சொற்களைப் புளிக்கச் செய்தல்
***
சொற்கள் உடை படுகின்றன
இரைச்சலோடு
அவன் அமர்ந்திருக்கிறான்
அவன் நடக்கிறான்
இரையும்
சொற்கள் அரைபடுகின்றன
வறுத்த சோள மணிகளை
மெல்லும் பற்களைப் போல
அரவை இயந்திரம் நிற்கவில்லை
அவனும் தனிமையும் தவிர
அங்கு வேறு யாருமில்லை
விளக்கை அனைத்து விட்டு இருளைப் போர்த்தி படுக்கலாம்
ஆ..
அதுவொரு மிருதங்கமாகி விடும்
மனதின் விரல்கள் மேலும் மோசமாக்கி விடும்
இருள் பற்றிக் கொண்டு தீயின்
நர்த்தனம் துவங்கிவிட்டால்?
சக்கரத்தின் குடம் இரையும் போது
மசையை நிரப்ப வேண்டும் என்பது
அவனுக்குத் தெரியுமல்லவா
அவன் தனித்திருப்பதால்
ஒரு குவளை போதுமானது
இட்லிக்கு மாவரைக்கும் போது
பதம் பார்த்து நீர் வார்க்கும் பாவணையில் மிடறுகள் உள்ளிறங்கும் போது
சொற்கள் மைதா மாவு பதத்திற்கு வந்து விட்டன பார்த்தீர்களா
நல்லது
இனி அவன்
புளித்த மாவின் உப்பலின் மீது உறங்குவான்.
***
மல்லாந்து
மார்திறந்து கிடக்கிறது
நீலநிறப் பன்றி
எல்லா காம்புகளிலும்
பாலருந்துகின்றன
நெளிநீர்ப்பாம்புகள்
உள்மூச்சு
வெளிமூச்சுகளில்
கரையேறி இறங்கும் அலைகள்
இடையில் இடறும்
அழிஞ்சிற் கனியை
இடக்கரத்தில் எற்றி
வலக்கரத்தில் ஏந்தும் போது
பகல் வற்றி விட்டது .
***
விளக்கை அணைத்து
சுட்சைப் போட்டுப் படுத்தேன்
மேகம் சுழன்று காற்றைப் பொழிகிறது
நனைவில்
சூடு தணிகிறது உடல்
உப்புத்துளிகள் மேகமாக
கிடப்பது
உடலா கடலா
இடைவெளிக்குப் பிறகு
தாமதமாக வருகிற நதி
கண்களை மூடிய பிறகும்
கரையைத் தொட வில்லை
அதுவரை
காற்றில் எவ்வி
மார்பில் குதியாட்டம் போடும்
திமிங்கலம்
உன் குறுஞ்செய்தி
நாளை விழிர்த்தும் நாயின்
துரத்தலுக்கு ஓட
பருக கிடைத்த பழச்சாற்றுக்கு
இரவின் அடர்த்தி.
யுகயுகன்
சென்னையில் வசிப்பவரான யுகயுகனின் இயற்பெயர் ரெங்கராஜன். சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே ஏனாதி. இயந்திரப் பொறியியல் பட்டயதாரியான இவர் திட்ட மேலாளராக பணிபுரிகிறார். . 2006 முதல் உயிர்மை, கணையாழி, தீராநதி, நடுகல் போன்ற இலக்கிய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி உள்ளன. இன்னும் தொகுப்பு வெளியிட வில்லை.