சுருளி காந்திதுரை

பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி விஸ்வம் டீ குடிச்சுட்டு தாலுகாஆபீஸ் போகலாம்னு நெனச்சுக் கிட்டிருந்தார். வெயில் இருந்தது. பங்குனி மாதத்துக் காத்து கொஞ்சம் குறைவாக இருந்தது. இப்ப டீ குடிச்சாத் தேவலேன்னு மனசு சொல்லவும், விஸ்வம் மெதுவா நடந்து டீக்கடைப் போக,

அந்தக்கடையில டீ குடிச்சிட்டு இருந்த சரவணன் அட வாப்பா தம்பி விஸ்வம். தம்பியப் பாத்ததுமே அவருக்கு சந்தோசம். தலகால் புரியல. ஒரு ஊர்காரவுக.

என்ன அண்ணே. ஊரப் பக்கம் வாறீகளா?. நம்ம ஊரச் சுத்துனக் கழுதக்கூடா ஊர விட்டுப் போகாது.

தம்பி நல்லாயிருக்கிறீயா?

நல்லா இருக்கண்ணே.

ஊர்ல எல்லாம் எப்படி, மக்கமனு சார் எல்லாம் நலமா?

டீக்கடைக்காரர் சிரிச்சிக்கிட்டே டீ தரவும் எடுத்து விஸ்வம் ஒருவாய் உறிஞ்சினான்.

அண்ணே, இப்ப எல்லாருக்கும் என்னான்னு தெரியல. “ஊருக்குள்ள பலருக்கு லேசா கண்ணு தெரியமாட்டேன்னுது. பகல் குருடு அதிகமாயிருச்சுண்ணே. யார் யார்டையும் சரியா பேசுறது கிடையாது”

என்னப்பா நிசமாவா? கேட்கவே ஆச்சரியமா இருக்குன்னு சரவணன் சொல்லிட்டு, அடப் போப்பா தம்பி, அப்படி இருக்காதுன்னு சொன்னார், சரவணன்.

இல்ல அண்ணே எல்லாம் மாறிப்போச்சு. பழைய ஊருமில்ல, பழைய உறவுமில்ல. மக்கமனுசார்… முன்ன மாதிரி இல்ல.. “கொரனாவுக்கு பின்ன எல்லாம் மாறிப்போச்சு”.

நம்மலே, இப்ப ஊர்ல புதுமனுசரா இருக்கம். இன்னும் கொஞ்ச நாள்ல நீ யார்? நீன்னு கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்ல…”நெறைய மனுசங்க போயிட்டாங்க”.

நிறைய இறப்பு, வெளியூர் ஆட்கள் அதிகமா குடியேறிட்டாங்க. எல்லாரும் எதையோ தேடி அலையுறாங்க. “மண்ணுல என்ன உருண்டாலும், ஒட்டுற மண்ணு தானே ஒட்டும்”. இது எவனுக்கும் தெரிய மாட்டேங்குது அண்ணே!.

என்னப்பா, உள்ளூருக்குள் இருக்கிற உனக்கே இந்த நிலையா? அப்ப எங்க நிலைமைன்னு கேட்டார், சரவணன்.

விஸ்வம் சிரித்தார்.

சிவத்த ஆளுக்கும், குழி விழுந்த கன்னத்தில சிரிப்புக்கும் அழகா இருந்தார் விஸ்வம்.

அண்ணே, புதுசா குடியேறிட்டாங்க. பழையஆளுக யாரும் தெரியாது. விடிஞ்சுப் போயி அடைஞ்சு வாந்தா? ஊருக்குள் என்ன நடக்குன்னு தெரியமாட்டேன்னுது.

இந்த பிளாட் வாங்கி விக்கிறப் புரோக்கர், டிரைவர் ரொம்ப பெறுத்துப் போச்சுண்ணே. அதுதானே தொழிலாப் போச்சு… யாரப் பாரு புரோக்கர்… எதவேணாலும் வித்துக் காசாக்கத் துடிச்சிட்டு இருக்காங்க. யார் பொருள் எப்படி போனா என்ன? அவுங்களுக்குக் கமிசன் வந்துரணும். அதுல குறியா இருக்காங்க. இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு ரெண்டு இடத்துலயிம் கமிசன் வாங்கி. பலர் பொழப்பு அதுல நடத்துறானுங்க.

என்னப்பா இப்படிச் சொல்ற… நீ பேசுறதப் பார்த்தா எனக்குப் பயமா இருக்குன்னு சரவணன் சொல்லவும்,

என்னைக்கி மனுசன் தேவை கருதியும், மனுசனக் காசாப் பணமாப் பார்க்க ஆரம்பிச்சானோ,

அன்னைக்கே நம்ம ஊர் கிராமக் கட்டுக் கோப்ப இழந்துபோச்சு. மனுசன் இல்ல, ஊர் இருக்கு.

என்ன நம்ம இந்த ஊர் காரருன்னு சொல்ல முடியாது போல, மனுசன் பணம் தின்னிக் கழுகா மாறிட்டான். நியாயம், தர்மம், நீதி, பாவம் அப்படின்னா என்னான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு விஸ்வம் ஆதங்கப் பட்டார்.

சரவணன் எதுவும் பேசமுடியாமல் விருமதன்னடி அடிச்சுப் போய் விஸ்வத்தின் வாய் பார்த்துக் கொண்டு இருந்தார்.

நம்ம தலமுறைதான் அண்ணே, தம்பி, மாமா, மச்சான்னு பழகியப் பழக்கவழக்கம் இதுக்கு மதிப்பு மரியாதைக் கொடுத்துட்டு இருக்கோம். இனி ஊருக்குள்ள இதுக்கு வேலையில்ல… அண்ணே.

தள்ளுவண்டியில் உட்கார்ந்து கொண்டு அண்ணேன்னு தர்மம் கேட்டார்.

ரெண்டு பேரும் ஒன்னு சொன்னாப்பிள்ள… டீ வேணுமா? வடை வேணுமா? வாங்கிக்க… காசு கேக்காத.

இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்த நபர் இவர்களின் பேச்சை உற்றுக் கவனித்தார். பேச்சு முடிந்த பின்ன கேட்கலாம்ன்னு இருந்தவர் போல. இடைமறித்துக் கேட்டார். அண்ணே டீ வாங்கிக்குடுங்க.

தம்பி விஸ்வம் அவருக்கு டீயும் வடையும் வாங்கிக்கொடு, சாப்பிடட்டும்.

விஸ்வம், எவ்வளவு மனத்தாங்கலில் இருந்தார்ன்னு தெரியல. சரவணனுக்கு விஸ்வம் பேசுவதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்துபோனார்.

விஸ்வம் மீண்டும் தொடர்ந்தான்…

மனுசன் யார எப்படி ஏமாத்தலாம்; யாரு இடத்த அடிச்சு வாங்கி இலாபம் பார்க்கலாம்ன்னு… இந்த நெனப்புலே இருந்த ஊர் உலகம் உருப்படுமா? எல்லாப் பேத்துக்கும் ஒழைக்காம சாப்பிடனும். வெள்ளையும் சொள்ளையுமா இருக்கனும். யாராவது சிக்கினா கொண்டாந்து மாட்டிவிட்டு…

நம்ம கைநெறைய கமிஷன் காசவாங்கனும். இந்த நினைப்புலே பலர் தேடிப்போயிட்டு இருக்கான். எல்லாருக்கும் பெரிசா எதுவும் கிடைக்கப் போறதில்ல… ஆனா, “ஆசைக் கழுதை” யாரவிட்டது.

அண்ணே, அம்மா அடிக்கொருதரம் சொல்லும்… “நாயி ஆசை பீயோடன்னு…”நம்ம தான் பலரப் பார்க்கிறோமில்ல.

தம்பி, விஸ்வம் கவலப்படாதே, காலம் இப்படியேவாப் போகப் போகுது மாறும்ப்பா.

அண்ணே, இனி மாற வாய்ப்பில்ல. பாதிப் பேருப் பகல் குடிகாரனா மாறிட்டான். அப்பக் காலத்துலக் குடிச்சா அசிங்கம்ன்ங்க அப்போ. இப்போ குடிக்கிறது ஊருக்குள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட நீதியாகிப் போச்சு…யாரப் பாத்தாலும் குடிக்கிறான்.

ஞாயிற்றுக்கிழம, ஓடை, ஒடப்பு, வயல்பக்கம், தோட்டம், கம்மா, கால், தோப்பு… நாலு அஞ்சு பேரு சேரகோழிய வாங்கி சமைக்கசரக்குப் போடனும்னு மாறிட்டான்.

இவுகள எந்தக் கணக்குள சேர்ப்பீங்க…. “பாட்டில் கணக்குல” சேக்கலாம்.

தம்பி இந்தாப்பா காசக் கொடுப்பான்னு நூறு ரூபாய் கொடுத்தார்.. விஸ்வம் வாங்கிக் கொடுத்துட்டுக் கடைக்காரரிடம் இருந்து மீதிச்சில்லரை வாங்கிக் கொடுத்தார்.

கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தண்ணே. உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம். சிலரப் பாத்தா ஏன்டா இவனப் பார்க்கிறோம்ன்னு மனசுக்குள்  தோனுது. மக்கள்கிட்ட கடவுள் குறைஞ்சுப்போச்சு. பெரியவுக, சின்னவுக மதிப்பு, மரியாதை இல்ல. மனுசன் மிருகமா மாறிட்டான். 

அண்ணே, ஒன்னுப் பணம் பெருத்தவனா இருக்கனும். இல்லசனம் பெருத்தவனா இருக்கனும். ரெண்டுமில்ல… நமக்கு  பல நோக்குச் சந்தேகம் வந்திரும். நம் ஊர்ல இருக்கமா? அல்லது வெளியூர் போயிட்டமான்னு எனக்கு தோனும்.

பெரிய கொடுமை என்னா… செத்த இழவுக்கு வர்ற ஆள் கொறைஞ்சுப் போச்சு. பொனத்தத் தூக்க ஆள் இல்ல. நம்ம ஊர்ல இந்த நெலம..எல்லாம் வண்டிதான்.

நம்ம ஊர்ல ஆடு மாடு செத்தா யாரு இன்னாரு அண்ணே வீட்டுல காளைமாடு, பசுமாடு செத்துப் போச்சு. ஒரு எட்டுப் போய் துக்கம் கேட்டு வந்துருவோம்ன்னு இருந்த ஊர்ல, டப்பின்னு எல்லாமே மாறிப் போச்சு. அங்கப் போனா என்னாக் கிடைக்கும்னு கணக்குப் போட்டா… “நாலு மக்கமனுசர் வேணும்” அதெல்லாம் வேணாம் பணம், பணம் மட்டும் போதும்.

இன்னும் இன்னும் ஊரப் பத்தி நிறைய இருக்கு. நீங்கதான் அதிகமா ஊரப் பக்கம் வர்றதுமில்லல. ஏன் ஒரே அடியா வர்றதில்ல… ஊரே வெறுத்திட்டிங்கலா?. நாங்கெல்லாம் இருக்கோமிண்ணே… வந்து போங்க. இல்லாட்டி யார் சரவணா, புதுசா இருக்கின்னு சொல்லிடுவாங்க. ஊர் விட்டு ஊர் பொழைக்க வந்தவுக சாஸ்தியாய் போச்சு.

அண்ணனுக்கு ஆயிரம் சோலியிருக்கும். நான் வந்து நிப்பாட்டிப் பிட்டேன். நெறைய பேசிட்டேன். இன்னைக்கு எனக்கு ராத்திரி நல்லா ஒரக்கம் வரும்ன்னு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் விஸ்வம்.

தம்பி, போயிட்டுவாங்க, இன்னொரு நாள் சாவகாசமா வயல்ல உக்காந்து பேசலாம்ன்னு சரவணன் சொல்லவும். சரவணன் மனதுக்குள் ஆமாம், நானும் ஊருக்குள் வந்து போகும்  போது பல தெரிந்த முகங்களைப் பார்த்து சிரிப்பேன். வணக்கம் சொல்லுவேன்.

யாரும் சொரப்பு இல்லாம நிப்பாங்க. நம்மளப் பாக்காதது போல நடப்பார்கள்.

இப்ப விஸ்வம் சொன்னதும் தாம் ஊர் நிலமைப் புரியுது. பலரும் நடந்து கொண்ட விதம் புரிந்தது சரவணனுக்கு. எங்கள் இருவர் பேச்சைக் கேட்ட தள்ளுவண்டியில் அமர்ந்திருந்த மனிதர் அண்ணே நன்றின்னு சொல்லிட்டு நகர்ந்தவர். எங்களுக்குக் கேட்கிற மாதிரியா… கடவுளே எனக்கு நல்லாக் கண்ணு தெரியட்டுமன்னு, மூனு சக்கர வண்டியில் சிரித்த முகத்தோடு இருவரையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்.

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *