பலூன் விற்பவன் பறந்து போகிறான்
மறு நாள் நீதிமன்றச் சதுக்கத்தில் வேலை மும்முரமாக நடந்தது: தச்சர்கள் பத்து வெட்டு மேடைகள் கட்டுவதில் முனைந்திருந்தார்கள். காவல் படைப்பிரிவு ஒன்று அவர்களுடைய வேலையை மேற்பார்த்துக் கொண்டிருந்தது. தச்சர்கள் விருப்பம் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
“கம்மியர்களுக்காகவும் சுரங்கத் தொழிலாளர்களுக்காகவும் வெட்டு மேடைகள் கட்ட எங்களுக்கு மனமே இல்லை!” என்று ஆத்திரத்தோடு சொன்னார்கள் அவர்கள்.
‘அவர்கள் எங்கள் சோதரர்கள்.”
“உழைப்பவர்கள் எல்லோரையும் விடுவிப்பதற்காக அவர்கள் சாவை மதியாமல் போராடினார்கள்.”
“பேச்சு நிற்கட்டும்!’ என்று படைப் பிரிவுத் தலைவன் அடித் தொண்டையைப் பிய்த்துக் கொண்டு கத்தவே, கட்டுமானத்திற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த பலகைகள் அந்தக் கூச்சலால் தடதடவென்று சரிந்தன. “பேச்சை நிறுத்துங்கள், இல்லாவிட்டால் உங்களைச் சவுக்குகளால் விளாறும்படி உத்தரவு இடுவேன்!”
காலை முதல் வெவ்வேறு பக்கங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நீதிமன்றச் சதுக்கத்துக்கு வரத் தலைப்பட்டார்கள்.
காற்று பலமாக வீசிற்று, புழுதி பறந்தது. குறிப் பலகைகள் அசைந்தாடின, கறுமுறுத்தன.
தொப்பிகள் தலைகளிலிருந்து கழன்று, துள்ளிக் கொண்டிருந்த வண்டிகளின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்து உருண்டன.
ஓர் இடத்தில் காற்றின் காரணமாக நம்பவே முடியாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. குழந்தைகளுக்கு வண்ண பலூன்கள் விற்றுக் கொண்டிருந்தவனைக் காற்று பலூன்களோடு சேர்த்து அடித்துக் கொண்டு போய் விட்டது.
விசித்திரமான இந்தப் பறப்பைப் பார்த்த குழந்தைகள் ‘ஆகா, பலே!” என்று ஆரவாரித்தார்கள்.
அவர்கள் கைகளைக் கொட்டினார்கள், ஏனென்றால், முதலாவதாக, காட்சி கவனத்தைக் கவர்ந்தது, இரண்டாவதாக, பறந்து கொண்டிருந்த பலூன் விற்பவனுடைய சங்கடமான நிலைமை குழந்தைகளுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி அளித்தது. குழந்தைகள் இந்த விற்பனையாளனிடம் எப்போதுமே பொறாமை கொண்டிருந்தார்கள். பொறாமை கெட்ட உணர்வுதான். ஆனாலும் என்ன செய்வது? சிவப்பும் நீலமும் மஞ்சளுமான பலூன்கள் கண்ணைப் பறித்தன. அந்த மாதிரி ஒரு பலூன் வைத்துக் கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசையாய் இருந்தது. விற்பவனிடம் அவை ஏராளமாக இருந்தன. ஆனால் அற்புதங்கள் நிகழ்வது இல்லையே! எவ்வளவுதான் சொன்னபடிக் கேட்டாலும் எந்த ஒரு பையனுக்கோ, எவ்வளவுதான் கவனம் உள்ளவள் ஆனாலும் எந்த ஒரு பெண்ணுக்கோ, சிவப்போ, நீலமோ, மஞ்சளோ, எந்த ஒரு பலூனையும் வாழ்க்கையில் ஒரு தரம் கூட விற்பனையாளன் பரிசு கொடுத்ததில்லை.
இந்த வறண்டதனத்துக்காக இப்போது விதி அவனைத் தண்டித்திருந்தது. பலூன்கள் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி நகரத்துக்கு மேலே பறந்து சென்றான் அவன். பளிச்சென்று நீலமாய் இருந்த வானத்தில் இந்த பலூன்கள் பல நிற முந்திரிப் பழங்களின் மாயமான பறக்கும் குலை போலத் தோற்றம் அளித்தன.
“காப்பாற்றுங்கள்!” என்று எதிலும் நம்பிக்கை இல்லாமல் கால்களை வெட்டி வெட்டி உதைத்துக் கொண்டு கத்தினான் விற்பனையாளன்.
அவனுடைய கால்களில் வைக்கோல் செருப்புகள் இருந்தன. அவை அவனுக்கு மிகவும் பெரியவை. அவன் தரையில் நடந்து கொண்டிருந்த வரையில் எல்லாம் நல்லபடியாக வாய்த்தது. செருப்புகள் நழுவாமல் இருப்பதற்காக அவன் நடைபாதையில் கால்களைச் சோம்பேறி போல இழுத்து இழுத்து வைத்தான். இப்போது காற்றில் மிதந்த போதோ, இந்தத் தந்திரத்தைக் கடைப்பிடிக்க அவனால் முடியவில்லை.
“நாசமாய்ப் போக!”
பலூன்களின் கொத்து மேலே எழும்பி, கிரீச்சிட்டபடிக் காற்றில் மிதந்து போயிற்று. ஒரு செருப்பு எப்படியும் கழன்று விட்டது.
“பார்! வேர்க்கடலை! வேர்க்கடலை!” என்று கத்தினார்கள் கீழே ஓடிக் கொண்டிருந்த குழந்தைகள்.
விழுந்து கொண்டிருந்த செருப்பு வேர்க்கடலை போலத்தான் இருந்தது.
அந்த நேரத்தில் வீதியில் போய்க் கொண்டிருந்தார் நட்டுவனார். அவர் நிரம்ப ஒயில் உள்ளவராகக் காணப்பட்டார். சின்ன உருண்டைத் தலையும் மெல்லிய கால்களுமாக நெட்டையாய் இருந்தார். கொஞ்சம் பிடில் வாத்தியம் போலவும் கொஞ்சம் வெட்டுக்கிளி போலவும் தோற்றம் அளித்தார். புல்லாங்குழலின் ஏக்கம் ததும்பும் இசைக்கும் நர்த்தகர்களின் கனிந்த சொற்களுக்குப் பழகி இருந்த அவருடைய நயமுள்ள காதுகளால் குழந்தைப் பட்டாளத்தின் உரத்த மகிழ்ச்சிக் கூச்சல்களைத் தாங்க முடியவில்லை.
“கூப்பாட்டை நிறுத்துங்கள்!” என்று கோபித்துக் கொண்டார். “இப்படி இரைந்து கத்தலாமா? அழகான, இனிமையாக இசைக்கும் சொற்களில் மகிழ்ச்சியை வெளியிட வேண்டும்… உதாரணமாக…”
அவர் நாகரிகப் பாங்கில் நின்று கொண்டார், ஆனால் உதாரணம் காட்ட அவருக்கு வாய்க்கவில்லை. எல்லா நட்டுவனார்களையும் போலவே பெரும்பாலும் கீழே, கால்களுக்கு அடியில், பார்க்க அவர் பழகி இருந்தார்! பாவம்! பாவம்! உயரே நடந்ததை அவர் பார்க்கவில்லை.
விற்பனையாளனின் செருப்பு அவருடைய தலையில் விழுந்தது. அவருடைய தலை சின்னது ஆகையால், பெரிய வைக்கோல் செருப்பு தொப்பி போல அதற்குப் பொருந்திற்று.
நய நாகரிகம் உள்ள நட்டுவனார் சண்டிமாடுகளை விரட்டுபவன் போல வீரிட்டார். செருப்பு அவருடைய பாதி முகத்தை மூடிவிட்டது.
குழந்தைகள் வயிறுகளைப் பிடித்துக் கொண்டார்கள்: “ஹ-ஹ-ஹா! ஹ-ஹ-ஹா!”
எங்கள் நட்டுவனார் தாதக்கத்தையார்
எப்போதும் கீழேயே பார்த்திடுவார்.
எங்கும் எலி போலே கீச்சிடுவார்,
இரு மடங்கு நீள மூக்குடையார்.
எங்கிருந்தோ வந்த வைக்கோல் செருப்பு
இங்கவர் மூக்கில் முளைத்தது பார்!
எந்த நொடியிலும் மறு பக்கம் குதித்து ஓடி ஒளியத் தயாராகச் சுற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து கொண்டு இப்படிப் பாடினார்கள் சிறுவர்கள்.
நட்டுவனாரோ, “ஐயோ!” என்று முனகினார். “ஐயோ, நான் எப்படித் துன்பப்படுகிறேன்! நடனக் காலணியாக இருந்தாலாவது பரவாயில்லை. இதுவோ, அசிங்கம் பிடித்த, முரட்டுச் செருப்பு!”
முடிவில் என்ன நடந்தது என்றால் நட்டுவனார் கைது செய்யப்பட்டார்.
“அன்பரே, உங்கள் தோற்றம் படுகோரமாய் இருக்கிறது. பொது அமைதியை நீங்கள் குலைக்கிறீர்கள். ஒருபோதுமே இப்படிச் செய்வது தகாது, இந்த மாதிரிக் கலவரம் நிறைந்த நேரத்திலோ, கூடவே கூடாது” என்றார்கள் அதிகாரிகள்.
நட்டுவனார் கைகளைப் பிசைந்தார்.
“எப்பேர்ப்பட்ட பொய்! எந்த மாதிரிப் படாப்பழி! நடன மெட்டுக்களுக்கும் புன்னகைகளுக்கும் நடுவில் வாழ்பவன் நான், தார ஸ்தாயி இசைக் குறி போன்ற உருவம் உள்ளவன் நான். பொது அமைதியை என்னால் குலைக்க முடியுமா எங்காவது? ஓ ஓ!’ என்று தேம்பினார் நட்டுவனார்.
அப்புறம் நட்டுவனாருக்கு என்ன நேர்ந்ததோ தெரியாது. தவிர, பார்க்கப் போனால் அதைத் தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலும் இல்லை. பறந்து கொண்டிருந்த பலூன் விற்பவனின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்வது அதை விட எவ்வளவோ முக்கியம். நல்ல டாண்டெலியன் மலர் போல அவன் பறந்து கொண்டு போனான்.
‘“இது மானக்கேடு! எனக்குப் பறக்க ஆசை கிடையாது! எனக்குப் பறக்கவே தெரியாது…” என்று ஒப்பாரி வைத்தான் அவன்.
ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. காற்று வலுத்தது. பலூன் கொத்து இடைவிடாமல் மேலே போயிற்று. காற்று அதை நகருக்கு வெளியே, மூன்று தடியர்களின் அரண்மனையின் பக்கம் அடித்துச் சென்றது.
சில சந்தர்ப்பங்களில் கீழே பார்க்க விற்பனையாளனுக்கு வாய்த்தது. அப்போது கூரைகளையும் அழுக்கடைந்த நகங்கள் போல் இருந்த ஓடுகளையும் குடியிருப்பு வட்டாரங்களையும் இளநீலமான குறுகிய நீரையும் கட்டுக்குட்டான குழந்தைகள் போலக் காணப்பட்ட மனிதர் களையும் பச்சைப் பொங்கலை நிகர்த்த தோட்டங்களையும் அவன் கண்டான். நகரம் குண்டூசியில் குத்தியது போல அவனுக்குக் கீழே சுழன்றது.
நிலைமை மோசமாயிற்று.
“இன்னும் கொஞ்ச நேரம் போனால் நான் மூன்று தடியர்களின் பூங்காவில் விழுந்து விடுவேன்” என்று கலவரத்துடன் எண்ணம் இட்டான் விற்பனையாளன்.
அடுத்த நிமிடம் அவன் மெதுவாகவும் மிடுக்காகவும் அழகாகவும் பூங்காவுக்கு மேலே பறந்து, படிப்படியாகத் தரையை நெருங்கினான். காற்று அடங்கிவிட்டது.
“ஒருவேளை இப்போது நான் தரையில் இறங்கி விடுவேன். ஆட்கள் என்னைப் பிடிப்பார்கள். முதலில் நன்றாக அடி கொடுப்பார்கள். பிறகு சிறையில் அடைப்பார்கள். அல்லது, வீணாக நேரம் தாழ்த்தாமல் சட்டென்று தலையை வெட்டி விடுவார்கள்” என்று நினைத்துக் கொண்டான் பலூன்காரன்.

அவனை ஒருவரும் பார்க்கவில்லை. ஒரு மரத்திலிருந்துதான் மிரண்டு போன பறவைகள் சிவ்வென்று பறந்து நாலா பக்கமும் சிதறின. பல நிற பலூன்களின் பறக்கும் கொத்திலிருந்து மேகத்தின் நிழல் போன்ற மெல்லிய நிழல் விழுந்தது. கப்பிப் பாதையிலும் பாத்தியிலும் தாராவின் மேல் சவாரி செய்து கொண்டிருந்த பையனின் சிலையிலும் பாராக் கொடுக்கையில் தூங்கி விட்ட காவல் படையினன் மேலும் கண்ணுக்கு இனிய வானவில் வண்ணங்களைப் பரப்பியபடி அடி வழுகிச் சென்றது. இதனால் காவல் படையினனுடைய முகத்தில் வேடிக்கையான மாறுதல்கள் ஏற்பட்டன. அவனுடைய மூக்கு பிணத்தினுடையது போலச் சட்டென நீலம் பாரித்தது, பின்பு செப்படி வித்தைக்காரனுடையது மாதிரிப் பச்சை ஆயிற்று, முடிவில் குடிகாரன் மூக்கு போலச் சிவப்பு ஆயிற்று. ‘பல வண்ணக் காட்சிக் கருவியின் கண்ணாடிகள் இப்படித்தான் நிறத்தை மாற்றிக் கொண்டு இடம் மாறிய வண்ணமாய் இருக்கும்.
விதியை முடிவு செய்யும் கணம் நெருங்கிற்று: அரண்மனையின் திறந்த சன்னல்களின் பக்கம் போனான் பலூன்காரன். அவற்றில் ஒன்றுக்குள் இதோ தூவி போலப் பறந்து புகுவான் என் பதில் அவனுக்குச் சந்தேகமே உண்டாகவில்லை.
அப்படியே நடந்தது.
பலூன்காரன் சன்னலுக்குள் பறந்து புகுந்தான். அது அரண்மனைச் சமையல் அறையின் சன்னல். மிட்டாய்ச் சாலை அது.
நலைக்கு நாள் நடந்த கலகம் வெற்றிகரமாக அடக்கப்பட்டு விட்டதை ஒட்டி மூன்று தடியர்களின் அரண்மனையில் அன்று விருந்துக் கொண்டாட்டம் ஏற்பாடாகி இருந்தது. மூன்று தடியர்களும் அரசு ஆலோசனை மன்றத்தார் எல்லோரும் பரிவாரங்களும் மதிப்புக்கு உரிய விருந்தாளிகளும் விருந்துக்குப் பிறகு நீதிமன்றச் சதுக்கம் போவதாய் இருந்தார்கள்.
என் நண்பர்களே, அரண்மனை மிட்டாய்ச் சாலையில் புகுவது நிரம்பக் கவர்ச்சி உள்ளது. தின்பண்ட வகைகளின் தரம் அறிந்தவர்கள் மூன்று தடியர்கள். தவிரவும் சந்தர்ப்பமும் அசாதாரணமாய் இருந்தது. விருந்துக் கொண்டாட்டம்! அரண்மனைச் சமையல்காரர்களும் மிட்டாய்க்காரர்களும் எப்பேர்ப்பட்ட கைவரிசையைக் காட்டி இருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
மிட்டாய்ச் சாலையில் புகுந்த பலூன்காரனுக்கு அச்சமும் அளவு இல்லாத மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. கவனம் இல்லாத வீட்டுக்காரி சன்னல் குறட்டில் வைத்திருக்கும் கேக்கின் மேல் பறக்கும் குளவி இப்படித்தான் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போலிருக்கிறது.
அவன் ஒரு நிமிடம் பறந்தான். எதையும் நன்றாகப் பார்க்க அவனுக்கு வாய்க்கவில்லை. தான் விந்தையான ஒரு பறவைச்சாலையில் புகுந்து விட்டதாகவும் தெற்கு நாடுகளைச் சேர்ந்த, பல நிறங்கள் உள்ள அற்புதப் பறவைகள் அதில் பாடிக் கொண்டும் சீழ்க்கை அடித்துக் கொண்டும் சீறிக் கொண்டும் சடசடத்துக் கொண்டும் இருப்பதாகவும் அவனுக்கு முதலில் தோன்றியது. ஆனால் மறுகணமே இந்த எண்ணம் மாறி விட்டது. நசுக்கப்பட்டு, சாறு பெருக்கிக் கொண்டு, தங்கள் சாற்றிலேயே ஊறிக் கொண்டிருக்கும் வெப்பப் பிரதேசப் பழங்கள் நிறைந்த பழக்கடையில் தான் இருப்பதாக நினைத்தான். தலையைக் கிறங்க வைக்கும் இனிய நறுமணம் அவன் மூக்கைத் தாக்கிற்று. சூடும் இறுக்கமும அவனுடைய தொண்டையைக் கரிக்க வைத்தன.
விந்தையான பறவைச்சாலையும் பழக்கடையும் எல்லாம் உடனே கலந்து குழம்பின. மெத்தென்றும் வெதுவெதுப்பாகவும் இருந்த ஒன்றில் பொத்தென்று விழுந்தான் பலூன்காரன். பலூன்களை அவன் விடவில்லை. கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். பலூன்கள் அவன் தலைக்கு மேலே அசையாமல் நின்றன.
அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். என்ன ஆனாலும் சரி, அவற்றைத் திறப்பதில்லை என்று முடிவு செய்தான்.
“இப்போது எனக்கு நிலைமை புரிந்து விட்டது. இது பறவைச்சாலையோ பழக்கடையோ அல்ல. இது மிட்டாய்ச்சாலை. நான் கேக்கில் உட்கார்ந்திருக்கிறேன்!” என்று நினைத்துக்கொண்டான்.
உண்மை அதுதான்.
சாக்லேட்டு, கிச்சிலி, மாதுளை, பாலாடை, உலர் பழங்கள், சர்க்கரைப் பொடி, பழக்கூழ் ஆகியவற்றின் அரசில் அவன் இறங்கி மணம் வீசும் பல நிற அரசின் ஆட்சியாளனாக அரியணை மேல் வீற்றிருந்தான். அரியணையாக இருந்தது கேக்கு.
அவன் கண்களைத் திறக்கவில்லை. பெருத்த கலகம் மூளும், புயல் வீசும் என்று எதிர்பார்த்து எதற்கும் தயாராக இருந்தான். ஆனால் அவன் அறவே எதிர்பாராதது நடந்தது.
“கேக் நாசம்” என்று கடுமையும் வருத்தமும் தொனிக்கக் கூறினான் மிட்டாய்ச்சாலை உதவியாள்.
அப்புறம் நிசப்தம் நிலவிற்று. பொங்கிய சாக்லேட்டின் மேல் குமிழிகள்தாம் வெடித்தன. பலூன்காரனுக்குத் திகிலால் மூச்சு முட்டியது. வலிக்கும் அளவுக்கு இமைகளை இறுக மூடிக்கொண்டு, “என்ன நடக்கும்?’ என்று கிசுகிசுத்தான்.
உண்டியலில் காசு குலுங்குவது போலத் துள்ளிற்று அவன் நெஞ்சு.
பெரிய மிட்டாய்க்காரனின் குரல் கேட்டது. “வெட்டிப் பேச்சு! விருந்தாளிகள் இரண்டாவது வெஞ்சனத்தைச் சாப்பிட்டு முடித்து விட்டார்கள். இன்னும் இருபது நிமிடங்களில் கேக்கு பரிமாற வேண்டி இருக்கும். பல நிற பலூன்களும் பறந்து வந்த அயோக்கியப் பயலுடைய மூஞ்சியும் விருந்துக் கொண்டாட்டக் கேக்குக்கு அருமையான அலங்காரமாக இருக்கும்” என்றான் அவன்.
இப்படிச் சொல்லி விட்டு மிட்டாய்க்காரன் கூச்சல் போட்டான்:
“கொண்டு வா பாலாடை!..”
உதவியாட்கள் பாலாடை கொண்டு வந்தார்கள்.
ஆகா, அது என்ன பரபரப்பு!
மூன்று மிட்டாய்க்காரர்களும் இருபது சமையல்காரப் பையன்களும் மூன்று தடியர்களில் எல்லோரிலும் தடியனுடைய பாராட்டுக்குத் தகுதி பெறத்தக்க ஊக்கத்துடன் பலூன்காரனைச் சூழ்ந்தார்கள். ஒரே நிமிடத்தில் நாலு பக்கமும் பாலாடையை அப்பி அவனை மூடி விட்டார்கள். மூடிய கண்களுடன் உட்கார்ந்திருந்த பலூன்காரன் எதையும் காணவில்லை, ஆனால் காட்சி
அற்புதமாய் இருந்தது. அவன் உடல் முழுவதும் பாலாடைப் பூச்சில் மறைந்து விட்டது. தலையும் சிறு மலர்கள் தீட்டிய தேநீர்க் கெண்டி போல் இருந்த வட்ட முகமும் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. உடலின் மற்ற எல்லாப் பகுதிகளும் கவர்ச்சியான ரோஜா நிறச் சாயல் உள்ள வெள்ளைப் பாலாடையால் போர்க்கப்பட்டிருந்தன. பலூன்காரன் எதைப் போல் வேண்டுமானாலும் தோற்றம் அளித்திருக்கலாம், ஆனால் வைக்கோல் செருப்பை இழந்தது போலவே தனது சொந்தத் தோற்றத்தை அவன் இழந்து விட்டான்.
வெண்பனிச் சிறகுகள் உள்ள அன்னப் பட்சியாக அவனை ஒரு கவி இப்போது மதித்திருப்பான். சலவைக் கல் சிலை என்று தோட்டக்காரனும், சவர்க்கார நுரைக் குன்று என்று வண்ணாத்தியும் வெண்பனிப் பொம்மை என்று குறும்புக்காரப் பையனும் எண்ணி இருப்பார்கள். மேலே தொங்கிக் கொண்டிருந்தன பலூன்கள். அலங்காரம் வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது, ஆனாலும் எல்லாம் சேர்ந்து காணத்தக்க காட்சியாக விளங்கின.
தான் தீட்டிய ஓவியத்தைப் பார்வையிடும் ஓவியனின் குரலில், “வாய்த்து விட்டது” என்றான் தலைமை மிட்டாய்க்காரன்.
பிறகு அவனுடைய குரல் முதல் தடவை போலவே வெறிக் கூச்சல் போட்டது: “உலர் பழங்கள்!”
எல்லாத் தரங்களிலும் எல்லா வகைகளிலும் எல்லா வடிவங்களிலும் உலர் பழங்கள் வந்தன. கைப்புள்ளவை, வெனிலா மணமுள்ளவை, புளிப்பானவை, முக்கோண வடிவானவை, விண்மீன் வடிவானவை, வட்டமானவை, பிறை வடிவானவை, ரோஜா போன்றவை எல்லாம் அவற்றில் இருந்தன.
சமையல்காரப் பையன்கள் முழு மூச்சாகப் பாடுபட்டார்கள். தலைமை மிட்டாய்க்காரன் மூன்று தரம் கை கொட்டுவதற்குள் பாலாடைக் குவியல் முழுவதும், முழுக் கேக்கும் உலர் பழங்கள் செருகப்பட்டுக் காட்சி தந்தன.
‘தயார். இப்போது லேசான செம்மை படிவதற்கு இதை அடுப்பில் செருக வேண்டும்” என்றான் தலைமை மிட்டாய்க்காரன்.
‘அடுப்பிலா? என்ன? எந்த அடுப்பில்? என்னையா அடுப்பில் செருக வேண்டும்?’ என்று கலவரப்பட்டான் பலூன்காரன்.
அப்போது மிட்டாய்ச்சாலைக்குள் ஓடி வந்தான் ஒரு பணியாள்.
‘“கேக்கு! கேக்கு! உடனே கொண்டு போங்கள் கேக்கை! விருந்தாளிகள் இனிப்பை எதிர் பார்க்கிறார்கள்!” என்று கத்தினான்.
“தயார்!” என்று பதில் அளித்தான் தலைமை மிட்டாய்க்காரன்.
“நல்ல வேளை, பிழைத்தேன்!” என்று எண்ணினான் பலூன்காரன். இப்போது அவன் கண்களைக் கொஞ்சம் போலத் திறந்தான்.
இளநீலப் பணியாடைகள் அணிந்த ஆறு வேலையாட்கள் அவன் உட்கார்ந்திருந்த பிரமாண்டமான தட்டைத் தூக்கிக் கொண்டு போனார்கள். சமையல்காரப் பையன்கள் தன்னைக் கேலி செய்து கெக்கலித்தது வெளியே போகையில் அவன் காதில் பட்டது.
அகலமான படிக்கட்டின் வழியே மாடி ஹாலுக்கு அவன் கொண்டு போகப்பட்டான். பலூன்காரன் மறுபடி நொடிப் போது கண்களைச் சுருக்கிக் கொண்டான். ஹாலில் இரைச்சலும் குதூகலமுமாக இருந்தது. பல குரல்கள் ஒலித்தன, சிரிப்பு பீரிட்டது, கைதட்டல்கள் கேட்டன. விருந்துக் கொண்டாட்டம் கோலாகலமாக நடப்பதை எல்லா அறிகுறிகளும் காட்டின.
பலூன்காரன், அல்லது, சரியாகச் சொன்னால் கேக்கு, மேசை மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது.
அப்போது பலூன்காரன் கண்களைத் திறந்தான்.
உடனே மூன்று தடியர்களைக் கண்டான்.
அவர்கள் நம்ப முடியாத அளவு தடியாய் இருந்ததைக் கண்டு பலூன்காரனின் வாய் ஆவென்று திறந்தது.
‘’அதை உடனே மூட வேண்டும். என் நிலைமையில் உயிர்க் குறிகளைக் காட்டாமல் இருப்பது மேல்” என்று சட்டென முடிவு செய்தான் அவன்.
ஆனால், அந்தோ! வாய் மூட மாட்டேன் என்றது. இந்த மாதிரி இரண்டு நிமிடங்கள் கழிந்தன. பின்பு பலூன்காரனின் வியப்பு குறைந்தது. அவன் சிரமப்பட்டு வாயை மூடிக் கொண்டான். ஆனால் உடனே கண்கள் விரியத் திறந்தன. அரும் பாடுபட்டு வாயையும் கண்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூடிக் கொண்டு அவன் தன் வியப்பை முழுதும் அடக்கிக் கொண்டான்.
மற்றவர்களை விட உயரத்தில், முக்கிய இடங்களில் உட்கார்ந்திருந்தார்கள் தடியர்கள். அவர்கள் மற்ற எல்லோரையும் விட நிறையச் சாப்பிட்டார்கள். கைத்துவாலையைக் கூடத் தின்னத் தொடங்கினான் ஒருவன்.
“நீங்கள் தின்பது கைத்துவாலை..”
“அப்படியா? எங்கோ நினைவாகத் தின்னத் தொடங்கி விட்டேன்…”
அவன் கைத்துவாலையை வைத்து விட்டு மூன்றாவது தடியனின் காதை உடனே கடிக்கத் தலைப்பட்டான். பார்ப்பதற்கு அது இறைச்சிக் கொழுக்கட்டை போல் இருந்தது.
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“போதும் வேடிக்கை” என்று முள் கரண்டியை உயர்த்தினான் இரண்டாவது தடியன். “நிலைமையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. கேக்கு வந்து விட்டது.” “பலே, பலே!”
எல்லோருக்கும் உற்சாகம் பிறந்து விட்டது.
“என்ன நடக்கும்? என்னதான் நடக்கும்? இவர்கள் என்னைத் தின்பார்களா?” என்று தவித்தான் பலூன்காரன்.
அப்போது கடிகாரத்தில் இரண்டு மணி அடித்தது.
“இன்னும் ஒரு மணி நேரத்தில் நீதிமன்றச் சதுக்கத்தில் மரண தண்டனை தொடங்கும்’ என்றான் முதல் தடியன்.
“கருமான் புரோஸ்பெரோ தானே முதலில் தண்டனை பெறுவான்?’ என்று கேட்டான் மதிப்பு மிக்க விருந்தாளிகளில் ஒருவன்.
‘அவன் இன்றைக்குத் தண்டிக்கப்பட மாட்டான்” என்றான் அரசு அமைச்சன். ”என்ன? எப்படி? ஏன்?”
‘இப்போதைக்கு அவனுடைய உயிரைக் காப்பாற்றி வைத்திருக்கிறோம். கலகக்காரர்களின் திட்டத்தையும் முக்கியமான சதிகாரர்களுடைய பெயர்களையும் அவனிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.”
“எங்கே தான் இருக்கிறான் அவன்?”
விருந்துக் கூட்டம் முழுவதும் இதைத் தெரிந்து கொள்வதில் ஆவல் கொண்டு கேக்கைக் கூட மறந்து விட்டது.
“முன்போலவே இரும்புக் கூண்டில் அடைபட்டிருக்கிறான் அவன். கூண்டு இங்கே, அரண்மனையில், வாரிசு துத்தியின் மிருகச்சாலையில் இருக்கிறது.”
“கூப்பிடுங்கள் அவனை…’
“அவனை இங்கே அழைத்து வாருங்கள்!” என்று கத்தினார்கள் விருந்தாளிகள்.
‘சரிதான். நம் விருந்தாளிகள் இந்த மிருகத்தைக் கிட்டத்தில் பார்க்கட்டும். எல்லோரையும் மிருகச்சாலைக்கு வரும்படி சொல்லி இருப்பேன். ஆனால் அங்கே உறுமலும் கீச்சொலியும் நாற்றமுமாய் இருக்கும்.. மதுக் கிண்ணங்களின் கணகணப்பையும் பழங்களின் மணத்தையும் போல இல்லாமல் படு மோசமாய் இருக்கும் அதெல்லாம்” என்றான் முதல் தடியன்.
“உண்மைதான்! உண்மைதான்! மிருகச்சாலைக்குப் போகத் தேவை இல்லை…” “புரோஸ்பெரோ இங்கே அழைத்துவரப் படட்டும். கேக்கைத் தின்று கொண்டே இந்த விகிருதியைப் பார்வை இடுவோம்.’
“மறுபடி கேக்கா?” என்று நடுங்கினான் பலூன்காரன். “இந்தக் கேக்கை விடவே மாட்டார்கள் போல் இருக்கிறதே… பெருந் தீனிக்காரர்கள்!”
“புரோஸ்பெரோவை அழைத்து வாருங்கள்” என்றான் முதல் தடியன்.
அரசு அமைச்சன் வெளியே போனான். நடையின் வடிவில் இரண்டு வரிசைகளாக நின்ற பணியாட்கள் குனிந்து வணங்கினார்கள். நடை பாதி தாழ்ந்தது.
பெருந்தீனிக்காரர்கள் பேச்சை நிறுத்தினார்கள்.
‘அவன் மிகவும் பயங்கரமானவன். எல்லோரையும் விடப் பலசாலி. சிங்கத்தை விடப் பலம் உள்ளவன். வெறுப்பு அவனுடைய கண்களில் தழல் வீசுகிறது. அவற்றை நேரிட்டுப் பார்க்க நம்மால் முடிவதில்லை” என்றான் இரண்டாவது தடியன்.
“கோரமான தலை அவனுக்கு. அது பிரமாண்டமானது. தூணின் தலைப்பகுதி போன்றது. செம்பட்டைத் தலைமயிர் அவனுக்கு. அவன் தலையைச் சுற்றி நெருப்பு எரிவது போல இருக்கும்.”
கருமான் புரோஸ்பெரோ பற்றிய பேச்சு தொடங்கியதும் பெருந்தீனிக்காரர்களின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. சாப்பிடுவதையும் வேடிக்கை பேசுவதையும் இரைவதையும் அவர்கள் நிறுத்தினார்கள், வயிறுகளை உள்ளடக்கிக் கொண்டார்கள். சிலர் வெளிறிக்கூடப் போனார்கள். அவனைப் பார்க்க விரும்பியதால் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது.
மூன்று தடியர்கள் ஆழ்ந்த போக்கை மேற்கொண்டார்கள். கொஞ்சம் மெலிந்து விட்டதாகத் தோன்றினார்கள். திடீரென்று எல்லோரும் பேச்சை நிறுத்தினார்கள். ஒரே நிசப்தம் குடி கொண்டது. தடியர்களில் ஒவ்வொருவனும் மற்றவனுக்குப் பின்னால் மறைந்து கொள்ள விரும்பியவன் போல உடம்பை அசைத்தான்.
கருமான் புரோஸ்பெரோ ஹாலுக்கு இட்டு வரப்பட்டான்.
அரசு அமைச்சன் முன்னே நடந்தான். இரு புறங்களிலும் வந்தார்கள் காவல் படைவீரர்கள். அவர்கள் கறுப்பு மெழுகுத்துணித் தொப்பிகளைக் கழற்றாமல், உருவிய வாட்களுடன் ஹாலுக்குள் வந்தார்கள். சங்கிலி கணகணத்தது. கருமானின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. அவன் விருந்து மேசையின் பக்கத்தில் இட்டு வரப்பட்டான். தடியர்களுக்குச் சில அடிகள் தள்ளி நின்றான்.
கருமான் புரோஸ்பெரோ தலையைக் குனிந்து கொண்டிருந்தான். அவன் வெளிறி இருந்தான். சிடுக்கான செம்பட்டைத் தலைமயிருக்கு அடியில் அவனுடைய நெற்றியிலும் கன்னப் பொறிகளிலும் இரத்தம் அடலாக உறைந்திருந்தது.
அவன் தலையை நிமிர்த்தி தடியர்களைப் பார்த்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் பின்னே நகர்ந்தார்கள்.
“இவனை எதற்காக இங்கே கூட்டி வந்தீர்கள்? எனக்கு இவனிடம் பயமாய் இருக்கிறதே!” என்று கத்தினான் ஒரு விருந்தாளி. நாட்டில் எல்லோரையும் விடப் பணக்காரனான அரைவை இயந்திரச் சொந்தக்காரன் அவன்.
இப்படிச் சொன்னவன், மூர்ச்சையாகி, பழப்பாகில் மூக்கு படும்படிச் சாய்ந்தான். சில விருந்தாளிகள் வெளியே போவதற்காகக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். கேக்கைப் பற்றிய நினைவே யாருக்கும் வரவில்லை.
“உங்களுக்கு என்ன வேண்டும் என்னிடம்?” என்று கேட்டான் கருமான்.
முதல் தடியன் நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டான்.
“நாங்கள் உன்னைப் பார்க்க விரும்பினோம். நீ யார் கைகளில் இருக்கிறாயோ அவர்களைப் பார்க்க உனக்கு விருப்பம் உண்டாகவில்லையா?” என்றான்.
“உங்களைக் காணவே எனக்கு அருவருப்பாய் இருக்கிறது.”
“விரைவில் நாங்கள் உன் தலையை வெட்டி விடுவோம். எங்களைப் பார்க்காமல் இருக்க இதன் மூலம் உனக்கு உதவுவோம்.’
“நான் அஞ்சவில்லை. என் தலை ஒன்று தான். மக்களுக்கோ, நூறாயிரக் கணக்கான தலைகள். அவைகளை வெட்ட உங்களால் முடியாது.’
“இன்றைக்கு நீதிமன்றச் சதுக்கத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். உன் தோழர்களை அங்கே கொலையாளிகள் தீர்த்துக் கட்டி விடுவார்கள்.”
பெருந்தீனிக்காரர்கள் லேசாகச் சிரித்தார்கள். அரைவை இயந்திரச் சொந்தக்காரன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான், தன் கன்னங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பழப்பாகை நக்கக் கூடச் செய்தான்.
“உங்கள் மூளை கொழுப்பால் ஊதிப்போய் இருக்கிறது. உங்கள் தொப்பைக்கு அப்பால் உள்ளது எதுவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை…’
இரண்டாவது தடியனுக்கு ரோசமாய் இருந்தது. “கேளுங்கள் ஐயா, இவன் சொல்வதை. நாங்கள் எதைப் பார்க்க வேண்டுமாம்?” என்றான்.
“உங்கள் அமைச்சர்களிடம் கேளுங்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.”
அரசு அமைச்சன் தெளிவாக எதையும் குறிக்காமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அமைச்சர்கள் தட்டுக்களில் விரல்களால் தாளம் போடலானார்கள்.
“கேளுங்கள் இவர்களிடம். இவர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள்…” என்று பேச்சைத் தொடர்ந்தான் புரோஸ்பெரோ.
அவன் இடையில் நிறுத்தினான். எல்லோரும் காதுகளைக் கூராக்கிக் கொண்டார்கள்.
‘கடும் உழைப்பால் பயிராக்கிய தானியங்களை எவர்களிடமிருந்து நீங்கள் பறித்துக் கொள்கிறீர்களோ அந்த விவசாயிகள் நிலப் பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். உழவர்கள் நிலச் சொந்தக்காரர்களின் அரண்மனைகளைத் தீக்கிரை ஆக்குகிறார்கள், தங்கள் நிலங்களிலிருந்து அவர்களை விரட்டுகிறார்கள். நீங்கள் உடைமை ஆக்கிக் கொள்வதற்காக நிலக்கரி தோண்டி எடுக்கச் சுரங்கத் தொழிலாளர்கள் விரும்பவில்லை. உங்கள் செல்வத்தைப் பெருக்கும் பொருட்டு வேலை செய்ய விரும்பாமல் தொழிலாளர்கள் இயந்திரங்களை உடைக்கிறார்கள். மாலுமிகள் உங்கள் சரக்குகளைக் கடலில் எறிகிறார்கள். தரைப்படை வீரர்கள் உங்களுக்குத் தொண்டு செய்ய மறுக்கிறார்கள். விஞ்ஞானிகளும் அலுவலர்களும் நீதிபதிகளும் நடிகர்களும் மக்கள் தரப்புக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு உங்களுக்காக வேலை செய்து, நீங்கள் கொழுக்கையில் அந்த வேலைக்காக அற்ப ஊதியம் பெற்று வந்தவர்கள் எல்லோரும், எல்லா ஆக்கம் கெட்டவர்களும் உரிமைகளை இழந்தவர்களும் பட்டினியால் மெலிந்த அனாதைகளும் அங்கவீனர்களும் பிச்சைக்காரர்களும் எல்லோரும் உங்களுக்கு எதிராக, கொழுத்தவர்களும் பணம் பெருத்தவர்களும் கல்நெஞ்சர்களுமான எல்லோருக்கும் எதிராகப் போருக்குக் கிளம்பி இருக்கிறார்கள்…’
“இவன் வீண் வார்த்தை பேசுகிறான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான் அரசு அமைச்சன்.
ஆனால் புரோஸ்பெரோ மேலே பேசிக் கொண்டு போனான்:
“உங்களையும் உங்கள் ஆட்சியையும் வெறுப்பதற்குப் பதினைந்து ஆண்டுகளாக நான் மக்களைப் பயிற்றி வந்தேன். எவ்வளவு நீண்ட காலமாக நாங்கள் வலிமை திரட்டி வருகிறோம் தெரியுமா? இப்போது உங்கள் சாக்காடு நெருங்கி விட்டது…’
“போதும்!” என்று கீச்சிட்டான் மூன்றாவது தடியன்.
“இவனை மறுபடி கூண்டில் அடைக்க வேண்டும்” என்றான் இரண்டாவது தடியன். முதல் தடியன் சொன்னான்:
“சர்க்கஸ்காரன் திபூலை நாங்கள் பிடிக்கும் வரை நீ உன் கூண்டில் இருப்பாய். உங்கள் இருவருக்கும் மரண தண்டனை ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படும். உங்களுடைய பிணங்களை மக்கள் காண்பார்கள். எங்களோடு சண்டை போடும் விருப்பம் நீண்ட காலத்துக்கு அவர்களுக்கு உண்டாகாது.”
புரோஸ்பெரோ பேசாதிருந்தான். மறுபடி தலையைக் குனிந்து கொண்டான்.
தடியன் சொல்லிக் கொண்டு போனான்:
“யாரோடு சண்டை போட விரும்புகிறாய் என்பதை நீ மறந்து விட்டாய். நாங்கள், அதாவது மூன்று தடியர்கள், பலசாலிகள், மிகுந்த வல்லமை உள்ளவர்கள். எல்லாம் எங்களுக்குச் சொந்தம். நம்முடைய நிலத்தில் விளையும் தானியம் எல்லாம் முதலாவது தடியனான எனது உடைமை. இரண்டாவது தடியனுக்கு நிலக்கரி எல்லாம் சொந்தம். மூன்றாவது தடியன் இரும்பை எல்லாம் விலைக்கு வாங்கி இருக்கிறான். நாங்கள் எல்லோரையும் விடப் பணக்காரர்கள்! நாட்டில் மிகப் பெரிய பணக்காரன் கூட எங்களுடன் ஒப்பிடும் போது நூறு மடங்கு ஏழை. எங்கள் தங்கத்தைக் கொண்டு வேண்டியதை எல்லாம் வாங்க எங்களால் முடியும்!” இப்போது பெருந்தீனிக்காரர்களுக்கு வெறி கிளம்பி விட்டது. தடியனுடைய சொற்கள் அவர்களுக்குத் துணிச்சல் தந்தன.
“கூண்டில் அடையுங்கள் இவனை! கூண்டில்!” என்று கூச்சல் போடத் தொடங்கினார்கள் அவர்கள்.
‘“மிருகச்சாலைக்கு இழுத்துப் போங்கள்!”
“கூண்டில் அடையுங்கள்!’
‘“கலகக்காரன்!”
“கூண்டில் அடையுங்கள்!’’
புரோஸ்பெரோ இட்டுச் செல்லப்பட்டான்.
“இப்போது கேக்கு தின்போம்” என்றான் முதல் தடியன்.
“தொலைந்தேன்!” என்று எண்ணிக் கொண்டான் பலூன்காரன்.
எல்லோருடைய பார்வையும் அவன் பக்கம் திரும்பிற்று. அவன் கண்களை மூடிக் கொண்டான். பெருந்தீனிக்காரர்களுக்குக் குஷி பிறந்து விட்டது.
“ஹொ-ஹொ-ஹோ!”
“ஹ-ஹ-ஹா! எவ்வளவு அற்புதமான கேக்கு! பலூன்களைத் தான் பாருங்களேன்!” “பிரமாதமானவை!”
‘இந்த மூஞ்சியைப் பாருங்கள்!”
“விசித்திரமானது.
எல்லோரும் கேக்கின் பக்கத்துக்கு நகர்ந்தார்கள்.
“வேடிக்கையான இந்தப் பொம்மைக்கு உள்ளே என்ன இருக்கிறது?” என்று கேட்டு, பலூன்காரன் நெற்றியில் வலிக்கும்படிச் சுண்டினான் ஒருவன்.
“மிட்டாய்கள் தான், சந்தேகம் இல்லாமல்.’
“அல்லது ஷாம்பேன் மது…’
“நிரம்பச் சுவாரசியமானது! மிகவும் ஆவலைத் தூண்டுவது!’’
“முதலில் இந்தத் தலையை அறுத்துப் பார்ப்போமே என்ன இருக்கிறது என்று ”ஐயோ!”
பலூன்காரனால் தாங்க முடியவில்லை. மிகவும் தெளிவாக ”ஐயோ!” என்று சொல்லிக் கண்களைத் திறந்தான்.
ஆவல் மிகுந்தவர்கள் திடுக்கிட்டுப் பின்னே நகர்ந்தார்கள். அந்த நேரத்தில் கணீரென்ற குழந்தைக் குரல் நுழை மாடத்தில் உரக்க ஒலித்தது:
“பொம்மை! என்னுடைய பொம்மை!”
எல்லோரும் உற்றுக் கேட்டார்கள். மூன்று தடியர்களும் அரசு அமைச்சனும் சிறப்பாகக் கவலைப்பட்டார்கள்.
கூச்சல் அழுகையாக மாறிற்று. மனம் புண்பட்ட சிறுவன் நுழைமாடத்தில் இரைந்து ஓலமிட்டான்.
“என்ன அது? வாரிசு துத்தி அல்லவா அழுகிறான்!” என்றான் முதல் தடியன்.
“வாரிசு துத்திதான் அழுகிறான்!” என்று ஒரே குரலில் கூடப் பாடினார்கள் இரண்டாவது தடியனும் மூன்றாவது தடியனும்.
மூன்று தடியர்களும் வெளிறிப் போனார்கள். அவர்களுக்கு மிகுந்த அச்சம் உண்டாயிற்று. அரசு அமைச்சனும் சில அமைச்சர்களும் பணியாட்களும் நுழை மாடம் போகும் வாயிலுக்கு ஓடினார்கள்.
”என்ன நடந்தது? என்ன நடந்தது?” என்று ஹால் முழுவதும் கிசுகிசுத்தது.
ஒரு பையன் ஹாலுக்குள் ஓடி வந்தான். அமைச்சர்களையும் பணியாட்களையும் அவன் இடித்துத் தள்ளினான். தலைமயிர் அசைந்தாட, மெருகிட்ட சோடுகள் பளிச்சிடத் தடியர்களிடம் ஓடினான். விம்மி அழுது கொண்டே சில வார்த்தைகளைக் கத்திச் சொன்னான், ஆனால் அவை ஒருவருக்கும் விளங்கவில்லை.
“இந்தப் பயல் என்னைக் கண்டு கொள்வான்!” என்று கவலைப்பட்டான் பலூன்காரன். எனக்கு மூச்சு விடவும் விரலைக் கூட அசைக்கவும் இடைஞ்சலாய் இருக்கும் இந்தப் பாழும் பாலாடை பையனுக்குக் கட்டாயம் நிரம்பப் பிடிக்கும். அவனுடைய அழுகையை நிறுத்துவதற்காக ஒரு கேக்குத் துண்டை என் குதிகாலோடு சேர்த்து வெட்டிக் கொடுப்பார்கள், சந்தேகம் இல்லாமல்”
ஆனால் பையன் கேக்கை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பலூன்காரனின் உருண்டைத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த அருமையான பலூன்கள் கூட அவனுடைய கவனத்தைக் கவரவில்லை.
பையன் துயரம் பொங்க அழுதான்.
“என்ன நடந்தது?” என்று கேட்டான் முதல் தடியன்.
“வாரிசு துத்தி எதற்காக அழுகிறான்?’ என்று கேட்டான் இரண்டாவது தடியன். மூன்றாமவன் கன்னங்களை உப்பினான்.
வாரிசு துத்திக்குப் பன்னிரண்டு வயது. மூன்று தடியர்களின் அரண்மனையில் அவன் வளர்ந்து வந்தான். சிறு இளவரசன் போல அவன் சீராட்டப்பட்டான். தடியர்கள் வாரிசு வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. மூன்று தடியர்களின் எல்லாச் சொத்துக்களும் நாட்டின் ஆட்சி அதிகாரமும் வாரிசு துத்தியின் கைகளுக்கு மாற வேண்டி இருந்தன.
வாரிசு துத்தியின் கண்ணீர் கருமான் புரோஸ்பெரோவின் சொற்களைக் காட்டிலும் அதிகமாக மூன்று தடியர்களுக்கு அச்சம் ஊட்டியது.
பையன் கைகளை முட்டி பிடித்து ஆட்டினான், கால்களைத் தொப்பென்று அடித்தான். அவனுடைய கோபத்துக்கும் மனத்தாங்கலுக்கும் எல்லையே இல்லை.
காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை.
வளர்ப்பு ஆசிரியர்கள் ஹாலுக்குள் வர அஞ்சி, தூண்களின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தார்கள். கறுப்பு உடைகளும் கறுப்புப் பொய் மயிர்த் தொப்பிகளும் அணிந்திருந்த இந்த ஆசிரியர்கள் புகை ஏறிய விளக்குச் சிம்ணிகள் போல் காணப்பட்டார்கள்.
கடைசியில், கொஞ்சம் அமைதி அடைந்த சிறுவன் நடந்ததை விவரித்தான்.
“என் பொம்மை, என்னுடைய அற்புதப் பொம்மை உடைந்து விட்டது!.. என்னுடைய பொம்மையைப் பாழ்படுத்தி விட்டார்கள். காவல் படைக்காரர்கள் என்னுடைய பொம்மையை வாள்களால் குத்தித் துளைத்து விட்டார்கள்…”
அவன் மறுபடி வீரிடத் தொடங்கினான். சிறு முட்டிகளால் கண்களைத் தேய்த்து, கண்ணீரைக் கன்னங்களில் பூசினான்.
‘‘என்ன?!” என்று கூச்சலிட்டார்கள் தடியர்கள்.
“காவல் படையினரா?”
“குத்தித் துளைத்தார்களா?”
“வாட்களாலா?”
“வாரிசு துத்தியின் பொம்மையையா?”
ஹாலில் இருந்தவர்கள் எல்லோரும் ஆழ்ந்த பெருமூச்சு விடுவதுபோல, ‘இது நடக்க முடியாது!” என்றார்கள்.
அரசு அமைச்சன் தலையைப் பிடித்துக் கொண்டான். நரம்பு நோய்க்கார அரைவை இயந்திரச் சொந்தக்காரன் மறுபடியும் மூர்ச்சையானான், ஆனால் தடியனின் பயங்கரக் கூச்சலால் அக்கணமே சுய நினைவுக்கு வந்து விட்டான்.
“கொண்டாட்டத்தை நிறுத்துங்கள்! எல்லாக் காரியங்களையும் தள்ளிப் போடுங்கள்! ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுங்கள்! எல்லா அலுவலர்களையும்! எல்லா நீதிபதிகளையும்! எல்லா அமைச்சர்களையும்! எல்லாக் கொலையாளிகளையும்! இன்றைய மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்! அரண்மனையில் துரோகம்!”
ஒரே பரபரப்பு உண்டாயிற்று. ஒரு நிமிடம் பொறுத்து அரண்மனைச் சாரட்டுகள் எல்லாத் திசைகளிலும் பாய்ந்து ஓடின. நீதிபதிகளும் ஆலோசகர்களும் கொலையாளிகளும் ஐந்து நிமிடங்களில் அரண்மனைக்கு விரைந்து வந்தார்கள். கலகக்காரர்களின் மரண தண்டனையை எதிர்பார்த்து நீதிமன்றச் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டம் கலைந்து போக வேண்டி வந்தது. அறிவிப்பாளர்கள் மேடை மேல் ஏறி, மிக முக்கிய நிகழ்ச்சிகளின் காரணமாக மரண தண்டனை மறு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இந்தக் கூட்டத்துக்குத் தெரிவித்தார்கள்.
கேக்கோடு கூடப் பலூன்காரனையும் ஹாலிலிருந்து வெளியேற்றினார்கள். பெருந்தீனிப் பட்டாளம் நொடி நேரத்தில் நிதானத்துக்கு வந்து விட்டது.
எல்லோரும் வாரிசு துத்தியை நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு, அவன் சொன்னதைக் கேட்டார்கள்.
“பூங்காவில் நான் புல் மேல் உட்கார்ந்திருந்தேன். பொம்மை என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது. சூரிய கிரகணம் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அது ரொம்பச் சுவாரசியமானது. நேற்றைக்கு நான் புத்தகத்தில் படித்தேன்… கிரகணம் பிடிக்கும் போது, பகலில் விண்மீன்கள் தெரியுமாம்…”
விம்மல்கள் காரணமாக வாரிசுக்குப் பேச முடியவில்லை. அவனுக்குப் பதிலாக எல்லா விவரத்தையும் வளர்ப்பு ஆசிரியன் சொன்னான். அச்சத்தால் நடுங்கியபடியால் அவனும் சிரமத்துடனேயே பேசினான்.
“வாரிசு துத்திக்கும் அவனுடைய பொம்மைக்கும் கிட்டத்திலேயே நான் இருந்தேன். மூக்கைத் தூக்கியபடி வெயிலில் உட்கார்ந்திருந்தேன். என் மூக்கில் பரு வெடித்திருக்கிறது. அழகைக் கெடுக்கும் பருவைப் போக்க வெயில் எனக்கு உதவும் என்று நினைத்தேன். திடீரென்று வந்தார்கள் காவல் படையினர். பன்னிரண்டு பெயர் இருந்தார்கள். எதைப் பற்றியோ ஆத்திரத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்தில் வந்ததும் அவர்கள் நின்றார்கள். அவர்களைப் பார்த்தால் பயமாய் இருந்தது. அவர்களில் ஒருவன் வாரிசு துத்தியைக் காட்டி, ‘இதோ இருக்கிறது ஓநாய்க் குட்டி. மூன்று கொழுத்த பன்றிகளிடம் வளர்கிறது ஓநாய்க் குட்டி’ என்றான். ஐயோ! இந்தச் சொற்களின் பொருளை நான் புரிந்து கொண்டேன்.”
“அந்த மூன்று கொழுத்த பன்றிகள் யாராம்?” என்று கேட்டான் முதல் தடியன். மற்ற இரு தடியர்களும் குப்பென்று சிவந்தார்கள். அப்போது முதல் தடியனும் சிவந்து போனான். மூன்று தடியர்களும் கடுமையாக மூக்குகளை உறிஞ்சவே, தாழ்வாரத்துக் கண்ணாடிக் கதவு திறந்து மூடிக் கொண்டது.
வளர்ப்பு ஆசிரியன் கதையைத் தொடர்ந்தான்: “அவர்கள் வாரிசு துத்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘மூன்று பன்றிகள் இரும்பு ஓநாய்க் குட்டியை வளர்க்கின்றன’ என்றார்கள். அவர்கள் கேட்டார்கள்: ‘வாரிசு துத்தி, உன் இருதயம் எந்தப் பக்கத்தில் இருக்கிறது? இவனுடைய இருதயம் எடுக்கப்பட்டு விட்டது. கெட்டவனாகவும் இரக்கம் இல்லாதவனாகவும் கொடியவனாகவும் மனிதர்கள் மேல் வெறுப்பு உள்ளவனாகவும் இவன் வளர வேண்டும்… மூன்று பன்றிகளும் மண்டையைப் போட்டதும் கெட்ட ஓநாய் அவர்களுடைய இடத்துக்கு வரும்.’
அரசு அமைச்சன் வளர்ப்பு ஆசிரியன் தோளைப் பிடித்து உலுக்கி, “பயங்கரமான இந்தப் பேச்சுக்களை நீர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? மக்களின் தரப்புக்கு மாறி விட்ட துரோகிகள் இவர்கள் என்பதை நீர் புரிந்து கொள்ளவில்லையோ?” என்று கத்தினான்.
வளர்ப்பு ஆசிரியனுக்குக் கிலி பிடித்து விட்டது. அவன் குழற்றினான்:
“நான் இதைக் கண்டு கொண்டேன், ஆனால் அவர்களிடம் எனக்குப் பயமாய் இருந்தது. அவர்கள் ஒரேயடியாக ஆத்திரம் அடைந்து இருந்தார்கள். என்னிடமோ, ஆயுதம் எதுவும் இல்லை, பருவைத் தவிர… அவர்கள் வாட்களின் பிடிகளைப் பற்றிக் கொண்டு எதற்கும் தயாராக இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான்: ‘பாருங்கள், இதோ இருக்கிறது பஞ்சு அடைத்த உருவம், இந்தப் பொம்மை. ஓநாய்க் குட்டி பொம்மையோடு விளையாடுகிறது. உயிருள்ள குழந்தைகள் இவனுக்குக் காட்டப்படுவது இல்லை. பஞ்சு அடைத்த உருவம், விசை வில் வைத்த பொம்மை, இவனுக்குத் தோழியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.’ அப்போது இன்னொருவன் கத்தினான்: ‘மகனையும் பெண்சாதியையும் நான் கிராமத்தில் விட்டிருக்கிறேன். நிலப் பிரபுவின் பூங்காவில் மரத்தில் தொங்கிய பேரிக்காயை என் மகன் கவண் கல்லால் அடித்தானாம். பையனை ஆட்சியை அவமதித்ததற்காகப் மிலாறுகளால் விளாறும்படி நிலப் பிரபு உத்தரவிட்டானாம். அவனுடைய வேலைக்காரர்கள் என் வீட்டுக்காரியை வெளிப்படையாக அவமானப்படுத்தினார்களாம்.’ காவல் படையினர் கத்தவும் வாரிசு துத்தி மேல் பாயவும் தலைப்பட்டார்கள். தன் மகனைப் பற்றிச் சொன்னானே, அவன் வாளை உருவிப் பொம்மையில் செருகினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள்…
இந்த இடத்தில் வாரிசு துத்தி கண்ணீர் பெருக்கினான்.
‘இந்தா, ஓநாய்க் குட்டீ! உன்னுடைய கொழுத்த பன்றிகளையும் அப்புறம் ஒரு கை பார்க்கிறோம்’ என்றார்கள் அவர்கள்.’
“எங்கே அந்தத் துரோகிகள்?” என்று உறுமினார்கள் தடியர்கள்.
“பொம்மையை எறிந்து விட்டுப் பூங்காவுக்கு உள்ளே ஓடிப் போய் விட்டார்கள் அவர்கள். ‘கருமான் புரோஸ்பெரோ நீடூழி வாழ்க! சர்க்கஸ்காரன் திபூல் நீடூழி வாழ்க! மூன்று தடியர்கள் ஒழிக!’ என்று அவர்கள் கத்தினார்கள்.’
“காவலர்கள் அவர்களை ஏன் சுடவில்லை?” என்று ஆத்திரப்பட்டார்கள் ஹாலில் இருந்தவர்கள்.
வளர்ப்பு ஆசிரியன் அப்போது ஒரு பயங்கரமான சேதியைச் சொன்னான்:
“காவலர்கள் அவர்களைப் பாராட்டித் தொப்பிகளை ஆட்டினார்கள். காவலர்கள் அவர்களுக்கு விடை அளித்ததை, சுற்றுச் சுவரின் பின்னிருந்து நான் பார்த்தேன். அவர்கள் சொன்னார்கள்: ‘தோழர்களே! மக்களிடம் போய், எல்லாப் படையினரும் விரைவில் அவர்கள் தரப்புக்கு வந்து விடுவார்கள் என்று சொல்லுங்கள்’…’
பூங்காவில் நடந்தது இதுதான்.
கலவரம் தொடங்கியது. அரண்மனையிலும் பூங்காவில் உள்ளே வரும் வாயில்களிலும் வெளியே போகும் வாயில்களிலும் பாலங்களின் மேலும் நகர வாயில்களுக்குப் போகும் சாலையிலும் அரண்மனைக் காவல் படையின் மிக மிக நம்பகமான பிரிவுகள் நிறுத்தப்பட்டன.
அரசு ஆலோசனை மன்றத்தின் கூட்டம் கூடியது. விருந்தாளிகள் போய் விட்டார்கள். அரண்மனைத் தலைமை மருத்துவனின் தராசில் மூன்று தடியர்கள் எடை பார்த்துக் கொண்டார்கள். கவலைப்பட்ட போதிலும் அவர்கள் ஒரு துளி கொழுப்பைக் கூட இழக்கவில்லை என்று தெரிந்தது. தலைமை மருத்துவன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். ரொட்டியும் வெறும் நீரும் மட்டுமே அவனுக்குச் சாப்பிடக் கொடுக்கும்படி உத்தரவு ஆயிற்று.
வாரிசு துத்தியின் பொம்மை பூங்காவில் புல்லின் மேல் கண்டு எடுக்கப்பட்டது. சூரிய கிரகணத்தைப் பார்க்க அதற்கு வாய்க்கவில்லை. பயன்படவே முடியாதபடிச் சீர்குலைக்கப்பட்டிருந்தது அது.
வாரிசு துத்தியைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை. உடைந்த பொம்மையைத் தழுவிக் கொண்டு அவன் தேம்பினான். பொம்மை சிறு பெண்ணின் வடிவத்தில் இருந்தது. அது துத்தியின் அளவே உயரமாக இருந்தது. கலைத்திறமையுடன் செய்யப்பட்ட விலை மிகுந்த அந்தப் பொம்மை உயிருள்ள சிறுமிக்குத் தோற்றத்தில் எவ்விதத்திலும் வேறாய் இல்லை.
இப்போது அதன் உடை கிழிக்கப்பட்டிருந்தது. வாட்களின் தாக்குதலால் ஏற்பட்ட துளைகள் மார்பில் கறுப்பாகத் தெரிந்தன. ஒரு மணி நேரம் முன்பு வரை உட்காரவும் நிற்கவும் புன்னகை செய்யவும் நடனம் ஆடவும் அதனால் முடிந்தது. இப்போதோ, அது வெறும் பஞ்சு அடைத்த உருவம், கந்தல் துணி ஆகிவிட்டது. அதன் தொண்டையிலும் மார்பிலும் ரோஜா நிறப் பட்டுக்கு அடியில் ஓர் இடத்தில் கரகரத்தது உடைந்த சுருள்கம்பி-பழைய கடிகாரங்கள் மணி அடிப்பதற்கு முன்னால் கரகரக்குமே, அந்த மாதிரி.
“இது செத்துப் போய் விட்டது! எவ்வளவு துன்பம்! இது செத்துப் போய் விட்டது!” என்று முறையிட்டான் வாரிசு துத்தி.
சிறுவன் துத்தி ஓநாய்க் குட்டியாக இருக்கவில்லை.
“இந்தப் பொம்மையைச் செப்பனிட வேண்டும். வாரிசு துத்தியின் துயரத்துக்கு வரம்பே இல்லை. என்ன விலை செலுத்தியும் பொம்மையைச் சரிப்படுத்த வேண்டும்!” என்று அரசு ஆலோசனைக் கூட்டத்தில் சொன்னான் அரசு அமைச்சன். “வேறொரு பொம்மை வாங்க வேண்டும்” என்று யோசனை சொன்னார்கள் அமைச்சர்கள்.
‘வாரிசு துத்தி வேறு பொம்மை வேண்டாம் என்கிறான். இந்தப் பொம்மை மறுபடி உயிர் பெற வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான்.”
“ஆனால் இதைச் செப்பனிட யாரால் தான் முடியும்?”
“எனக்குத் தெரியும்” என்றான் மக்கள் கல்வித் துறை அமைச்சன்.
“யாரால்?”
“திருவாளர்களே, நகரத்தில் மருத்துவர் கஸ்பார் அர்னேரி வசிப்பதை நாம் மறந்து விட்டோம். இந்த மனிதரால் எல்லாம் செய்ய முடியும். வாரிசு துத்தியின் பொம்மையை அவர் சரிப்படுத்துவார்.”
எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
“பலே! பலே!”
மருத்துவர் கஸ்பாரை நினைவு படுத்திக் கொண்டு அரசு ஆலோசனை சபையினர் எல்லோரும் ஒரே குரலில் பாடினார்கள்:
தரையிலிருந்து விண்ணில் பறக்கவும்
நரியின் வாலை எட்டிப் பிடிக்கவும்
கல்லை ஆவியாகச் செய்யவும்
வல்லவர் மருத்துவர் கஸ்பார்.
மருத்துவர் கஸ்பாருக்கு உத்தரவு அப்போதே எழுதப்பட்டது.
‘திருவாளர் மருத்துவர் கஸ்பார் அர்னேரிக்கு,
“மூன்று தடியர்கள் அரசாங்கத்தின் அரசு ஆலோசனை மன்றம் வாரிசு துத்தியின் பழுது பட்ட பொம்மையை இத்துடன் அனுப்பி வைத்து, நாளைக்குள் இதைச் செப்பனிட்டுத் தரும்படி உங்களுக்குக் கட்டளை இடுகிறது. பொம்மை முன்போன்ற ஆரோக்கியமும் உயிர்த் துடிப்பும் உள்ள தோற்றத்தைப் பெற்றால், நீங்கள் விரும்பும் பரிசு உங்களுக்குத் தரப்படும். கட்டளை நிறைவேற்றப்படாவிட்டால் உங்களுக்குக் கடும் தண்டனை கிடைக்கும்.
அரசு ஆலோசனை மன்றத் தலைவன், அரசு அமைச்சன்…”
அக்கணமே அரசு அமைச்சன் உத்தரவில் கையெழுத்து இட்டான். பெரிய அரசு முத்திரையும் அப்போதே இடப்பட்டது. செம்மச் செம்ம நிறைந்த மூட்டையின் வடிவம் பொறித்த வட்ட முத்திரை அது.
மருத்துவர் கஸ்பார் அர்னேரியைத் தேடிக் கண்டு அரசு ஆலோசனை மன்றத்தின் உத்தரவை அவரிடம் கொடுப்பதற்காக அரண்மனைக் காவல் படைக் காப்டன் பொனவெந்தூரா பிரபு இரண்டு காவல் படையினர் உடன் வர நகரத்துக்குப் புறப்பட்டான்.
அவர்கள் குதிரைகள் மேல் சவாரி செய்தார்கள். பின்னால் சாரட்டு வந்தது. அரண்மனை அலுவலன் அதில் இருந்தான். அவன் பொம்மையை மடி மேல் வைத்திருந்தான். கத்தரித்த சுருட்டை மயிர் அடர்ந்த அழகான தலையைப் பொம்மை அவனுடைய தோள் மேல் சாய்த்துக் கொண்டிருந்தது.
வாரிசு துத்தி அழுவதை நிறுத்தினான். மறுபடி உயிர் பெற்று விட்ட உடல் நலம் உள்ள பொம்மையை ஆட்கள் அடுத்த நாள் கொண்டுவருவார்கள் என்று அவன் நம்பினான். அரண்மனையில் பகல் இப்படிக் கலவரம் நிறைந்ததாகக் கழிந்தது.
ஆனால் பறந்து வந்த பலூன்காரன் கதை என்ன ஆயிற்று?
அவன் ஹாலிலிருந்து எடுத்துப் போகப்பட்டது நமக்குத் தெரியும். அவன் மறுபடி மிட்டாய்ச்சாலை சேர்ந்தான்.
அங்கே நிகழ்ந்தது விபத்து.
கேக்கைத் தூக்கி வந்தவர்களில் ஒரு பணியாள் கிச்சிலிப் பழத் தோல் மேல் காலை வைத்து விட்டான்.
“சமாளித்துக் கொள்!” என்று கத்தினார்கள் பணியாட்கள்.
தன் அரியணை அசைந்தாடுவதை உணர்ந்த பலூன்காரன் “காப்பாற்றுங்கள்!” என்று கூச்சலிட்டான்.
ஆனால் பணியாள் சமாளித்துக் கொள்ளவில்லை. மெருகிட்ட ஓடுகள் பாவிய கெட்டித் தரையில் தடாலென்று விழுந்து, நீண்ட கால்களை உயர்த்தி ஓவென்று ஊளையிட்டான்.
‘ஆகா, பலே!” என்று ஆனந்தக் கூச்சல் போட்டார்கள் சமையல்காரப் பையன்கள். தட்டோடும் கேக்கோடும் சேர்ந்து பணியாளின் பின்னே தரையில் விழுந்த பலூன்காரன் புகலற்ற ஏக்கத்துடன் “சனியன்களா!” என்றான்.
தட்டு சுக்கு நூறாக உடைந்து போயிற்று. பாலாடை வெண்பனிப் பந்துகள் போல எல்லாப் புறங்களிலும் சிதறிற்று. பணியாள் துள்ளி எழுந்து ஓடிப் போய் விட்டான்.
சமையல்காரப் பையன்கள் குதித்துக் கூத்தாடினார்கள், ஆரவாரித்தார்கள். உடைசல்களுக்கு நடுவில், குட்டமாய்த் தேங்கி இருந்த ராஸ்ப்பெரிப் பழப் பாகில், நல்ல பிரெஞ்சுப் பாலாடைப் படலங்கள் சூழத் தரை மேல் உட்கார்ந்திருந்தான் பலூன்காரன். பாலாடைத் துண்டுகள் சிதறிய கேக்கின் மேல் ஏக்கத்துடன் உருகிக் கொண்டிருந்தன.
மிட்டாய்ச்சாலையில் சமையல்காரப் பையன்கள் மட்டுமே இருந்ததையும் மூன்று பெரிய மிட்டாய்க்காரர்கள் இல்லாததையும் கண்டு பலூன்காரனுக்கு ஆறுதல் உண்டாயிற்று.
“சமையல்காரப் பையன்களோடு உடன்பாடு செய்து கொள்வேன். அவர்கள் தப்பிப் போக எனக்கு உதவுவார்கள். என் பலூன்கள் எனக்குக் கைகொடுக்கும்” என்று அவன் முடிவு செய்தான்.
பலூன்கள் கட்டியிருந்த கயிற்றை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். சமையல்காரப் பையன்கள் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பலூன்கள் செல்வக் களஞ்சியங்கள், ஒரு பலூனையாவது தனக்காக வைத்துக் கொள்வது சமையல்காரப் பையனுடைய இன்பக் கனவு என்பதை அவர்களுடைய பார்வையிலிருந்து பலூன்காரன் கண்டு கொண்டான்.
அவன் சொன்னான்:
“துணிகரச் செயல்கள் எனக்கு ஒரேயடியாக அலுத்து விட்டன. நான் சின்னப் பையனோ வீரனோ அல்ல. எனக்குப் பறக்கப் பிடிக்காது. மூன்று தடியர்களிடம் எனக்குப் பயமாய் இருக்கிறது. கொண்டாட்டக் கேக்குகளை அழகுபடுத்த எனக்குத் தெரியாது. அரண்மனையிலிருந்து தூரப் போய்விட எனக்கு நிரம்ப ஆசையாய் இருக்கிறது.”
சமையல்காரப் பையன்கள் சிரிப்பதை நிறுத்தினார்கள். பலூன்கள் அசைந்தாடின, சுழன்றன. இந்த இயக்கம் காரணமாக வெயில் ஒளி ஒரு தரம் நீலமாகவும் இன்னொரு தரம் மஞ்சளாகவும் மற்றொரு தரம் சிவப்பாகவும் அவற்றில் பளிச்சிட்டது. அவை அற்புதமான பலூன்கள்.
“நான் தப்பியோட உங்களால் உதவ முடியுமா?” என்று கயிற்றை இழுத்துக் கொண்டு கேட்டான் பலூன்காரன்.
“முடியும்” என்று தணிந்த குரலில் சொன்னான் ஒரு பையன். பின்பு, “உங்கள் பலூன்களை எங்களுக்குத் தாருங்கள்” என்றான்.
பலூன்காரன் வெற்றியடைந்தான்.
“நல்லது” என்று உணர்ச்சியைக் காட்டாமல் சொன்னான். “எனக்குச் சம்மதம், பலூன்கள் ரொம்ப விலை உள்ளவை. எனக்கு இந்த பலூன்கள் மிகவும் தேவை. ஆனாலும் நான் இசைகிறேன். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் முகங்களில் குதூகலமும் ஒளிவு மறைவு இல்லாத குணமும் தெரிகின்றன. உங்கள் குரல்கள் கணீரென்று ஒலிக்கின்றன.” “உங்களைச் சாத்தான் வாரிக் கொண்டு போக!’ என்று அதே சமயம் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
‘தலைமை மிட்டாய்க்காரர் இப்போது சரக்கறையில் இருக்கிறார். மாலைச் சிற்றுண்டிக்கு வேண்டிய பிஸ்கோத்துக்களுக்குத் தேவையான பண்டங்களை நிறுத்துக் கொண்டிருக்கிறார். அவர் திரும்புவதற்குள் நீங்கள் போய் விட வேண்டும்’ என்றான் ஒரு சமையல்காரப் பையன். “சரி. தாமதிப்பது கூடாது’ என்று இசைந்தான் பலூன்காரன்.
“இதோ. எனக்கு ஓர் இரகசியம் தெரியும்.”
இப்படிச் சொல்லி, கன சதுர வடிவான ஓட்டுத் திண்ணை மேல் இருந்த பெரிய பித்தளைப் பாத்திரத்தின் பக்கத்தில் போய், அதன் மூடியைத் திறந்தான் பையன்.
“பலூன்களைக் கொடுங்கள்” என்று கேட்டான்.
“உனக்கு மூளை பிசகி விட்டதோ? உன்னுடைய பாத்திரம் எனக்கு எதற்காக? நான் தப்பிப் போக விரும்புகிறேன். என்னைப் பாத்திரத்தில் நுழையச் சொல்லுகிறாயா என்ன?’ என்று எரிந்து விழுந்தான் பலூன்காரன்.
‘ஆமாம்.”
‘பாத்திரத்திலா?”
‘ஆமாம்.”
‘அப்புறம்?”
”அங்கே காண்பீர்கள். பாத்திரத்தில் இறங்குங்கள். தப்பி ஓட எல்லாவற்றிலும் மேலான வழி இது.”
ஒடிசலான பலூன்காரன் மட்டும் அல்ல, மூன்று தடியர்களில் எல்லோரிலும் பருமனானவன் கூட நுழையக் கூடியபடி அவ்வளவு விசாலமாக இருந்தது பாத்திரம்.
“நேரத்தில் வெளியேற விரும்பினால் இறங்குங்கள் சீக்கிரம்.”
பலூன்காரன் பாத்திரத்துக்குள் எட்டிப் பார்த்தான். அதற்கு அடி இல்லை. கிணறு போன்ற கறுப்புப் பள்ளத்தை அவன் கண்டான்.
“நல்லது. பாத்திரத்தில் தான் இறங்க வேண்டும் என்றால் அப்படியே செய்கிறேன். காற்றில் பறப்பதையும் பாலாடையில் குளிப்பதையும் விட இது மோசமாய் இராது. சரி, போய் வருகிறேன், சின்னப் புரட்டர்களே. இந்தாருங்கள், என் விடுதலைக்கு விலை.’
முடிச்சை அவிழ்த்து, பலூன்களைச் சமையல்காரப் பையன்களுக்குக் கொடுத்தான், ஆளுக்கு ஒன்றாக எல்லோருக்கும் போதுமானவையாக இருந்தன இருபது பலூன்கள். ஒவ்வொருவனுக்கும் தனிக் கயிற்றில்.
பின்பு, தனக்கு இயல்பான பாங்கின்மையுடன் கால்களை முன்னால் எடுத்து வைத்துப் பாத்திரத்தில் நுழைந்தான் பலூன்காரன். சமையல்காரப் பையன் பாத்திரத்தை அழுத்தி மூடினான்.
“பலூன்கள்! பலூன்கள்!” என்று மகிழ்ச்சி பொங்க ஆரவாரித்தார்கள் சமையல்காரப் பையன்கள்.
மிட்டாய்ச்சாலையிலிருந்து இறங்கி, அதன் சன்னலை ஒட்டி இருந்த பூங்காப் புல்வெளிக்கு ஓடினார்கள்.
அங்கே, காற்றோட்டமான திறந்த வெளியில் பலூன்களை வைத்துக் கொண்டு விளையாடுவது அதிக இன்பமாய் இருந்தது.
திடீரென்று மிட்டாய்ச் சாலையின் மூன்று சன்னல்களில் மூன்று மிட்டாய்க்காரர்கள் தென்பட்டார்கள்.
’’என்ன? என்ன இது? இது என்ன ஒழுங்கீனம்? வாருங்கள் திரும்பி!” என்று ஒவ்வொரு மிட்டாய்க்காரனும் கூப்பாடு போட்டான்.
இந்தக் கூச்சலால் திடுக்கிட்ட சமையல்காரப் பையன்கள் பலூன் கயிறுகளை விட்டுவிட்டார்கள்.
இன்பம் முடிந்து விட்டது.
இருபது பலூன்களும் சட்டென்று பறந்து, ஒளி வீசிக் கொண்டிருந்த நீல வானத்துக்குப் போய் விட்டன. சமையல்காரப் பையன்களோ, வெள்ளைத் துணித் தொப்பிகள் அணிந்த தலைகளை உயர்த்தி, மணம் வீசிய மலர்ச்செடிகளுக்கு நடுவே, கீழே புல் மேல் திறந்த வாய்களுடன் நின்றார்கள்.
-வளரும்