யானைக்குட்டி அம்முலுவின் கும்மாளங்கள் – சிறார் தொடர்கதை

அத்தியாயம்ஒன்று

தெற்குப் பக்கத்துப் பாறை

சின்ன சைஸ் ப்ளம்ஸ் பழம் போன்ற  துருதுரு கண்களோடும், எப்போதும் எதையாவது லாவிக்கொண்டே இருக்கும் குட்டி தும்பிக்கையோடும், அப்பா அம்மாவின் கால்களுக்குள் புகுந்து புகுந்து ஓடிக் குதூகலிக்கும் சின்ன யானைக் குட்டி ஒன்று ‘பனிமேடு’ என்ற  மலைக் காட்டுப் பகுதியில் வசித்து வந்தது. அந்தக் குட்டி யானையின் பெயர் அம்முலு.

அம்முலுவுக்கு மலைச் சரிவில் குடுகுடுவென இறங்கி ஓடுவதும்,  மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கும் பள்ளங்களில் படுத்து உடம்பு முழுவதும் சேரை பூசிக்கொண்டு உருளுவதும், பட்டாம்பூச்சிகளின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடுவதும் மிகவும் பிடித்த விளையாட்டுகள்.  அம்முலுவின் அப்பா கஜா தான் அந்த யானைக் கூட்டத்தின் தலைவர்.

பதினோறு அடி உயரம், நீண்ட தந்தம், இரும்பு போன்ற மத்தகம்  அதன் மேல் பொன் நிறத்தில் குஞ்சம் வைத்தது போன்ற கசம் ஆகியவை கொண்ட கம்பீரமான உருவம் கஜாவுக்கு. அவரைப் பார்த்தாலே கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளும் காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும் பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி விட்டுச் செல்வார்கள். ஆனால் அம்முலு அப்பாவின் தந்தத்தை தன் குட்டித் தும்பிக்கையால் பிடித்து இழுத்து சேட்டை செய்யும். எல்லோரும் பார்த்து பயப்படும் அப்பாவிடம் துணிச்சலாக அம்முலு விளையாடுவதை மற்ற யானைக் குட்டிகள் பொறாமையோடு பார்க்கும். அப்போதெல்லாம்  அம்முலுவுக்கு ரொம்ப பெருமையாக இருக்கும். 

அம்முலுவின் அம்மா காமாட்சி ரொம்ப சாது. அம்முலு செய்யும் சேட்டைகளை பார்த்து அடிக்கடி “அம்முலு. நீ இவ்வளவு சேட்டை செய்யக்கூடாது. ஏதாவது மலைச்சரிவில் சேறு வழிக்கி விட்டு விட்டால் உருண்டு விழுந்து விடுவாய். அடி பலமாகப் படும். ஜாக்கிரதை”  என்று அடிக்கடி அம்முலுவிற்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

“சரி மா”என்று சொல்லி மண்டையை பெரிசாக ஆட்டிக் கொள்ளும் அம்முலு. ஆனால், பட்டாம்பூச்சியை கண்டு விட்டால் போதும் மறுபடியும் கண்மண் தெரியாமல் அதை துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும் சுட்டி யானைக்குட்டி அம்முலு.

  அம்முலுவின் அப்பா கஜா அதன் அம்மாவைப் போல் அம்முலுவை அதிகம் கட்டுப்படுத்துவது இல்லை. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கராறாக இருப்பார். அதாவது, அவர்கள் கூட்டம் இருந்த இடத்துக்கு ஒரு எல்லையை கஜா நியமித்திருந்தார்.  பனிக்காட்டின் நடுவில் வாழ்ந்து வந்தது அந்த யானை கூட்டம். காட்டின் தெற்கு பகுதியில் ஒரு பெரிய பாறை இருந்தது. அதைத் தாண்டி அக்கூட்டத்தை சேர்ந்த யாரும் உத்தரவின்றி வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. 

அம்முலுவிடமும் கஜா இது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லி எச்சரித்து இருந்தார். அந்தப் பாறையைத் தாண்டிய பகுதிகளில் காடு அதிக அடர்த்தி இல்லாமலும், மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இருந்தது தான் அதற்குக் காரணம்.

 எப்போதும் அந்த விஷயத்தை கவனமாக வைத்திருக்கும் அம்முலு. ஆனால், டிசம்பர் மாதத்தில் ஒரு மத்தியான நேரம், அந்தக் கட்டுப்பாட்டை மறந்து விட்டது அம்முலு. அப்படி மறக்கும் அளவுக்கு என்ன நடந்தது அன்று?

முதல் நாள் இரவு முழுவதும் கனமழை பெய்திருந்ததால், யானை கூட்டம் மொத்தமும் ஓரிடத்தில் மழைக்கு ஒதுங்கி இரவெல்லாம் நிற்க வேண்டியிருந்தது. விடிந்ததும் மழை நின்று இருந்தது. அதனால் யானைக் கூட்டம் அப்போது சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. 

அந்த நேரத்தில், அம்முலுவின் நண்பன் முயல் குட்டி மோகனன் அங்கு வந்தது. அம்மாவுக்கு பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த அம்முலுவைப் பார்த்து “இங்கே வா” என்று ஜாடை காட்டியது மோகனன்.  அம்முலு, மெதுவாக தன் அம்மாவிடம் “அம்மா. என்னோட நண்பன் மோகனன் முயல் குட்டி வந்திருக்கிறான். நான் கொஞ்ச நேரம் அவனோடு விளையாடிவிட்டு வரட்டுமா?” என்று கேட்டது.

“வேண்டாம் அம்முலு. காடு முழுவதும் சேராக இருக்கிறது.  விளையாடப் போனால் நீ கண்மண் தெரியாமல் ஓடுவாய். எங்கேயாவது பள்ளத்தில் விழுந்து விட்டால் ஆபத்து. இங்கேயே இரு” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார் அதன் அம்மா காமாட்சி. வருத்தத்தில் அம்முலுவின் முகம் வாடிவிட்டது. சிறிது நேரம் புதருக்கு பின்னால் மறைந்து காத்திருந்து பார்த்தது மோகனன். அப்போதும் அம்முலு வரவில்லை.  எனவே, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக புதர் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தது. அம்முலு யாரும் பார்க்காத போது மோகனனைப் பார்த்து தன் தும்பிக்கையை “வரமுடியாது” என்பது போல்  ஆட்டியது.

  ஆனாலும், மோகனன் அங்கிருந்து போகாமல் பிடிவாதமாக  அம்முலுவை நோக்கி “அவசரம். வா. வா.” என்று கையை அசைத்து கூப்பிட்டது. ஏதோ முக்கியமான விஷயமாகத் தான் மோகனன் கூப்பிடுகிறது என்று அம்முலுவுக்கும் புரிந்து விட்டது. மறுபடியும் “அம்மா.  தயவு செஞ்சு அனுமதி கொடுங்க. கொஞ்ச நேரம் விளையாடிட்டு ஓடி வந்துடறேன்.” என்று மெல்லிய குரலில் கெஞ்சத் தொடங்கியது. அப்போது அரைத் தூக்கத்தில் இருந்த கஜா “காமாட்சி, அம்முலுக்கு என்ன வேணும்?” என்று கரகர தொண்டையில் கேட்டது. காமாட்சி “அவளுக்கு கொஞ்ச நேரம் மோகனன் முயல் குட்டியோட போய் விளையாடணுமாம்”  என்றது.

“சரி விளையாடட்டும் விடு” என்று சொன்னார் கஜா. உடனே உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது அம்முலு. “வேண்டாம் வேண்டாம்.  அம்முலு ரொம்ப சேட்டைக்காரி. சேரும் சகதியுமாக இருக்கிறது காடு.  தெரியாமல் ஓடி எங்கேயாவது விழுந்து சிராய்ப்பு ஏற்பட்டு விடும். மழை எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று அவசரமாக சொன்னது காமாட்சி.

“அம்மா. ரொம்ப தூரம் போக மாட்டேன். இதோ இந்த மரத்துகிட்டே விளையாடுகிறேன்” என்று சற்று தொலைவில் இருந்த ஒரு பெரிய மரத்தை காட்டி கொஞ்சியது அம்முலு. ஓய்வெடுக்கும் நேரத்தில் இவர்களது பஞ்சாயத்து எரிச்சலைத் தர காமாட்சியை அதட்டினார் கஜா “விடு போய் விளையாடட்டும். கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விடுங்கள் என்னை. அம்முலு நீ போ” என்று அனுமதி தந்தார் கஜா. 

அப்பா அப்படிச் சொன்னதுதான் தாமதம் அம்முலு குடுகுடுவென மோகனன் மறைந்து கொண்டிருந்த புதர் பக்கம் தலை தெரிக்க ஓடியது.  அப்போதே இருமுறை அதன் கால்கள் சேரில் வழுக்கியதை காமாட்சி கவனித்தது. “ஏய். அம்முலு. பாத்து பாத்து” என்று பயந்து போய் கத்தியது.  மறுபடியும் கஜா எரிச்சலோடு “காமாட்சி. கத்தாதே. அம்முலு இன்னும் சிறு குழந்தை இல்லை. வளர்ந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து எழுந்து தானே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளட்டும்.  நீ ஒரேயடியாக அடக்கி வைத்து பயந்தாங்கொள்ளியாக ஆக்கி விடாதே”  என்று சொன்னார் கஜா.

“அதுக்கில்லை..” என்று காமாட்சி ஏதோ சொல்ல வாய் எடுக்கையில், “கொஞ்ச நேரம் அமைதியா என்ன ஓய்வெடுக்க விடு காமாட்சி” என்று அதட்டி விட்டுக் கண்களை மூடிக்கொண்டார் கஜா. 

புதருக்குள் இருந்து எட்டிப் பார்த்த மோகனன் அம்முலு ஓடி வருவதைப் பார்த்து மகிழ்ச்சியோடு தன் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தது. பிறகு, நண்பர்கள் இருவரும் குதியாட்டம் போட்டுக்கொண்டு  விளையாட கிளம்பினார்கள். “மோகனன். எதுக்கு என்னை அவசர அவசரமா வர சொன்னே? காட்டுல அப்படி என்ன விசேஷம்” என்று ஆவலாகக் கேட்டது அம்முலு.

“அம்முலு உனக்கு ஒரு அதிசயம் காட்டப் போறோம் வா” என்று சொன்னது மோகனன். “போறோமா? நீ மட்டும்தானே இருக்கே? அப்புறம் எதுக்குப் பன்மையில போறோமுன்னு சொல்லுற? என்று கேட்டது  அம்முலு. “இல்லை அங்கே பார் யாரு இருக்காங்கன்னு” என்று சற்றுத் தொலைவில் ஒரு சிறு பாறையின் பக்கம் கை காட்டியது மோகனன்.

அங்கே அவர்களின் மற்ற இரு நண்பர்களான சேஷூ என்கிற நரிக் குட்டியும், மீனா என்கிற முள்ளம்பன்றிக் குட்டியும் அம்முலுவைப் பார்த்து “ஹாய் அம்முலு” என்று கோரஸாகக் கத்தினார்கள். பிறகு, அந்த இரு நண்பர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

யானைக் கூட்டம் இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர்கள் நால்வரும் சேர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை சற்று நேரம் கவனித்தது காமாட்சி. பிறகு, களைப்பில் கண்களை மூடி ஓய்வெடுக்கத் தொடங்கியது. அதனால், அம்முலுவும் அவளது நண்பர்களும் காட்டின் தென் திசை பாறை இருந்த பக்கமாக​ அவர்கள் சென்றதை கவனிக்கவில்லை காமாட்சி.

-வளரும்

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *