23-ஆம் நம்பர் அரசுப்பேருந்து நால்ரோடு நிறுத்தத்தை அடைந்தபோது உச்சிவெயில் கனிந்து மேல்கரைப்பட்டி செல்லும் சாலையில் இறங்கியிருந்தது. வேகத்தடையில் ஏறி இறங்கிய பேருந்தின் அதிர்வில் விழித்துக் கொண்ட துர்க்கைராஜ் நிதானமாகக் கீழே இறங்கினான். முகம் கழுவிக்கொண்டு பேக்கரியில் ஒரு டீக்குடித்தவன் பிறகு மெல்ல கிழக்குத் திசை நோக்கி நடக்கலானான். இருபுறமும் நிறைந்து விளைந்திருந்த வயல்களும் அதன் வரப்புகளில் அரணாக எழுந்து நிற்கும் உயர்ந்த பனை மரங்களும் அவனுக்குள் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தின. சாலையின் இடது புறமிருந்த ஒடிசலான மிக உயர்ந்த பனைமரம் ஒன்று காற்றின் போக்கில் தாராளமாக ஆடி அவனுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. முன்னும் பின்னும் அனிச்சையாகப் பார்த்துவிட்டு ஓட்டமாக ஓடி அம்மரத்தை கடந்துவிட்டான். அவனது மனக்கால்கள் பயணத்தின் பாதையில் பின்னோக்கி நடக்கத் தொடங்கின. அந்த எழுத்தாளனின் படைப்புகள் இவனின் மனதுக்குள் தோற்றுவித்த மயக்கத்தால் தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒன்றில்தான் அவரது பூரணத் திருவுரு இவனது பூளை பூத்து இடுங்கிய கண்களுக்குக் கிட்டியது. மஞ்சள் வெயில் மனிதர்களின் தேகமெங்கும் ஊடுருவித் தகதகத்துக் கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் மானூரில் பேருந்துக்காகக் காத்திருந்தான் துர்கைராஜ். பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் பச்சை வண்ணத்தில் 28 ஆம் நம்பர் எஸ்கேபிஎஸ் காளியம்மன் கோயிலருகே வருவதை உணர்ந்து எழுந்து, பேருந்து ஏறுவதற்குத் தயாராக நின்று கொண்டான். இடது கையில் பேருந்தின் கம்பியைப் பிடித்து ஏறிய துர்க்கைராஜின் வலது கையில் அந்த எழுத்தாளனின் ’பொண்ணடிகாரியம்’ கதை தொகுப்பு இருந்தது. இடப்புற வரிசையின் ஜன்னலோர சீட்டு ஒன்றில் அமர்ந்தவன் நிலவளிக் காட்சிகளில் மனம் லயித்து ஆழ்ந்து போனான்.

பஸ் பெரியாவுடையார் கோயில் வளைவைத் தாண்டியபோது ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பிப் பார்த்தான். கடைசி சீட்டின் மையப் பகுதியில் மடியில் ஒரு பையுடன் அமர்ந்திருந்தவரின் முகவெட்டு இவனைத் திடுக்கிடச் செய்தது. உடனே கையில் இருந்த பொண்ணடி காரியத்தின் பின்னட்டையைத் திருப்பிப் பார்த்தான்.

அவரே தான் அகன்ற விழிகளில் ரத்தமாய்ச் சிவப்பேறிக் கிடந்தது. முகத்தில் திட்டுத்திட்டாக தரித்திரம் படிந்திருப்பதாக இவனுக்கு தோன்றியது. இவன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவர் முறைக்க ஆரம்பித்தார். உடனே இவன் அச்சத்தில் முன்பக்கம் திரும்பிக் கொண்டான். பழனி பேருந்து நிலையத்திற்குள் பஸ் நுழைந்தது. துர்கைராஜ் வேகமாக முன்புறப் படிக்கட்டின் வழியாக இறங்கிக்கொண்டான். பேருந்தைச் சற்று முன்புறம் செலுத்தி பின்னகர்ந்து குமுதம் புக் சென்டர் வாசலின் முன்பு நிறுத்தினார் ஓட்டுநர் வீரமணி. சில வினாடிகள் தாமதித்த பிறகு மெல்ல பேருந்திலிருந்து கீழிறங்கினார் எழுத்தாளர். அவர் தரையில் கால் வைத்ததுதான் தாமதம் இவன் அவரிடம் ஓடிச் சென்று

“நீங்க எழுத்தாளர் மெய்யரசன் தானே சார்?” என்றான்.

சோபையற்று இறுகிப்போன முகத்தில் ஒரு வறண்ட புன்னகையை வரவழைக்க அவர் பெரிதும் சிரமப்பட்டார். பிறகு ஆமாம் என்று தலையசைத்தவரின் கைகளில் பொன்னடி காரியம் கதைத் தொகுப்பைக் கொடுத்து

“உங்களுடைய வாழ்த்தொப்பம் வேணும் சார்“ என்றான்.

மெல்ல புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தவரின் கண்கள்

முதல் பக்கத்தின் வலது ஓரத்தில் இவன் துர்க்கைராஜ் என்று எழுதி இருந்ததில் சில வினாடிகள் நிலைத்துத் தாழ்ந்தன. தனது சட்டைப் பையிலிருந்து கறுப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை எடுத்து ‘அன்புடன்’ என்று எழுதி அவரது கையொப்பத்தையிட்டார். பருவத்தின் முதல் மழைத்துளி ஒன்று புத்தகத்தின் மீது விழுந்து அட்சரத்தைக் கலங்கச் செய்தது. அந்த வறண்ட புன்னகையை மீண்டும் சிரமப்பட்டு வரவழைத்து இவன் கைகளில் புத்தகத்தை கொடுத்தார் எழுத்தாளர். மீதமிருந்த மணித்துளிகளில் இவன் அவரது படைப்புகளில் உள்வாங்கியவற்றையும், இவனது கலைமனத்தை ஈர்த்தவற்றையும் அடுக்கத் தொடங்கினான். இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவருக்கு இடையில் ஒரு போன் வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசியவர்

“வந்துட்டேன் தோழர் அதுக்குள்ள வாசகர் தம்பி ஒருத்தரு மானூர்க்காரு“

என்று இழுத்தார். மானூர் என்று கூறவும் எதிர்முனையில் இருந்தவர்

“துர்க்கைராஜா?” என்று கேட்டிருக்க வேண்டும்.லேசாக முகம் மலர்ந்து

“ஆமா“ என்று அவர் ஆமோதித்ததில் இருந்து யூகித்துக் கொண்டு இவன் அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“சரிங்க தோழர் நான் வந்திடுறேன்” என்று கூறி அழைப்பை அணைத்துவிட்டு இவன் பக்கம் திரும்பினார் எழுத்தாளர்.

“உங்களோட ‘எட்டுக்கல் பதிச்ச வீடு’ நாவல்ல வர்ற நேசன் கேரக்டர் எனக்கு ரொம்பப் புடிக்கும் சார். பியானோவ சுருதி சுத்தமா வாசிச்சுக்கிட்டே நாற்காலியில் சாஞ்சு அவரு அத அனுபவிக்கிறதும் ஜவஹர்லால் நேருவோடு டிஸ்கவரி ஆஃப் இந்தியா புக் படிக்கிறதும் மர்லின் மன்றோவோட அரை நிர்வாணப் படத்தை மறைமுகமாக அவர் ரசிக்கிறதும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் சார்“ என்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான் துர்க்கைராஜ்.

ஒரு புன்முறுவலுடன் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர். 

“முத்தாய்ப்பா அந்த நாவலோட அணிந்துரைல எழுதுறதுக்கான நியாயம் இருக்குன்னு தீர்மானமா தெரிஞ்சுக்கிட்ட பெறகு எழுதுறதத் தவிர வேறு எதுவும் மனசுல இல்லாமப் போயிடுதுன்னு நீங்க எழுதியிருந்த அந்த வாக்கியம் ஹைலைட் சார்“ என்று கூறி பேச்சை நிறுத்தி நாகரீகமாக மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திப் கொண்ட துர்க்கைராஜை இந்நெடிய வாக்கியத்தைப் பிசிறில்லாமல் ஞாபகமாக சொல்லிவிட்டதற்காக மிக ஆழமான ஒரு பார்வை பார்த்தார் எழுத்தாளர்.

கண்களுக்குக் கீழாகவும் ஓரங்களிலும் சுருங்கி இருந்த தசைகள் விரிந்து அவரது விழிகள் அகன்று இருந்தன. ஒரு வழியாக துர்கைராஜ் தன் மனதில் இருந்தவற்றைப் படபடவென ஒப்புவித்து முடித்ததும் உரையாடல் தரைதட்டியது. தூறிக் கொண்டிருந்த வானம் வலுத்து பிடிக்கும் போலிருக்கிறது. நெற்றியில் தாழ்ந்து படர்ந்திருக்கும் முன் சிகையில் வந்து விழுந்த மழைத்துளியைத் துடைத்தவாறே எழுத்தாளர் சொன்னார்.

 “சரிங்க தம்பி. உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு சாயந்தரம் புத்தகத் திருவிழாவுல நான் கலந்துக்குற ஒரு பங்க்ஷன் இருக்கு. அதுக்காக தான் பழனி வந்தேன். சாயந்தரம் நீங்க ஃப்ரீனா அங்க வாங்களேன். நாம சந்திப்போம்“ என்று  விடைபெற எத்தனித்த   எழுத்தாளருக்கு

“சரிங்க சார் ரொம்ப சந்தோஷம் சந்திப்போம்“ என்று முகம் பூரிக்க விடை கொடுத்தான் துர்க்கைராஜ். பெய்து கொண்டிருந்த மழையின் ஊடாக ஈரத் தார்ச்சாலையின் இடப்பக்கத்தில் திண்டுக்கல் ரோட்டில் குதூகலமாக நடக்கத் தொடங்கினான். மனதில் அதிசயம் எதனையோ அடைந்து விட்டதொரு நிறைவும் உற்சாகமும் மிகுந்திருந்தது.  தன் சுயத்தை குறித்த பெருமிதமும் இறுமாப்பும்கூட அடைந்திருந்தான் துர்க்கைராஜ்.

பங்களா ஸ்டாப்பில் ஒரு டீக்குடித்தவன் புத்தகத் திருவிழா நடைபெறும் சக்தி கல்யாண மண்டபத்தை வந்தடைந்தபோது மணிமாலை ஆறு ஆகியிருந்தது. பெரிய பதிப்பகங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் குறைந்தபட்ச நிறவைத் தரும் அளவிற்கு ஸ்டால்களைப் போட்டு அமர்ந்திருந்தார்கள் விற்பனையாளர்கள்.

வலப்புற வரிசையின் மையத்தில் இருந்த பாரதி புத்தகாலயம் ஸ்டாலுக்குள் நுழைந்த துர்க்கை ராஜ் ச.தமிழ்செல்வனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூலைக் கையில் எடுத்து கடைக்காரரிடம் விலை கேட்டான் கிளீன் சேவ் செய்து இறுக்கமான உடையில் சட்டையை இன்சர்ட் செய்து கொண்டு அருகில் நின்றிருந்த ஆசாமி துர்க்கைராஜைப் பார்த்துச் சிரித்தான் அவனை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் எரிச்சலுடன் கண்களை தாழ்த்திக் கொண்டான் துர்க்கைராஜ். தமிழ்ச்செல்வன் கதைகள் புத்தகத்திற்கு உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்ட

துர்க்கைராஜ் ஸ்டாலிலிருந்து வெளியேறினான். நிமிர்ந்து பார்த்தபோது இதுவரிசை கடை ஒன்றின் வாசலில் உள்ளூர் தோழர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார் எழுத்தாளர். அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்டில் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தபோதும் திரும்ப பார்க்கும் போது அந்த குண்டு முகமும் சிவந்த கண்களும் அச்சமூட்டுவதாகவே இருந்தன. வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கிறாரே சென்று பேசுவோமா இல்லை பிறகு பார்த்துக் கொள்வோமா என்கிற மனப்போராட்டத்தின் இறுதியில் இரண்டாவதைத் தேர்ந்து கொண்டு உள்ளே சென்று மீட்டிங் ஹாலில் அமர்ந்தான் துர்க்கைராஜ்.

வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. தலைமை மற்றும் முன்னிலை வகிப்போருடன் விழா மேடை ஏறினார் எழுத்தாளர் மெய்யரசன். மேடையில் அமர்ந்திருந்தபடியே வலப்புறத்தின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த துர்க்கைராஜைப் பார்த்து புன்னகை புரிந்தார் எழுத்தாளர். பதிலுக்கு இவனும் அவரை பார்த்து சிரித்து வைத்தான். என் கதைகள் என்கிற தலைப்பில் எழுத்தாளர் பேச தொடங்குகிற நேரம் வந்தது. தன் கதைகள் ஒவ்வொன்றும் கருக்கொள்ள தொடங்கிய தருணங்களின் மன அவசங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் தேச ஒருமைப்பாடு என்கிற புள்ளியை உரை வந்தடைந்த போது மகாத்மா காந்தியை குறித்து பேசத் தொடங்கி தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கொண்டவர் காந்தி என்று கூறினார்

முற்போக்கு எழுத்தாளர்கள் குழுமியிருந்த அந்த அவையில் வலதுசாரி சிந்தனையுள்ளவராக தமிழ் சூழலில் அறியப்படுபவரும் அடிக்கடி விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆட்படுபவருமான எழுத்தாளர் வெற்றிநுகர்வோன் அவர்களை தான் ஒரு ஆகச் சிறந்த கம்யூனிச எழுத்தாளராக கருதுவதாகவும் அந்த தர்க்கத்திற்கு மேற்கோளாக வெற்றிநுகர்வோனின் போல் ’’முன் செல்லும் இருளின் தடம்’ நாவலை மெய்யரசன் குறிப்பிட்ட போது சபை ஸ்தம்பித்து போய் இறுக்கமாகியிருந்தது. பிறகு பள்ளியில் தன்னுடன் படித்த நண்பன் நடராஜின் பெயரைக் குறிப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு

“அவனுண்டு அவனின் போஜனம் உண்டு என்று இருப்பான்“ என்று கூறி எழுத்தாளரே சூழலை இலகுவாக்கினார். இறுதியாக எழுத்தாளர் மிகவும் தணிந்த குரலில் ஆரம்பித்தார். நிகழ்வுக்கு வர்றதுக்காக நான் பஸ் ஸ்டாண்டுல நின்றிருந்தேன். அப்போ ஒரு இளைஞர் என் பக்கத்துல “வந்து சார் நீங்க தான் எழுத்தாளர் மெய்யரசனா?” என்று கேட்டார்.

“அது எப்படி இது எப்படின்னு கேள்வி மேல கேள்வி கேட்டு என்னையே யோசிக்க வச்சுட்டாப்ல. யாரோட மேற்கோள்னு தெரியல. ஆனா இந்தச் சூழல்ல அதச் சொன்னா பொருத்தமாக இருக்கும்னு தோணுது. எவனோ ஒருவன் வாசிப்பான் என்பதற்காகவே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த வாசகர் தம்பியும் இங்கதான் இருக்கார் அவர் மானூரைச் சேர்ந்த துர்க்கைராஜ்“ என்று எழுத்தாளர் கூறி முடிக்கவும் இன்ப அதிர்ச்சியில் உற்சாகமேலீட்டில் எழுந்து நின்று இருகரம் கூப்பி அவரை வணங்கி நின்றான் துர்கைராஜ்.

கண்மலர்ந்து புன்னகை பூத்து அவனை ஆமோதித்தார் எழுத்தாளர். கைதட்டல் ஓசையால் அரங்கம் அதிர்ந்தது. அவனை அறிந்திருந்த ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பாரதி புத்தகாலயத்தில் நக்கலாகப் பார்த்துச் சிரித்த இன்ஷர்ட் ஆசாமி இறுகிய முகத்துடன் துர்க்கைராஜைப் பார்த்துவிட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான். உண்மையில் துர்க்கைராஜூவுக்குமே கூட அக்கணத்தில் ஆணவம் துளிர்த்து விட்டதுதான். எவ்வளவு பெரிய எழுத்தாளர் இவ்வளவு பெரிய மேடையில் இத்தனை பேர் முன்னிலையில் தன் பெயரைக் குறிப்பிட்டு விட்டாரே என்று உள்ளம் பூரித்து நின்றான். அந்தச் சமயத்தில் அவனைப் பார்த்துச் சிரிக்க முனைந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரையும் கூட அவன் சக்திக்குப் புறக்கணித்தான். ஆரவார ஓசை அடங்கி நன்றியுரை கூறி முடித்ததும் விழா மேடையிலிருந்து இறங்கி வந்த எழுத்தாளரைச் சூழ்ந்து கொண்டு தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தயக்கத்துடன் அவரருகே சென்றவனின் கரங்களை ஆதுரத்துடன் பற்றிக் கொண்டவர் புன்னகை பூத்தார். “நீ போட்டோ எடுத்துக்கிட்டியா? “ என்றவரிடம் “இல்லை சார்“ என்று இவன் நெளியவும் அருகில் இழுத்து இவன் தோளில் கை போட்டுச் சிரித்தபடி போஸ் கொடுத்தார் எழுத்தாளர்.

பிறகு மீண்டும் இவனது கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டு பேசுவோம் என்று கூறி வழியனுப்பி வைத்தார். அன்றைய தினம் இரவில் ஒரு மனநிறைவுடன் புன்முறுவல் பூத்தபடியே உறங்கிப் போனான் துர்க்கைராஜ்.

அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அவருடன் அலைபேசியில் உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். பெரிதாக நண்பர்களும் முதிர்ச்சியும் இல்லாத துர்க்கைராஜின் அப்பாவித்தனமும் வேடிக்கையும் மிகுந்த உரையாடலை அவர் ரசிக்கவும் செய்தார். அதுவரை நா.பார்த்தசாரதியின் சமுதாய வீதி நாவலும் இன்னபிற ஒழுக்க இலக்கியங்களையும் மட்டுமே வாசித்திருந்தவனுக்கு மெய்யரசன் தன் புனைவிற்குள் சிருஷ்டித்துக் காட்டிய மனித கீழ்மைகளும் உணர்வுத் தழும்பல்களும் புதுமையாகவும் குறுகுறுப்பூட்டக் கூடியனவாகவும் இருந்தன. சமூகம் கட்டமைத்து வந்திருக்கிற பூடகமான உணர்வுத் தளங்களின் மீதான அவரின் பகிரங்கமான கட்டுடைப்பை எழுத்தில் உணர்ந்ததால் இலக்கியம் தாண்டி பதின் பருவக் குறும்புகள் கொப்பளிக்க அவரிடம் உரையாடத் தொடங்கினான் துர்க்கைராஜ். அதன் விளைவாக எழுத்தாளரின் மனதில் தன்னைப் பற்றிய பிம்பம் எத்தகையதொரு வடிவம் பெறும் என்பதை குறித்த எச்சரிக்கை உணர்வு அவனிடம் இல்லை. சிறுபையனைப் போல வளவளவெனப் பேசி தள்ளினான். அவன் பேசுவதை எல்லாம் மறுப்பேதும் இல்லாமல் அமைதியாகக் கேட்கிறவராக எழுத்தாளர் இருந்தார். அன்றைக்கு ஒரு நாள் அப்படித்தான் ஈஸ்வரி அக்கா ஆற்றிலிருந்து துவைத்துக் குளித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது அவரது பின்பக்கத்தில் தோன்றிய ஈர நெளிவுகள் தன்னைக் கிளர்ச்சியூட்டியதைக் குறித்து எழுத்தாளரிடம் கூறினான். அதற்கு எழுத்தாளர் கண்டிப்போ மறுப்போ ஏதும் இல்லாதவராக முன் கொட்டிக் கடந்தார். இதுபோன்ற சமாச்சாரங்களைத் தன் எழுத்தில் ஒளிவு மறைின்றி முன்வைக்கிறவர் தானே அப்படியொன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்கிற குருட்டுத் தைரியத்தில் பெண்ணுடல் மீதான தன் ஏக்கங்களை அளவு கடந்து அவரிடம் பேசிக் கொண்டேயிருந்தான் துர்கைராஜ். தொடர்ச்சியான இத்தகைய ஈர உரையாடல்களின் வழியாக எழுத்தாளரின் மனத்தில் துர்க்கைராஜைக் குறித்து உருவாகியிருந்த சித்திரத்தை அவன் அப்பொழுது உணரவில்லை.

ஒருநாள் மறைந்த எழுத்தாளர் உலகன்பன் குறித்த இரங்கல் கட்டுரையை மாத இதழ் ஒன்றில் ‘உலகன்பன் என்கிற தனித்துவம்’ என்கிற தலைப்பில் எழுதி இருந்தார் எழுத்தாளர் மெய்யரசன். உலகன்பனின் எழுத்தாளுமை, இலக்கியப் பங்களிப்பு இவற்றுடன் அவ்வபோது தான் சந்திக்கிற இலக்கியக் கூட்டங்களில் தன் சட்டைப் பையில் செலவுக்குப் பணம் திணிப்பார் என்றும் நன்றி மறவாதவராகவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் மெய்யரசன். இக்கட்டுரை குறித்து உரையாட விரும்பி அலைபேசியில் எழுத்தாளரை அழைத்தான் துர்க்கைராஜ். “சொல்லுங்க துர்க்கைராஜ் நலமா?“ என்றார் எதிர்முனையில் எழுத்தாளர்.

“நல்லாருக்கேன் சார் உலகன்பன் பத்தி நீங்க எழுதுன கட்டுரை வாசிச்சேன் சார் ரொம்ப நல்லா வந்திருக்கு அந்த தலைப்புல இருக்குற      தனித்துவம்-ங்குற வார்த்தையை ஏன் சார் எழுதினீங்க?“ என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்டான் துர்கைராஜ். சட்டென எழுத்தாளரின் குரலில் உஷ்ணம் தெறித்தது. “ஏன் நான் எழுத கூடாதா? “என்ற அவரது குரலின் கனத்தை எதிர்பாராத துர்கைராஜ் சட்டென குரல்வளைக்கு கம்ம ஒடுங்கிப் போனான். எதிர்முனையின் மௌனத்தைக் கிழித்தபடி எழுத்தாளரிடமிருந்து வார்த்தைகள் வந்தன. “பார்த்தீர்களா? நான் கொஞ்சம் உரத்த குரல் எடுத்ததும் நீங்க அமைதியாயிட்டீங்க? அப்படி இருக்கக்கூடாது…“ இதனை அவர் கொஞ்சம் தணிந்த குரலில் தான் சொன்னார் என்றாலும் குரலில் இன்னும் அந்த முந்தைய வாக்கியத்தின் உஷ்ணம் எஞ்சி இருந்தது.

ஒரு வழியாகத் தன்னைக் கொஞ்சம் சமாளித்துக் கொண்டு மேலும் ஆர்வம் மட்டுப்படாதவனாக “எழுத்தாளர் உலகன்பன் தனா பாண்டித்துரையின் நான்கு சிறுகதைகளை எடுத்துத் தமிழ்க் கதைகள் என்று உலக இலக்கியத்திற்கு தரலாம் என்கிறார் இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?“ என்றான் துர்க்கைராஜ். “உங்களுக்குத் தெரியுமா? உலகன்பன் தனா பாண்டித்துரை வீட்டுல போய் உட்கார்ந்துட்டு பிரியாணி தின்னுட்டுப் பேசுவான்“ என்றார் மெய்யரசன். மறுபடியும் அதிர்ந்தான் துர்க்கைராஜ். அந்த மாத இதழில் அவரைக் குறித்து எழுதியிருந்த கட்டுரையில் ’’ஆகா ஓகோ’ என்று புகழ்ந்திருந்தாரே? செலவுக்குப் பணம் தந்ததாகக் கூட குறிப்பிட்டிருந்தாரே? இத்தனை வயது பெரிய ஒரு மூத்த எழுத்தாளரை இப்படி ஒருமையில் மரியாதை இன்றி அவன் இவன் என்று பேசுகிறாரே என்கிற குழப்பம் கலந்த அச்சத்தில் “நான் அப்புறம் பேசுறேன் சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் துர்க்கைராஜ்.

ஒரு சக எழுத்தாளரைப் பாராட்டும் மூத்த எழுத்தாளரின் சொற்களைப் பொறுக்க முடியாமல் ஏக வசனத்தில் இப்படிப் பொரிந்து தள்ளிவிட்ட எழுத்தாளர் மெய்யரசன் மீது கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனால் வெறுப்பு எதுவும் இல்லை. தொடர்ந்து அவருடன் உரையாடவே பிரியப்பட்டான் துர்க்கைராஜ். அந்தக் காலகட்டத்தில் பிரபல வார இதழ் நடத்திய ’மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில்’ துர்க்கைராஜ் பெற்றுக் கொண்டிருந்த பயிற்சியின் ஆறு மாத காலம் நிறைவுற்றதன் அடையாளமாக மறு சந்திப்பின் நிமித்தம் திருச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தான். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் பக்கம் என்பதால் எழுத்தாளர் மெய்யரசனைச் சந்திக்க வருவதாகத் தகவல் தெரிவித்திருந்தான். ஊக்கப் பயிற்சி முடித்த மாலை திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சென்றான் துர்க்கைராஜ்.

பிறகு அங்கிருந்து வல்லம் போய் எழுத்தாளரின் வீடிருக்கும் ரெட்டிபாளையம் சாலை ஈஸ்வரி நகர் போய்ச் சேர்ந்தான். பேருந்திலிருந்து இறங்கி எழுத்தாளரை அலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வழி கேட்டதற்கு ’உருமநாதன் மளிகை கடைக்கு எதிர்ப்புறம் இருக்கும் வீட்டின் மேல் போர்ஷன்’ என்று கூறினார். நடந்தே வந்து உருமநாதன் மளிகையை அடைந்தவன் “துர்கைராஜ்“ என்ற குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்ப மாடியில் அரக்கைச் சட்டையும் கைலி வேட்டியும் அணிந்தபடி நின்றிருந்த எழுத்தாளர் கைகாட்டி புன்னகைத்தார். சாலையைக் கடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படியைக் கண்டறிந்து மேலேறினான்.

அந்த மாடி வீட்டின் வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்த எழுத்தாளர் மூச்சிரைக்கப் படியேறி வந்த துர்க்கைராஜை சிரித்தடி வரவேற்றார். “நல்லா இருக்கீங்களா சார்?“ என்றபடி அவருக்கு முன்பு கிடந்த பிளாஸ்டிக் சேரில் சென்று அமர்ந்தவனின் சீர்மையற்ற சுவாசத்தைப் புன்னகை மாறாமல் ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் எழுத்தாளர். உள்ளிருந்து வந்த அவரது மனைவி மகேஸ்வரியிடம் “இந்தப் பையன் என்னோட வாசகர் பேர் துர்க்கைராஜ்“ என்று எழுத்தாளர் அறிமுகப்படுத்த அந்த அம்மையார் சிரிக்காமல் வெறுமனே மெல்ல தலையசைத்து வரவேற்றார். ஒரு துயர ஓவியத்தின் வெளிப்புற கோடுகளைப் போன்ற மெல்லிய துக்கத்தின் சாயை அந்த அவரின் கண்களில் தெறித்தது. அந்த அம்மையாரின் முகத்தில் தேங்கிய துர்க்கைராஜின் கண்களை நுட்பமாக கவனித்தார் எழுத்தாளர். ஒரு டம்ளரில் சூடு குறைந்த காபியும், சில்வர் தட்டில் ஐந்து மசால்வடைகளையும் உள்ளிருந்து எழுத்தாளரின் மனைவி கொணர்ந்து தந்தார். ஒவ்வொரு வடையாக எடுத்துச் சாப்பிட்டபடியே காபியைக் குடித்து முடித்த துர்க்கைராஜ் “ஏன் சார்? இது மசால் வடையா?“என்று எழுத்தாளிடம் கேட்டான்.

“ஏங்க நாலு வடை சாப்ட்டுட்டு இது மசால் வடையான்னு கேட்டா என்ன அர்த்தம்? “என்று முகத்தில் சிரிப்புக் குறி இல்லாமல் நகைச்சுவைக்கான கூறுமிகுந்த இந்த் கேள்வியைக் கேட்டதும் துர்க்கைராஜூவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவரது சிறுகதை ஒன்றில் வரும் இவனுக்குப் பிடித்தமான ஒரு காட்சியைப் பற்றிச் சிலாகித்துப் பேசி சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினான். இவன் கையோடு எடுத்து போயிருந்த எழுத்தாளரது ’நாளை தண்டனை உண்டு’ மற்றும் ஃபாசிஸ்ட் ’என்கிற இரண்டு புத்தகங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டான். ஏறத்தாழ இண்டரை மணி நேர உரையாடலுக்குப் பின் சொற்கள் எதுவமற்று மௌனமாக அமர்ந்திருந்த பொழுது

“அப்ப நான் கிளம்புறேன் சார்“ என்றபடி நாற்காலியிலிருந்து மேலெழுந்தான் துர்க்கைராஜ். “சரி பார்த்து போயிட்டு வாங்க“ என்ற எழுத்தாளரும் மேலெழுந்ததும் உள்ளிருந்து வெளியே வந்த எழுத்தாளரின் மனைவி “ஏன் தம்பி அதுக்குள்ள கிளம்பிட்டீங்க டிபன் சாப்பிட்டு போலாமே?“ என்றார். “இல்ல மேடம் பரவாயில்ல“ என்றான். பிறகு கடைசியாக வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த ஒல்லியான பையனிடம் துர்க்கைராஜை சுட்டிக்காட்டி “டேய் இவன் எங்க ஊருடா“ என்றார் எழுத்தாளர். இவன் வயதே இருந்த அந்தப் பையன் தாழ்ந்திருந்த மூக்குக் கண்ணாடியை கைவிரல்களால் மேலே ஏற்றி விட்டபடியே இவனைப் பார்த்து சிரித்தான். இவனும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டான். துர்க்கைராஜின் படிப்பு தொடர்பான விஷயங்களை கேட்டறிந்த எழுத்தாளரின் மனைவி “ஓ அப்படியா? எங்க பாபி செட்டா நீங்க?“ என்றார் “ஆம்“ என்று தலை அசைத்தான் துர்க்கைராஜ்.          பவா செல்லத்துரையின் ’எல்லா நாளும் கார்த்திகை’ ச.தமிழ்செல்வனின் ‘அரசியல் எனக்குப்பிடிக்கும், ஹெச் ஜி. ரசூலின் ’தலித் முஸ்லீம்’ போன்ற புத்தகங்களைச் சந்திப்பின் அடையாளமாக இருக்கட்டும் என இவன் கைகளில் கொடுத்தார் எழுத்தாளர்.

“புத்தகம் வைக்க பை வேணுமா தம்பி? “

என்று கேட்டு நெருக்கமான பின்னல்களுடன் அமைந்த அழகிய வண்ண சணல் பை ஒன்றைத் துர்க்கைராஜூவின் கைகளில் கொடுத்தார் எழுத்தாளர் மனைவி. நன்றி கூறி வாங்கிக் கொண்டான்.

“என்ன நல்ல பேக்க அவர்ட்ட குடுத்துட்ட?“ என்று கேட்ட எழுத்தாளருக்கு அவர் மனைவி பதில் ஏதும் சொல்லவில்லை .சிரிப்பார்கள் என்று நினைத்து

“எனக்கு தான் அமைஞ்சிருக்கு“

என்று குழைவான குரலில் குழந்தையைப் போலச் சொன்ன துர்க்கைராஜ் ஏமாந்து தான் போனான். எழுத்தாளரும் அவரது மனைவியும் இறுகிய முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றார்கள். “சரிங்க மேடம் நான் கிளம்புறேன்“ என்று சொல்லி விடைபெற்ற துர்க்கைராஜுவிடம் “வாங்க நானும் பஸ் ஸ்டாப் வர வரேன்“  என்று கூறி எழுத்தாளரும் வழியனுப்ப உடன் வந்தார். நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது தலையில் வெண்ணிறக் குல்லா அணிந்த இஸ்லாமியர் ஒருவர் அந்த வழியாக வந்தார். தூரத்திலேயே அவரைப் பார்த்துவிட்ட எழுத்தாளர் ஒருவித உவமையுடன்  “ஆஹ்ஹ்…“ என்றபடி எதிர்த்திசையில் திரும்பிக் கொண்டார். வந்தவர் அவர்களைக் கடந்து சென்று திரும்பி எழுத்தாளரைப் பார்த்துக் கைகாண்பித்து “வரேன் என்றார்.

அவரைத் தவிர்க்க நினைத்த எழுத்தாளர் குற்றவுணர்ச்சியில் சிரித்தபடியே “ம்ம்… சேரி சேரி“ என்று அந்த இஸ்லாமியருக்குக் கையசைத்தார். இன்னும் பேருந்து வராமலிருந்தது. நீடித்த மவுனத்தில் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக “ஏன் சார் உங்க கூட பெறந்தவங்க எத்தனை பேர்?“ என்றான் துர்க்கைராஜ். “ஒரு தம்பி ஒரு தங்கச்சி. தம்பி தாராபுரத்துல செருப்புக் கடை வச்சிருக்கான் சிஸ்டர் ஊர்ல தான் இருக்காங்க அம்மாவுக்கு பார்வை போயிடுச்சு படுக்கையாயிட்டாங்க தங்கச்சி தான் பார்த்துக்கிறாங்க“  என்றார் எழுத்தாளர். எதார்த்தமாக துர்க்கைராஜ் “தங்கச்சி என்ன பண்றாங்க சார்?“ என்றதும் எழுத்தாளரின் முகத்தில் ஒருவித வெறுப்பு படர “அவங்க விடோயருங்க“ என்றார்.  “அவங்க பேரு ரேகாவா சார்?“ என்ற துர்க்கைராஜை ஆச்சரியமும் திகைப்புமாகப் பார்த்தபடி “எப்படி தெரியும்?“ என்றவரின் முகம் கடுகடுப்பாகி இருந்தது

“ஒருநாள் காலேஜ் போயிட்டு பழனியிலருந்து பஸ்ல வந்துட்டுருந்தேன் சார். அப்போ ஒரு அக்கா கடைக்குச் சாமன் வாங்கிட்டு எனக்குப் பக்கத்து சீட்லதான் உட்கார்ந்து வந்தாங்க. அவங்க கீரனூர்னு சொன்னதும் உங்க போட்டோ காட்டி இவரைத் தெரியுமான்னு கேட்டேன் முதல்ல கொழப்பமா பார்த்தவங்க அதுக்கப்புறம் தெரியுது தம்பி. இது ரேகா அவங்க அண்ணே இவருக்குத் தம்பி ஒருத்தரு மொதல்ல செருப்புக் கடை வச்சிருந்தாரு இப்போ அதூம் போச்சுனு சொன்னாங்க“ என்று கூறினான். சிடுசிடுத்துப் போயிருந்த எழுத்தாளரின் முகம் துர்க்கைராஜின் விளக்கத்தைக் கேட்டுக் கொஞ்சம் தணிந்தது போல் இருந்தது.

குடியால் கைவிட்டுப் போன தம்பியின் செருப்புக் கடை குறித்துக் கூறியது அவரை விரக்தியில் ஆழ்த்தியிருக்கும் என்று யோகித்தான் துர்க்கைராஜ்.  ஒரு வழியாக வல்லம் செல்லும் டவுன் பஸ் ஈஸ்வரி நகர் நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது. “சரிங்க துர்க்கை பார்த்துப் போயிட்டு வாங்க பார்ப்போம்” என்று கூறி தன் வாசகனுக்கு விடை கொடுத்தார் எழுத்தாளர். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பிறகு திருச்சி வந்த துர்க்கைராஜுவை போனில் அழைத்தார் எழுத்தாளர். லேசாக அவர் தொண்டை நனைந்திருப்பதை நாக்குழறிய அவரது குரலில் இருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. “எதுவும் நினைச்சுக்காதீங்க துர்க்கைராஜ் அடுத்த தடவை நீங்க வரும்போது பீப் பிரியாணி போட்டுருவோம்“ என்றார் எழுத்தாளர். “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் பரவால்ல“ என்றான். எழுத்தாளர் பிரியாணியை ஞாபகப்படுத்தி விட திருச்சி பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த தள்ளுவண்டிக் கடையில் டோக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பழனிக்கு பேருந்து ஏறினான்.

பேருந்து குலுக்களில் உறக்கம் களைந்து விழிக்கும் போதெல்லாம் அவனுக்கு நினைவுக்கு வந்தது “அடுத்த தடவை நீங்க வரும்போது பீப் பிரியாணி போட்டுருவோம்“ நள்ளிரவில் பழனி வந்து சேர்ந்த துர்க்கைராஜ். A ONE பேக்கரியில் ஆறேழு டீக்குடித்து விட்டு அமர்ந்திருந்தான். மனித இரைச்சலற்று இரவின் நிசப்தத்தில்ஆழ்ந்திருக்கும் பேருந்து நிலையத்தை பார்க்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் கனவுகளில் ஒன்று. இன்று நிறைவேறி இருக்கிறது. இதற்காகவே ஜின்னா கடையில் தோசை வாங்கி வைத்துக்கொண்டு அவனுக்காக ஆயக்குடி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அவனது தாய் மாமனின் அழைப்பைக் கூடத் தவிர்த்துவிட்டு இந்தக் கொட்டும் பணியில் கொசுக்கடிப் பேருந்து நிலையத்தில் வந்து திருதிருவென விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு டீக்கடையில் அரைத்தூக்கத்தில் கிடந்த மாஸ்டர்கள் வந்து நிற்கும் பேருந்துகளிலிருந்து இறங்கும் சொற்ப நபர்களுக்காக தூக்க வெறியில் சங்கடத்துடன் எழுந்து சட்டியில் இருந்து பாலை கண்ணாடி டம்ளருக்குள் சேமாறிக் கொண்டிருந்தார்கள். கொய்யா, மாம்பழம் மற்றும் திராட்சை பழங்கள் விற்கும் பெண்கள் கூடையை நூல் சேலையால் வண்டுகட்டிப் பாதுகாப்பாக வைத்து விட்டு ரேஷன் சேலையை இறுக்க போர்த்தி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தனர். கூத்துக்கலைஞர் ஒருவரை நினைவுபடுத்தும் சாயலில் தாடையில் குழியும் எம்பிப் பருத்திருக்கும் கன்னக்கதுப்பும் கொண்ட திருநங்கையை போதையில் டிரைவர் ஒருவன் சரவணபவன் மூத்திரச்சந்துக்குள் அழைத்துப் போய்க் கொண்டிருந்தான்.

நெய்க்காரப்பட்டி செல்லும் பேருந்துகள் வந்து நிற்கும் ரேக்கின் அருகே கருத்து மெலிந்த முகத்தில் பவுடரப்பிக் கொண்டிருந்த ஒரு வேசி இவனை கண்டதும் உதட்டை நனைத்து புருவத்தை உயர்த்தினாள். அந்தப் புது அனுபவம் மனதுக்குள் நடுக்கத்தை அளித்ததால் திரும்பவும் பேக்கரி பக்கமாக ஓடி வந்து விட்டான். பிறகு விடியும் வரை அந்த பேக்கரியிலேயே அமர்ந்து இன்னும் இரண்டு டீ குடித்துவிட்டு ஐந்தரை மணி முதல் பஸ்ஸான 23 – இல் ஏறி மானூர் வந்து சேர்ந்தான். பிறகு ஒரு வாரத்தில் கல்லூரியில் செய்முறை தேர்வுகள் இருந்ததால் பதிவேடுகள் எழுதும் பணியில் கவனம் செலுத்த தொடங்கினான். பத்திரிக்கை நிறுவனத்திலிருந்து துர்கைராஜூவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் முருகன் சார் தான் பேசினார்.

“துர்க்கைராஜ் நீங்க எழுத்தாளர் மெய்யரசன் ஊருக்குப் பக்கத்து ஊர்ல தானே இருக்கீங்க?“ என்றார். உணர்ச்சி மேலீட்டால்

“ஆமாம் சார் “என்றான் இவன்.

“அடுத்த மாசம் வரப்போற வடம் இதழுக்கு எழுத்தாளர் மெய்யரசனோட படைப்புகள், அவரைச் சந்திச்ச நிகழ்வு, அப்பறம் அவரோட படைப்புகளுக்கான மூலமா இருக்குற மனிதர்கள் மற்றும் இடங்களைப் பத்தி நீங்க ஒரு கட்டுரை எழுத முடியுமா? “என்று கேட்டார்.

மகிழ்வும் உற்சாகமும் பொங்க “நிச்சயமா எழுதுறேன் சார்“ என்று உறுதி அளித்தான் துர்க்கைராஜ். உடனடியாக செய்தியைப் பகிர எழுத்தாளர்  மெய்யரசனுக்கு அழைக்க அவர் எடுக்கவில்லை. முகநூலில் பார்த்த போது “தைரியம் இருந்தால் மாற்று மதத்தினருக்கு வீடு இல்லைனு வாசல்ல எழுதி போடுங்கடா பார்க்கலாம்“ என்று ஒரு பதிவை மிகுந்த ஆக்ரோஷத்துடன் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் எழுதியிருந்தார். “மிக அவசரம். நாளை மறுநாளுக்குள் கட்டுரையைக் கொடுங்கள்“ என்று முருகன் சார் இவனை அவசரப்படுத்தியிருந்தது நினைவில் உறுத்தியது. இருந்தாலும் இந்நிலையில் திரும்பவும் எழுத்தாளர் மெய்யரசனுக்கு போன் அடிப்பது காதை புண்ணாக்கிக் கொள்ளும் வேலை. எனவே, சென்று வந்தபின் கூறிக் கொள்ளலாம் என்று எண்ணியபடியே கீரனூர் கிளம்பி விட்டான் துர்கைராஜ்.

இப்பொழுது துர்க்கைராஜ் நால்ரோட்டிலிருந்து கீரனூருக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறான். சண்முக நதி ஆற்றுப்பாலத்திற்கு சமீபமாக அவன் வந்த போது தான் தென்புறம் அப்பங்கெசம் செல்லும் பாதையில் இருந்து வந்த நபர் ஆறேழு உரித்த தேங்காய்களை ஒரு தென்னம்பாளை நாரில் முடிந்து கைகளில் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் சென்று“ அய்யா இங்க எழுத்தாளர் மெய்யரசன் வீடு எங்க இருக்கு?“ என்று கேட்டான். அதற்கு அவர்  “சாமீ… நான் தோப்பாளு தானுங்க வேலை முடிஞ்சது. அதே நாலு காயக் கொழம்புக்குக் கட்டிட்டு வாரணுங்க. நீங்க என்னோடவே வாங்க நான் உங்குளுக்கு நம்ம தெருவுக்குப் போற தடுத்தக் காட்டுறன்“ என்றவர் தன்னை எழுத்தாளர் மெய்யரசனின் சாதிக்காரர் எனப் புரிந்து கொண்டார் என்பதை உணர்ந்து கொண்டான் துர்க்கைராஜ். குத்பா பள்ளி, வேலூர் பிரியும் மண்சாலை, குளத்திற்குச் செல்லும் குறுக்கு வழிக்கரை, குருகுலம் எல்லாம் தாண்டி அவருடன் நடந்து கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்திற்குச் சற்று முன்பான ஒரு மேட்டில் இருந்து தென்புறத் திசையில் ஒரு பகுதியைக் காட்டி

“சாமீ… அதுதானுங்க நம்ம தெருவுக்கு போற தடம் “

என்று கூறியவருக்கு நன்றி சொல்ல துர்க்கைராஜை இருகரம் கூப்பி வணங்கி விடைபெற்றுச் சென்றார் அந்த தோப்பாள். சிறிது தூரம் சென்ற துர்க்கைராஜ் ஒரு அரச மரத்தடியில் நின்ற போது இந்த தெரு தான் தோப்பாள் சொன்ன அடையாளத்திற்கான தொடக்கம் என்பதை உணர்ந்தான். அரச மரத்தடிப் பிள்ளையார் கோயில் திண்டைப் பார்த்ததும் இவனுக்கு மெய்யரசனின் ’அழித்துப் பூசிய அரிதாரம்’ சிறுகதையில் வரும் கூடலிங்கம் நினைவுக்கு வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் தன் கதைகளில் அடிக்கடி இடம்பெறும் பாத்திரமும் தனது நண்பனுமான கூடலிங்கம் காசநோயால் மரித்துப்போன செய்தியை எழுத்தாளர் மெய்யரசன் முகநூலில் பகிர்ந்திருந்தது அவனது நினைவில் இடறிற்று. மெல்ல அவ்விடத்திலிருந்து நகர்ந்து மெய்யரசனின் முதல் நாவலின் கதைக்களமான ’தேன் காரர் தெருவிற்குள்’ நுழைந்தான் துர்க்கைராஜ். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தேன்ராட்டை உலர்த்தப்பட்டுக் கிடந்தன. புழுதி முகத்திலப்ப மேல் சட்டை இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள். ஒரு வீட்டு வாசலில் குழுவாக அமர்ந்திருந்த பெண்களிடம் சென்று கேட்டான் துர்கைராஜ்.

“அக்கா இங்க எழுத்தாளர் மெய்யரசன் வீடு எங்க இருக்கு? “

அவரது பெயரைச் சொல்லவும் எந்தப் பெண்ணுக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. அதுதான் அவரது இயற்பெயர் என்பதும் அவ்வூரில்தான் தன் 20 வயது வரை வளர்ந்தார் என்பதுவும் துர்க்கைராஜூவுக்கு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இனி வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த துர்க்கைராஜ் “அக்கா அவரோட தங்கச்சி பேரு ரேகா அவங்க வீடு தான் எங்க இருக்குன்னு தெரியணும்“ என்றான்.

“அந்த ரேகாவா இருக்குமா? இந்த ரேகாவா இருக்குமா?”

என்று தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த பெண்களைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த துர்க்கைராஜூவுக்கு

ஒரு பெண் குரல் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. 

“ஏன்கா பொன்னம்மா பேத்தியா இருக்குமோ? “

என்பது தான் அது. அலைபேசி உரையாடலில் ஒருமுறை எழுத்தாளர் தனது பாட்டியின் பெயர் பொன்னம்மா என்று அவனிடம் கூறியது துர்க்கைராஜூவுக்கு நினைவுக்கு வந்தது.

“அக்கா சூப்பர் வெரி குட்“

அதேதான் என்று உற்சாகமாக துர்க்கைராஜ் சொன்னதும் முகவரியை கண்டறிந்து சொன்ன பெண்ணுக்குச் சிரிப்புடன் வெட்கம் பிடுங்கித் தின்றது. வீட்டிற்கான வழியை கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன். சாவடியை வந்தடைந்ததும் ஜனரஞ்சகமாக மக்கள் குழுமியிருந்தார்கள். இடப்புறத்தில் ஒரு டீக்கடையும் அதற்கு எதிராக ஒரு அயனிங் கடையும் இருந்தன. சாவடியை ஒட்டி இருந்த சந்திலிருந்து வந்த ஒரு உயரமான பெரியவரின் முன் சென்று

“பாவா தர்மம் பண்ணுங்க பாவா“

என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகம் சோர்ந்து உடலும் ஆடைகளும் அழகேறி கிடந்தன. அவர் பத்து ரூபாய் தரவும் பெற்றுக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அவரை கைகூப்பி வணங்கி அங்கிருந்து விடை பெற்று சென்றார். அந்த காட்சியைப் பார்த்த துர்க்கைராஜூவுக்கு மெய்யரசனின் தேன்காரத்தெரு நாவலில் வரும் ’முத்தக்கா’ பாத்திரமும் பொன்னேரி வள்ளியம்மா நாவலில் வரும் நேந்திரம் சிப்ஸ் அள்ளி வீசி “என்டெ பொண்ணுமக்களா சுகந்தன்னே? பின்னெந்தெல்லாம் விசேஷங்கள்? “என்று தன் முதல் சம்பாஷணையை நாய்களிடம் துவங்கும் மலையாளப் பாத்திரம் ஒன்றும் நினைவுக்கு வந்தது. சாம்பான்மடம், முக்கு முருங்கை எல்லாம் கடந்து பள்ளிவாசல் அருகே சென்ற துர்க்கைரஜூவின் மனம் தழும்பு தொடங்கியது.

’கலைஞன்னா பொறுப்புணர்ச்சி வேணுமப்பா’

என்ற ஒரு சிறுகதையில் இந்த பள்ளிவாசலின் புனிதக்குளத்து நீரில் நீந்து மீன்களைக் குறித்து எழுதியிருப்பார். பள்ளியின் உள்ளே சென்று குளத்தைப் பார்க்க விரும்பியவன் மக்ரீஃப் தொழுதுவிட்டு வெளியே வந்த இறுக்கமான முசல்மான்களின் முகம் கண்டு தயங்கிப் பின் வேண்டாம் என்று நகர்ந்து விட்டான். பள்ளிவாசலுக்கு நேரே மேற்கே செல்லும் வீதியில் சூரிய அஸ்தமனத்தின் பொன்மஞ்சள் நிறத்தை முகத்தில் ஏந்தியபடி நடந்து கொண்டிருந்தான். உடல் சிலிர்த்தது. ஒரு இலக்கியப் படைப்பு கருக்கொண்ட நிலத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பு அவனை தன்னிலை மறைந்த மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் கால்கள் வந்து நின்ற இடம் மாரியம்மன் கோயில். அதற்கு பின்புறம் தான் குளத்துப் பள்ளிக்கூடமும் ‘எட்டுக்கல் பதிச்ச வீடு’ நாவலில் வரும் குளமும் இருக்கிறது. மாரியம்மன் கோவில் முன்பு நின்று நாயம் பேசிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆண்களிடம்

“எழுத்தாளர் மெய்யரசன் வீடு? “

எது என்று கேட்டான் துர்க்கைராஜ். சிலர் தெரியாதது போல் விழித்தும் தங்களுக்குள்ளும் பேசிக் கொண்டனர். ஒருவர் மட்டும் நெஞ்சை புடைத்துக் கொண்டு துர்க்கைராஜூவின் அருகே வந்து “யாரு மெய்யரசனா? இப்ப மெய்யரசன் இங்க இல்ல“ என்றார். “தெரியும் நான் அவரோட வீட்ட பார்க்கத் தான் வந்தேன்“ என்று அவருக்கு பதில் அளித்தான் துர்க்கைராஜ்.

அந்த நெஞ்சை புடைத்துக் கொண்டு வந்தவரின் தைரியம் மெய்யரசனின் ’மான்குகைவாசிகள்’ நாவலில் வரும் நயினாரை நினைவுபடுத்தியது.

இவர்தான் அந்த நயினாரோ? என்று ஒரு கணம் துர்க்கைராஜின் மனம் துணுக்குறவும் செய்தது. ஒரு வழியாக மெய்யரசனின் வீட்டுக்கு வழியைத் தெரிந்து கொண்டு சென்று குளத்தின் தெற்கு விளிம்பை அடைந்தான் துர்க்கைராஜ். ஒரு வீட்டு வாசலில் பின் கொசுவம் வைத்துச் சேலை கட்டி நின்றிருந்த பெரியம்மாவிடம் கேட்டான்.

“அம்மா இங்கே ரேகா அக்கா வீடு எது? “ என்று.

“அதான் அந்த எதிர்த்த வீடு தான்பா “

என்று அந்த அம்மையார் காட்டிய வீட்டு வாசலில் மரக்கதவு பலகையின் தொண்டியில் சைக்கிள் செயின் பிணைக்கப்பட்டு உட்புறம் தாழிடப் பட்டிருந்தது. அதனைக் கண்ட துர்க்கைராஜ் “பூட்டி இருக்கேமா? “என்றான் அதற்கு அந்த அம்மா “கதவைத் தட்டுப்பா“ என்றார் இரண்டு முறை தட்டினான். கதவு திறக்கப்படவில்லை. “இந்த பக்கம் வாங்க“ என்று ஒரு பெண் குரல் மட்டுமே கேட்டது. ஜன்னல் திறக்கப்படும் ஓசை கேட்டு அந்தப் பக்கமாகச் சென்றான். உள்ளே இருந்த பெண்மணிக்கு வயது 45 லிருந்து 50க்குள் இருக்கும். தடித்த முகமும் உஷ்ணம் தெறிக்க ஆளை எடை போடும் விழிகளும் அப்படியே ஜாடை எழுத்தாளரை நினைவுபடுத்தவும் அவரது தங்கைதான் என்பதை உறுதி செய்து கொண்டான்.

“வணக்கம் அக்கா என் பெயர் துர்க்கைராஜ். நான் மாணவப் பத்திரிகையாளர். ஒரு மாத இதழ் கட்டுரைக்காக  உங்களச் சந்திக்க வந்தேன். சொல்லுங்க .உங்களோட மூத்த சகோதரரான எழுத்தாளர் மெய்யரசன் உங்களை வந்து பார்ப்பாரா? “

என்ற வழக்கம்போல தொலைக்காட்சிகளில் வரும் நிருபரைப் போல பேசி முடித்தான்.

“தெரியாது தம்பி எங்களைப் பார்க்க வரமாட்டாங்க“

என்று எடுத்த இடுப்பிலேயே வெட்டிவிட்டு பேசினார் அந்தப் பெண்மணி. இவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது

“சரிங்க அக்கா நன்றி “

என்று வணங்கி அங்கிருந்து விடை பெற்றான். குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து பேட்டி கண்டால் கட்டுரை உணர்வுபூர்வமாகவும் நெகிழ்ச்சி மிக்கதாகவும் இருக்கும் என்று அவன் போட்ட கணக்கு சொதப்பலாகிவிட்டது என்று மனதுக்குள் அங்கலாய்த்தான். ஜன்னல் வழியே மொத்தமாக 60 வினாடிக்கும் குறைவாகத்தான் அந்த பெண்மணியைப் பார்த்து பேசியிருப்பான். அவரின் பார்வை மற்றும் சொற்களில் இருந்த வெப்பம் அவனை அங்கிருந்து நகர்த்திவிட்டது. நேரே மெயின் ரோடு வரவும் தொப்பம்பட்டி வழியாக பழனி செல்லும் பேருந்தான ஐந்தாம் நம்பர் ஜெய்க்கணேஷ் வந்தது. அதில் ஏறி பழனி வந்து பின்பு மானூர் வந்து சேர்ந்து விட்டான் துர்க்கைராஜ்.

அன்றைய மாலையே எழுத்தாளரை போனில் அழைத்து கட்டுரை விஷயம், கீரனூர் சென்றது, முகவரி விசாரித்தது, பள்ளிவாசல் தெருவில் சுற்றியது, சாவடியில் பார்த்த யாசகப் பெண்மணி, அவரது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியது, தங்கையிடம் பேசியது என அனைத்தையும் ஒப்புவித்தான்.

“சரிங்க துர்க்கைராஜ் ரொம்ப சந்தோஷம் எப்படியோ கீரனூர் யாத்திரைய முடிச்சிட்டீங்க சரி பாருங்க. நான் வீடு தேடுற விஷயமா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன் நாம பிறகு பேசுவோம்“ என்று அவனுக்கு பதில் அளித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார் எழுத்தாளர்.

பிறகு இரண்டு நாட்கள் கல்லூரி செல்வது, செய்முறைத் தேர்வுக்குத் தயாராவது என்று இருந்து விட்டான். மூன்றாவது நாள் போனை சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்று வந்து பார்த்தபோது எழுத்தாளரிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்களும் ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. ஆர்வமாகக் குறுஞ்செய்தியைத் திறந்து பார்த்த துர்க்கைராஜூவுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.

“கம்னாட்டி… வந்தன்னா வெட்டிடீருவேன் மரியாதைக்கு போன எடு“ என்று அனுப்பி இருந்தார் எழுத்தாளர். உடனடியாக அவரை அலைபேசியில் அழைத்து

“ஏன் சார் என்ன ஆச்சு?“ என்று கேட்டான். எப்பொழுதும் ’வாங்க போங்க’ எனப் பேசுபவர் அன்று ஆரம்பிக்கும் போது  “ஏன்டா? “என்றார். இறுக்கமின்றித் தளர்ந்திருந்த அவரது குரலைக் கேட்டபோதே குடித்திருப்பதை உறுதி செய்து கொண்டான். 

“என்ன ஆச்சு சார்?“ என்று நடுங்கும் குரலில் மீண்டும் பரிதாபமாக கேட்டான்.

“நீ எதுக்குடா எங்க வீட்டுக்குப் போன? ஊர்ல எல்லாருக்கும் தெரியும் அங்க நாங்க நலிஞ்சு போய் கெடக்குறது. நீ எதுக்குடா அங்க போன?

ஓக்கலாம்னு போனியா?

கேனப்புண்ட… டேய்…

என் பின்புலம் எல்லாம் உனக்கு தெரியாது.

வந்தனா உன்ன மர்டர் பண்ணிருவேன்.

ஆனா ஒன்னு பறப்புண்டேன்னு தெளிவாக் காட்டீட்டடா….

நான் மானூர் வந்தன்னா

எல்லா பறையனுகளையும் பார்த்துருவேன்….

டேய் ஜமாத்துல கேக்குறானுகடா

உன் தங்கச்சியைத் தேடி ஒரு

எளந்தரி பையன் வந்தான்னு“

விஷயம் என்னவென்று யூகிக்கும் முன்பாகவே இத்தனை சொற்களையும் வாரிவிட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர்.

அத்தனை இழி சொற்களுக்கும் எத்தகைய எதிர்வினையும் இன்றி மௌனம் காத்தபடி பாவமாக இருந்தான்.

உன் தங்கச்சி இருக்காள்ல?

உங்க அம்மா இருக்காள்ல?

நான் வந்து உன் வீட்டுக் கதவ

நைட்டு பன்னண்டு மணிக்குத் தட்டவா?

டேய் பேசு….

ஊமைப்புண்டை மாதிரி இருக்காத. வாயைத் தெறந்து பேசு.

ஊருக்குள்ள எனக்கு இப்படி ஒரு தலகுனிவ ஏற்படுத்திவிட்டியேடா?“

“சார் இல்ல சார் நான் கட்டுரைக்காத் தான் போனேன்“

என்று பேச முயற்சித்தவனை மறித்து..

“டேய் நிறுத்து…

வேறு எங்கேயாவது போய்ச் சொல்லு பொய் மயிரெல்லாம்…

நான் உன்னை விட கீழ்மைகள எழுதுறவன் சரியா?

நீ எனக்கு வாச்ச வாசகனா?

இல்ல நீ என்னோட எதிரி

சத்ரு போனாப் போகுதுன்னு விடுறேன் உன்னை.

பொழச்சுப் போ…

வைடா போன “ என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் எழுத்தாளர்.

துர்க்கைராஜுவின் மனமெங்கும் குழப்பமும் அச்சமும் பரவ அவனுக்கு பயம் அதிகரித்தது. போன் பேசிக் கொண்டிருந்த வண்ணாம்பாறையிலேயே  சிறிது நேரம் அமர்ந்து விட்டான். மணி இரவு 8 க்கு மேல் இருக்கும். சூழ்ந்திருந்த இருளும் அவனது மனநிலையை மேலும் கலவரப்படுத்தியது. வெளியே சாப்பிட்டு விட்டதாக அம்மாவிடம் கூறிவிட்டு வெறும் வயிற்றோடு படுத்துக்கொண்டான். உறக்கம் “வருவேனா”? என்கிறது. அவனை ஒட்டி அம்மாவும் தங்கையும் அதற்கு அப்பால் அப்பாவும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

பொழுதுக்கும் மம்பட்டி எடுத்து வெட்டும் அப்பா இடுப்பு வேட்டி நழுவியது கூடத் தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். உலர்ந்த வெங்காயச் சருகைப் போன்ற தேகத்துடன் அம்மாவும் அவளது கைகளுக்குள் தங்கையும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மணி நள்ளிரவு 12 ஐத் தாண்டி இருந்தது. ’ஒருவேளை எழுத்தாளர் மெய்யரசன் சொன்னது போலவே நம் வீடு தேடி வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற அச்சத்தில் உறைந்து கிடந்த துர்க்கைராஜூவுக்கு இடது பக்கக் கழுத்து நரம்பு இழுப்பது போல தோன்றியது. அம்மா, அப்பா, தங்கை மூவரது முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். நகர்ந்து கொண்டிருந்த மணித்துளிகளின் ஏதோவொரு இடைவெளியில் உறக்கத்திற்குள் விழுந்தவனின் கனவுத் துவாரத்தில் ஒரு புன்னகை முகம் ஒளிபொருந்தியவாறு மேலெழும்பிக் கொண்டிருந்தது.

ஆனால், அது எழுத்தாளர் மெய்யரசன் அல்ல.

00

சு. ராம்தாஸ்காந்தி

பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *