அனாதிகளின்
ஆதித் துக்கம்
உரிமைகோர
இறைஞ்சுகிறது
முகாந்திரங்களை
உற்று நோக்கினால்
இரைகளை வசப்படுத்தாது
அறுந்து தொங்கும்
நூலாம்படை அது
பாவம் பாவனைகளில் ஒன்று
நுறைத்துப் பொங்கும்
யாவும் வெற்றுக் குமிழ்களென
திரும்புகையில்
மூலையில் ஒரு சிலந்தி
இயல்பாய் வலை பின்னுகிறது
—
நிலையில்லாமல் சுழலும் கேள்விக்குறி
ஒருவகையில் எந்நிலையில் நின்றாலும் பொருளென்னவோ கேள்வியே
இப்பொழுது என்னில் அது
ஏனென்பதை இழுத்து எப்போது முடியுமென்பதைத் தொக்கி
வெற்றைச் சுரண்டி ஒருவாறு
ஓயாத ஊசலைப்போல்
நிற்காது தொங்குகிறது முனை கூரிய கொக்கிபோல்
—
இனி நாம் பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை
வழக்கத்திற்குமாறான நடைமுறைகளை கையாண்டுகொண்டோம்
எவரும் அறியாத யுக்திகளையும்
புகுத்திக்கொண்டோம்
இனி நாம் பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை
இதுவரை நாம் பேசிய யாவையும்
அகப்படா நிறமியில் புதைக்க விழைகிறேன்
உன் பார்வை புரிகிறது
நான் எழுவதற்குள்
என் கரம் பற்றாதே!
ஞானம் கிளைத்துப் பூக்க
மேவிய வாசனையொரு
நெடிய கவிதை வாசிக்க
காலம் சுருங்கிக் கிடக்கையில்
பாவனைகள் ஒவ்வொன்றாய்
உயிர்பெற
அவன் தனிமையகன்று
இராவணன் ஆகியிருந்தான்.
மு. சுகுமாறன்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையில் உதவி வேளாண்மை அலுவலராக கடந்த 14 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன். நான் இதுவரை எந்தவிதமான தொகுப்பும் தொகுக்கவில்லை. புத்தகமும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பு கொலுசு மற்றும் படைப்பு ஆகிய இணைய இதழ்களில் கடந்த முன்று வருடங்களுக்கு முன்பாக என்னுடைய சில கவிதைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றது.