பள்ளி அலுவல் உதவியாளர் கண்ணகி அம்மா, கையில் ஒரு மாணவியைப் பிடித்தபடி, வகுப்பறை வாசலில் நின்றார். அச்சிறுமி, அந்த பள்ளியின் வழக்கமான சீருடை அணியவில்லை. புதுச் சேர்க்கை!
பாடத்தின் மீதிருந்த கவனம் வகுப்பின் வாசலில் நிற்கும் சிறுமியின் மேல் திரும்பியது. பிள்ளைகளுக்கு மட்டுமல்ல! ஆசிரியை மஞ்சுவுக்கும்!
கண்ணகி அம்மா உள்ளே நுழைந்து, ஆசிரியையிடம் தகவல் குறிப்பைக் கொடுத்தார். புதிய வரவான பெண்ணை எல்லா மாணவிகளும் கை தட்டி வரவேற்றனர்.
முதல் வரிசையில் இடம் தரப்பட்டது.
”உன் பெயர் என்ன? வகுப்புக்கு உன்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வாயா?” என ஆசிரியை கேட்க, அச்சிறுமி எழுந்தாள்.
“என் பெயர்….” அவள் ஆரம்பிக்கும் நேரம் அந்தப் பாடவேளை முடிவதற்கான மணி ஓங்கி அடிக்கத்துவங்கியது.
வகுப்பு மாணவிகள் அனைவரும் ‘ஓ’வென அலறினர்.
“இது மிகத் தவறு. எல்லோரும் அமைதியாக இருங்கள்” என அதட்டும் குரலில் சொன்ன ஆசிரியை மஞ்சு, “வன்ஷிகா, இங்கே வா” என்றார்.
“உங்கள் அடுத்த பாடவேளை ஆசிரியை யார்?”
“தேவிகா மேம்“ மீண்டும் அனைவரும் கத்தினர்.
“ஸ்ஸ்… அமைதி! எல்லோரும் அமைதியாக இருங்கள், வன்ஷி, பேசுபவர்களை பட்டியலிட்டு தேவிகா மேடத்திடம் குடு“ என்று சொல்லியபடி, ஆசிரியை மஞ்சு அறையை விட்டு வெளியே சென்றார்.
“ஏய், உன் பேரு என்ன?” என ஒரு பெண் கத்தினாள்.
“ஜான்வி, சத்தம் போடாதே!“ வன்ஷிகா.
புதியதாக வந்த பெண்ணருகே அமர்ந்திருந்த சுஷ்மா, “நான் சுஷ்மா, உன் பேரு?” எனக் கேட்டாள்.
அதற்குள் வன்ஷிகா அருகில் வந்து, “பேசாதீங்க, பேசாதீங்க“ என பெஞ்சின் மேல் தன் கையில் இருந்த குச்சியால் தட்டினாள்.
”ராஜி, உன் இருக்கையிலே உட்காரு! திவ்யஸ்ரீ, பேசாதே! காவ்யா டோண்ட் டாக்” எனக் கையில் குச்சியுடன் தட்டி தட்டி, கத்தி கத்தி, வகுப்பை அமைதி நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாள் வன்ஷிகா.
“இப்போ நாம நம்ம வகுப்புக்கு புதுசா வந்து இருக்கற… உன் பேர் என்ன?” வன்ஷிகா.
“மேகா”
“ஓ.கே, மேகா இப்ப நம்ம கிட்ட பேசப் போறா “
“ஏய்! தேங்கா, மாங்கா, மேகா“ என மாணவிகள் கத்த..
“அமைதியா இருங்க! இல்ல தேவகி மேடம் கிட்ட சொல்லுவேன்” வன்ஷிகா.
வன்ஷிகாவின் கத்தலுக்கு எல்லா மாணவிகளும் அடங்கினர்.
மேகாவுக்கு எழுந்து, தன்னைப் பற்றிச் சொல்ல பிடிக்கவில்லை. வன்ஷிகாவின் அதிகாரமும் அதட்டலும், மாணவிகளின் கூச்சலும் அவளுக்கு வெறுப்பாயிருந்தன.
“எல்லோரும் ஏன் இவ்வளவு கத்துகிறார்கள்? ” என நினைத்தாள்.
அருகில் இருந்த சுஷ்மா, “போ மேகா,“ என்று சொல்லி அவளை பென்ச்சை விட்டுத் தள்ளினாள்.
மேகாவின் முகம் மற்றும் கால்களில் சிராய்ப்பு! முழங்கையில் ஒரு சிறு ஆணி குத்தி ரத்தமே வந்து விட்டது.
சுஷ்மாவைக் கடிந்தபடியே, அருகே ஓடி வந்தாள் வன்ஷிகா.
“ஓண்ணும் இல்ல, மேகா சின்ன அடி தான்!“ என்ற வன்ஷி, திபுதிபுவென ஓடி வந்த மற்ற மாணவிகளை ‘கூட்டம் கூடாதீங்க“ என விரட்டி விட்டு, “சுஷ்மா, அந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வா“ என்றாள்.
வன்ஷிகா மேகா கையில் பொங்கிய குருதியை, மிக நேர்த்தியாக நிறுத்தினாள். நல்ல நீரில் பஞ்சை நனைத்து, அழுத்தி வைத்து, ரத்தம் வருவது நின்றதும், பஞ்சினால், சிராய்ப்பு பகுதிகள், புழுதியையும் துடைத்து, மீண்டும் சொட்டு டெட்டால் சேர்த்த நீரிலும் துடைத்தாள்.
”இது ஒண்ணும் இல்ல, மேகா, அழுவாத” வன்ஷிகா.
”ராஜி, நீ இன்னிக்கி லெமன் ஜூஸ் கொண்டு வந்திருக்கேன் சொன்னயே, கொஞ்சம் நம்ம மேகாவுக்கு குடு”
“திவ்யஸ்ரீ, மேகா முகத்தைத் துடைச்சு விடு”
“வன்ஷிகா, என்ன ஆச்சு? ஏன் முதலுதவிப் பெட்டியை எடுத்து இருக்கீங்க?” என்றபடி வந்தார் தேவகி மேம்.
நடந்த விவரங்களைக் கேட்ட ஆசிரியை தேவகி வன்ஷிகாவை பாராட்டினார்.
மேகாவைக் கூப்பிட்டு, நலம் விசாரித்து, அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டு, அவளை வகுப்புக்கு அறிமுகப்படுத்தினார்.
அடுத்தடுத்த பாட இடைவேளைகளில், வன்ஷிகா சத்தமாக, அதிகாரமாக எல்லோரையும் கடிந்து கொண்டது மட்டும் மேகாவுக்குப் பிடிக்கவில்லை.
உணவு இடை வேளை.
“என்ன மேகா, சிரிச்சு பேசு. நல்லா பேசினா தான கலகலப்பா இருக்கும்” வன்ஷிகா.
“இல்ல, நீ ரொம்ப சத்தமா, கமாண்ட் பண்ணி பேசுற! ஏன்?”
“கொஞ்சம் சத்தமா பேசினாத் தான் எல்லாம் அடங்குவாங்க. லீடர் அப்படித்தான பேசணும்“ வன்ஷிகா.
“எப்போதாவது ஒருமுறை அதிக சத்தம் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.எப்போதும் சத்தம் போட்டு, காட்டுக்கத்தலாகக் கத்தி அடக்குதல் என்பது நம் வகுப்புக்கே அவமானம்.” மேகா.
வன்ஷிகா புரிதலுடன் தலையை ஆட்டினாள்.
“லீடர் மட்டுமல்ல… எல்லோரும் மென்மையா பேசினா?” என்ற மேகா,” பாடவேளைகளின் இடைவெளிகளில் ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறீர்கள்? என அனைவரையும் பார்த்துக் கேட்டாள்.
“உன் பழைய வகுப்பில் யாரும் கத்திப் பேச மாட்டார்களா?”
“அங்கே நான் தான் என் வகுப்பு லீடராக இருந்தேன். முதலில் எல்லோரும் கத்தி கத்தித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நான் என் தாத்தாவிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு அருமையான வழியை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.”
”அது என்ன? என்ன வழி?” பல குரல்கள் பலமான கத்தலாக !
“முதலில் அனைவரும் அவரவர் இடத்தில் அமருங்கள்! அமைதியாக இருங்கள்!”
எல்லா மாணவிகளும் அமைதியாக, மேகா சொல்வதைக் கேட்கத் தயாரானர்கள்.
“ஆஹா! எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள் இப்போது! வன்ஷிகா, இனிமேல், கத்துபவர்கள் பெயர் பட்டியல் எழுதாமல், அமைதியாக, மென்மையாகப் பேசுபவர்கள் பெயர் பட்டியல் எழுது! அமைதியாக இருப்பவர்களைப் பாராட்டு! அது தான் என் தாத்தா எனக்குச் சொன்னது“ என்றாள் மேகா.
சில நாட்களிலேயே நல்ல மாற்றம் ஏற்பட்டது மாணவிகளிடையே!
மென்மையாகப் பேசுதல் என்ற வழக்கத்தைப் பழக்கமாக ஆக்கிக் கொண்ட அந்த வகுப்பறை அந்தப் பள்ளியின் மாதிரி வகுப்பாக கொண்டாடப்பட்டது.
00
கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.