முத்துரம்யா.தெ 2 கவிதைகள்

பெத்தவளுக்குத் தானே தெரியும் பிள்ளை அருமை

++

கருவாகி உருவாகி

தன் தொப்புள் கொடி

உறவின் நலன் காக்க

எல்லாம் விலக்கி ஏதேதோ ஏற்று

குறித்த தேதிக்கு

கொஞ்ச நாள் இருக்கிறது

என நிறைசூழில்

நிம்மதியாய் உறங்கும்

ஒரு இரவில் திடீரென

அசௌகரியமாய் உணர்ந்து

எழுந்து…

உறுத்திய எண்ணத்தை

உறுதி செய்து கொண்டு

உடனடியாக மருத்துவமனை செல்ல

பிறப்புறுப்பில் சொட்டிய நீர்

சிசு பிறக்கத் தயாராகி விட்டதன்‌ அறிகுறி என்று சொல்ல..

எதிர்பாரா கணமொன்றில்

இடுப்பு வலியும் முதுகு வலியும்

உயிருக்குள் புக….

இன்னும் வலி பொறுத்தால்

சுகப்பிரசவம் என்று

மருத்துவர் சொல்ல

தன் பிள்ளை சுகமாகப் பிறக்க

துக்கமெல்லாம் ஏற்று

இறப்புக்கு ஒத்திகை பார்த்து

செத்துப் பிழைத்தவள்

இன்னும் நூறு ஆண்டு தன்

பிள்ளை சிரிக்க

அத்தனை வலியும் ஏற்று

அவனைப் பெற்றவள்

அவள்….

கடவுளுக்கு என்ன தெரியும்

பெ(ற்ற)த்தவளுக்கல்லவா தெரியும்

பிள்ளையின் அருமை…

+++

எவ்வளவோ முயற்சித்தும்

அடக்க முடியாமல்

இமைகளைக் கிழித்து

மேலெழும்பி வரும்

கண்ணீரை எப்படியாவது

அதற்கும் கீழே வராமல்

தடுத்து விட வேண்டும் என

வெறும் தொண்டையை

செறுமி செறுமிப் பார்க்கிறாள்

இமை நிறுத்திப் பார்க்கிறாள்

சில நொடிகள்….

வைராக்கியம் வந்தது

போல் நடிக்கிறாள்…

பொய்யெனத் தெரிந்தும்

சொல்கிறாள்

எல்லாம் சரியாகிவிடும்

ஒருநாள் என மனதிடம்…

என்ன சொல்லியும்

தடுக்க முடியவில்லை

மடை உடைத்த நீராய்

விழி மீறும் கண்ணீரை…

அடக்குமுறை தவறு என்பது

கண்ணீருக்கும் பொருந்தும்…

அதனால் கொட்டிவிடு….!

00

முத்துரம்யா.தெ

செம்மம்பாளையம், குண்டடம்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *