அத்தியாயம் 5

நீக்ரோவும் முட்டைக்கோசும்

மருத்துவரின் அமைதி இல்லாத இரவு கழைக்கூத்தாடியும் சர்க்கஸ் காரனுமான திபூல் கணப்பிலிருந்து வெளி வந்ததில் முடிந்தது உங்களுக்கு நினைவு இருக்கும்.

அதிகாலையில் மருத்துவர் கஸ்பாரின் சோதனைக் கூடத்தில் அவர்கள் இருவரும் என்ன செய்தார்களோ, தெரியாது. கவலையினாலும் மருத்துவர் கஸ்பாரை நீண்ட நேரம் எதிர்பார்த்ததாலும் களைத்துப் போன கனிமீடு அத்தை அயர்ந்து தூங்கினாள், கனவில் கோழியைக் கண்டாள்.

மறு நாள், அதாவது, பலூன் விற்பவன் மூன்று தடியர்களின் அரண்மனைக்குப் பறந்து போனதும் காவல் படையினர் வாரிசு துத்தியின் பொம்மையைக் குத்தித் துளைத்ததும் நிகழ்ந்த அன்று, கனிமீடு அத்தைக்கு ஒரு நிகழ்ச்சியால் வருத்தம் உண்டாயிற்று. பொறியில் அகப்பட்டிருந்த சுண்டெலியை அவள் தப்ப விட்டுவிட்டாள். முந்திய இரவு இந்தச் சுண்டெலி ஆரஞ்சுப் பழப்பாகுக் கட்டியை அரைக் கிலோ தின்று தீர்த்திருந்தது. இன்னும் முன்னால், வெள்ளிக் கிழமை இரவில் இது கார்னேஷன் மலர் வைத்திருந்த கண்ணாடித் தம்ளரைக் குப்புறத் தள்ளி விட்டது.

தம்ளர் உடைந்து போயிற்று. கார்னேஷன் மலருக்கோ, இருதயப் படபடப்பைத் தணிக்கும் வலெரியான் துளிகளின் மணம் எதனாலோ வந்து விட்டது.

அமைதி இல்லாத இரவில் சுண்டெலி பொறியில் மாட்டிக் கொண்டது.

அதிகாலையில் எழுந்த கனிமீடு அத்தை பொறியைத் தூக்கினாள். சிறைப்படுவது அதற்கு இது முதல் தடவை அல்ல போல ஒரே அசட்டையான தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தது சுண்டெலி. அது வெறுமே நடித்தது.

பொறியை நன்றாகத் தெரியும் இடத்தில் வைத்து, ”உனக்குச் சொந்தம் இல்லாத பழப்பாகை இனிமேல் தின்னாதே!” என்றாள் கனிமீடு அத்தை.

நல்லுடை அணிந்து கொண்டு கனிமீடு அத்தை மருத்துவர் கஸ்பாரின் சோதனைக் கூடத்துக்குப் புறப்பட்டாள். சுண்டெலி பிடிபட்ட சந்தோஷத்தை அவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாள். தலைக்கு நாள் காலையில் ஆரஞ்சுப்பழப் பாகுக்கட்டி பாழாகி விட்டது பற்றி அவளுக்கு அனுதாபம் தெரிவித்திருந்தார் மருத்துவர் கஸ்பார்.

“பழப்பாகுக் கட்டியில் புளியம் நிறைய இருப்பதால் அது சுண்டெலிகளுக்குப் பிடிக்கிறது” என்றார் அவர்.

கனிமீடு அத்தைக்கு இதனால் ஆறுதல் உண்டாயிற்று.

‘“சுண்டெலிக்கு என் புளியம் பிடிக்கிறதாக்கும்… அதற்கு என் எலிப்பொறி பிடிக்கிறதா என்பதையும் பார்ப்போமே” என்று எண்ணிக் கொண்டாள்.

சோதனைக்கூட வாயிலை நெருங்கினாள் கனிமீடு அத்தை.

எலிப்பொறியைக் கைகளில் பிடித்திருந்தாள்.

அதிகாலை. திறந்த சன்னலுக்கு வெளியே மரஞ்செடிகள் தளதளத்தன. பலூன்காரனை அடித்துப் போன பலத்த காற்று சற்று நேரம் பொறுத்தே வீசத் தொடங்கிற்று.

கதவின் மறுபுறம் ஆள் நடமாட்டம் கேட்டது.

‘பாவம்! இவர் இரவு முழுவதும் தூங்காமலே இருந்து விட்டாரா என்ன?” என்று நினைத்துக் கொண்டாள் கனிமீடு அத்தை.

அவள் கதவைத் தட்டினாள்.

மருத்துவர் என்னவோ சொன்னார், ஆனால் அவளுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை.

கதவு திறந்தது. நிலையின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் மருத்துவர். எரிந்த ரப்பர் போன்ற நாற்றம் சோதனைக் கூடத்தில் அடித்தது. புடம் போடும் மூசையின் அணையும் தறுவாயில் இருந்த சிவப்பு நெருப்பு மூலையில் மினுமினுத்தது.

இரவில் எஞ்சிய நேரம் எல்லாம் மருத்துவர் கஸ்பார் ஏதோ விஞ்ஞானச் சோதனையில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிந்தது.

”காலை வணக்கம்!” என்று குதூகலம் பொங்கக் கூறினார் மருத்துவர்.

கனிமீடு அத்தை எலிப்பொறியை உயரத் தூக்கினாள். சுண்டெலி சின்ன மூக்கை விடைத்து மோப்பம் பிடித்தது.

“சுண்டெலியைப் பிடித்து விட்டேன்!”

‘’அப்படியா! எங்கே, காட்டுங்கள்!” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார் மருத்துவர்.

கனிமீடு அத்தை குலுக்கி மினுக்கிக் கொண்டு சன்னலுக்குப் பக்கத்தில் போனாள்.

“இதோ பாருங்கள்!”

அத்தை எலிப்பொறியை நீட்டினாள். திடீரென்று அவள் பார்வையில் பட்டான் ஒரு நீக்ரோ, சன்னலின் பக்கத்தில், “சாக்கிரதையாக!” என்று எழுதப்பட்டிருந்த பெட்டி மேல் உட்கார்ந்திருந்தான் அழகான ஒரு நீக்ரோ.

நீக்ரோ வெற்று உடம்பாய் இருந்தான். நீக்ரோ சிவப்பு நிக்கர் மாட்டி இருந்தான்.

நீக்ரோ கறுப்பும் ஊதாவும் பழுப்புமாகப் பளபளத்தான்.

நீக்ரோ சுங்கான் புகைத்துக் கொண்டிருந்தான்.

கனிமீடு அத்தை “ஐயோ!” என்று உரக்க வீரிட்டதால் இருகூறுகளாகப் பிளக்கத் தெரிந்தாள். அவள் பம்பரமாய்ச் சுழன்று வயற்காட்டுப் பொம்மை போலக் கைகளை இரு புறமும் நீட்டினாள். அப்போது அவள் இசகு பிசகாக எதையோ தட்டி விடவே, எலிப்பொறியின் தாழ்ப்பாள் கிணுகிணுத்துத் திறந்து கொண்டது. சுண்டெலி துள்ளி விழுந்து எங்கோ மறைந்து விட்டது.

கனிமீடு அத்தை அப்படித் திகைத்துப் போனாள்.

நீக்ரோ கடகடவென்று உரக்கச் சிரித்து நீண்ட வெறுங்கால்களை நீட்டினான். பிரமாண்டமான மிளகாய்ப் பழம் போன்ற சிவப்புச் சோடுகள் அவன் கால்களில் இலகின.

குப் குப்பென்று அடிக்கும் புயல் காற்றில் சிறு கிளை நடுங்குவது போல அவன் பற்களில் இடுக்கி இருந்த சுங்கான் துள்ளித் துள்ளிக் குதித்தது. மருத்துவரின் மூக்குக் கண்ணாடியும் பளிச்சுப் பளிச்சென்று ஒளி வீசியபடி நர்த்தனம் ஆடிற்று. அவரும் சிரித்துக் கொண்டிருந்தார்.

கனிமீடு அத்தை சோதனைக் கூடத்திலிருந்து பாய்ந்து ஓடினாள். “சுண்டெலி! சுண்டெலி! பழப்பாகுக் கட்டி! நீக்ரோ!” என்று ஓலமிட்டாள் அவள்.

மருத்துவர் கஸ்பார் அவள் பின்னே ஓடினார்.

‘கனிமீடு அத்தை, நீங்கள் வீணாகக் கலவரப்படுகிறீர்கள். என்னுடைய புதிய சோதனை பற்றி முன்கூட்டி உங்களுக்குத் தெரிவிக்க நான் மறந்து விட்டேன். ஆனால் நீங்களே எதிர் பார்த்திருக்கலாமே. நானோ விஞ்ஞானி, பல கலைகளில் வல்லவன், பல வகை இயந்திரங்களில் தேர்ச்சி பெற்றவன். விதம் விதமான சோதனைகள் செய்து வருகிறேன். என்னுடைய சோதனைக் கூடத்தில் நீக்ரோவை மட்டும் அல்ல, யானையைக் கூடப் பார்க்கலாம். கனிமீடு அத்தை… கனிமீடு அத்தை… நீக்ரோ ஒரு விஷயம், முட்டைப் பொரியலோ, வேறு விஷயம்… நாங்கள் காலைச் சிற்றுண்டிக்காகக் காத்திருக்கிறோம். என் நீக்ரோவுக்கு நிறைய முட்டைப் பொரியல் பிடிக்கும்…”

“சுண்டெலிக்குப் புளியம் பிடிக்கும், நீக்ரோவுக்கு முட்டைப் பொரியல் பிடிக்கும்…’ பதைபதைப்புடன் கிசுகிசுத்தாள் கனிமீடு அத்தை.

 “அவ்வளவுதான். முட்டைப் பொரியல் இப்போது, சுண்டெலி இரவில். அது இரவில் பிடிபட்டு விடும், கனிமீடு அத்தை… வெளியே அது செய்வதற்கு ஒன்றும் மிச்சம் இல்லை. ஆரஞ்சுப் பழப்பாகு அறவே தின்று தீர்க்கப்பட்டு விட்டது.”

கனிமீடு அத்தை அழுதாள், முட்டைப் பொரியலில் உப்புக்குப் பதிலாகக் கண்ணீர் சிந்தினாள். கண்ணீர் ஒரே காட்டமாய் இருந்தபடியால் மிளகுப் பொடிக்கும் தேவை இல்லாது போயிற்று.

“நிறைய மிளகுப் பொடி தூவி இருப்பது நன்றாய் இருக்கிறது. அபார ருசி!” என்று முட்டைப் பொரியலை ஆவலோடு விழுங்கினான் நீக்ரோ.

கனிமீடு அத்தை நெஞ்சுப் படபடப்பைத் தணிப்பதற்காக வலெரியான் துளிகளைக் குடித்தாள். அவை எதனாலோ கார்னேஷன் மலர் போல மணத்தன. கண்ணீரின் காரணமாக இருக்கும்.

மருத்துவர் கஸ்பார் வீதியில் நடந்ததை அப்புறம் அவள் சன்னல் வழியே பார்த்தாள். எல்லாம் ஒழுங்காய் இருந்தன: புதிய மப்ளர், புதிய கைத்தடி, அழகான முழுக் குதிகள் வைத்த புதிய (உண்மையில் பழைய) செருப்புக்கள்.

ஆனால் அவர் பக்கத்தில் நடந்தான் நீக்ரோ.

கனிமீடு அத்தை கண்களை இறுக மூடிக் கொண்டு தரையில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த இடத்தில் இருந்தது பூனை. அது கலவரம் அடைந்து கத்திற்று. கனிமீடு அத்தை தன்னை மீறிய ஆத்திரம் பொங்கப் பூனையை மொத்தினாள்; அது ஓயாமல் அவளைச் சுற்றி வந்து கொண்டிருந்ததற்காகவும் சரியான நேரத்தில் சுண்டெலியைப் பிடிக்க அதனால் முடியாததற்காகவும்.

சுண்டெலியோ, மருத்துவர் கஸ்பாரின் சோதனைக் கூடத்திலிருந்து கனிமீடு அத்தையின் அலமாரிக்கு வந்து வாதுமை அப்பத்தைத் தின்று கொண்டே ஆரஞ்சுப் பழப்பாகுக் கட்டியைப் பரிவுடன் நினைவுகூர்ந்தது.

மருத்துவர் கஸ்பார் அர்னேரி நிழல் வீதியில் வசித்து வந்தார். இந்த வீதியிலிருந்து இடது பக்கம் திரும்பினால் விதவை லிஸவேத்தா என்ற பெயர் உள்ள சந்து வரும். அங்கிருந்து இடி விழுந்து முறிந்து போன ஓக் மரத்தால் புகழ் பெற்ற வீதியைத் தாண்டி இன்னும் ஐந்து நிமிட நேரம் நடந்தால் பதினாலாவது சந்தையில் இருக்கலாம்.

மருத்துவர் கஸ்பாரும் நீக்ரோவும் அந்தத் திக்கில் நடந்தார்கள். அதற்குள் காற்று வலுத்தது. முறிந்த ஓக் மரம் ஊஞ்சல் போலக் கிறீச்சிட்டது. விளம்பரத்தாள் ஒட்டுபவனால் பசை தடவிய காகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ளவே முடியவில்லை. காற்று அதைக் கைகளிலிருந்து பிடுங்கி அவனுடைய முகத்தில் எறிந்தது. அவன் வெள்ளைக் கைத்துவாலையால் முகத்தைத் துடைத்துக் கொள்வது போலத் தொலைவிலிருந்து பார்க்கையில் தோன்றியது.

விளம்பரத் தாளைச் சுற்றுச் சுவர் மேல் ஒட்டக் கடைசியில் அவனுக்கு வாய்த்து விட்டது. மருத்துவர் கஸ்பார் படித்தார்:

“அப்படியா! புரிந்தது விஷயம். நீதிமன்றச் சதுக்கத்தில் இன்று மரண தண்டனை நிறை வேற்றப்படப்போகிறது. பணக்காரர்கள், பெருந்தீனிக்காரர்களுடைய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர்களுடைய தலைகளை மூன்று தடியர்களின் கொலைகாரர்கள் வெட்டப் போகிறார்கள். மூன்று தடியர்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நீதிமன்றச் சதுக்கத்தில் கூடும் மக்கள் வெட்டு மேடைகளை உடைத்துத் தகர்த்து, கொலையாளிகளைக் கொன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் தங்கள் சோதரர்களை விடுவித்து விடலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆகையால்தான் மக்களின் இன்பப்பொழுது போக்குக்கு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இன்றைய மரண தண்டனையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப அவர்கள் விரும்புகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டார் மருத்துவர் கஸ்பார்.

அவரும் அவருடைய கறுப்புத் துணைவனும் சந்தைச் சதுக்கத்தை அடைந்தார்கள். நாடக மேடைகளின் பக்கத்தில் ஆட்கள் கூடி இருந்தார்கள். ஒரு பகட்டனையோ, பொன் மீன் அல்லது முந்திரிப்பழ நிற உடை அணிந்த சீமாட்டியையோ, தங்கச் சரிகைப் பூத்தையல் வேலை செய்த பல்லக்கில் அமர்ந்த உயர்குடி முதியவனையோ, இடையில் பிரமாண்டமான தோல் பணப்பை வைத்திருக்கும் வியாபாரியையோ கூடி இருந்தவர்களுக்கு நடுவில் மருத்துவர் கஸ்பார் காணவில்லை.

நகரின் ஓரப் பகுதிகளில் வசித்த கம்மியர்கள், தொழிலாளர்கள், மலிவான ரை ரொட்டி விற்பவர்கள், நாட்கூலிக்காரிகள், சுமை தூக்கிகள், கிழவிகள், பிச்சைக்காரர்கள், அங்கவீனர்கள் ஆகியவர்களே இங்கே கூடி இருந்தார்கள். சாம்பல் நிறமான பழைய கிழிந்த உடைகளில் பச்சை முன்கைப் பகுதிகள், கலப்பு நிற மழைக் கோட்டுகள், அல்லது வெவ்வேறு நிற ரிப்பன்கள் ஒரு சிலரிடம் காணப்பட்டன.

கிழவிகளின் கம்பளி இழைகள் போன்ற தலைமயிரைக் காற்று பரத்தியது. அது கண்களைக் காந்தச் செய்தது, ஏழைகளின் பழுப்பு நிற்க கந்தல்களைப் பிய்க்கப் பார்த்தது.

எல்லோருடைய முகங்களும் ஏக்கத்தைக் காட்டின. எல்லோரும் கெட்டதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீதிமன்றச் சதுக்கத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். நம் தோழர்களின் தலைகள் அங்கே உருளப் போகின்றன. இங்கேயோ, மூன்று தடியர்களால் நிறையத் தங்கம் கொடுத்து அமர்த்தப்பட்ட கோமாளிகள் கோரணிகள் காட்டப் போகிறார்கள்” என்று ஆட்கள் பேசிக் கொண்டார்கள்.

’’நீதிமன்றச் சதுக்கத்துக்குப் போவோம்!” என்ற கூச்சல்கள் எழுந்தன.

‘நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. நம்மிடம் கைத்துப்பாக்கிகளும் வாட்களும் கிடையாது. நீதிமன்றச் சதுக்கத்தையோ காவல் படையினரின் மூன்று வரிசைகள் சுற்றிலும் அரண் செய்திருக்கின்றன.’

“படையினர் இன்னமும் பணக்காரர்களுக்கே தொண்டு செய்கிறார்கள். அவர்கள் நம்மைத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். பரவாயில்லை! இன்று இல்லாவிட்டால் நாளை அவர்கள் நம்மோடு சேர்ந்து கொண்டு தங்கள் அதிகாரிகளை எதிர்த்துப் போரிடுவார்கள், நிச்சயமாக.”

”இன்றே கூட, விண்மீன் சதுக்கத்தில் ஒரு காவல் படையினன் தன்னுடைய அதிகாரியைச் சுட்டுக் கொன்றான். அதனால் சர்க்கஸ்காரன் திபூலின் உயிரை அவன் காப்பாற்றினான்.” ‘ஆனால் திபூல் எங்கே? தப்பி ஓட அவனுக்கு வாய்த்ததா?”

“தெரியாது. காவல் படையினர் இரவு முழுவதும், அதிகாலையிலும் தொழிலாளர் வட்டாரங்களுக்குத் தீ வைத்துக் கொண்டிருந்தார்கள். திபூலைப் பிடிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள்.”

மருத்துவர் கஸ்பாரும் நீக்ரோவும் நாடக மேடைகளை நெருங்கினார்கள். நிகழ்ச்சிகள் இன்னும் தொடங்கவில்லை. வண்ணம் தீற்றிய திரைகளுக்கும் தடுப்புக்களுக்கும் பின்னால் குரல்கள் கேட்டன, சலங்கைகள் ஒலித்தன, புல்லாங்குழல்கள் ஊதின. எதுவோ கீச்சிட்டது, சரசரத்தது, இரைந்தது. அங்கே நடிகர்கள் நாடகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

திரை விலகிற்று. ஒரு மூஞ்சி எட்டிப் பார்த்தது. அவன் ஒரு ஸ்பானியன். கைத்துப்பாக்கி சுடுவதில் அற்புதத் திறமை உள்ளவன். அவனுடைய மீசைகள் முறுக்கி விடப்பட்டிருந்தன. ஒரு கண் சுழன்றது.

நீக்ரோவைப் பார்த்ததும் அவனுடைய முகம் மலர்ந்தது. ‘‘ஓகோ, நீயும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப் போகிறாயா? உனக்கு என்ன சம்பளம் கொடுத்தார்கள்?” என்று கேட்டான். நீக்ரோ பேசாதிருந்தான். “எனக்குப் பத்து தங்க நாணயங்கள் கிடைத்தன’’ என்று பெருமை அடித்துக் கொண்டான்

ஸ்பானியன். நீக்ரோவை நடிகன் என்று அவன் எண்ணி விட்டான். மர்மமான முகத்தோற்றத்தை வருவித்துக் கொண்டு, “இப்படிக் கிட்டே வா” என்று கிசுகிசுத்தான்.

நீக்ரோ மேடை மேல் ஏறித் திரையை நெருங்கினான். ஸ்பானியன் அவனுக்கு இரகசியச் சேதியைத் தெரிவித்தான். சந்தைகளில் அன்று கலை நிகழ்ச்சிகளைக் காட்டுவதற்காக நூறு நடிகர்களை மூன்று தடியர்கள் கூலிக்கு அமர்த்தி இருந்தார்களாம். தங்கள் நடிப்பின் போது இவர்கள் பணக்காரர்கள், பெருந்தீனிக்காரர்களின் ஆட்சியை எல்லா வகையிலும் புகழ் வேண்டும், அதே சமயம் கலகக்காரர்களையும் கருமான் புரோஸ்பெரோவையும் சர்க்கஸ்காரன் திபூலையும் தூற்ற வேண்டும் என்று ஏற்பாடாம்.

“செப்படி வித்தைக்காரர்கள், மிருகங்களைப் பழக்குபவர்கள், கோமாளிகள், குதிரைச் சவாரிக்காரிகள், குரல்வித்தைக் கலைஞர்கள், நர்த்தகர்கள் என்று பெரிய கலைஞர் குழுவை அவர்கள் திரட்டி இருக்கிறார்கள்… எல்லோருக்கும் பணம் கொடுத்தாயிற்று.’

“மூன்று தடியர்களைப் புகழ்வதற்கு எல்லா நடிகர்களுமா இசைந்து விட்டார்கள்?” என்று கேட்டார் மருத்துவர் கஸ்பார்.

ஸ்பானியன் சீறினான்:

”உஷ்-ஷ்!” அவன் விரலை உதடுகளில் அழுத்திக் கொண்டான். “இதைப் பற்றி இரைந்து பேசப்படாது. நிறையப் பேர் மாட்டோம் என்றார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.”

நீக்ரோ கோபம் பொங்கத் தூவென்று துப்பினான்.

அப்போது வாத்தியங்கள் இசைக்கலாயின. சில மேடைகளில் நிகழ்ச்சி தொடங்கிற்று. கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

பலகை மேடையிலிருந்து சேவல் கொக்கரிப்பது போலக் கூவினான் கோமாளி. உங்களை வாழ்த்த அனுமதியுங்கள்…’

‘’குடிகளே!” நிசப்தம் ஏற்படுவதற்காக அவன் பேச்சை இடையில் நிறுத்தினான். அவனுடைய வாயிலிருந்து மாவு உதிர்ந்தது.

“பின்வரும் சந்தோடி நிகழ்ச்சி குறித்து உங்களை வாழ்த்த அனுமதியுங்கள்: நம் இனிய, ரோஜா நிற மூன்று தடியர்களின் கொலையாளிகள் கலகக்காரக் கீழ் மக்களின் தலைகளை இன்று வெட்டுவார்கள்…’

அவன் பேச்சை முடிக்கவில்லை. ஒரு தொழிலாளி பாதி தின்ற கோதுமை அடையை அவன் மேல் எறிந்தான். அது கோமாளியின் வாயில் ஒட்டிக் கொண்டது.

“ம்-ம்-ம்-ம்…”

கோமாளி மும்மும்மூ என்றான், ஆனால் குரல் கிளம்பவில்லை. அரை குறையாக வெந்தமாவு அவன் வாயில் அப்பி இருந்தது. அவன் கைகளை ஆட்டி மூஞ்சியைச் சுளித்தான். ‘அப்படித்தான் வேண்டும்! சரி தான்!” என்று கூட்டத்தில் இருந்த வர்கள் கத்தினார்கள்.

கோமாளி தடுப்புக்குப் பின்னே ஓடி விட்டான்.

“அயோக்கியப் பயல்! மூன்று தடியர்களுக்குத் தன்னை விற்று விட்டான்! நம்முடைய விடுதலைக்காகச் சாவை மதியாமல் போரிட்டவர்களைப் பணத்துக்காகத் தூற்றுகிறான்! ”

வாத்தியங்கள் முன்னிலும் உரக்க ஒலித்தன. இன்னும் சில இசைக் குழுக்கள் சேர்ந்து கொண்டன. ஒன்பது குழல்கள், மூன்று எக்காளங்கள், மூன்று துருக்கிய டமாரங்கள் ஆகியவையும் ஒரு பிடிலும் அவற்றில் இருந்தன. பிடிலின் ஒலிகள் பல் வலி உண்டாக்கின.

இந்த வாத்திய இசையால் கூட்டத்தின் இரைச்சலை அடக்கி விட நாடக மேடைகளின் சொந்தக்காரர்கள் முயன்றார்கள்.

‘இந்த அடைகளுக்கு நம் நடிகர்கள் ஒருவேளை பயந்து விடுவார்கள். ஒன்றுமே நடக்காதது போலப் பாவனை செய்யவேண்டும் நாம்” என்றான் அவர்களில் ஒருவன்.

“தயவு செய்யுங்கள்! தயவு செய்யுங்கள்! நாடகம் தொடங்கப் போகிறது…” இன்னொரு நாடக மேடை “டிரோஜன் குதிரை” என்று அழைக்கப்பட்டது.

திரைக்குப் பின்னாலிருந்து வந்தான் இயக்குநன். அவன் தலையில் மிக உயரமான பச்சைக் கம்பளித் தொப்பி இருந்தது. மார்பில் உருண்டையான செப்புப் பொத்தான்கள் இலகின. கன்னங்களில் சிரமப்பட்டுப் பூசிய அழகான சிவப்புப் பூச்சு திகழ்ந்தது.

“இரையாதிருங்கள்!” என்று அவன் சொன்ன தோரணை ஜெர்மன் மொழி பேசுவது போல இருந்தது. “இரையாதேயுங்கள்! எங்கள் நிகழ்ச்சி உங்கள் கவனத்துக்கு உரியது.” கூட்டம் கொஞ்சம் கவனம் செலுத்தத் தலைப்பட்டது.

“இன்றையக் கொண்டாட்டத்துக்காகப் பயில்வான் லப்பித்தூப்பை நாங்கள் அழைத்திருக்கிறோம்.”

“தாத்-தித்-தூத்-தா!” என்று முழங்கிற்று எக்காளம்.

கை தட்டல் போலக் கொஞ்சம் சடசடப்பு கேட்டது.

“பயில்வான் லப்பித்தூப் தம் வலிமையின் அற்புதங்களை உங்களுக்குக் காட்டுவார்…’ வாத்தியங்கள் இசைத்தன. திரை விலகிற்று. மேடைக்கு வந்தான் பயில்வான் லப்பித்தூப்.

ரோஜா நிற அரைக் கால்சட்டை அணிந்த பூதாகாரமான அந்த இளைஞன் மெய்யாகவே பெருத்த வலிமை உள்ளவனாகக் காணப்பட்டான்.

அவன் நீண்ட மூச்சு இழுத்து எருது போலத் தலையைக் குனிந்தான். அவனுடைய தசைகள் மலைப்பாம்பால் விழுங்கப்பட்ட குழிமுயல்கள் போலத் தோலுக்கு அடியில் அசைந்தன .

பணியாட்கள் எடைக் குண்டுகளைக் கொண்டு வந்து மேடை மேல் போட்டார்கள். பலகைகள் அனேகமாக உடையத் தெரிந்தன. புழுதியும் மரத்தூளும் படலம் படலமாகக் கிளம்பின. சத்தம் சந்தை முழுவதிலும் கேட்டது.

பயில்வான் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினான். எடைக் குண்டுகளைக் கைக்கு ஒன்றாக எடுத்து, பந்துகள் போல மேலே வீசிப் பிடித்து, ஒன்றோடு ஒன்றை மடாரென்று மோதினான்… தீப்பொறிகள் சிதறின.

“பார்த்தீர்களா! கருமான் புரோஸ்பெரோ, சர்க்கஸ்காரன் திபூல், இரண்டு பேருடைய மண்டைகளையும் மூன்று தடியர்கள் இப்படித்தான் மோதி உடைக்கப் போகிறார்கள்” என்றான் அவன்.

இந்தப் பயில்வானையும் மூன்று தடியர்கள் பணம் கொடுத்துக் கைக்குள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

தன் கேலிப் பேச்சால் தானே மகிழ்ந்து, ‘ஹ-ஹ-ஹா!” என்று சிரித்தான்.

தன் மேல் அடையை எறிய எவனும் துணிய மாட்டான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய பலத்தை எல்லோரும் பார்த்திருந்தார்களே.

நிலவிய அமைதியில் கணீரென்று ஒலித்தது நீக்ரோவின் குரல். ஏராளமான தலைகள் அவன் பக்கம் திரும்பின.

படி மேல் காலை வைத்து, “நீ என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான் நீக்ரோ. ‘கருமான் புரோஸ்பெரோ, சர்க்கஸ்காரன் திபூல், இரண்டு பேர் தலைகளையும் நெற்றியோடு நெற்றி மோதும்படி இந்த மாதிரி அடித்து உடைப்பார்கள் மூன்று தடியர்கள் என்கிறேன்.”

“மூடு வாயை!’

நீக்ரோ அமைதியாகவும் கண்டிப்புடனும் தணிந்த குரலில் சொன்னான்.

‘அப்படிச் சொல்ல நீ யார், கறுப்புப் பிண்டமே?’ என்று சீறினான் பயில்வான்.

எடைக் குண்டுகளைப் போட்டு விட்டுக் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான் அவன். அந்த நீக்ரோ மேடை மீது ஏறினான்.

“உனக்கு வலிமை நிறையத்தான். ஆனால் கீழ்மையும் குறைவில்லை. என் கேள்விக்குப் பதில் சொல்லு, யார் நீ? மக்களை ஏளனம் செய்ய உனக்கு யார் உரிமை தந்தார்கள்? எனக்கு உன்னைத் தெரியும். சம்மட்டி அடிப்பவனுடைய மகன் நீ. உன்னுடைய தகப்பன் தொழிற்சாலையில் இன்னமும் வேலை செய்கிறான். உன் தமக்கையின் பெயர் ஏலி. அவள் சலவைத் தொழிலாளி. பணக்காரர்களின் உள்ளாடைகளை அவள் வெளுக்கிறாள். ஒருவேளை காவல் படையினர் அவளை நேற்று சுட்டுக் கொன்றிருப்பார்கள்… நீ துரோகி!”

பயில்வான் திகைத்துப் பின்வாங்கினான். நீக்ரோ சொன்னது எல்லாம் உண்மை. பயில்வானுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“போ அப்பாலே!” என்று அதட்டினான் நீக்ரோ.

பயில்வான் சுதாரித்துக் கொண்டான். அவன் முகம் குப்பென்று சிவந்தது. அவன் முட்டிகளை இறுக்கினான்.

“எனக்கு உத்தரவிட உனக்கு உரிமை கிடையாது! நான் உன்னை அறியேன். நீ சாத்தான்” என்று சிரமத்துடன் சொன்னான்.

“போய் விடு அப்பாலே! நான் மூன்று வரை எண்ணுவேன். ஒன்று!’

கூட்டம் மலைத்துப் போயிற்று. நீக்ரோ லப்பித்தூப்பின் தோள் உயரந்தான் இருந்தான், அவனை விட மூன்று மடங்கு ஒடிசலாய் இருந்தான். ஆனாலும் சண்டை மூண்டால் நீக்ரோவே வெல்வான் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் உண்டாகவில்லை. நீக்ரோவின் தோற்றத்தில் அவ்வளவு உறுதியும் கண்டிப்பும் தன்னம்பிக்கையும் காணப்பட்டன.

‘“இரண்டு! ’’

பயில்வான் தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

“சைத்தான்!” என்று வாய்க்குள் சீறினான்.

‘‘மூன்று!”

பயில்வான் மறைந்து விட்டான். பயங்கரமான அடியை எதிர்பார்த்துப் பலர் கண்களை இறுக மூடிக் கொண்டார்கள். அவர்கள் அவற்றைத் திறந்த போது பயில்வானைக் காணோம். தடுப்புக்குப் பின்னால் ஒரே நொடியில் மறைந்து விட்டான் அவன்.

‘“மூன்று தடியர்களை மக்கள் இந்த மாதிரித்தான் விரட்டப் போகிறார்கள்!” என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கைகளை உயர்த்தினான் நீக்ரோ.

கூட்டம் மகிழ்ச்சிப் பெருக்கால் கொந்தளித்தது.

தொப்பிகளை உயரே எறிந்தார்கள்.

‘“மக்கள் நீடூழி வாழ்க!’

“பலே! பலே!’

ஆட்கள் கைகளைக் கொட்டினார்கள்,

மருத்துவர் கஸ்பார் மட்டும் திருப்தி இல்லாமல் தலையை அசைத்தார். அவர் எதனால் அதிருப்தி அடைந்தார் என்பது தெரியவில்லை.

“யார் இவன்? யார் இவன்? இந்த நீக்ரோ யார்?” என்று பார்வையாளர்கள் ஆவலோடு கேட்டார்கள்.

“இவனும் நடிகனோ?”

”நாம் இவனைப் பார்த்ததே இல்லையே!”

”யார் நீ?”

‘எதற்காக எங்களுக்குப் பரிந்து பேசினாய்?”

“பொறுங்கள்! வழி விடுங்கள்!..’

ஒரு கந்தலாண்டி கூட்டத்துக்கு இடையே புகுந்து முன்னே வந்தான். தலைக்கு நாள் மாலையில் பூக்காரிகளோடும் வண்டிக்காரர்களோடும் பேசின அதே பிச்சைக்காரன் இவன். மருத்துவர் கஸ்பார் அவனை அடையாளம் கண்டு கொண்டார்.

“பொறுங்கள்! இவர்கள் நம்மை ஏமாற்றுவது உங்கள் பார்வையில் படவில்லையா? இந்த நீக்ரோ லப்பித்தூப் போலவே நடிகன். ஒரே திருட்டுக் கும்பல். இவனுக்கும் மூன்று தடியர்களிடமிருந்து பணம் கிடைத்திருக்கும்” என்று கிளர்ச்சி பொங்கச் சொன்னான் பிச்சைக்காரன்.

நீக்ரோ முட்டிகளை இறுக்கினான். கூட்டத்தின் மகிழ்ச்சி கோபமாக மாறிற்று. “உண்மைதான்! ஒரு போக்கிரி இன்னொருவனை விரட்டி விட்டான்.”

‘தன்னுடைய தோழனை நாம் அடித்து நொறுக்குவோம் என்று அஞ்சி இப்படி வேடிக்கை செய்திருக்கிறான்.”

‘ஒழிக!”

‘அயோக்கியன்!’

‘துரோகி!’”

கூட்டத்தை அடக்குவதற்காக ஏதோ சொல்ல வாயெடுத்தார் மருத்துவர் கஸ்பார், ஆனால் நேரம் கடந்து விட்டது. ஒரு பன்னிரண்டு ஆட்கள் மேடைக்கு ஓடி வந்து நீக்ரோவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“மொத்துங்கள் அவனை!’ என்று கீச்சிட்டாள் ஒரு கிழவி.

நீக்ரோ கையை நீட்டினான். அவன் கலங்கவில்லை. ‘நில்லுங்கள்! ’’

கூச்சல்களையும் இரைச்சலையும் சீழ்க்கைகளையும் அடக்கி விட்டது அவனுடைய குரல்.

நிசப்தத்தில் அமைதியாகவும் சகஜமாகவும் ஒலித்தன நீக்ரோவின் சொற்கள்:

“நான்தான் சர்க்கஸ்காரன் திபூல்.”

குழப்பம் ஏற்பட்டது.

தாக்க வந்தவர்களின் வளையம் கலைந்து விட்டது.

“அப்படியா?” என்று பெருமூச்சு விட்டது கூட்டம்.

நூற்றுக் கணக்கானவர்கள் அவனைப் பார்ப்பதற்காகத் தலைகளை முன்னே நீட்டி, அசையாமல் இருந்தார்கள்.

ஒருவன் மட்டும் குழப்பம் அடைந்தவன் போலக் கேட்டான்:

“அப்படியானால் நீ ஏன் கறுப்பாய் இருக்கிறாய்?”

“இந்தக் கேள்வியை மருத்துவர் கஸ்பார் அர்னேரியிடம் கேளுங்கள்” என்று சொல்லி, புன்னகையுடன் மருத்துவரைச் சுட்டிக் காட்டினான் நீக்ரோ.

“சந்தேகம் இல்லாமல் அவன்தான் இவன்!”

‘“திபூல்!’”

“வெற்றி! திபூல் பத்திரமாய் இருக்கிறான்! திபூல் உயிரோடு இருக்கிறான்! திபூல் நம்மோடு இருக்கிறான்!”

”நீடூழி வாழ்…”

ஆனால் ஆரவாரம் நடுவில் நின்று விட்டது. எதிர்பாராத கெட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது. பின் வரிசைகளில் குழப்பம் உண்டாயிற்று. ஆட்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள்.

‘சத்தம் போடாதீர்கள்! அமைதியாய் இருங்கள்!”

“ஓடு திபூல், தப்பித்துக் கொள்!”

மூன்று குதிரைச் சவாரிக்காரர்களும் ஒரு சாரட்டுடன் சதுக்கத்துக்கு வந்தார்கள்.

அரண்மனைக் காவல் படைப்பிரிவுக் காப்டன் பொனவெந்தூரா பிரபுவும் அவனுடைய துணைவர்களான இரண்டு காவல் படையினரும். வாரிசு துத்தியின் பழுதடைந்த பொம்மையுடன் சாரட்டில் இருந்தான் அரண்மனை அலுவலன். கத்தரித்த சுருட்டை முடியுள்ள அழகான தலையை அவன் தோள் மேல் ஏக்கத்தோடு சாய்த்துக் கொண்டிருந்தது பொம்மை.

அவர்கள் மருத்துவர் கஸ்பாரைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

“காவல் படைக்காரர்கள்!” என்று ஆபாச வசவுகளுடன் கத்தினான் ஒருவன். சில ஆட்கள் சுற்றுச் சுவற்றைத் தாண்டி ஓடி விட்டார்கள்.

கறுப்புச் சாரட்டு நின்றது. குதிரைகள் தலைகளை ஆட்ட்டின. சேணம் கிணுகிணுத்துப் பளிச்சிட்டது.

இள நீல இறகுகளைக் காற்று பரத்தியது.

குதிரைகள் மேல் வந்தவர்கள் சாரட்டைச் சூழ்ந்து கொண்டார்கள்.

காப்டன் பொனவெந்தூராவின் குரல் பயங்கரமாய் இருந்தது. பிடில் இசை பல் வலி உண்டாக்கிற்று என்றால், இந்தக் குரலைக் கேட்டதும் பற்கள் உடைந்து விழுந்த உணர்ச்சி உண்டாயிற்று.

அங்கவடிகளில் கொஞ்சம் எழும்பி, “மருத்துவர் கஸ்பார் அர்னேரியின் வீடு எங்கே இருக்கிறது?’” என்று கேட்டான்.

கடிவாளத்தை அவன் இழுத்துப் பிடித்தான். மணிக்கட்டுகளுக்கு மேல் மணி வடிவில் அகன்ற முரட்டுத் தோல் கையுறைகள் அணிந்திருந்தான் அவன்.

இந்தக் கேள்வி ஒரு கிழவியை இடிபோலத் தாக்கிற்று. அவள் திடுக்கிட்டுப் போய், நிச்சயம் இல்லாத ஒரு திக்கில் கையைக் காட்டினாள்.

“எங்கே?” என்று மறுபடி கேட்டான் காப்டன்.

இப்போது அவன் குரல் ஒலித்த விதம், ஒரு பல் மட்டும் அல்ல, தாடை முழுவதுமே உடைந்து விழுந்து விட்டது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

“நான் இங்கே இருக்கிறேன். என்னைத் தேடுவது யார்?”

ஆட்கள் விலகினார்கள். மருத்துவர் கணக்காக அடி வைத்துச் சாரட்டின் பக்கத்தில் போனார். “மருத்துவர் கஸ்பார் அர்னேரி நீங்கள் தாமா?”

“ஆமாம்.”

சாரட்டின் கதவு திறந்தது.

“உடனே சாரட்டில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை உங்கள் வீட்டுக்குக் கூட்டிப் போவார்கள். சங்கதி என்ன என்பதை அங்கே தெரிந்து கொள்வீர்கள்.”

குதிரைக்காரன் பின் தட்டிலிருந்து குதித்து, சாரட்டில் ஏற மருத்துவருக்கு உதவினான். கதவு மூடிக் கொண்டது. உலர்ந்த தரையைப் பிளந்தபடிக் குதிரைப் படை அணி புறப்பட்டது. ஒரு நிமிடம் பொறுத்து எல்லாம் திருப்பத்துக்கு அப்பால் மறைந்து விட்டன.

காப்டன் பொனவெந்தூராவோ, காவல் படையினரோ, கூட்டத்திற்குப் பின்னே நின்ற சர்க்கஸ்காரன் திபூலைப் பார்க்கவில்லை. நீக்ரோவைப் பார்த்திருந்தாலும், முந்திய இரவு தாங்கள் தேடிக் கொண்டிருந்த ஆள் அவன்தான் என்று அவர்கள் தெரிந்து கொண்டிருப்பது சந்தேகந்தான்.

ஆபத்து விலகி விட்டது என்று தோன்றியது. ஆனால் வன்மமுள்ள சீறல் திடீரென்று கேட்டது.

காலிக்கோ துணி இழுத்துக் கட்டிய தடுப்புக்குப் பின்னாலிருந்து தலையை நீட்டினான் பயில்வான் லப்பித்தூப்.

“பொறு… பொறு, அப்பனே! இதோ காவல் படைக்காரர்களை எட்டிப் பிடித்து நீ இங்கே இருக்கிறாய் என்று சொல்லி விடுகிறேன்!” என்று சீறி, பருத்த முட்டியைக் காட்டித் திபூலைப் பயமுறுத்தினான்.

பின்பு அவன் தடுப்பைத் தாண்டுவதற்காக ஏறினான். அவனுடைய பூதாகாரமான ரோஜா நிற உடலைத் தாங்க முடியாமல் தடுப்பு வாத்துக் குரலில் கத்தி முறிந்து விட்டது.

அதனால் ஏற்பட்ட இடுக்கிலிருந்து காலை விடுவித்துக் கொண்டு ஆட்களின் கும்பலை இடித்துத் தள்ளி விட்டுச் சாரட்டின் பின்னே பாய்ந்து ஓடினான் பயில்வான்.

உருண்டு திரண்ட வெறுங் கைகளை வீசி ஆட்டியபடி, “நில்லுங்கள்! நில்லுங்கள்! சர்க்கஸ்காரன் திபூல் அகப்பட்டு விட்டான்! சர்க்கஸ்காரன் திபூல் இங்கே இருக்கிறான்! என் கைகளில் இருக்கிறான்!” என்று கூப்பாடு போட்டான்.

நிலைமை அபாயகரமாகத் திரும்பிற்று. சுழலும் விழியும் இடையில் செருகிய கைத்துப்பாக்கியுமாக ஸ்பானியன் வேறு அவனோடு சேர்ந்து கொண்டான். இன்னொரு கைத்துப்பாக்கியை அவன் கையில் பிடித்திருந்தான். ஸ்பானியன் கூச்சல் கிளப்பினான். மேடை மேல் துள்ளிக் குதித்துக் கொண்டு கத்தினான் :

“குடிகளே! திபூலைக் காவல் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் நமக்குக் கெடுதல் உண்டாகும். குடிகளே! மூன்று தடியர்களோடு சச்சரவு செய்வது கூடாது!’ பயில்வான் லப்பித்தூப் எந்த மேடையில் நிகழ்ச்சியைச் சரியாகக் காட்ட முடியவில்லையோ அதன் இயக்குநனும் ஸ்பானியனோடு சேர்ந்து கொண்டான்.

‘“அவன் என் மேடை நிகழ்ச்சியை இடை முறித்தான்! பயில்வான் லப்பித்தூப்பை விரட்டினான்! ஒரு நீக்ரோவுக்காக மூன்று தடியர்களுக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை!’ என்றான்.

கூட்டம் திபூலைக் காத்து நின்றது.

பயில்வானால் காவல் படையினரை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அவன் சதுக்கத்துக்குத் திரும்பினான். முழு வேகத்தோடு நேரே திபூல் மேல் பாய்ந்தான். ஸ்பானியன் மேடையிலிருந்து குதித்து இரண்டாவது கைத்துப்பாக்கியை உருவிக் கொண்டான். நாடக மேடை இயக்குநன்

ஒரு வெள்ளைக் காகித வட்டத்தை எங்கிருந்தோ எடுத்துக் கொண்டான். பழகிய நாய்கள் சர்க்கசில் இந்த மாதிரி வட்டத்தைத் தாண்டிக் குதிப்பது வழக்கம். அவன் வட்டத்தை வீசி ஆட்டி, மேடையிலிருந்து குதித்து, ஸ்பானியன் பின்னே கிந்திக் கிந்தி நடந்தான்.

ஸ்பானியன் சுட வாக்காகக் கைத்துப்பாக்கிக் குதிரையைப் பின் இழுத்துக் கொண்டான். ஓட வேண்டும் என்பதைத் திபூல் கண்டு கொண்டான். கூட்டம் விலகிக் கொடுத்தது. மறு நிமிடமே திபூல் சதுக்கத்திலிருந்து மறைந்து விட்டான். சுற்றுச் சுவற்றைத் தாண்டிக் குதித்தவன், ஒரு காய்கறித் தோட்டத்தை அடைந்தான். இடுக்கு வழியாகப் பார்த்தான். பயில்வானும் ஸ்பானியனும் இயக்குநனும் காய்கறித் தோட்டத்துக்கு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். காட்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது. திபூல் வாய் விட்டுச் சிரித்தான். பயில்வான் மதம் பிடித்த யானை போல ஓடி வந்து கொண்டிருந்தான். ஸ்பானியன் பின் கால்களில் துள்ளும் எலி போல் இருந்தான். இயக்குநனோ, குண்டடிபட்ட காக்கை போலக் கிந்தி நடந்தான்.

‘நாங்கள் உன்னை உயிரோடு பிடித்து விடுவோம். சரண் அடைந்து விடு!” என்று கத்தினார்கள் அவர்கள்.

ஸ்பானியன் கைத்துப்பாக்கிக் குதிரையைக் கிலுக்கிப் பற்களை நெறுநெறுத்தான். காகித வட்டத்தை ஆட்டினான் இயக்குநன்.

திபூல் தாக்குதலை எதிர்பார்த்தான். அவன் நின்ற இடம் பொருபொருத்த கருமண் நிலம். சுற்றிலும் பாத்திகள் இருந்தன. அவற்றில் வளர்ந்திருந்தன முட்டைக் கோசும் அக்காரக் கிழங்கும். எவையோ பசுங்கொடிகள் படர்ந்திருந்தன, தண்டுகள் துருத்தி இருந்தன, அகலமான இலைகள் கிடந்தன.

எல்லாம் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. தெளிந்த நீல வானம் பளிச்சென்று ஒளி வீசிற்று.

சண்டை தொடங்கிற்று.

மூன்று பேரும் சுற்றுச் சுவற்றை நெருங்கினார்கள்.

“நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று கேட்டான் பயில்வான்.

ஒருவரும் பதில் சொல்லவில்லை.

அப்போது ஸ்பானியன் சொன்னான்:

“சரண் அடைந்து விடு! என்னுடைய ஒவ்வொரு கையிலும் ஓரு கைத்துப்பாக்கி இருக்கிறது. அவை ‘புரட்டனும் மகனும்’ என்ற மிகச் சிறந்த கம்பெனி தயாரித்தவை. நான் நாட்டிலேயே சிறந்த துப்பாக்கி வீரன், புரிந்ததா?”

கைத்துப்பாக்கியால் சுடும் கலையில் திபூல் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. அவனிடம் கைத்துப்பாக்கி இருக்கக்கூட இல்லை. ஆனால் அவன் கைக்கு அடியில், இன்னும் சரியாய்ச் சொன்னால் காலுக்கு அடியில், ஏராளமான முட்டைக்கோசுகள் இருந்தன. அவன் குனிந்து, உருண்டையும் கனமுமான ஒரு முட்டைக்கோசைப் பறித்து, சுவற்றுக்கு மறுபுறம் எறிந்தான். அது இயக்குநனின் வயிற்றைத் தாக்கிற்று. அதன் பின் வந்தன இரண்டாவது; மூன்றாவது முட்டைக் கோசுகள்… குண்டுகள் போலவே அவை வெடித்தன. பகைவர்கள் திகைத்துப் போனார்கள். நான்காவது முட்டைக்கோசைப் பறிக்கக் குனிந்தான் திபூல். அதன் உருண்டைக் கன்னங்களைப் பிடித்து, பறித்து எடுக்க முயன்றான். ஆனால்-விந்தைதான்!- முட்டைக்கோசு மசிவ  தாய் இல்லை. அது மட்டும் அல்ல, மனிதக் குரலில் பேச வேறு தொடங்கிற்று:

“இது ஒன்றும் முட்டைக்கோசு அல்ல, என் தலையாக்கும் இது. நான் குழந்தைகளுக்கு பலூன்கள் விற்பவன். மூன்று தடியர்களின் அரண்மனையிலிருந்து தப்பி, சுரங்க வழியை அடைந்தேன். வழி பெரிய பாத்திரத்தில் தொடங்கி, இங்கே முடிகிறது. நீளக் குழாய் போலத் தரைக்கு அடியில் நீண்டிருக்கிறது அது…’

திபூலுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. முட்டைக்கோசு தன்னை மனிதத் தலை என்று சொல்லிக் கொள்கிறதே!

அப்போது அவன் குனிந்து அந்த மாயத்தை உற்றுப் பார்த்தான். கண்களை நம்ப வேண்டியது ஆகி விட்டது. கயிற்றில் நடக்கத் திறமை உள்ளவனின் கண்கள் பொய் சொல்லமாட்டா.

அவன் கண்டது முட்டைக்கோசை எவ்விதத்திலும் ஒத்திருக்கவில்லை. அது பலூன் விற்பவனின் வட்ட முகம். எப்போதும் போலவே அது சிறு மலர்கள் தீட்டிய மெல்லிய மூக்குள்ள தேநீர்க் கெண்டி மாதிரி இருந்தது.

பலூன்காரன் தரையிலிருந்து எட்டிப் பார்த்தான். உழுத மண் ஈரக் கட்டிகளாகச் சிதறி, கறுப்புக் கழுத்துப் பட்டை போல அவனுடைய கழுத்தைச் சுற்றிப் படிந்தது.

‘அருமை!’” என்றான் திபூல்.

பலூன்காரன் வட்ட விழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்தான். கனிவுள்ள வானம் அவற்றில் பிரதிபலித்தது.

“சமையல்காரப் பையன்களுக்கு என்னுடைய பலூன்களைக் கொடுத்தேன். அவர்கள் என்னை வெளியே போக விட்டார்கள்… அதே, அவற்றில் ஓரு பலூன் பறக்கிறது…’

திபூல் பார்வை செலுத்தினான். கண்களைக் கூசச் செய்த நீல வானத்தில் மிக மிக உயரே பறந்து கொண்டிருந்த சின்ன ஆரஞ்சு நிற பலூனைக் கண்டான்.

சமையல்காரப் பையன்கள் விட்டு விட்ட பலூன்களில் ஒன்று அது.

சுற்றுச் சுவற்றுக்கு வெளியே நின்று தாக்கும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்த மூன்று பேரும் கூட அந்த பலூனைக் கண்டார்கள். ஸ்பானியன் எல்லாவற்றையும் மறந்து விட்டான். அவன் எதிறிக் குதித்து இரண்டாவது விழியைச் சுழற்றி, சுடும் பாங்கில் நின்றான். துப்பாக்கி சுடுவதில் அளவற்ற ஆர்வம் உள்ளவன் அவன்.

“பாருங்கள், பத்து மணிக்கூண்டு உயரத்தில் பறக்கிறது மட்டித்தனமான பலூன்! குறி தவறாமல் அதைச் சுடுவேன் என்று பத்து தங்க நாணயங்கள் பந்தயம் கட்டுகிறேன். என்னை விடத் தேர்ந்த துப்பாக்கி வீரன் எவனும் இல்லை” என்று கத்தினான்.

பந்தயம் கட்ட எவனும் தயாராய் இல்லை, ஆனால் ஸ்பானியனின் உற்சாகம் அதனால் குன்றிவிடவில்லை: பயில்வானுக்கும் இயக்குநனுக்கும் எரிச்சல் மண்டிற்று.

“கழுதைப் பயலே!” என்று முழங்கினான் பயில்வான். “கழுதைப் பயலே! பலூன்களை வேட்டையாடிக் கொண்டிருக்க இது நேரம் அல்ல. கழுதைப் பயலே! நாம் திபூலைப் பிடிக்க வேண்டும். குண்டுகளை வீணாக்காதே.’

எதனாலும் பயன் இல்லை. குறி தவறாத துப்பாக்கி வீரனுக்கு பலூன் மட்டு மீறிக் கவர்ச்சி உள்ளதாய் இருந்தது. தன்னுடைய ஓய்வற்ற விழியை மூடிக் கொண்டு இலக்குப் பார்க்கத் தொடங்கினான் ஸ்பானியன். அவன் குறி பார்த்துக் கொண்டிருந்த போது திபூல் பலூன்காரனைத் தரையிலிருந்து வெளியே. இழுத்து விட்டான். ஆகா, எப்பேர்ப்பட்ட காட்சி! பலூன்காரனின் உடை மேல் எதுதான் இல்லை! மிஞ்சிய பாலாடையும் பழப்பாகும், ஓட்டிக் கொண்ட மண் துணுக்குகளும் உலர் பழங்களின் மென்மையான விண்மீன் வடிவத் துண்டுகளும்!

புட்டியிலிருந்து அடைப்பானை எடுப்பது போலத் திபூல் பலூன்காரனை வெளியில் எடுத்த இடத்தில் கறுப்புத் துளை இருந்தது. இந்தத் துளையில் மண் சிதறிற்று. மேலே தூக்கிய வண்டிமேல் பெருத்த மழைத் துளிகள் சடபடப்பது போல் இருந்தது அந்த ஒலி.

ஸ்பானியன் சுட்டான். அவனுடைய குண்டு பலூன் மேல் படவில்லை என்பதைச் சொல்லவே வேண்டாம். ஆனால் ஐயோ! அவனுடைய குண்டு இயக்குநனுடைய பச்சைத் தொப்பியில்-மணிக் கூண்டு அளவு உயரமாய் இருந்த தொப்பியில்-பட்டது.

திபூல் எதிர்ப் பக்கத்துச் சுற்றுச் சுவற்றைத் தாண்டிக் குதித்துக் காய்கறித்தோட்டத்திலிருந்து ஓடி விட்டான்.

இயக்குநனின் பச்சைத் தொப்பி விழுந்து, தேநீர் தயாரிப்பதற்கான சமவாரின் புகைக் குழாய் போல உருண்டது. ஸ்பானியன் ஒரேயடியாகக் குழப்பம் அடைந்தான். சிறந்த துப்பாக்கி வீரன் என்ற புகழ் போய் விட்டது! அதோடு, இயக்குநன் வைத்திருந்த மரியாதையும் போய் விட்டது.

“அட, உதவாக்கரைப் பயலே!” என்று அடக்க முடியாத ஆத்திரத்துடன் கத்திய இயக்குநன், கோபத்தால் மூச்சு திணற, ஸ்பானியனின் தலையில் காகித வட்டத்தால் ஓங்கி அடித்தான்.

வட்டம் பரட்டென்று கிழிந்து விட்டது. ஸ்பானியனின் தலை பல்வைத்த காகிதக் கழுத்துப் பட்டையில் மாட்டிக் கொண்டது.

லப்பித்தூப் ஒருவன் மட்டும் வெட்டியாக நின்றான். ஆனால் குண்டு வெடித்தது அக்கம் பக்கத்து நாய்களை உசுப்பி விடவே, அவற்றில் ஒன்று எங்கிருந்தோ பாய்ந்து வந்து பயில்வானைத் தாக்கிற்று.

“தப்ப முடிந்தவர்கள் தப்பிப் பிழையுங்கள்!” என்று கத்தினான் லப்பித்தூப். மூன்று பேரும் ஓட்டம் எடுத்தார்கள்.

பலூன்காரன் தனியாய் இருந்தான். அவன் சுவர் மேல் ஏறிச் சுற்று முற்றும் பார்த்தான். மூன்று நண்பர்களும் பசிய சரிவில் இறங்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். லப்பித்தூப் கடிபட்ட பருத்த கெண்டைக்காலைப் படித்தபடி ஒற்றைக் காலால் நொண்டி அடித்துக் கொண்டிருந்தான். இயக்குநர் மரத்தின் மேல் ஏறி ஒரு பறவையைப் போலத் தொங்கிக்கொண்டிருந்தார். ஸ்பானியன் காகித வட்டத்துக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்த தலையை ஆட்டியபடி நாயை விரட்டுவதற்காகச் சுட்டுக் கொண்டிருந்தான், ஆனால் அவன் சுட்ட ஒவ்வொரு குண்டும் காய்கறித் தோட்ட வைக்கோல் பொம்மை மேல் பட்டுக் கொண்டிருந்தது.

நாய் சரிவின் மேல் நின்று கொண்டிருந்தது. மறுபடி தாக்க அதற்கு விருப்பம் இல்லை போலத் தெரிந்தது. லப்பித்தூப்பினது கெண்டைக்கால் சதையின் ருசியால் முழுத் திருப்தி அடைந்து அது வாலை ஆட்டிற்று, பளிச்சிட்ட ரோஜா நிற நாக்கைத் தொங்க விட்டபடி முகம் மலரப் புன்னகை செய்தது.

-வளரும்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *