சுடருக்கு சிம்பா சொன்ன கதை 2

நைட்டாயிருச்சு..

மலர் பாப்பா உறங்குற நேரம்..  ஆனா அவ உறங்காம படுத்திருந்தா. அவளுக்கு டெய்லி அவங்க அப்பா கதை சொன்னாத்தான் உறக்கம் வரும். அவங்கப்பா வர்றதுக்காக காத்துக்கிட்டு இருந்தா.

அவங்கப்பா வந்தாரு. “என்னடா மலர் பாப்பா.. தூங்கலையா.?” ன்னு கேட்டாரு.

“நீங்க இன்னும் கதை சொல்லலையே..” ன்னு மலர் பாப்பா சொன்னா..

அவ பக்கத்துல உக்காந்த அப்பா பாப்பாவ படுக்க வச்சு போர்வைய போர்த்தி விட்டாரு. “சரி. இன்னைக்கு என்ன கதை சொல்லலாம்.? நம்ம மொராங்குவோட கதைய சொல்லலாமா..?” ன்னு கேட்டாரு.

“மொராங்குவா.? யாருப்பா அது.?” ன்னு சுடர் பாப்பா கேட்டா.

“நீ ஒராங் உட்டான் குரங்கு பாத்திருக்கியா..?”

“ஓ.. பாத்திருக்கேனே.. பிரவுன் கலர்ல இருக்கும். காலு குட்டியா இருக்கும். கையி நீளமா இருக்கும். தொந்தி வச்சிருக்கும். சூப்பரா சிரிக்குமே.. அந்த குரங்குதானே..?”

“அதேதாண்டா பாப்பா. அது உலகத்துலயே போர்னியோ காடுகள்லயும் இந்தோனேஷியா காடுகள்லயும்தான் இருக்கு.. அது தெரியுமா உனக்கு..?”

“அப்புடியாப்பா..?”

“ஆமாண்டா தங்கம்.. ஒராங் உட்டான்னா என்ன அர்த்தம் தெரியுமா.? காட்டு மனிதன்னு அர்த்தம். அது இந்தோனேஷியா பாஷை..”

“அதை ஏன்ப்பா காட்டு மனிதன்னு கூப்புடுறாங்க..?”

“ஏன்னா அது மனுஷங்க மாதிரியே குடும்பமா இருக்கும். மனுஷங்க மாதிரியே பல நேரம் நடந்துக்கும். அதனாலதான் அதை காட்டு மனிதன்னு செல்லமா கூப்புடுறாங்க.. அந்த ஒராங் உட்டாங் குடும்பத்துல ஒரு குழந்தைதான் இந்த மொராங்கு. குட்டி ஒராங் உட்டாங்..”

“குட்டி ஒராங் உட்டாங்.. சூப்பர்ப்பா..”

“இந்தோனேஷியா காடுகள்லதான் மொராங்கு அதோட குடும்பத்தோட இருந்துச்சு.. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் மொராங்குவை பாசமா வளத்தாங்களாம்..”

“மொராங்கு என்னப்பா சாப்புடும்.?”

“காட்டுல கிடைக்கிற பழம்.. இலை தழை.. சின்ன சின்ன பூச்சி.. எறும்பு.. கரையான்.. இந்த மாதிரி அதுக்குப் புடிச்ச எல்லாத்தையும் அது சாப்புடும்..”

“அய்யய்ய.. எறும்பு கரையானை கூடவா சாப்புடும்..?”

“ஆமாண்டா பாப்பா.. ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு மாதிரி உணவுப் பழக்கம் இருக்கும். உராங் உட்டான் குரங்குகளுக்கும் அந்த மாதிரி தனிப்பட்ட உணவுப் பழக்கம் இருக்கு. அவ்வளவுதான். இதுல நாம சொல்ல எதுவும் இல்ல. சரியா.?”

“சரிப்பா….”

“இந்த இந்தோனேஷியா இருக்குல்ல..? அது கொஞ்சம் ஏழை நாடு.. மக்கள்த் தொகை ரொம்ப அதிகம். அதனால அந்த மக்கள் எதாவது ஒரு தொழில் பண்ணி உழைச்சு சாப்புடுறதுல ஆர்வமா இருப்பாங்க. அப்பதான் அவங்களுக்கு இந்த எண்ணெய்ப் பனை உற்பத்தி பண்ணுறது லாபகரமான தொழில்னு தெரிய வந்துச்சு..”

“அப்புடின்னா.?”

“அதாவது எண்ணெய்ப் பனை பயிரிட்டு வளத்தா.. நிறைய லாபம் கிடைக்கும்னு தெரிய வந்துச்சு..”

“எண்ணெய்ப் பனைன்னா என்னப்பா..?”

“அது ஒரு வகை பனை மரம்டா பாப்பா.. அந்த பனை மரத்துல பேரீச்சம்பழம் சைஸ்ல காய் காய்க்கும்..“

“அப்பன்னா அதை நாம சாப்புடலாமாப்பா.?”

“இல்லடா கண்ணு.. அதை அப்புடியே சாப்புட முடியாது. அது குட்டி தேங்காய் மாதிரி இருக்கும்.. அதை உடைச்சு உள்ள இருக்குற பருப்பை எடுக்கணும்..”

“அதையாவது சாப்புட முடியுமாப்பா..?”

“ம்ஹூம்.  அதை நல்லா காய வைச்சு பிழிஞ்சு எண்ணெய் எடுப்பாங்க.. அந்த எண்ணெய்க்கு பேருதான் பனை எண்ணெய்..”

“ஹை.. பேரே சூப்பரா இருக்கே..”

“நம்ம ஊருல அதை பாமாயில்னு சொல்லுவோம்..”

“அட.. நம்ம பாமாயிலாப்பா..?”

“அதேதான். நம்ம ஊருல கிடைக்கிற பாமாயில் முக்காவாசி இந்தோனேஷியாவுல இருந்துதான் இறக்குமதி ஆகுது..”

“கப்பல்ல வருமாப்பா.?”

“ஆமாண்டா செல்லம்.. பாமாயில் வித்தா அவங்களுக்கு நிறைய நிறைய பணம் கிடைக்கும். அதனாலதான் அவங்க நிறைய எண்ணெய்ப் பனை வளத்து நிறைய பாமாயில் விக்கிறாங்க.”

“இதுல கதை எங்கப்பா இருக்கு.?”

“ம்.. சொல்றேன்ப்பா.. இந்த மொராங்கு இருக்குல்ல.? அது பாட்டுக்கு அவங்க அப்பா அம்மா கூட சந்தோசமா காட்டுல வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு.. இந்தோனேஷியா காடுகள் ரொம்ப மண் வளம் அதிகமான காடுகள். எல்லா தாவரங்களும் சிறப்பா வளரும். பழங்கள், கிழங்குகள், பூச்சிகள்னு மொராங்கு குடும்பத்துக்கு சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்ல. அவங்க சந்தோசமா வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க..“

“அவங்க வீடு எப்புடிப்பா இருக்கும்.?”

“காடுதானே.. அங்க இருக்குற மரம்தான் அவங்களோட வீடு..”

“மரத்துல பெட்ரூம், கிச்சன் எல்லாம் இருக்குமாப்பா..?”

“இல்லடா.. அதெல்லாம் இருக்காது. மரம்தான் அவங்களோட வீடு.. அதோட கிளைகள்தான் அவங்களுக்கு ரூம் மாதிரி.. அதே மாதிரி அவங்க சமைச்சு சாப்புட மாட்டாங்கள்ல.? அதனால கிச்சன் தேவையில்லல்ல..”

“ஆமால்ல….”

“சரிடா. கதைக்கு வருவோம். இந்தோனேஷியா மக்கள் மத்தில எண்ணெய்ப் பனை வளத்தா நல்ல லாபம்னு தெரிய வந்துச்சுல்ல..?”

“ஆமா..”

“அவங்க எண்ணெய்ப் பனை வளக்க ரெடியா இருந்தாங்க. ஆனா அதை ஒரு இடத்துல நட்டு வளக்கணும்ல்ல.? அதுக்கு என்ன வேணும்.?”

“நிலம் வேணும்..”

“வெரிகுட். அவங்க நாடு சின்ன நாடு. எக்கச்சக்கமா தீவுகளா இருக்கும். எல்லா தீவுலயும் காடுகள்தான் அதிகம். அங்க எண்ணெய்ப் பனை வளக்குறதுக்கு இடமே இல்லை. அதனால அவங்க என்ன பண்ணாங்கன்னு தெரியுமா.?”

“என்ன பண்ணாங்க..?”

“இந்த காடு எல்லாம் சும்மாத்தானே இருக்கு.. அதனால காட்டை அழிச்சு அந்த இடத்துல எண்ணெய்ப் பனை வளக்கலாம்னு முடிவு பண்ணினாங்க..”

“காட்டை எப்புடிப்பா அழிப்பாங்க.?”

”காட்டுல இருக்குற மரம் செடி கொடி எல்லாத்தையும் வெட்டிடுவாங்க. அதோட வேரைக் கூட தோண்டிப் போட்டுருவாங்க. அப்ப வெறும் நிலம் கிடைக்கும்ல்ல.? அதுல எண்ணெய்ப் பனை வளப்பாங்க..”

“மரம்லாம் பெரிசு பெரிசா இருக்குமே. அதை எப்புடி வெட்டுவாங்க.?”

“அதுதான் அவங்களுக்கு பெரிய பிரச்சினையா இருந்துச்சு.. ஒவ்வொரு மரமா வெட்டுறதுக்கு ரொம்ப டைம் ஆச்சு. வேலை பாக்குறவங்களுக்கு கூலி குடுக்கணும்ல்ல.? அந்த பணம் வேற ரொம்ப செலவாச்சு..”

“பாவம்ல்ல.?”

“கதைய முழுசா கேளு பாப்பா.. அப்பதானே யாரு பாவம்னு தெரியும்.. மரங்கள வெட்டுறது சிரமமா இருந்துச்சா.. அதனால இவங்க என்ன பண்ணாங்கன்னா காட்டை எல்லாம் எரிச்சு விட்டுறலாம்.. அதுக்கு செலவும் ஆகாது. காடும் அழிஞ்சிரும்னு முடிவு பண்ணாங்க..”

மலர் பாப்பா அதிர்ச்சியாகிப் பார்த்தாள்.

“எப்புடிப்பா..?”

“ஆமா பாப்பா. காட்டோட ஆரம்பத்துல ஒரு மரத்துமேல தீய வச்சு விட்டுருவாங்க.. அந்த தீ அப்புடியே பரவி பரவி காடு முழுசும் எரிஞ்சு போயிடும்..”

மலர் பாப்பா மேலும் அதிர்ச்சியானாள். “அய்யோ.. அப்பன்னா காட்டுல இருக்குற மிருகம் எல்லாம்.?“

“அதுகளும் காடோட எரிஞ்சு செத்துப் போயிடும் பாப்பா..”

என்றதும் மலர் பாப்பா அப்படியே அதிர்ச்சியோடு இருந்தாள். அவளது கண் மெலிதாக கலங்கியது.

“அப்புடித்தான் ஒரு தடவை காட்டுக்கு தீ வைச்சப்ப நம்ம மொராங்குவோட மரத்துகிட்ட தீ வந்துருச்சு. சுத்திலும் தீ.. கூடிய சீக்கிரம் அவங்க வீடு இருக்குல்ல.. அதாவது அவங்களோட மரம்.. அதுலயும் தீ பிடிச்சிடும். எல்லாரும் செத்துருவாங்க. மொராங்குவோட அம்மாவும் அப்பாவும் அவங்க வீட்டை பாதுகாக்க போராடினாங்க.. ஆனா காட்டு தீ ரொம்ப பெரிசு இல்லையா.. எந்த பக்கம் ஓடினாலும் தீ.. அவங்களால அந்த தீய தாண்டி குதிக்க முடியல. தீ வேற பக்கத்துல வந்துக்கிட்டே இருக்கு.. பாவம் அவங்க. அவங்களால என்ன செய்ய  முடியும். அதனால அவங்க நம்ம மொராங்குவை மட்டும் காப்பாத்திடலாம்னு முடிவு பண்ணாங்க. மொராங்குவோட கையையும் காலையும் பிடிச்சு தூரி ஆட்டுற மாதிரி ஆட்டி தூரமா தூக்கிப் போட்டாங்களாம். மொராங்கு தீயை விட்டு தாண்டி வந்து விழுந்துருச்சாம். தீயில இருந்து தப்பிச்சிருச்சாம்…”

பாப்பா கண்ணீரோடு கேட்டாள் “அப்ப மொராங்குவோட அப்பாம்மா.?”

“அவங்க அந்த தீயிலயே எரிஞ்சு செத்துப் போயிட்டாங்க பாப்பா..”

என்றதும் பாப்பா மெலிதாக விசும்பி அழ ஆரம்பித்தாள்..

“பாவம் காட்டுல இருந்து தப்பிச்சு வந்த மொராங்குவ மனுஷங்க புடிச்சு கூண்டுல அடைச்சிட்டாங்களாம்.. மொராங்கு கூண்டுல இருந்து அம்மா அப்பான்னு அதோட பாஷையில கத்திக்கிட்டே இருந்துச்சாம். மனுஷங்களுக்கு அதோட பாஷை புரியாது இல்லையா..? அதனால இந்த ஒராங் உட்டாங் குட்டி என்னமா பாட்டு பாடுதுன்னு அதை ரசிச்சு  வேடிக்கை பாப்பாங்களாம். இன்னைக்கு வரைக்கும் அந்த கூண்டுல இருந்துக்கிட்டு மொராங்கு அழுதுக்கிட்டே இருக்குதாம்.. மொராங்கு இருந்த காடெல்லாம் இப்ப எண்ணெய்ப் பனை மரம் செழிப்பா வளந்திருக்கு.. நிறைய பனை எண்ணெய் தயாரிச்சு எல்லா நாட்டுக்கும் அவங்க அனுப்புறாங்க. நம்ம நாட்டுக்கு கூட அந்த பனை எண்ணெய்தான் வருது..“

மலர் பாப்பா கண்ணீரோடு, “அப்பா. இது கதைதானே.? நிஜமா நடக்கலைல்ல.?”

“இல்லடா பாப்பா. இப்ப வரைக்கும் இந்தோனேஷியாவுல காடுகளை எரிச்சுக்கிட்டே இருக்காங்க. நிறைய மொராங்கு, அம்மா அப்பான்னு எரிஞ்சு  போயிட்டுதான் இருக்காங்கடா..”

மலர் பாப்பா கொஞ்ச நேரம் அழுது கொண்டு இருந்தாள்..

“அப்பா. இனிமே நம்ம வீட்டுல பாமாயில் வாங்க வேணாம்ப்பா..”

“இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சுல்ல.? அப்பருந்து நாம பாமாயில் வாங்குறது இல்ல பாப்பா..” என்றார் அப்பா..

********** 

நந்தன் ஸ்ரீதரன்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர். ’பொம்மலாட்டம்’ ’பிரியமானவள்’ ’தெய்வமகள்’ ’நாயகி’ ஆகிய நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதியவர். முன்பாக ‘தாழி’, ’படுகளக் காதை’, ’நந்தலாலா’ ’ஆயிரம் நீர்க் கால்கள்’ புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *