அத்தியாயம் 6
எதிர்பாராத நிலைமை
நீ ஏன் கறுப்பாய் இருக்கிறாய் என்ற கேள்விக்கு, “மருத்துவர் கஸ்பார் அர்னேரியைக் கேளுங்கள்” என்று விடை அளித்தான் சர்க்கஸ்காரன் திபூல்.
ஆனால் மருத்துவர் கஸ்பாரைக் கேட்காமலே காரணத்தை ஊகிக்கலாம். போர்க்களத்திலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளத் திபூலுக்கு வாய்த்தது என்பதை நினைவு படுத்திக் கொள்வோம். காவல் படையினர் அவனைத் தேடினார்கள், தொழிலாளர் குடியிருப்பு வட்டாரங்களுக்கு நெருப்பு வைத்தார்கள், விண்மீன் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதை எல்லாம் நினைவு படுத்திக் கொள்வோம். மருத்துவர் கஸ்பாரின் வீட்டில் திபூல் அடைக்கலம் புகுந்தான். ஆனால் அங்கேயும் எந்த நிமிடத்திலும் அவன் பிடிபட வாய்ப்பு இருந்தது. அபாயம் கண்கூடாகத் தெரிந்தது. மிக நிறையப் பெயருக்குத் திபூலின் முகம் பழக்கமானதாய் இருந்தது.
ஒவ்வொரு கடைக்காரனும் தானே தடியனாகவும் பணக்காரனாகவும் இருந்ததால் மூன்று தடியர்களின் தரப்பில் இருந்தான். மருத்துவர் கஸ்பாரின் அண்டை அயலில் வசித்த எந்தப் பணக்காரனும் மருத்துவர் திபூலுக்கு அடைக்கலம் தந்திருப்பது பற்றிக் காவல் படையினருக்கு உளவு தெரிவித்திருக்க முடியும்.
திபூல் தம் வீட்டுக்கு வந்த அந்த இரவில், “நீங்கள் உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று மருத்துவர் கஸ்பார் அவனிடம் சொன்னார்.
அப்படியே அவனை வேறு ஆளாக மாற்றி விட்டார்.
அவர் சொன்னார்:
“நீங்கள் வாட்டசாட்டமானவர். உங்கள் மார்புக்கூடு மிகப் பெரியது, தோள்கள் அகலமானவை, பற்கள் பளபளப்பானவை, தலைமயிர் சுருட்டை, முரடானது. தோலின் நிறம் வெள்ளையாக இல்லாவிட்டால், நீங்கள் வட அமெரிக்க நீக்ரோ போல் இருப்பீர்கள். அதுவும் நிரம்ப நல்லது. கறுப்பு ஆக நான் உங்களுக்கு உதவுகிறேன்.”
மருத்துவர் கஸ்பார் அர்னேரி நூறு கலைகள் கற்றிருந்தார். மிகவும் ஆழ்ந்த மனிதர் அவர், ஆனால் இனிய சுபாவம் உள்ளவர். வேலை நேரத்தில் வேலை, ஒழிவு நேரத்தில் இன்பப் பொழுதுபோக்கு என்பது அவருடைய கோட்பாடு. சில நேரங்களில் உல்லாசமாகப் பொழுதைப் போக்குவது அவருக்குப் பிடித்தது. ஆனால் ஓய்வு எடுத்துக் கொண்ட போதும் விஞ்ஞானத்தை அவர் மறக்கவில்லை. அந்த வேளைகளில் அனாதைக் குழந்தைகளுக்குப் பரிசாக ஒட்டுப் படங்கள் தயாரித்தார், அருமையான பட்டாசுகளும் விளையாட்டுச் சாமான்களும் பண்ணிக் கொடுத்தார், வேறு எவற்றிலும் இல்லாத இனிய ஒலியுள்ள இசைக் கருவிகளை அமைத்தார், புதிய வண்ணக் கலவைகள் சேர்த்தார்.
“இதோ பாருங்கள்” என்று திபூலிடம் சொன்னார் மருத்துவர். “இதோ இந்தக் குடுவையில் இருக்கிறது நிறம் இல்லாத நீர்மம். ஆனால் ஏதேனும் பொருளில் பட்டதும் வறண்ட காற்றின் பாதிப்பால் இது அந்தப் பொருளைக் கறுப்பு ஆக்கி விடும். அதுவும் நீக்ரோவுக்கு இயல்பான ஊதாச் சாயல் உள்ள கறுப்பு. இதோ, இந்தக் குடுவையில் இருக்கும் சாறு இந்த நிறத்தைப் போக்கக் கூடியது.’
பல நிற முக்கோணத் துணித் துண்டுகளால் தைத்த தன் உடையைத் திபூல் களைந்தான். முள்ளாய்க் குத்திக் கரிவாயு நெடி அடித்த நீர்மத்தைப் பூசிக் கொண்டான்.
ஒரு மணி நேரத்தில் அவன் கறுப்பு ஆகி விட்டான்.
அப்போது சுண்டெலியும் தானுமாக அறைக்குள் வந்தாள் கனிமீடு அத்தை. அப்புறம் நடந்தது நமக்குத் தெரியும்.
மருத்துவர் கஸ்பாரிடம் திரும்புவோம். அரண்மனை அலுவலனின் கறுப்புச் சாரட்டில் காப்டன் பொனவெந்தூரா அவரை அழைத்துப் போனபோது நாம் அவரைப் பிரிந்தோம். சாரட்டு படு வேகமாகப் பறந்தது. பயில்வான் லப்பித்தூப்பால் அதைப் பிடிக்க முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.
சாரட்டில் இருட்டாய் இருந்தது. உள்ளே போன மருத்துவர், தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அலுவலன் மடி மேல் ஒரு குழந்தையை-பெண்ணை — வைத்துக் கொண்டிருப்பதாக முதலில் நினைத்தார். பெண்ணின் தலைமயிர் பறட்டையாய் இருந்தது அவர் கவனத்தில் பட்டது. அலுவலன் பேசாதிருந்தான். பெண்ணும் அப்படியே.
மரியாதை உள்ள மருத்துவர் தொப்பியை உயர்த்தி, “மன்னியுங்கள், நான் நிரம்ப இடத்தை அடைத்துக் கொண்டு விட்டேனோ?” என்று கேட்டார்.
அலுவலன் வறண்ட குரலில் பதில் சொன்னான்:
“கவலைப்படாதீர்கள்.’
சாரட்டின் குறுகிய சன்னல்கள் வழியே வெளிச்சம் விட்டு விட்டுப் பளிச்சிட்டது. சற்று நேரத்தில் கண்கள் இருட்டுக்குப் பழகி விட்டன. அலுவலனின் நீள மூக்கையும் பாதி மூடிய இமைகளையும் பகட்டான உடை அணிந்த அழகுள்ள பெண்ணையும் மருத்துவர் தெளிவாகக் கண்டார். பெண் ஒரேயடியாக ஏங்கிப் போனவள் போலக் காணப்பட்டாள். அவள் வெளிறி இருந்தாள் போலும். ஆனால் அரை இருட்டில் இதைத் திட்டமாகச் சொல்ல முடியவில்லை.
“பாவம்! இவளுக்கு உடம்பு சரி இல்லை போல் இருக்கிறது” என்று எண்ணிக் கொண்டார் மருத்துவர்.
மறுபடி அலுவலனிடம் பேச்சுக் கொடுத்தார்:
“என்னுடைய உதவி தேவைப்படுவதாகத் தோன்றுகிறதே, சரி தானா? பாவம், குழந்தைக்கு உடம்பு சரியாய் இல்லையோ?”
“ஆம், உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்று பதில் சொன்னான் நீள மூக்கு அலுவலன்.
‘’இவள் மூன்று தடியர்களில் ஒருவனுடைய மருமகள், அல்லது வாரிசு துத்தியின் விருந்தாளிச் சிறுமி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இவள் விலை மிக்க உடை அணிந்திருக்கிறாள், அரண்மனையிலிருந்து வண்டியில் அழைத்து வரப்படுகிறாள், காவல் படைக்காப்டன் இவளுடன் வருகிறான் என்னும் போது இவள் மிக முக்கியமான பேர்வழி என்பது தெளிவாகிறது. ஆனால் ஒன்று: உயிருள்ள குழந்தைகள் வாரிசு துத்தியை நெருங்க விடப்படுவது கிடையாதே. இந்தத் தெய்வக் குழந்தை அரண்மனைக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தது?” என்று எண்ணமிட்டார் மருத்துவர்.
பல வித ஊகங்களில் அவர் தடுமாறினார். நீள மூக்கு அலுவலனிடம் பேச்சுக் கொடுக்க அவர் மறுபடி முயன்றார்.
“சொல்லுங்கள், இந்தப் பெண்ணுக்கு என்ன உடம்பு? தொண்டை அடைப்பான் நோயோ ஒருவேளை?”
“இல்லை, நெஞ்சில் துளை.”
‘இவளுடைய நுரையீரல்கள் சரியாய் இல்லை என்கிறீர்களா?”
“இவளுடைய நெஞ்சில் துளை” என்று திருப்பிச் சொன்னான் அலுவலன்.
மரியாதைக்காக மருத்துவர் மறுத்துப் பேசவில்லை.
“பாவம் இந்தப் பெண்!” என்று பெருமூச்செறிந்தார்.
“இது பெண் அல்ல, பொம்மை” என்றான் அலுவலன்.
அப்போது சாரட்டு மருத்துவரின் வீட்டை நெருங்கி விட்டது.
பொம்மையோடு அலுவலனும் காப்டன் பொனவெந்தூராவும் மருத்துவரின் பின்னே வீட்டுக்குள் போனார்கள். மருத்துவர் அவர்களைச் சோதனைக் கூடத்துக்கு அழைத்துப் போனார். “இது பொம்மை என்றால் என்னுடைய தொண்டு எதற்காகத் தேவைப்பட்டது?” அலுவலன் விளக்கினான். நிலைமை தெளிவாயிற்று.
காலைக் கிளர்ச்சிகளிலிருந்து இன்னும் தன்னிலைக்கு வராத கனிமீடு அத்தை இடுக்கு வழியாகப் பார்த்தாள். பயங்கரமான காப்டன் பொனவெந்தூரா அவள் கண்ணில் பட்டான். வெளி மடிப்புள்ள பிரமாண்டமான நீள் சோட்டில் காலை ஆட்டியபடி வாளை ஊன்றி நின்று கொண்டிருந்தான் அவன். அவனுடைய குதிமுட்கள் வால் நட்சத்திரங்கள் போல் இருந்தன. அலுவலன் நாற்காலியில் உட்கார வைத்திருந்த ஏங்கிய நோயாளிப் பெண்ணையும் கனிமீடு அத்தை கண்டாள். பகட்டான ரோஜா நிற உடை அணிந்த அந்தப் பெண் பறட்டை மயிர்த் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். ஒப்பனைக் குஞ்சங்களின் இடத்தில் தங்க ரோஜாப் பூக்கள் வைத்த சாட்டின் சோடுகள் அணிந்த தன் அழகிய கால்களை அவள் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
பலத்த காற்று இடை வழியில் சன்னல் கதவுகளை அசைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓசையில் கனிமீடு அத்தையால் வேறு எதையும் கேட்க முடியவில்லை.
ஆனால் சில விஷயங்கள் அவளுக்குப் புரிந்தன.
மூன்று தடியர்களுடைய அரசு ஆலோசனை மன்றத்தின் உத்தரவை அலுவலன் மருத்துவருக்குக் காட்டினான். அதைப் படித்த மருத்துவர் கிளர்ச்சி அடைந்தார்.
“பொம்மை நாளைக் காலைக்குள் செப்பனிடப்பட வேண்டும்” என்று சொல்லி எழுந்தான் அலுவலன்.
காப்டன் பொனவெந்தூரா படைத் தோரணையில் வணக்கம் தெரிவிப்பதற்காகக் கால்களை டக்கென்று சேர்த்து வைக்கவே, குதிமுட்கள் கிணுகிணுத்தன.
‘அது சரி… ஆனால்… மருத்துவர் கைகளை விரித்தார். “நான் முயன்று பார்க்கிறேன். ஆனால் உறுதி சொல்ல முடியுமா எங்காவது? இந்த மாயப் பொம்மையின் பொறி அமைப்பு எனக்குத் தெரியாது. நான் அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரிப் பழுது நேர்ந்திருக்கிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பொறி அமைப்பின் புதிய பகுதிகளை நான் தயாரிக்க வேண்டும். இதற்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படும். என் கலை பயன் இல்லாமலும் போய் விடக் கூடும்… காயம் பட்ட பொம்மையை மறுபடி உடல் நலம் உள்ளது ஆக்க ஒருகால் என்னால் முடியாமல் போகலாம்… எனக்குத் தயக்கமாய் இருக்கிறது, திருவாளர்களே… இவ்வளவு குறுகிய நேரம்… ஒரே ஓர் இரவு… என்னால் உறுதி சொல்ல முடியாது…’
அலுவலன் அவருடைய பேச்சை இடை முறித்தான். விரலை உயர்த்தி அவன் சொன்னான்: ‘வாரிசு துத்தி படுகிற துயரம் மிகவும் பெரியது, ஆகையால் நேரம் தாழ்த்த எங்களால் முடியாது. பொம்மை நாளைக் காலைக்குள் மறுபடி உயிர் பெற வேண்டும். மூன்று தடியடியர்களின் விருப்பம் இது. அவர்களுடைய ஆணைக்குக் கீழ்ப்படிய மறுப்பதற்கு ஒருவரும் துணிய மாட்டார்கள். செப்பனிடப்பட்ட, நலமுள்ள பொம்மையை மூன்று தடியர்களின் அரண்மனைக்கு நாளைக் காலையில் கொண்டு வாருங்கள்.”
‘“சரி… ஆனால்…’ என்று மறுத்தார் மருத்துவர்.
“மறு பேச்சே வேண்டாம்! பொம்மை நாளைக் காலைக்குள் சரியாக்கப்பட்டு விட வேண்டும். இதை நீங்கள் செய்தால் உங்களுக்குப் பரிசு கிடைக்கும். இல்லாவிட்டால் கடுமையான தண்டனை.’’
மருத்துவர் மலைத்துப் போனார்.
“நான் முயன்று பார்க்கிறேன். ஆனால் இது மிகவும் பொறுப்புள்ள வேலை…’’ என்று குழற்றினார்.
“சந்தேகம் இல்லாமல்” என்று பேச்சைக் கத்தரித்து விரலைத் தொங்க விட்டான் அலுவலன். ‘உத்தரவை நான் உங்களுக்குத் தெரிவித்து விட்டேன். அதை நிறைவேற்றுவது உங்கள் கடமை. விடை கொடுங்கள்!’
கனிமீடு அத்தை கதவு அருகிலிருந்து துள்ளி விலகித் தன் அறைக்கு ஓடினாள். அங்கே ஒரு மூலையில் எதையோ கொறித்துக் கொண்டிருந்தது அதிர்ஷ்டசாலியான சுண்டெலி. அச்சம் தந்த விருந்தாளிகள் அறையிலிருந்து வெளியே வந்தார்கள். அலுவலன் சாரட்டில் ஏறிக் கொண்டான். வாளும் குதிமுட்களும் பளிச்சிட்டுக் கிணுகிணுக்கக் குதிரை மேல் துள்ளி ஏறினான் காப்டன் பொனவெந்தூரா. காவல் படையினர் தொப்பிகளைச் சரி செய்து கொண்டார்கள். பின்பு எல்லோரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.
வாரிசு துத்தியின் பொம்மை மருத்துவருடைய சோதனைக் கூடத்தில் இருந்தது. வந்தவர்களை வழி அனுப்பிய பிறகு மருத்துவர் கனிமீடு அத்தையிடம் போய் வழக்கத்துக்கு மாறான கடுகடுத்த குரலில் சொன்னார்:
‘கனிமீடு அத்தை! நினைவு வைத்துக் கொள்ளுங்கள். விவேகம் உள்ள மனிதன், தேர்ந்த மருத்துவன், நுட்பமான தொழில் வினைஞன் என்று நான் புகழ் பெற்றிருக்கிறேன். தவிரவும் என் உயிர் மேல் எனக்கு ஆசை. நாளைக் காலையில் நான் இந்த இரண்டையுமே இழக்க நேரிடலாம். இன்று இரவு முழுவதும் நான் கடுமையான வேலை செய்ய வேண்டி இருக்கும். புரிந்து கொண்டீர்களா?” இப்படிச் சொல்லி, மூன்று தடியர்களுடைய அரசு ஆலோசனை மன்றத்தின் உத்தரவு எழுதிய காகிதத்தை ஆட்டினார். “எனக்கு யாரும் இடைஞ்சல் செய்யக் கூடாது. இரைச்சல் போடாதீர்கள். தட்டுக்களை ஓசைப் படுத்தாதீர்கள். எதையும் வறுத்துக் கருக்காதீர்கள். கோழிகளைக் கூப்பிடாதீர்கள். சுண்டெலிகளைப் பிடிக்காதீர்கள். முட்டைப் பொரியல், பூக்கோசு, ஆரஞ்சுப் பழப் பாகுக்கட்டி, வலெரியான் துளிகள், எதுவுமே கூடாது! புரிந்து கொண்டீர்களா?”
மருத்துவர் கஸ்பார் மிகவும் கோபமாய் இருந்தார்.
கனிமீடு அத்தை தன் அறைக்குள் போய், கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
‘’விந்தையான நிகழ்ச்சிகள், மிகவும் விந்தையான நிகழ்ச்சிகள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எவனோ நீக்ரோ, எதுவோ பொம்மை, எதுவோ உத்தரவு… விந்தையான நாட்கள் வந்து விட்டன!” என்று சிடுசிடுத்தாள்.
அமைதி அடைவதற்காக, தன் மருமகளுக்குக் கடிதம் எழுதத் தீர்மானித்தாள். பேனா முனை கிறீச்சிடாமல் இருக்கும் பொருட்டு மிகவும் சாக்கிரதையாக எழுத வேண்டி இருந்தது. மருத்துவரைத் தொந்தரவு செய்வோமோ என்று அவள் பயந்தாள்.
ஒரு மணி நேரம் கழிந்தது. கனிமீடு அத்தை எழுதிக் கொண்டிருந்தாள். அன்று காலையில் மருத்துவர் கஸ்பாரின் சோதனைக் கூடத்தில் காணப்பட்ட மாயமான நீக்ரோவை வருணிக்கும் கட்டத்திற்கு அவள் வந்திருந்தாள்.
அவர்கள் இரண்டு பேரும் வெளியே போனார்கள். அரண்மனை அலுவலனோடும் காவல் படைக்காரர்களோடும் திரும்பி வந்தார் மருத்துவர். அவர்கள் ஒரு பொம்மையைக் கொண்டு வந்தார்கள். அது அப்படியே ஒரு சின்னப் பெண் மாதிரி இருந்தது. ஆனால் நீக்ரோ அவர்களோடு வரவில்லை. அவன் எங்கே போனானோ, எனக்குத் தெரியாது…’
நீக்ரோ, அதாவது சர்க்கஸ்காரன் திபூல் எங்கே போனான் என்ற கேள்வி மருத்துவருக்கும் கவலை உண்டாக்கிற்று. பொம்மையைச் சோதிக்கையில் திபூல் என்ன ஆனான் என்று ஓயாமல் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு எரிச்சல் வந்தது. தமக்குத் தாமே பேசிக் கொண்டார்:
“எப்பேர்ப்பட்ட யோசனையின்மை! நான் அவனை நீக்ரோவாக மாற்றினேன், அற்புதமான நிறத்தை அவனுக்கு ஏற்படுத்தினேன். அவனை அடையாளமே தெரியாதபடி மாற்றினேன். அவனோ, பதினாலாவது சந்தையில் இன்று தானே தன்னைக் காட்டிக் கொண்டான். அவன் பிடிபட்டு விடலாமே… அடாடா! எவ்வளவு முன்யோசனையே இல்லாத ஆள்! இரும்புக் கூண்டில் அடைபட அவனுக்கு ஆசையாய் இருக்கிறதோ?”
மருத்துவர் கஸ்பார் ஒரேயடியாக மனம் கலங்கிப் போயிருந்தார். திபூலின் அசாக்கிரதை, அப்புறம் இந்தப் பொம்மை… போதாக்குறைக்கு, தலைக்கு நாள் ஏற்பட்ட கவலைகள், நீதி மன்றச் சதுக்கத்தில் பத்து வெட்டு மேடைகள்…
‘அவலம் பிடித்த நேரம்!” என்று உரக்கச் சொன்னார் மருத்துவர்.
அன்று நடப்பதாக இருந்த மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டது அவருக்குத் தெரியாது. அரண்மனை அலுவலன் பேச்சில் சிக்கனமாய் இருந்தான். அன்று அரண்மனையில் நடந்ததை அவன் மருத்துவருக்குத் தெரிவிக்கவில்லை.
மருத்துவர் அப்பாவிப் பொம்மையைக் கூர்ந்து பார்த்து, விளங்காமல் திகைத்தார்:
“எப்படி ஏற்பட்டன இந்தக் காயங்கள்? இவை வெடியாக் கருவியால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. வாட்களால் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். பொம்மையை, அற்புதமான பெண்ணை, யாரோ குத்தித் துளைத்திருக்கிறார்கள்… யார் அது? வாரிசு துத்தியின் பொம்மையை வாளால் குத்தித் துளைக்கத் துணிந்தவன் எவன்?”
இதைச் செய்தவர்கள் காவல் படையினர் என்று மருத்துவர் நினைக்கவே இல்லை. அரண்மனைக் காவல் படைப் பிரிவு கூட மூன்று தடியர்களுக்கு ஏவல் செய்ய மறுத்து மக்களின் தரப்புக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்கு இடம் கொடுக்கவே அவரால் முடிந்திராது. அது மட்டும் தெரிந்தால் அவர் எவ்வளவு ஆனந்தப்பட்டிருப்பார்!
மருத்துவர் பொம்மையின் தலையைக் கையில் எடுத்துக் கொண்டார். வெயில் சன்னல் வழியாக வந்தது. பொம்மை மேல் அது பளிச்சென்று அடித்தது. மருத்துவர் பார்வையிட்டார்.
“விந்தை, மிகவும் விந்தையான சேதி’ என்று சிந்திக்கலானார். “இந்த முகத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்… ஆமாமாம், சந்தேகம் இல்லாமல்! நான் இதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு இது பழக்கமானது. ஆனால் எங்கே பார்த்தேன்? எப்போது? அது உயிருள்ள முகம். ஒரு சின்னப் பெண்ணின் துடியான முகம். அது் புன்னகை செய்தது, அருமையான உணர்ச்சி வேறுபாடுகளைக் காட்டிற்று. ஆழ்ந்து கவனித்தது, குலுக்கி மினுக்கிற்று, ஏங்கிற்று… ஆம், ஆம். இதில் சந்தேகத்துக்கே இடம் இல்லை! ஆனால் பாழும் பார்வை மந்தம் அந்த முகத்தை நினைவுபடுத்திக் கொள்ள எனக்கு இடைஞ்சலாய் இருக்கிறது.”
பொம்மையின் சுருட்டை மயிர் அடர்ந்த தலையை அவர் கண்களின் கிட்டத்தில் கொண்டு வந்தார்.
‘எவ்வளவு அற்புதமான பொம்மை! இதைச் செய்தவன் எவ்வளவு தேர்ந்த சிற்பி! இது சாதாரணப் பொம்மை போல் இல்லை. பொம்மைகளின் விழிகள் வழக்கமாக இளநீலமாய்த் துருத்திக் கொண்டிருக்கும். அவற்றில் மனித உணர்ச்சியோ, சிந்தனையோ இருக்காது. சற்றுத் தூக்கிய மூக்கு, செப்புப் போன்ற சின்ன வாய், அசட்டுத்தனமான சணல் நிறச்* சுருட்டைத் தலைமயிர், அப்படியே செம்மறி ஆட்டின் ரோமம் போல. பொம்மை பார்ப்பதற்கு மகிழ்ச்சி உள்ளது மாதிரி இருக்கும், ஆனால் உண்மையில் அது அசடு… இந்தப் பொம்மையிலோ எதுவும் பொம்மைத்தனம் உள்ளதாய் இல்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன், பொம்மையாக மாற்றப்பட்ட பெண்ணாக இருக்கலாம் இது!”
மருத்துவர் கஸ்பார் தம்முடைய அசாதாரணமான நோயாளியை வியப்புடன் பார்வையிட்டார். இதே வெளிறிய சின்ன முகத்தையும் கவனமுள்ள சாம்பல் நிற விழிகளையும் குட்டையாகக் கத்தரித்த கலைந்த தலைமயிரையும் தாம் எங்கோ, எப்போதோ பார்த்திருக்கிறார் என்ற எண்ணம் அவருடைய மனத்திலிருந்து அகலவே இல்லை. தலையின் திருப்பமும் பார்வையும் சிறப்பாகப் பழக்கமானவையாக அவருக்குத் தோன்றின. பொம்மை தலையைப் பக்கவாட்டில் கொஞ்சம் போலச் சாய்த்து மருத்துவரைக் கீழிருந்து கவனமாக, தந்திரமாக நோக்கிற்று …
மருத்துவரால் பொறுக்க முடியவில்லை. அவர் இரைந்து கேட்டார்: “பொம்மையே, உன் பெயர் என்ன?”
ஆனால் பொம்மைப் பெண் பேசவில்லை. அப்போது மருத்துவர் சுய நினைவுக்கு வந்தார். பொம்மை பழுதடைந்திருந்தது. அதைப் பேச வைக்க வேண்டும், இருதயத்தைச் செப்பனிட வேண்டும், மறுபடி புன்னகை செய்யவும் நடனம் ஆடவும், தன் வயதுப் பெண்கள் போல நடந்து கொள்ளவும் அதற்குக் கற்பிக்க வேண்டும்.
“பார்ப்பதற்கு இது பன்னிரண்டு வயதுப் பெண் போல் இருக்கிறது.”
நேரம் தாழ்த்த முடியாதிருந்தது. மருத்துவர் வேலையில் முனைந்தார். “பொம்மையை நான் உயிர்ப்பிக்க வேண்டும்.”
கனிமீடு அத்தை தன் கடிதத்தை எழுதி முடித்தாள். இரண்டு மணி நேரம் அவள் சும்மா இருந்தாள். அப்புறம் ஆவல் அவளை அரிக்கத் தொடங்கிற்று. “மருத்துவர் கஸ்பார் செய்ய வேண்டி இருந்த அவசர வேலைதான் என்ன? அது என்ன பொம்மை?”
அவள் ஓசை செய்யாமல் நடந்து சோதனைக் கூட வாயிலை நெருங்கி, இருதய வடிவில் இருந்த சாவித் துளை வழியே பார்வை செலுத்தினாள். அந்தோ! அதில் சாவி செருகப்பட்டிருந்தது. அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கதவு திறந்தது, மருத்துவர் கஸ்பார் வெளியே வந்தார். அவர் ஒரேயடியாகக் கலக்கம் அடைந்திருந்ததால் கனிமீடு அத்தையை அவளுடைய கூச்சம் இன்மைக்காகக் கடிந்து கொள்ளக்கூட இல்லை. ஆனுலும் கனிமீடு அத்தை குழப்பம் அடைந்தாள்.
“கனிமீடு அத்தை, நான் போகிறேன். இன்னும் சரியாகச் சொன்னால் நான் போக வேண்டி இருக்கிறது. வண்டி அமர்த்திக் கொண்டு வாருங்கள்” என்றார் மருத்துவர்.
கொஞ்ச நேரம் பேசாதிருந்த பின் அவர் நெற்றியைத் தேய்த்துக் கொண்டார். “மூன்று தடியர்களின் அரண்மனைக்குப் போகிறேன். அங்கிருந்து அனேகமாகத் திரும்ப மாட்டேன்.”
கனிமீடு அத்தை வியப்பினால் பின்னே நகர்ந்தாள்.
‘மூன்று தடியர்களின் அரண்மனைக்கா?’
‘ஆமாம், கனிமீடு அத்தை. நிலைமை மிகவும் சிக்கலானது. வாரிசு துத்தியின் பொம்மையை ஆட்கள் என்னிடம் கொண்டு வந்தார்கள். உலகத்தில் எல்லாவற்றிலும் மேலான பொம்மை இது. இதன் பொறி அமைப்பு உடைந்து விட்டது. இந்தப் பொம்மையை நாளைக் காலைக்குள் செப்பனிட்டுத் தரும்படி மூன்று தடியர்களுடைய அரசு ஆலோசனை மன்றம் எனக்கு உத்தரவு இட்டிருக்கிறது. கடுமையான தண்டனை கிடைக்கும் அபாயம் எனக்கு எதிர்ப்பட்டிருக்கிறது…”
கனிமீடு அத்தைக்கு அழுகை வந்தது.
“இந்த அப்பாவிப் பொம்மையைப் பழுது பார்க்க என்னால் முடியாது. அதன் மார்பில் வைக்கப்பட்டிருக்கும் பொறி அமைப்பை நான் புரிந்து கொண்டேன். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டேன். அதைச் சீர்படுத்த என்னால் முடியும். ஆனால்… படு அற்ப விஷயம்! ஒன்றுமே இல்லாத ஒரு சின்னச் சாமான் இல்லாததால் இதை ஒக்கிட என்னால் முடியாதிருக்கிறது. நுட்பமான இந்தப் பொறி அமைப்பில் பல் சக்கரம் ஒன்று இருக்கிறது. அது பிளந்து விட்டது… இப்போது அது வேலைக்கு உதவாது! புதுச் சக்கரம் செய்ய வேண்டும்… இதற்குத் தேவையான வெள்ளி போன்ற உலோகம் என்னிடம் இருக்கிறது… ஆனால் வேலை தொடங்குவதற்கு முன்னால் அந்த உலோகத்தைத் துத்தக் கரைசலில் குறைந்தது இரண்டு நாட்களாவது வைத்திருக்க வேண்டும். புரிகிறதா? இரண்டு நாட்கள்… ஆனால் பொம்மை நாளைக் காலை தயாராய் இருக்க வேண்டுமே.”
“வேறு எந்தச் சக்கரத்தையாவது பொருத்த முடியாதா?” என்று தயக்கத்துடன் கேட்டாள் கனிமீடு அத்தை.
மருத்துவர் வருத்தத்துடன் கையை உதறினார்:
“எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தேன், பயன் இல்லை.’’
ஐந்து நிமிடங்கள் பொறுத்து மூடிய நான்கு சக்கர வாடகை வண்டி ஒன்று மருத்துவர் கஸ்பாரின் வீட்டு வாசலில் வந்து நின்றது. மூன்று தடியர்களின் அரண்மனைக்கு போவதென்று மருத்துவர் முடிவு செய்துவிட்டார்.
“நாளை காலைக்குள் பொம்மையை சீர்ப்படுத்த முடியாது என்று அவர்களிடம் சொல்லி விடுகிறேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்” என்றார்.
கனிமீடு அத்தை மூன்றாங்கித் துணியைக் கடித்த வண்ணம் தலைய ஆட்டினார். தலை கழன்று விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படும் வரையில் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
மருத்துவர் கஸ்பார் பொம்மையைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு புறப்பட்டார்.
,
அத்தியாயம் 7
அற்புதப் பொம்மையின் இரவு
,
காற்று மருத்துவர் கஸ்பாரின் இரண்டு காதுகளிலும் சீழ்க்கை அடித்தது. அதன் மெட்டு சகிக்க முடியாததாக இருந்தது. ஊக்கத்துடன் சாணை பிடிப்பவனின் சாணைக் கல் உருளையும் கத்தியும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து எழுப்பும் நீக்ரோ விரைவு நடன மெட்டை விடக்கூட மோசமாக இருந்தது அது.
மருத்துவர் கோட்டின் கழுத்துப் பட்டையால் காதுகளை மூடிக் கொண்டு காற்றுக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்தார்.
அப்போது காற்று விண்மீன்களோடு விளையாடத் தலைப்பட்டது. அது சில வேளைகளில் அவற்றை ஊதிப் பரத்திற்று, வேறு சில வேளைகளில் கூரையின் கறுப்பு முக்கோணங்களின் பின்னால் எறிந்தது. இந்த விளையாட்டு அலுத்துப் போனதும் அது மேகங்களைக் கற்பனை செய்தது. ஆனால் மேகங்கள் கோபுரங்கள் போலச் சரிந்து விட்டன. அப்போது காற்று சட்டென்று குளிர்ந்து போயிற்று. அது வன்மம் காரணமாகக் குளிர்ந்து விட்டது.
மழைக் கோட்டால் இறுகப் போர்த்துக் கொள்வது மருத்துவருக்கு அவசியம் ஆயிற்று. பாதிக் கோட்டால் அவர் பொம்மையைப் போர்த்தார்.
“வேகமாய் விடுங்கள்! விரட்டுங்கள் குதிரைகளை! தயவு செய்து விரட்டுங்கள்!’’
ஒரு காரணமும் இல்லாமல் மருத்துவர் திகில் அடைந்து வண்டியோட்டியை அவசரப் படுத்தினார்.
ஒரே கலவரமாகவும் இருட்டாகவும் வெறுமையாகவும் இருந்தது. ஒரு சில சன்னல்களில் மட்டுமே கொஞ்சம் சிவந்த விளக்குகள் தெரிந்தன. மற்றச் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் பயங்கர நிகழ்ச்சிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த முன்னிரவில் பல விஷயங்கள் வழக்கத்துக்கு மாறாகவும் சந்தேகத்துக்கு இடமாகவும் தோன்றின. அற்புதப் பொம்மையின் விழிகள் ஒளி புகும் இரண்டு மணிக் கற்கள் போலப் பளிச்சிடுவதாகக் கூடச் சில வேளைகளில் மருத்துவருக்குப் பிரமை உண்டாயிற்று. தன் வழித் துணைவியைப் பாராமல் இருக்க அவர் முயன்றார்.
“அர்த்தம் இல்லாத கலவரம்!” என்று தம்மைத் தேற்றிக் கொண்டார். “என் நரம்புகள் தளர்ந்து போயிருக்கின்றன. சர்வ சாதாரணமான முன் இரவு. ஆள் நடமாட்டம் தான் குறைவு. காற்று ஆட்களுடைய நிழல்களை விந்தையாக அசைத்து ஆட்டுவதால் எதிரே வருபவன் ஒவ்வொருவனும் இறக்கைகள் போன்ற மர்மமான மழைக் கோட்டு அணிந்த தொழில் முறைக் கொலைகாரனாகத் தோன்றுகிறான்… நாற்சந்திகளில் எரிவாயு விளக்குகள் மட்டும் ஏனோ பிரேதம் போன்ற இளநீல நிறத்தில் எரிகின்றன… அட, மூன்று தடியர்களின் அரண்மனைக்குச் சட்டெனப் போய்ச் சேர்ந்தால் நல்லது!..”
அச்சத்தைப் போக்குவதற்குக் கைகண்ட மருந்து ஒன்று இருக்கிறது: தூக்கம். கம்பளியைத் தலைமேல் இழுத்துப் போர்த்துக் கொள்வது சிறப்பாக உதவும் என்று சொல்லப்படுகிறது. மருத்துவர் இந்த மருந்தைப் பயன்படுத்தினார். கம்பளிக்குப் பதிலாகத் தொப்பியைக் கண்களுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டார். அதோடு, நூறு வரை எண்ணத் தொடங்கினார். ஆனால் அது பயன் தரவில்லை. அப்போது அவர் தீவிரமாகச் செயல்படும் உபாயத்தைக் கையாண்டார். மனதுக்குள் இப்படிச் சொல்லிக் கொண்டார்:
‘ஒரு யானையும் ஒரு யானையும் இரண்டு யானைகள்; இரண்டு யானைகளும் ஒரு யானையும் மூன்று யானைகள்; மூன்று யானைகளும் ஒரு யானையும் நான்கு யானைகள்…
இந்த மாதிரி ஒரு யானைக் கூட்டத்தையே திரட்டி விட்டார் மருத்துவர். ஆனால் நூற்று இருபத்து மூன்றாவது யானை கற்பனை யானையிலிருந்து நிச யானையாக மாறிற்று. அது யானை தானா அல்லது ரோஜா நிறப் பயில்வான் லப்பித்தூப்பா என்று புரிந்து கொள்ள மருத்துவரால் முடியாததால் அவர் தூங்கத் தொடங்கிக் கனவு கண்டார் என்பது தெளிவாகிறது.
நனவை விடக் கனவில் நேரம் படு விரைவாகக் கழிகிறது. மருத்துவர் தம் கனவில் மூன்று தடியர்களின் அரண்மனைக்குப் போனதோடு அவர்களுடைய நீதிமன்றத்தின் முன்பும் தோன்றினார். நீலப் பாவாடை கட்டிய குரங்கைக் கையில் பிடித்திருக்கும் ஜிப்சி போல ஒவ்வொரு தடியனும் பொம்மையைக் கையில் பிடித்துக் கொண்டு அவருக்கு எதிரே நின்றான்.
அவர் சொன்ன விளக்கங்கள் எவற்றையும் கேட்க அவர்கள் விரும்பவில்லை.
“நீ உத்தரவை நிறைவேற்றவில்லை. நீ கடும் தண்டனைக்கு உரியவன். விண்மீன் சதுக்கத்துக்கு மேலே பொம்மையோடு நீ கம்பி மேல் நடக்க வேண்டும். மூக்குக் கண்ணாடியை மட்டும் கழற்றி விடு…” என்றார்கள் அவர்கள்.
மருத்துவர் மன்னிப்பு கேட்டார். எல்லாவற்றையும் விட, பொம்மைக்குத் தீங்கு நேருமே என்றுதான் அவர் அஞ்சினார்… அவர் இப்படிச் சொன்னார்:
“நான் பழகி விட்டேன், என்னால் இப்போது விழ முடியும்… நான் கம்பியிலிருந்து தவறிக் குளத்தில் விழுந்தால் ஒன்றும் ஆகாது. நான் ஏற்கெனவே அனுபவப்பட்டிருக்கிறேன்: நகர வாயிலுக்குப் பக்கத்தில் கோபுரத்தோடு சேர்ந்து விழுந்தேன்… ஆனால் பொம்மை, பாவம், பொம்மை! அது சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமே… அதற்கு இரக்கம் காட்டுங்களேன்… இது பொம்மை இல்லை, உயிருள்ள சின்னப் பெண் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவளுக்கு அருமையான பெயர். அதை நான் மறந்து விட்டேன். எவ்வளவு யோசித்தும் அது எனக்கு நினைவு வர மாட்டேன் என்கிறது…’
‘“கிடையாது!” என்று கத்தினார்கள் தடியர்கள். “கிடையாது! மன்னிப்பே கிடையாது! மூன்று தடியர்களின் உத்தரவு அப்படி!”
கூச்சல் கடுமையாய் இருந்ததால் மருத்துவர் விழித்துக் கொண்டார்.
“மூன்று தடியர்களின் உத்தரவு அப்படி!” என்று மருத்துவரின் காதுக்கு மேலே கத்தினான் ஒருவன்.
இப்போது மருத்துவர் தூங்கவில்லை. நனவில் தான் ஒருவன் இப்படிக் கத்தினான். மருத்துவர் கண்களை, அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், மூக்குக் கண்ணாடியைத் தொப்பிக்கு அடியிலிருந்து விடுவித்துச் சுற்று முற்றும் பார்த்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்த போது நன்றாக இருட்டி விட்டது என்பது தெரிந்தது.
வண்டி நின்று கொண்டிருந்தது. கரிய உருவங்கள் அதைச் சூழ்ந்திருந்தன. மருத்துவரின் கனவில் கலந்து குழம்பிய கூச்சலை அவை தாம் கிளப்பின. அவை கை விளக்குகளை ஆட்டின. அதனால் அழி வரிசை வடிவான நிழல்கள் விழுந்தன.
“என்ன நடந்தது? நாம் எங்கே இருக்கிறோம்? இந்த ஆட்கள் யார்?” என்று கேட்டார் மருத்துவர்.
உருவங்களில் ஒன்று கிட்டே வந்து, கை விளக்கைத் தலை மட்டத்துக்குத் தூக்கி, மருத்து வர் மேல் வெளிச்சம் படும்படிச் செய்தது. கைவிளக்கு அசையத் தொடங்கிற்று. மேலிருந்து அதன் வளையத்தைப் பிடித்திருந்த கை மணிக்கட்டுக்கு மேல் அகலமான மணி வடிவ மடிப்பு வைத்த முரட்டுத் தோல் உறை அணிந்திருந்தது.
அவர்கள் காவல் படையினர் என்பதை மருத்துவர் புரிந்து கொண்டார். “மூன்று தடியர்களின் உத்தரவு அப்படி” என்று திருப்பிச் சொல்லிற்று உருவம். மஞ்சள் வெளிச்சம் அதைக் கூறுகளாகப் பிளந்தது. மெழுகுத் துணித் தொப்பி பளிச்சிட்டது. இரவில் அது இரும்புத் தொப்பி போலத் தோற்றம் அளித்தது.
‘“அரண்மனைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கிட்டே வர யாருக்கும் உரிமை கிடையாது. இந்த உத்தரவு. இன்று பிறப்பிக்கப்பட்டது. நகரத்தில் கொந்தளிப்பு. மேலே போவது கூடாது!”
“சரிதான், ஆனால் அரண்மனைக்குப் போவது எனக்குக் கட்டாயமாகத் தேவை.” மருத்துவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று.

காவல் படையினன் அதிகாரக் குரலில் சொன்னான்:
“நான் காவல் பிரிவுத் தலைவன் காப்டன் த்செரேப். மேற்கொண்டு ஓர் அடி கூடப் போக உங்களை நான் விட மாட்டேன். திருப்பு!” என்று கை விளக்கை ஆட்டிக் கொண்டு வண்டிக்காரனை அதட்டினான்.
மருத்துவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும், தாம் யார், எதற்காகத் தாம் அரண்மனைக்குப் போக வேண்டும் என்பதை அறிந்ததும், காவலர்கள் தம்மைப் போக விட்டு விடுவார்கள் என்பதில் அவருக்குச் சந்தேகம் உண்டாகவில்லை.
“நான் மருத்துவன் கஸ்பார் அர்னேரி” என்றார் அவர்.
பதிலாகக் கலீரென்ற சிரிப்பொலி கேட்டது. கை விளக்குகள் நாலா பக்கமும் நடனமாடின.
“பெரியவரே, இந்த மாதிரிக் கலவரம் நிறைந்த நேரத்தில், இந்தப் பின்னிரவில் வேடிக்கை பேச எங்களுக்கு மனம் இல்லை” என்றான் காவல் பிரிவுத் தலைவன்.
“நான் உங்களுக்கு மறுபடி சொல்கிறேன்: நான்தான் மருத்துவன் கஸ்பார் அர்னேரி.” காவல் பிரிவுத் தலைவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் பிறகு வாளைக் கிலுக்கியபடி மெதுவாகவும் இடை விட்டு விட்டும் பேசினான்:
“அரண்மனைக்குள் நுழைவதற்காக வேறு ஒருவருடைய பெயரைச் சொல்லிப் பசப்புகிறீர்கள் நீங்கள். மருத்துவர் கஸ்பார் அர்னேரி இரவு நேரங்களில் சுற்றித் திரிவது இல்லை. அதிலும் இந்த இரவில். இப்போது அவர் மிக முக்கியமான வேலையில் முனைந்திருக்கிறார்: வாரிசு துத்தியின் பொம்மையை அவர் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். நாளைக் காலையில் தான் அவர் அரண்மனைக்கு வருவார். உங்களை, ஆள் மாறாட்டம் செய்ததற்காக நான் கைது செய்கிறேன்.”
‘என்ன?” இப்போது மருத்துவருக்குப் பொங்கி வந்தது ஆத்திரம்.
“என்ன? என்னை நம்பாதிருக்க இவன் துணிந்து விட்டானா? நல்லது. இதோ காட்டுகிறேன் இவனுக்குப் பொம்மையை!”
பொம்மையை எடுப்பதற்காக மருத்துவர் கையை நீட்டினார். அப்புறம்…
பொம்மையைக் காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அது வண்டியிலிருந்து விழுந்து விட்டது.
மருத்துவர் சில்லிட்டுப் போனார்.
‘ஒருவேளை இது எல்லாமே கனவோ?” என்ற எண்ணம் அவர் உணர்வில் தோன்றியது. ஆனால் அந்தோ! அது உண்மை நடப்பு.
”ஊம்?” என்று பற்களைக் கிட்டித்து, விளக்கு பிடித்திருந்த விரல்களை அசைத்தபடி உறுமினான் காவல் பிரிவுத் தலைவன். “போய்த் தொலையும் பெற்றோம் பிழைத்தோம் என்று! கிழட்டுப் பிணத்தோடு விவகாரம் வேண்டாம் என்பதற்காக உம்மை விடுகிறேன். ஒழியும்!”
பணிந்து போக வேண்டியதாயிற்று. வண்டிக்காரன் வண்டியைத் திருப்பினான். வண்டி கிரீச்சிட்டது, குதிரை செருமிற்று, இரும்புக் கைவிளக்குகள் கடைசித் தரம் அசைந்தாடின, அப்பாவி மருத்துவர் திரும்பிப் போனார்.
தாங்க முடியாமல் அவர் அழத் தொடங்கினார். காவல் படைக்காரன் அவரிடம் ஒரே முரட்டுத்தனமாகப் பேசினான், அவரைக் கிழட்டுப் பிணம் என்றான். எல்லாவற்றுக்கும் மேல், வாரிசு துத்தியின் பொம்மையை அவர் கெட்டுப் போக்கி விட்டார்!
‘இதன் அர்த்தம் என்ன என்றால் என் தலை போய்விடும்-நேரான அர்த்தத்தில்-என்பது தான்,”
அவர் அழுதார். அவருடைய மூக்குக் கண்ணாடியில் ஆவி படிந்தது, அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. தலையணையில் தலையைப் புதைத்துக் கொள்ள அவருக்கு விருப்பம் உண்டாயிற்று. இதற்கிடையே வண்டிக்காரன் குதிரையை விரட்டிக் கொண்டு போனான். ஒரு பத்து நிமிட நேரம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் மருத்துவர். ஆனால் அவருக்கு வழக்கமான நல்லறிவு விரைவில் அவரிடம் திரும்பி விட்டது.
“இப்போதும் பொம்மை எனக்குக் கிடைக்கலாம். இன்று இரவில் ஆள் நடமாட்டம் குறைவு. இந்த இடம் எப்போதும் வெற்றாய் இருக்கும். ஒருவேளை இந்த நேரத்தில் ஒருவருமே இந்த வழியாகப் போகவில்லையோ என்னவோ…” என்று எண்ணமிட்டார்.
மெது நடையாக வண்டியை ஓட்டும்படியும் வழியைக் கவனமாகப் பார்வையிடும்படியும் வண்டிக்காரனுக்குக் கட்டளை இட்டார்.
”ஊம், என்ன? ஊம், என்ன?” என்று நிமிடத்துக்கு ஒரு தரம் கேட்டுக் கொண்டு போனார்.
“ஒன்றையும் காணோம், ஒன்றையும் காணோம்” என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். தான் கண்ட பொருள்களைப் பற்றி அவன் வரிசையாகச் சொல்லிக்கொண்டு போனான், ஆனால் அவை வேண்டாதவை, சுவாரசியம் இல்லாதவை:
“சிறு பீப்பாய்,”
“இல்லை… இது அல்ல…”
“நல்ல, பெரிய கண்ணாடித் துண்டு.”
“இல்லை.”
“பிய்ந்த செருப்பு.”
“வேண்டாம்.” மருத்துவரின் குரல் தணிந்து கொண்டு போயிற்று.
வண்டிக்காரன் முடிந்த வரையில் ஊக்கத்துடன் தேடினான். கவனமாக உற்றுப் பார்த் தான். இருட்டில் அவனுடைய பார்வை ஒரே கூர்மையாக இருந்ததைக் கண்டபோது அவன் வண்டிக்காரன் அல்ல, பெருங்கடலில் போகும் கப்பலின் கப்பித்தான் என்று எண்ணத் தோன்றியது.
‘ஆனால் பொம்மை, பொம்மை உமக்குத் தட்டுப் படவில்லையா? ரோஜா நிறக் கவுன் போட்ட பொம்மை?”
“பொம்மையைக் காணோம்” என்று ஏங்கிய கட்டைக் குரலில் சொன்னான் வண்டிக்காரன்.

‘அப்படியானால் யாரேனும் அதை எடுத்துப் போயிருப்பார்கள். மேற்கொண்டு தேடுவது வீண். இதோ, இந்த இடத்தில் நான் தூங்கிப் போனேன்… அப்போது அது என் பக்கத்தில் இருந்தது…ஐயோ!..’
மருத்துவருக்கு மறுபடி அழுகை வந்தது.
வண்டிக்காரன் பரிவுடன் சில தடவைகள் மூக்கை உறிஞ்சினான்.
“என்ன செய்வது?”
‘அட எனக்கே தெரியவில்லை… அட எனக்கே தெரியவில்லை…’ மருத்துவர் கைகளில் தலையைப் புதைத்துக் கொண்டு குனிந்து உட்கார்ந்திருந்தார். துயரத்தினாலும் வண்டி தூக்கிப் போட்டதாலும் அவரது உடம்பு ஆடிக் கொண்டிருந்தது. “எனக்குத் தெரிந்து விட்டது” என்று மறுபடி பேசத் தொடங்கினார். “ஆமாம், சந்தேகம் இல்லாமல்… ஆமாம், சந்தேகத்துக்கே இடமில்லை… இது எனக்கு முன்னமே தோன்றாமல் போனது எப்படி? அவள் ஓடி விட்டாள், இந்த பொம்மைப் பெண்… நான் தூங்கிப் போனதும் அவள் ஓடி விட்டாள். புரிகிறது. அவள் உயிருள்ள பெண். பார்த்த உடனேயே நான் இதைக் கண்டு கொண்டேன். ஆனால் மூன்று தடியர்களுக்கு நான் இழைத்த குற்றத்தை இது குறைத்து விடவில்லை…”
அப்போது அவருக்குப் பசி எடுத்தது. கொஞ்ச நேரம் பேசாதிருந்த பின் கம்பீரமான குரலில் அறிவித்தார்:
“இன்றைக்கு நான் மதியச் சாப்பாடு சாப்பிடவில்லை. பக்கத்தில் உள்ள சாப்பாட்டுக் கடைக்கு வண்டியை விடுங்கள்.’
பசியால் மருத்துவர் அமைதி அடைந்தார்.
இருண்ட வீதிகளில் அவர்கள் நீண்ட நேரம் சுற்றி அலைந்தார்கள். சாப்பாட்டுக் கடைக்காரர்கள் எல்லோரும் தங்கள் கடைகளை மூடி விட்டார்கள். அன்று இரவில் எல்லாத் தடியர்களும் கலவரத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கதவுகளுக்குப் புதிய தாழ்ப்பாள்கள் போட்டிருந்தார்கள், உள்ளே வரும் வழியில் அலமாரிகளையும் பெட்டிகளையும் அடுக்கி அரண் செய்திருந்தார்கள். தூவி மெத்தை களாலும் கோடுகள் போட்ட தலையணைகளாலும் சன்னல்களை அடைத்திருந்தார்கள். அவர்கள் தூங்கவில்லை. பருமனாகவும் பணக்காரர்களாகவும் இருந்த எல்லோரும் அன்று இரவு தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். காவல் நாய்கள் அதிக விழிப்புடனும் எரிச்சலுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகக் காலையிலிருந்து அவற்றுக்கு இரை போடாமல் வைத்திருந்தார்கள். பணக்காரர்களுக்கும் கொழுத்தவர்களுக்கும் பயங்கரமான இரவு தொடங்கி இருந்தது. எந்த நிமிடத்திலும் மக்கள் மறுபடி கிளர்ச்சி செய்யலாம் என்று அவர்கள் உறுதியாய் எண்ணினார்கள். சில காவல் படையினர் மூன்று தடியர்களுக்குத் துரோகம் செய்து, வாரிசு துத்தியின் பொம்மையைக் குத்தித்துளைத்து விட்டு, அரண்மனையிலிருந்து விட்டு, அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டார்கள் என்ற வதந்தி நகரத்தில் பரவி இருந்தது. எல்லாப் பணக்காரர்களுக்கும் பெருந்தீனிக்காரர்களுக்கும் இது பெருத்த கலவரம் ஊட்டிற்று.
‘நாசமாய்ப் போயிற்று! காவல் படையினரையும் நம்மால் இனிமேல் நம்ப முடியாது. நேற்று அவர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினார்கள். இன்றோ, தங்கள் பீரங்கிகளை நம் வீடுகளுக்கு எதிராகத் திருப்புகிறார்கள்” என்று அவர்கள் சள்ளைப்பட்டார்கள்.
பசி தீரச் சாப்பிட்டுக் களைப்பாறும் நம்பிக்கையை மருத்துவர் கஸ்பார் இழந்து விட்டார். சுற்றிலும் எங்குமே உயிர்க் களை இல்லை.
‘வீட்டுக்குப் போக வேண்டுமா என்ன? அது நிரம்பத் தொலைவு ஆயிற்றே… பட்டினியால் எனக்குப் பிராணன் போய் விடுமே அதற்குள்!” என்று கலங்கினார் மருத்துவர்.
திடீரென்று இறைச்சிப் பொரியலின் மணம் அவர் மூக்கில் பட்டது. ஆம். வதங்கும் இறைச்சியின் இனிய வாசனை வீசிற்று. அனேகமாக, வெங்காயத்தோடு ஆட்டுக் கறி வதங்கும் மணம். தொலைவில் வெளிச்சம் தெரிந்ததை வண்டிக்காரன் அதே கணத்தில் கண்டான். குறுகிய வெளிச்சக்கோடு காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.
அது என்ன?
“சாப்பாட்டுக் கடையாக இருந்தால் நன்றாய் இருக்கும்!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூவினார் மருத்துவர்.
அவர்கள் பக்கத்தில் நெருங்கினார்கள்.
அது சாப்பாட்டுக் கடையே அல்ல.
சில சிறு வீடுகளிலிருந்து ஒரு புறம் விலகி வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது சக்கரங்கள் உள்ள ஒரு வீடு.
குறுகிய வெளிச்சக் கோடு, இந்த வீட்டின் கதவு நன்றாக மூடப்படாததால் ஏற்பட்ட இடுக்கு என்று தெரிய வந்தது.
வண்டிக்காரன் முன் இருக்கையிலிருந்து இறங்கி, விவரம் தெரிந்து வரப் போனான். மருத்துவர் நடந்த துன்ப நிகழ்ச்சிகளை மறந்து, இறைச்சிப் பொரியலின் மணத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அவர் நெடு மூச்சு இழுத்தார், மூக்கால் சீழ்க்கை அடித்தார், கண்களை இறுக மூடிக் கொண்டார்.
”முதலாவதாக, எனக்கு நாய்களிடம் பயம்! இரண்டாவதாக, இங்கே படிகள் தெரி கின்றன… என்று இருட்டிலிருந்து கத்தினான் வண்டிக்காரன்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வண்டிக்காரன் படிகள் மேல் ஏறிக் கதவைத் தட்டினான். “யார் அது?”
குறுகிய வெளிச்சக் கோடு அகலமான, பளிச்சிடும் முக்கோணமாக மாறிற்று. கதவு திறந்தது. நிலை அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். சூழ்ந்திருந்த வெறுமையான இருட்டின் நடுவே பிரகாசமான வெளிச்சம் உள்ள இந்தப் பின்னணியில் அவன் கறுப்புக் காகிதத்திலிருந்து கத்தரித்து எடுத்தவன் போலத் தட்டையாகக் காணப்பட்டான்.
மருத்துவரின் சார்பில் வண்டிக்காரன் பதில் சொன்னான்:
“இவர் மருத்துவர் கஸ்பார் அர்னேரி. நீங்கள் யார்? சக்கரங்கள் உள்ள இந்த வீடு யாருடையது?”
“இங்கே இருக்கிறது பிரிஸாக் மாமாவின் நாடகக் குழு’ என்று வாயிற்படியிலிருந்து பதிலளித்தது சீன நிழல். அது என்ன காரணத்தாலோ மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைந்தது,
கைகளை வீசி ஆட்டிற்று. “வாருங்கள், திருவாளர்களே, தயவு செய்து வாருங்கள்! மருத்துவர் கஸ்பார் அர்னேரி பிரிஸாக் மாமாவின் நாடகக் குழுவைப் பார்க்க வந்திருப்பதனால் எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி!” என்றது.
இன்பமுள்ள முடிவு! இரவு நேரத்தில் அலைந்தது எல்லாம் போதும்! பிரிஸாக் மாமாவின் நாடகக் குழு நீடூழி வாழ்க!
மருத்துவருக்கும் வண்டிக்காரனுக்கும் குதிரைக்கும் தங்க இடமும் சாப்பாடும் ஓய்வும் கிடைத்தன. சக்கரங்கள் உள்ள வீடு விருந்தினரைப் பரிந்து உபசரித்தது. பிரிஸாக் மாமாவின் ஊர் ஊராய்ச் செல்லும் நாடகக் குழு அதில் வசித்தது.
இந்தப் பெயரைக் கேள்விப்படாதவர்கள் யார்? பிரிஸாக் மாமாவின் நாடகக் குழுவைப் பற்றித் தெரியாதவர்கள் யார்? ஆண்டு முழுவதும், விழாக்களிலும் சந்தைகளிலும் தன் நாடக நிகழ்ச்சிகளை அது சந்தைச் சதுக்கங்களில் நடத்தி வந்தது. எவ்வளவு திறமை உள்ள நடிகர்கள் அதில் இருந்தார்கள்! அவர்களுடைய நாடக நிகழ்ச்சிகள் எவ்வளவு கவர்ச்சி உள்ளவையாக இருந்தன! முக்கியமானது என்ன என்றால், இங்கே, இந்த நாடகக் குழுவில் கழைக்கூத்தாடி திபூல் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தது தான்.
நாட்டில் சிறந்த கழைக்கூத்தாடி என்று அவன் புகழ் பெற்றிருந்தது நமக்குத் தெரியும். அவனுடைய திறமையை விண்மீன் சதுக்கத்தில் நாம் கண்கூடாகக் கண்டோம். காவல் படை யினர் குண்டுகள் சுட்டுக் கொண்டிருந்ததை மதியாமல், கிடுகிடு பாதாளத்துக்கு மேலே அவன் அங்கே கம்பி மேல் நடந்தான்.
சந்தைச் சதுக்கங்களில் திபூல் வித்தை காட்டிய போது சின்னவர்களும் பெரியவர்களுமான எல்லாப் பார்வையாளர்களுக்கும் அடிக்கடி கை தட்டியதால் கைகளில் காய்ப்புகள் ஏற்பட்டன! கடைக்காரர்களும் சரி, ஏழைக் கிழவிகளும் சரி, பள்ளிச் சிறுவர்களும் சரி, படை வீரர் களும் சரி, எல்லோருமே, ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருமே இந்தக் கை தட்டல்களில் உற்சாகமாகப் பங்கு கொண்டார்கள்… இப்போதோ, கடைக்காரர்களும் பகட்டர்களும் தங்கள் முந்திய உற்சாகப் பெருக்குக்காக வருந்தினார்கள்:
‘நாம் இவனைப் பாராட்டிக் கை தட்டினோம், இவனோ, நம்மை எதிர்த்துச் சண்டை போடுகிறான்!” என்றார்கள்.
பிரிஸாக் மாமாவின் நாடகக் குழு அனாதை ஆகி விட்டது: சர்க்கஸ்காரன் திபூல் அதை விட்டு விலகி விட்டான்.
திபூலுக்கு நேர்ந்ததைப் பற்றி மருத்துவர் கஸ்பார் ஒன்றுமே சொல்லவில்லை. வாரிசு துத்தியின் பொம்மை பற்றியும் அவர் பேசவில்லை.
நாடகக் குழுவின் இருப்பிடத்தில், சக்கரங்கள் உள்ள வீட்டிற்கு உள்ளே, மருத்துவர் கண்டது என்ன?
ஒரு பெரிய துருக்கிய டமாரத்தின் மேல் அவர் உட்கார்த்தப்பட்டார். ஆழ்ந்த சிவப்பு நிற முக்கோணங்களாலும் வலையாகப் பின்னிய தங்கக் கம்பியாலும் அது அழகுபடுத்தப்பட்டிருந்தது. சரக்கு வண்டியின் பாங்கில் கட்டப்பட்ட வீட்டில் பல இருப்பிட அறைகள் இருந்தன. கித்தான் தடுப்புக்களால் அவை பிரிக்கப்பட்டிருந்தன.
இரவு வெகு நேரம் ஆகி விட்டது. நாடகக் குழுவினர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறந்த, சீன நிழல் போல் காணப்பட்ட மனிதன் வேறு யாரும் இல்லை, முதிய கோமாளி. அவன் பெயர் அவ்கூஸ்த். அந்த இரவில் அவன் முறைக் காவல் வேலை செய்து கொண்டிருந்தான். மருத்துவர் வந்த போது அவ்கூஸ்த் தனக்கு இரவுச் சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தான். மெய்யாகவே, வெங்காயத்தோடு இறைச்சியைத்தான் அவன் வதக்கிக் கொண்டிருந்தான்.
டமாரத்தின் மேல் உட்கார்ந்த மருத்துவர் இருப்பிடத்தைப் பார்வையிட்டார். ஒரு பெட்டியின் மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வெள்ளையும் ரோஜா நிறமுமான சிகரெட்டுக் காகிதங்கள் சுற்றிய வளையங்கள், பளபளப்பான உலோகப் பிடிகள் வைத்த, வரிகள் போட்ட நீண்ட சவுக்குகள், தங்க வட்டங்கள் தூவி, பூக்களும் விண்மீன்களும் பல நிறத் துண்டுத் துணிகளும் தைத்த உடைகள் முதலியவை சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்தன. முகமூடிகள் சுவர்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன. சிலவற்றில் கொம்புகள் துருத்திக் கொண்டிருந்தன. வேறு சிலவற்றில் மூக்குகள் துருக்கியச் செருப்புகள் போல் இருந்தன. பின்னும் சிலவற்றில் வாய் ஒரு காதிலிருந்து மறு காது வரை நீண்டிருந்தது. ஒரு முகமூடியில் காதுகள் பிரமாண்டமாக இருந்தன. எல்லாவற்றிலும் வேடிக்கை என்ன என்றால், அவை மனிதக் காதுகள் தாம். ஆனால் மிகவும் பெரியவை என்பதே.
மூலையில் இருந்த கூண்டில் இன்னது என்று தெரியாத ஒரு சிறு பிராணி இருந்தது. ஒரு சுவற்றின் பக்கத்தில் சிறிய மர மேசை இருந்தது. அதற்கு மேலே முகம் பார்க்கும் சின்னக் கண்ணாடிகள் தொங்கிக் கொண்டிருந்தன. பத்து உருப்படி. ஒவ்வொரு கண்ணாடிக்கும் பக்கத்தில் சொந்தக் கொழுப்பால் மேசை மேல் ஒட்ட வைக்கப்பட்ட மெழுகுவத்தி துருத்திக் கொண்டிருந்தது. மெழுகுவத்திகள் எரியவில்லை. டப்பாக்களும் தூரிகைகளும் வண்ணங்களும் தூவிச் செண்டுகளும் பொய்மயிர்த் தொப்பிகளும் மேசை மேல் கிடந்தன. ரோஜா நிறப்ப வுடர் சிதறி இருந்தது. பல நிறக் குட்டங்கள் உலர்ந்து போயிருந்தன.
‘“காவல் படைக்காரர்களிடமிருந்து இன்றைக்கு நாங்கள் தப்பி வந்து விட்டோம்” என்று பேசத் தொடங்கினான் கோமாளி. “சர்க்கஸ்காரன் திபூல் எங்கள் நாடகக் குழுவில் இருந்தது உங்களுக்குத் தெரியுமே. அவனை நாங்கள் ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துக் காவல் படைக்காரர்கள் எங்களைப் பிடிக்கப் பார்த்தார்கள்.’
முதிய கோமாளியின் முகத்தில் மிகுந்த வருத்தம் ததும்பிற்று.
“சர்க்கஸ்காரன் திபூல் எங்கே என்பது எங்களுக்கே தெரியாது. அவன் ஒன்று கொல்லப்பட்டிருப்பான், இல்லாவிட்டால் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பான்.”
கோமாளி பெருமூச்செறிந்து நரைத் தலையை ஆட்டினான். கூண்டில் இருந்த பிராணி பூனைக் கண்களால் மருத்துவரைப் பார்த்தது.
“நீங்கள் இவ்வளவு நேரம் தாழ்த்து எங்களிடம் வந்தது வருந்தத்தக்கது. எங்களுக்கு உங்கள் மேல் ஒரே அன்பு” என்று பேச்சைத் தொடர்ந்தான் கோமாளி. “நீங்கள் எங்களைத் தேற்றி இருப்பீர்கள். நீங்கள் உரிமை இழந்தவர்களின் நண்பர், மக்களின் நண்பர் என்பதை நாங்கள் அறிவோம். ஒரு நிகழ்ச்சியை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அப்போது நாங்கள் எருதுக் கல்லீரல் சந்தையில் நாடகம் போட்டுக் கொண்டிருந்தோம். இது நடந்தது போன ஆண்டு வசந்தத்தில். என் பெண் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்…’
“அப்படியா, ஆமாம்…” என்று நினைவு படுத்திக் கொண்டார் மருத்துவர். விந்தையான உள்ளக் கிளர்ச்சியை அவர் திடீரென்று உணர்ந்தார்.
“நினைவு வருகிறதா? நீங்கள் அப்போது சந்தையில் இருந்தீர்கள். எங்கள் நாடகத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். என் பெண் ஒரு பணியாரத்தைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தாள். கொழுத்த பிரபுவின் இரைப்பையில் போய்ச் சேர்வதை விட அடுப்பு நெருப்பில் கரிந்து போவது மேல் என்று பணியாரம் நினைத்ததாகப் பாட்டில் வந்தது…’ “ஆம், ஆம்… நினைவு இருக்கிறது… அப்புறம்?”
“ஒரு கிழச் சீமாட்டி இதைக் கேட்டுக் கோபம் கொண்டாள். என் பெண்ணுடைய காதைப் பிய்த்து விடும்படித் தன் நீள மூக்கு வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டாள்.”
‘ஆமாம், எனக்கு நினைவு வருகிறது. நான் குறுக்கிட்டேன். வேலைக்காரர்களை விரட்டினேன். சீமாட்டி என்னை அடையாளம் கண்டு கொண்டாள். அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. சரி தானே?”
“ஆமாம். பிறகு நீங்கள் போய் விட்டீர்கள். என் பெண் என்ன சொன்னாள், தெரியுமா? சீமாட்டியின் சேவகர்கள் தன் காதைப் பிய்த்திருந்தால் தன்னால் உயிரோடு இருக்க முடிந்திராது என்றாள்… நீங்கள் அவளைக் காப்பாற்றினீர்கள். இதை அவள் ஒருபோதும் மறக்க மாட்டாள்!”
“உங்கள் பெண் இப்போது எங்கே இருக்கிறாள்?’ என்று கேட்டார் மருத்துவர். அவர் மிகுந்த கிளர்ச்சி அடைந்திருந்தார்.
அப்போது முதிய கோமாளி கித்தான் தடுப்புக்குப் பக்கத்தில் போய்க் கூப்பிட்டான். விசித்திரமான ஒரு பெயரை அவன் சொன்னான். திறக்கக் கடினமான சிறு மரச் சிமிழைத் திறப்பது போன்ற இரண்டு ஒலிகளைச் செய்தான்:
‘‘சுவோக்!’”
சில வினாடிகள் கழிந்தன, பிறகு கித்தான் துணிக் கதவு கொஞ்சம் விலகிற்று. கலைந்த சுருட்டை மயிர்த் தலையைச் சிறிது சாய்த்து அங்கிருந்து எட்டிப்பார்த்தாள் ஒரு சிறுமி. சாம்பல் நிற விழிகளால் சற்றுக் கீழிருந்து, கவனமாகவும் தந்திரமாகவும் அவள் மருத்துவரை நோக்கினாள்.
விழிமளை நிமிர்த்திய மருத்துவர் திகைத்துப் போனார்: வாரிசு துத்தியின் பொம்மை அது!
-வளரும்