முதுபருவத்துக் களியாட்டத்தின் இரவுக்குறி

1.

ஜால விந்தை தரும்

கருசூல் கொள் மேகமெனக்

கனத்து நகரும் இரவிது

,

ஈரம் கசியும் பனியில் 

நனையும் தொட்டாற் 

சிணுங்கி மலரைப் போல 

தொடுகையில் மலர்கிறாய் 

,

மதர்த்த மலைமீது  சகல பரிவாரங்களோடிறங்கும் 

மாமழையாய் உன்மீது படரும்

விளையாட்டுப் பிள்ளை நான்

,

திடீர் நீர்ப்பெருக்கால் 

மலையிறங்கும் நீர்ப்படலமெனத்

திறந்துகொள்ளும் மகிழ்வின் 

வாயில்களை ஒருபோதும் 

மூட முடிவதில்லை 

,

கபால ஓடு தாண்டி

முத்துக்களாய்த் துளிர்க்கும் 

வியர்வைத் துளிகளை

உலர வைப்பதற்குள் 

உலர்ந்த நாவறண்டு

என்னையே விழுங்குகிறாய்.

,

தனிமையின் மோகத்தில் 

நான் கனவு காண்கிறேன் 

,

சுருங்காத படுக்கை விரிப்புகள் 

வேதனையை மேலும் அதிகப்படுத்துகின்றன

,

பாலைவனக் கானலைப் போல 

தூர தெரிந்து அண்மையில் அகல்கிறாய் விழைவின் 

தீவிரத்தை வீர்யமாக்கி

,

உன்னை ஈரமாக்கும் 

சிறு தூறல் நான் 

உன்னை முழுதாய் 

நனைய வைக்கும் 

பெருமழையும் நான் 

,

உன் வாசத்தை அறியும்படிக்கு 

அருகில் வா

உன் வெப்பத்தை அறியும்படிக்கு அருகே வா

உன் உஷ்ணத்தை உணரும்படிக்கு நெருங்கி வா

உன் வியர்வை மணத்தை வியக்கும்படிக்கு

அருகில் வா

,

பறிமாறுதலின் அற்புதங்களை

நிகழ்த்தவல்ல விளையாட்டைச் சொல்லிக்கொடு 

,

சிறிது சிறிதாக 

மெல்ல மெல்ல 

அணு அணுவாக

மூலக்கூறு மூலக்கூறாக

பகுதி பகுதியாக

கொஞ்சம் கொஞ்சமாக

முத்தத்தின் சாறெடுத்துப் 

பகிர்ந்து கொள் 

,

இழத்தலில் நிறைதலை

அடைக்கலத்துள் அடங்குதலை

சர்வத்துள்ளும் சரணடைதலைச் 

சாத்தியமாக்கு .

2.

சிறுத்த இடைமேல்

பெருத்த கொங்கைகள் அதிர

சிறுத்த இடைகீழ்

விரித்த இடுப்பெலும்பு நகர

பருத்த தொடைகளுரசி

கொழுத்த பிட்டங்களாட நடக்கையில் 

கருத்த கருவிழி பிரகாசத்தில்

மாயபிம்பமாய் உருக்கொள்ளும்

நின் சிங்காரச் சீதளம்.

,

தொடைகளிறங்கி நெளியும் 

பூனை ரோமங்கள் 

விரல்கள் தொடங்குமிடங்களில் முடிந்து போகின்றன

உனை நெருங்கா நிராசைகளாய்

,

உனை அடைய நினைக்கும் 

பெரும் பிரயாசைகளனைத்தும் 

அன்றடங்கிய வீழ்படிவென 

மூளைத் திரவத்தில் தேங்கிக் கிடக்கின்றன

,

செம்பாத விரல் நுனிகளை

ஆயிரமாயிரம் வருடங்களாய்

வருடக் காத்திருக்கும்  

அதரங்களில் 

விடம் தரித்துப் போகிறாய் மாயப்புன்னகையால். 

 ,

உள்ளம் பாத ரேகைகளில் பயணிக்கின்ற என் உதட்டின் முத்தங்களால் சிலிர்ப்படையும் 

முகவடிவழகைக் காணாதபடிக்கு

செம்பாத இளம் சூட்டில் வேகிறேன் .

,

படர்ந்து கிளரும் 

இளமுலையுண்ணாத

இவ்வாயிருந்தென் பயன்? 

,

பானை வாய்ப்பகுதியிலிருந்து 

இருமருங்குமிறங்கும் வழுவழுத்த

கழுத்துப் பகுதிகளில் பதிக்காத

பற்களிருந்தென் பயன் ?

,

தடந்தோள் நெடிதுயர்

வடிவுற்ற கோலமே !

செந்தூரமே!

,

பத்ம மேடிறங்கி 

இருபெரும்பாறை

பிளவினிடை

துருத்தி நிற்கும் 

அருமுகையை

வருடா

விரல்களிருந்தென் பயன்? 

,

உறுமும் பன்றியின் ஒலியென

கதறும் காமம் 

யாமத்தின் ஓசையில் 

முனகும் காமம் 

உன் கூந்தல் வழி 

ஏகும்பொழுதில் மூச்செறிகிறதே!

,

கட்டையாய்ப் பின்னிக் கிடந்து 

கரும்பாம்பாய் நீண்டு

பின்புற மேடுகளில்  மாறி மாறி 

மேய்வது

உன் சடையல்ல திலகமே

ஆசை ததும்ப விழிவழியே நீண்ட

எனதீராக் காமமே!

காமதேனே!

,

உலர் வெடிகனியெனக் காத்திருக்கும் 

காமத்தளம் வெடிக்கையில் சிதறும் 

கன்னிமைத்திரவமதில் நீந்தி விளையாடுகின்றன நம்

சேராமையின் விழைவுகள் 

,

மேலதர விளிம்பெங்கும் துழாவும்

நாவடிச் செதில்களின் 

ஈரத்தால் சிலிர்த்தெழும் உரோமங்கள் 

காமத்தின் முகவரியைத் தெரிவிக்கின்றன

,

நாவின் சுவையரும்புகள் 

ஒன்றையொன்று சுவைக்கும் 

ஒப்பிலா நிகழ்கணங்களில் 

முயக்கத்தின் ரீங்காரம்.

,

மூடிய இமைகளில் 

மூடாத இமைகளால் வருடுவதை

இரசித்திருந்த வேளைகளில் 

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் 

தங்கள் இமைகளைத் திறந்து மூடின .

,

உஷ்ணமுறும் மூச்சின் 

மேல் கீழ் 

தாழ் உச்ச ஸ்தாயிகளில் 

அலைவுறும் மோக பகிர்தலில்

மூழ்கிக் கிடப்போம் வா!

,

3.

நீயற்ற இந்த இரவு 

தனிமையுடைத்து 

,

நீயுள்ள இந்த இரவு 

இனிமையுடைத்து

,

கைகளைக் கோர்த்துக்கொள் 

காமமும் காமமும்

கோர்த்துக் கொள்வதைப் போல

,

விரல் சதைகள் அழுந்துமாறு அன்று

விரலெலும்புகள் ஒடியுமாறு கோர்த்துக்கொள் 

,

மிருது தோலின் 

வெம்மையடங்கிக்

குளிரெழும்பும் பொழுதெங்கிலும் 

உள்ளும் புறமுமாய்க் கலந்தொழுகுவோம் 

,

இந்த இரவைப் பாவமென

இந்தக் காமத்தைப் பாவமென

இந்தக் கூடலைப் பிறழ்வெனச்

சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் 

,

காலப்பதுமையின் விசித்திரங்களில் 

முதுமையொரு கனி

அக்கனியை இருவரும் 

புசிப்போம் சுருங்கி மடிப்புற்ற தோலுடனும் என்றுமே 

மாறாக் காமத்துடனும் 

,

அப்போதும் நிகழட்டும் 

சிலிர்ப்பூட்டும்

அதி அற்புத கணங்கள்.

000

தாமரைபாதி (பெ.அரவிந்தன் )

இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் 

தபுதாராவின் புன்னகை (2019)

உவர்மணல் சிறுநெருஞ்சி(2021)

காசினிக்காடு(2023)

இங்குலிகம் (2024)

தெறுகலம் (2024)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *