இரக்கத்தின் எல்லைக்கோடுகளில் பாவம் படர்ந்திருக்க
உன்னதத்தின் அளவீடுகளில் அதீதங்களின் எடையோ கணிசம்தான்
எத்தனை அம்புகள் புறப்பட்டாலும்
நாணின் விசும்பலில் புதைந்திருக்கிறது அன்பின் மென்மை
—
நீ
மௌனித்திருக்கும்
பொழுது
என்னுள் எழும்
வார்த்தைகள்
ஊதாவின் நீளம்
கொண்டது.,
ஆயினும்
நான்
உன் நிசப்தத்தின்
பெருவெடிப்பிற்காக
ஓசையிழந்து
அசையாதிருக்கின்றேன்
எனை
மூர்ச்சையாக்கு
உந்தன் ஓங்காரத்தால்…
—
ஓர் உயிர் உறங்குகிறது
இன்னுமொரு உயிரும்
மற்றொரு உயிரோ
பிரிதொரு நாளில் தொலைத்த
உறக்கத்தை தேடும் பொருட்டு
இந்த இரவை சல்லடையில் கிடத்தியிருக்கின்றது
ஆயினும் இந்த இரவு
ஏதோவொரு நிர்பந்தத்தின் பிடியினால்
நொடித்து நொடித்து தன் கருமை
நீக்குகின்றது
தேடிய உறக்கம் அவ்வுயிருடன்
இப்பொழுது
முற்றிலும் கருமை இல்லை இவ்விரவில்.
—
அவர்கள் கூடியிருந்த
இடத்தை விட்டு
சென்றுவிட்டார்கள்
பலனின்றி அசைந்த
மரக்கிளைகளின்
சலசலப்புகள் அங்கே
—
ஓர்
யாசகனைப்போல்
ஓரிரு
வார்த்தைகளை
எழுதிவைத்து
திரும்பத்திரும்ப
படித்துப் பார்க்கின்றேன்
துள்ளியெழும்
இரண்டு நாணயங்களிடும்
சத்தமே மிஞ்சுகிறது
நிரம்பியபாடு இல்லை
வெற்றுப் பக்கமாக
அவன் கையிலிருக்கும்
தட்டைப் போல.
மு. சுகுமாறன்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையில் உதவி வேளாண்மை அலுவலராக கடந்த 14 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன். நான் இதுவரை எந்தவிதமான தொகுப்பும் தொகுக்கவில்லை. புத்தகமும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பு கொலுசு மற்றும் படைப்பு ஆகிய இணைய இதழ்களில் கடந்த முன்று வருடங்களுக்கு முன்பாக என்னுடைய சில கவிதைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றது.