மூடிய பூங்காவிலிருந்து வெளியேறிய அமர்நாத்.

இன்று காலை சுசீ அலைபேசியில் பேசும்போது எனக்கு நண்பன் சொன்ன கதைதான் நினைவுக்கு வந்தது. நண்பன் வீட்டில் ஓரிரவு தங்க நேர்ந்தபோது இருவரும் நள்ளிரவு வரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துகொண்டே சுங்கச்சாவடி வரை சென்று திரும்பவும் கதை முடியவும் சரியாக இருந்தது. மூச்சு இரைக்க இரைக்க அவன் சொன்னான். ஆடி மாதக்காற்றுக்கு என் லுங்கி பறந்து கொண்டிருந்ததுகூட தெரியாமல் கதையின் ஆழம் என்னைக் கவ்வி இருந்தது.

நண்பன் சொன்ன அந்தக் கதையைச் சொல்வதற்குமுன் சுசீயும் நானும் பேசிக்கொண்டதை முதலில் பகிர்ந்துவிட்டு பிறகு அந்தக் கதைக்கு வருகிறேன்.

ஆர்வம் கொப்பளிக்கக் கேட்கிறாள் சுசீ..

‘’அதுக்குள்ள சமைச்சிட்டீங்களா’’

‘’ஆமாப்பா..அப்படியே விட்டுட்டா முடியாம போயிடுது.. அதான் காலையிலே முடிச்சிட்டேன்’’

‘’ஆமாமாம்..தனிமையில எதுவுமே செய்யத் தோணாது.. நம்மள அப்படியே அமுக்கிடும்’’

ஆமாம்..அவளுக்குத் தெரியாததா..மன அழுத்தத்தின் சுவடுகள் இன்னும் கசப்பாகப் படிந்திருக்கின்றன அவளிடம். கேட்டால் கதை கதையாய் சொல்வாள்.

‘’சுசீக்குட்டி ..மாமா இன்னிக்கி முருங்கக்கா சாம்பார் வச்சி வெண்டக்கா பொரியல் பண்ணியிருக்கேன்டா’’

‘’சூப்பர் மாமு.. ஆனா நான் ஒங்கிட்ட பேசமாட்டேன் போ”’’

‘’ஏன்டா’’

‘’நீதான் பாப்பவ தனியா விட்டுட்டுப் போயிட்டியே’’

‘’யார் சொன்னது.. நான் உங்கூடவேதான் இருக்கேன்.. கோயம்புத்தூர்ல இடையர்பாளயத்துல 29-A வுல சோபாவுல உட்கார்ந்துட்டு நீ வரைஞ்சி வச்சிருக்கர தஞ்சாவூர் ஓவியத்தப் பார்த்துட்டு ..’’

‘’போதும் போதும் நிறுத்து.. நீ என்ன சொன்னாலும் உங்கூட நான் கா.. பாப்பா பேசமாட்டேன் போ..’’

ஸ்பீக்கரிலிருந்து வழிந்த குரல் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போலிருந்தது. என்னைவிட்டு சிறிதுகாலம் பிரிந்திருக்க முடிவு செய்தது அவள்தான். இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்துவரும் அவளே இப்படியும் சொல்லி வருவதுதான் கூடுதல் அழகு.

‘’சுசீம்மா..என் செல்லம் இல்ல.. இப்பதானே மூணு நாளு தங்கிட்டு வந்தேன்.. இன்னும் ரெண்டு வாரம் பொறுத்துக்கோ..மாமா வந்திடுறேன்..’’

‘’ஒழுங்கா சமைச்சி சாப்பிடு.. அப்புறம் பயிற்சி விடாமபண்ணு.. இப்பல்லாம் நீ ஒண்ணும் காயகல்பம் பண்ற மாதிரியே தெரியில’’

‘’சரிடா இனிமே கரெக்டா பண்ணிடுறேன்டா’’

‘’ஒனக்கு ஒரு முறைதான் சான்ஸ்.. போனாபோவுதுன்னு உன்ன மன்னிச்சி உங்கூட வாழறேன்.. புரிஞ்சிக்கோ’’

‘’சரிப்பா..சரிப்பா’’

‘’என்ன சரிப்பா.. இந்த முறை மூணு வாட்டியும் ஒன்னுமே வரல வெறப்பாவே இல்ல. .நானும் சொல்லவேணாம்னு பார்த்தேன்.. எனக்கு ஒரு பிரச்ச்சினையும் இல்ல.. இது உன் உயிர் சார்ந்த விஷயம். என் மனம் சார்ந்தது இல்ல..புரிஞ்சிக்கோ’’

‘’ஆமாப்பா’’

‘’ஹீலிங் பண்ணி விட்டா அதை சரியா மெயின்டெய்ன் பண்ணிக்கணும் கொண்டக்கடல சாப்புடு.. விடாம அஸ்வினி முத்திரை பண்ணிட்டே இரு.. இன்னும் ஒருவாட்டி அந்தச் சுவட உங்கிட்ட நான் பாத்துட்டா அவ்வளவுதான்.. அப்புறம் நாம பிரியறத தவிர வேற வழியில்ல’’

‘’சரிடா.. இன்னிக்கி காலையிலே ஓரிதழ்தாமர சூரணம் தண்ணியில கலக்கிக் குடிச்சிட்டேன்.. கொண்டக்கடல நல்லெண்ணயில ஊற வச்சிருக்கேன்.. அஸ்வகந்தா லேகியம் நைட்டுக்கு தவறாம சாப்புடுறேன்.. சரியா..’’

‘’நீ ஒன்னும் எனக்காக செய்ய வேணாம்..ஒனக்காக செய்யி..’’

‘’சரிப்பா’’

‘’சொன்னா உனக்குக் கஷ்டமாகூட இருக்கும்.. ஆனா பத்து வருஷமா நீ என்னக் கொன்னத நினச்சிப்பாரு.. அப்போ என் வலி உனக்கு புரியும்..’’

‘’கண்டிப்பா’’

‘’இத உங்கிட்ட கேட்காம வேற யாருகிட்டபோயி நான் கேட்பேன். வெளியில சொல்லவும் முடியாம.. என் ஒடம்பு என் மனசு என் ஹார்மோன் எல்லாம் எப்பிடி வீணாப்போச்சி பாத்தியா.. கடைசியில மன அழுத்தம் அதுக்கு மருந்து.. இதெல்லாம் தேவயா சொல்லு.’’

பாவம் சுசீ…எப்போது பேச ஆரம்பித்தாலும் கடைசியில் அவள் வந்து நிற்பது அந்தப் புள்ளியில்தான்.. எனக்குதான் கேட்க முடியவில்லை.

கையிலிருந்த காலச்சுவடு நழுவியது.

ஏன் இப்படி ஆனது வாழ்வு.. அக்கி எனும் நரம்பு அம்மை தந்த பரிசா வாசக்டமி எனும் குடும்பக்கட்டுப்பாட்டால் வந்த வினையா.. அல்லது வாலிப விளையாட்டின் வட்டிமுதலா..

தோட்டத்து பப்பாளி மரம் நல்லதொரு கனியைத் தந்திருந்து. ஆரஞ்சு கலந்த மஞ்சள் பழம்.. அப்படியொரு இனிப்பு..அதைச் சுவைத்துக்கொண்டேதான் அவளிடம் பேசிகொண்டிருந்தேன்..

இப்போது பரவாயில்லை.. மருத்துவர் தந்த மருந்துகள், ஆலோசனைகள், சுசீ எனக்கு அளித்த ஹீலிங் புராசஸ் (அவள் சொல்கிறாள்..நம்பித்தானே ஆகவேண்டும்).. எல்லாம் சேர்த்து ஒருவாறு என்னைத்தேற்றியிருந்தது..

பத்து வருடங்களாக காமம் கடும் போராட்டமாக ஆகிப்போயிருந்தது கொடும்காமக் கடல் கடக்கும் குறிப்பறியாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக..

அந்த காலத்தில் நான் எழுதி வைத்திருந்த டைரி குறிப்புகளையும்

அப்போது நான் எழுதியிருந்த ஒரு கவிதையையும் சொல்லிவிட்டு நண்பன் சொன்ன அந்தக் கதைக்கு வருகிறேன்.

அந்த டைரி 2006ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது.

முகப்புப் பக்கத்தில் காணக்கிடைத்த வரிகள்

பதினெட்டாம் போர்

‘’யாரால வந்ததிந்த பாரதம்

அந்த பராசர முனிவருக்கும்

பரிமளகந்திக்கும் அவதரித்த

வியாச ரிஷியால

வந்ததிந்த பாரதம்..’’

ஜனவரி 06

மார்கழி குளிரில் விறைத்திருந்தன மரங்கள். முட்டையை உடைத்து வாணலில் ஊற்றியது போல கலங்கலான சூரியன். எழுந்திருக்கும்போதே சுசீ திருப்பள்ளி எழுச்சி போல ஒரு வரி சொன்னாள்.’ ராத்திரி முழுக்க மரப்பாச்சிக்கட்ட மாதிரி கெடக்க வேண்டியது..பக்கத்துல ஒரு கைய காலகூட போட்றதில்ல’ பதில் பேசாமல் நகர்ந்துவிட்டேன்.

ஜனவரி 09

ரஸம்போன கண்ணாடி வில்லைபோல மங்கிய ஒளியைக் கசிய விட்டபடி இருந்தது சூரியன். பதட்டமான் இரவு.. தடைப்பட்ட தூக்கம்.நேற்று மாலை சுசீ சொன்னது நினைவிற்கு வந்தது. ’தலை நிறைய பூவும் நெற்றியில பொட்டுமா உங்க மடியிலே கிடந்து செத்துடணும் மாமா..’’ பிறகு கேட்டாள்’ எனக்கு கை நிறைய வளையல் போட்டு விட்றீங்களா..’’அப்புறம்’’ நாம ஸ்வீட் சாப்புடலாமா.. ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் ரொம்ப ஊறுது.. ’’நான் முலைக்காம்புகளைத் திருகிக்கொடுக்க அவள் காமத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்டாள். நேற்று இரவு காண்டம் போட்டவுடன் விறைத்த குறிக்கு என்னவாயிற்று.. பிறகு ஒருவாறு தேற்றி ஒப்பேற்றினேன்.

ஜனவரி 11

பின்னிரவு நிலா பனியின் குளுமையில் ஊறியிருந்தது.நட்சந்திரங்கள் நமுத்துப்போன சோளப்பொரிகளைப்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பொதுமியிருந்தன பனிக்குள்.குளிரோடு சுசீயை அணைத்துக்கொண்டேன். ஏகாதசி அன்று வைத்துக்கொள்ளலாமா..சாத்திரம் பார்க்குமா ஆத்திரம்.பாதி சக்ஸஸ்..கெட்டியான தாது..பார்த்த மாத்திரத்தில் நிம்மதியான உறக்கம்..அவளுக்கும் கூட.

.பிப்ரவரி 10

எல்லாம் இந்த வாயால்தான்.. நான் ஒரு ஸ்திரீலோலன் என்று சொல்லி வைத்த கதைகளால் சுசிக்கு என்மேல் மரியாதை போய்விட்டதோ..

பிப்ரவரி 20

இன்று ஒரு கொடுமையான நாள். நான் இறந்து போன நாளில் இதுவும் ஒன்று. ஒரு மனைவி ஒரு கையாலாகாத கணவனை விரட்டுவதுபோல என்னைத்தள்ளியும், இடித்தும், அடித்தும், ஏளனமாக இழித்தும் பழித்தும்.. இதற்குப்பிறகும் நான் உயிர் வாழ ஆசைப்படுவதுதான் விசித்திரத்திலும் விசித்திரம். ’நீ ஒரு சைக்கோ..நீ ஒரு ஆம்பளையா’.. இன்னும் நிறைய மறந்துவிட்டது.

.பிப்ரவரி 28

நேற்று தூக்கமில்லாமல் இரவெல்லாம் புரண்டு கொண்டிருந்தேன். காலையில் சோர்வாக இருந்தது. மனதில் காமத்தின் குரல் சில்வண்டுகளின் ரீங்காரம் போல் ஒலித்துக்கொண்டிருந்தது. தூங்கும்போது சுசீ கேட்டாள்’’ கால் மட்டும் போடுங்க மாமா’’ கால்களைப் போட்டுக்கொண்டதும் ‘’அப்பா.. நீங்க இல்லாட்டி என்னால இருக்கவே முடியாது’’

மார்ச் 15

எனக்குள் ஒரு காட்டுமிருகத்தின் தினவு. சுசீயுடன் முயங்கினேன். ஒருவழியாக முடிக்கும்போது அவள் அதிர்ச்சியின் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டாள். நான் சுருண்டு படுத்துக்கொண்டேன். இரவு ஒரு பூனையைப்போல கெதாவிக்கொண்டே அலைந்தது.

பிப்ரவரி 22

என் கைகளை எடுத்து முலைகளைப் பற்றச் சொல்கிறாள் சுசி. எனக்கு முழங்கை வலிக்கிறது. முடியவில்லை என்கிறேன்.. அவளும் விடாமல் தொடர்கிறாள். நான் பிணைய எத்தனிக்கிறேன்.. துவண்டு விடுகின்றன கைகள் வெட்டிய வாழைத்தண்டுகள் போல..

மார்ச் 10

நல்ல விருந்து.. பசியாறவில்லை அவளுக்கு.. முழுமையாய் படைக்கவில்லை நான்.

மார்ச் 16

நேற்றைய கனவு கொடுங்கனவு. படரத்தூண்டுகிறாள் சுசி.. மூடு இல்லையென்றும் இப்போதுதான் ஸ்கலிதம் ஆகியது என்றும் லுங்கியைத் தூக்கிக் காண்பித்து மறுத்துவிடுகிறேன்.

மார்ச் 20

பகலில் சுசியோடு பயங்கரமாகச் சண்டை..’’வேலைக்கிப் பயந்துகிட்டு காயவேண்டியது..’’ அவள் சொல்லவும் பொசுக்குன்னு கோபம் வந்துவிட்டது எனக்கு.

ஆகஸ்டு28

கனவில் குறி விறைக்கும்போதே கொட்டிவிடுகிறது.. ஆண்மை அந்த அளவிற்கு ஸ்ட்ராங்கா ..டாக்டரைப் பார்த்தால் பரவாயில்லை.. என்னால் திருப்தி அடையாத அவள் உடல்தான் அவளை அப்படிப் பேசவைக்கிறதா

செப்டம்பர் 12

இரவு மீண்டும் ஒரு துக்கம் கவிந்த இரவை அவளுக்குப் பரிசளித்தேன். நெஞ்செல்லாம் ஜாதி மல்லியைக்கொட்டி ஒரு வெட்டியான முயக்கம். என்னால் முடியவில்லை. தூக்கத்தில் அவள் உளறினாள். ’’மாமா மூலையில ஒரு விளக்கு மட்டும் எரியுது.. என்ன ஸ்டூலுல உக்கார வச்சிருக்காங்க.. நீங்க வந்து பச்சக்கலர் பட்டுப்புடவை போர்த்தி விடறீங்க..’’ கனவில் பேசுவதைப்போல ஏதோ பிதற்ற மனம் வலித்தது.

செபடம்பர் 18

அழகான மாலை வெயிலாய் ஆரம்பித்த வாழ்க்கை இன்று கடும்பகலின் கொடும் வெயிலாய்..வெம்பரப்பாய்..

செப்டம்பர் 20

காலையில் இருந்தே ஊறுது ஊறுது என்கிறாள். எனக்குதான் ஊற்று வற்றிவிட்டதுபோல தோணுது. சுசியிடம் ஒரு நாய்க்குட்டி போல படுத்துக்கொள்கிறது. யார்க்குரைப்பேன்.. என்ன செய்வேன்..ஏதும் அறிந்திலனே.

அக்டோபர் 02

பாதிகிணறு தாண்டியதும் வழக்கம்போல படுகுழியில் விழுந்தேன். ’’என்னங்க வந்துடிச்சா..’’ கடைசி மூச்சி பிரியும்போது கேவுவதைப்போலக் கேவினாள் சுசீ. பெரு மூச்சோடு வெவ்வேறு பக்கமாய் திரும்பிக்கொண்டோம். முழுகிணறு தாண்டுவது எக்காலம்.

அக்டோபர் 11

‘’ஒருவன் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாவிட்டால் தங்கள் இருவருக்கிடையே எழும் எப்பிரச்சினைகளையும் அவனால் தீர்க்க இயலாது’’– ஓஷோ

‘’சிகப்புச் சேலையில் சுசீயும் நினைவில் கொள்ள முடியாத நிறமிழந்துபோன நிறத்தில் நானும் நடந்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் முன்னே ஒரு திடல் விரிந்தது. பசுமையான புல் அடர்ந்த விளையாட்டுத்திடல். யாருமற்றத் திடல்.என்னையும் சுசீலாவையும் தவிர அங்கே தூரத்தில் இரண்டொரு மாடுகள் அசைந்து கொண்டிருந்தன. அதிலிருந்து ஒன்று பிரிந்து தாவியபடி எங்களை நோக்கி ஓடி வந்தது.மூர்க்கம் கொண்ட காளை. ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போனோம். நிதானிப்பதற்குள் சுசீயைக் குறிவைத்து சீறிப்பாய்கிறது காளை. சிகப்புச்சேலையில் திடலைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடுகிறாள். நானும் என் பங்கிற்கு சூரு காட்டி காளையை என் பக்கமாகத் திருப்பிவிட்டு அவளைத் தப்பிக்க வைக்கப் போராடுகிறேன். நேரம் போகப்போக காளையின் சீற்றம் எகிறிக்கொண்டே போகிறது. இதோ முடிந்தது. களைத்து விழப்போன அவள்மீது குறிவைத்துப் பாய்கிறது காளை. சட்டென்று அவளுடைய சிகப்புச்சேலையை உருவி வீசுகிறேன். அவளை வேறொரு திசைக்குத்தள்ளிவிடுகிறேன். சேலை காற்றுக்கு வர்ணம் பூசியபடி சிகப்பாய் பறக்கிறது.காளை காற்றைத் துரத்தியபடி முன்னே பாய்ந்து செல்கிறது. உருண்டிருந்த அவளை அணைத்தபடி மெல்ல உருள்கிறேன்.’’

தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தேன். சுசீ தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

‘’என்னை விட்டுட மாட்டீங்ல்ல’’

‘’செத்தாலும் நான் உங்க மடியிலதான் சாகணும்’’

‘’அவகூட நீங்க போற மாதிரி கனவு  வந்துச்சி.. அப்படியெல்லாம் நடந்துட்டா என்னை உயிரோடு பார்க்கமுடியாது’’

இன்னும் என்னென்னவோ பிதற்றினாள். குழறினாள்.குமுறினாள். எரிச்சலாக இருந்தாலும் அணைத்துக்கொண்டு சமாதனப்படுத்தினேன்.

அக்டோபர் 18

பழம் பூ.. பழம் பால்.. பழம் பாய் என்று தோல்வியில் முடிந்தது நேற்றைய கலவி. சுசீ தன்னால் சரியாக ஒத்துழைக்க முடியவில்லை என்று சமாதானம் சொன்னாள். என்னைத் தேற்றுவதற்காகச் சொல்லும் வார்த்தைகளா.

டைரி குறிப்புகள் முடிந்து கடைசி பக்கத்தில் இந்தக் கவிதை எழுதியிருந்தேன்.

மூடிய பூங்கா

பயமாயிருக்கிறது

வீடு திரும்ப

திறந்த வாயுடன்

கவ்விக்கொள்ளக்

காத்திருக்கிறது

என் படுக்கையறை

தளர்ந்து தொங்கும் ஆவலை

பிடித்து உலுக்கும் அவளை

என்ன சொல்லித்தேற்றுவது

புகையும் சிகரெட்டுடன்

மெல்ல வெளியேறுகிறேன்

மூடிய பூங்காவிலிருந்து

இப்படித்தான் தன் மனைவியிடமிருந்து மெல்ல வெளியேறிய அமர்நாத் என்ற மனிதனின் அந்தக் கதையை நண்பன் சொல்லத்துவங்கினான்.

ஜெகதீஸ்பாபு.. சிரிச்சவாயன்..சிரித்தால் வாய் காதுவரைக்கும் நீளும். அவன் சிரிப்பில் அனைவரும் சிக்கிக்கொள்வார்கள். சுஜாவும் சிக்கிக் கொண்டாள்.

ஜெ.பி இருபத்தோரு வயது இளைஞன்.. காலேஜ் முடித்த கையோடு டெலிகாம் நிறுவனத்தில் வேலை. அவனது செக்க்ஷனில் டெக்னீசியனாக சுஜா..

சுஜாவிடம் சிரிப்பில்லாததைக் கண்டுபிடித்துவிட்டான் ஜெ.பி. முகத்தில் ஒரே இறுக்கம்.. சோகம் கப்பிக்கிடந்த போதிலும் அவள் அழகான அழகு ஜெ.பியை என்னவோ செய்தது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த சுஜாவை ஜெ.பியின் பேச்சும் சிரிப்பும் சற்று கவனிக்க வைத்தது. காலம் கனியக் கனிய கனியவும் வைத்தது.

ஜோக் சொல்லிவிட்டு என்ன மேடம் கொஞ்சம் சிரிக்கலாமே என்பான் ஜெ.பி. சுஜா முறைப்பாள். சட்டென்று எழுந்து சென்றுவிடுவாள்.

பூக்கள் இல்லா மாலையாக இருந்த சுஜாவின் தலையில் ஒரு ஒற்றை ரோஜா பூத்தது. பிறகு தொங்கத் தொங்க மல்லிகைச்சரம் மணத்தது.. காதுகளில் யானைக்கால் ஜிமிக்கி மேஜிக் காட்டியது.. ஜெ.பியின் சிரிப்பு சுஜாவின் உதட்டில் மலர ஆரம்பித்தது.

‘’என்ன ஜெ.பி இன்னிக்கி ஒன்னும் ஜோக் இல்லியா’’

சிரிப்பும் வாசனையுமாக சுஜா மாறிப்போனாள்.

அமர்நாத் அலுவலக வேலையாக வெளியில் சென்றுவிடுவது வழக்கம். அப்போதெல்லாம் சுஜா வீட்டுக்கு வந்துவிடுவான் ஜெ.பி.மூன்று வயது பையனுக்கு என்ன தெரியப்போகிறது.

ஆனால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் அமர்நாத்துக்குத் தெரிய வந்தது. ஆள் அம்போடு சென்று ஜெ.பியை விரட்டிவிட்டு வந்தான்.. ஜெ.பி ஒரு பயந்தாங்கொள்ளி.. அன்றிலிருந்து சுஜாவோடு பேசுவதையே நிறுத்திவிட்டான்..

சுஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. திடீரென ஒரு இருட்டு.. காரணம் கேட்டாலும் ஒதுங்கிப்போகிறான் ஜெ.பி.

‘’சாரி மேடம்.. இனி உங்க வாழ்க்கையில நான் குறுக்கிடல.. என்ன மறந்துடுங்க ப்ளீஸ்..’’

பளிச்சென்று எல்லாம் புரிந்தது போலிருந்தது.

அமர்நாத்திடம் நேரிடையாகக் கேட்டுவிட்டாள்.

‘’ஆமாம்..அவன் இனிமே இங்கவந்தா கொன்னுடுவேன்’’

படாரென்று உடைந்து விழுந்தது சுஜாவின் மனம். அன்றிலிருந்து அவள் வேலைக்குப் போவதைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே முடங்கினாள். அறையைச் சாத்திக்கொண்டு இருட்டில் அமிழ்ந்தாள்.

ஒருவாரம் போனது.. சமைப்பது,குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது அவ்வளவுதான்.. மற்றபடி பொழுதெல்லாம் படுக்கையில் விழுந்து கிடந்தாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அமர்நாத் கேட்டான்.

‘’ஏன் சுஜா இப்படி இருக்கற.. வேலைக்கிப் போகாம.. சிரிக்காமக் கொள்ளாம எதையோ பறிகொடுத்த மாதிரி’’

கேட்டுவிட்டு மெதுவாக அவளது தலையைக் கோதச்சென்றான்.

‘’ஏய்..கைய எட்றா’’

திகைத்து விலகினான் அமர்நாத்.

‘’ஆமான்டா.. பறிகொடுத்துட்டண்டா.. என் புருஷன் செத்துட்டான்டா.. பூவும் பொட்டும் இனி எதுக்குடா’’

தலைவிரி கோலமாக ஆடினாள்.

அமர்நாத் ஆடிபோய்விட்டான்.

‘’இனி ஒருவாட்டி ஒன் கையால என்னத்தொட வந்தியினா கொல விழும் பாத்துக்கோ.. எதோ இந்த புள்ளைக்காக உசுரோட இருக்கேன்.. மரியாதையா ஓடிப்போயிடு.. கொலகாரியா ஆக்கிடாத..’’

கொலநடுங்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அமர்நாத்.

‘’என்னடா பாக்குற..என் வாழ்க்கையே அழிச்சிட்டல்ல.. ஒரு புள்ளப்பெத்தக் கையோட ஒன் பவுசு வெளுத்துடுச்சி.. வெறும்பயலா ஆயிட்டே..இதான் சாக்குன்னு ஆபிஸே கதின்னு போயிட்டே.. ஒரு டாக்டர்கிட்ட காட்டுவோம்.. சரியான வைத்தியம் பண்ணிக்குவோம்.. நம்பள நம்பி ஒரு உயிர் வந்திருக்கே.. வச்சிக் காப்பாத்துவோம்னு நெனச்சியாடா.. பொண்டுகப்பயலாட்டம் ஆக்கி வச்சா கொட்டிப்ப..கொறட்ட அடிச்சிட்டு கவுந்துக்குவ..’’

சிலைபோல நின்றுவிட்டான் அமர்நாத்.

‘’ஏன்டா பேசமாட்டேங்கற.. செய்ய வருவ.. வேணாம்னாலும் கேட்க மாட்ட.. வச்ச உடனே அய்யய்யோ வந்துடுச்சி.. அய்யய்யோ வந்துடுச்சின்னு சுருண்டுக்குவ.. ச்சீ.. இதெல்லாம் ஒரு பொழப்பாடா’’

அறையின் இருட்டில் அவள் ஒரு பேய் போல தெரிந்தாள் அமர்நாத்தின் கணகளுக்கு.

‘’ஆமான்டா.. அவன் தந்தான்டா.. நீ தராத அத்தனையும் அவன் தந்தான்டா..

இந்த ஆறுமாசமாதான்டா நான் வாழறேன்..அவந்தான்டா என் புருஷன்..நீ என்னத் தொடவேக்கூடாதுடா..போடா வெளிய..’’

உச்சி உறும வெயில் கண்ணைக்கூசிட தெருவில் இறங்கி நடந்தான் அமர்நாத். தெருத்தெருவாக திரிந்தான். என்ன செய்வது என்று புரியாமல் அலைந்தான். யாரிடமோ ஜெ.பியின் மொபைல் எண்ணை  வாங்கிக்கொண்டான். குழம்பிப்போன மனம் தெளிய ஆரம்பித்தது.

ஒருநாள் கைப்பேசியிலிருந்து ஜெ.பியை அழைத்தான்.

‘’ஹலோ..யாரு’’

‘’தம்பி உங்கூட கொஞ்சம் பேசணும்.. போன கட் பண்ணிடாத..’’

‘’நீங்க யாருங்க ..உங்களுக்கு என்னா வேணும்’’

‘’நான் சுஜாவோட ஹஸ்பென்டு பேசறன்பா.. சுஜாவுக்கு நீ வேணும்பா.. எனக்கு சுஜா வேணும்பா. அவ இல்லன்னா நான் இருக்கவே மாட்டன்பா.. அவ்ளோ லவ்வுபா.. லவ் மேரேஜுப்பா எங்களோடது.. நான் ஒரு வாரம் ஆபிஸ் வேலயா சென்னைப் போறேன்.. நீ விட்டுக்கு வா தம்பி..அவள் பைத்தியம் ஆயிடுவாளோன்னு பயமா இருக்கு.. வந்து பாத்துக்கோ தம்பி..உன் கால புடிச்சிக் கெஞ்சிக் கேட்கறன்பா’’

அமர்நாத்தின் கண்களில் கண்ணீர் வழிந்ததாக சொன்ன நண்பன், ஜெகதீஷ்பாபு அமர்நாத்துக்கு என்ன பதில் சொன்னான் என்பதைச் சொல்லவில்லை.

சுப்பு அருணாச்சலம்.

நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.

ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *