பெரும் கனவு
நீ விலகிச் செல்கிறாய்
நான் உன் தடம் பற்றி
தொடர்கிறேன், நிழலென
நாம் மீண்டும் சந்திப்போம்
நாம் மீண்டும் கதைப்போம்
உன் கனவுகளை நீயும்
என் கனவுகளை நானும்
அப்படியே விட்டு விடுவோம்
நம் கனவுகளை
நாம் சேர்ந்தே காண்போம்.
உன் கனவுகள்
உனக்கு வேண்டுமெனில்
என் உறக்கத்தை எனக்குக் கொடு
எனக்கும் வேண்டும்
எனக்கே எனக்கான கனவுகள்
நிற்க வாழ்வே பெரும் கனவு
பனிக்காலம்
இன்னும் ஓரிரு தினங்கள்
சூரியன் சற்றே உறங்கலாம்
தாமதமாய் எழலாம்
நீங்களும்
தாமதமாய் எழலாம்
இனி குளிரலாம்
புல்லின் மீதும்
பூக்களின் மீதும்
இலைகளின் மீதும்
நீ செல்லும் தடங்களின் மீதும்
சின்ன சின்னதாய்
குமிழ் குமிழாய்
அழகழகாய்
வெண்பனித் துளிகள் தோன்றலாம்.
பரந்த வெளியும்
மிளிரும் ஒளியும்
சிறு சிறு குமிழ்களாக
சூரியன் உறங்கட்டும்
நீங்கள் விழித்திருந்தால்
சிறு சிறு பனிக்குமிழ்களில்
அழகியல்களையும்
அற்புதங்களையும்
ஒன்றாய்க் காணலாம்.
ஹாலோவீன்
இஸ்ரேலிலிருந்தும்
இது போல பல
இடங்களிலிருந்தும்
எழுந்து வருகின்றன பைசாசங்கள்
முன்னமே இருக்கும்
கல்லறைகளிலிருந்தும் பைசாசங்கள்
எழுந்து வருகின்றன.
பார்வையில் நஞ்சு
உடல் மொழியில் அகோரப் பசி
ஆம்.
விழித்திருக்கின்றன அபதேவதைகள்
பசியோடும் வெஞ்சினத்தோடும்
ஆரஞ்சு வண்ணங்களும்
கருப்பு வண்ணங்களும்
உலகெங்கும் கொட்டி கிடக்கின்றன
அது செந்தழலும் அடரிருளும் அன்றி
வேறெதுவுமில்லை.
புனித துறவியரை
பூலோகமெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை.
இனி
எல்லா நாளும் அக்டோபர் 31தான்.
அபதேவதைகளும்
பைசாசங்களும்
புதுப்போருக்குத் துணை நிற்கட்டும்.
பூலோகத்தை முழுதாய் எரிக்கட்டும்
ரகு மயில்வாகனன்.
வசிப்பிடம் – சென்னை. மனைவி, ஒரு மகள்.
பணி – தனியார் துறை.
பிடித்தது – தமிழும், இசையும்
மிச்சப் பிரியங்கள் –என்கிற கவிதை தொகுப்பு முன்பாக வெளிவந்துள்ளது.