அணைந்த தீக்குச்சியின்
தலை கருகலாக வானம்
அதன் நுனியில்
மல்லிகை மொக்கு விரிவது
போலொரு அதிசயம்
நிலவின் ஒளிர்வு
மற்றும் ஒரு நேசம்
உலர்ந்த செடி மீதமர்ந்த
தும்பியின் கண்ணாடிச்சிறகு காதலாக
தூரிகையின் கண்களுக்குள்
வண்ணங்கள் வழிகிறது
காதலின் சுவாசங்களில்
இதயத்தில் கொதிக்கும் குருதிக்கு
மதுவின் காரம்
விதியின் விரல்களுக்கிடையே
சிறகுகள் சிக்கிக்கொண்ட தட்டான்கள்
பத்திரமாய்ப் பற்றிக் கொள்ளும் சிறுகல்லென எஞ்சிய வாழ்வு.
***
அன்பின் சிறு சங்கிலியை
அறுத்தெறிய இயலாமல் தான்
மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது
அந்த யானை
வலிமை குறித்து
பெருமையென்ன
இவ்வளவு இரக்கமற்ற
அன்புக்கு
***
என்னிடம்
சொற்கள் நிரம்பியவொரு
குதிர் இருந்தது
அதிலிருந்து
கற்களைப் போல வீசிக் கொண்டிருந்தேன்
கொத்தியுண்ண வந்த பறவைகள்
எச்சமிட்டுச் சென்றன
எச்சத்திலிருந்து
எழுந்த விருட்சங்களில்
குதிர் குதிராய்த் தொங்கிக் கொண்டிருக்கின்றன கனிகள்.
***
யுகயுகன்
சென்னையில் வசிப்பவரான யுகயுகனின் இயற்பெயர் ரெங்கராஜன். சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி. இயந்திரப் பொறியியல் பட்டயதாரியான இவர் திட்ட மேலாளராக பணிபுரிகிறார். . 2006 முதல் உயிர்மை, கணையாழி, தீராநதி, நடுகல் போன்ற இலக்கிய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி உள்ளன. இன்னும் தொகுப்பு வெளியிட வில்லை.