முரண் கூத்தின் இனிப்புகள்.

அம்மா

பாவித்தப் பொருட்கள்

அதிகமாகவே

இருந்தாலும்

பிறந்த இடத்து

செய் வினைகள்

நேர்த்தியாக

அடுக்கப்பட்டிருந்தது

மனதிற்குள் நெஞ்சை நிமிர்த்துமாறு.

,

இங்குள்ள

பொருட்களைப் பயன்படுத்தச் சொன்ன

மாமியாரின் மேல்

சந்தேகம் வழுத்தது

மகளுக்குக்

கொடுத்துவிட

திட்டமிருக்குமென்ற

ஐயப்பாடில்.

,

இரு வீட்டு வயோதிகப்

பெண்களும்

விளக்கிக் கொண்டே

இருந்தார்கள்

பண்டங்கள் எதுவும்

பளிச்சிடவே இல்லை

முகம் வாடியதைத்தவிர.

,

கண் மூடிய நொடிக்குள்

கையில் குழந்தை வந்துவிட்டது

யாவருக்குள்ளான

ஒட்டுறவில்

மேவிய

அந்நியப்பொழுதில்.

,

வளர்ந்துவிட்ட

பிள்ளைக்கு முன்

வயோதிகம் வந்துவிட்டாலும்

அடியாழ விலகலின் மேல்

படிந்து கிடக்கிறது

அன்றாட

வாழ்வியல் சுமைகள்.

,

குரைத்தலும்

குலைந்து வாலாட்டுவதான

பொழுதில்

பிரயத்தனம் மிகைத்து வாட்டுகிறது

வரவிற்கான

ஏக்கமாக

பிள்ளைகளைக் கரையேற்ற.

,

கைபிடித்தக்

கல்யாண வாழ்க்கைப் பற்றி

ஏதாவது

சொல்லலாம் தான்

என் மடியில்

தவழும்

பேரக்குழந்தையைப்போல

ஒவ்வொரு

முறையும்

ஒன்று

இப்பொழுதுபோல

என்னைத் தடுக்காமல் இருந்தால்.

***

அசௌகரியமெனும்  அழையாப் பேசி.

+

நீராடியதை

வேடிக்கைப் பார்த்தே

வெறுத்துப்போனக்

கைபேசி

தருணம் பார்த்து

தாமிரபரணியில்

குதித்தது.

மூழ்கியதென்னவோ

தொந்தரவுகள்தான்

நிம்மதிகளெனும்

நீச்சலில்.

***

நன்றி:

கண்ணன் சாரின்

கைபேசிக்கு.

***

உருமாறுவதற்கு முன்பான

உறவாடல்.

+

கறைகள் படிந்த

நெகிழி

நீர் போத்தல்

பழுப்பேறி

உருண்டோடியது

அடையாள

அறிவிப்புக் காகிதம்

உதிர்ந்த தடயத்தோடு

காற்றின் போக்கில்

ஒலிகள் எழுப்பி.

இயக்க

இடைவெளியில்

வாகனங்களுக்குள்

வாகாக

உயிரொன்று

உலவுவதாக

நடை பயணத்தை

நிறுத்தி

அதன்

நர்த்தனத்தைக் கவனிக்க அழைத்தது

வெகுவாக ஈர்த்து.

,

அதனோடு

விளையாடிய

மனதை

அடுத்த

வேலைக்கு

அழைத்துச் செல்ல

நேரம் நெருங்குவதை

கதிரொளிகள்

வாகன

வண்டிகளில்

வானவில்லின்

வண்ணத்தில்

எதிரொளித்தது

இணைவைக் கலைத்து

இவ்வதிகாலையில்.

,

வசவு

வார்த்தைகள் ஒதுக்கி

வாறியெடுத்து

நசுங்கிடாமல்

கழிவுகள் தொட்டியில்

போட்ட பொழுது

கையில்

பிசு பிசுத்தது

அதன்

உணர்வு

வீடு வரும்வரை

வினோதமான

மணத்துடன்

நன்றியாக

உறவாடி.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *