குவைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் அவனைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் என் மனசுக்குள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தது.  அவனைப் பார்க்கப் போறேன்னு அம்மா ரங்கநாயகிக்கிட்ட சொன்னா காட்டுக்கத்தாக் கத்துவா. அதே மாதிரி வேணிக்கிட்ட சொன்னாலும் அங்கெல்லாம் இப்ப எதுக்குங்கன்னு முட்டுக்கட்டை போடுவா. ரெண்டு பேர்க்கிட்டயும் சொல்லாமப் போயி ஏதாவது ஒண்ணுன்னா அப்புறம் ரெண்டு பேரும் முகங்கொடுத்துப் பேசமாட்டாங்க.

இப்ப என்ன செய்யலாம் என்ற யோசனை எனக்குள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

“என்ன லீவன்னைக்குக் காலையிலயே ரொம்பத் தீவிரமான யோசனையா இருக்கு” கேட்டுக் கொண்டே காபியை நீட்டினாள் வேணி.

வாங்கி வாயில் வைத்து உறிஞ்சி, அதன் சுவையை ருசித்து உள்ளிறக்கிவிட்டு “ஏய்… அதெல்லாம் ஒண்ணுமில்லே…. பேப்பர்ல ரெண்டு மூணு நியூஸ் பார்த்தேன். அந்தச் சிந்தனைதான்…”

“இது பேப்பர் நியூஸ் கொடுத்த சிந்தனை மாதிரி இல்லையே… ரெண்டு மூணு நாளாவே தீவிர யோசனையா இருக்கு…?”

“அதான் இல்லைன்னு சொல்றேன்ல… ஆமா காலையில செடிகளுக்குத் தண்ணி விட்டியா..?”

“அய்யோடா… ஐயா பேச்சை மாத்துறீங்களாக்கும்…? வாரம் ஏழு நாளும் ஐயாதானே இருந்து செடிகளுக்குத் தண்ணி விடுறாக… லீவன்னைக்குக் கூட ஒரு வேலை பாக்குறதில்லை. இதுல செடிகளுக்கு நான் தண்ணி விட்டா என்ன விடாட்டி என்ன… அது கிடக்கட்டும் முதல்ல ரெண்டு மூணு நாளா ஏதோ சிந்தனையில இருக்கியளே… அதுக்கு என்ன அர்த்தம்..? கதை விடாம சொல்லுங்க கேப்போம்…”

“அது… அது வந்து நம்ம பெருமாச் சித்தப்பாவப் பாத்தேன்…”

“அவருக்கென்ன… அவரைப் பாத்ததுக்கும் இந்த சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்…?”

“ரகுவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிருச்சாம்… சீரியஸ் கண்டிசன்ல மதுரை வேலம்மாள்ல வச்சிருக்காங்களாம்…”

வேணி பதில் சொல்லவில்லை.

“இதுதான்… இதைச் சொன்னா மாமியாவும் மருமகளும் முகத்தைத் தூக்கி வச்சிப்பீங்கன்னுதான் சொல்லல.”

“சரி அதுக்கு…?”

“எதுக்கு…?”

“அதான் யாருக்கோ ஆக்சிடெண்டுன்னு சொன்னீங்களே…?”

“யாருக்கோ இல்ல… நம்ம ரகுவுக்கு…”

“என்னது நம்ம ரகுவா..? அவுக பண்ணுனதெல்லாம் தெரியாதாக்கும். மாமா இறந்த வீட்டுக்குள்ள நடந்தத மறந்துட்டியளா..?”

“அதயெப்படி மறப்பாக… அதுக்கும் இப்ப ரகுக்கு ஆக்ஸிடெண்டுன்னு சொன்னதுக்கும் என்ன இருக்கு…?”

“என்ன இருக்கா..? ரகுவும் அந்த வீட்டுப் பையந்தானே… அன்னக்கி அவுகளும் பேசாமத்தானே நின்னாக..”

“அவன் சொன்னாக் கேக்குற நிலையல யாரும் இல்ல… ஆனா அவன் மத்த விசயங்கள்ல நம்ம பக்கம் நின்னிருக்கான்…”

“என்ன நம்ம பக்கமா..?”

“எனக்கு அவனோட சப்போர்ட் எப்பவும் இருந்திருக்குன்னு சொல்ல வந்தேன்…”

“ஓ… ரத்தபாசம். வெளியில சப்போர்ட் பண்ணி,,, வீட்டுக்குள்ள அதைச் செய்யலயில்ல… சரி விடுங்க… இப்ப எதுக்கு காலயில இந்தப் பேச்சு. அவருக்கு ஆக்ஸிடெண்டுங்கிற விசயம் எங்களுக்கும் தெரியும்…”

“தெரியுமா… அம்மாவுக்குமா?”

“ஆமா…”

“ம்… அப்ப எங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு இருந்திருக்கிய. அப்படித்தானே…?”

“அதைப் பற்றி இங்க என்ன பேச்சு வேண்டியிருக்கு… அன்னைக்குச் செஞ்சாங்க இப்ப அனுபவிக்கிறாங்க… இன்னமும் அனுபவிப்பாங்க”

“ஏய் வேணி… என்ன பேசுறே நீ. அவங்க செஞ்சாங்கங்கிறதுக்காக நாம அவங்க கெட்டுப் போகணும்ன்னு நினைக்கிறது சரியில்லை… எனக்கென்னவோ அவனைப் போயிப் பார்த்துட்டு வரணும்ன்னு தோணுது…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவங்களுக்கும் நமக்கும் என்ன இருக்கு. தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்காதீங்க…” என்றபடி டம்ளரை வாங்கிக் கொண்டு போனாள்.

அவர்களைப் போல் இவர்களும் வன்மத்தை வளர்த்து வைத்திருக்கிறார்களே என்று நினைக்கும் போது அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்..? ச்சை மனித மனம் எவ்வளவு கேவலமாகச் சிந்திக்கிறது. ஒருத்தன் சாகக் கிடக்கிறான்னு தெரிஞ்சும்… இவர்களால் எப்படி வன்மத்தைச் சுமக்க முடிகிறது. அந்தக் குடும்பம் பண்ணுனதுக்கு இவன் என்ன பண்ணுவான்..? அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்குல்ல..? அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் பண்ணுச்சுக… என்று நினைக்கும் போது மனசு வலித்தது. மேற்கொண்டு இந்த விசயத்தில் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தபோது கண்டிப்பா ரகுவைப் போய் பார்த்துட்டு வரணும் என்பது மட்டும் எனக்குள் உறுதியானது.

ரகுவோட அப்பாதான் எனக்கும் அப்பா, ஆனா அம்மா வேற, அப்பாவோட மூத்த தாரத்துப் பையன் அவன், நான் சேர்த்த தாரத்துப் பையன். தனக்கு ஒரு குடும்பம் இருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்த பெண்ணை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து என்பதை விட ஏமாற்றி எங்கப்பா வைத்துக் கொண்டார் என்பதுதான் நிஜம். நானும் தங்கையும் பிறந்தபின் அம்மாவின் வற்புறுத்தலால் தாலி கட்டி மனைவி ஆக்கிக் கொண்டார். அதன்பின் ஒரு தம்பி பிறந்தான். அம்மாவை ஊரறிய மனைவியாக வைத்துக் கொண்டாலும் பெரியம்மா குடும்பத்துடன்  எங்களுக்கு எந்த உறவும் இல்லை. அப்பா இருக்கும் வரை அந்த வீட்டுக்குள் நாங்கள் போனதுமில்லை.

அந்த வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்தவன் ரகுராமன். என்னைவிட ஒரு வயது மூத்தவன். அப்பாவுக்கு இன்னொரு வீடு இருப்பதும், வாரத்தில் இரண்டு நாள் அந்த வீட்டில் அப்பா இருப்பார் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் வளர வளர அப்பாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டான். நாங்கள் வேறு ஊரில் ஒன்றும் இருந்து விடவில்லை. அதே ஊருக்குள் நாலு தெரு தள்ளித்தான் இருந்தோம். எங்காவது அந்தக் குடும்பத்து மனிதர்களை எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால் ஏதோ போர்க்களத்தில் எதிரியைப் பார்ப்பது போல்தான் அவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டு போவார்கள்.

அந்தக் குடும்பத்தில் சற்றே வித்தியாசமானவன் ரகு… அப்பா பண்ணியது தப்பு என்பவன் ஏனோ எங்களை தப்பானவர்கள் என்ற முத்திரை குத்தாமல் வைத்திருந்தான். நாங்கள் அக்னி நட்சத்திரம் குடும்பம் போல் வாழ்ந்தாலும் நாங்கள் இருவரும் பிரபு – கார்த்திக் போலில்லை. அவன் என்னிடம் எப்போதாவது பேசுவான். வீட்டு விசயங்களை எதையும் என்னிடம் பேசவோ கேட்கவோ மாட்டான். அவன் படித்த அதே கல்லூரியில்தான் நானும் படித்தேன். அந்தக் கல்லூரியில் ரவுடி எனக் கட்டம் கட்டப்பட்டவர்களில் அவனும் ஒருவன். என்னை யாராவது ஏதாவது சொன்னாலோ அடிக்க வந்தாலோ முதல் ஆளாய் வந்து கேட்பது அவன்தான். ராக்கிங் அப்பக் கூட என் பெயரைச் சொல்லி அவனை யாரும் எதுவும் சொல்லக் கூடாது. அதையும் மீறி அவனுக்கிட்ட ஏதாவது பண்ணுனா முதல் அடி என்னோடதாத்தான் இருக்கும்ன்னு சொல்லி வச்சிருந்ததால் என்னை யாரும் ராக்கிங் பண்ணவில்லை.

படிச்சி முடித்து அவரவர் வாழ்க்கை எனப் பாதை மாறியபோதும் எப்போதாவது என்னைப் பார்க்க நேர்ந்தால் எப்படியிருக்கே..? தம்பி, தங்கச்சி என்ன பண்றாங்க எனக் கேட்பான். தப்பியும் அம்மாவைப் பற்றி விசாரிக்கமாட்டான். நான் அந்த வீட்டில் யாரைப் பற்றியும் அவனிடம் கேட்கவும் மாட்டேன், அவன் சொல்லவும் மாட்டான்.

ஒரு வருடம் முன் அப்பா திடீரென இறந்த போது நாங்கள் அங்கே, அந்த வீட்டுக்குப் போனபோது சினிமாவில் வருவது போல் பெரியம்மாவின் உறவுகள் எங்களை உள்ளே விடமாட்டேன் எனச் சண்டை போட்டு, அடிக்க வர ‘சின்னச்சாமி சேர்த்து வச்சிக்கிட்டவ இல்லை அவ… அவளுக்கும் தாலி கட்டி, அதுவும் என்னோட குடும்பம்தான் என ஊருக்கே சொல்லித்தான் வாழ்ந்தார். அவளும் எல்லா முறைகளும் செய்யணும். இங்கதான் இருப்பா’ என்று சொல்லச் சில நல்லவர்களும் இருந்ததால் அப்பாவைத் தூக்கும் வரை எங்களை வேண்டா வெறுப்பாக இருக்க வைத்தவர்கள் அப்பாவை அடக்கம் பண்ணி விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் எங்களை அடிக்காத குறையாக அங்கிருந்து விரட்டினார்கள். அந்த நேரத்தில் எதாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். வந்த உறவுமுறையெல்லாம் இருக்கு என ரகு சொன்னபோது அவனது அக்காக்கள் குடும்பமும், மாமாக்களும் அவனை அடிக்கப்போய், உங்கப்பன் வச்சிருந்த குடும்பத்தை, நீ தூக்கிச் சொமக்கப் போறியா..?. அங்க ஒரு பொட்டச்சியும் இருக்கா… அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரு என்றெல்லாம் பேசிய போது அவன் எதுவுமே பேசாமல் நின்று விட்டான். கல்லூரியில் ரவுடி எனப் பெயர் வாங்கியவனை காலம் மாற்றி விட்டது போல என்றுதான் நினைத்தேன். அதன்பின் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

பெரியம்மாவும், அக்காள்களும் நாங்கள் சுடுகாட்டுக்குப் போன பின்னால் பேசிய வார்த்தைகளை அம்மாவும், தங்கையும் சொல்லி அழுதபோது அவர்கள் எவ்வளவு வன்மத்தை மனதில் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் அப்பாவுக்காகவே அவர்கள் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்கியது. இத்தனை கேவலமாகவா பேசுவார்கள்..? அம்மாவை கடைசி வரை தாலி கட்டாமல் வைத்திருந்தார் என்றால் இந்த மனிதர்கள் முன்னால் நாம் நின்றிருக்கவே முடியாமல் போயிருக்குமே… அவள் கழுத்தில் இருந்த தாலிக்காகத்தானே சுடுகாடு வரை செல்லவும், அவருக்கு மூத்தவன் முறை செய்யும் போது கூடவே இருக்கவும் முடிந்தது என்று நினைத்துச் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

அப்பா இறப்புக்குப் பின் அந்தக் குடும்பத்தை எங்கும் பார்க்கவே கூடாது என்பதாலேயே வேறு ஊருக்கு வேலையை மாற்றிக் கொண்டு வந்து விட்டோம். ரகுவோடு நான் பேசுவது அம்மாவுக்குத் தெரியும் என்பதால் இனிமேல் அவனுடன் பேசவோ அவனைப் பார்க்கப் போகவோ கூடாது என அப்பாவின் போட்டோ முன் சத்தியமும் வாங்கிக் கொண்டாள். இதோ இப்போது அவன் உயிருக்குப் போராடுகிறான் என்று கேட்டும் இவர்களால் அவர்கள் கொடுத்த வன்மத்தை திருப்பிக் கொடுக்க முடிகிறது. எனக்கு என்னவோ அப்படி இருக்க முடியவில்லை. இவர்களிடம் சொல்லாமல் போய் பார்த்து வருவது என முடிவெடுத்து அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு, மதுரைக்குப் பேருந்து ஏறினேன்.

நான் வேலம்மாள் மருத்துவமனை ரிசப்ஷனில் விசாரித்து அவர்கள் சொன்ன ஐசியூவுக்குப் போனபோது அண்ணியும் பெரியம்மாவும் அதன் வாசலில் கிடந்த சேரில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அண்ணிதான் அழுதபடி எழுந்தாள். பெரியம்மா பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“இப்ப எப்படி இருக்கான்..?” வார்த்தைகள் மெல்ல வெளியில் வந்து விழ, “இருக்கார்… ஒரு வாரத்துக்கு மேலாச்சு, நேத்து வரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை… இன்னக்கி காலையிலதான் முழிச்சார்… ஏதோ பேசினார்ன்னாங்க… நாங்க பார்க்கலை. முன்னேற்றம் இருந்தா ரெண்டு நாள்ல அறைக்கு மாத்திடலாம்ன்னு சொல்லியிருக்காங்க…” அழுதபடி சொன்னாள்.

“ம்… சரியாயிருவான்… எப்படியாச்சு…?”

“நைட்டுல வரும்போது லாரியில மோதி… கால் ரெண்டும் நல்ல அடி… எந்திரிச்சி நடக்க நாளாகும்ன்னு சொல்றாங்க…”

“தண்ணி அடிச்சிருந்தானா..?”

“ம்.. அந்தச் சனியனைத்தான் விட்டுத் தொலைய மாட்டேங்கிறாரே…” அழுதார்.

பெரியம்மா எங்களை முறைப்பது போல் தெரிந்தது.

“இனி மாறிடுவான்…” என்று சொன்னவன் அங்கு வந்த நர்ஸிடம் உள்ள போய் பார்க்கலாமா..? என்று கேட்டேன்.

“பார்த்துட்டு உடனே வர்றதுன்னா போங்க சார்”

“ம்…” என்றபடி கதவருகில் போனபோது “இவன் எங்கே வந்தான்..? இவனை எதுக்கு உள்ள போக விடுறீங்க..? இவங்களுக்கும் நமக்கும்தான் எந்த உறவுமில்லையில்ல. சும்மா எதையாவது காரணம் காட்டி இந்த வீட்டுக்குள்ள வரத்தான் நினைப்பாங்க… விட்டீங்கன்னா நாளைக்கி எங்களுக்கும் பங்கு இருக்குன்னு வந்து நிப்பானுங்க. டேய் முதல்ல இங்க இருந்து போடா…” எனக் கத்தியபடி வந்தார் மூத்த அக்காவின் கணவர் முருகன்.

“சார்… உங்க பிரச்சினையை வெளியில வச்சிக்கங்க… இது ஐசியூ… சத்தம் போடாதீங்க” என்றாள் நர்ஸ்.

பெரியம்மா எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அண்ணி என்ன சொல்வதெனத் தெரியாமல் முழித்தாள்.

நான் அங்கிருந்து நகராமல் நின்றேன். ‘உன்னைத்தான்டா சொல்றேன் காதுல விழலை’ அவர் கோபமாகப் பேசினார்.

பெரியம்மாவைப் பார்த்தேன். அவள் வெளியில் வெறித்துக் கொண்டிருந்தாள்.

நர்ஸிடம் ‘நீ கதவைத் திறம்மா… நான் பார்த்துட்டுப் போயிடுறேன்’ என்றேன்.

‘அதான் சொல்றாருல்ல… வச்சிக்கிட்ட உறவு எங்ககிட்ட ஒட்டிக்க வேண்டாம். உன்னோட மூச்சுக் காத்துப்பட்டா இன்னக்கி முழிச்சவன் அப்படியே கிடந்தாலும் கிடந்திருவான்… போயிடு’ பெரியம்மாதான் சொன்னாள்.

‘அத்தே’ எனக் கத்திய அண்ணி என்னைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

‘அதான் சொல்ல வேண்டியவங்களே சொல்லிட்டாங்கள்ல… போடா’ என்ற மூத்த அக்காவின் கணவர் வாய்க்குள் ‘நாயே’ என்று சொன்னது நன்றாகவே கேட்டது.

‘இங்க நான் உறவைச் சொல்லி ஒட்டிக்கவோ, ரகுவோட சொத்த எடுத்துக்கவோ வரலை. எங்கப்பாவோட மூத்த தாரத்துக்குக் குடும்பத்துல எங்கப்பா மாதிரி குணம் அவனுக்கிட்ட மட்டும்தான் இருந்துச்சு… இருக்கு. எம்மேல அன்பு வச்சிருந்தவன் அவன். அடிபட்டுக் கிடக்கிறான்னு கேள்விப்பட்டப்போ உங்களை மாதிரியே வன்மத்தைச் சுமந்துக்கிட்டு இருக்க என்னால முடியல. அவனைப் பார்க்க வந்தேன். பார்த்துட்டுப் போயிருவேன். என்னைய யாராச்சும் தடுத்தா, சும்மா இருக்க மாட்டேன்’ என அவரிடம் கையை உயர்த்திக்  காட்டிவிட்டு உள்ளே போனேன்.

ரகுவின் கால் இரண்டிலும் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. தலையில் கைகளில் எனச் சின்னச் சின்ன கட்டுக்கள்… கட்டுப் போடாத இடம் பாவம் செய்த இடமாய்த் தோன்றியது. அவனைப் பார்த்த போது எனக்குள் உடைந்தேன். கதறி அழுது விடக் கூடாது என்பதாய் என்னை நானே கட்டுப் படுத்திக் கொண்டு, மெல்ல அவனருகில் போனேன்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவனது வலது கையில் எனது கையை வைத்து அழுத்திப் பிடித்தேன்.

அவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. என் கண்ணிலும்தான்.

பரிவை சே,குமார்

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்

விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு

என்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும்

எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன்

பொற்கிழி விருது பெற்றிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *