ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

சாயங்காலம் வீடு திரும்பும் நேரம். காலனியின் முதல் தெருவுக்குள் நுழையும் முன்பே தெருவில் விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிக் கூக்குரல் மெயின் ரோட்டுக்கு கேட்டது. வண்டியை கொஞ்சம் மெதுவாகவே செலுத்தினேன். ஸ்டம்புக்குப் பதில் இரண்டு பக்கமும் பெரிய  சைஸ் கற்களை நிறுத்தி வைத்து தெருவில் பெரிய பசங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, தெருவின் கடைசியில் சிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்தி கொஞ்சம் வேடிக்கை பார்க்க ஆசையாக இருந்தது. சாயங்காலம் நேரமாக வீடு திரும்பும் போதெல்லாம் இந்த காட்சி எனக்குள் பரவசத்தை ஏற்படுத்தும். சிலசமயம் தாமதமாக இரவில் திரும்பும் போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த பறவைகளை வெளியே  சுதந்திரமாக பறக்க விட்டதைப்போல பர்தா அணிந்து கொண்டு இளம் பெண்கள் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கும்.      

        காலனியின் முக்கு திரும்பி எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததும் புயலடித்து ஓய்ந்ததை போல ஆரவாரமின்றி அமைதியாகக் கிடந்தது குழந்தைகள் விளையாடாத எங்கள் தெரு. மிக ஆசைப்பட்டு வாங்கிய இடத்தில் வீடு கட்டி குடி வந்த பிறகு இப்போது அடிக்கடி நகருக்கு   வெளியே  அல்லது வேறு  எங்காவது  கொஞ்சம் தள்ளி  இடம் வாங்கி வீடு கட்டியிருக்கலாம். தனித்தனி வீடுகள் அமைத்துள்ள அமைதியான நல்ல ஏரியாவாச்சேனு இங்க குடி வந்தது தப்பாகிப்போய் விட்டதோ, என்ற எண்ணம் இப்போது அடிக்கடி வர ஆரம்பித்து விட்டது.  எந்நேரமும் அடைக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் மனித வாடையே ஆகாத ஜனங்கள் குடியிருக்கும் எங்கள் குடியிருப்பு பகுதி சுத்தமாக எனக்கு பிடிக்கவே இல்லை.     . .

        நெருக்கமாக அமையப்பட்ட லைன் வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதிதான் ரஹமத்துக்கு எப்போதும் பிடித்தமான இடம். “நல்ல அன்பான மனுஷங்க இங்கதான் இருப்பாங்க.’’ என்பது அவளோட நம்பிக்கை. எந்நேரமும் கசகசனு ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே இரைச்சலும் ,  அமைதியின்மையுமாக இருக்கும் இம்மாதிரியான குடியிருப்பு பகுதிகள் ஏனோ எனக்கு பிடிக்காமல் போனது. நெருக்கடி மிகுந்த இந்த மாதிரியான சூழல் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். நான் பிறந்து வளர்ந்ததே இந்த மாதிரியான ஒரு பகுதியில்தான். இருந்தும் எப்போதும் கூச்சலும், ஆராவாரமுமாய் இருக்கும் இந்த இடம் இப்போது பிடிக்காமல் போனதற்கு பிரத்யேக காரணம் ஏதும் இல்லைதான். விருப்பமான புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பிறகு என் மனமும் மரம் செடிகொடிகள் என்று இயற்கை எழிலுடன் கூடிய அமைதியான சூழலையும் மனம் விரும்ப ஆரம்பித்து விட்டதே பிரதான காரணமாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.

       வரிசை வரிசையாக ஒரு சுவருக்குள் இன்னொரு சுவராக நெருக்கமாக இருக்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பில் எந்நேரமும் யாரோ ஒருவர் நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பதாக எழும் பிரம்மையை தவிர்க்க முடியாது. யாருக்கும் தெரியாமல் எதுவும் செய்து விட முடியாது! மத்தி மீன் வந்து விட்டால், அன்று முழுக்க வீதியே நாறும். மோந்தி நேரம் முடிந்ததும் யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணையில் பெண்களின் சபை கூடும். இரண்டு பக்கமும் நீளவாக்கில் திண்ணையுள்ள வீடு என்பதால் பெரும்பாலும் மேரியக்கா வீட்டுத் திண்ணையில்தான் கூடுவார்கள். நின்று கொண்டு பேசுவதென்றால் எங்கள் பக்கத்துவீட்டு ஜொகரக்கா வீட்டின் முன்பு ஒவ்வொருவராக வந்து ஆஜராகுவார்கள். “இன்னிக்கு என்னவாக்கும் கூட்டான்?” என்று பொதுவாக பேச்சை ஆரம்பிக்கும் சுலைதாத்தா. வயதில் சுலையா மூத்தவர் என்பதால், பெண்கள் எல்லோரும் அவரை சுலைதாத்தா என்று அழைப்பார்கள். (தாத்தா – அக்கா)       

       பிறகு பேச்சு அப்பிடியே “அவ அப்பிடியாக்கும், இவ இப்பிடியாக்கும்” என்று அங்கு இல்லாத பெண்களைப் பற்றி மெல்ல புறம் பேச ஆரம்பிக்கும். எட்டரை மணிவரைக்கும் கணவன்மார்கள் வரும் வரைக்கும் பேச்சுக்கள் நீளும். முன் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் எனக்கு அவர்களின் பேச்சு கொஞ்சம் கொஞ்சம் கேட்கும். சுவாரஸ்யமாக இருந்தாலும் எரிச்சலாகவும் இருக்கும். ரகமத் அவ்வப்போது சபையில் கலந்துகொள்ளுவாள்.  

       சில சமயம் இரண்டு வீட்டுக்கு காரணமே இல்லாமல் சண்டை நடக்கும். அடித்துக்கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு எதுக்கு அடித்துக்கொண்டார்கள் என்றே தெரியாதபடிக்கு கூடிக்களிப்பார்கள். ‘இருவரும் கண்டபடி திட்டிக்கொண்டு  சண்டை போட்டார்களே..’ என்ற வியப்புதான் நமக்கு மிஞ்சும். 

        யாருக்குமே தெரியாது என்று வீட்டுக்குள் செய்யும் சில செயல்கள் எதிர் வீட்டுக்கோ, பக்கத்து வீட்டுக்கோ எப்படியோ தெரிந்து கடைசியில் வீதியே அதைப்பற்றிப் பேசும். எதையும் மூடி மறைக்க முடியாது. ஒரு பிரைவசியே இருக்காது. ரஹமத்திடம் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். “இதாங்க ஜாலி, நாலு மனுஷங்க  கூட எப்பவும் சந்தோஷமாப் பேசுறதுக்கு இங்கதாங்க முடியும். நீங்க சொல்லுற தனித்தனியா வீடிருக்குற பக்கம் எந்நேரமும் வீடுங்க அடச்சே கெடக்குங்க. கதவத் தொறக்கவே காசு கேப்பாங்க போல!” என்பாள்.

        இப்படித்தான்  எதிர் வீட்டு ஹசீனா, சிராஜுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் வீதி முழுவதும் பேசு பொருளாக அலைந்து கொண்டே இருந்தது ரொம்ப நாட்களாக. சில நாட்கள் சங்கடத்துடன் வெளியே தலை காட்டாமலே இருந்தாள் ஹசீனா. சிராஜ் வேறு யாருமல்ல, ஹசீனாவின் கணவன். நெருக்கமான குடியிருப்புகளில் இது போன்றவைகளை தடுக்கவே முடியாது. எல்லா வீட்டுச் சுவர்களுக்கும் கண், காது இருக்கிறது. எந்த விஷயதையும் மறைக்கவே முடியாது. எப்படியும் வெளிப்பட்டு ரகசியங்கள் எல்லாம் வீதி முழுக்க உலாவி கடைசியில் பள்ளி முக்கு வரை எதிரொலிக்கும். மற்றவர்களின் ரகசியங்களை வெளிப்படுத்த ஒவ்வொருவரும் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் இவைகளையெல்லாம் சகித்துக்கொண்டாகாணும். 

        இதிலிருந்தெல்லாம் கொஞ்சம் விடுபட்டு தனி வீடுகள் அமைந்த குடியிருப்பு பகுதியில் அமைதியாக இருக்கும் ஆசையில்தான் சாலை வசதி, சாக்கடை வசதி, தண்ணீர் பிரச்சனைகளற்ற இதுபோன்ற பகுதிகளில் வீட்டு மனைகள் தொலை தூரமாக இருந்தாலும் ஜோராக வியாபாரமாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் நவீனமயமான இன்றைய சூழலில் மனிதன் தனிமை படுத்தப்பட்டு தனித்தனி தீவுகளாக்கப்படுகிறான். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…” எல்லாம் கலாவதியாகிப்போன சங்கதியாகிவிட்டது .

        புதுக்காலனி குடியிருப்பு பகுதியை நிர்வாகிப்பது அப்பகுதி ஜமாஅத்தார்கள்தான் என்பதாலும் மிக அமைதியான சூழல் நிரம்பியிருந்தபடியாலும் இந்த இடத்தை உடனடியாக கிரையம் செய்தோம். எல்லா மனைகளிலும் பொதுக்குழாய் அமைக்கப்பட்டிருந்தது.  வீடு கட்டும்போது முன் கூட்டியே ஜமாத்தாருக்கு தெரிவித்து இரண்டாயிரம்  ரூபாய் கட்டினால்தான் குழாய் இணைப்பு தருவார்கள் என்பது போன்ற நிபந்தனைகள் எல்லாம் யாரும் எங்களுக்கு சொல்லவில்லை. நாங்கபாட்டுக்கு வீட்டு வேலையை ஆரம்பித்துவிட்டோம். அஸ்திவாரத்துக்கான கான்கிரீட் போடும்போதுதான் விவரம் தெரிய வந்தது.

        உடனே ஜமாஅத்தில் சொல்லி பணம் கட்டினேன். ஆனால் பிளம்பர் கிடைக்கவில்லை. வேலைக்கு ஆட்களும் வந்துவிட்டார்கள். தண்ணீர் வேண்டுமே என்ன செய்வது. எதிர் வீட்டில் போர்வெல் போட்டிருக்கிறார்கள் கேட்டுப்பாருங்கள் என்றார் அப்பகுதி வாசி ஒருவர். ‘யாரும் இல்லாத வீடு போல.’ எப்போதும் கதவு மூடியபடியேதான் இருக்கும் அந்த எதிர் வீடு. கேட் அருகே நின்று கூப்பிட்டுப்பார்த்தேன். யாரும் வரவில்லை. தயங்கியவாறு கேட்டைத் திறந்து, மெல்ல கதவைத் தட்டினேன். காலிங்பெல் ஸிவிட்சைத் தேடினேன். கண்ணுக்குத்தெரியாத  இடத்தில் இருந்தது. சின்னதாக அழுத்தினேன். மறுபடியும் முயன்றேன்.

       யாரும் இல்லை போல என்று நான் திரும்பும் பொது மெல்ல கதவு திறந்தது. அறுபது வயது மனிதரின் தலை மட்டும் எட்டிப்பார்க்க, சலாம் சொன்னேன். தலை ஆடியது. விவரம் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, “போர்ல தண்ணீயே இல்ல” என்றார். பிறகு என்ன நினைத்துக்கொண்டாரோ “சரி,  பாக்கலாம்” என்று கதவை சாத்திக்கொண்டார். வேலை ஆட்கள் புலம்ப ஆரம்பித்தார்கள். ஒரு டிரம் தண்ணீர் தர பணிரெண்டு மணியானது. வெறுத்துப்போய் விட்டது. ஒவ்வொரு டிரம்முக்கும் பல்லைக்காட்டியவாறு. நாள் முழுக்க கெஞ்சவேண்டியிருந்தது.- மிக அவமானமாக இருந்தது. ச்சை. இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள். இங்குள்ளவர்களின் சுபாவம் இந்த ஒரு ஆள் மூலமே தெரிந்து போனது.

       மறு நாள் காலை பதினொரு மணியாகியும் எதிர் வீடு திறக்கப்படவே இல்லை. தண்ணீர் கேட்க கதவை தட்டியாகணும். தயக்கமாக இருந்தது. இருந்தும் போய் தட்டினேன். பல முறை தட்டியும் கதவு திறக்கபடவில்லை. தண்ணீர்  இல்லாததால் இரண்டு நாட்கள் வேலை நடைபெறவில்லை. குழாய் இணைப்பு போட்ட பிறகுதான் மறுபடி வேலையை தொடர முடிந்தது.

       எதிர் வீட்டு காதரைப் பற்றி காலனி ஆட்கள் சொன்ன பிறகுதான் அவரின் குண நலன்கள் தெரிய வந்தது. அவர் தொழுகைக்குப்  போகும்போது வழியில் பார்த்து நூறு ரூபாயை நீட்டினேன்.             

        “எதுக்குங்க?” என்றார். 

        “அன்னிக்கு தண்ணீ குடுத்தீங்களே அதுக்குங்க” என்றேன்.                         

        “பரவால்லே.” என்றார். 

        “இல்லே மோட்டார் எல்லாம் போட்டீங்க…கரண்டு சார்ஜ் ஆயிருக்குமெல்ல?” என்றவாறு மறுபடி பணத்தை நீட்ட  வாங்கிக்கொண்டார் மனுஷன். அதன் பிறகு வழியில் பார்த்தால் மட்டும் சிரித்துக்கொள்வேன்.

        நாங்கள் இங்கு குடி வந்த புதிதில் பொதுக்குழாய் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட மூன்று நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை. தரைமட்டத் தொட்டி கட்டியிருந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. இதில் நாங்களும் தப்பித்துக்கொண்டோம். வாடகைக்கு குடியிருப்பவர்கள் அண்டாவிலும் , , பக்கெட்டுகளிலும் தண்ணீர் பிடித்துப் புழங்குபவர்கள் பாடு, படு திண்டாட்டமானது. எல்லோரும் எதிர் வீட்டுக்கு குடங்களுடன் படையெடுக்க, “மோட்டார் ரிப்பேர்“ என்று அந்த மனுஷன் கறாராக சொல்லிவிட்டார். மொகல்லாவாசிகள் கெஞ்சிக்கூத்தாடாத குறை.

       ஜமாஅத் நிர்வாகம் வந்து சொல்லிய பிறகு வேண்டா வெறுப்பாக ஆளுக்கு இரண்டு குடம் உப்புத் தண்ணீர் கொடுத்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் “அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருங்கள். அன்பை பேணுங்கள்..” என்று வாரந்தோறும் வகுப்பு எடுக்கும் ஒரு அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் இவர் என்பதுதான்.

       அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இவர் வீட்டுக்கு வருவார்கள். வாசலிலேயே நின்று பேசி விட்டுச் சென்று விடுவார்கள்!    . ஒரு நாள் கூட காதர், அவர்களை தன் வீட்டினுள் அழைத்து நான் பார்த்ததே இல்லை.         “இப்பிடியும் கூட நம்மாளுங்க இருக்கங்களே!” என்று ரகமத்திடம் சொல்லி நான் சங்கடப்பட, “நீங்கதானே இந்த மாதிரி அமைதியான ஏரியாவுல குடி வரணும்னு ரொம்ப ஆசப்பட்டீங்க?” என்று நக்கலாக சிரித்தாள் ரகமத்.            

00

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

இயற்பெயர்  H. நஸீர். (H.NAZEER) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

       ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் என்கிற பெயரில்  கணையாழியில் 1988 ம் ஆண்டில்  எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளாக  எழுதி வருகிறார்..

       இதுவரை வார , மாத இதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும்  125  க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆறு குறுநாவல்களும், மூன்று  நாவல்களும், இரண்டு நாவல் தொடர்களும் அவ்வப்போது கவிதைகளும் , மற்றும் இஸ்லாமிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

·    “நகரமே ஊளையிடும் பாலைவனம் போல..”

·    “கறை படிந்த காலம்”

·    “போன்சாய் மரங்கள்”   .

·    “கர்வம் பிடித்தவனின் கதை”

·    “ரூஹாணிகள்” ஆகிய ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும்,  

·    “ரணங்கள்”  (இலக்கிய சோலை பதிப்பகம்)                                                  “எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர்” (ஜீரோ டிகிரி பதிப்பகம்)மற்றும் ” சிதைவுகள்”  (நாற்கரம் பதிப்பகம்)ஆகிய மூன்று  நாவல்களும் வந்துள்ளது.    .

.

·    “நிழல் மரங்கள் “ என்றகுறுநாவல்களின் புதிய தொகுப்பு 2024 இக்றா பதிப்பகம்  2024 நவம்பரில் வந்துள்ளது.

·      ரத்த பந்த  என்ற நாவலும் நன்னூல் பதிப்பகம் வெளியீடாக வர உள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *