“அப்பா, ஸ்டேஜ்ல பாருங்க, அங்க இருக்கிற பிளாஸ்டிக் பூவெல்லாம் பிராங்க்ஃபர்ட் ‘பென்னி’ கடையில நாம்ம வாங்கி ராஜூ அண்ணனுக்கு கிப்ட் கொடுத்தது” ஆறு வயது மகன் கெனத் சொன்ன பிறகு தான் கல்யாண மேடையை உற்று பார்த்தான் ரஞ்சன். மேடையில் இருந்த ராட்சச ஃபேன் உதவியால் பூக்கள் அனைத்தும் ரஞ்சனைப் பார்த்து ‘ஹாய்’ என்றன.
ராஜூவுக்கு திருமணம் நிச்சயமான உடனேயே ஜெர்மெனியின் ‘டேம்ஸ்டார்ட்’டில் இருக்கும் தன் வீட்டுக்கு ராஜுவை அழைத்து விருந்து கொடுத்தான் ரஞ்சன். அப்போதுதான் இந்த பூக்கள் கிப்டையும் கொடுத்திருந்தான். “இனி திருமணம் முடிந்து இங்கு வந்த மறுநாளே இன்னொரு விருந்து புதுமண ஜோடிக்கு உண்டு” என அட்வான்ஸாக தேதியையும் ‘புக்’ செய்து விட்டார்கள் ரஞ்சனும் ரேகாவும்.
ரஞ்சனின் பக்கத்து ஊரான வடக்குபுரத்திலிருந்து ஜெர்மெனிக்கு வந்ததால் ராஜூ மீது ரஞ்சனுக்கு தனி பிரியம் உண்டு. மகனுக்கு பள்ளியில் ஒரு வாரம் ஈஸ்டர் விடுமுறை விட்டிருந்தபடியாலும் அந்த சமயத்தில் திருமணம் அமைந்துவிட்டபடியாலும் ரஞ்சனும் மனைவி குழந்தைகளுடன் திருமணத்துக்கு இந்தியா வந்து விட்டான்.
விடுமுறை அல்லாத நாட்களில் ஏர்போர்ட்டுக்கு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கூட்டி வந்தால் ஏர்போர்ட்டில் பிடித்து வைத்துக் கொள்வார்கள். பள்ளியில் முறையாக விடுமுறை சான்றிதழ் வாங்கி இருந்தால் மட்டுமே பிளேன் ஏற அனுமதிப்பார்கள். அந்த அளவுக்கு ஜெர்மெனியில் படிப்புக்குத் தான் முக்கியம். அதன் பிறகு தான் மற்ற கொண்டாட்டங்கள் எல்லாமே.
ஜெர்மெனியில் இருக்கும் ரெஸ்டாரண்டுகளில் இலையை பார்க்க முடியாது. அதிலும் நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் ரஞ்சன் இருக்கும் டேம்ஸ்டார்ட் நகரிலியிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற பிராங்க்ஃபர்ட் நகருக்கு வந்தால் தான் சரவணபவனில் சாப்பிட முடியும். அங்கும் வாழை இலை கிடையாது.
வாழை இலை போட்டு பருப்பு, சாம்பார், ரசம் ஊற்றி சாப்பிடுகிற ஏக்கம் எப்போதுமே அவனுக்கு உண்டு. அதிலும் சாப்பிட்டு முடித்து பாயாசத்தை இலையில் ஊற்றி அப்பளம் போட்டு நொறுக்கி சாப்பிடுவதை நினைத்தாலே நாவில் எச்சி ஊறும். அதனால் ஊருக்கு வரும்போதெல்லாம் கல்யாண வீடு, பால் காய்ச்சும் வீடு என எந்த அழைப்பு வந்திருந்தாலும் உடனடியாக சென்று விடுவான் ரஞ்சன். இன்று நண்பனின் கல்யாணம் என்பதால் வாழை இலையில் சாப்பிடும் ஏக்கம், திருப்தியின் உச்சத்தில் நின்று மதிய நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
தாலி கட்டும் முடிந்து அனைவரும் சாப்பிட மண்டபத்தின் மேல் பகுதிக்கு சென்றனர். குழந்தைகள் ரேகாவின் அம்மாவுடன் முன்னே செல்ல, ரேகா ரஞ்சனை அழைத்துக் கொண்டு படி ஏறினாள். அப்போதுதான் ரஞ்சன் அவரைப் பார்த்தான்.பந்தி தடபுடலாக நடந்து கொண்டிருக்க ஒரு ஓரமாக நாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்தார். அவர் வேறு யாருமல்ல ரஞ்சனின் பள்ளி ஆசிரியர் ராஜதுரை.
அவன் ஊரிலிருக்கும் அரசு பள்ளியில் படிக்கும் போது ஏழாம் வகுப்பில் அவர்தான் வகுப்பு ஆசிரியர். பள்ளியின் தலைமை ஆசிரியரும் அவர்தான். பக்கத்து ஊரான இந்த வடக்குபுரத்திலிருந்து சைக்கிளில் தான் வருவார். மிகவும் கறாரான ஆசிரியர் மட்டுமல்ல, உதவி செய்வதில் கர்ணனுக்கு நிகரானவரும் கூட. கஷ்டப்படும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள், உடைகள் என வருடா வருடம் தன்னுடைய சம்பளப் பணத்திலிருந்தே நிறைய வாங்கிக் கொடுப்பார்.
அவரைப் பார்த்த உடனே ரஞ்சனின் மனம் தான் படித்த எட்டாம் வகுப்புக்கு சென்றது.
அன்று சனிக்கிழமை. ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு ‘ஸ்டடி’ வைத்திருந்தார் ராஜதுரை. அன்று அவர் வர நேரமாகிவிட்டது. ஒன்பது மணிக்கு பள்ளிக்கு மாணவர்கள், கொஞ்ச நேரம் புத்தகத்தை விரித்து வைத்து கதை பேசிக் கொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக சனிக்கிழமையின் புற சத்தங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் வெளியே இழுத்து வந்து விளையாட வைத்தன. அவர்கள் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது அந்த குரல் கேட்டது.
“ஏலேய்….. ஏழாப்பு சார் வந்தாச்சி”
மேல முக்கு தெருவில் ராஜதுரை ஆசிரியர் சைக்கிளில் வருவதை கண்டதும் பள்ளி வளாகத்துக்குள் இருந்த தன்னுடைய ஆறாம் வகுப்புக்கு கத்திக் கொண்டேன் ஓடினான் ரமேஷ்.
வேப்பமரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்த முத்து மற்றும் இந்திரன், கீழே பழங்களைப் பொறுக்கி கொண்டிருந்த பசுபதி, குமார் மற்றும் பாலையா, பம்பரம் விட்டுக் கொண்டிருந்த செபாஸ்டின் குரூப், கிளியாந்தட்டு விளையாடிக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு கடைசி பெஞ்ச் மாணவர்கள் என அத்தனை பேரும் குடுகுடுவென தங்கள் வகுப்புக்குள் ஓடினர். புத்தகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு படிக்கும் பாவனையை உள்வாங்கிக் கொண்டன.
திங்கட்கிழமை தோறும் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் உச்சியில் ஏறி இருந்த ரஞ்சன் கீழ இறங்குவதற்குள் சைக்கிளில் ராஜதுரை ஆசிரியர் பள்ளி வளாகம் வந்து விட்டார். பாதி உயரத்தில் இருந்து குதித்து வகுப்புக்குள் ஓடினான் ரஞ்சன். சைக்கிளை ஐந்தாம் வகுப்பு முன் இருந்த வேப்பமர நிழலில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு மூன்று வகுப்புகளையும் நோட்டம் விட்டு ஏழாம் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தார் ராஜதுரை. கொஞ்ச நேரம் பயந்து போயிருந்த ரஞ்சன் தன்னை யாரும் கூப்பிட வராததால் ஆசிரியர் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
மதியம் பனிரெண்டு மணிக்கு ‘ஸ்டடி’ முடிந்து அனைவரும் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர். ரஞ்சனை கூப்பிட்டார் ராஜதுரை. கையில் இரண்டு அடி நீள கொய்யா கம்பு இருந்தது.
“கொடிமரத்துல எதுக்கு ஏறுனே?”
‘ நான் ஏறல்ல சார்’
“பொய் சொல்லி ஏமாத்தாத, நான்தான் பாத்தேனே”
கம்பை ஓங்கி அவன் கையில் அடித்தார்.
ரஞ்சனுக்கு கண்ணீர் வந்தது.
கம்பை கீழே போட்டவர், “உண்மையை சொல்லு, இனி அடிக்க மாட்டேன், நீ தானே ஏறுனே?”
தலையை கீழே குனிந்து அமைதியாக நின்றான் ரஞ்சன்.
“இனி எப்போதுமே இப்படி ஏமாத்தக் கூடாது சரியா?”
‘சரி’ என்று தலையாட்டினான் ரஞ்சன்.
“மேலே இருந்து கால் வழுக்கி கீழே விழுந்திருந்தா என்ன ஆகி இருக்கும் சொல்லு”
‘அடிபட்டிருக்கும்’
“எதுல அடிபட்டு இருக்கும், எவ்வளவு அடிபட்டு இருக்கும் தெரியுமா?”
‘காலில் அடிபட்டு இருக்கும்’
“அவ்வளவுதானா?”
‘கையிலேயும் அடிபட்டு இருக்கும்’
“அதுக்கப்புறம்?”
கைகளை கட்டிக்கொண்டு கால்களை சேர்த்து வைத்து மௌனமாக அப்படியே நின்றான் ரஞ்சன்.
“அதுக்கப்புறம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருப்பாங்க. அங்க எவ்வளவு நாள் இருக்கணும், அதுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? விவசாயம் பண்ணுற உங்க அப்பாகிட்ட இதுக்கு செலவழிக்க பணம் இருக்கா?”
மௌனம்
ராஜதுரை ஆசிரியர் சொல்வதைக் கேட்க கேட்க, அது மனதில் படம் மாதிரி ஓடி அவனுக்குள் அழுகையை கூட்டியது.
“அது உங்க அப்பாவுக்கு வீண் செலவுதானே, ஏற்கனவே நிறைய கடன் வாங்கி வச்சிருக்கிறதா நேத்துதான் என்னிடம் சொல்லிகிட்டிருந்தார். இப்போ இன்னொரு செலவு அவருக்கு வைக்கணுமா, சொல்லு”
அவனின் மௌனம் ஏதோ ஒன்றை அவனுக்கு புரிய வைத்தது என்பதை தெரிந்து கொண்டவர், “சரி வீட்டுக்கு கிளம்பு” என்றார்.
அந்த நிகழ்ச்சி ரஞ்சன் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விளையாடுவது பற்றி அல்ல அவரின் அப்பாவின் பொருளாதாரத்தை பற்றி. தன் அப்பா படும் கஷ்டம் அப்பொழுது தான் அவனுக்கு உரைத்தது.
அன்று ராஜதுரை ஆசிரியர் அவனை அடித்து இருந்தால் அந்த வலி அன்றோடு போயிருக்கும். ஆனால் மனதில் அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் அப்படியே பதிந்து விட்டது. பெரிய ஆளாக வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், அப்பாவை நல்லபடியாக வைத்து காப்பாற்ற வேண்டும், இப்படி பல பல எண்ணங்களை அவன் மனதில் உருவாக்கிய ராஜதுரை ஆசிரியர், மிகப் பெரிய போதி மரமாக அவனுக்குத் தெரிந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்து பாளையங்கோட்டையில் இருக்கிற கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தான் ரஞ்சன். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த சமயம் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தான். அப்போது தான் ராஜதுரை ஆசிரியரை மீண்டும் பார்த்தான்.
‘ஜெர்மெனியில் அவரின் பக்கத்து வீட்டு பையன் புதிதாக ஐடி கம்பெனி ஆரம்பித்து இருப்பதாகவும், இவன் திறமை பற்றி அவனிடம் சொல்லி ரெக்கமண்ட் செய்திருப்பதாகவும்’ ராஜதுரை ஆசிரியர் ரஞ்சனிடம் சொன்னார்.
ரஞ்சனுக்கு ஜெர்மெனி போக கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. புதுநாடு, புது இடம் எப்படி ‘செட்’ ஆகும் என்று யோசித்தான்.
“உன்ன மாதிரி தெறமை உள்ளவங்க கண்டிப்பாக மிளிரணும், கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புனு வகுப்புல நான் சொல்லித் தந்தத நீ செயல் படுத்தணும், அது உன்னால முடியும்” என்றார்.
மீண்டும் அவரே தொடர்ந்து, “ஒருக்கா அவன்கிட்ட பேசிப் பாரு, ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா வேலைல சேந்து கொஞ்ச நாள் செய்யி. பிடிச்சிருந்தா அங்க இரு, இல்லாட்டி ஊருக்கு வந்துரு” என்றார். ரஞ்சனுக்கும் அதுதான் சரி என்று பட்டது.
ஆனால் ஜெர்மெனி சென்ற பிறகு அந்த இடம் பிடித்து போய், திருமணம் ஆகி குழந்தைகள், படிப்பு என ஜெர்மெனியிலேயே செட்டில் ஆகிவிட்டான் ரஞ்சன்.
அதன் பிறகு இப்பொழுது ராஜுவின் கல்யாணத்தில் தான் ராஜதுரை ஆசிரியரை பார்க்கிறான்.
எப்போதும் வெள்ளை வேஷ்டி, சட்டை தான் அணிந்திருப்பார் ராஜதுரை ஆசிரியர். நீள கை சட்டையை முழங்கை வரைக்கும் மடக்கி விட்டு சட்டை பாக்கெட்டில் ஒரு கர்சிப்பை வைத்திருப்பார். பின்பக்கமாக தூக்கி வாரிய தலை, நவராத்திரி திரைப்படத்தில் வருகிற வயதான டாக்டர் சிவாஜியை ஞாபகப்படுத்தும்.
அப்படியே அதே மாதிரி தான் இன்னமும் இருந்தார் ராஜதுரை ஆசிரியர். கூடுதலாக உடல் சற்று மெலிந்திருந்தது, ஆங்காங்கே தலை நரைத்திருந்தது.
எல்லோரும் பந்தியில் இடம் பிடிப்பதிலேயே குறியாக இருக்க, பேச்சுத் துணைக்கு ஆள் யாரும் இல்லாமல் தனியாக கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
ஆசையாய் ஓடிப் போய் கை கொடுத்தான் ரஞ்சன்.
“சார் எப்படி இருக்கீங்க? நான் ரஞ்சன், என்னை ஞாபகம் இருக்குதா?”
‘ஏய்…. வா..வா, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே, ஜெர்மெனியிலிருந்து எப்ப வந்தே? எவ்வளவு நாள் லீவு?’ சந்தோஷமாக கேள்விகளை அடுக்கினார்.
“நல்லா இருக்கேன் சார். நான் ஜெர்மன் போறதுக்கு காரணமே நீங்க தானே. அன்றைக்கு நீங்க மட்டும் கட்டாயப்படுத்தி என் மனசுக்கு தைரியம் ஊட்டி அந்த வாய்ப்பை வாங்கித் தராவிட்டால் நான் இன்று இங்கு ஏதோ ஒரு மூலையில் தான் இருந்திருப்பேன். இப்போது கை நிறைய சம்பாதிக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்” உற்சாகமானான் ரஞ்சன்.
‘எத்தனை பிள்ளைங்க?’
“மூன்று பிள்ளைகள் சார். முதலில் ஒரு பையன், அதுக்கப்புறம் இரட்டை பெண் குழந்தைகள். திருமணத்திற்கு எல்லாரும் வந்திருக்கிறோம். நீங்க சாப்பிட்டீங்களா சார்?”
‘இல்ல’
அந்த வார்த்தையும் அப்போதைய அவருடைய முகபாவமும் நிறைய அர்த்தங்களை சுமந்து கொண்டிருந்தன.
‘சாப்பிட இடம் கிடைக்கல, உட்கார்ந்திருந்தவர்கள் சாப்பிடுவதற்குள்ளாகவே பின்னாடி போய் நின்று கொள்கிறார்கள், என் மனைவி உடன் வந்திருந்தால் அவள் இடம் பிடித்து தந்திருப்பாள், தனியாக அப்படி நிற்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது’ இப்படி நிறைய விஷயங்களை அவரின் முகம் ரஞ்சனுக்கு சொன்னது. தன் மனைவி எந்த பக்கம் நிற்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான்.
“சுகர் இருக்கு, அதனால சீக்கிரம் சாப்பிட்டாதான் கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று மீண்டும் ரஞ்சனை பார்த்தார் ராஜதுரை.
அவரைப் பார்க்கும் போதே பசியின் மயக்கத்தில் இருப்பது தெளிவாகப் புரிந்தது. ‘எனக்கு ஒரு இடம் பிடித்து தந்து விட்டால் நன்றாக இருக்கும்’ என்பதாக இருந்தது அவரின் வார்த்தைகளின் அர்த்தம்.
அப்போது அங்கே வந்த கல்யாண மாப்பிள்ளை ராஜுவின் அப்பா, ரஞ்சனை தோளில் தொட, “இப்ப வர்றேன் சார்” என்று அவருடன் சென்றான். ‘ரேகா கூப்பிடுறா, அங்கே போங்க’ என்ற அவர் கைகாட்ட, தூரத்தில் வடக்கு மூலை பந்தியின் பின்னால் நின்றிருந்த கூட்டத்துக்குள் ரேகா அவனை இழுத்துக் கொண்டாள்.
ரஞ்சன் மனம் முழுக்க ராஜதுரை ஆசிரியரின் வார்த்தை தான் நிறைந்திருந்தது.
மீண்டும் அவரிடம் போய் கூட்டி வரலாம் என்றால் கூட்டத்துக்குள்ளிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை. இங்கிருந்து ஆசிரியரை பார்த்தால் கீழே குனிந்து கை விரல்களை கசக்கி கொண்டிருந்தார். இரண்டு பேரை ஒதுக்கி வெளியே சென்றவனை “எங்க போறீங்க, இங்கேயே நில்லுங்க, அப்போதான் அடுத்த பந்தியில் இடம் கிடைக்கும்” என ரேகா இழுத்தாள். வயிற்றின் பசியும், இலை சாப்பாடும் அவனை அங்கேயே நிற்க வைத்தன.
சாப்பிட்டு முடித்து மற்ற நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தான். ஒரு வருடமாக ஊருக்கு வராததால் அந்த சமயத்தில் நடந்த சுப துக்க நிகழ்ச்சிகளை அங்கு வந்திருந்தவர்களுடன் குசலம் விசாரித்து பேசிவிட்டு மூன்று மணிக்கு வீட்டுக்கு வரும்போது தான் ராஜதுரை ஆசிரியரின் ஞாபகம் வந்தது. வேக வேகமாக பைக்கில் ஏறி மீண்டும் மண்டபத்துக்குள் ஓடினான். அவரை அங்கு காணவில்லை.
அங்கு எதிர்ப் பட்டவர்களிடம் கேட்கும் போது, “சார், அப்பவே வீட்டுக்கு போய்ட்டாங்களே” என்றனர்.
‘சாப்பிட்டிருப்பாரா, எந்தப் பகுதியில் இடம் கிடைத்திருக்கும், யார் இடம் பிடித்துக் கொடுத்திருப்பார்கள் அல்லது பின்னால் நின்று இடம் பிடிக்க கூச்சப்பட்டு சாப்பிடாமலேயே போய்விட்டாரா’ -அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
‘இலை சாப்பாட்டு ஆசை, என்னை இப்படி ஆக்கி விட்டதே’ என்று எண்ணினான். சுரத்தில்லாமல் வீடு வந்து சேர்ந்தான்.
இரவு டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு சீரியலில் கல்யாண விழாவை காட்டினார்கள். பந்தி பரிமாறப்பட்டு கொண்டிருந்தது. உடனே ராஜதுரை ஆசிரியர் தான் ஞாபகத்துக்கு வந்தார்.
‘ஒரு நேர சாப்பாட்டுக்காக சாரை தனியாக தவிக்க விட்டு விட்டோமே, முதலில் அவருக்கு இடம் பிடித்துக் கொடுத்துவிட்டு தானே நான் அமர்ந்திருக்க வேண்டும், வெட்கத்தை விட்டு வாய் திறந்து கேட்டாரே, என்ன ஆச்சு எனக்கு, ஏன் அப்படி பண்ணினேன்’ என்று அவனுக்குள்ளேயே கேள்வி கேட்டு குழப்பிக் கொண்டிருந்தான்.
டிவி பார்ப்பதிலிருந்து எழுந்து வெளியே வந்து வேப்பமரத்தடியில் கிடந்த கட்டிலில் படுத்தான். காற்றில் வேப்பமர கிளைகள் அசைய, நட்சத்திரங்கள் ஒளிந்து ஒளிந்து வேடிக்கை காட்டின. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட மின்னிய நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தான்.
ஜெர்மெனியில், குளிருக்கு இதமாக ஹீட்டர் போட்ட வீட்டுக்குள் படுத்துறங்கியவனுக்கு இந்த வேப்பமரமும் அதனிடையே தெரியும் சந்திரனும் சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனாலும் பத்து எண்ணிய பிறகு மீண்டும் ராஜதுரை ஆசிரியர் ஞாபகத்துக்கு வந்தார். அவரின் யாசகப்பார்வை அப்படியே இவன் மனதில் பதிந்து விட்டது. அதை நினைக்க நினைக்க கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
குழந்தைகளை உறக்கங்காட்டி விட்டு ரேகாவும் பின்பக்கத்து வேப்ப மரத்தடிக்கு வந்தாள். நடந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான்.
“இந்த சின்ன விஷயத்துக்கா இப்படி போட்டு குழம்பிட்டு இருக்கீங்க. அவருக்கு வேற யாராவது இடம் பிடிச்சி கொடுத்திருப்பாங்க. சாப்பிட்டுட்டுதான் வீட்டுக்கு போயிருப்பாரு. நீங்க ஏன் அதயே மனசுல போட்டு குழம்பிட்டு இருக்கீங்க, ஒழுங்கா உள்ள வந்து படுங்க” என்றாள் ரேகா.
‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்ற பழமொழி தான் ரஞ்சனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உண்மையிலேயே உணர்ச்சிகளும் அப்படித்தான். அனுபவித்தவர் தான் அதை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அது பத்தோடு பதினொன்று தான்.
மனைவியின் பேச்சில் அவன் மீதான அக்கறை தான் தெரிந்தது. அதுவும் சரி தான். அவளுக்கு அவன் தானே எல்லாம். ராஜதுரை ஆசிரியர் யாரோ ஒரு தெரியாத மூன்றாவது நபர் தானே. அவளை சொல்லியும் குற்றமில்லை என்று நினைத்துக் கொண்டான்.
அன்று இரவு தூக்கத்தினிடையே கனவில் கூட இந்த நிகழ்ச்சி தான் அவனுக்கு வந்தது. திடுக்கிட்டு எழுந்தான். வியர்த்து விட்டது. எழுந்து தண்ணீர் குடித்து வந்தான்.
‘மனதில் பதிந்த விஷயங்கள் தானே கனவில் வரும் என்பார்கள். அப்படியானால் சாருக்கு இடம் பிடித்து கொடுக்காதது என் ஆழ்மனதில் தெளிவாக பதிந்து விட்டது போலும். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். அப்போதுதான் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று முடிவு செய்து கொண்டான்.
காலையில் சீக்கிரமாகவே எழுந்து விட்டான். ஊரில் ராஜதுரை தலைமையாசிரியராக பணியாற்றிய போது அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பழைய ஊர்த் தலைவர் சங்கரனிடம் சென்று போன் நம்பரைக் கேட்டான்.
“அவரு ரிட்டேடு ஆன பெறவு வள்ளியூர்ல போய் செட்டிலாயிட்டாரப்பா, நானும் அதுக்குப்பெறவு அவர பாக்கல, நம்பரும் எங்கிட்ட இல்ல” என்றார்.
‘பதவியில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு, அதுவும் அந்தப் பதவிக்காக தானே தவிர அந்த நபருக்காக அல்ல’ என்பது ஊரில் உள்ள மற்றவர்களிடமும் போன் நம்பரை கேட்கும் போது புரிந்தது ரஞ்சனுக்கு.
பேசாம நேரில் சார் வீட்டுக்கு போய் விட்டால் என்ன? போய் அவர் கிட்ட எல்லாத்தையும் விளக்கமாக சொன்னால் மன பாரம் குறையுமே என்று நினைத்தான்.
‘அப்படியே போனாலும் என்ன சொல்லப் போறாரு,- “இதுக்கா இவ்வளவு தூரம் நீ வந்தே, நான் திருப்தியா சாப்பிட்டுட்டு தான் வீட்டுக்கு வந்தேன்”னு சொல்வாரு’ என இன்னொரு மனம் சொன்னது.
என் வாழ்க்கையில் விளக்கேற்றி இந்த அளவுக்கு என்னை முன்னேற்றி விட்ட அவருக்கு ஒரு நேர சாப்பாடு ஏற்பாடு பண்ண முடியாமல் போன பாவத்துக்கு ஏதாவது ஒரு தண்டனையை நான் அனுபவித்தே ஆக வேண்டுமென முடிவெடுத்தான். அதற்கு முன் வள்ளியூருக்குப் போய் அவரிடம் மனம் விட்டு பேசிவிடுவதென தீர்மானித்து வெளியே கிளம்பினான்.
செருப்பை போட்டுக்கொண்டு கிளம்ப எத்தணிக்கையில் “ஏய் ஜெர்மன்காரா, எப்படி இருக்க? ” சத்தம் கேட்டு திரும்பினான் ரஞ்சன்.
‘கேட்’டை திறந்து கொண்டு உள்ளே வந்தது வள்ளியூரில் வசிக்கும் பெரியம்மா மகன் கதிர்வேல்.
‘வாங்க அண்ணே வாங்க, உள்ள வாங்க, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? பிள்ளைங்க, அண்ணி, பெரியம்மா , பெரியப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?’
“எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா. என்ன வெளியே கெளம்பிட்டியா?”
‘ஆமாண்ணே உங்க ஊருக்கு தான் வரலாம்னு இருந்தேன், வீட்டுக்குள்ள வாங்க’ என்றவன் உள்ளே திரும்பி மனைவியிடம்,
‘ரேகா, கதிர்வேல் அண்ணன் வந்திருக்காங்க காபி போடு’ என்றான்.
“அதெல்லாம் வேண்டாம்பா, வள்ளியூர்ல அப்பா வீட்டு பக்கத்திலேயே புது வீடு கட்டி இருக்கேன். பால் காய்ச்சப் போறேன், அதான் கார்டு கொண்டு வந்தேன். சித்தி, சித்தப்பா எங்க?
‘ரெண்டு பேரும் ரேஷன் கடைக்குப் போனாங்க’
“சரி, நான் இப்போ உடனே ஊருக்கு போகணும். தோட்டத்தில போர் போடறதுக்கு சொல்லி இருந்தேன். போர் வண்டி வந்திருக்காம், அப்பா இப்போ தான் போன் பண்ணாங்க. நேரா தோட்டத்துக்குத் தான் போறேன். நீயும் வாரியா, எழனி வெட்டித் தாரேன், கிணத்துலயும் தண்ணி மேல வரைக்கும் கெடக்கு, நல்லா நீச்சல் அடிச்சு குளிக்கலாம்”
நீச்சல் அடிச்சு குளிக்கலாம் என்ற உடனே ரஞ்சனுக்குள் இருந்த குழந்தை உள்ளம் வெளி வந்தது. ஜெர்மெனியில் எப்பொழுதுமே வீட்டுக்குள்ளே ஷவரில் குளித்து குளித்து மிஷின் லைப் ஆகிவிட்டது. மீண்டும் சிறு வயதுக்கு செல்லலாம் என்று உடனே சரி என்றான்.
அவரவர் பைக்கில் தோட்டத்தை அடைந்தனர். கதிர்வேலின் மாமனார் மட்டும்தான் அங்கு இருந்தார். போர் மெஷின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.
“என்னண்ணே, போர் வண்டி தான் வந்தாச்சே, அப்புறம் ஏன் இன்னும் போர் போட ஆரம்பிக்கல”
‘தண்ணி பாக்கிறவரு இன்னும் வரல, அவருக்காக தான் வெயிட்டிங். அவர் பாத்தா கரெக்டா இருக்கும். தேங்காய வச்சு பாப்பாரு. தேங்காய் எந்த எடத்துல கையில் நிமிர்ந்து நிக்குதோ அந்த எடத்துல கண்டிப்பா தண்ணி இருக்கும்’
“அண்ணே, இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க?” கதர்வேலை பார்த்து கேட்டான் ரஞ்சன்.
‘நீ ஜெர்மன்ல இருக்க, அப்படித் தான் சொல்லுவ. அவர் பார்த்த எடத்துல கண்டிப்பா தண்ணி நெறையா இருக்கும் தெரியுமா?’
“பூமிக்குள் எல்லா எடத்திலும் தண்ணீ இருக்கும்ண்ணே” சிரித்தான் ரஞ்சன்.
‘போடா, நீ எப்பவுமே இப்படித்தான்’
அப்போது, ஸ்கூட்டரில் ஒருவர் தோட்டத்துக்குள் வந்து கொண்டிருந்தார். கிணற்று தொழுவத்தை தாண்டி அங்கிருந்த மாமரத்தின் கீழே தன் ஸ்கூட்டரை நிறுத்தினார். இங்கிருந்து பார்க்க அது தன்னுடைய ஆசிரியர் ராஜதுரை மாதிரி தெரிந்தது ரஞ்சனுக்கு.
“அண்ணே, இவரு…. இவர் பேரு” என்று இழுத்தான் ரஞ்சன்.
‘இவரு ராஜதுரை வாத்தியாரு, எங்க பக்கத்து தெருவுல தான் இருக்காரு. உங்க ஊர்ல தானப்பா வாத்தியாரா இருந்தாரு. மறந்துட்டியா?’ என்ற கதிர்வேல் மேலும் தொடர்ந்தார்.
‘தேங்காய வச்சி தண்ணி பாக்குறவரு இவரு தான். இவரு பாத்த கண்டிப்பா கரெக்டா இருக்கும். அதனால தான் இவர வரச் சொல்லியிருந்தேன்’
“இவருக்குத்தான் பென்ஷன் பணம் வருமே, அப்புறம் எதுக்கு இதெல்லாம் செய்றாரு?”
‘அவர் பொண்டாட்டிக்கு கேன்சர்பா. பென்ஷன் பணமெல்லாம் கீமோதெரபிக்கும் மருத்துவ செலவுக்கும் தான் சரியாயிருக்கு. இந்த வருமானம் தான் அவருக்கு சாப்பாட்டு செலவுக்கு கை குடுக்குது. ஆனா ஒண்ணு, இதுல அவருக்கு நல்ல வருமானம் தெரியுமா? ஒரு எடத்துல தண்ணி பாக்க 2000 ரூபாய் வாங்குறாரு’
தான் பொய் சொல்லி ஏமாற்றியதற்காக கொய்யா கம்பினால் ராஜதுரை அடித்தது ஞாபகத்துக்கு வந்தது ரஞ்சனுக்கு.
ராஜதுரை ஆசிரியர் மாமர நிழலில் இருந்து வெளிவந்து இவர்களை நோக்கி நடக்க, குடுமி இருந்த தேங்காயை எடுத்துக் கொண்டு கதிர்வேலுவும் அவரின் மாமனாரும் அவரை நோக்கி நடந்தார்கள்.
ரஞ்சன் பைக்கை திருப்பி, வீட்டுக்கு கிளம்ப ஸ்டார்ட் செய்தான். இப்போது மனம் லேசாகி நிம்மதியாக இருந்தது அவனுக்கு.

நான் ஜெர்மனி ஜேசுஜி, 1997 முதல் ஐ.டி நிபுணராக ஜெர்மனியில் பணிபுரிகிறேன்.
விகடன், தினமலர், கல்கி, மங்கையர் மலர், தினமணி மற்றும் வாசகசாலை போன்ற பத்திரிகைகளில் என்னுடைய கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகளை வெளிவந்துள்ளன.

