொலங்கி சொல்றதப் பாத்தா, கோவில்கெடானு தெரிஞ்சே தூக்கச் சொல்லியிருக்கிற மாதிரில இருக்கு.”
“எல்லாக் கோடையிலையும் இந்தக்காட்டுக்குதே ஆட்டை ஓட்டிட்டு வாரோம். அவனுக்குத் தெரியாம நம்ம ஆட்டுக்குள்ள என்ன இருக்குப்பா” என்றார் கருப்பையா. சேதுராமன் ஒரு கணம் நின்று கருப்பையாவைப் பார்த்தான். ’மாமா நீங்க சொல்றதைப் பாத்தா, அவன் நம்ம ஆட்டை நோட்டம்விட்டது ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் போலையே’ என்றான். மறு பேச்சின்றி அமைதியாக நடந்தார் கருப்பையா.

இருவரும் டீக்கடையில் நிற்பதைக் பார்த்துவிட்டு, தொலைவில் நின்று கவனித்து வந்த ஒருவன் இருவரையும் நோக்கி வந்தான். சேதுராமனிடம் பேச்சுக் கொடுத்தான். ’இன்னுமா கெடா இருக்குனு நம்புறீக’. சேதுராமன் ஏதும் சொல்லாமல அமைதியாக நின்று அவனையே பார்த்தான்.
அவனும் தன் பங்கிற்கு எல்லாத் தகவல்களையும் ஆட்டின் அங்க அடையாளங்களையும் விசாரித்தான். ’நான் அந்தத் தொழிலுக்கெல்லாம் போறதில்லை. நம்ம ஆளுவதே ஒரு கூட்டம் வழக்கமாப் போய் வரும். வேணும்னா நான் பேசிவுடுறேன் வாரீகளா?’ என்றான். ’பெருசா ஓன்னு வேண்டாம் ஆட்டை மீட்டுட்டா அங்க கொடுக்கிறதுல எனக்கு ஒரு கால் பங்கு கொடுங்க’ என்று கேட்டான். கருப்பையா ’முதல்ல கிடா இருக்கிற இடத்தக் காட்டுங்க அப்பறம் பாப்போம்’ என்றார். எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டது போல ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். “என்ன மாமா இப்படி அலையவிடுறானுகளே கிடாயைக் காட்டுவாங்களா” என்றான் சேதுராமன்.
“இந்தக் காட்டுல இந்தக் காலு ரெண்டும் பாக்காத இடம்னு ஒன்னு இருக்கா. இடையனாப் பொறந்தா ஆடு மாட்டுப் பின்னாடி அலையணும். இன்னைக்கி இந்தக் களவாணிப் பயலுவோ பின்னாடி அலையிறோம். ஆக மொத்தம் அலைஞ்சே சாக வேண்டியதுனே தலையெழுத்தை ஆண்டவன் எழுதிப்போட்டிருக்காம் போல’’ன்னு சொல்லி தன்னையறியாமல் சிரித்தார் கருப்பையா.
இருவரையும் அழைத்துக்கொண்டு ஒரு வீட்டுக்குப் போனான். அங்கே தலைமுடி எல்லாம் வெளுத்துப் போய் எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். வேறு யாரும் இல்லை. சேதுராமனுக்கு அதிர்ச்சியானது. இவரா ஆட்டைத் தூக்கியது என்று.
பெருசைப் பார்த்ததும் கீதாரி கருப்பையா முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு குதிகாலைக் கவனித்தார். பெருசு சட்டென்று ’என்ன கீதாரி வேற ஆளெல்லாம் இல்லை நாந்தான்’ என்றார். களவிலே பழுத்த பழம். ஒரு காலத்தில் தஞ்சை வட்டாரத்தில் களவில் பெயர் போன ஆள். எங்கோ ஒரு திருட்டில் குதிகால் நரம்பு வெட்டப்பட்டு முடமாக்கப்பட்ட ஆள். அதன் பின் வாரிசுகள் தலையெடுத்துக் களவுக்குப் போக இருந்த இடத்திலே இருந்து களவுக்குப் போக திட்டம் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். ’பொண்ணா ஆணா எதைத் தேடி வந்திருக்கீங்க. எது வேணும்?, எதுனாலும் ரெண்டு உருப்படிதான்’ என்றார். ’எதுக்குனாலும் ஐயாயிரம் பணம் கட்டிட்டு புடிச்சிட்டுப் போங்க’ என்றார் பெரியவர்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை கீதாரி கருப்பையா கால் சட்டைக்குள் இருந்த ஐயாயிரம் பணத்தை எண்ணி எடுத்து வைத்துவிட்டு ஒரு சினையாட்டையும் குட்டி போட்ட ஆட்டையும் கேட்டார். சேதுராமன் முகத்தில் ஈ ஆடவில்லை. பெரியவர் கண்ணசைக்க இரண்டு ஆடும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. கீதாரி ஆடுகளைப் பார்த்து ம்பை… பா… என்று அழைத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆடுகள் இரண்டும் எந்தப் பிடிமானமும் இல்லாமல் கீதாரி பின் நடந்தன. பெரியவர் இருந்த இடத்தில் இருந்து மற்ற ஆடுகள் கத்தும் சத்தம் காதில் விழுந்து கீதாரி நடக்க நடக்க அறுதலாக மறைந்தது. சேதுராமன் சொல்ல மொழியேதும் இல்லாமல் அமைதியாக அவர் பின் நடந்தான்.
000

வெற்றிச்செல்வன்
வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உடைகுளம் என்னும் சிற்றூர். தந்தை இராசேந்திரன், தாய் பூமயில், மனைவி பவித்ரா ஆவர். வெற்றிச்செல்வனின் இயற்பெயர் விஜயகாந்த்.
வெற்றிச்செல்வன் என்று தன் பெயரைப் புனைந்துள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் திட்டப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை மனிதச் சிறகுகள், கீதாரியின் உப்புக்கண்டம் என்ற இரு கவிதைத் தொகுப்புகளையும், குளம்படி என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். இதோடு தமிழ்நாட்டிலிருந்து மேய்ச்சல் நிலத்தை மைய்ப்படுத்தி வெளியாகும் “கிடை” காலாண்டு இதழின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளார்.