“மோகன் கேட்டான் குமாரிடத்தில், நாளை எத்தனை மணிக்கு வாடிக்கையாளர் இடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று.
“சுமார் ஒன்பதிலிருந்து பத்துக்குள் நீ அங்கு இருக்க வேண்டும், மோகன்.” என்றான் குமார்.
“சரி குமார், என்ன விஷயம்? ஏதாவது புதிய இயந்திரத்தைப் பற்றிய விசாரணையா?”
“இல்லைப்பா, நம்முடைய இயந்திரத்தில் ஏதோ ஒரு புதிய கோளாறாம். அதை அவர்களால் சரிசெய்ய முடியவில்லை என்று நம்மிடம் வந்துள்ளனர்.”
“சரிப்பா, நான் நாளை வாடிக்கையாளர் இடத்தில் பார்த்த பிறகு, என்னவென்று உனக்கு விரிவாக எடுத்துச் சொல்கிறேன்,” என்று மோகன் குமாரிடம் கூறிய பின் தொலைப்பேசியைத் துண்டித்தான்.
குமாரும் மோகனும் சேவைப் பொறியாளர்கள் (Service Engineers). இவர்கள் இருவரும் ஒரு ஜப்பானிய நிறுவனத்திற்காகப் பணிபுரிகிறார்கள். பிரத்தியேகமாக அந்த வெளிநாட்டு ஜப்பானிய நிறுவனத்திற்காக மட்டுமே இவர்கள் வேலை செய்கிறார்கள். பொதுவாக, இவர்களைப் போன்றோர் பலதரப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்ப்பதுண்டு. ஆனால் இவர்கள் இருவரும், கடமையே கண்ணாக, இந்த ஜப்பானிய நிறுவனத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்திருந்தார்கள். தங்களால் ஆன முழுத் திறனையும் காண்பித்து, வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர்.
வாடிக்கையாளர்களின் இயந்திரத்தில் ஏதாவது பழுதோ அல்லது கோளாறோ ஏற்பட்டால், முதலில் குமார் மற்றும் மோகனைத்தான் தொலைப்பேசியில் தொடர்புகொள்வார்கள். அதன் பின், மின்னஞ்சல் மூலமும் தெரியப்படுத்துவர். பெரும்பாலும் இருவரும் தங்களால் ஆன முழு உதவியையும் வாடிக்கையாளருக்குச் செய்வது வழக்கம். சில தருணங்களில், இவர்களால் அந்த வேலையை முடிக்க முடியாவிட்டால், தங்கள் ஜப்பானிய நண்பர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். அவர்கள் இணையம் (Online) மூலம் தொடர்புகொண்டு, அந்தப் பிழையைச் சரிசெய்ய முயல்வார்கள்.
***
மோகன், குமாரிடம் பேசியபடியே அடுத்த நாள் சரியான நேரத்திற்கு வாடிக்கையாளர் இடத்திற்குச் சென்றான். ஒரு தேர்ந்த மருத்துவர் நோயின் மூலத்தைக் கண்டறிவது போல, அங்குள்ள பொறியாளரிடம் பழுது என்னவென்று கேட்டு, அவர்களிடம் மாற்று உதிரி பாகம் உள்ளதா எனத் தெரிந்துகொண்டு, பழுதடைந்த பாகத்தைக் கட்டமைப்பிலிருந்து பிரிக்க ஆரம்பித்தான். அது சற்றே பெரிய வேலை என்பதால், வாடிக்கையாளரிடமிருந்து உதவிக்கு ஆட்களைப் பெற்றுக்கொண்டு, மோகன் அந்தப் பாகத்தை வெளியே எடுத்தான். பின்னர், வாடிக்கையாளரிடம் இருந்த மாற்று உதிரி பாகத்தைக் கொண்டு, அந்த இயந்திரத்தை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்தான்.
காலையில் சென்றவன், அந்த வேலையை முடிக்க அடுத்த நாள் விடியற்காலை ஆகிவிட்டது. இரவும் பகலும் ஓயாது சுழலும் பூமியைப் போல, அந்த இயந்திரத்துடனேயே அவன் முழு நாளையும் செலவிட்டான். ‘மாலையே வந்துவிடுகிறேன்’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தவன், அடுத்த நாள் விடியும் வரை அவளைத் தொலைப்பேசியில் தொடர்புகொள்ளவே இல்லை.
அதனால் மோகனின் மனைவி, விடியற்காலையிலேயே அலைபேசியில் மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்திருக்கிறாள். மோகனோ, வேலை மும்மரத்தில் அலைபேசி அழைத்ததைக் கவனிக்கவில்லை. உடனே அவள் குமாருக்கு அழைத்து, “அண்ணா! நேத்து சாயங்காலமே வர்றேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரி இன்னும் வரலை. நான் அழைத்தாலும் அலைபேசியை எடுக்க மாட்டேங்கிறார். கொஞ்சம் நீங்க அவருக்கு அழைத்துப் பேசி, என்ன ஆயிற்று, ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்ட பிறகு எனக்குத் தகவல் சொல்லுங்கள்,” என்று கூறிவிட்டுத் தொலைப்பேசியைத் துண்டித்தாள்.
இந்தச் செய்தியைக் கேட்ட குமாருக்கும் நெஞ்சில் பதற்றம் பற்றிக்கொண்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொலைக்காட்சியைத் திறந்தால் போதும், அதில் அவர்கள் கூறுகின்ற செய்தியைக் கேட்டால் அவ்வளவுதான். ‘இங்கு பேருந்துடன் கார் மோதி இருவர் பலி’, ‘அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது லாரி ஏறியது’ என்று செய்திகளைக் கேட்கவே நெஞ்சு பதறும். உடனே தனது கைப்பேசியை எடுத்து மோகனுக்குத் தொடர்புகொண்டபோது, மோகன் குமாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை. ஏனெனில், வேலை முடிந்து, மீண்டும் பொருத்தப்பட்ட சாதனம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சோதித்துக்கொண்டிருந்த சமயம் அந்த அழைப்பு வந்ததால் மோகனால் பதில் கூற முடியவில்லை.
***
பதற்றத்தின் உச்சத்தில் குமார், வாடிக்கையாளருக்கே நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டான். அதற்கு வாடிக்கையாளர், “ஆம், மோகன் இங்குதான் இருக்கிறார். வேலை இப்போதுதான் முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவார்,” என்று பதில் கூற, குமாரின் மனது சற்று ஆசுவாசம் அடைந்தது; ஒரு பெருமூச்சு விட்டான். பிறகு, மோகனிடம் பேசி, பழுது என்னவென்று அறிந்துகொண்டு, அவனுடைய மனைவிக்கு உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கூறிவிட்டு, குமார் தனது அழைப்பைத் துண்டித்தான்.
மோகனும் சரி, குமாரும் சரி, வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்ப்பதில்லை. எப்படியாவது வாடிக்கையாளரின் இயந்திரத்தைச் சரிசெய்த பிறகே அந்த இடத்தை விட்டு நகர்வார்கள். சில சமயங்களில் மதிய உணவிற்குக்கூட அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்படும். பசித்த வயிறும், பழுதான இயந்திரமுமாய் அவர்கள் போராடும் காட்சிகள் அங்கு சர்வ சாதாரணம். குறிப்பாக, ஜப்பானிய நண்பர் இணையத்தில் இயந்திரத்தை சோதித்துக்கொண்டிருக்கும்போது, அவரிடம் போய், ‘நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்வது அநாகரிகம் எனக் கருதி, உணவு பற்றி ஏதும் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள். இது ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறை அவர்களது மதிய உணவு உண்ணப்படாமலே போயிருக்கிறது.
இந்தத் தருணத்தில்தான், ஜப்பானிய நிறுவனம் அவர்களிடம், “நாம் ஏன் விற்பனைத் துறைக்கு ஒரு புதிய நபரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?” எனக் கேட்டு, ஒருவரை உறுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “உங்கள் இருவரின் வேலைப் பளுவையும் நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய நபர் விற்பனைப் பிரிவில் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால், நீங்கள் இருவரும் இன்னும் சிறப்பாகப் பணிபுரிவீர்கள்,” என்று அவர்களிடம் கூறி, மூன்று மாத கால இடைவெளியில் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், முந்தைய காலம் போல தற்போதைய நிலைமை இல்லை. குறைந்த ஆண்டுகளே விற்பனைப் பிரிவில் முன் அனுபவம் உள்ளவர்கள்கூட, தங்கள் சம்பளத்தைப் பொறுத்தமட்டில், ‘இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும்’ எனத் தீர்க்கமாகப் பேரம் பேசுகிறார்கள். பெரு நிறுவனங்கள் (Corporate companies) இங்கு வந்த பிறகு, பணியாளர்களுக்குச் சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்தி வழங்குவதே இதற்குக் காரணம். குறைந்த வருட முன் அனுபவம் இருந்தும், அதை ஒரு பெரிய தகுதியாக நினைக்கும் அளவிற்குப் பெரு நிறுவனங்கள் இவர்களுக்குச் சம்பளத்தை அள்ளித் தருகின்றன. அதனால், இவர்களது மனப்பான்மையும் அப்படியே மாறிவிடுகிறது. ஒரு வழியாக, குறைந்த ஆண்டுகளே முன் அனுபவம் இருந்தபோதிலும், ஒரு நபரை நிறுவனத்திற்காகத் தேர்ந்தெடுத்தனர். அந்த நபர் எதிர்பாராத ஒரு தொகையை மாதச் சம்பளமாகக் கொடுக்க ஜப்பானிய நிறுவனம் முடிவெடுத்து, அவரை விற்பனைப் பிரிவில் நியமித்தது.
***
குமாரும் மோகனும் புதிதாக வந்த நபருக்கு இயந்திரத்தின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாகத் தெளிவாகக் கூறி, அவருக்குப் புரியும்படி விளக்கினர். விக்கி என்பதே புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த நபரின் பெயர். விக்கி, ஒரு இளம் வயதினன். ஆனால், தன் உடம்பைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஆசாமி. ஏனென்றால் விக்கியுடைய வயதுக்குத் தோராயமாக ஐம்பத்தைந்திலிருந்து அறுபத்தைந்து கிலோ எடை இருக்கலாம். ஆனால் விக்கியோ, அவரது எடையில் சதத்தைத் தாண்டியிருந்தார். விக்கியின் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்க்கையில், ஒருவருக்குப் பதிலாக மூன்று பேரை ஒன்றிணைத்துச் சேர்த்தது போல இருந்தது.
மோகனும் குமாரும் முதல் முறையாக விக்கியை நேரில் பார்த்துச் சற்று மலைத்துப்போனார்கள். ஏனென்றால், புகைப்படத்திலோ அல்லது இணையவழி நேர்முகக் காணலிலோ விக்கி தனது முழு உருவத்தையும் காட்டவில்லை. இப்போதுதான், விக்கியை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்தபோது, அவர் ஒரு பருமனான உடலமைப்பைக் கொண்டவர் என்பதே அவர்களுக்குத் தெரியவந்தது. முதல் நாளிலேயே இருவரும் விக்கியிடம் பேசினர்.
“விக்கி, உங்கள் உடல் பருமன் இந்தப் பணிக்குச் சரிவராது. நீங்கள் யோகா செய்ய வேண்டும், அல்லது உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், கட்டாயம் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும்.”
அதற்கான காரணத்தையும் விக்கிக்குப் புரியும்படி விளக்கினர். “ஜப்பானியர்கள், சுறுசுறுப்பான எறும்புக் கூட்டத்தைப் போல அதிவேகமாக இயங்குபவர்கள். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதை மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள். நாம் இப்படி இருந்தால், எப்படி அவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்ய முடியும்? நமது இந்த மெத்தனப் போக்கே நமக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். இந்த மூன்று மாதங்கள் உனக்குப் பயிற்சி காலம். இதுவே உன் உடலைக் கவனித்துக்கொள்ளச் சரியான நேரம். மூன்று மாதப் பயிற்சி முடிந்த பிறகு, நீ ஜப்பானுக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அதற்காக பத்திலிருந்து பதினைந்து கிலோ எடை குறைந்தால், அது உன் சொந்த வாழ்விலும் சரி, பணிபுரியும் இடத்திலும் சரி, ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்,” என்று இருவரும் ஒரு நீண்ட ஆலோசனையை, ஒரு நண்பனைப் போல அக்கறையுடன் கூறினார்கள்.
***
விக்கியும், சரி சார், நான் கட்டாயம் உடல் எடையைக் குறைக்க என்னாலான முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன், என்று கூற. முதல் நாள் அலுவலகத்தில் இனிதே முடிந்தது. அடுத்த நாள், மறுநாள் என்று இரண்டு வாரம் இப்படி வருவதும் போவதுமாகச் சென்றது. விக்கிக்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் யார் யார் என்று தினமும் மோகனும் குமாரும் நேரம் கிடைக்கும்போது கூறி வந்தனர்.
ஒரு நாள் அலுவலகத்தில் மோகன் விக்கியிடம் சில கேள்விகளைக் கேட்டான், அதற்கு விக்கி ஒவ்வொன்றாகப் பதில் அளித்தான்.
“ஏம்பா, விக்கி! காலையில் தினமும் எத்தனை மணிக்கு எழுந்திருப்பாய்?” என்று கேட்டான்.
“அதுவா சார், சுமார் ஏழு மணி அளவில் படுக்கையை விட்டு எழுந்து, காலைக் கடன்களையெல்லாம் முடித்த பின் குளித்துவிட்டுக் கிளம்பிடுவேன்.”
“பிறகு ஏன் தினமும் அலுவலகத்திற்குத் தாமதமாக வருகிறாய்?”
“குமாரும் சரி, நானும் சரி, உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உன்னுடைய வயதைவிட எங்க ரெண்டு பேருடைய வயது பன்மடங்கு அதிகம். நாங்கள் இருவரும் எத்தனை மணிக்கு அலுவலகத்திற்கு வருகிறோம்? சரியான நேரத்திற்குத்தானே வருகிறோம். எல்லோருக்கும் சில நேரங்களில் சில காரியங்களால் தாமதமாகும், ஆனால் தினமும் தாமதமாக வருவது என்பது சரியல்ல.”
“நீ உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி தினமும் பதினொரு மணிக்கு அலுவலகத்திற்கு வருவது தவறு. உனக்குத் தெரியுமா நான் எத்தனை மணிக்கு எழுகிறேன் என்று? சரியாக ஐந்தரை மணிக்கு எழுந்து, காலைக் கடனை முடித்த பிறகு பிள்ளைகளுக்கு ஒத்தாசையாக அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன். துணிகளை இஸ்திரிப் பெட்டியின் உதவியுடன் தேய்த்துக் கொடுக்கிறேன். பிறகு மனைவிக்குச் சமையலறையில் முடிந்த வேலையைச் செய்வது, பாத்திரம் கழுவுவது என எல்லாவற்றையும் பார்த்த பிறகு குளித்து, அதன் பின் வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பி வருகிறேன். அலுவலக நேரம் பத்து மணி, ஆனால் நீ என்னடா என்றால் தினமும் பதினொரு மணிக்குத்தான் அலுவலகம் வருகிறாய். நீயே சொல்லு, இது சரியா?”
***
“இல்லை சார், நான் இனி சரியான நேரத்திற்கு வந்துடுவேன்,” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
“பரவாயில்லை, இனியாவது நீ சரியான நேரத்திற்கு வா. நேரம் பொன் போன்றது. நேரத்தைத் தவறவிட்டவன் அந்த நேரத்திற்கு மீண்டும் போக முடியுமா? இல்லை அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், இனியாவது ஒழுங்காக நேரத்திற்கு வா.”
விக்கியும், “சரி சார், நான் ஒழுங்காகப் பத்து மணிக்கு அலுவலகத்திற்கு வருகிறேன்,” என்றான்.
இரண்டு வாரங்கள் இரண்டு மாதங்களாகி, நான்கு மாதங்களும் ஆனது. விக்கிக்கு ஜப்பானிய நண்பர்களும் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தினர். சில பல நுணுக்கங்களை விக்கிக்குக் கற்றும் கொடுத்தனர். விற்பனைப் பிரிவிற்கு வேண்டிய பயிற்சியை மும்மரமாக ஆன்லைன் மூலம் கொடுத்து வந்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கி தன் தம்பி திருமணத்திற்கு வேண்டி பத்து நாள் விடுப்பு கோரிய நிலையில், ஜப்பானிய நிறுவனமும் சரி என்று கூறியது.
விடுப்பு முடிந்து வந்த விக்கிக்குக் குமார் ஒரு ஆச்சரியமான செய்தியைச் சொல்ல, அதைக் கேட்ட விக்கி மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று திகைத்துக் காணப்பட்டான். என்ன ஆச்சரியம் என்றால், விக்கி வெளிநாடு செல்லும் திட்டம் உறுதியாகிவிட்டது. இன்னும் சரியாக ஒரு மாத காலத்தில் விசா ஏற்பாடு செய்துவிட்டு விக்கி கிளம்ப வேண்டும் என்று முடிவானது. இந்தத் தருவாயில் திடீரென்று விக்கி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழ, மீண்டும் நான்கு தினங்கள் விடுப்பு. இந்த நான்கு மாத காலமும் சுமார் பதினொரு மணி அளவில்தான் அலுவலகம் வருவதை வழக்கமாக வைத்திருந்தான். குமாரும் எவ்வளவோ சொல்லியும் விக்கி செவிசாய்க்கவில்லை.
விக்கிக்கு மனதில் முதல் முறை வெளிநாடு பயணம் மேற்கொள்ளப் போகிறோம் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான உத்வேகமோ அல்லது ஊக்கமோ அவனிடம் காணப்படவில்லை. எல்லா வேலையையும் மெதுவாகச் செய்வது, அதற்கான வேலையைக்கூடச் சரிவரச் செய்யாமல் நாள் கடத்துவது என்று விக்கி இருந்து வந்தான். விசா நேர்காணல் முடிவானது. நிறுவனத்திலிருந்து எல்லா ஆவணங்களையும் விக்கியிடம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் விக்கி தரப்பிலிருந்து ஆவணங்கள் சரிவர எடுத்து வைக்கவில்லை. விசா நேர்காணலுக்கு முதல் நாள், ஜப்பானிலிருந்து ஆன்லைன் மீட்டிங்கிற்கு விக்கியையும் குமாரையும் அழைத்திருந்தனர். ஆனால் அப்பொழுது, விக்கி புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும், நாளை நேர்காணல் என்பதால் இன்று தன்னால் ஆன்லைன் மீட்டிங்கில் பங்கு கொள்ள முடியாது என்றும் தன்னிச்சையாக முடிவெடுத்துப் பங்குகொள்ளவில்லை.
***
ஜப்பானிய அதிகாரி விக்கியை இந்த நான்கு மாத காலம் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார். விக்கியின் இந்தச் செயல் சரியில்லை என்று குமாரிடம் அந்த மேல் அதிகாரி கூறினார். உடனே இதனையும் தெரியப்படுத்தினார்: “குமார், விக்கி தற்போது ஜப்பான் வர வேண்டாம். மேலும் ஒரு மாத காலம் விக்கிக்கு கால அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம். நன்றாகச் செயல்பட்டால் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம், இல்லையேல் வேறு வேலை பார்க்கச் சொல்லலாம்,” என்று கூறிவிட்டார்.
மறுநாள் காலை அலுவலகத்தில், “மோகனிடம், எவ்வளவு கால அவகாசம் கொடுப்பது?” என்று பேச்சு ஆரம்பமானது குமாரிடமிருந்து.
“சரிதான் குமார், நீ சொல்வது சரிதான். வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் விக்கியை நாம்தான் வேலைக்குத் தேர்ந்தெடுத்தோம். எதை நம்பி எடுத்தோமென்று நம் இருவருக்கும் தெரியும். சிறிது கால அவகாசம் மேலும் கொடுத்துப் பார்க்கலாம், அதிலும் விக்கி சரிவரப் பங்குகொள்ள வில்லையென்றால், விக்கியிடம் கூறிவிடலாம்.”
“எனக்கென்னவோ விக்கிக்கே தெரியவரும், விசா நேர்காணல் ரத்து ஆனது எதனால் என்று. தன் மேல் இருக்கும் சிறு தவறுகளை அவனே சரி செய்துகொள்ள வேண்டும். சொந்த விஷயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், முன்னுரிமை ஆகிய அனைத்தையும் அவன் வேலைக்கும் கொடுக்க வேண்டும். எப்போதும் இருக்கும் மந்த நிலையை உடைத்து வெளிவர வேண்டும். வாடிக்கையாளருக்கு உடன்னுக்கு உடன் பதில் அனுப்ப வேண்டும், அவர்களிடம் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் துரிதமாகச் செயல்பட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். புதிய புதிய வாடிக்கையாளர்களை இனம் கண்டுகொள்ள வேண்டும், நமது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் சம்பந்தமாக நன்கு கற்று அறிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தையும் விக்கி இந்த ஒரு மாத காலத்தில் பழகிக்கொண்டால், அவனது வேலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.”
“ஆம், நீ சொல்வது சரிதான். பார்ப்போம், எப்படிப் புரிந்துகொண்டு இந்த ஒரு மாத காலம் வேலை செய்கிறான் என்று,” என்றான் குமார்.
***
ஒவ்வொரு நொடியும் வேகமாக எப்படி நகர்கிறதோ, அப்படி ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிறையவே பயிற்சி கொடுத்தனர் ஜப்பானியர்கள் விக்கிக்கு. மேலும் விக்கியிடமிருந்து மாற்றத்தையும் எதிர்பார்த்தனர். ஆனால் விக்கி தனது செயல்பாடுகளிலிருந்து வெளிவரவில்லை. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், அவன் என்ன நினைக்கிறானோ அதைச் செய்து வந்தான். மழை பெய்தால் அலுவலகத்திற்குத் தாமதமாக வருவது, தேவையான விடுப்பாக இருந்தாலும் முன்னதாகச் சொல்லாமல் எடுப்பது, ஆன்லைன் மீட்டிங் என்றால் வீட்டிலிருந்தே பங்குகொள்வது, நேரத்திற்கு வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளாதது போன்று எல்லாவற்றையும் தாமதமாகச் செய்து வந்தான்.
ஜப்பானியர் குமாரைக் கூப்பிட்டு, “மன்னிக்கவும் குமார், எங்களுக்கு விக்கியிடம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. எவ்வளவு முறை கூறினாலும் விக்கி காரியங்களைத் துரிதமாகச் செய்வதில்லை. கடப்பில் போட்டுவைப்பது எங்களுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் சொல்லிவிடுங்கள், மேலும் ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்தே அடுத்த வேலையைத் தேடச்சொல்லுங்கள்,” என்று தெரிவித்தனர்.
அப்பொழுது பண்டிகைக் காலம் என்பதால், குமார் ஜப்பானியரிடம், “இது பண்டிகைக் காலம் என்பதால், பண்டிகை முடிந்ததும் நான் விக்கியிடம் சொல்கிறேன்,” என்று பதிலளித்தான்.
மோகன், குமாரிடம் கூறினான், “நாம் போதிய வாய்ப்பு கொடுத்தோம் விக்கிக்கு. அதை அவனால் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. வேறு என்ன நம்மால் செய்ய முடியும்? நாம் பலமுறை சொல்லியாகிவிட்டது விக்கியிடம், ‘உனது உடல் எடையைக் குறைக்க வேண்டும், உனது எடையே உனக்கு இடையூறாக இருக்கக் கூடும்’ என்றெல்லாம் முன்னதாகவே சொல்லிவிட்டோம்.”
“அவன் மீதே அவனுக்கு அக்கறை இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? அவனவன் சமர்த்து, அவனவன் வேலையைத் தக்கவைத்துக்கொள்வது. வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இப்படி அலட்சியத்தால் இழக்கிறானே!”
துரிதமாகச் செயல்பட வேண்டிய இடத்தில், ஒருவனுடைய மெத்தனப் போக்கின் காரணத்தால், கைக்கு எட்டிய நல்ல வேலை பறிபோனது. இது உழைப்பின் மதிப்பை உணராத அனைவருக்கும் ஒரு பாடம்.

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

