யானைக்குட்டி அம்முலுவின் கும்மாளங்கள்

பகுதி இரண்டு

குட்டியானை அம்முலு, முயல்குட்டி மோகனன், முள்ளம்பன்றிக் குட்டி மீனா மற்றும் குள்ள நரிகுட்டி சேஷூ ஆகிய  நால்வரும் சேர்ந்த அந்த நண்பர்கள் குழாம் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

கடந்த மூன்று நாட்களாக பனிக்காட்டில் தொடர்ந்து மழை பெய்ததால் அவர்கள் கூடி விளையாட முடியாமல் வருந்தியபடி இருந்தார்கள். இன்று மழைவிட்டு வானம் வெளுத்து விட்டது, அவர்கள் பெற்றோரும் பெரிய மனசு பண்ணி விளையாட அனுமதி வேறு தந்து விட்டார்கள். எனவே அவர்களின் குதியாட்டத்துக்கு அளவில்லாது போனது.

“மோகனா. ரொம்ப நேரமா ஏதோ அவசர விஷயமுன்னு சைகை காட்டிக்கிட்டே இருந்தேல்ல? இப்ப சொல்லு அப்படியென்ன அவசர விஷயம்” ஆர்வத்தோடு முயல்குட்டியைப் பார்த்து கேட்டது அம்முலு.

“ஆங். அதுவா?..ஆமாம்மா.. ரொம்ப முக்கிய செய்திதான் அம்முலு. அது வந்து..அதோ பாரு அந்தப் பக்கம் கொஞ்சதூரம் போனால் ஒரு அழகான இடம் இருக்கு. அங்கே ஒரு பெரிய திறந்த புல்வெளியும் அதுல அழகான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குற சின்ன சின்ன செடிகளும் ஏராளமா இருக்கு. பார்க்கவே ரொம்ப ரம்மியமா இருக்கு” என்று தனது விழிகளை அகலமாக விரித்து உற்சாகத்தோடு சொன்னது முயல்குட்டி மோகனன்.

முள்ளம்பன்றி குட்டி மீனா “அட போ மோகனா.. நான் என்னவோ நிறைய கிழங்கு வகைகள் தோண்டி தின்கிற இடமா பார்த்துச் சொல்லுவேன்னு ஆசையா இருந்தேன். பூச்செடியை வச்சு என்ன பண்ணறது?” என்று அலுத்துக் கொண்டது.

“உன் அழகான முள்ளுக் கூந்தலில் பூக்களை பறித்து குத்திக்கொண்டு அழகு படுத்திக் கொள்ள வேண்டியதுதானே?” என்று கேலி செய்தது நரிக்குட்டி சேஷூ.

மீனா தவிர மீதி மூவரும் கலகலவென்று நகைத்தார்கள். “என்னோட உடலமைப்பை கேலி செய்தால் இனிமேல் உங்ககூட நான் சேரவே மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது மீனா.

“மீனா. இரு. இரு. போகாதே. நாங்க உன்னை பரிகாசம் செஞ்சது தப்புதான். எங்களை மன்னிச்சிடு. இனிமே அப்படி செய்யவே மாட்டோம். நண்பர்களே, பிறத்தியாருடைய உடலமைப்பு, நடை, பாவனையெல்லாம் பற்றி பரிகசிப்பது தவறுன்னு எங்கம்மா நிறைய தடவை சொல்லியிருக்காங்க. நம்ம எல்லார்கிட்டேயும் நிறை குறை உண்டு. குறையை அப்படியே ஏத்துகிட்டு நிறையை வளரச் செய்வதுதான் உண்மையான நட்பு. நீங்களும் நம்ம மீனா கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்று உரிமையோடு கண்டித்தது அம்முலு.

சேஷூவும், மோகனனும் மீனாவிடம் மன்னிப்பு கேட்டதும் மீனா “சரி சரி.. பரவாயில்லை. அந்த இடத்தைப் பற்றி ஏதோ சொல்ல வந்தியே, அதைச் சொல்லு” என்று மோகனனைப் பார்த்துக் கேட்டது.

“ஆமாம், நண்பர்களே. அந்த இடம்தான் இந்த பனிக்காடு முழுவதிலும் மிகவும் அழகானதாக இருக்குமென்று நினைக்கிறேன். தவிர நம்ம மீனா யூகித்த மாதிரி ஒரு சில கிழங்குச் செடிகளையும் அங்கே பார்த்தேன். அதேபோல் நாங்கள் விரும்பித் தின்னும் சில காய்கறிகள் விளையும் செடிகளும் அங்கே உள்ளன” என்றது மோகனன்.

“ம்.. அப்புறம் வேறென்ன சிறப்பு?” கொஞ்சம் எரிச்சலோடு கேட்டது சேஷூ. “அது மட்டுமில்லாமல், நிறைய வண்ணப்பூக்கள் இருக்கிறதென்று சொன்னேன் இல்லையா? தேனீக்கள் அவற்றில் இருந்து தேனை சேகரித்து ஒரு பெரிய தேனடையையும் ஒரு குட்டை மரத்தில் சேர்த்து வைத்திருக்கின்றன சேஷூ” என்று சொல்லி நரிக்குட்டியைப் பார்த்து கண்களைச் சிமிட்டியது மோகனன்.

தேனென்றால் நரிகளுக்கு கொள்ளை இஷ்டமென்று அதற்குத் தெரிந்திருந்தது. ‘தேன்’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டவுடன் நரிக்குட்டியின் நாவிலிருந்து எச்சில் ஒழுகவே தொடங்கி விட்டது. “ஆஹா.. தேனா? அதுவும் புத்தம் புது மலர்களிலிருந்து சேகரித்த தேன் வேறு. அமிர்தமாக இருக்குமே. வாருங்கள் தோழர்களே. சீக்கிரம் போவோம்” என்று அவசரப் படுத்தியது சேஷூ.

“அடபோங்கப்பா. மோகனனுக்குக் காய்கறி, மீனாவுக்குக் கிழங்கு, சேஷூவுக்கு தேன். ஆனால், எனக்கு என்ன கிடைக்கும்?” என்று ஏமாற்றத்தோடு கேட்டது அம்முலு.

“அம்முலு. அவசரப் படாதே. நான் உன்னோட உயிர் நண்பனாக இருந்து கொண்டு உன்னைப் பற்றி யோசிக்காமல் இருப்பேனா? எங்களைப்போல சாப்பாட்டுக்கு நீ ஆசைப்பட மாட்டாய். ஏனென்றால் உன் அப்பாம்மா உனக்கு வயிறு முட்ட முட்ட தின்னத் தந்து விடுகிறார்கள் என்பது உன் குண்டுத் தொப்பையைப் பார்த்தாலே தெரியும்” என்றது.

“அய்யோ. என் வயிறு ரொம்பக் குட்டி. அப்பா அம்மாவிடம் கொஞ்சூண்டு ஒட்டு மட்டும் வாங்கி தின்றாலே என் வயிறு நிரம்பி விடும். அதுவும் நான் உடம்பு இளைக்கக் கொஞ்சநாளா சரிவிகித உணவுமுறையைத்தான் கடை பிடிக்கிறேன்” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது அம்முலு.

“அட! இதுவேறயா? சாப்பாட்டைக் குறைச்சும் இப்படியா?” என்று அம்முலுவின் தொப்பையைக் காட்டிக் கிண்டலாகக் கேட்டது சேஷூ. “ஏய். நீ சும்மாயிரு. அம்முலுவை வருத்தப் படுத்தாதே. அம்முலு, அது என்ன சரிவிகித உணவு முறை? கொஞ்சம் சொல்லு?” என்று கேட்டது மீனா.

“அது என்னன்னா சாப்பாட்டில் கட்டுப்பாடு வைச்சுக்கணும். நமக்குப் பிடிச்சதுன்னு நிறைய சாப்பிடவும் கூடாது, பிடிக்கலைன்னு உணவை வீணக்கவும் கூடாது. உதாரணமா, எனக்குக் கரும்புன்னா ரொம்பப் பிடிக்கும், புல்லு அவ்வளவா பிடிக்காது. அதனால, ஒரேடியா கரும்பைத் தின்னா வயிற்றுக் கோளாறு வந்திடும். கூடவே அப்பப்போ புல்லு தின்னா வயிற்றுக்கு நல்லது. இதைத்தான் சரிவிகித உணவுன்னு அம்மா சொல்வாங்க” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னது அம்முலு. “ஓஹோ. அம்முலு நீ ரொம்ப புத்திசாலி” என்று பாராட்டியது மீனா.

பிறகு அம்முலு மோகனன் பக்கம் பார்த்து “மோகனா. எனக்கு சாப்பாடு பத்தின விஷயமில்லைன்னு சொன்ன. அப்ப வேறென்ன சுவார்ஸ்யமான் விஷயமிருக்கு அங்கே எனக்கு?” என்று ஆர்வத்தோடு கேட்டது.

அம்முலு “அங்கே நிறைய பூக்கள் இருக்கு. பூக்கள் நிறைய இருந்தா அங்கே என்ன பறந்து வரும்?” என்று தன் கண்ணிமைகளை படபடவென மூடி மூடித் திறந்தபடி பலத்த எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாகக் கேட்டது முயல்குட்டி மோகனன்.

“ஐ.. பட்டாம் பூச்சி” என்று சொல்லி நின்ற இடத்திலேயே தை தை என்று குஷியில் தலையை ஆட்டிக்கொண்டு குதித்தது அம்முலு. “ஆங்.. அதேதான்” என்று தானும் குதித்தது மோகனன்.

அப்புறமென்ன? ஒரு நொடிகூட தாமதிக்காமல் அந்த புல்வெளியை நோக்கி ஓட ஆரம்பித்தனர் நான்கு பேரும்.

அப்படி ஓடும் அவசரத்தில் தன் அப்பா கஜா எச்சரித்ததையும் மறந்து அந்த தெற்குப்பக்கப் பாறையை கடந்து விட்டதைக்கூட கவனிக்க மறந்து விட்டது அம்முலு.

பாறை தாண்டி மேட்டுப் பகுதி முடிந்து சிறிய பள்ளத்தாக்கு போன்றிருந்த பகுதிதான் மோகனன் சொன்ன புல்வெளி. மேட்டின் இறுதியில் வந்து அவர்கள் நின்றபோது அங்கே நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்ததைப் பார்த்து அம்முலு சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டது.

யானைகள் தேனீக்களை வெறுக்கும். யானைகள் தடித்த வலிமையான தோல் கொண்டவைகள் தான் என்றாலும் அவற்றின் உடலிலும் சில மென்மை வாய்ந்த பகுதிகள் உள்ளன – அவற்றின் வாய் மற்றும் கண்களைச் சுற்றிய பகுதி, காதுகளுக்குப் பின்னால் மற்றும் அவற்றின் அடி வயிற்றுப் பகுதி ஆகியவை மிக மென்மையாக இருக்கும். நம் அம்முலுவைப் போன்ற இளம் யானைக் கன்றுகள் மெல்லிய தோல் கொண்டவை. தேனீக்கள் கொட்டினால் அவைகளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. யானைகள் தேனீக்களைக் கண்டு பயந்து காதுகளைத் தட்டி, புழுதியைக் கிளப்பி, சத்தம் எழுப்பி, திரும்பி ஓடிவிடும்.

இந்த விபரங்கள் எதுவுமே தெரியாது அம்முலுவுக்கு. அப்பாம்மா சொன்ன அறிவுரைகளை மறந்து, புது இடத்தில் இருக்க வேண்டிய ஜாக்கிரதை உணர்வையும் விட்டுவிட்டு குடு குடுவென்று பள்ளத்தில் இறங்கி ஓட ஆரம்பித்தது. மற்ற நண்பர்களும் அவரவர் விருப்ப விஷயங்களை அடைய ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள். அங்குமிங்கும் தேடி ஓரு மரத்தில் தேனடையைப் பார்த்துவிட்டு அதை நோக்கி ஓடியது சேஷூ. நரிகள் தேன்கூட்டைக் கலைத்து விட்டு விட்டுச் சட்டென பக்கத்திலிருக்கும் புதருக்குள் மறைந்து கொண்டு விடும். கூடு கலைந்த கோபத்தில் தேனீக்கள் கோபத்தோடு பறந்து பறந்து அருகிலிருக்கும் வேறு எவரையும் தாக்கிக் கொட்டிவிடும் அபாயம் உண்டு. தேனீக்கள் மொத்தமாக கூட்டை விட்டு பறக்கும் சமயத்தில் ஆறு அடி உயரம் வரை தாவும் சக்தி கொண்ட நரிகள், எகிறி குதித்துத் தேனடையை எடுத்துப் போய் தேனை குடித்து விடும்.

சேஷூவும் அதைத்தான் செய்தது. அது கூடு இருந்த கிளையை எகிறி தட்டி விட்டுப் பக்கத்திலிருந்த புதருக்குள் மறைந்து விட்டது. ஆனால், இது பற்றி ஒன்றும் அறியாத அம்முலு மரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி பட்டாம்பூச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தது. கூட்டிலிருந்து ஆக்ரோஷமாகக் கிளம்பிய தேனீக்கள் வேகமாகப் பறந்து வந்தன. அவை அம்முலுவை சூழ்ந்துகொண்டு கொட்டிவிடும் அபாயநிலை. அருகே கேட்ட தேனீக்களில் ரீங்காரத்தில் மிரண்டு போய் செய்வதறியாது நின்றது அம்முலு. அப்போது சடாரென்று இரு பக்கத்திலிருந்தும் பெரிய வேப்பமரக் கிளைகள் அம்முலுவின் மேல் வந்து விழுந்தன. அவற்றின் அடர்ந்த இலைகள் அம்முலுவை முழுவதும் மறைத்து விட்டன. தேனீக்களுக்கு வேப்பமர வாசம் ஆகாது என்பதால்..

வேகமாக வந்த தேனீக்கள் கூட்டம் விர்ரென அந்தக் கிளைகளுக்கு மேல பறந்து போய் விட்டன. தன்னைக் காப்பாற்றியது தன் அம்மா காமாட்சியும் அப்பா கஜாவும் தான் என்பதை அம்முலு புரிந்து கொண்டது. அதோடு அப்பாம்மா சொல்லும் அறிவுரைகளை எப்போதும் மறக்காது பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அம்முலு நன்றாக புரிந்து கொண்டது.

-வளரும்

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *