கண்ணன்
தொழிற்சாலை மேகங்கள்
அழகான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு. கவிஞர் லார்க் பாஸ்கரன் அவர்களுக்கும் வேரல் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.
கவிஞர் கரிகாலன் அவர்களின் சிறப்பான முன்னுரை.
அவர் குறிப்பிடுவது போல பொள்ளாச்சியில் வசிப்பதால், கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் அவர்களின் இக் கவிதைத் தொகுப்பெங்கும், மழையின் ஈரமும், வயல்களின் பசுமையும்.
கவிதைகளில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை தெரிகிறது.
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையே இத்தொகுப்பின் தலைப்பு.
மூன்றே வரிகள் கொண்ட சிறிய கவிதை:
மேகமாக ஆவதில்லை
தொழிற்சாலைப் புகை
உணவில் கரி
இந்த நவீன யுகத்தில், மனிதன் மேகத்தையும், தொழிற்சாலை வெளியிடும் நஞ்சையும் ஒன்று தான் என்று குழம்பிப் போகிறான். அந்தப் புகையிலிருக்கும் கார்பன் மோனாக்ஸைட் போன்ற நஞ்சுகள், காற்று, நிலம், நீர் என் எல்லாவற்றையும் மாசாக்குகின்றன.
இதனால் நமது உணவும் நஞ்சாகி, உண்ணத் தகுதியற்றதாக மாறுகிறது.
சிறப்பான கவிதை.
தொகுப்பின் முதல் கவிதையான மழைக்காலம் கவிதையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றியே பேசுகிறது.
கடைசி வரிகள்:
கோடையில் வற்றிய குளம்
நிரம்ப நிரம்ப
கழிவுகளும் நெகிழிகளும் மிதக்கின்றன. பாசிகளின்
நடுவே
ஒரு சிறிய மீன் துள்ளுகிறது
அந்தச் சிறிய மீன் போலத்தான் நமது வாழ்க்கையும். ஆறுகளெல்லாம் தோஷம் கழிக்கும் இடங்களாக மாறிப் போனது பரிதாபம். எங்கும் கால் வைக்கவே கூசக்கூடிய அளவில், பழந்துணிகளும், மாலைகளும். வட மாநிலங்களில் , எலும்புக் கூடுகளும், காலை இடறுகின்றன. ஒரு புறம் கங்காவுக்கு ஆரத்தி, மறுபுறம் எரியும் பிணங்கள்.நமது சுயநலத்திற்காக இப்பூமியை நாசமாக்குகிறோம்.
மஞ்சப்பை பற்றிய கவிதை எனது பால்யத்தை நினைவு படுத்தியது. அப்பாவிடம் எப்போதும் ஒரு மஞ்சப்பை வைத்திருப்பார். லட்சங்களை சாதரணமாக மஞ்சப்பையில் சுருட்டி எடுத்து வந்து விடுவார்கள். சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானதும் கூட.
சாமி ஆடுபவர்களின் கவிதை, எளியவர்களின் மனநிலை பற்றிப் பேசுகிறது. ஏதும் கிடைக்காதவர்கள், தங்களின் கோரிக்கைகளை சாமியாடித் தீர்க்கிறார்கள். எல்லாம் கிடைத்தவர்கள் தான் அவர்களை அடக்குகிறார்கள்.
கவிதையின் கடைசி வரிகள்:
காசியில் சன்னியாசிகள் தான் அதிகாரிகள்
இருக்கும் இடத்தைப் பொறுத்து, எல்லாம் மாறிவிடுகிறது.
பைத்தியக்காரன் பற்றிய கவிதையில்,
வான் உயர்ந்த அரசமரம்
வெண்சாமரம் வீச
ஒரு அரசனைப் போல
உறங்குகிறான்
என்கிறார் கவிஞர்.
அரசனுக்கும் ஆயிரம் கவலைகள் இருக்கும். ஆனால் இவன் அரசனுக்கும் மேல். நமக்கு அவன் மேல் பொறாமை தான் வருகிறது.
வணிக வளாகம் பற்றிய கவிதையும் சுற்றுச்சூழல் பற்றிய கவிதைதான். ஒரு வணிக வளாகம் கட்டப்படும் போதெல்லாம், ஒரு காடு அழிகிறது. ஒரு கானகத்தின் மிருகச்சத்தம் கேட்கிறது.
ஆறுவழிச்சாலையும், எட்டு வழிச்சாலையும், இதற்கு விதிவிலக்கல்ல.
இடது கால்கள் பற்றிய கவிதை, எனக்கு பசுவய்யாவின் இடது கை பற்றிய கவிதையை ஞாபகம் படுத்தியது. அவர் தோள்முனைத் தொங்கல் என்று சொல்லி இருப்பார்.
கவிஞர் இடது காலுக்காக கவலை கொள்கிறார்.
எவ்வளவு தான், வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் சூழ்ந்து இருந்தாலும், கவிஞனுக்கு இயற்கை தான் தாய் மடி. இலைகளின் சத்தம், ஒரு மயிலின் கூவல், நீர்க்கரைத் தவளை சத்தம். இவைகளே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.
மற்றும் ஒரு சூழலியல் கவிதை. நதியின் தடத்தை மறைத்துக் கட்டினால், நிச்சயமாக வீட்டினுள் வெள்ளம் புகத்தான் செய்யும்.
எனக்குப் பிடித்த மற்றுமொரு மிகச் சிறந்த கவிதை:
கடற்கரையில் யாரும் இல்லை
குழந்தைகளுக்கான ராட்டினத்தை
வெறுமனே சுற்றி விடுகிறார் அத்தொழிலாளி
எல்லா மேகங்களும் ஓடி வந்து
அதில் அமர்ந்து விட்டன
மழைக்கூலி.
எவ்வளவு அழகு. எல்லா மேகங்களும் குழந்தைகளாகி விட்டன. மழை தான் அவருக்குக் கிடைத்த கூலி. ஆனாலும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. கவிஞனுக்கும் தான்
எந்த சாமிக்கு இந்த மழை கவிதையில், குட்டித் தங்கமே கடவுளாகிச் சிரிக்கிறார்.
கிராமத்தில் கிணற்றில் தண்ணீர் சேந்தியவள் கவிதையில், இப்போது அவளது வாழ்க்கை, நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்பில், தூக்குப் போசியில் பாலைப் சேந்தும்படி ஆனது. அவளது வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டதை, சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காட்டியபடி சொல்லி விடுகிறார் கவிஞர்.
எனக்குப் பிடித்த மற்றுமொரு மிகச் சிறந்த.கவிதை:
எழுதச்சிரமம்
இங்க் தெளிக்கிறாள்
நீர்த்துளிகளின் வரிசை
என் வெண்ணிறச் சட்டையில்
கடைசித்துளி
நீலவான மழை பொழிகிறது
இங்க் நீலவான மழையாகும் அதிசயம் கவிதையில் நிகழ்கிறது.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
00

மீன் சுமக்கும் கடல்
கவிஞர் இளையவன் சிவா அவர்களின் கவிதைத் தொகுப்பு ‘மீன் சுமக்கும் கடல்’ வாசித்தேன்.
ஹைக்கூ கவிதைகளுக்கும் எனக்கும் காத தூரம். ஏனெனில் அது கவிதையில், மிகவும் கடினமான ஒரு வகை. இயற்கையும், வாழ்க்கையும் இணைந்தது. மிகவும் இறுக்கமான இலக்கணம் கொண்டது.
அந்த வகையில், தலைப்பே ஒரு கவிதையாக இருக்கிறது.
மீனின் வயிற்றில் இருக்கும் தண்ணீர் கடலிலிருந்து வந்தது. அதனால் அம்மீன் ஒரு கடலையே சுமக்கிறது.
பிரபஞ்சத்தில் நாமும் ஒரு துளி. அத்துளியிலும் பிரபஞ்சம் இருப்பதால், நாமும் பிரபஞ்சமே எனும் தத்துவத்தை பிரதிபலிக்கிறது இத்தலைப்பு. மேலும் விரித்துப் பொருள் கொண்டால், ஜீவாத்மா என்பது, பரமாத்மாவின் ஒரு துளி. அதனால் ஒவ்வொரு ஜீவாத்மாவிலும், பரமாத்மா இருக்கிறது எனலாம்.
அழகான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு. மௌவல் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
எனக்குப் பிடித்த சில கவிதைகளைப் பார்ப்போம்.
‘பழுத்த இலை
பயணித்தபடி இருக்கிறது
கரையேறாத எறும்பு’
இக்கவிதையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். அது ஒரு குளம். குளத்தில் ஒரு பழுத்த இலை. அந்த இலையில் அமர்ந்து பயணம் செய்கிறது ஒரு எறும்பு. அது இன்னும் கரை சேரவில்லை. படிக்கும் நமக்கு, அனுபவம் வாய்ந்த முதியவர்கள் பழுத்த இலை போன்றவர்கள். அனுபவமற்ற இளைய தலைமுறையினர், அந்த கரை சேராத எறும்பைப் போன்றவர்கள். அவர்களின் அனுபவத்தின் துணை கொண்டு, வாழ்க்கை எனும் கரையைக் கடந்து செல்லலாம் என்பதாக இக்கவிதை விரிகிறது. குரு மற்றும் சிஷ்யன், சம்சாரம் என்னும் கடலை, பக்தி என்னும் படகைக் கொண்டு கடக்கலாம் என்பதாக, ஒவ்வொருவரின் கற்பனைக்கேற்ப விரிகிறது கவிதை.
‘கடல் தாண்டிய பறவை
கவ்விக் கொண்டு போகிறது
கானகத்தின் விதையை’
மற்றும் ஒரு சிறப்பான கவிதை. கடல் கடந்து, பொருள் தேடச் செல்லுபவர்கள், தங்களின் கிராமத்தையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், கூடவே எடுத்துக் செல்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பறவை போதும், கானகத்திற்கு என்றும் அழிவில்லை. காலம் காலமாக ஏதோ ஒரு பறவையாய், கானகம் என்றும் உயிர்த்திருக்கும்.
‘பறக்கும் பலூனுக்குள்
ஊதிக் கிடக்கும் காற்று
மிதக்கிறது மூச்சு’
மற்றும் ஒரு அருமையான கவிதை. பல விதங்களில் பலரும் எழுதிய கவிதை. பலூன் விற்பவரின் வறுமையை, அழகாகச் சொல்லும் கவிதை. அவனது மூச்சுக் காற்றில் தான், பலூன் மிதக்கிறது. ஒவ்வொரு பலூனை ஊதும் போதும், தனது மூச்சில் சற்று இழக்கிறான். என்றால், ஒவ்வொரு முறையும், தனது வாழ்நாளில், சற்று இழக்கிறான். எவ்வளவு பெரிய இழப்பு.
பறக்கும் உயரத்தில்
கடலைச் சுமக்கிறது
பருந்தின் வாயில் மீன்’
இக்கவிதையே இத்தொகுப்பின், தலைப்பைச் சுமக்கிறது. பருந்தின் வாயிலிருப்பது, எமனின் நுழைவாயிலுக்குச் சமம். மரணத் தருவாயிலும், தானிருந்த கடலை மறக்காமல் சுமக்கிறது மீன். கடல் கடந்து பொருள் தேடச் செல்லுபவர்களும், மரணத்தை முத்தமிடும் தருணங்களிலும், தனது குடும்பத்தையும், மண்ணையும் மறப்பதில்லை. தனது நாட்டை விட்டு வெளியேறி வசிக்கும் அகதிகளுக்கும், இது மிகவும் பொருந்தும்.
‘நழுவி நழுவிக் தேடுகிறது
கூழாங்கற்களில் வெயில்
நீரின் தடத்தை’
மழையின்றி, வற்றிப் போன ஆற்றின் துயரம் சொல்லும் கவிதை.
மனிதனின் சுயநலத்தால், மணலின்றி, நீரின்றி, வறண்டு போய் இருக்கும், ஆற்றில், வெயில் இன்னமும் கூழாங்கற்களில், நீரின் தடத்தைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறது.
இதேபோல், வற்றிப் போன வயோதிக வயதில், நாமும் கடந்து போன இளமையையும் காதலையும், நினைவுகளின் ஊடே தேடிக் கொண்டு இருக்கிறோம்.
கவிஞர் இதுபோன்ற பல கவிதைகளை எழுதுவார் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இத்தொகுப்பு.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
மழையால் கடலுக்கு அழிவில்லை
சிறப்பான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு.
கவிஞர் யவனிகா சிரீராம் அவர்களின் முன்னுரை சிறப்பு.
எளிமையாக தோற்றமளிக்கும், ஆனால் ஆழமான அர்த்தம் தரும் கவிதைகளை எழுதியுள்ளார் கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார்.
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை:
ஒவ்வொரு செயலிலும்
என் மீது கொண்ட வாஞ்சையை வெளிக்கொணர நினைக்கிறாய்
அது தாக்குதலாகும்போது தடுத்து விடுகிறது என் பேரன்பு
மழையால் பெரும் கடலுக்கு அழிவில்லை
கடைசி வரிகளே இத்தொகுப்பின் தலைப்பாகி இருக்கிறது. தலைவியின் வார்த்தைகள் தடிக்கும்போது, தலைவன் தனது பேரன்பால் தடுத்தாட்கொள்கிறான். எவ்வளவு மழை பொழிந்தாலும்,அன்பெனும் பெருங்கடல் இருக்கையில் எதற்குக் கவலை?
தொகுப்பின் முதல் கவிதையான, விநாயகன் கவிதையில் தொனிக்கும் கவலை,தமிழ் நாட்டில் நமது அனைவருக்கும் இருக்கும் ஒன்று. யானைகள் காட்டை அழிக்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது தவிர்க்க இயலாத உண்மை. வடநாட்டவர்களின் வருகையை குறிப்பால் உணர்த்துகிறது இக்கவிதையின் நுண்ணரசியல்.
அத்தைகளைப் பற்றிய கவிதையில், கடைசி இரண்டு வரிகள்:
அத்தையிடம் முத்தம் வாங்கியவன்
வளர்ந்தவனாகிறான்
நமது பால்யம் அத்தைகளின் அன்பால் நிரம்பியது. கவிதையைப் படித்ததும், எனக்கு எனது சின்ன அத்தையின் ஞாபகம் வந்தது. அவரின் பலகாரமும் அன்புமின்றி, ஒரு தீபாவளியும் கழிந்ததில்லை.
மற்றுமொரு கவிதையின் கடைசி வரிகள்: பாட்டிகளெல்லாம் தாவரங்கள்
நமக்கு இயற்கையும் தெய்வமே. அரச மரத்தை வணங்குபவர்கள் நமது பெண்கள். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் குட்டியப்பனைப் போல, எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவோம். தாவரங்கள் நமது முன்னோர்கள். நாம் வணங்கும் தெய்வங்கள்.
வண்டியில் காய்கறி விற்கும் முருகன்,
அன்றாடத்தைத் தெருதோறும்
இறைத்துப் போகிறான்
கவிஞனுக்கு மட்டுமே தெரியும் அழகு.
ஆற்றின் பாறையின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான் அவன்
எவ்வளவு நேரம்?
மூன்று யுகங்களும்
ஒரு நாகரிகமும்.
ஒவ்வொரு யுகத்திலும் யாரோ ஒருவன் அப்பாறையின் மீதமர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். ஆறு மட்டுமே சாட்சியாக இருக்கிறது.
எல்லா ரயில்களுமே,யாரோ ஒருவரின் வீட்டுக்குத் தான் போகின்றன என்பது, குட்டியப்பன் போன்ற குழந்தைகளுக்கு மிகச் சரியாகத் தெரிந்திருக்கிறது. கவிஞர் ஒரு வரியைச் சேர்த்து மேலும் அழகாக மாற்றி விட்டார்:
நீண்ட தூரங்களைக் கடந்து
வீடுபேறு அடைகிறது
குழந்தைகளுக்கு உணவூட்டுவது ஒரு கலை. ஒவ்வொருவரும் ஒரு வாய் சாப்பிட்டதும், குழந்தையும் சாப்பிடுகிறது. உணவோடு இங்கே அன்பும் சேர்த்து ஊட்டப்படுவதால், வீடே வேடந்தாங்கலாக மாறுகிறது. கடைசி வரிகள் கவிதைக்கு மகுடங்கள்.
பனைமரப் பாடல் கவிதை, நுங்கு வண்டிகள் போய், கணினி விளையாட்டுக்கள் வந்ததையும், தெருவோரம் நுங்கு பதநீர் விற்பதையும் கவலையோடு, ஒரு பனைமரம் பாடுவதாக, நமக்கு முன் காட்சியாகக் காட்டுகிறது.
சுடுகாட்டுப் பாதையில் எங்கள் வீடு கவிதையின், கீழ்க்கண்ட வரிகள் ஒரு காவிய சோகம். ஆனால் மறுக்க முடியாத உண்மை:
இந்த உலகமே பிணங்கள் போகும் பாதையில் தான் இருக்கிறது
இவன்தான் அவனென்று தொடங்கும் கவிதையும், நேரு விளையாட்டு அரங்கம் கவிதையும், அப்பாவைப் பார்ப்பது போலவே இருக்கிறாய் என்னும் கவிதையும், நமது அடையாளக் குழப்பங்கள். இரண்டாம் கவிதையின் கடைசி வரிகள் மிகச் சிறப்பு:
இது
எத்தனையாவது சுழற்சி என்று தெரியவில்லை
ரமணரின் நான் யார்? என்னும் தத்துவத்தை ஞாபகமூட்டுகிறது. நான் என்பது நானில்லையா? ஒரு கண்ணியின் தொடர்ச்சி தானா? அப்படியானால், இந்த நான்என்பவன், எத்தனையாவது நான்?
எனக்குப் பிடித்த மற்றுமொரு மிகச் சிறந்த கவிதை:
ரயில் பயணத்தில்
வலதுபுறமே இடதாகவும்
இடதுபுறமே வலதாகவும்
நகர்கிறது
கனவுக்கும் நிஜத்துக்கும்
இடையேதான் இருக்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு வாரமும் எனது ரயில் பயணத்தில், பிளாட்பாரம் இடதா வலதா என எப்போதும் குழப்பமாக இருக்கும். இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கையும். சில விஷயங்கள் நாம் எதிர்பாராத வேகத்தில், விரைவில் முடியும் போது, நமக்கு இது கனவா நிஜமா என்ற குழப்பம் எப்போதும் வரும். இப்படித்தான் இருக்கிறது நமது மீச்சிறு வாழ்க்கை.
குறிப்பிட்ட ஊருக்குச் செல்வதெனப் பயணம் என்று ஆரம்பிக்கும் கவிதை சிறப்பு. எப்போதும் யாராவது எங்கோ பயணம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லை. நமது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடம் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறோம்.முற்றுப் புள்ளி இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது நமது பயணங்கள்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
000

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

