ஊரின் மையப்பகுதிக்கு அருகில் உலர்வான மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்தது ‘கல்பா’ என்ற சிறிய கிராமம். காலங்கள் பல கடந்தாலும் அதன் வீடுகளும், வாழ்க்கை முறையும் பெரிதாக மாறவில்லை. மண் சுவர்கள், காய்ந்த புற்கள் வேய்ந்த கூரைகள், குறுகிய சந்துகள், ஆங்காங்கே கசந்து கிடக்கும் உலர் பாறைகள் இவைதான் கல்பா. இந்தக் கிராமத்தின் இதயம் என்று சொல்லத்தக்க வகையில், நடுவில் ஒரு பழைய மசூதி இருந்தது. அதன் மினார்கள் minarets வானத்தை நோக்கி எழுந்து அன்றாட தொழுகை நேரத்தை அறிவிக்கும் குரல், இந்த வறண்ட நிலத்தின் உயிரோட்டமாக இருந்தது.
இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்திலும், ஆடு மேய்த்தலிலும் ஈடுபட்டனர். சமீப காலங்களாக மழை பொய்த்துப் போனதால் நிலங்கள் பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தன. கிணறுகளின் நீர் மட்டம் குறைந்து, கிராமத்தின் முதுகெலும்பையே முறிப்பது போல இருந்தது.
கல்பாவின் மிக அமைதியான, அதே சமயம் ஆழ்ந்த சோகத்தை சுமந்த மனிதர் ‘ஃபெரெய்டூன்’ Fereydoun சுமார் ஐம்பது வயதைக் கடந்தவர். அவரது முகம் அந்த வறண்ட நிலத்தைப் போலவே, ஆழமான கோடுகளால் வரையப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் ஃபெரெய்டூன் அந்தக் கிராமத்தின் மிகச் சிறந்த தச்சனாக இருந்தார். அவரது கைகள் மரத்தூளின் வாசனையையும் வலிமையின் கதையையும் சுமந்தன.
அவர் மரங்களைப் போற்றிய அளவுக்கு அவரால் அவரது மனைவியைக் காக்க முடியவில்லை. ஒரு கோடை காலத்தில், குழந்தை பிறப்பின் போது அவருடைய மனைவி யாஸ்மின் Yasmin திடீரென மரணமடைந்தாள்.
யாஸ்மினின் நினைவுதான் ஃபெரெய்டூனின் அன்றாட வாழ்க்கை. அவரது சிறிய மகன் காஷி Kashi ஐந்து வயதைக் கடந்தவன். காஷியின் கண்களில் யாஸ்மினின் உலகம் தெரிந்தது. காஷிக்கு தச்சு வேலை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு. ஆனால் அந்த ஆசையின் மீது ஏனோ ஒரு விதமான சோகத்தின் கருமை பூசப்பட்டிருந்தது.
ஒரு நாள் மாலை. ஃபெரெய்டூன் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தனது பழைய உளியைத் தீட்டிக்கொண்டிருந்தார். உளியின் விளிம்பில் அஸ்தமனத்தின் செவ்வானம் பிரதிபலித்தது. அந்தச் செந்நிறம் அவரது மனதில் இருந்த ரணமாக மாறி, பழைய நினைவுகளைக் கிளறியது.
யாஸ்மின்… அவள்தான் இந்தக் கிராமத்திற்கே ஒரு பச்சை நதி போல இருந்தாள். அவள் சிரித்தால் காய்ந்த நிலமே கூட மீண்டும் துளிர்க்கும் என்று கிராம மக்கள் சொல்வதுண்டு. யாஸ்மின், பாரம்பரிய அந்த ஊர் பெண்களுக்கே உரிய அடக்கத்தையும்,அதே சமயம், நவீன கவிதைகளைப் படிக்கும் துணிவையும் கொண்டிருந்தாள். ஃபெரெய்டூன் யாஸ்மினுக்காக செதுக்கிய மரப் பேழை இன்றும் அவரது வீட்டில் பத்திரமாக இருந்தது. அந்தப் பேழையை யாஸ்மின் புதையல் போலப் பாதுகாத்தாள். அதில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்று ஃபெரெய்டூனுக்குத் தெரியாது. யாஸ்மினின் மரணத்திற்குப் பிறகு ஒருமுறைகூட அவர் அந்தப் பேழையைத் திறந்து பார்க்கவில்லை. அது யாஸ்மினின் ரகசியம், அவள் மட்டுமே திறக்க வேண்டியது என்று உறுதியாக நம்பினார்.
மழை வராமல் கிராமம் மிகவும் சிரமப்பட்டது. “கிணறு வறண்டு விட்டது” என்று கிராமப் பெரியவர் ஹாஜி அப்பாஸ் Haji Abbas கவலையுடன் ஒரு நாள் அறிவித்தார். “இப்படியே போனால், நாம் எல்லோரும் இந்த இடத்தை விட்டு நகர வேண்டியதுதான்.”
ஃபெரெய்டூனுக்கு இந்த வார்த்தைகள் சுட்டன. யாஸ்மினின் நினைவுகளும், காஷியின் எதிர்காலமும் இங்கேதான் வேரூன்றி இருக்கின்றன. அவர் எங்கேயும் போக விரும்பவில்லை.
அன்று இரவு காஷி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது ஃபெரெய்டூன் அந்த மரப் பேழையை நோக்கிச் சென்றார். அவர் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடியது யாஸ்மின் கிராமத்தின் இயற்கைச் சூழலை மிகவும் நேசித்தவள். அவள் ஏதேனும் குறிப்பு வைத்திருப்பாளா? பல வருடங்கள் கழித்து, நடுங்கும் கைகளுடன் அவர் அந்தப் பேழையைத் திறந்தார். மரத்தூள் மணம், யாஸ்மினின் வாசனையுடன் கலந்து அவரை ஆட்கொண்டது. உள்ளே, அவரது திருமண மோதிரம், காஷியின் முதல் காலணி, மற்றும் மடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய காகிதச் சுருள் இருந்தது.
அந்தக் காகிதச் சுருளை ஃபெரெய்டூன் பிரித்தார். அது யாஸ்மினின் கைவண்ணம். அதில் ஒரு கவிதை போல எழுதப்பட்டிருந்தது.
”வறண்ட நிலமே நீ வாடாதே
கிழக்கு மூலையில்
மூன்று பாறைகள் சேரும் இடத்தில்
வானத்தின் முத்தம் இருக்கும்.
அங்கே பார்
நீர் பேசும் மொழியைக் கேள்.”
ஃபெரெய்டூன் திகைத்துப் போனார். இது வெறும் கவிதையா? அல்லது யாஸ்மின் தான் அறிந்த ஒரு ரகசிய நீரூற்றை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளாளா? கல்பாவின் எல்லையில், சூரியன் உதயமாகும் திசையில், மூன்று பெரிய பாறைகள் கூடும் ஒரு இடம் இருந்தது. அது கிராம மக்களால் ‘அபூதாவின் பாறை’ என்று அழைக்கப்பட்டது. அது ஒரு பழங்காலப் புதையல் அல்லது ஒரு அமானுஷ்யமான சக்தி ஒளிந்திருக்கும் இடம் என்று மக்கள் பயப்படுவார்கள்.
மறுநாள் அதிகாலையில் இன்னும் சூரியன் வராமல் கிராமம் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஃபெரெய்டூன் தன் மண்வெட்டியையும், நீர் நிரம்பிய தோல்பையையும் எடுத்துக்கொண்டு அபூதாவின் பாறையை நோக்கிப் புறப்பட்டார். யாஸ்மினின் குறிப்பு அவரது மனதில் ஓடியது “வானத்தின் முத்தம்.” யாஸ்மின் அவள் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான உறவை மிகவும் நம்பினாள்.
அபூதாவின் பாறைகளை ஃபெரெய்டூன் அடைந்தபோது மூன்று பாறைகளும் ஒரு முக்கோண வடிவில், ஒன்றுக்கொன்று சாய்ந்து நின்று வானத்தின் ஒரு பகுதியை மட்டும் அவற்றின் நடுவில் சிறைப்படுத்தியதைப் போலத் தோன்றியது. அந்த மையப் புள்ளியில் மண் மற்ற இடங்களை விட சற்று ஈரப்பதத்துடன் இருந்தது, ஒரு அடர்ந்த மணல் நிறத்தை விட வேறுபட்ட ஒரு களிமண் நிறம்.
ஃபெரெய்டூன் தன் மண்வெட்டியைக் கொண்டு நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார். சூரியன் மெதுவாக எழுந்து, அவரது முதுகு மீது தன் வெப்பத்தை வீசியது. அவர் வியர்வையில் நனைந்து, கைகள் வலித்து தோள்களில் பாரம் ஏறி, மண்வெட்டி மழுங்க ஆரம்பித்தது. மணல் அவ்வளவு இறுகியிருந்தது. அவர் மனதிற்குள் யாஸ்மினின் குரலைக் கேட்டார் “நீர் பேசும் மொழியைக் கேள்.”
தோண்டத் தோண்ட, மனதின் வலிமை குறைய ஆரம்பித்தது. “இது வெறும் கவிதைதானோ? நான் ஒரு முட்டாளாக இங்கே வீணாகக் கஷ்டப்படுகிறேனோ?” என்று எண்ணினார். அவர் சோர்வடைந்து மண்வெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு பாறையின் மீது சாய்ந்து அமர்ந்தார்.
அந்த நேரத்தில், ஒரு மெல்லிய சத்தம் அவர் காதில் விழுந்தது. அது வெறும் காற்று சத்தம் இல்லை. அது ஒரு மெல்லிய ‘உள் ஒலி’. அவர் மீண்டும் குறிப்பை நினைவு கூர்ந்தார் “நீர் பேசும் மொழியைக் கேள்.”
எழுந்து, காது கொடுத்து அந்த மண்ணைக் கேட்டார். அவர் காஷியின் சிறிய சிரிப்பொலியைப் போல ஒரு துளியின் சத்தத்தை உள்ளுக்குள் உணர்ந்தார். அவரது இதயம் துடித்தது. புது உத்வேகத்துடன் மண்வெட்டியை எடுத்து, அதே இடத்தில் மிக ஆழமாக ஆனால் மெதுவாகவும் கவனமாகவும் தோண்ட ஆரம்பித்தார்.
இரண்டு மணி நேரம் ஓடியது. அவர் இப்போது ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கியிருந்தார். திடீரென, மண்வெட்டி ஒரு கடினமான பொருளின் மீது மோதியது. ஒரு பெரிய கூர்மையான பாறை.
”அவ்வளவுதான் இது வெறும் பாறைதான்,” என்று அவர் விரக்தியடைந்தார். யாஸ்மினின் நினைவுகள் வலி தர ஆரம்பித்தன. “நான் உன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது போல இந்தக் கிராமத்தையும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே” என்று தன்னையே நொந்துகொண்டார்.
அவர் அந்தப் பாறையை வெறுப்புடன் தூக்கியெறிய முற்படுகையில், பாறையின் பக்கவாட்டில், சில பழங்கால எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அது ஒரு பூட்டின் வடிவத்தில் இருந்தது.
அது ஒரு ரகசியப் புதையலின் குறியீடு போல இருந்தது. பாறையைத் தூக்க முடியவில்லை. அப்போதுதான் ஃபெரெய்டூனின் மனதில் ஒரு மின்னல் கீற்றுத் தோன்றியது. “நான் ஒரு தச்சன். எனக்குக் கடினமான பொருட்களை எளிதாகப் பிரித்தெடுக்கத் தெரியும்.”
உடனே அவர் கிராமத்திற்கு விரைந்தார். தனது தச்சுப் பட்டறையைத் திறந்து நீண்ட, கூர்மையான, வலுவான ஒரு மரக் குத்தி Lever ஒன்றை உருவாக்கினார்.
யாஸ்மின் அடிக்கடி தன் உளியை எப்படித் தீட்டுவாள் என்று நினைவுகூர்ந்து, அந்தக் குத்தியின் நுனியைக் கூர்மையாக்கினார். அது வெறும் கருவி அல்ல அது யாஸ்மினின் மீதான அவரது நம்பிக்கையின் பிரதிபலிப்பு.
அந்த மரக் குத்தியுடன் மீண்டும் அபூதாவின் பாறைக்கு வந்தார். அந்தக் குத்தியின் கூர்மையான முனையை பாறையின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு சிறு பள்ளத்தில் செருகினார். தனது முழு பலத்தையும் உபயோகித்து அழுத்தினார்.
சத்தம் எதுவுமின்றி அந்தப் பாறை ஒரு அசைவுடலை அசைந்தது, ஒரு பலமான ‘கீச்’ என்ற சத்தத்துடன் நகர்ந்து, உள்ளே ஒரு பெரிய பள்ளத்தை வெளிப்படுத்தியது.
ஃபெரெய்டூன் வியந்துபோய் பார்த்தார். அவர் கண்ட காட்சி அவரது கண்களை நம்ப முடியவில்லை. உள்ளே ஒரு பெரிய குகை போல இருந்தது, அதன் மையத்தில் ஒரு தூய நீரூற்று அமைதியாகவும், அழகாகவும் மின்னிக் கொண்டிருந்தது.
குகைக்குள் நுழைந்த ஃபெரெய்டூனுக்குக் குளிராக இருந்தது. சுற்றியிருந்த பாறைகள் நீரூற்றைப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்தன. நீரூற்றின் தண்ணீர் அவ்வளவு தெளிவாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, அது வறண்ட பூமியின் மீது வானம் சிந்திய கண்ணீரைப் போல இருந்தது. ஃபெரெய்டூன் தன் தோல்பையில் அந்த நீரைக் நிரப்பினார். தனது முகம், கை, கால்களில் அந்தத் தண்ணீரால் கழுவியபோது, ஒரு புதிய நம்பிக்கை அவரது உடலையும் மனதையும் நிரப்பியது.
அந்த நீரூற்று ஒரு ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. யாஸ்மின், ஒரு காலத்தில் கிராமப் பெரியவர்களுடன் சேர்ந்து, இந்தப் பகுதியை ஆராய்ந்திருக்கலாம். அவள் தனது அறிவையும், தான் நேசித்த கணவனுடைய திறமையையும் நம்பி, இந்தக் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறாள். அவள் நீரைத் தேடச் சொல்லவில்லை மாறாக தன்னையே தேடச் சொன்னாள் தனது தச்சுத் திறமையையும் இயற்கையின் மொழியைக் கேட்கும் உணர்வையும் நம்பச் சொன்னாள்.
அவர் ஒரு புதிய மனிதராக ஆனந்தக் கண்ணீருடன் கிராமத்திற்குத் திரும்பினார். சூரியன் அப்போதுதான் மேலே வந்து கிராமத்து வீடுகளின் மீது தன் தங்கக் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. அவர் நேரடியாக ஹாஜி அப்பாஸின் வீட்டிற்குச் சென்றார்.
”ஹாஜி அப்பாஸ்!” என்று அவர் மூச்சிறைக்கக் கத்தினார். “நான் நீரூற்றைக் கண்டுபிடித்துவிட்டேன் அபூதாவின் பாறையின் கீழ் ஒரு குகையில்”
ஹாஜி அப்பாஸ், மற்ற கிராமப் பெரியவர்களுடன் குழப்பத்துடன் வெளியே வந்தார். “என்ன சொல்கிறாய் ஃபெரெய்டூன்? அந்த அமானுஷ்யமான பாறையா? அது சாத்தியமில்லை”
ஃபெரெய்டூன் தனது தோல்பையைக் காட்டி, அதிலிருந்து ஒரு கைக்குவிந்து நீரைக் குடிக்கக் கொடுத்தார். ஹாஜி அப்பாஸின் கண்கள் விரிந்தன. அந்த நீரின் குளிர்ச்சியும், சுவையும் அவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது.
ஃபெரெய்டூன் யாஸ்மினின் குறிப்பையும், அவர் ஒரு தச்சனாக எப்படி அந்தப் பாறையை அகற்றினார் என்பதையும் விளக்கினார். அந்தக் கிராமப் பெரியவர்கள் அவரது வார்த்தைகளைக் கேட்டு மௌனமானார்கள். யாஸ்மினின் மீதான ஃபெரெய்டூனின் காதல் இப்போது ஒட்டுமொத்தக் கிராமத்தின் உயிர்நாடியாக மாறியிருந்தது.
அந்த நீரூற்றை கிராமத்திற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஃபெரெய்டூன் மீது சுமத்தப்பட்டது.
கிராமத்தின் அனைத்து மக்களும் இணைந்து உழைக்க ஆரம்பித்தனர். கிராமத்தின் இளைய தலைமுறையினர், ஹாஜி அப்பாஸ் தலைமையில், குகையின் பாறை இடுக்குகளை அகலப்படுத்தினர். ஃபெரெய்டூன் தனது தச்சுத் திறமையைப் பயன்படுத்தி குகையிலிருந்து நீரைத் தங்கு தடையின்றி கிராமத்தின் மையத்திற்குக் கொண்டு வர மரத்தாலான கால்வாய்களை உருவாக்கினார். இந்தக் கால்வாய்கள் பண்டைய அந்ந ஊரின் ‘கனாத்’ Qanat நீர்ப்பாசன முறையை ஒத்திருந்தன, ஆனால் தச்சு வேலையின் நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டன.
ஃபெரெய்டூன், தனது மகனுக்குச் சொல்லிக் கொடுக்க நினைத்த தச்சு வேலையை, இன்று ஒட்டுமொத்தக் கிராமத்திற்கும் ஒரு பொதுப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார். மரங்களைக் கூர்மையாகச் செதுக்குவது, நீரின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சாய்மானத்தை அமைப்பது, மண்ணுடன் மரத்தைச் சரியாக இணைப்பது அவர் யாஸ்மினிடம் கொண்ட அதே நேசத்தை மரத்துடன் கொண்டார்.
நாற்பது நாட்கள் இடைவிடாத உழைப்பிற்குப் பிறகு, ஒரு அதிகாலை நேரத்தில் முதல் நீர்த் துளிகள் கிராமத்தின் மையத்தில் உள்ள தொட்டியில் விழுந்தன.
மக்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். ஒரு கூச்சலும் ஆனந்தமும் கிராமத்தைச் சூழ்ந்தது. வறண்ட கல்பா, மீண்டும் ஒரு ஜீவன் கொண்டது. அந்தக் குளிர்ந்த நீர் கிராம மக்களின் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தது.
காஷி, தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, அந்த நீரை வியப்புடன் பார்த்தான். “வாப்பா, இது உம்மாவின் சிரிப்பு போல இருக்கிறது,” என்று மெதுவாகச் சொன்னான்.
ஃபெரெய்டூன், காஷியின் வார்த்தைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டார். அவர் கீழே குனிந்து, “ஆம் மகனே. இது அவளின் மொழி. அவள் எப்போதும் நம்முடன் இருக்கிறாள்,” என்று கூறினார்.
அந்த நீரூற்று, கிராமத்தின் வறட்சியை மட்டுமல்ல ஃபெரெய்டூனின் மனதின் வறட்சியையும் நீக்கியது. அவர் யாஸ்மினின் ரகசியத்தை வெளிப்படுத்தியபோது, அவர் தன் துக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நாட்கள் வாரங்களாக மாறின. கிராமத்தின் கிணறுகள் மீண்டும் நிறைந்தன. பெண்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூக்களையும், மூலிகைகளையும் வளர்க்க ஆரம்பித்தனர். கல்பா கிராமம் அதன் பாரம்பரிய அழகைக் கொஞ்சம் கூட இழக்காமல் புதுப்பிக்கப்பட்டது.
ஒரு மாலை நேரத்தில், கிராமத்தின் நடுவில், அனைவரும் கூடி இருந்தனர். நீரூற்றின் மையத்தில் ஹாஜி அப்பாஸ் ஒரு பழைய மரத் துண்டைத் தூக்கிக் காட்டினார். அது ஃபெரெய்டூன் பாறையை அகற்றப் பயன்படுத்திய மரக் குத்தி.
”ஃபெரெய்டூன்” என்று ஹாஜி அப்பாஸ் கத்தினார். “நீ வெறும் தச்சன் அல்ல நீதான் இந்த கிராமத்தின் உண்மையான மீட்பர். நீ, உன்னுடைய காதல் மற்றும் உன் திறமையால் இந்தக் கிராமத்திற்குப் புது வாழ்வைக் கொடுத்திருக்கிறாய். நீ இனிமேல் கல்பா கிராமத்தின் புதிய தச்சன் நீ உன்னுடைய மனைவியின் நினைவைப் புதுப்பித்திருக்கிறாய்.”
ஃபெரெய்டூனுக்குக் கண்ணீர் வந்தது. அவர் மக்கள் முன் வந்து நின்றபோது, காஷி ஓடி வந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டான். அவர் காஷியைத் தூக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
”இந்த நீர், யாஸ்மினின் அன்பு. அவள் அறிவும், மன உறுதியும் இங்கே நீராய் ஓடுகிறது. நான் அவளிடமிருந்து விலகி இருந்ததால் தான் இந்த ரகசியத்தை இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன். நாம் அனைவரும் இணைந்திருக்கும்போது நம் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும்போதும் இந்த கிராமம் எப்போதும் வறண்டு போகாது.”என்றார்.
அன்றைய இரவில், ஃபெரெய்டூன் ஒரு புதிய மரப் பேழையைச் செதுக்க ஆரம்பித்தார். இந்த முறை அது ரகசியங்களுக்கானது அல்ல அது வெளிப்படையான மகிழ்ச்சிக்கானது. அந்தப் பேழையில் யாஸ்மினின் கவிதையையும், நீரூற்று வந்த அந்தப் பாறையின் ஒரு சிறு துண்டையும் காஷியின் புதிய தச்சு உபகரணத்தையும் வைத்தார். அது ஒரு தச்சனின் கையில் பாரம்பரியம் நவீனத்துடன் இணைந்த, ஒரு புதிய வாழ்வின் தொடக்கமாக இருந்தது.
யாஸ்மின், அவள் விரும்பியதைப் போலவே அந்த வறண்ட நிலத்தின் ரகசியமாக, நீரின் மொழியாக ஃபெரெய்டூன் மற்றும் அவரது மகன் காஷியின் வாழ்க்கையில் நிரந்தரமாக நிலைத்துவிட்டாள். அவர்களின் ஒவ்வொரு மூச்சிலும் ஒவ்வொரு உளி சத்தத்திலும் அவள் உயிர் வாழ்ந்தாள்.

ஏ.நஸ்புள்ளாஹ் (1974)
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் பிறந்தவர்.தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி வருகிறார்.
தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து(கவிதை 2003),நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2014), இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர் (கவிதை அமேசான் 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை அமேசான் 2017,ஆகாய வீதி (கவிதை அமேசான் 2018)
A.Nasbullah Poem’s (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள் 2018),டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (கவிதை 2020),நான் உமர் கய்யாமின் வாசகன் (கவிதை 2021-2022 அரச சாகிதய அகாதமி விருது பெற்றது),யானைக்கு நிழலை வரையவில்லை ( கவிதை 2022),பிரிந்து சென்றவர்களின் வாழ்த்துக்கள் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 2024), ஃபிதா (கவிதை 2025),மந்திரக்கோல் (கவிதை 2025)

